Wednesday, March 22, 2017

கொஞ்சு புறாவே..

 . .Image result for pigeon at window
பால்கனியில் முட்டையிட்டு குஞ்சுபொறித்து
குடும்பம் நடத்திய புறாக்கள்
பறந்துவிட்டன.
ஊடலும் கூடலுமாய் வெட்டவெளிச்சத்தில்
வெட்கமின்றி திரிந்த புறாக்களை
சிபிமகாராஜாவின் நீதிமன்றம்
தண்டித்துவிட்டது..
சாலை ஓரத்தில் எச்சமிடும் நடைபாதை மனிதர்கள்
விடிவதற்கு முன்பே எழுந்துவிடுகிறார்கள்.
புறாக்களின் எச்சங்கள்
அடுக்குமாடிகளின் அழகைக் கெடுத்துவிடுகிறதாய் அறிவித்தவர்கள்..
இரும்புவலைக் கம்பிகளால் வேலிபோட்டு
பத்திரப்படுத்திக்கொண்டார்கள்..
பறக்கவோ இருக்கவோ
புறாக்களுக்கு அனுமதியில்லை.
இனி, காடுகளை இழந்த ஆதிவாசிகளைப் போல
புறாக்கள் அலைந்து கொண்டிருக்குமோ?.
புழுக்கமான இரவுப்பொழுதில் சன்னல்கதவுகளைத் திறக்கிறேன்.
புறாக்கள் விட்டுச் சென்ற முத்தங்களின் வாசனை
துரத்துகிறது சாபமாய். .


2 comments:

  1. இனி, காடுகளை இழந்த ஆதிவாசிகளைப் போல
    புறாக்கள் அலைந்து கொண்டிருக்குமோ?///

    அற்புதம்...வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. நெஞ்சை என்னமோ செய்கிறது இந்தக் கவிதை!

    ReplyDelete