Showing posts with label சங்ககாலம். Show all posts
Showing posts with label சங்ககாலம். Show all posts

Wednesday, January 12, 2022

தமிழர்களின் பொய்முகம்

 


ஆண் பெண் உறவில் ரொம்பவும் பொய்யான வாழ்க்கை ...

தமிழர்களின் வாழ்க்கை.

பொய்கள் அழகானவை.
பொய்கள் உன்னதமானவை.
பொய்களில் உண்மையின் கோரமுகம் இருப்பதில்லை.
எல்லோருக்கும் அதனால் பொய் எப்போதும்
நெருக்கமானதாக இருக்கிறது.
ஆனால்...
பொய் உண்மையின் இன்னொரு முகம்.
பொய்யின் ஒவ்வொரு அதிர்வலையிலும் உண்மைதான்
பேசிக்கொண்டே இருக்கிறது.
ஆண் பெண் உறவில் பொய்கள் உன்னதமானவையாக
கட்டிக்காப்பாற்றப்படுகின்றன.
அதீதமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து
வந்திருப்பதன் மூலம் சமூகத்தின் உண்மையான
நிலவரத்திற்கும் இவர்களின் இலக்கிய
வெளிப்பாடுகளுக்குமிடையில் ஒரு இட்டு நிரப்ப முடியாத
இடைவெளி இருக்கிறது.
களவு மணம் கொண்ட வாழ்வியலில் திருமணம்
என்ற சடங்கு நிறுவனமயமான காரணத்தைச்
சொல்லவரும் தொல்காப்பியம் களவுமணம்
செய்தவன் ஏமாற்ற ஆரம்பிக்கும்போது திருமணம்

தோன்றியது என்று சொல்கிறார்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(கற்பியல்,4
எவ்வளவு பெரிய சமூக மாற்றம். திருமணச் டங்குகளை
ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தக் காரணத்தை
எத்தனை சங்கப்பாடல்கள் பேசுப்பொருளாக்கி இருக்கின்றன?
எத்தனை ஏமாற்றுகள் இருந்திருந்தால்
சமூகம் தொடர்ந்து கடைப்பிடித்த ஒரு மரபிலிருந்து
இன்னொரு முறைக்கு மாறி இருக்கும்?
என்னதான் மார்க்சியம் சொத்துடமை,
வாரிசுகள் குடும்ப நிறுவனத்திற்கான காரணிகளாக
முன்வைத்தாலும் பெண் சமூகம் அதுவரை
களவு மணத்தின் உரிமையை வாழ்க்கையை
வாழ்ந்தவர்கள் திருமண உறவு வாழ்க்கைக்குள்
எவ்விதமான உறுத்தலோ மனவருத்தமோ இல்லாமல்
நுழைந்துவிட்டார்களா என்ன?

திருமணம் பெண்ணிற்கு பாதுகாப்பானது,
திருமணச் சடங்கில் நுழையும் ஆண், அவன் மனைவியை
அவ்வளவு எளிதாக பொய் சொல்லி ஏமாற்றிவிட முடியாது
என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எந்தளவுக்கு
களவு மணத்தில் பொய்யும் வழுவும் தோன்றியிருந்தால்
அதற்கு மாறாக இன்னொரு பாதுகாப்பான வளையத்திற்குள்
பெண் நுழைந்திருப்பாள்!
ஆனால் இந்த மாற்றத்தைப் பதிவு செய்யவில்லை
நம் சங்க இலக்கியம்!
சமூகத்தில் நிகழ்ந்த மாபெரும் மாற்றத்தை
தமிழர் வாழ்க்கையில் புகுந்துவிட்ட தலைகீழ்
மாற்றத்தை இலக்கியம் பேசவில்லை!
சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாடலில் தான் இதுவும்
வேறு எதையோ சொல்ல வரும்போது ஒரு காட்சியாக
சொல்லப்பட்டிருக்கிறது!
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
- கடுவன் மள்ளனார். அகம் 256
இப்பாடலும் கள்ளூர் காதல்கதையை நேரடியாக
பேசவில்லை.
அன்று கள்ளூரில் அவைக்களம் சிரித்து
ஆரவாரித்தது போல பரத்தையுடன் அவன்
கொண்ட உறவை ஊர் மக்கள் பேசி சிரிப்பதாக
சொல்லிச்செல்கிறது.
இந்த சமூக மாற்றத்தை ஏன் பாடவில்லை?
ஏன் எழுதவில்லை?
அல்லது எழுதியதை மறைப்பதிலும் அழிப்பதிலும்
கலாச்சார காவலர்கள் கவனமாக இருந்தார்களா!!

கோவில் சிற்பங்கள் சில இதை எல்லாம் மீறி இருக்கின்றன.
தொட முடியாத உசரத்தில் இருக்கின்றன. மேலும்
அவை கோவிலில் இருப்பதால் பாதுகாப்பாக
“ புனிதமாக” இருக்கின்றன. அவ்வளவுதான்.

Saturday, October 19, 2019

உப்பு காதல்

உப்புக் காதல்
அவன் குறிஞ்சி நிலத்தவன்
அவள் நெய்தல் நிலக்காரி.
உப்பு விற்க வருகிறாள்.
“நெல்லும் உப்பும் நேரே “
அவள் குரல் வீதிகளில் ஒலிக்கிறது.
அவன் முன்பின் அறிமுகமில்லாத அவளிடம்
அவளருகில் வந்து உப்பு விலை கேட்கிறான்.
சரி.. இதுவரைக்கும் சரிய்ய்யா..
எந்த உப்பு விலை?!!
“உன் மெய்வாழ் உப்பின் விலை என்னவோ?”
என்று.அவன் கேட்டானாம். (அடப்பாவி..!)
அவள் என்ன செய்திருப்பாள்.
பளார்னு கன்னத்தில் ரெண்டு கொடுத்திட்டு
இடுப்பில சொருகி வச்சிக்கிற கூர்கத்தியை
எடுத்துக் காட்டிட்டு “ட்டேய்.. “ னு
விழியாலேயே மிரட்டிட்டு தான் போயிருப்பா..
ஆனா பாருங்க..
காதல் காட்சியில அப்படி காட்டல.
ஏன் ? என்றெல்லாம் என்னிடம் கேட்கப்பிடாது.
அவ அவனைப் பார்த்து சிரிச்சிட்டு
“யார் நீ, என் வழியை மறிக்கிறாய்? “ னு
கேட்டுட்டு போயிட்டாளாம்.
அவ பின்னால அவன் மனசு போக
அவன் புலம்பறது தான் சீன்.
அம்மூவனார் தான் பாடலாசிரியர்.

காட்சியை ஒரு கடற்கரையில் ஆரம்பித்து
அப்படியே கடைவீதிக்கு கொண்டு வந்து
இடை இடையே பெரிய கப்பலில் அவர்களைக்
காட்டி ஒரு குரூப் டான்ஸ்
குத்துப்பாட்டு
சும்மாவா..
காதல் காட்சிகள் அன்றும் இன்றும் மாறவே இல்லை.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ?” எனச் சேரிதோறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமை தோளாய்! நின்
மெய்வாழ் உப்பின் விலை எய்யாய்.
_ அக நானூறு 390
அம்மூவனார் பாடியது..