Monday, October 20, 2014

காதலின் பரிணாமம்






நான் பறவையைக் காதலித்தேன்
அது தன் சிறகுகளில்
என்னை அணைத்து
வையகமெங்கும்
வானகமெங்கும்
பறந்து திரிந்தது.
விட்டு விடுதலையானக்
காதலின் சுகத்தை
அப்போதுதான் அனுபவித்தேன்.

நான் ஆமையைக் காதலித்தேன்
அவசரப்படாமல் அருகில் வந்தது.
தேரில் பவனிவரும்
மதுரை மீனாட்சியைப் போல
அதன் ஒடுகளே சிம்மாசனமாய் 
கம்பீரமாக அசைந்து நடந்தேன்.
கடல் அலைகளில்
பாய்மரக்கப்பலாய்
பவனி வந்தேன்.


நேற்று என் காதல்
முண்டாசுக்காரனின் தோரணையில்
மயங்கி 
கண்ணம்மாவின் 
எச்சில் பட்டக் காதலுக்காக
வெட்கமின்றி காத்திருந்தது. 
ராதையின் தோட்டத்தில்
காத்திருந்த கோபியரைப் போல.
அப்போதும் காதல்
ஒரு மகாகாவியத்தைப் போல
மாலையுடன்  வலம் வந்தது.
நான் காதலுடன் வாழ்ந்தேன்
காதல் என் கவிதையில் வாழ்ந்தது.


இன்று
களவுக் காதல்
கற்பு காதலுடன் 
சங்கமிக்கும் தருணம்
காதல் -
கவிதையைக்  கொலை செய்தது
தானும் தற்கொலை செய்துகொண்டது.

அன்றைய பத்திரிகையில்
காதலின் முகவரி
சாதி அட்டையிலும்
கடவுளின் கட்டைவிரல்
அடையாளத்திலும்
பத்திரமாக 
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருந்தது.

--------------------------------------------------

3 comments:

  1. உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கலகம் காண்பதே காதல்.

    ReplyDelete

  3. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete