Tuesday, May 17, 2011

இன்னமும் போராளிகளே..



மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும். (..நன்றி சாத்திரி -@தமிழ்மணம் )







இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள். இராணுவ முகாம்களினுள் புகுந்து வேவுபார்த்தார்கள். கடலிலும் தரையிலும் சமர்கள் செய்தார்கள். இப்படி எதிர்மறையானதொரு மாற்றத்தினை கொண்டிருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆணை எதிர்த்து பெண் கதைத்தாலே அவளை அடங்காப்பிடாரி என்றும்.உடைகளில் மாற்றங்களை கொண்டிருந்தாலே அர்த்தங்கள் சொல்லமுடியாத பல பட்டங்களை அள்ளி வழங்கும் தமிழ் சமூகம் பின்னர் சமராடிய அதே பெண்களை அணைத்து ஆனந்தக்கூத்தாடி அவர்களை ஆயுதம் தரித்த பெண்தெய்வங்களான துர்க்கை காளிமாதா என்று போற்றி கொண்டாடியது.
பெண்கள் மீதான பார்வையே தனிமதிப்பாகிப்போனது.அவர்களின் வீரக்கதைகள் விதவிதமாகப் பேசப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்டு ஆயுதப்போரும் முடிவிற்கு வந்தபின்னர். ஆயுதங்களற்ற அதே துர்(கா);கைகளும் காளிகளும் அதே சமூகத்தால் தெரு நாயினும் விடகேவலமாய் பாரக்கப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் போற்றப்படுவதில்லை. கொண்டாடப்படுவதில்லை. எங்களை போற்றவேண்டாம். தூற்றாமல் இருந்தாலே போதும் என்று மனதினுள் அழுகின்றார்கள் முன்னைநாள் பெண்போராளிகள்.இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து விசாரணைகள் சித்திரவதைகள் மனஉழைச்சல்கள் என்று அத்தனையையும் தாண்டி விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பிய பல நூறு பெண்களின் கதைகள் ஒரு கட்டுரை மூலமாக அத்தனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இன்று தமிழ் சமூகத்தால் ஒதுக்கபடுவதற்கான முக்கிய காரணங்களாக பாதிக்கப் பட்ட பெண்கள் கூறுவது முதன்மையானது. 1)சாதியம்(திருமணமானவர்கள்) 2) பிரதேசம் 3)யுத்தத்தில் அவர்கள் அடைந்தஅடைந்த ஊனம். 4)வறுமை என்று தரம் பிரிக்கலாம்.
1)சாதியம்...இங்கு அதிகமாகப் பாதிப்படைந்தவர்கள் நீண்டகாலம் போராளிகளாக இருந்து இயக்கத்திலேயே திருமணமாகி யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களே. புலிகள் அமைப்பின் எழுச்சிகாலகட்டங்களில் அமைப்பில் சாதிகளற்ற கலப்பு காதல் திருமணங்களே ஊக்கிவிக்கப்பட்டது. அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களிற்கு மட்டுமல்ல சாதாரணமான பொதுமக்களிலும் சாதி மாறி காதலித்தவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்கள் யுத்தத்தில் கணவர்களை பறி கொடுத்தபின்னர் தங்கள் குழந்தைகளுடன் வாழவழியற்று வருமானமும் இல்லாத நிலையில் கணவனின் உறவுகளாலும்; ஏற்றுக்கொள்ளப்படமல் பெண்ணின் உறவுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனியே தவிப்பது மட்டுமல்லாது சமூகத்து ஆண்களின் தவறான கண்ணோட்டங்களும் இவர்கள் மீதே அதிக அழுததத்தினை கொடுக்கின்றது இவர்களே அதிகம் பாதிக்கபட்டவர்களாகின்றனர்.
2)பிரதேசம்..இங்கு அதிகம் பாதிப்படைவது கிழக்கு மாகாண பெண்களே முகாம்களிலிருந்து வெளியே வந்த பெணகள் தங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப முடியாத நிலை அதற்கான காரணங்கள் அவர்களின் கிராமங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களாகி விட்டது .அல்லது அவர்களிற்கு உறவுகள் யாரும் இல்லை அல்லது தொடர்புகள் அறுந்து பலவருடங்களாகியிருக்கும். முக்கிய காரணமாக அவர்கள் போராளிகளாய் இருந்த காலத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்திருப்பார்கள்.அல்லது ஊரில் சிறு பிரச்சனைகளிற்காக யாரிற்காவது தண்டனைகள் வழங்கியிருப்பார்கள். இவர்கள் சொந்த ஊரிற்கு திரும்பி சாதாரண வாழ்வில் ஈடுபடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களாலேயோ அல்லது அவரிற்கு வேண்டதவர்களால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வாளர்களால் கைது செய்யப்படலாம் அல்லது உயிராபத்து ஏற்படலாமென நினைத்து வேறு பிரதேசங்களில் குடியேறியவர்கள். அப்படி வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தாலும் மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளுடன் பிரதேசவாதமும் அவர்களை ஒதுக்குகின்றது.
3) யுத்தகாலத்தில் ஊனமடைந்த போராளிகள் புலிகளின் காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததோடு அவரவர்களின் திறைமைகளிக்கேற்ப இயலுமான வேலைத்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஊனமடைந்த பெண்போராளிகளின் நிலை அவர்களது உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அவர்களை தனியாக பராமரிக்க இயலாது அதே நேரம் சாதாணமாள பெண்களிற்கே திருமணம் செய்வதற்கு சீதனம் செலவுகள் என பணம் தேவைப்படும் இந்த நிலையில் ஊனமான பெண்ணை வைத்து என்ன செய்வது என்பது அவர்களது காரணங்களாகின்றது. அண்மையில் ஒரு முன்னைநாள் போராளிப் பெண்ணொருத்தி என்னுடன் தொலைபேசியில் கதைத்தபொழுது சொன்ன விடயங்கள்.அவள் யுத்தத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுடன் இழந்தவள்.பின்னர் அவளது குரல் வளத்தால் அவள் புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவள். யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி அவனது வீட்டிற்கு சென்ற பொழுது தாய் தந்தை அவளை துரத்தி விட்டார்கள் தனக்கு யாரையும் தெரியாது எங்கேயும் போக முடியாதென வீட்டு வாசலில் அழுதபடி இருந்தவளை அவளது சகோதரன் மீதமிருந்த முழங்கால்களில் பிடித்து தரதரவென இழுத்துவந்து வீதியில் எறிந்துவிட்டு போய்விட்டானாம். பின்னர் அவளின் நண்பர்கள் மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியதில் அவளை பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து அடிப்படை உதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு உதாரணம்தான்.
4)வறுமை என்பது நான் முதலில் எழுதியிருக்கும் காரணங்களுடன் சேர்ந்தே வருகின்ற ஒரு விடயம்தான். யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் காயங்களோ அற்ற திருமணமும் செய்திருக்காத பெண்கள் உடல் ரீதியிலான தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் உளரீதியான தாக்கங்கள் நிறையவே உள்ளது. புலிகள் அமைப்பில் பலவருடங்கள் இருந்துவிட்ட காரணத்தால் இவர்களது கல்வியை தொடராது இருந்தவர்கள். இன்றைய வேகமான வளர்ச்சிகண்ட உலகில் இவர்களது கல்வி அடிப்படைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. திருமணம் என்று வரும்பொழுது புலிகள் அமைப்பில் இருந்தது ஒரு காரணத்தடையாக முன்னே நிற்கின்றது. அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர் தனது மகனிற்கு ஊரில் ஒரு நல்ல பெண்ணாக தேடுவதாக சொன்னார் நான் அவரிடம் எனக்கு தெரிந்த நிறையபெண்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இப்போ வெளியில் வந்து சரியாக சிரமப் படுகிறார்கள் வேணுமானால் விபரம் தருகிறேன் போய் பார்த்து விரும்பினால் திருமணத்தை நடத்து என்றேன்.உடனே அவர் பதறியவராக ஜயோ புலியிலை இருந்தவளா அதுகள் குடும்பத்துக்கு சரிவராது என்றார்.
இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றை மட்டும் நாம் வெகு இலாவகமாய் மறந்து விட்டோம் அல்லது மறந்தது போல் நடிக்கிறோம் இவர்கள் போராட பேனது யாரிற்காக?? எம்சமூகத்திற்காகவும் எம்மினத்திற்காகவுமேஅதற்காக அவர்பட்ட சிரமங்கள் வலிகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் வெற்றிகளை கொண்டாடிய சமூகம் தோல்விகளை துரத்துவது ஏன். அன்று அவர்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து இன்னொரு இனத்துடன் போராட தள்ளிவிட்டோம். ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்களற்றவர்களாயும் தோற்று போனவர்களாயும் களைத்துப்போயிருந்தாலும் எமது சமூகச்சாக்கடைகளுடன் போராட தள்ளியிருக்கிறோம். எனவே அவர்கள் முன்னைநாள் பெண் போராளிகளல்ல.......... இன்னமும் போராளிகளே..







நன்றி தமிழ்மணம் & சாத்திரி






1 comment:

  1. பதிவு எழுச்சி ஊட்டக்கூடியதாய் இருக்கு. ஆனா சின்ன சின்ன பத்தியா இருந்தா நல்லாருக்கும் படிக்க..

    ReplyDelete