Thursday, April 9, 2015

தலைமுறைகளின் அஞ்சலி..
என் அப்பாவின் தலைமுறைக் கொண்டாடிய நாகூர் ஹனிபா,
என் தலைமுறைக் கொண்டாடிய எழுத்தாளர் ஜெயகாந்தன்
வாழ்வாதாரம் இழக்கும் என் மண்ணின் மைந்தர்கள்..காஞ்சி என்றால் அண்ணா, அதுபோலவே நாகூர் என்றால் நாகூர் ஹனிபா
இதுதான் எங்களுக்கு தெரிந்த முதல் சரித்திரமும் பூகோளமும்!
அதிகாலையில் சுப்ரபாதம் கேட்பதைப் பெருமையாக சொல்லிக்கொள்ளும்
நண்பர்களுக்கு நடுவில் நான் எப்போதும் புன்னகை மாறாமல் சொல்லுவேன்,
நான் அதிகாலையில் கேட்ட பாடல்.. "அழைக்கின்றார்..அழைக்கின்றார்
அண்ணா அழைக்கின்றார்" என்ற பாடலைத்தான்...
அதன் பின் எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் வீட்டுக்கு எதிரில்
இருக்கும் சர்ச்சிலிருந்து "ஏசுவின் நாமமே திருநாமம், புதுசிலுவையத்தால்.."
"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும்
என்றார் ஏசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்.." ஒலிக்கும்.
அப்பா பம்பாயிலிருந்து வந்துவிட்டால்,
மீண்டும் அழைக்கிறார் அண்ணா அழைக்கிறார் ஒலிக்கும் ..
அப்பாவின் வருகையை இப்பாடல் உறுதிப்படுத்தும்


அப்பாவைப் பார்க்க வரும் கட்சி தோழர்கள் நாகூர் ஹனிபாவின்
இசைத்தட்டுகளை வாங்கிவருவார்கள். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து
கேட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். மாடியில் பாடம் படிக்கும்
எனக்கு அது தொந்தரவாகக் கூட இருக்கும். ஒவ்வோருமுறையும்
"அழைக்கின்றார் அண்ணா அழைக்கின்றார் " பாடல் ஒலிக்கும்
1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில்  வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் ஹனிபா கேட்டுக்கொண்டதை  அந்நிறுவனம் மறுத்துவிட்டதாம். அதுமட்டுமல்ல,
 ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னதாம்
. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்களும் பாட மாட்டேன்’  என்று மறுத்து,விட்டாராம ஹனிபா. எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”
என்ற செய்தியைப் பிற்காலத்தில் நான் தெரிந்துக் கொண்டபோது
நான் பிறப்பதற்கு முன்பே இப்பாடல் வெளிவந்திருக்கிறது என்பதையும்
தெரிந்துக்கொண்டேன்.

ஒருமுறை நாகூர் ஹனீபா பாடும் பாடல்களை எழுதியவர் யார்? இசை அமைத்தவர் யார்? என்று அப்பாவின் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் யாரிடமும் என் கேள்விக்கான பதில் இருந்ததில்லை. ஹனீபா கூட இதை எல்லாம் பதிவு செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. திமுக என்ற அரசியல் கட்சியுடனும் அண்ணாவின் தம்பிகளுடனும் நாகூர் ஹனிபாவுக்கும் அவர் பாடலுக்கும் இருந்த ஈர்ப்பும் கவர்ச்சியும் என்னால் மறக்க முடியாதவை.
யார் யாரைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற விமர்சனம் எனக்கும் உண்டு.

நாகூர் ஹனிபாவின் இசைத்திறமை பற்றி என்னிடம் கேட்கிறார் என் நண்பர்
ஒருவர், அவர் முறையாக இசைப் பயிற்சி பெற்றவரில்லை என்பது எல்லோரும் அறிந்தச் செய்திதான். அவர் காலத்தில் இசையில் புகழுடன் விளங்கிய எவருடைய பாணியையும் அவர் பின்பற்றவில்லை என்பதுதான் அவருக்கான தனிச்சிறப்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
மெல்லினத்தை வல்லினமாக உச்சரிப்பதும் "ர்"ருக்கு அவர்போடும்
"ற்ற்ற்ற் ர்ர்ர்ர்ர்ர்" அழுத்தமும் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும்.
ஆனாலும் என் அப்பாவின் தலைமுறை அவரைக் கொண்டாடினார்கள்.
அந்த நினைவுகளின் பக்கங்களும் அதில் ஏற்பட்ட கிழிசலக்ளும்
என்னால் ஒட்டமுடியாதுப் போன அவலங்களும் எல்லாமும் சேர்ந்துதான் இன்று நாகூர் ஹனிபாவின் மறைவுக்கான அஞ்சலியுடன் கலந்து நிற்கிறது..

அப்பாவுக்கு ஜெயகாந்தனைப் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்ப
ரொம்ப பிடிக்கும்..
என் தலைமுறையைப் பாதித்த  எழுத்தாளுமை
ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் 'அக்னிப்பிரவேசம்' கதை
பெரியார் பாதையில் வந்த என் போன்றவர்களுக்கு எவ்விதமான
அதிர்வலையையும் ஏற்படுத்தவில்லை! ஆனால் அவர்
படைத்த சாலை ஓரத்து மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும்
அவர்களின் மொழியும் இலக்கியமான போது ஜெயகாந்தனின்
ஆளுமையை என் தலைமுறைக் கொண்டாடியது.
அவருடைய "சக்கரங்கள் நிற்பதில்லை" சிறுகதையை
நான் கல்லூரி கால்த்தில் கொண்டாடினேன். !அக்கதையில்
சமகால அரசியல் பேசப்பட்டது என்பது அப்போது எனக்குத்
தெரியவில்லை என்பது வேறு விஷயம்!
அதே ஜெயகாந்தனின் பிற்காலத்திய சரிவுகள்.. ,மிகவும்
நெருடலாக இருந்தன.

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை உணர்ச்சி ததும்ப
எல்லோரும் எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கிறோம்..
இதை அரசியலாக்க அனைத்து கட்சியின் தலைவர்களும்
முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழனின். ஓர் ஆதிவாசியின் வாழ்வாதாரத்தைக் கொள்ளை
அடித்த கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது!
தினமும் விவசாயிகள் தற்கொலை செய்தியை 20../20
கிரிக்கெட் பரபரப்புகளில் மறந்துக்கொண்டிருக்கிறோம்...
அதிர்ச்சிகளும் அதிர்வலைகளும் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன..
அப்போதெல்லாம் எங்கேயோ நம் வாழ்வாதாரம் கொள்ளை அடிக்கப்படுகிறது,
என்பதை மறந்துவிடுகிறோம். ..

4 comments:

 1. Re: [தமிழ் உலகம்] தலைமுறையின் அஞ்சலி‏


  Re: [தமிழ் உலகம்] தலைமுறையின் அஞ்சலி
  Kalam Kader 02:15AM Keep this message at the top of your inbox Groups
  To: tamil_ulagam
  kalamkader2@gmail.com
  குரல் கதிரவனின் ஒளிபெற்றே, மற்றப் பாடகச் சந்திரன்கள் இவரின் குரலொலியின் கதிர்வீச்சைப் பெற்று உலா வந்தாலும், இந்த ஆளுமை மிக்க ஆதவனை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ இயலாத வண்ணம் வாழ்வின் இறுதி நாள் வரைக்கும் அதே “கணீர்”என்ற குரலுக்குரியவராய்த் திகழ்ந்தார் என்பதே வியப்பிலும் வியப்பு; மெய்மையிலும் மெய்மையாகும்!!

  மரபுப் பாக்களின் ஓசை நயமும், அரபுச் சொற்களின் அழகு உச்சரிப்புகளும் இவரின் நாக்கு வழியாக நயம்பட வெளிவந்தன; இந்த நாகூராரின் நா- கூர் என்பதற்கு இதுவே காட்டாகும்.

  இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கஃபூ சாகிப், கிளியனூர் கவிஞர் அப்துஸ்ஸலாம், நாகூர் கவிஞர் சலீம் ஆகியோரின் மரபிலக்கணம் வழுவாத ஓசை நயமிக்க வரிகளின் கவிதைச் சமையலை, இந்தப் பாடகரின் நாவால் பாடல் வரிகள் விருந்து பறிமாட்டப்பட்டதால், எழுதியவர்களின் வரிகள் கூட இந்தப் பாடகரின் வரிகள் தான் என்று மக்கள் நினைக்கும் வண்ணம் இன்றும் ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்னும் பாடலுக்குரியவர் இவர்தான் என்று மக்கள் நினைக்கின்றனர்(இவரின் வரிகள் என்றே நினைக்கின்றனர்) அந்த அளவுக்கு எழுதியவரை விட அதனைப் பாடிய இவர் எழுச்சிப் பெற்றார்; இதுவே இவரின் திறமைக்குக் காட்டாகும்
  என்னைப் போன்ற மரபுக் கவிஞர்களுக்கு இவரின் இறப்பு ஓர் அதிர்ச்சியான பேரிழப்பாகும். ஆம். எங்களின் மரபின் ஓசைக்கு மடங்கும் நா கூரான நாகூர் ஹனீபா இல்லாமல் எங்கள் பாக்களை இத்துணை அழகாக உச்சரித்துப் பாட யார் உண்டு இவர் போல்?

  ReplyDelete
 2. Re: [தமிழ் உலகம்] தலைமுறையின் அஞ்சலி‏


  Re: [தமிழ் உலகம்] தலைமுறையின் அஞ்சலி
  Kalam Kader 09-04-2015 Keep this message at the top of your inbox Groups
  To: tamil_ulagam
  kalamkader2@gmail.com
  இசைமுரசுக்கு என் இரங்கற்பா/ புதுசுரபி ரஃபீக் குரலில்

  https://clyp.it/cpp3o3ri
  இசைமுரசின்
  இன்னொலி
  இன்று ஓய்ந்தது!

  நாகூரின் வானம்பாடி
  நாயனைத் தேடி ஓடியது!

  சிங்கக் குரலோனின்
  சங்கநாதம் எங்கே கேட்போம்?

  மரபுப் பாக்களின் ஓசையும்
  அரபு மொழியின் அழகு நயமும்
  எவர்தான் இனிமேல்
  இவர்போல் ஒலிப்பார்?


  பிலால்(ரலி) அவர்களின்
  மரணத்தைப் பற்றிப் பாடி
  பிழிய வைத்த குரலே
  உன்றன் மரணத்தால்
  உடைந்துவிட்டது இதயமே!

  ஓடி வருகின்றான்
  உதயச் சூரியன் என்று
  பாடிய பாட்டால்
  பட்டி தொட்டியெல்லாம்
  கட்சியை வளர்த்தாய்!

  கண்ணியமிகு
  காயிதேமில்லத்(ரஹ்)
  கண்ணீருடன் கேட்பார்கள்
  உன்னிடமிருந்து
  உருகும் பாடலை


  இறைவனிடம் கையேந்துங்கள்
  இந்து முஸ்லீம் வேறுபாடின்றி
  நிறைவுடனே யாவரையும் பாட வைத்து
  நிம்மதியாய்ச் சென்று விட்டாய்!

  ஆரத்தழுவி ஆவி பிரிய
  ஆண்டுகள் பல முன்பே
  ஆசைப்பட்டது
  இன்று நிறைவேறியதோ
  இறைவனும் , இரசூலும்(ஸல்)
  இரசித்த பாடல்கள் அல்லவா
  இதயக் கூட்டிலிருந்து வந்தவைகள்!


  மண்ணறைக்குட் சென்றாலும்
  மண்ணகம் மறவாது
  மங்காது உன்றன் கீதம்!

  மரணத்தை நினைவூட்டினாய்
  மரணித்த பின்னும்
  மரணத்தை நினைவூட்டுவாய்
  மறக்க முடியாத உன்றன் பாடல்களால்!

  “கவியன்பன்” கலாம்

  ReplyDelete
 3. ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கின்றேன்

  ReplyDelete
 4. நாகூர் ஹனிபா அவர்கள் பற்றிய தங்கள் நினைவலைகளில் நானும் சற்றே மூழ்கி விட்டேன்.

  ஜெயகாந்தன் அவர்களின் சில சிறுகதைகளில் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டீர்கள்.

  20 தமிழர்களின்மேல் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டரில் மறைந்திருக்கும் அரசியலை வெளியாக்கினீர்கள்.

  ReplyDelete