Sunday, February 15, 2015

வராக அவதாரமும் ஃபன்றி திரைப்படமும்
. நேற்று (சனிக்கிழமை)மும்பை விழுத்தெழு இயக்கம் தோழர்கள்
"அரசியல் எனக்குப் பிடிக்கும் " என்ற ச. தமிழ்செல்வன் அவர்களின்
புத்தகத்தை அறிமுகம் செய்து அதன் பின் fandry  - ஃபன்றி
என்ற மராத்தி திரைப்படத்தை திரையிட்டார்கள்.

விளிம்புநிலை மக்களின் கதையை ஒவ்வொரு காட்சியிலும்
கொண்டுவந்ததில் இத்திரைப்படம் முழு வெற்றி பெற்றிருக்கிறது.
மெட்ராஸ் திரைப்படத்தின் இயக்குநர்

 mainstream சினிமாவில் எந்த மாதிரியான கதைகள் சொல்லப்படும்,
 எந்த மாதிரியான கதைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற விதிமுறைகள்
 இருக்கிறது. இங்கு முழுக்க முழுக்க வியாபாரம் என்கிற பொழுது,
 இதுவரைக்குமான தலித் சூழலை மையமாகக்கொண்ட படங்களோ,
 தலித் வாழ்வியலை மையமாகக் கொண்ட படங்களோ அதிக அளவில்
 வெற்றிபெற்றதேயில்லை. இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு தமிழ்சினிமா என்ன மாதிரியாக இருக்கிறது.
என்ன மாதிரியான கதைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
. என்பதையும் பார்க்க வேண்டும். ’
அம்பேத்கர்’ என்ற பெயரை நேரடியாக வசனத்தில் இடம்பெற
வைப்பதை தடை செய்கின்ற ஆட்களையும் நான் சந்தித்திருக்கின்றேன்.
 முதலில் அந்த வசனத்தை கதையிலிருந்து எடுங்கள்
என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வசனத்தை எடுத்துவிடுங்கள்,
 இதெல்லாம் இங்கு ஓடாது, இங்கு வேறுமாதிரியான படங்கள் தான் ஓடுகின்றது”
 என்று சொல்கிறார்கள். அச்சூழலில் தலித் வாழ்வியல்
சார்ந்த படங்கள் எடுக்கவே முடியாது
 என்ற இக்கட்டான தருணத்தில் நாம் படமெடுக்கின்றோம்,
 இங்கு என்ன மாதிரியான காட்சி வைக்க முடியும்
, எதெல்லாம் வைக்க முடியாது என்று நிறைய தடைகள் இருக்கிறது.
இதுவரைக்கும் தலித் வாழ்வியலை சொன்ன சினிமாக்களே கிடையாது
 என்பதுதான் இங்கு நடப்பது. ”வெண்ணிலா கபடி குழு” போன்ற
 சில படங்கள் மேலோட்டமான தலித் வாழ்வியலை சொல்லிச் செல்கிறது
இந்தமாதிரியாக சிலபடங்களில் சில விஷயங்களை தமிழ்சினிமாவில்
முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் நேரடியான தலித்
படங்கள் ஏதும் வந்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை
என்று சொல்லவேண்டும். எனக்குத்தெரியாமல் ஓரிரண்டு படங்கள்
 இருந்தாலும் அவை வணிக ரீதியாக வெற்றிபெற்றிருக்கிறதா?
என்று கேட்டால். சத்தியமாக இல்லை. ’என்று தன் நேர்காணலில்
மெட்ராஸ் திரைப்படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் சொல்லியிருப்பது
நினைவுக்கு வருகிறது.

ஃபன்றி திரைப்படத்திலிருந்து...


காட்சி 1
------------

ஜபயா என்ற தலித் சிறுவனின் குடும்பம், அந்தக் கிராமம்.
கிராமத்தில் ஜபயாவுக்கு கல்வி க்டைசி பெஞ்சில் உட்கார்ந்தாவது
கிடைக்கிறது. பள்ளிக்கூடத்தின் சுவர்களில் பாபாசாகிப் அம்பேத்கரின்
திருவுருவம் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் பள்ளிக்கூடமும்
அங்கு கற்பிக்கப்படும் கல்வியும் சக மாணவர்களும்?

காட்சி 2
--------

இன்னொரு காட்சி இத்திரைப்படத்தின் இந்திய முகத்தை புரட்டிப்போடும்
ஜனகணமன...
பன்றிப்பிடிக்கும் ஜபயாவின் குடும்பம்.. இடைவேளைக்குப் பின்
படம் முழுக்கவும் பன்றியை விரட்டும் ஜபயா, அவன் அம்மா, அப்பா,
இரு சகோதரிகள். அக்காட்சியை ரசித்துப் பார்க்கும் ஊர் வாலிபர்கள்,
குறிப்பாக ஜபயாவுடன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவ மாணவியர்.
ஜபயா என்ற இரண்டும்கெட்டான் வயதுள்ள பள்ளி சிறுவனுக்கு
அவன் விரும்பும் ( ஆமாம் அவன் மட்டுமே ரகசியமாக விரும்பும்
அவனுடன் படிக்கும் மாணவி) அந்தப் பெண் அவன் பன்றியை விரட்டிப்
பிடிப்பதைப் பார்த்துவிடக் கூடாதே என்று சுவரோரம் மறைந்து நிற்கும்
போது.. அந்தப் பதின்ம வயதில் அச்சிறுவனின் மனநிலை
அழமுடியாத ஒரு சோகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

அதையும் மீறி ஜபயாவின் அப்பா ஜபயா பன்றியை விரட்டாமல்
ஒளிந்துக்கொண்டிருப்பதை அறிந்து அவனைக் கோபத்தில் திட்டி
அடித்து இழுக்கவும் அப்பாவுடன் சேர்ந்து மீண்டும் பன்றியை விரட்டும்
ஓட்டத்தில் பன்றி ஜபயாவின் கம்பு கயிற்று சுருக்கில் மாட்டிக்கொள்ளும்
தருணத்தில் பள்ளிக்கூடம் முடிந்து இந்திய தேசிய கீதம் ஒலிக்கிறது
"ஜன கண் மன கதி நாயகே ஜெயஹெ
பாரத பாக்ய விதாதா..."
தேசிய கீதத்திற்கு மதிப்பளித்து ஜபயா அட்டன்ஷன் பொசிஷனில் நிற்கிறான்.
மகன் அசைவற்று நிற்பதைக் கவனிக்கும் அப்பாவுக்கு இப்போது
அவனை எதுவும் சொல்ல முடியவில்லை... இத்தனை மணி நேர
ஓட்டமும் வீணாகிவிடுமோ.. பன்றி அவர்களிடமிருந்து தப்பித்துவிடுமோ..
பன்றிப் பிடிக்கின்ற வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தாலும்
ஜபயாவும் ஜபயாவின் குடும்பமும் இந்தியர்கள் என்பதை
வேறு எப்படித்தான் காட்ட முடியும்? தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பதில்
அவர்கள் தாங்களும் இந்தியர்கள் என்பதைக் காட்டுகிறார்கள்!???
அல்லது ஜன கணமன .. வெற்று ஒலிகளில் அவர்கள் இந்தியர்கள்
என்பது இந்த மண்ணில் ஒலித்துக்கொண்டே இருக்கிறதா..?

இந்த இரு காட்சிகளும் ஃப்னறி திரைப்படத்தின் வெற்றி.
ஃபன்றி திரைப்படத்தின் அந்தக் கிராமம் தான் இந்திய சமூகம்.
அம்பேத்கரின் திருவுருவம் வரையப்பட்ட அப்பள்ளிக்கூடம் தான்
இந்தியாவின் கல்விக்கூடம். கோவில் திருவிழாவில் கூட்டத்துடன்
கூட்டமாக ஜபயாவைச் சேர்த்தும் விலக்கியும் ஆடும் பக்தர்கள் தான்
இந்தியாவின் பெருமை மிக்க இறைவழிபாடு..

< வராக அவதாரம் (பன்றி அவதாரம்)
 விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற
 இரணியனின் தம்பியான் இரண்யாட்சன் என்ற அசுரனுடன்
 வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள்
 போர்செய்து வென்றார் .>

என்று தங்கள் புராணத்தில் எழுதி வைத்திருக்கும் இந்தியாவின் அவதார
கதைகளைக் கொண்டாடும் இந்திய சமூகம் ஜபயா என்ற சிறுவனும்
அவன் குடும்பமும் பன்றியை விரட்டிப்பிடிப்பதைப் பார்த்து அவர்களை
ஏளனமாக பேசும் சமூகம்..
அவர்களின்  வராக அவதாரத்திற்கு இரண்யாட்சனைப் பிடிக்க ஆயிரம்
ஆண்டுகள் ஆகிறதாம். ஜபயாவுக்கும் அவன் குடும்பத்திற்கும்
அரை மணி நேர ஓட்டம் போதுமானதாக இருக்கிறது!
இந்த ஆட்டத்தில் வராக அவதாரம் தோற்றுப்போகிறது.
இரணியனின் வாரிசுகள் ஜெயிக்கிறார்கள்.

கேலியும் கிண்டலும் செய்பவர்களைப் பார்த்து ஜபயா படத்தின் இறுதியில்
வீசுவானே ஒரு கல்...

அந்தக் கல் ,

இந்திய சாதி முகத்தின் மீது அவன் வீசி எறிந்திருக்கும் கல்.

வராக அவதார பக்தர்களை நோக்கி வீசி இருக்கும் கல்.

ஜன கண மன..

மன ஜன கண
1 comment:

  1. இந்திய சாதி முகத்தின் மீது அவன் வீசி எறிந்திருக்கும் கல்.
    அருமை
    வீசவேண்டியதுதான் சகோதரியாரே

    ReplyDelete