Monday, April 13, 2015

மகாநதியின் கரையில்..




கங்கையின் புனிதம்
இந்த மகாநதி முன்னால்
மண்டியிட்டது.

இமயத்தின் மகாத்மாக்கள் கூட
இந்த மகாபுருஷனிடம் சரிந்து விழுந்தார்கள்
"இந்து"மாக்கடல் இவர் முன்னால்
பாலைவனம் ஆனது.

பட்டமரங்களுக்கு இந்தப் பச்சைமரம்
நிழல் கொடுத்தது.
சட்டங்கள் கொடுப்பது சலுகைகள் அல்ல
பிறப்பின் உரிமைகள் 
இந்தப் போதிமரம் போதித்தது.

இந்த மனிதச்சங்கிலியை
சாதிச் சங்கிலிகள் தொடும்போதெல்லாம்
தராசு தடம் புரள்கிறது.
நீதிதேவன் குற்றவாளிக்கூண்டில்
பிரம்மனின் சாதிச்சான்றிதழ் சாட்சியாக.

தாகத்தை தணிக்கின்ற தண்ணீரைக் கேட்டால்
இந்துப்பெருங்கடலில் எடுத்துக் கொடுத்தார்கள்.
உப்புக்கரிக்கும் உண்மையை மறுத்தார்கள்.

இங்கே ஆண்டவனில் கூட
சாதிப்பிரிவுகள்..

பாலாஜி - பழநி
மாசானம் - மாடசாமி
காமாட்சி - மீனாட்சி
காளியாத்தா - இசக்கியம்மா..

எல்லா நதிகளும் இந்துப்பெருங்கடலில்
கலக்கும் என்பது
பொதுப்புத்தியின் பூகோளமாக இருக்கலாம்.
இந்த மகாநதி மட்டும் தான்
ஆண்டவனே இல்லாத
ஆலயத்தில் கலந்தது.

மகாநதியின் கனவுகள் வாழ்ந்த
கரையில் நிற்கிறேன்..
மனிதர்களின் சத்தியசோதனைகள் 
வாசிக்கப்படுகின்றன.. 
"வெட்ட நினைபப்வர்கள் வெந்துப்போவார்கள்.
அஹிம்சைக்கோவிலில் ஆடுகள் இனி அடிமைகள் அல்ல"



1 comment:

  1. இங்கே ஆண்டவனில் கூட
    சாதிப்பிரிவுகள்..
    உண்மை
    இந்நிலை என்று மாறுமோ

    ReplyDelete