Monday, June 14, 2021

காவல்துறையைப் பலகீனப்படுத்திவிடாதீர்கள்..

 பெண்களைப் பலகீனப்படுத்திவிடாதீர்கள்.. ப்ளீஸ்..

இதுவல்ல தீர்வு..முதல்வர் செல்லும் சாலையில் போலீஸ் பாதுகாப்பு.
சற்றொப்ப 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
கால்கடுக்க சாலையில் நிற்க வேண்டும்.
அதுவும் சில நாட்களில் 12 மணி நேரத்திற்கும்
அதிகமாக நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதில் ஏற்படும் உடல் மன ரீதியான பிரச்சனைகளைக்

கணக்கில்கொண்டால் இருபாலாருக்கும் பிரச்சனைகள் உண்டு.
அண்மையில் தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்
பெண் போலீசுக்கு இதிலிருந்து விலக்களித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை பலரும் கொண்டாடுகிறார்கள்.
தாயுமானவர் என்றெல்லாம் என் தோழர்கள் கொண்டாட
ஆரம்பித்திருப்பது சற்று கவலையளிக்கிறது.
காலம் காலமாக பெண்கள் சில வேலைகள் செய்ய
இயலாதவர்கள் என்ற எண்ணம் சமூகப்பொதுப்புத்தியில்
இருக்கிறது.
அதை உடைத்து அதற்கான சிறப்பு பயிற்சிகள் பெற்றுதான்
பெண்கள் சில துறைகளில் நுழைந்திருக்கிறார்கள்.
அதில் மிக முக்கியமானவை : காவல்துறை, இராணுவம்.
இப்பயிற்சியில் பெண்களுக்கு இதை எல்லாம்
செய்ய முடியாது, இதெல்லாம் பெண்களுக்கு
தேவையில்லை என்ற விதிவிலக்கு கிடையாது.
கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகுதான் அவர்கள்
காக்கிச்சட்டையை அணிந்திருக்கிறார்கள்.
இது கட்டாயப்படுத்தப்பட்ட தல்ல,
அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்ட வேலை.
இன்னும் சொல்லப்போனால் இம்மாதிரி வேலைகளில்
சேர்வதற்கு கூட பெண்களுக்கு எத்தனை கடுமையான
விதிகள் இருக்கின்றன என்பதெல்லாம் எல்லோரும்
அறிந்த து தான்.
150 காவலர்கள் சாலையில் பாதுகாப்புக்கு ஏன்?
எம். ஜி ஆரும் ஜெயும் முதல்வராக இருந்தக் காலத்தில்
தான் அதிகமானவர்கள் முதல்வர் பாதுகாப்புக்கு
நிறுத்தப்பட்டார்கள் என்பதை
அறியாவதவரா முதல்வர் ஸ்டாலின்?
முதல்வர் சாலையில் பயணிக்கும்போது ஏன் பாதுகாப்பு
தேவைப்படுகிறது என்றால் முதல்வரை சந்திக்க
பொதுமக்கள் கூடுவார்கள், எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதால் மட்டுமே இந்தப் பாதுகாப்பு
அரண். முதல்வரை சாலையில் சந்திக்க ஆண் பெண்
குழந்தைகள் யார் வேண்டுமானாலும் நிற்கலாம்.
அதை எந்தச் சட்டமும் தடை செய்ய முடியாது.
அப்படியானால் , பெண்களால் பிரச்சனை அல்லது
அச்சுறுத்தல் வருகிறது என்றால் அதைக்
கட்டுப்படுத்தப் போவது யார்?
அதை யார் கையாளுவார்கள் ?
சட்டப்படி,
பிரச்சினை ஏற்பட்டால், போராட்டங்கள் நடந்தால்
பெண்களைப் பெண் காவலர்கள் மட்டுமே கையாள
வேண்டும் என்கிற விதி உள்ளதே!
கர்ப்பினி பெண்களை சாலைப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம்
என்பதற்கு அப்பால் இப்பிரச்சனையை
பாலியல் ரீதியாக வேறுபடுத்திக் காண்பது தவறு.

பெண்களை எந்த ஒரு காரணத்திற்காக சில பணிகளிலிருந்து
தடை செய்திருக்கிறார்களோ
அதே காரணங்களுக்காக விலக்கு அளிப்பதும் தவறுதான்.
உடற்பயிற்சியும் உளவியல் பயிற்சியும் பெற்றுதான்
பெண்களும் இப்பணிக்கு தங்களைத் தாயார் செய்து
கொண்டு வருகிறார்கள்.
12 மணி நேரம் நிற்பதால் உடல் உபாதை என்றால்
அதே உடல் உபாதைகள் ஆணுக்கும் உண்டு,
மாதவிலக்கு தான் இதில் பிரச்சனை என்றால்
அதை அணுக வேண்டியது ஒட்டுமொத்த பெண்களுக்கும்
விலக்கு அளிப்பதன் மூலம் அல்ல.
பணி இடங்களில் அரசுப் பள்ளிகளில் பணி புரியும்
பெண்களுக்கு தனியான கழிவறை வசதி இருக்கிறதா?
பொது இடங்களில் தூய்மையான கழிவறை வசதிகள்
இருக்கிறதா?
பள்ளிக்கூட த்திற்குப் போகும் மாணவர்கள்
வீட்டுக்கு வந்து தான் சிறு நீர் கழிக்கிறார்கள் .. இப்படியான
பொதுவெளியில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க
வேண்டியதும் இப்பிரச்சனைகளை
ஒரு “தாயுமானவராக” அணுக வேண்டியதும் முதல்வரின் கடமை.

இன்னொரு மிக முக்கியமான கருத்து..
இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாட்டின் காவல்துறை என்பது
தமிழ் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானது.
ஒவ்வொரு மா நிலத்தின் காவல்துறை
அந்தந்த மா நிலத்தின் இராணுவம். அதில் பெண்களுக்கு
கொடுக்கப்படும் இம்மாதிரி சலுகைகள் ..
பெண்களைப் பலகீனப்படுத்துவது மட்டுமல்ல,
காவல்துறையையும் பலகீனப்படுத்திவிடும்.

பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால்
தீர்வு இதுவல்ல.

3 comments:

 1. பெண் எந்த பயிற்சி எடுத்தாலும் பெண் பெண்தான்.
  பெண்ணுக்கு மன வலிமை அதிகம் உண்டு .ஆண்களுக்கு உடல் வலிமை அதிகம் உண்டு.
  முதல்வர் எடுத்த முடிவு மிகமிக சரியானதே.
  பெண் காவலர்கள் தேவைப்படும் இடங்களில் சரியாக பயன்படுத்த படுவார்கள்.

  ReplyDelete
 2. பக்குடுக்கை நன்கணியார் எழுதிய
  புறநானூறு 164:
  *இன்னாது அம்ம இவ்வுலகம்! இனிய காண்க அதன் இயல்பு உணர்ந்தோரே!*

  ReplyDelete