Sunday, August 1, 2010

கலைஞருக்கு நன்றி ... ஏன்?




கலைஞர் காப்பீட்டு திட்டம்.. திமுக அரசின் சாதனை என்று
ஊடகங்களால் ஊதிப் பெரிதாக காட்டப்படுகிறது.
இந்தத் திட்டம் அறிமுகமானவுடன் மும்பை வந்திருந்த தோழர்
சுப.வீ அவர்கள் மிகவும் பெருமையுடன் இத்திட்டம் குறித்து
விழித்தெழு இயக்கம் தோழர்களுடனான கலந்துரையாடலில்
குறிப்பிட்டார். அப்போதே எனக்கு அரசே இப்படி ஒரு திட்டத்தை
அறிமுகம் செய்வது ரொம்பவும் வேடிக்கையாக இருந்தது.

இத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கலைஞர் முரசொலியில்
எழுதியிருக்கும் புள்ளிவிவரங்கள்:

< கடந்த ஆண்டு இதே நாளில்- 23-7-2009 அன்று "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்'' தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. இன்று ஓராண்டு நிறைவுற்று- இந்த ஓராண்டில் இந்த திட்டத்தால் கிடைத்த பயன்கள் என்ன? நோய் நீங்கி நடமாடுவோர் எத்தனை பேர்? ஒருவரல்ல, இருவரல்ல! ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர்- சரியாகச் சொல்ல வேண்டுமேயானால்- ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகள் நலம் பெற்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக கடந்த ஓராண்டு காலத்தில் சேர்ந்து- 1 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ......இப்போது ஓராண்டு நிறைந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது- கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு பரிகாரம் பெற்றோர்- மரணத்தை எட்டிப் பார்த்து மறுவாழ்வு பெற்றோர்- எத்தனை பேர் என்ற கணக்கு நம்மைக் களிப்பில் அல்லவா ஆழ்த்துகிறது!> கலைஞர் கடிதத்தின் வரிகள் இவை.

ஏழை எளிய மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் திட்டம் என்று கலைஞர்
எழுதியிருப்பது சரிதான். மேம்போக்காக பார்க்கும் போது அப்படித்தான்
பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

விற்பனைக்காக கடை வைத்திருப்பவன் தன் கடையில்
பொருள் இல்லை என்றால் எப்போதாவது பக்கத்துக் கடையில்
கிடைக்கும் , போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம்.
ஆனால் தன் கடையில் அடுத்த முறை அந்தப் பொருளை வாங்கி
வைக்க முயற்சிப்பான். இங்கே என்ன நடக்கிறது என்றால்
என் கடையில் வசதிகள் இல்லை, பக்கத்து கடையில் தான்
பொருட்கள் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கிறது
என்று விளம்பரம் செய்கிறான். அத்துடன் அங்கே ஆன
விலை குறைவுக்கு தன் பாக்கெட்டிலிருந்தே பணத்தை எடுத்து
கொடுக்கிறான்! இதை மகத்தான திட்டம் என்று வேறு பத்து
நிமிடத்திற்கு ஒருமுறை கூவி கூவி விற்பனைச் செய்கிறான்!
ஆமாம்.. ஆமாம் ரொம்பவும் மகத்தான திட்டம் தான் என்று
அந்த ஊரை ஏமாற்றுகிறான்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் இந்த மாதிரிதான் இருக்கிறது.

ஒருவர் வியாதிப்பட்ட நேரத்தில் செய்யப்படும் உதவி என்பது
அந்த உதவியைப் பெற்ற நபருக்கும் அவர் சார்ந்தக் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய நன்றிக்கடனை உணர்வுப்பூர்வமாக அவர்கள் எண்ணத்தில்
மிகவும் சுலபமாக ஏற்றிவிடும்..


மறுபிறவி எடுத்தது போல மருத்துவ உதவி பெற்ற அந்த நபருக்கு
நன்றி மறப்பது என்பது குற்றவுணர்வாய் மாறிவிடும்.
இப்போது யோசித்துப் பாருங்கள்...
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எம்மாதிரியான உளவியல் தாக்கத்தை
காப்பீட்டு உதவியைப் பெற்ற நபருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்
உருவாக்கும் என்பதை. அரசியல் ஆட்சி அதிகார வட்டத்தில்
இந்த நன்றிக்கடன் என்பது தலைமுறை தலைமுறையாய் ஓட்டுவங்கியைத்
தக்க வைத்துக்கொள்ளும் அற்புதமான மந்திரமல்லாமல் வேறு என்ன?

மக்கள் சேம நல அரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவையான
உணவு, கல்வி, சுகாதாரம் , பாதுகாப்புக்கு உத்திரவாதம் தர வேண்டியது
கடமை. இங்கே நம் அரசுகள் மக்கள் சேமநல அரசுகளாக இல்லாமல்
உள்நாட்டு/வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் ஏஜன்சிகளாகவே மாறிவிட்டன..

இம்மாதிரியான திட்டங்கள் மற்ற மாநிலங்களில் இல்லையா?
இருக்கிறது. ஆனால் எந்த தனிப்பட்ட முதல்வர்/தலைவரின் பெயராலும்
இல்லை!

விளம்பரங்களிலும் வருவது.. "கலைஞருக்கு நன்றி!" என்ற வாசகம்தான்.
காப்பீட்டு திட்டத்தின் பிரிமீயம் தொகையிலிருந்து விளம்பரச் செலவு வரை
எல்லாம் மக்களின் வரிப்பணத்தில்!

தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் என்று சொன்னால் என்னவாம்?
அது என்ன கலைஞர் காப்பீட்டு திட்டம்?
இத்திட்டத்தின் மறுபக்கம்:

* அரசே வெட்கமின்றி விளம்பரம் போட்டு அறிவிக்கிறது...
எங்கள் அரசு மருத்துவமனைகள் சரியில்லை என்று.

*அரசு காப்பீட்டு நிறுவனங்களை விட லாபமானதும், தரமான
வாடிக்கையாளர் சேவையும் செய்வது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்
என்பதை ஓர் அரசே ஏற்றுக்கொள்கிறது.

* அரசே ஒத்துக்கொள்கிறது, வியாதி வருமுன் காப்பது உங்கள் வேலை,
வந்தப் பின் காப்பது எங்கள் வியாபாரம் என்று.

* ஏழைகளுக்கு உதவி செய்வதாக சொல்லி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்த
புண்ணிய புருஷனாக, அவதார மனிதனாக தன்னை அடையாளம் காட்டி..
அதன் மூலம் தனியார் மருத்துவமனைகள், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு
ஏஜன்ஸியாக அரசே செயல்படுகிறது.

*இவை அனைத்தையும் அரசு மக்கள் பணத்தில் செய்துவிட்டு தனிநபர் துதிப்பாடுகிறது.


அரசின் கடமைகளை அரசு மக்களுக்குச் செய்யும் தர்மங்களாகவும்
அரசியல் தலைவர்களை அரசுத் திட்டங்களின் தர்மகர்த்தாகளாகவும்

காணும் வியாதி முடியரசர் காலத்திலிருந்து தமிழர்களிடம் இருக்கும்
தீராத நோய்.

பிரபலங்கள் /ஊடகங்கள் சொல்வதை அப்படியே ஆட்டுமந்தையாய்
நம்பி பின் தொடர்வதும்-
பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்பட வேண்டிய அரசு திட்டங்களைக் கூட
உணர்வுகளின் விளிம்பில் நின்று எழுதுவதும் பேசுவதும் -
தமிழர்களின் சாபக்கேடு.

9 comments:

  1. வியாதி குணம் அடைண்டது யாரால்? கண்ணீர் துடைக்கப் பட்டது யாரால்?

    ReplyDelete
  2. காமராஜர் கல்விக்கண் திறந்தார் என்று கூறுவதைக்கேட்டிருப்பீர்கள். அவர் அரசுப்பள்ளியில்தான் அதைச்செய்தார். அவர் கொண்டுவந்த திட்டத்திற்குத் தன் பெயரை வைக்கவில்லை.
    அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் போட ஆரம்பித்தது கருணாநிதியின் ஆட்சியல்தான்(70 களில்).அரசு மருத்துவமனையை நடத்த துப்பில்லை என்னுடைய அரசிற்கு என்று வருந்தாமல் எக்காளிப்பு ஏன்? தன் பை நிறைவதால்.
    மா.மணி

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Tulsi Gopal (gopal.tulsi@gmail.com)
    Sent: 02 August 2010 17:16PM
    To: puthiyamaadhavi@hotmail.com (puthiyamaadhavi@hotmail.com)



    அட! நீங்களா?

    நல்வரவு.நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    இந்த வாரம் அருமையானதாக அமையும் என்ற நம்பிக்கையுடன்.
    துளசி.


    என்றும் அன்புடன்,
    துளசி


    பின்குறிப்பு: உங்க பின்னூட்டப்பெட்டி திறக்கலை

    ReplyDelete
  5. //இம்மாதிரியான திட்டங்கள் மற்ற மாநிலங்களில் இல்லையா?
    இருக்கிறது. ஆனால் எந்த தனிப்பட்ட முதல்வர்/தலைவரின் பெயராலும்
    இல்லை! //

    உண்மையான சொற்கள். தமிழகத்தில் மிக மலிவான அரசியலை திராவிடக் கட்சிகள் செய்து வருகின்றன. தமிழ் இயக்கங்களில் இருந்தவரை ஓரளவு அறிவுடன் இருந்த சுப.வீயும் தி.மு.கவின் திருவடிகளில் இணைந்த பின்னர் அறிவும் உணர்வும் மழுங்கிவிட்டார்.

    ஒருவேளை ஆட்சி மாறினால் இத்திட்டம் அடியோடு போகும். அல்லது வேறு பெயர் பெறும்.

    திராவிடம் என்பதை தீராவிடம் என்று கிண்டலடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது கிண்டல் அல்ல உண்மை என்று ஒவ்வொன்றிலும் உணர்த்துகிறார்கள் கருப்புச் சட்டை திராவிடரும் மஞ்சள் துண்டு திராவிடரும் இரட்டை இலை திராவிடரும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  6. மிக மிகச் சரியாகக் கூறியிருக்கிறீர்கள்.
    அரசே தன்னை கேவலப்படுத்திக்கொள்ளும் திட்டம் இது..!
    இதற்கு இன்னொரு கோரமுகமும் இருக்கு! விரைவில் எழுதிவிடுகிறேன்.!

    ReplyDelete
  7. சரியான பார்வைங்க.. என்வீட்டுல வேலைசெய்பவர்கள் ஊருக்கு போய்விட்டு வந்ததிலிருந்து இதான் சொல்றாங்க.. மனசளவில் அவர்களை நன்றி உடையவர்களாக ஆக்குவது என்பது :(...
    அந்த அளவு பணத்தையும் உழைப்பையும் அரசாங்க மருத்துவமனைக்கு செலவு செய்தால் ஆகா.. ம்..

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வது மிக சரி. எங்கே போய் முடியும் என தெரியவில்லை.

    ReplyDelete
  9. உங்கள் திராவிட உறவுகள் கோபித்துகொள்ள போகிறார்கள்

    ReplyDelete