பொய்களுக்குப் பலபெயர்கள் உண்டு.
அவன் பெயரும் அதிலுண்டு.
கரைபுரண்டோடிய வைகை வெள்ளத்தில்
நீச்சல் கற்றுக்கொடுப்பதாக
பாசாங்கு காட்டியவன்
மூச்சுத்திணறி அவள் மிதக்கும் வரை
கரையிலேறி கொண்டாடியவன்
இதோ..
பட்டத்து ஆனையில் பவனிவருகிறான்.
வெள்ளம் வடிந்துவிட்டது.
சாட்சியாக இருந்த மணல்களை
அவன் அடியாட்கள்
கொள்ளையடித்துவிட்டார்கள்.
புதர்மண்டி கிடக்கிறது
அவள் கனவுதேசம்.
மதுரை கோபுரங்கள் அதிர
வாழ்க வாழ்கவென கோஷங்கள் .
ரதவீதிகள் குலுங்குகின்றன.
மீனாட்சி தோளிருந்த பச்சைக்கிளியைக்
காணவில்லை.
வீறுசால் அவையோர் வாழ்ந்தக் கள்ளூர்
அவள் பிணத்தை எரிக்கவோ
புதைக்கவோ முடியாமல்
நாற்றமெடுக்கிறது.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா
சுடுகாட்டில் ஆடும்
உன் ஆட்ட த்தில்
நீண்டு தொங்கும் சடைமுடிகள்
மறைத்திருக்கின்றன
உன் முதுகிலிருக்கும்
பொய்யின் தழும்புகளை.
பொய்கள் பொய்களை அறியும்.
வா..
கரும்புத்தோட்டத்தில்
அவன் விட்டுச்சென்ற அதே
பொய்களின் கங்குகளை
தோண்டி எடுத்துவா.
காதலின் பிணங்களை எரிக்க
பொய்களால் மட்டுமே முடியும்.
அவள் பிணம் எரியும் வாசனை
உங்கள் தேசமெங்கும்
பொய்களை விதைக்கட்டும்.
அதில்
உன் நெற்றிக்கண்ணும் சிதையட்டும்.
கொற்றவை களி நடனம்.
அடியே மீனாட்சி
அழுகையை நிறுத்து.
களவொழுக்கம் கற்பொழுக்கம் உடன்போதல்
பரத்தையர் பிரிவு எல்லாம் தான் உண்டு.
ஆனால் அன்றும் பொய் சொல்லி
பெண்ணின் வாழ்வை ஏமாற்றியவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படியானவர்கள்
இல்லவே இல்லை என்றெல்லாம் பொற்காலக் கனவுகள் மறைத்துவிட முடியாது.
அக நானூறு பாடல் 256: பாடலில்
களவொழுக்கம் கொண்டு அதன்பின்
அவளை “அறியேன்” என்று
பொய்யுரைத்தவனுக்கு ஊரார் தண்டனை வழங்கியதாக
பதிவு செய்திருக்கிறது.
“முக்கவரான கிளைகளின்
நடுவே கட்டிவைத்து, நீற்றினைத் தலையிலே பெய்து தண்டனை விதிக்கும் வழக்கம்
இப்பாட்டிலே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், அவன் குற்றம்
ஊரறிந்த பழியுடையதாகிறது.
பாடல் வரிகள்:
“…..பொய்யால்; அறிவேன்; நின் மாயம்
…
தொல்புகழ் நிறைந்த பல்பூங்
கழனிக்,
கரும்பமல்
படப்பைப், பெரும்பெயர்க் கள்ளூர் 15
திருநுதற்
குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி
லாளன், அறியேன்” என்ற
திறன்இல்
வெஞ்கூள் அறிகரி கடாஅய்,
முறிஆர்
பெருங்கிளை செறியப் பற்றி
தீறுதலைப்
பெய்த ஞான்றை;
வீறுசால்
அவையத்து ஆர்ப்பினும் பெரிதே”
அகம் 256
புலவர்: மதுரை
தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்.
No comments:
Post a Comment