Wednesday, June 29, 2011

மெழுகுவர்த்திகள் மட்டும் போதுமா?

மெரீனா கடற்கரையில் மெழுவர்த்தி ஏந்தி
உங்கள் உணர்வை
உங்கள் எதிர்ப்பைக் காட்டிய
என் உறவுகளே....

ஆண்டுக்கொரு முறை மெழுகுவர்த்தி ஏந்தி
நினைவேந்தல் நடத்துவதன் ஆரம்பவிழாவா
உங்கள் கூட்டமும் உங்கள் கோஷமும்..?
அப்படியானால்
என்னை மன்னித்துவிடுங்கள்...
இனிமேல் மெழுகுவர்த்திகளை
உங்கள் தீர்க்கமுடியாத வியாதியாகிவிட்ட
மின்சாரதடையின் போது மட்டுமே
உபயோகப்படுத்துங்கள்.
அது உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் அடையாளங்களைச் சுமந்து
உங்கள் அடையாளங்கள் இருந்ததால் மட்டுமே
மண்ணில் விதைக்கப்பட்ட
மானுட விதைகளுக்கு
நீங்கள் செய்யும் மரியாதையாக
இருக்க முடியும்.

எப்போதும் உணர்வுக்குமிழிக்குள்
பொங்கி வெளிவந்து
கரை சேர்வதற்குள் உடைந்துப் போன
கடந்தக் காலத்தின் கதைகள்
தொடர்கதையாகிவிடாது
என்பது என்ன நிச்சயம்?

உங்கள் திட்டம் என்ன?
உங்கள் செயல்பாடு என்ன?
உங்களுக்குள் இருக்கும்
உப்பு புளி சண்டைகளை
உங்களுக்குள் இருக்கும்
அதிகார ஆசைகள்
உங்களுக்குள் இருக்கும்
உன்மத்தங்கள்
எல்லாவற்றையும் எரித்துவிட்டீர்களா?
எரித்தச் சாம்பலை வங்கக்கடல்நீரில்
கரைத்துவிட்டீர்களா?

யாராவது தீர்மானம் போட்டால்
எல்லாம் நடக்கும் என்று
எப்போதும் நினைத்தீர்கள்!
அட இப்போதும் நினைக்கிறீர்கள்!
எப்படி நடக்கும்?
இறையாண்மை இருக்கிறதே..!
அதை வெல்லும் மறையாண்மை
மறவர் ஆண்மை
உங்களிடம் இருக்கிறதா..?

செண்ட்ரல் ஸ்டேஷந்தாண்டி
உங்கள் செய்திகள் கூட
பயணிக்கவில்லை என்பதை
என்றாவது பார்த்திருக்கின்றீர்களா
?
மெரீனாவில் ஏற்றிய
மெழுகுவர்த்திகள் எரிந்து முடிவதற்குள்
இலவச டிவிக்களில்
மானாட மயிலாட பார்க்கும்
மானுடப்பிறவிகளே...

இருளைச் சுமந்துக்கொண்டே
எரியும் மெழுகுவர்த்தியாய்
இந்தியத் தமிழனாய்
இருக்க நினைப்பது

சத்தியமாய்த் தவறில்லை
சாத்தியமா தெரியவில்லை

செங்கோட்டையிலிருந்து
தேவதூதர்கள்
வருவார்கள்
போவார்கள்
எழுதுவார்கள்
அறிக்கை விடுவார்கள்..
ஆகா என்று
ஆனந்தப்பட்டு ஆரத்தழுவும்
காட்சிகள் மாறவில்லை
கட்சிகள் தான் மாறி இருக்கின்றன.

முடியும் என்றால்
உங்கள் அணிவகுப்பை
செங்கோட்டையை நோக்கித்
திருப்புங்கள்
செங்கோட்டை வாசலெங்கும்
மெழுகுவர்த்திகள் எரியட்டும்
அணையாமல் எரியட்டும்
குளிர்ந்தக் காற்றில்
அணைந்துவிடாமல்
சூடேற்றக் காத்திருக்கும்
சூரியக்குஞ்சுகளின் சார்பாக...

No comments:

Post a Comment