அப்பா…வுக்கு…
உன் உசரம் நான் என்பதில் உனக்குப் பெருமை.
உன்னைப் போலவே நானும்
கணக்கில் புலியாக்கும்..!
சொல்லிச் சொல்லி பூரித்துப் போனாய்.
அ- அணில்
இ - இலை
துணைப்பாடமாய் பிரஞ்சு படித்ததை
பிரஞ்சு மொழியில் புதினங்கள் வாசிப்பதாய்
கொஞ்சம் அதிகப்படியாகத்தான்
பெருமைப்பட்டுக்கொண்டாய்.
நோட்டுப்புத்தகத்தில் கிறுக்கியிருக்கும்
கார்டூன் சித்திரங்களை
கலையார்வமாக
கர்வத்துடன் பிரகடனம் செய்தாய்.
உன் மகிழ்ச்சி உன் பெருமை உன் கவுரவம்
என் சான்றிதழ்களில் பரிசுகளில் வெற்றிக்கோப்பைகளில்
பொறிக்கப்பட்டிருப்பதாய்
நேற்றுவரை வலம் வந்த நீ..
கல்யாணமாலை ஒலிபரப்பில்
எதையும் சொல்லாமல்
ஏன் இருட்டடிப்பு செய்தாய்?
இப்போதெல்லாம்
அம்மாவைப்போல
சமைக்கத் தெரிவதிலும்
அத்தையைப் போல தலையாட்டி
அடக்க ஒடுக்கமாய்
அடங்கி இருப்பதிலும்
இருப்பதாக சொல்கிறாய்
நீ கட்டிக்காத
பெருமையும் குல கவுரவமும்.
தந்தையே
பனிமலைகளை உடைத்து எடுத்து
துண்டுகளாக்கி சூடேற்றிய நீ
சூட்டில் பனிக்கட்டிகள் உருகாமலிருக்கும்
சூத்திரத்தை
எப்போது எழுதப் போகிறாய்?
_மீள்பதிவு. என் கவிதை தொகுப்பு ஐந்திணை
தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in
ReplyDeleteஅழகான பதிவு.
ReplyDeleteஅழகான பதிவு.
ReplyDelete