Tuesday, April 7, 2015

மாற்று அரசியலில் ஜெஜ்ரிவாலின் சரிவுகள்




ஒரு சுனாமியைப் போல அரசியலில் நுழைந்தவர்கள் ஆம் ஆத்மி.
டில்லியில் ஆம் ஆத்மி தேர்தலில் அடைந்த வெற்றி, இரு
பெரும் அகில இந்தியக் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக
இருந்ததும் அரசியலில் வெகுவாக ஊடகங்கள் பேசிய
ஒரு செய்தியாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல,
ஜெஜ்ரிவால பள்ளிக்கூடத்திற்குப் போகும் குழந்தைகளுடன்
சாலையில் நடப்பதும் கூட பரபரப்பான செய்தியானது.
"இங்கப் பாருங்கடா.. மக்களின் முதல்வர் இவர்தான்"
என்று நாம் நம்பிக்கையுடன் எழுதி நம் கனவுகளை
நிறைவேற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகக்
கொண்டாடினோம்.

நகரங்களில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு
ஆம் ஆத்மி அரசியலில் புதியபாதையை உருவாக்கும்
என்ற நம்பிக்கை இருந்தது. ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள்,
அரசின் லஞ்ச ஊழல்களிலும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்திருந்த
மக்களுக்கு ஆம் ஆத்மி உண்மையில் நம்பிக்கையைக்
கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆம் ஆத்மி கட்சியை உருவாக்குவதிலும் அடிப்படை நிர்வாக
அமைப்பைக் கவனிப்பதிலும் பலரின் உழைப்பு இருந்தாலும்
ஜெஜ்ரிவால் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டதைக் கூட
பெரும் தவறாக நினைககவில்லை எவரும்.
தனிநபரின் மீது பொதுமக்களுக்கு ஏற்படும் ஈர்ப்பும் நம்பிக்கையும்
அவ்வளவு எளிதில் மாற்றக்கூடியதல்ல எனறு ஒரு சமாதானம்
சொல்லிக்கொண்டோம்.
ஆனால் அந்த நம்பிக்கை  நட்சதிரத்தின் நடவடிக்கைகள்
இன்று மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கின்றன.
பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு காங்கிரசாக
இருந்தாலும் சரி, பிஜேபியாக இருந்தாலும் சரி,
எவருடனும் கூட்டு வைத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடு
கொண்டவர் தான் ஜெஜ்ரிவாலும் என்ற கடந்தக் கால உண்மை
மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும்  ஆம் ஆத்மியின்
ஜெஜ்ரிவாலுக்கும்  எந்த வகையிலும்
வித்தியாசமில்லை என்பதையே உறுதி செய்திருக்கிறது.


முதல்முறையாக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி
பெற்ற போது ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களைப்
பெறவில்லை. ஒரு தொங்குசட்டசபை நிலை ஏற்பட்டது.
அத்தருணத்தில் தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள
கெஜ்ரிவால் காங்கிரசின் உதவியை நாடினார் என்பதும்
ராகுல்காந்தியுடன் தொடர்பு கொள்ள தன் கட்சியின்
முக்கியமானவர்களை வலியுறுத்தினார் என்பதும்
தெரிகிறது.

அடுத்து, 2015 தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்தப்போது
கொள்கைக்கு இடம் தரப்படவில்லை. கட்சி எதிர்த்த குண்டாக்கள்,
சராயவியாபாரிகள் என்று பணம் புரட்டும் முதலாளிகளுக்கு
சீட் கொடுக்கப்பட்டது.
டில்லி தேர்தல் ஆரம்பித்தவுடன் பிரச்சாரத்தில்
MODI FOR PM ,  KHEJRIWAL FOR CM என்று பிரச்சாரம்
செய்யும்படி கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதும்
வெளிவந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் வலுவான பிரச்சாரமாக இருந்த
ஆம் ஆத்மி தொண்டர்களின் தலைவர் க்ரண் சிங்கின் புகழுக்கு
களங்கம் கற்பிக்கும் வகையில் கூகுளில் தொண்டர் படையின்
பெயரால் அவதூறு செய்திகள் பரவியதும் அதைக் கரண்சிங்க்
செய்யவில்லை என்பது தெரிந்தும் விசாரணைக்கு உடன்பட
கெஜ்ரிவால் மறுத்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறை
விசாரணையில் தீபக் சவுத்ரி என்ற நபர் அதைச் செய்ததாக
தெரியவந்தவுடன் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று
கெஜ்ரிவால் சொல்லி இருக்கிறார்.

மாற்று அரசியலை ஆம் ஆத்மி உருவாக்கும் என்ற
நம்பிக்கையை இவ்வளவு விரைவில் ஜெஜ்ரிவால்
அண்ட் கம்பேனி தங்களின் துடைப்பதாலேயே
துடைத்து எடுத்துவிட்டது பெருத்த ஏமாற்றத்தையே
தருகிறது.




1 comment:

  1. என்ன நடக்கப் போகிறதென்று பொருத்திருந்து பார்ப்போம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete