Saturday, September 4, 2021

மணிமண்டபங்களின் பிசுபிசுப்பு

 குமரி முனையில் பெருந்தலைவர் காமராசருக்கு

மணிமண்டபம்/நினைவு மண்டபம் இருக்கிறது.

கொரொனா காலத்திற்கு முன் நான் குமரிமுனையில்
அந்த மணிமண்டபம் சென்று வந்தேன்.
ஒரு பெருந்தலைவருக்கு இதைவிட பெரிய தண்டனையை
யாரும் கொடுக்க முடியாது!

பிசுபிசுவென கால்களில் ஒட்டுகிறது . படிக்கட்டுகளில்
எச்சில் துப்பு துப்பி கறை படிந்திருக்கிறது.
அரியப்புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கவனிப்பாரின்றி மண்டபத்தின் மையப்பகுதியில்
காமராசரின் மார்பளவு வெண்கலச்சிலை.
அவர் பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மட்டும்
யாராவது எட்டிப்பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்!
(இதுவும் என் நம்பிக்கை மட்டும்தான்)
மேல்தளத்திற்குப் போய் ஒரு நிமிடம் அங்கே
உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை.
கையில் எதாவது பழைய செய்தித்தாள் எடுத்துப்போனால்
அதை விரித்துக்கொண்டு உட்காரலாம்.
அங்கே ஒரு நூலகம் செயல்படுவதாக அறிவிப்பு இருக்கிறது!
உண்மையா..
கடல் அலைகள் தான் சொல்ல வேண்டும்!
இந்த மணிமண்டபமும் திமுக ஆட்சியில்
அன்றைய முதல்வர் கலைஞர் தான் திறந்து வைத்தார். !
என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இங்கே மணிமண்டபங்கள் கட்டுவது ஏன்?
அதனால் என்ன பயன்?
அதன் பராமரிப்பு செலவு எவ்வளவு?
அதைப் பயன்படுத்தி மணிமண்டபங்கள் கவனிக்கப்
படுகின்றனவா???!!
மணிமண்டபம் கட்டி விட்டால்
அந்த அரசு அந்த தலைவரைக் கொண்டாடுகிறது
என்று புரிந்து கொள்கிறோம். அதுதான் நேரடியாக வரும் புரிதல்.
ஆனால்
இங்கே எதுவுமே அம்மாதிரி இருப்பதில்லையே.
சிலை வை.
மணிமண்டபம் கட்டு.
இதோ பாருங்கள்..
நான் தான் இன்னாருக்கு சிலை வைத்தேன்
நான் தான் மணிமண்டபம் கட்டினேன்
என்று மணிமண்டபம் வாசலில் பளபளப்பான
பளிங்குத்தூணில் செதுக்கி வைத்து
அதை வரலாறாக்கி ..
யதார்த்தங்களின் பிசுபிசுப்பு காலில் ஒட்டும்
கறைகளைத் துடைத்துக்கொண்டும் துடைக்காமலும்
பயணிக்க பழகிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
90 வயது வரை வாழ்ந்த பிடல் காஸ்ட்ரோவின்
இறுதி ஆசை... எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
எந்த சிலைகளும் இல்லை என்பதால்
காஸ்ட்ரோவை க்யூபா மறந்துவிடவில்லை.

1 comment:

  1. முற்றிலும் உண்மை. சிலை வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் நிறுத்தி விடலாம். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete