Sunday, February 19, 2017

மும்பை மாநகர தேர்தல் களம்



மும்பையில் தேர்தல் களம் மாறிவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் வருவதும் போவதும் தெரியாதிருந்த
காலம் இருந்தது,  உள்ளாட்சி தேர்தல் என்பதும் அரசியல்
கட்சிகளின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதற்கிணங்க
அக்காலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில்
அரசியல் தலைவர்களோ அமைச்சர்களோ கலந்து
கொள்வதில்லை. இன்று அதே தேர்தல்  களம் மாறிவிட்டது.
மராட்டிய மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெள்ளித்திரை சின்னத்திரை நடிகைகள் பிரச்சாரத்தில் முகம் காட்டுவது
ஒரு பக்கம் என்றால் தமிழ்நாட்டிலிருந்து குஷ்பு இங்கு
வந்து தான் சார்ந்த காங்கிரசு கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல,
 மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ ரிக்‌ஷாக்கள்)
 அரசியல் கட்சிகளின் கொடிகளுடன் சாலையில்
  சர்சர் என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
 ஆகாயவிமானமும் மும்பையின் புகழ்மிக்க மின்சார ரயில்களும் தவிர அனைத்து வாகனங்களும் பிரச்சாரத்தை துப்பிக் கொண்டிருக்கின்றன.

கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம் செல்லவும் வீடு வீடாக
சென்று ஓட்டு கேட்கவும் கூட்டம் கூட்டவும் ஏஜண்டுகள்..
அவர்களுக்கு நல்ல சம்பாத்தியம். ஒரு நாள் ஊர்வலத்தில்
கலந்து கொண்டால் ரூ 500/ ரொக்கப்பணம் + சாய்+ வடாபாவ் + பிஸ்லரி வாட்டர் இத்தியாதி வழங்கப்படுகிறது கட்சிக் கொடியுடன் ஓடும் வாகனங்களுக்கும் ஒரு நாளைக்கு
ரூ 500 முதல் 1000 வரை..
(இம்மாதிரியான தேர்தல் உத்திகளை இவர்கள்
 பிற மாநிலங்களிலிருந்து குறிப்பாக நம் தமிழகத்திலிருந்துதான்
அறிந்திருக்க வேண்டும்... )
 இப்படியாக தேர்தல் பிரச்சாரம்
சூடு பிடித்து இதோ இன்றுடன் முடிகிறது.
21/02/17 நாளை மறுநாள் தேர்தல்.

மற்ற மாநகராட்சி தேர்தலை விட மும்பை மாநகராட்சி
 தேர்தல் களம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஒவ்வொரு
முறையும் .. மராட்டிய மாநில சட்டசபை தேர்தலை விட
மும்பை மாநகராட்சி தேர்தல் அதி முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்
முக்கியமான காரணம் மும்பை பெருநகரின்
வருவாய் மட்டுமே. 2014 - 15 மும்பை மாநகரின் பட்ஜெட்
(estimate budget)  Rs, 31, 178  கோடி. இது கடந்த ஆண்டு
பட்ஜெட் தொகையை விட 27.72% அதிகம். கடந்த ஆண்டு
பட்ஜெட் தொகை ரூ 27,578/ கோடி. இந்த பெருநகரின் பட்ஜெட்
 இந்தியாவின் சில மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட அதிகமானது என்பதையும் சேர்த்து வாசிக்கவும்.  இந்திய அரசின் வருமானத்தில் 40% மராட்டிய மாநிலத்திலிருந்துதான் வருகிறது என்றால் அதற்கு காரணமாக இருப்பது மும்பை தான். 
எனவே தான் மராட்டிய மாநிலத்தின் சட்டசபையை விட
மும்பை மாநகரின் மாநகராட்சி அரசியல் களத்தில் அதி
முக்கியத்துவம் உடையதாக மாறி இருக்கிறது.
மாநகராட்சியின் நெளிவு சுழிவுகளை இன்றைய அரசியல் வாதிகள்  தெளிவாக அறிந்து கொண்டதால் மும்பையின்
உள்ளாட்சி தேர்தல் களத்தின் முகம் மாறிவிட்டது.
இந்த மாற்றத்தை என்னைப் போல ஒவ்வொரு மும்பைவாசியும்
 பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சிவசேனா களத்தில் ஏன் உறுமுகிறது என்பதையும்
புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது.
மாநகராட்சி சிவசேனா கைகளில் இருப்பதே
 மும்பைவாசிகளுக்கு நல்லது என்று மும்பைவாசிகள்
நினைப்பதற்கு எடக்கு மடக்கான காரணங்களும் உண்டு.
(வெளிப்படையாக எழுத முடியாது தானே)..
 
இந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் பல்வேறு வார்டுகளில்
தமிழர்கள் களத்தில் நிற்கிறார்கள். பிஜேபி, காங்கிரசு, அதிமுக
என்று அரசியல் கட்சி சார்ந்து நிற்பவர்களும்
சுயேட்சையாக நிற்பவர்களும் உண்டு.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து
அயல்மாநிலத்தில் வாழும் தமிழர்கள்  களத்தில் நிற்கும்
தமிழர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று விரும்புகிறேன்.
  15 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
வாழும் இம்மண்ணில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறுவது சாத்தியமில்லை என்றாலும் மாநகராட்சியில்
தமிழர்கள் வந்தால் அவர்களை அணுகுவதும்
 அடிப்படை வசதிகளைக் கேட்டு பெறுவதும் எளிதாகும்
என்ற நம்பிக்கை இருக்கிறது. செய்வார்களா...






1 comment:

  1. மும்பை அரசியலை அறிய தகவல்களை பகிர்ந்தற்கு நன்றி

    ReplyDelete