Tuesday, March 6, 2018

ஸ்டாலினா ? வெற்றிடமா?



Image result for stalin vs modi

<குடும்பத்தலைவர் என்ற முறையில்
 கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி செய்த அநீதி இது. 
ஸ்டாலின் என்ற தொண்டனுக்குச் செய்த துரோகம் இது!"

திமுக வையும் திமுக வின் செயல்தலைவராக இருக்கும்
 திரு.ஸ்டாலின் அவர்களையும் திராவிட அரசியல் 
தளத்தில் கடுமையாக விமர்சனம்
செய்பவள் என்பது எல்லோரும் அறிந்தச் செய்திதான்.
ஆனால் இன்று தமிழக அரசியல் தளத்தில் அனைவரும்
 வெற்றிடத்தை நிரப்ப வந்த காற்றின் வேகத்தில் 
சில கருத்துகளை உதிர்த்துச் செல்கிறார்கள்.
அவர்களும் அவர்களின் கருத்துகளும் "ஸ்டாலின் எதிர்ப்பு" 
என்ற ஒற்றைப் புள்ளியில் கவனிக்கப்பட்டு 
அதற்காகவே ஊடகங்களால் பெரிதாக ஊதி தள்ளப்பட்டு
 வீங்கிப் புடைத்து கண்பார்வையை மறைத்து நிற்கிறது.

திமுக ஆட்சியிலும் ஊழல் நடந்தது.
அதிமுக ஆட்சியிலும் ஊழல் இருந்தது.
இருவரில் யார் ஆட்சி செய்தாலும் ஊழலின் கமிஷன்
சரியாகப் பங்கீடப்பட்டுக்கொண்டிருந்தது.
அப்போதெல்லாம் நல்லாட்சி குறித்து வாய்திறக்காதவர்கள் தான்
இன்று வெற்றிடம் நிறைக்க வந்திருக்கிறார்கள்!
இந்த வெற்றிட நாயகர்கள் சிஸ்டம் சரியில்லை எங்கிறார்கள்.
அதாவது திமுக என்ற மாபெரும் அரசியல் கட்சி
 தன் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் உருவாக்கிய
 அல்லது உருவான தலைமையை
அர்த்தமற்றதாகவும் தகுதியற்றதாகவும் முன்வைக்கிறார்கள்.
அவர்கள் பேசும் "வெற்றிடம்" என்ற புள்ளியில்
அவர்கள் வைக்கும் அரசியல் இதுதான்.

திமுகவின் செயல்தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் 
திறமையானவரில்லை, அதிலும் சிலர் கலைஞரைப் போல அவர் திறமையானவரில்லை என்ற ஒப்பீடு செய்து
 தங்கள் அரசியல் இலட்சியத்தைக் காப்பாற்றிக்
 கொள்வதாக நினைக்கிறார்கள். 

கலைஞர் கடந்து வந்த அரசியல் பாதையும்
 திமுக வரலாறும் ஸ்டாலினுக்கு கிடைக்காத அனுபவங்கள். 
மேலும் ஆட்சி அதிகார அரசியல் வாக்கு அரசியல் களத்தில் 
ஸ்டாலினுக்கு 
திமுகவும் + திமுக குடும்பமும்
 இரண்டும் போட்டிப் போட்டுக்கொண்டு அரசியலுக்குள் அரசியல் செய்தன. 
திமுக தேர்தலில் தோற்றால் அத்தோல்வி எப்போதுமே
 திமுக வின் தோல்வியாக பேசப்படாமல்
ஸ்டாலின் தலைமையின் தோல்வியாக மட்டுமே
பேசப்பட்டது. 
வாரிசு அரசியல் என்ற ஒரே ஒரு காரணத்தைக் காட்டி
புறக்கணிக்கப் பட வேண்டியவர் திமுக வில் 
திரு ஸ்டாலின் அவர்கள் அல்ல. 
ஏனேனில் இந்தியாவின் வாரிசு அரசியலில் 
ஸ்டாலின் மட்டுமே திமுக வின் தலைவர்
கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 
அரசியலில் அங்கீகாரம் பெற்றவரில்லை. 
கட்சியில் அதற்காக உழைத்தவர். படிப்படியாக முன்னுக்கு வந்தவர்.
வாரிசு அரசியலில் இந்தியாவில் ஸ்டாலின் மட்டுமே இந்த வகையில் விதிவிலக்கானவர் என்பதை 
என்றும் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
ஆனால் அதே வாரிசு அரசியல் வேறு ஏதோ ஒரு வகையில் 
திமுகவை கரையானைப் போல அரித்து
தின்றுவிட்ட நிலையில் பொறுப்புக்கு வந்தவர் ஸ்டாலின். 
கலைஞரின் குடும்ப அரசியல் திமுகவில் நுழையாமல் இருந்திருந்தால் 
ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமடைந்திருக்கும். 
ஸ்டாலின் அவரைச் சுற்றி உண்மையான, ஓரளவு அரசியல் தெரிந்த சிந்தனையாளர்களை (THINK BANK) தன் ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு
அரசியல் ஆட்டத்தை ஆடி இருக்க வேண்டும். நடுவண் அரசி ன் கூட்டணியில்
தீர்மானிக்கும் சக்தியாக தமிழக அரசியலைத் திசைத் திருப்பி இருக்க முடியும்!

ஸ்டாலின் ஒன்றும் வெற்றிடம் நிறைக்க வந்த அரசியல்வாதியல்ல.
திமுக தலைவர் கலைஞரின் மகன் என்ற உறவையும் தாண்டிய 
ஓர் அரசியல் வரலாறு
திமுகவில் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.
ஸ்டாலின் தன் பள்ளிப்படிப்பு காலத்தில் (1960களில் என்று நினைக்கிறேன்) 
அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசும் கூட்டங்களில்
 மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருப்பாராம். 
தலைவர்களின் பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்துக்கொண்டிருப்பார்
 என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.. மறுநாள் அவர் பதிவு செய்திருப்பது
 அப்படியே முரசொலியில் வெளிவந்துக் கொண்டிருந்தது.
அறிஞர் அண்ணாவின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை
 எம்ஜிஆரின் திரைப்படம் போட்டு நிதி வசூலித்து 
ஸ்டாலின் கொண்டாடிய காலம் முதல் 
அவரை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
வாரிசு அரசியலில் எமர்ஜென்சி கொடுமையில் 
மிசா கைதியாக சிறைப்பட்ட ஒரே அரசியல் வாரிசும்
ஸ்டாலின் மட்டும் தான். அப்போது அவருக்கு வயது 23,
 திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகி இருந்தது. 
சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகளை
 இன்றைய முகநூல் இளைஞர்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் போன்றவர்களுக்கு 
அந்தச் சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது.
சிறையில் ஸ்டாலினைச் சந்திக்க பெற்றோரும் மனைவியும் வருகிறார்கள்.
சிறைக்காவலர்கள் ஸ்டாலினுக்கு முழுக்கைச்சட்டை 
கொடுத்து அணிந்துக் கொள்ள செய்கிறார்கள்.
சிறையில் அடிபட்ட காயங்கள் வெளியில் தெரியாமல் இருக்க மட்டுமல்ல,
 வெளியில் சொல்லவும் கூடாது என்று
 அவருக்கு சிறை அதிகாரி ஆணை இடுகிறார்.
 ஸ்டாலினும் அப்படியே நடந்து கொண்டார்.
ஸ்டாலினின் நிர்வாகத் திறமைகளை திமுக பயன்படுத்திக் கொண்டு 
எங்கேயோ போயிருக்க முடியும்!
பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரைத் தேக்கிவைத்து
 பாசனம் செய்ய தவறியது திமுகவின் தலைமை. 
ஸ்டாலினின் உழைப்பையும் தியாகத்தையும்
 முன்னிலைப் படுத்தாமல் அவரை வாரிசு அரசியலின் 
அடையாளமாக மட்டுமே முன்னிறுத்தியவர்கள் 
திமுகவின் அரசியல் எதிரிகளோ அல்லது ஊடகமோ அல்ல. 
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது
அரசியல் விமர்சகர் சோ ராமசாமி கூட ஸ்டாலின் 
20 வருடங்கள் தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டு
 படிப்படியாக முன்னுக்கு வந்தவர் என்பதை ஒத்துக் கொள்கிறார்.
எனவே வாரிசு அரசியல் என்ற தோள்களில் தொற்றிக்கொண்டு 
வந்தவர் அல்ல ஸ்டாலின். 
எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்ட இந்த உண்மையை
 கருணாநிதியின் குடும்பமும்
குடும்ப அரசியலும் ஏற்றுக் கொள்ள தவறியது.
குடும்பத்தலைவர் என்ற முறையில் கருணாநிதியின்
 நெஞ்சுக்கு நீதி செய்த அநீதி இது.
ஸ்டாலின் என்ற தொண்டனுக்குச் செய்த துரோகம் இது!
ஸ்டாலின் மேயராகப் பதவி ஏற்ற போது நடந்தப் பாராட்டு விழாவில் 
அன்றைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார் "ஸ்டாலினை
 நான் இப்போது பாராட்ட மாட்டேன், 
மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்த பின்னர்
 தான் பாராட்டுவேன்" என்றார். 
அதுபோலவே 1996க்குப் பிறகுதான் மாநகராட்சி பள்ளிகளில்
 பொதுத்தேர்வு எழுதி
தேறியவர்களின் எண்ணிக்கை 55 % லிருந்து 78 % உயர்ந்தது என்பதும்
உண்மை. ஸ்டாலின் மேயராக இருந்தப் போது சரியாக காலை 9 மணிக்கு மாநகராட்சிக்கு வருவார்,
மாலை 6 மணிக்கும் வருவார், இரவு 9 மணி வரை இருந்து
 பணிகளைக் கவனிப்பார் " 
என்று மாநகராட்சி ஊழியர்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.

அரசியல் புனிதர்களின் கூடாரமல்ல.
அரசியல் தூய்மை என்பது ஒரு கற்பனை உலகம்.
வாக்கு அரசியலின் அனைத்து யதார்த்தங்களையும்
புறக்கணிப்பதற்கில்லை.
இந்தக் கூட்டத்தில் தான் இன்று பேசப்படும்
வெற்றிடம் என்பதையும் அதில் சிக்கி இருக்கும்
ஸ்டாலினின் எதிர்காலம் குறித்தும்
தமிழக அரசியல் குறித்தும் அதன் சாதக பாதகங்கள்
குறித்தும் மீள்வாசிப்பு செய்ய வேண்டி இருக்கிறது.
அந்த மீள்வாசிப்பில் திமுகவும் திமுகவின் செயல்தலைவர் 
ஸ்டாலின் அவர்களின் கடந்தகாலமும் மீண்டும்
பேசப்பட வேண்டியதாக கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டியதாக இருக்கின்றன.
மிசா சிறைக்கைதியின் தியாகத்தை
2ஜியின் சிறைவாசம் காவு வாங்கிவிட்டது.
ஒரு மிசா கைதியின் சிறை வாசத்தை
திமுக தன் அரசியல் தளத்தில் தொலைத்துவிட்டு
எதைத் தேடிக் கொண்டிருக்கிறது?

தன்னிடம் என்ன இருந்தது, 
தன்னிடம் இருந்த அடையாளமும் அதன் மாட்சியும்
பெருமையும் தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல,
மாநில சுயாட்சி அரசியலுக்குமான
ஆகச்சிறந்த ஆயுதம் என்பதை ஸ்டாலினுக்கு 
யார் நினைவூட்டுவார்கள்?
காலம் இப்போதும் கடந்துவிடவில்லை.
கவலைப் பட வேண்டியது ஸ்டாலின் மட்டுமல்ல
திமுகவும் திராவிட அரசியலும் இதைப் புரிந்து கொண்டால் 
அடுத்தக் காட்சி அரசியல் களத்தில்
இப்படி இருக்கும் ( இப்புகைப்படம் போல. அதுவே எம் விருப்பமும்)

5 comments:

  1. அருமையாக அலசி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  2. திரு.ஸ்டாலின் சற்று புரிந்து நடந்துகொண்டால் கட்சிக்கு நல்லது. பொறுத்திருந்து பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. கட்சிக்கு நல்லதைப் பார்க்கிறாரா குடும்ப கார்ப்பரேட் சொத்துக்கு நல்லதைப் பார்க்கிறாரானு தெரியல. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

      Delete
  3. சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு

    ReplyDelete