Wednesday, December 18, 2013

தேவயானி கோபர்கடே கைதும் மும்பை முனியம்மா அரசியலும்


நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே
கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பணிப்பெண் கொடுத்தப்
புகாரின் அடிப்படையில். குற்றம்: ஒப்பந்தப்படி சம்பளம் கொடுக்கப்படவில்லை.
கொடுக்கும் சம்பளம் அமெரிக்க சட்டப்படி இல்லை ..

இந்தியாவின் எதிர்வினைகளைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் தேவையில்லை.
"ஓ" போடுவோம் இந்தியாவுக்கு,
என்கிறேன் நான்.

ஆனால் என் அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா வேறு சில
கருத்துகளைச் சொல்லுகிறாரே!


*எதிர்வினைக்கு பல முகங்கள் உண்டாம், அந்தந்த முகங்களுக்கு வெவ்வேறு
அனுபவங்கள் இருக்கிறதாமே!

*ராகுல்ஜிக்கு பாஸ்டன் ஏர்போர்டில் நடந்தது நினைவுக்கு வந்திருக்குமோ?

*நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விசா கொடுக்காமல் இழுத்தடித்தது
நினைவுக்கு வந்திருக்கும்.

*மன்மோஹன் சிங்கை இனி யாரும் குற்றம் சொல்ல முடியாது.
எவ்வளவு துணிச்சல் இருந்தால் அமெரிக்காவுக்கே ஆள்காட்டி விரலைக்
காட்டி அதட்டி இருப்பார்? அவரை இனிமேல் "பயந்தாங்கொள்ளி" என்று
சொல்ல முடியுமா?

*இப்போதும் மறக்காமல் தேவயானியின் சாதி சர்டிபிகேட்டைப் பார்த்து
அந்த பெண் அதிகாரி ஒரு தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் இந்தியா
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று பகுஜன் சமாஜ்
கட்சி தலைவர் மாயாவதி அவர் பார்வையில் ஒரு அதட்டல்.

*இந்தியா தன் வெளியுறவுக்கொள்கைகளை மறுபரிசீலனை செய்து
கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பேசினாராமே
மக்களவையில் நம் தமிழ்நாட்டின் திமுக வின் ஒற்றைப் பிரதிநிதி
கனிமொழி.எம்.பி.. (வெளியுறவுக் கொள்கைக்கும் 2Gக்கும் ஏதாவது
சம்பந்தம் இருக்கிறதா என்று முனியம்மாவிடம் கேட்டால் அவர்
முறைக்கிறார்... ஒரு காலத்தில் கனிமொழியின் தோழியாக
இவரும் இருந்திருப்பாரோ.. யார் கண்டது?!!)

*அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாமே இந்தக் கைது.
இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி
சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக்
காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது
இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி
கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை
செய்துவிட்டு அதன்பின் டிசம் 11 இல் இச்சம்பவம் நடந்திருப்பதால்
இது அமெரிக்காவின் திட்டமிட்ட செயல் என்று
ஒரேயடியாக அமெரிக்காவைக் தாக்குகிறார் மும்பை முனியம்மா.


முனியம்மாவின் கேட்டேன், அமெரிக்காவுக்கே அதட்டல் போடும்
இந்தியா பக்கத்திலிருக்கும் இலங்கை நாட்டிடம் மட்டும் ஏன் இப்படி
பயப்படுகிறது? தமிழக மீனவர்கள் பிரச்சனையையும் இந்த மாதிரி
:ஹாட்டா" எடுத்திட்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று
கேட்டேன்.

எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்
அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா!
நீங்கள்..?

No comments:

Post a Comment