Wednesday, March 13, 2024

கனவு இல்லம்

 கனவு இல்லமெல்லாம் தரவேண்டாம்.

கனவில்லாத இல்லமாவது தரலாம்தானே.!


காணி நிலத்தில் ஒரு குடிசை

கட்டித்தந்தால் போதும்.

அது எனக்கே எனக்கானதாக

இருக்க வேண்டும்.

என் எழுத்துகள் விரும்பும்போதெல்லாம்

எழுந்து  நடமாடவும்

அழவும் சிரிக்கவும்

உயிர்ப்புடன் உலாவரவும்

குடிசையாக இருந்தாலும் போதும்.


கனவு இல்லத்திற்குத்தானே

சா.அ. விருதும் பட்டயமும் தேவை.

கனவில்லாத இல்லத்திற்கு

என்ன தேவை?

வீடில்லை என்பதே 

எழுத்தாளரின் தேவை.

எனக்கு வீடில்லை.

எனக்கு தமிழ் நாட்டில்

முகவரி இல்லை,

எனக்கும் என் எழுத்துக்கும்

இளைப்பாற ஓரிடம்..வேண்டும்.

அதை 

வாரிசுகளுக்கு எழுதி வைக்க மாட்டேன்.

பெற்ற பிள்ளைகளுக்கும்

என் எழுத்துகளுக்கும்

என்ன உறவு?

எழுத்தும் இயக்கமும்

மரபணுவில் வந்ததென்றால்

கம்பனின் பிள்ளைகளை

ஏன் காணவில்லை.?


வாழும்போதே

வந்துப் போகவும்

என் முகவரியை எழுதவும்

என்னைப் போலவே

முகவரியற்ற எழுத்துகளுக்கு

முகவரியாகவும்

ஓர் இல்லம் வேண்டும்.


அரசு கேட்கும் அடிப்படைத் தகுதிகள்

ஆதார் அட்டை

தாசில்தார் முத்திரை

எதுவுமில்லை என்னிடம்.

அவ்வை விருதோ

அம்மா விருதோ

உங்கள் எந்த விருதுகளுக்கும்

எங்களிடம் விண்ணப்ப படிவங்களும் இல்லை,

ஆனாலும்,

வந்துப் போகவும்

தங்கிப் போகவும்

ஓரில்லம் ..வேண்டும்.

கனவு இல்லம் கேட்கவில்லை,

கனவில்லாத ஒரு குடிசை..

போதும்.


#புதியமாதவி_கனவுஇல்லம்.


2 comments:

  1. கனவில்லாத குடிசை விரைவில் கிடைக்கட்டும் தோழர்...உள்ளத்து உணர்வைப் பகிர்ந்த கவிதை.மகிழ்ச்சி.வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கனவு தான் மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete