Tuesday, September 28, 2021

ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர் . வில்லன் ?

ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர்.
வில்லன் ???




தலைவி - கங்கனா








QUEEN - ரம்யாகிருஷ்ணன்
இரண்டுமே நமக்குத் தெரிந்த தமிழ் நாட்டு அரசியல்
அதிமுக ஜெயலலிதாவின் கதை.
தலைவியில் எம்ஜிஆராக அரவிந்தசாமி.
வெப் தொடரில் எம் ஜி ஆராக இந்திரஜித் சுகுமாறன்.

திரைப்படத்தில் கங்கனா ஜெயலலிதாவுடன் ஒட்டவே
முடியவில்லை! ஒன்றிரண்டு ஒரிஜினல் சினிமா
காட்சிகளைக் காட்டும்போது மட்டும் பரவாயில்லை.
சினிமாவில் எதிர்க்கட்சி தலைவர் வில்லன் ரேஞ்சுக்கு
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
சட்டசபையில் துகிலுரிதல் காட்சி..
முதலமைச்சராகி சட்டசபைக்கு வருவேன்"
என்று சூளுரைக்கும் காட்சி...
அய்யய்யோ.. சட்டசபையின்
"அந்தக் கறுப்புதினம்" இன்று பார்க்கும்போது .
. திமுக தொண்டர்களுக்கு
எப்படி இருக்குமோ..? தெரியவில்லையே!
திரைப்படம் ஓடாது.

அதிமுகவும் இதைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது!
பரிதாபம்..!
காரணம் திரைப்படத்தில் திமுக மட்டும் வில்லத்தனம்
காட்டவில்லை.
அதிமுகவும் என்னவெல்லாம் ஜெ வின் அரசியல் பாதையில்
அவர் ஒரு பெண் என்பதால் இழிவுப்படுத்தினார்கள்
என்பதை சினிமாவும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக திரையில் எம். ஜி. ஆர் - ஜெயலலிதா ஜோடியை
ரசித்து விசில் அடித்து கொண்டாடிய வர்கள் இவர்கள்.
சினிமா நடிகரை தலைவராகவும்
ஏன் தங்கள் கண்கண்ட தெய்வமாகவும்
கொண்டாடியவர்களுக்கு அதே சினிமாவிலிருந்து
வரும் பெண்ணை ஏற்க முடியவில்லை.
அவள் சுமக்கும் அவமானங்கள் கனக்கிறது.
எம் ஜி ஆரின் இறுதி ஊர்வலத்தின்
க்ளைமாக்ஸ்..அதிமுகவின் அசல் முகத்தை காட்டி விடுகிறது.

எனவே இரண்டு பக்க தொண்டர்களுக்கும்
தலைவர்களுக்கும் "தலைவி" தொந்தரவுதான்.
தலைவியை விட குயின் கொஞ்சம்
புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
குயின் தொடரில் திமுக எதிர்மறை பாத்திரமல்ல.
குயின் ஒரு பெண்ணின் அரசியல் பயணமும்
ஆண்மைய சமூகம் அதை எதிர்கொண்ட விதமும்
என்று கவனமாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறது.
சின்ன சின்ன அசைவுகளில் அதிமுக தலைவி
"ஜெ"வை கொண்டுவருவதில்
ரம்யா கிருஷ்ணன் ஜொலிக்கிறார்.
கங்கனாவின் உடல்மொழி ஒத்துழைக்கவில்லை.
படம் என்னவோ திரையிடப்பட்ட மும்பையில்
எதிர்பார்த்த அளவுக்கு வசூலை எடுக்கவில்லை.
வெளி நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில்
தலைவிக்கு அதிக வரவேற்புஇருந்திருக்கிறது
என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
எம் ஜி ஆர்.. ?
யார் எம் ஜி ஆராக நடித்தாலும் மக்களுக்கு பிடிக்கும்.
ஜெயலலிதா படங்களில் எப்போதும்
எம் ஜி ஆர் தான் ஹீரோ. சந்தேகமே இல்லை!
ஆனால் யார் வில்லன் என்பதுதான்
இன்றும் சந்தேகமாக இருக்கிறது.

No comments:

Post a Comment