Monday, March 12, 2018

கோடுகளின் லயம்

கோடுகளின் லயம்
-------------------------------
Image result for புள்ளிக் கோலங்கள்

அம்மா கோலம் போட்டாள் வாசலில்
அம்மம்மா வாசல் தெளித்து கோலம் போட்டாள்.
அவளுக்கு அம்மா சாணிக் கரைத்து வாசலில் தெளித்து
கோலம் போட்டாள்.
அவர்களின் விரல்நுனி வாசனை எப்போதாவது
பொங்கல் தீபாவளி பண்டிகை காலங்களில்
கோலமாக வாசலில் விரிகிறது.
முதல் முதலாக கோலம் வரைந்தவள் அவளாக மட்டுமே
 இருக்கமுடியும்.
பாறை ஓவியங்களுக்கு அஜந்தா ஓவியங்களும்
 கோவில் ஓவியங்களும் பிறப்பதற்கு முன்பே
அவள் தான் செய்த பானைகளில் வரைந்தாள்.
இறந்த மனிதர்களின் உடல்களைப் புதைக்கும் தாழிகளில்
 அவள் சித்திரங்களை வரைந்தாள்.
அவள் வரைந்த ஓவியங்கள் கோடுகளால் ஆனது.
 கோலம் என்றாலோ "கோடுகளின் லயம்" தானே!

எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்த பூம்புகார் கலைச்செல்வி
மாதவி கோலமும் அறிந்தவள்
. "எழுதுவரிக் கோலம் என்ற ஆட்டத்திற்கான
கோலம் செய்திருந்தாள்" என்று சொல்கிறார்
சிலம்பில் இளங்கோவடிகள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளோ
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
 திருமாலின் சங்கு சக்கர பஞ்ச்சாயுதங்களை
வாசலில் உருவக்கோலமாக வரைந்தாள் என்பதையும் அறிகிறோம்.

அதுவும் மார்கழி மாதத்தில் பெண்டிர் வாசலில்
கோலமிடுவதற்கு பக்தி மட்டுமே காரணமல்ல,
 அறிவியல் காரணமும் உண்டு.
மார்கழி மாதத்தில் மட்டும் தான் சூரிய உதயத்திற்கு முன்,
 ஓசோன் படலத்திலிருந்து பூமிக்கு நேரடியாக ஆக்ஸிஜன் வருகிறது.
தூய்மையான அந்தக் காற்றை சுவாசிக்கும் போது
பெண்களுக்குப் புத்துணர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும்
மேலும் 24/7 அடுப்படியில் வேலை செய்வதால் சமையல் புகையால்
ஏற்படும் சுவாசக்கோளாறுகள்..
இப்பிரச்சனைகள் அனைத்திற்கும்
மார்கழி விடியலே மருந்தாக இருக்கிறது என்பதைக்
 கண்டுபிடித்தவன் தமிழன்.
அக்காலத்தில் அரிசிமாவினால் வாசலில் கோலம் போட்டார்கள்.
இன்று அதெல்லாம் சாத்தியமில்லை. எனினும் வாசலில்
 ஈ, எறும்பு என்று ஊர்ந்து செல்லும்
ஓருயிர் ஈருயிர் காப்பதும் நம் கடமை என்ற
தமிழனின் பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டு அடையாளம்
 நம்மைப் பெருமிதம் கொள்ள செய்கிறது.
 இப்பூமி உருண்டை அனைத்து ஜீவராசிகளுக்குமானது
என்ற மாபெரும் தத்துவத்தை தம் வாழ்வியலாகக்
 கொண்டு வாழ்ந்தவர்கள்  நாம்.
மாக்கோலம், புள்ளிகளை வைத்து வரையும் புள்ளிக்கோலம்,
வரிக்கோலம், சித்திரக்கோலம்,  தேர்க்கோலம், தலைவாசல் கோலம், பூக்கோலம், நடுவீட்டு கோலம், சிக்கல் கோலம் என்று
கோலத்தில் பலவகை உண்டு. இதில் தும்புடிக் கோலம்
என்பது மற்ற கோல வகையிலிருந்து சற்று மாறுபட்டது.
 தும்பு என்றால் கயிறு.
தும்புடிக் கோலம் என்பது கயிறு கொண்டு வரையும் கோலம்.
 கோல மாவைக் கரைத்து,
வண்ணத்தைக் கரைத்து அதில் கயிற்றை நனைத்து
 அந்த ஈரமான கயிற்றைக் கொண்டு
சுவரில் வரையும் கோலம் "தும்புடிக் கோலம்" ஆகும். அரண்மனை, மாடமாளிகை, கோபுரங்கள் , மண்டபங்கள், மண்டப வாயில்
ஆகியவற்றை தும்பிடிக்கோல வகையால்
காட்சிப்படுத்தினார்கள்.
கோலத்திற்கும் நாள் கிழமைகளுக்கும் உள்ள தொடர்பு ஆய்வுக்குரியது.
 ஞ்சாயிற்று கிழமை  - சூரியக்கோலம்
திங்கட்கிழமை - அல்லிமலர் கோலம்
செவ்வாய் கிழமை - வில்வ இலைக்கோலம்
புதன் கிழமை - மாவிலை கோலம்
வியாழக்கிழமை - துளசி மாடக்கோலம்
வெள்ளி கிழமை - எட்டு இதழ் கொண்ட தாமரைக் கோலம்
சனிக்கிழமை - பவளமல்லி  கோலம்.
பொதுவாக நல்ல மகிழ்வான நிகழ்வுகளுக்கு மட்டுமே கோலம்
இடுவார்கள். இன்றும் அமாவாசை நாட்களிலும் இறந்துப் போன
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நினைவு தினங்களிலும்
வாசலில் கோலமிடுவதில்லை.
அதுமட்டுமல்ல, தெற்கு திசை தமிழர் வாழ்க்கையில்
துன்பியல் காட்சிகள் அரங்கேறிய திசை.
கடல்கொண்ட கபாடபுரமும் குமரிக்கண்டமும் இலெமுரியாயும்
தமிழர் மண்ணையும் மனிதர்களையும் காவு கொண்ட கதை.
அந்த வரலாற்றின் துயரம் தான் தென் திசையைக் கூற்றுவனின்
திசையாக்கியது. கோலத்திற்கும் தென் திசை ஆகாது.
கோலத்தை தென் திசையில் ஆரம்பிக்கவோ முடிக்கவோ
கூடாது என்பது எழுதாத கோலத்தின் விதி.

சீதை இருந்த பர்ண்சாலையைச் சுற்றி இலட்சுமணன் கோடுகள்
வரைந்தான். அவன் வரைந்த கோடுகளுக்கு மந்திர சக்தி
இருந்ததாம். அக்கோடுகளைத் தாண்டி எவரும் சீதை அருகில்
பர்ண்சாலைக்குள் நுழைய முடியாது. சக்தி வாய்ந்த கோடுகளின்
கோலத்தை "எந்திரம்" என்று குறிப்பிடுகிறார்கள்.
மகாபாரதக் கதையிலும் கிருஷ்ணனைப் பிரிந்திருந்த கோபியர்
தம் ஏக்கம் தீர பொழுதுபோக முற்றத்தில் கோலம் வரைந்து
கொண்டிருந்தார்கள். இப்படியாக புராண இதிகாச காலத்திலும்
பெண்கள் கோலம் வரைந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் "ஆல்பனா" என்ற கோலவகை 2000 ஆண்டு
பழமைவாய்ந்தது. குஜராத் மகாராஷ்டிரா மக்களிடையே
"ஸ்வஸ்திகா" மாதிரியைப் பின்பற்றி வரையும் கோலவகை
காணப்படுகிறது. ராஜஸ்தானில் வண்ணப்பொடிகளால் கோலம்
வரைகிறார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகை காலங்களில்
பூக்களால் அலங்கரிக்கும் கோலம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
பார்சி இனத்திலும் பெண்கள் கோலம் வரைவதில்
ஈடுபாடு காட்டுகிறார்கள். இச்செய்தி தனியான ஆய்வுக்குரியது.

கோலம் கணித விதிகளுக்கு உட்பட்டது.
பிரபஞ்சத்தின் இயக்கத்தை, நெறி பிறழாமையை உறுதிசெய்வது.
கோடு வரைவது உன் விருப்பம்.
ஆனால் எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்க வேண்டும்
என்பதை அறிந்திருக்க வேண்டும். இல்லை என்றால்
வரையும் கோடுகள் கோலமாக இருக்காது.
அலங்கோலமாகிவிடும்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
காதல் ஒழுக்கம் தனி மனித சுதந்திரம் என்று நாம் இன்று பேசும்
உரிமைகளும் கூட நெறி பிறழாத கோலமாக இருக்க வேண்டும்.
ஒரு புள்ளியிலோ கோட்டிலோ பிசகிவிட்டால் கோலம் சிதைந்துவிடும்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
கோலமிடுவது  என்பது உடற்பயிற்சி
கோலமிடுவது என்பது அறிவியல்.
கோலமிடுவது என்பது யோகா.
எல்லாவற்றுக்கும் மேலாக கோலமிடுவது என்பது
தமிழரின் மெய்யியல் அடையாளம்.
கோலமிடும் போது ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு கோடும்
அதனதன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டே கோலம்
என்ற ஒரு வடிவமாக மாறுகிறது. நீங்கள், நான், அவர்கள், அது
அனைவரும் கோலத்தின் புள்ளிகள். நம் செயல்பாடுகள் அப்புள்ளிகளை
இணைக்கும் கோடுகள்.
ஒரு புள்ளியாக தாயின் கருவில் தோன்றும் பயணம்
பல்வேறு புள்ளிகளை இணைத்தும் இணைக்காமலும்
வாழ்க்கை என்ற கோலத்தை பூர்த்தி செய்கிறது.
புள்ளிகளும் கோடுகளும் தொடர்கதை.
கோலம் அத்தொடர்கதைகளின் ஜீவன்.
Image result for புள்ளிக் கோலங்கள்


3 comments: