Tuesday, July 22, 2008

எங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி?மங்கையுடன் கலந்துரையாடல்:


சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி
இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்களுடன் சனிக்கிழமை (19/07/2008 காலை 10.30 முதல்
12.30 வரை ) என் இல்லத்தில் நடந்த கலந்துரையாடலில் மனம் திறந்து அவர் பேசியதும்
பெண்ணியம், தலித்தியம், நாடகம், தன் வாழ்க்கை, குடும்பம், பொதுவெளி குறித்த கருத்துகளைப்
பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மன்றத் தலைவர் பேராசிரியர் சமீராமீரான், மற்றும்
அமலா ஸ்டான்லி, எழுத்தாளர் வதிலை பிரதாபன், கவிஞர் தமிழ்நேசன், சங்கரநயினார், மும்பையில்
தமிழ் நாடகங்களை இயக்கி அரங்கேற்றும் இந்தியன் தியேட்டர் பரமேஸ்வரன்,
மற்றும் பானு இவர்களுடன் மும்பை இலக்கிய வட்டத்தின் மிகச் சிறந்த விமர்சகராக திகழும்
கே.ஆர்.மணியும் கலந்து கொண்டு நிகழ்வுக்கு சிறப்பு செய்தார்கள்.

மங்கையையின் நாடகங்களைப் பற்றிய சிறியதோர் அறிமுகத்தை நான் வழங்க அதன் பின்
மங்கை தனக்கே உரிய பாணியில் தன் கருத்துகளைப் பேச ஆரம்பித்தார்.

பெண்ணியம், தலித்தியம் தமிழ்ச்சூழல் என்று ஆரம்பித்தவர் மிகவும் கவனமாக
தமிழ்ச்சூழல் என்பதை தமிழகச்சூழல் என்று மாற்றிக்கொண்டார்.

பெண்ணியம் என்பது பெண்களைப் பற்றி பெண்கள் பேசுவது மட்டுமல்ல. அது ஒரு கோட்பாடு.
அது ஆண், பெண், அரவாணிகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்தது.
உடலரசியல் என்பது உடலுறவு அரசியல் அல்ல.
70களுக்குப் பிறகு பெண்ணியம் விரிவடைந்துள்ளது. பெண்ணியமும் தலித்தியமும் கூர்மையடைந்துள்ளது.
இக்காலக் கட்டத்தில் தான் "பண்பாடு" என்ற சொல் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கலை இலக்கிய துறையினருக்கு என்று சொல்ல வேண்டும்.

பண்பாடு என்று பேச வரும்போது எது பண்பாடு" ? என்ற கேள்வி நம் முன் எழும்.

பண்பாடு என்பது பெண் பூ வச்சிக்கிறதா?
புடவைக் கட்டிக்கிறதா?
பொட்டு வச்சிக்கிறதா?
இதெல்லாம் தான் பண்பாடா?

ஒரு பெண் மது அருந்தும் காட்சியும் அவள் இருபக்கமும் இரண்டு ஆண்கள்
என்று காட்டப்படும் காட்சியின் பண்பாடு கெட்டுவிட்டதாக கூப்பாடு போடுகிறோம்.
அண்ணா யுனிவர்சிட்டியில் பெண் மாணவிகள் ஜீன்ஸ் & டி ஷ்ர்ட் போட்டு வருவதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதற்குச் சொல்லப்படும் காரணம் அந்த உடையில் மாணவிகள் வந்தால்
பாடம் சொல்லிக்கொடுக்கும் பேராசிரியரின் கவனம் சிதைகிறதாம்!

என்னிடம் கேட்டால் நான் திணைப்பண்பாடு தான் பண்பாடு என்று சொல்ல வருவேன்.
திணைப் பண்பாடு என்றால் நிலம் சார்ந்து, நிலம் சார்ந்த மரம் செடி கொடி சார்ந்த வாழ்வும்
வாழ்வில் அவை அனைத்திற்குமான இடமும் என்று தான் காட்டுவேன். இந்தத் திணைப் பண்பாடுதான்
பண்பாட்டின் அடிப்படை.

சமூகத்தில் பெண்களின் இடம் என்று பார்க்க வரும்போது 1920களில் 12 பெண்கள் இதழ்கள், பெண்களே
நடத்தியது இன்றைய மங்கையர் மலர் பாணியில் அல்லாமல் பெண்களின் பிரச்சனைகளைத் தீவிரமாக
பேசிய இதழ்கள், 25 பெண் நாவலாசிரியைகள் இருந்திருக்கிறார்கள் என்று பதிவு செய்கிறார் மிதிலா.
வை.மு.கோ சற்றொப்ப 48 நாவல்கள் எழுதியிருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு பெண்கள் முன்னேறிவிட்டதாக நினைக்கும் இன்றைய சூழலிலும் எத்தனைப் பெண்கள்
சமூக வெளியில் எழுந்து நிற்கிறார்கள்.
இன்றைக்கெல்லாம் எங்காவது கூட்டம் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் 500 பேர்கள் கலந்து
கொண்ட கூட்டமாக இருந்தால் அதில் 4 பெண்கள் தான் இருக்கிறார்கள். 500க்கு 4 என்ற கணக்கில்தான்
பெண்களின் பங்களிப்பு இருக்கிறதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.

புதியமாதவி : இப்போது பெண்களின் பங்களிப்பைப் பற்றி ?

அதைச் சொல்ல வருகிறேன். ராஜம் கிருஷ்ணன் நாவல்கள் எழுதுவதற்கு முன் பீஃல்;ட் வொர்க் பண்ணிட்டுதான்
எழுத ஆரம்பிப்பார்.
இன்றைக்குச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்ச்செல்வியைக் குறிப்பிடலாம்.
தமிழ்ச்செல்வியின் கற்றாழை நாவல் மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்செல்வியின் நாவல்களில்
பெண்களை அவள் அழுது கண்ணீர்ச்சிந்துபவளாக அடி வாங்கிக்கொள்கிறவளாக சித்தரிப்பதில்லை.
அதைப் போலதான் பாமா, சிவகாமியின் படைப்புகளும் நமக்கு நாம் அறியாத வேறொரு உலகத்தைக்
காட்டுகின்றன.
பாமா வின் நாவல் ஆரம்பிக்கும்போதே சேரியிலிருந்து தான் ஆரம்பிக்கும். நான் அதைக் காமிரா வைத்துக்கொண்டு காட்சிப் படுத்தினால் எடுத்தவுடன் நான் காட்ட ஆரம்பிக்கும் காட்சி சேரியாக
இருந்தாக வேண்டும். சேரியில் இருந்துதான் அவர் ஊரைப் பார்க்கிறார். அது மட்டுமல்ல,
"பசி, பட்டினி, சாதிக்கொடுமை இத்தனைக்கும் நடுவில் சேரியில் எங்கள் வாழ்க்கையில்
ஒரு கொண்டாட்டம் இருந்தது" என்பார் பாமா.
கவிதையை எடுத்துக் கொண்டால் மாலதி மைத்ரியின் கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.
அது உலகமயமாதலாகட்டும், அணு ஆயுத எதிர்ப்பாகட்டும், காதல் உணர்வாக இருக்கட்டும்
எல்லாவற்றிலும் அவர் கவிதைகள் குறிப்பிட்டு பேசப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

இவர்கள அனைவருக்கும் முன் ஆரம்பித்தது தான் என் கலைப் பயணம். நான் இடதுசாரி அமைப்பைச்
சார்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நடிகையாகத்தான் என் நாடக கலைப் பயணம்
துவங்கியது.
1978களில் பாதல் சர்க்காரின் நாடகப்பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெற்றது. எங்களுக்கெல்லாம்
குரு, வழிகாட்டி என்று அவரைத்தான் சொல்லவேண்டும். அப்போ அந்தப் பயிற்சிப்பட்டறையில்
கலந்து கொண்டேன்.
அரசியல் சார்ந்த ஈடுபாட்டில் நான் நாடகத்திற்கு வந்தவள். என் நாடகங்களைப் பற்றிய
விமர்சனங்கள் என்னை அதிகம் அதனால் தான் பாதிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு நாவலை நாடகமாக்கும் போது நாவலில் இருந்த இதெல்லாம் முக்கியம் அதைக் காட்டவில்லை
என்ற விமர்சனம் எழும். அதைப் போல்வே நாடகத்தைப் பார்த்து சிலர் நாவலில் சித்தரிப்பை விட
நாடகத்தில் கதைப் பாத்திரம் உயிர்த்துடிப்புடன் இருப்பதாகச் சொல்வார்.
மொத்தத்தில் என் நாடகங்கள் நாடகமா இல்லையா என்று வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம்
என்னைப் பாதிப்பதில்லை.
சுருதி சேர்ந்தால் தான் சங்கீதம் வரும் என்பார்களே அது போல தான் நாடகக்கலைஞனுக்கு
உடல், குரல், மனம் இந்த மூன்றும் சேர்ந்த பயிற்சி தேவை என்பார் பாதல் சர்க்கார்.
இந்தப் பயிற்சி என்பது மற்ற உடற்பயிற்சிகளிலிருந்து வேறுபட்டது.


சமீராமீரான்: உங்கள் நாடக ஒத்திகைகள் குறித்து ...?

என்னுடைய நாடகங்கள் பெரும்பாலும் வொர்க்ஷாப்பில் தான் எழுதப்படுகிறது என்று சொல்லலாம்.
அதை நெறிப்படுத்துவது மட்டும் தான் என் பணி. தமிழில் நெறியாள்கை என்ற சொல்லை
அறிமுகப்படுத்தியவர்கள் நாங்கள் தான். நீங்கள் கூட மணிமேகலை நாடகத்தை
மும்பையில் எழுத்தாளர் மன்றத்தில் அரங்கேற்றிய போது உங்கள் விழா அழைப்பிதழில்
நெறியாள்கை : அ. மங்கை என்று போட்டு இயக்குநர் என்று அடைப்புக்குறிக்குள்
அச்சடித்து இருந்தீர்கள்!
நான் இயக்குநர் என்று சொல்லிக்கொள்வதில்லை. இயக்குநர் என்ற சொல் பாவைக்கூத்திலிருந்து
வந்தது. கூத்தில் பாவைகளை இயக்குபவர் இயக்குநர். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் தான்
பாவைகளின் அசைவுகளும் இயக்கமும். எங்களுடைய நாடகங்கள் ஒரு கூட்டு முயற்சி.
டீம் வொர்க்தான்.
இங்கே நான் எல்லாம் தெரிந்த இயக்குநர் அல்ல. நானும் அவர்களில் ஒருத்தி.
உங்கள் கேள்விக்கு வருகிறேன். எங்கள் நாடகங்களில் நடிப்பவர்களுடன் ஓரிடத்தில்
ஒரு விடுமுறை நாளில் தங்கி காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 11 மணிவரை
ஒத்திகை நடக்கும். அப்படி தொடர்ந்து 15 நாட்கள் நடத்தினால் எங்களால் ஒரு நாடகத்தை
அரங்கேற்ற முடியும்னும் சொல்லலாம். ஊரை விட்டு வெளியில் கல்லூரி அரங்கம், திருமண
அரங்குகள் இந்த மாதிரி எங்காவது இடம் பார்த்து எங்கள் வொர்க்ஷாப்பை ஆரம்பிப்போம்.

கே.ஆர்.மணி : உங்க டீம் எப்படி?

மங்கை: அதில் நான் ரொம்பவும் கொடுத்து வைத்தவள் என்று தான் சொல்ல வேண்டும். ராமானுஜம்-
இந்திராபார்த்தசாரதி நாடகத்தில் ஏற்பட்ட மாதிரி எல்லாம் இதுவரை எனக்குப் பிரச்சனைகள்
ஏற்பட்டதில்லை.
குறிப்பாக ஓவியர் மருதுவுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். என் நாடகங்களுக்கு அதிகமாக
காட்சி அமைப்புகள் செய்தவர் அவர்தான்.
நானே கூட அடிக்கடி சொல்வதுண்டு.. நான் ஒரு காட்சியைக் காட்டுவதற்கு முன்பே திரையில்
அந்தக் காட்சியைப் பார்த்துவிடுகிறார் மருது என்று. அப்படித்தான் மணிமேகலை நாடகத்தில்
கணிகை, துறவி இருவருக்கும் நடுவில் ஆலமரம்- போதிமரத்தைக் காட்சி படுத்திவிட்டார்.
அதைப் போலவே கவிஞர் இன்குலாப் அவர்களையும் சொல்ல வேண்டும்.
'தமிழாசிரியராக இருந்த என்னை நாடக ஆசிரியராக மாற்றியவர் மங்கை" என்று சொல்லுவார்.
like minded people தான் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ...

பானு: உங்க ஆடியன்ஸ் பற்றி:
சபாக்களில் நடத்தப்படும் நாடகங்களிலிருந்து எங்கள் நாடகங்கள் வித்தியாசமானவைனு
சொன்னேனில்லையா. எனக்குப் பெண் பார்வையாளர்கள் வேண்டும் என்பதாலேயே என் நாடகங்களை மதியம்
-அப்போதுதான் பெண்களுக்கு நேரம் கிடைக்கும் என்பதால் - போட்டிருக்கிறேன்.
எங்கள் நாடகத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது கூட்டத்தின் வந்திருக்கும் பார்வையாளர்களின்
எண்ணிக்கையைப் பொறுத்தல்ல. ஒரு பத்து புத்தகம் தரும் தாக்கத்தை ஒன்னேகால் மணிநேரத்தில்
எங்கள் நாடகங்கள் காட்டும். என் பல நாடகங்களில் பார்வையாளர்களும் நாடகத்தின் ஓர் பாத்திரங்களாக
இருப்பார்கள். குறிப்பாக என் காலக்கனவு நாடகத்தைச் சொல்ல வேண்டும்.
எஙகே நாடகம் போடறோமோ அந்த இடத்திலிருக்கும் ஒரு பார்வையாளர் அன்றைக்கு
பெரியாரின் பெண்ணியக் கருத்தையோ சமூகச் சிந்தனைக் கருத்தையோ வாசிப்பார்
நாடகத்தின் ஒரு காட்சியில் என்றெல்லாம் வரும்.

வதிலை பிரதாபன் : என்ன மாதிரியான பிரச்சனைகளை நாடக அரங்கேற்றத்தில் சந்தித்திருக்கிறீர்கள்?

மங்கை: ஒவ்வொரு நாடகத்தின் போது வெவ்வேறு பிரச்சனைகள். நானும் சில சமயங்களில்
பிரசவ வாக்குறுதி போல இனிமே நாடகம் பண்ணப்போறதில்லைனு எல்லாம் சொல்றதுண்டு.
ஆனா இன்னிக்கு வரை கிட்டத்தட்ட 25 வருடங்கள் நாடகம் பண்ணிட்டுதான் இருக்கேன்.
பிரச்சனைனு நீங்க கேட்டதினால் சொல்ல வருகிறேன். எங்கள் அவ்வை நாடகம்
அரங்கேறிய பிறகு பாரதிய ஜனதா கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மரியாதைக்குரிய அவ்வையை மங்கை அசிங்கப்படுத்திவிட்டார் என்றார்கள்.
அவ்வைக்கும் அதியமானுக்கும் இடையில் இருந்த நட்பு காதலா? மங்கை அவ்வையைக் கொச்சைப்படுத்திவிட்டார் என்றார்கள்
கள் குடித்தாள் அவ்வை..
காதலித்தாள் அவ்வை ..
என்று பத்திரிகைகள் கவர் ஸ்டோரி எழுதின. உண்மை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதில் பிரச்சனை என்ன வென்றால் நான் தமிழிலக்கியம் படித்தவள் அல்ல. நானொரு
ஆங்கில பேராசிரியர். தப்பித்துக் கொள்ளலாம்! ஆனால் ஸ்கிரிப்ட் எழுதிய கவிஞர் இன்குலாப்
என்னைப் போல தப்பித்துக் கொள்ள முடியாதே! அவர் தமிழ் பேராசிரியர்.
அவ்வையின் பாடல்களிலிருந்து தான் அவ்வை நாடகப் பாத்திரம் உருவாக்கப்பட்டது. புதுசா
நாங்க எதையும் அவ்வையின் மீது திணிக்கவில்லை. அதியமான் இறந்த போது அவ்வை வைக்கிற
ஒப்பாரிப் பாட்டில் இதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது.
(சிறிய கட் பெறின் எமக்கீயும் மன்னே.. பாடலை மங்கைப் பாடிக்காட்டினார்)
அவ்வை பாணர் குல வாழ்க்கை வாழ்ந்தவள். அவளை ஒரு போர் எதிர்ப்பாளராகவே
நாங்கள் நாடகத்தில் காட்டினோம். அதுவும் பால்மணம் மாறாத மகனைப் போர்க்களத்துக்கு
அனுப்பி அவன் மார்பில் காயம் பட்டு இறந்ததை உறுதி செய்வதாக எழுதப்பட்டிருக்கும்
நம் புறநானூற்று தாயின் பிம்பத்தை கொஞ்சம் எங்கள் நாடகம் அசைத்து காட்டியது.
போர்க்களத்தில் இறந்தவர்கள்.. அல்ல விதைத்தவர்களுக்காக நடப்படும் நடுகல்வழிபாடு
நம் இலக்கியத்தில் பெருமையுடன் பேசப்படுகிறது. ஆனால் எங்கள் நாடகத்தில்
போர்வீரர்களின் நடுகல்களை நாங்கள் கல்லறைகளாகவே காட்டினோம். அது பலருக்கு
அதிர்ச்சியாகவே இருந்தது. அதிலும் அந்தக் கல்லறைகளில் ஆப்கானிஸ்தான், ஈராக்..
என்று காட்டி நடுவில் ஈழத்தைக் காட்டியிருந்தோம்.. பார்வையாளராக வந்திருந்தப் பலரை
அந்தக் காட்சி உலுக்கிவிட்டது. உங்கள் நாடகத்தில் இப்படி கிடையாதே என்றார்கள்..
இந்தக் காட்சிப் படுத்தல்தான் மங்கையின் கையெழுத்து என்று சொன்னேன்.
இம்மாதிரியான காட்சிப்படுத்தல் நாடகத்தின் வசனம் , பாத்திரங்களின் நடிப்பு இவைகளுக்கு
அப்பால் நிறைய கருத்துகளை பார்வையாளனுக்கு கொடுத்துவிடும்.

புதியமாதவி: மங்கை நீங்கள் நடுகல்களை கல்லறைகளாக காட்டி இருப்பதைச் சொன்னவுடன்
அவ்வையின் கவிதை நினைவுக்கு வருகிறது.


(இந்தக் கால அவ்வைனு சொல்லுங்க)

ஈழத்துக் கவிஞர் அவ்வை, உங்கள் தொகுப்பு பெயல் மணக்கும் பொழுதில் வாசித்தேன்.
தாயின் குரல் என்ற கவிதை..

"இன்னுமா 'தாய் நிலம்'
புதல்வர்களைக் கேட்கிறது?'
என்று கேட்டிருப்பார்.

கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப் பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய் நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்,
இன்னமும் காயவில்லை...

இன்றைக்கு போர்க்களத்தில் நம் கண்முன்னால் நிற்கும் புறநானூற்று தாயின் குரல் இது.

மங்கை: நீங்க அவ்வையின் கவிதையைச் சொன்னவுடன் இதுவும் நினைவுக்கு வருகிறது.
முதலில் அவ்வையின் நாடகத்தை இன்குலாப் மகாகவி பாரதியின் கவிதை வரிகளுடன்
முடித்திருந்தார். அதன் பின் நான் அவ்வையை சந்தித்தேன் எதேச்சையாக.
அவருடைய கவிதை வரிகளுடன் அவ்வை நாடகத்தின் இறுதிக் காட்சியை அமைத்தோம்.

தமிழ்நேசன்: அவ்வை கள் குடித்தாள் என்கிறீர்கள். அதற்கு முன் பண்பாடு பற்றி பேசும்போது
மது அருந்தும் ஒரு பெண் அவளின் இருபக்கமும் ஆண்கள் என்ற காட்சியை விமர்சனம் செய்தீர்கள்.
மது அருந்துதல் உடல் நலனுக்கு கெடுதல் என்பதால் நான் அதை ஆதரிக்கவில்லை.
ஆனால் அவ்வை கள் குடித்தக் காட்சியை.
.

மங்கை: இந்த மாதிரி வாழ்க்கை அறம் - ஒழுக்கம் பற்றிய கருத்துகளைப் பேசினால்
அதைப் பற்றி நான் எதுவும் சொல்லவரவில்லை. ஆனால் நம்ம ஊரிலே கோவிலுக்கு கொடை விட்டு
கொடுக்கும்போது ஆடுவெட்டி பலி கொடுத்திட்டு வச்சிருக்கிற சாராயத்தை எடுத்து சாமியாடி
குடிக்கிறாரு. ஆனா அதையே ஒரு பெண் குடிச்சா ஏன் தப்புனு சொல்றீங்க என்பது தான்
எங்க கேள்வி.
ஒழுக்கம் என்று சொல்லி நீ ஒவ்வொரு கட்டுப்பாடாக சொல்லிக்கொண்டிருப்பாய்.
குடிக்காதேனு ஆரம்பத்தில் சொல்லுவாய். அப்புறம் புருஷன் குடிச்சிட்டு வந்து அடிச்சாலும்
வெளியில் சொல்லாதே என்பாய். நீ பொண்ணு புடவை தான் கட்டிக்கனும் அதுதான் பண்பாடுனு
சொல்வாய்...
எல்லாத்தையும் பண்பாடு என்ற ஒற்றைச் சொல்லில் எங்களைக் கட்டுப்படுத்துவதை
நாங்கள் விரும்பவில்லை.

சமீராமீரான்: அந்தக் காலத்தில் நம்ம பாட்டிகள் எல்லாம் பீடி குடிச்சிருக்காங்க தெரியுமா?

மங்கை: பெண்கள் வாழ்க்கையின் இப்போ மாற்றம் ஏற்படலையானு கேட்டா நிச்சயமா
ஏற்பட்டிருக்குனு சொல்லுவேன். மாசம் 20,000 சம்பளம் வாங்கறா மகள் என்றவுடன்
அவளை வீட்டு விட்டு வெளியில் தொலை ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பிட்டு அவள்
காதலிச்சிட்டா மட்டும் ஆவேசப்படறோம்!

ஒரு காலத்தில் சென்னையில் பெண்கள் தனியாக தங்குவதற்கு யாரும் வீடுகளை வாடகைக்குத்
தர மாட்டார்கள். ஆனா இன்னிக்கு நிலைமை மாறிப்போச்சே. அதுவும் ஐ.டி. செக்டார் வந்தப் பின்
நான்கைந்து பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குவது ரொம்பவும்
சாதாரண நிகழ்வாக இருக்கிறது.
நுகத்தடி கயிற்றின் நீளத்தை நீட்டி இருக்கிறார்கள். கயிற்றின் நுனியைப் பிடித்திருப்பது
நீங்கள் தான் ! அதில் மாற்றமில்லை

புதியமாதவி: உங்கள் காலக்கனவு நாடகத்தைப் பற்றி சொல்லுங்களேன்..

மங்கை: காலக்கனவு நாடகத்தை ஒரு ஆவண நாடகம் என்று இப்போதைக்குச் சொல்லலாம்.
ஏன்னா எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
ஆங்கில எழுத்து "Y" மாதிரி அமைப்பில் பாய். அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள்
அந்த "Y" க்கு நடுவில் கூட பார்வையாளர்கள் இருப்பார்கள். தோழமை கீதா தான்
ஆவணங்களைச் சேகரித்தார்.
முதன் முதலில் கலைமகளில் வெளிவந்த போஸ்டர், 19 நூற்றாண்டில் பெண்களின்
பெண்ணியக்குரல்கள், அவர்கள் பேசிய கருத்துகள், பெண்கல்வி முதல் தேவதாசி ஒழிப்பு வரை
ஏன் உடலுறவு குறித்து அன்றைக்கே பெண்கள் மிகவும் தெளிவாக பேசி இருக்கிறார்கள்.

ஆசிரியருக்கு கடிதம் ஒன்று "பெண் இன நல்லாள்" என்ற பெயரில் குடியரசு பத்திரிகையில்
வந்திருக்கிறது,. ஒரு கேள்விக்கு பெண் இன நல்லாள் பதில் சொல்கிறாள்..
அது கருத்தடை சாதனம் பற்றிய கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.
இன்பம் தரும் பாலுறுப்புகள் உடலின் முன்பகுதியில் இருப்பதால் உடல் சுகத்திற்கு
இதனால் எதுவும் தடையில்லை என்று பதில் எழுதுகிறார்.

குட்டிரேவதி எழுதிய முலைகள் கவிதையும் குஷ்பு பிரச்ச்னையும் தமிழ்நாட்டில் இவ்வளவு
எதிர்ப்புஅலைகளை ஏன் உருவாக்கியது?
ஏன் நிறப்பிரிகை இதழ்களில் எழுதியவர்கள் குட்டிரேவதிக்கு முன்பே இது குறித்து நிறைய
எழுதியிருந்தார்களே அப்பொதெல்லாம் கிளம்பாத எதிர்ப்பலை குட்டிரேவதி
எழுதிய பிறகு ஏன் கிளம்பியது?
47, 50களிலெயே சுயமரியாதை இயக்கத்தில் பெண்கள் ஏற்படுத்தி இருந்த
சமூக "பெருவெளி " எங்கே போனது?
ஒரு சுயமரியாதை மாநாட்டில் பேசும் பெண் உன் வீட்டில் உன் தங்கை விதவையாக
இருந்தா கண்டுக்காம முற்போக்கு கொள்கைகளை வெளியே கழட்டி வச்சிட்டு வந்திருக்கிற
ஆண்சிங்கங்களே..! என்றுதான் தன் பேச்சையே ஆரம்பிக்கிறார்!
இவ்வளவும் இவர்கள் செய்தப்பின்பும் நம் மதிப்பீடுகள் ஏன் மாறலை?
இதுதான் எங்களை கவலைப்படுத்தி உள்ளது. சில நேரங்களில் சோர்ந்து
போகவும் வைக்கிறது.

47, 50 எதற்கு? நம் நீண்ட நெடிய பெண்ணிய வரலாற்றில் அவ்வையும் மணிமேகலையும்
வாழ்ந்த பெண்களின் மண்ணில் அந்தப் பெருவெளி எங்கே மண்மூடிப் போனது?

அதிலும் குஷ்பு விசயத்தில் அவர் ஒரு சினிமா நடிகை என்பதும் அதிலும் இசுலாமியர்,
தமிழரல்லாதவர் என்பதும் சேர்ந்து கொண்டது வேறுகதை.
ஒரு சினிமா நடிகைனா இப்படித்தான் இருப்பானு சில எண்ணங்களை வைத்திருக்கிறோமே..

சுகிர்தராணி பக்கத்து அறையில் படுத்திருக்கும் ஆணைப் பற்றிய இச்சையை தன்
கவிதையில் பதிவு செய்தார்.. உடனே பயங்கர எதிர்ப்பு..
பாலகுமாரன் இந்த மாதிரி பேசலையா?
சுஜாதா எழுதலையா..?
ஏன் சுகிர்தராணி பேசும் போது மட்டும் அது பிரச்சனை ஆக்கப்படுகிறது1
பண்பாடு என்ற பார்வை வைக்கப்படுகிறது.


மணி: நீண்ட வரலாறு கொண்ட சமூகத்தில் இந்த மாதிரியான cycle trend ஏற்படும்.
சீனாவிலும் இதுதான் நிலைமை..


மங்கை: இந்தச் சைக்கிள் டிரண்ட் என்பது மனரீதியான சில சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

புதியமாதவி: பெரியாரைப் போல ஒரு தலைமை icon இன்றைக்கு இல்லை. இன்னொரு காரணம்
பரந்து விரிந்த ஊடகம்..


மங்கை: மே பி..

சமீராமீரான்: உங்கள் குடும்பம் உங்கள் நாடகப்பணிக்கு எந்தளவுக்கு துணையாக இருக்கிறது.?

மங்கை: நானும் அரசுவும் இடதுசாரி அமைப்பில் இருந்தவர்கள். காதலித்து என் குடும்பத்தினர்
எதிர்ப்புகளுக்கு நடுவில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.
அரசுவும் இடதுசாரி சிந்தனையாளர் என்பதால் என்னையும் என் நாடகப்பணியையும்
புரிந்து கொள்வது சாத்தியமாகிறது. அதற்காகவே வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லை
என்றும் சொல்ல மாட்டேன்.
நாடக ஒத்திகை முடிந்து இரவு 1 மணிக்கு மேல் ஸ்கூட்டரில் ஆண் தோழர் வீட்டில் கொண்டு
விடுவார். வீட்டு வாசலில் வந்து கதவைத் திறந்து அரசு அவர்களைப் பார்த்ததை உறுதி செய்தப்பின்
போவார்கள். எதிர்வீட்டு சன்னல்களுக்கும் கண்களும் காதுகளும் உண்டு.
இன்று எங்கள் குழந்தைகள் அனுபவிக்கும் சுதந்திர உணர்வும் வாழ்க்கையும் பெற அன்று
நாங்கள் நிறைய கடினமான பாதைகளைக் கடந்து வந்திருக்கிறொம்..

நன்றி. மிகவும் குறுகிய கால அவகாசத்தில் இந்தக் கலந்துரையாடலில் கலந்து
கொண்டவர்களுக்கும் எங்கள் அழைப்பு ஏற்று கலந்து கொண்ட மங்கைக்கும்.

--------------------------------------------------------------------------------

மங்கையைப் பற்றி கலந்துரையாடலுக்கு முன் நான் பேசிய சிறிய அறிமுகம்:

> மங்கையின் இயற்பெயர் பத்மா.

> ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராக இருக்கிறார்.

> கலைக்கூத்து, சக்தி, பல்கலை அரங்கம், மரப்பாச்சி அமைப்புகளின் பவுண்டர் மெம்பர்.

> அமெரிக்காவின் நியுயார்க் நகரத்து Tisch School of performance studies & university of
california இரண்டிலும் சில காலம் நாடகம் குறித்து பாடம் கற்பித்தவர். (visiting faculty prof)

1984ல் சென்னை கலைக்குழு நடத்திய

நாங்கள் வருகிறோம் - (1984)
போபால் AD 1990 -( 1985)
பெண் - (1986)

நாடகங்களில் நாடக நடிகையாகவே
மங்கையின் நாடகப் பயணம் துவங்கியது.

> மங்கை நெறியாள்கை செய்த நாடகங்கள் :
--------------------------------------------
*கலைக்குழுவின் கர்ப்பத்தின் குரல் நாடகத்தை மங்கை நெறியாள்கை செய்தார்.

*1991ல் சங்கீத நாடக அகெடமியின் தேநீர்ப்போர் நாடகத்தின் நெறியாள்கை.
ஈழத்து இளைய பத்மநாதன் அவர்களை தன் நாடகக்கலை வாழ்க்கையில் தன் ஆசானாக
பெருமையுடன் சொல்கிறார் மங்கை.

* 1992 ல் சுப்புதாய் என்ற குறும் நாடகத்தை அரங்கேற்றினார்.
நடுத்தர வர்க்கத்து குடும்பம் நவீனமயமாதலில் அனுபவிக்கும் பிரச்சனைகள், அதில் பெண்ணின்
பங்களிப்பு பற்றியது

* 1993 ல் சுவடுகள்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பாதையில் பதிந்த அடிகள் கதை.
ஒரு பெண்ணின் பார்வையில் பெண்ணியம், ஆண்-பெண் உறவு, சாதி வேறுபாடு
குறித்த கருத்துகளைப் பதிவு செய்திருக்கும் நாடகம்.

* 1995ல் பச்சமண்ணு.

தெருநாடகம் பாணியில் அரங்கேறியது. பெண் சிசுக்கொலை மட்டுமல்ல.. ஒவ்வொரு பெண்ணும்
அவள் பெண் என்பதால் எதோ ஒருவகையில் ஒதுக்கப்படுவதையும் பதிவு செய்தது.

* 1997 ல் வெள்ளாவி.
76 வயது துணி வெளுக்கும் பெண்ணின் உண்மைக்கதை. ஓர் ஆய்வின் அடிப்படையில்
இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதை முழுக்க அந்தப் பெண்தான். solo performance
பின்னணியாக துணிதுவைக்கும் இடமும் சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

* 1998 ல் அவ்வை
கவிஞர் இன்குலாப் அவர்களின் கதைவசனம். அவ்வை என்றவுடன் துறவு பூண்ட வயதானப்
பெண்மணி, கையில் தடியூன்றி தள்ளாடி நடக்கும் பெண், சற்று வளைந்த முதுகு, நரைத்த தலைமுடி..
சுட்டப்பழம் வேணுமா சுடாதாப் பழம் வேணுமானு கேட்கும் காட்சிதான் நமக்கு நினைவில் வரும்.
இம்மாதிரி அவ்வையைக் காட்டிய சமூகத்தைப் பிடித்து உலுக்கியது மங்கையின் அவ்வை.
மங்கை அவ்வை இளம்பெண், புத்திசாலி, பயமறியாதவள், பாணர் குலத்தவள்..


* 2001ல் மணிமேகலை
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரின் மணிமேகலை.
இன்குலாப்பின் நாடக வசனம். மும்பையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
மணிமேகலை நாடகத்தை பாண்டூப், நவிமும்பை, சயான் என்று மூன்றிடங்களில்
அரங்கேற்றியது நினைவு கூரத்தக்கது.

* 2002 ல் பனித்தீ
மகாபாரதக் கதையின் கதாபாத்திரமான அம்பா-சிகண்டியின் கூத்து. இசை நாடகம்
பாணியில் அமைந்த நாடகம்.
frozen fire என்று ஆங்கிலத்தில் இந்நாடகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* குறிஞ்சிப்பாட்டு: 2006 மரப்பாச்சியின் முதல் நாடகம்.
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுதான்.. கதை வசனம் கவிஞர் இன்குலாப்

*அரவாணிகளுக்கான கண்ணாடி கலைக்குழுவின்" மனசின் அழைப்பு."
" உறையாத நினைவுகள் " நாடகங்கள்
(சுடர் அமைப்பின் கண்ணாடிக்கலைக்குழு தான் அரவாணிகளின் முதல் நாடக கலைக்குழு
-அரவாணிகளுக்கான ஒரே நாடக கலைக்குழு .)

* அண்மையில் கீதாவுடன் இணைந்து வழங்கியிருப்பது காலக்கனவு என்ற ஆவண நாடகம்.

இவை தவிர

* மவுனக்குரல் அமைப்பின் சார்பாக தேசிய அளவில் நடத்தும் பயிற்சி பட்டறைகள்
* பெண் அரசியல் - கட்டுரைகள்

* theri katha என்ற புத்த பிக்குனிகளின் பாலி மொழி பாடல்களை ஆங்கிலம் வழி
தமிழாக்கம் செய்திருக்கிறார்.

கால்நூற்றாண்டுகளாக தமிழ் நாடகக்கலையின் ஒவ்வொரு தளத்திலும்
முத்திரைப் பதித்திருக்கிறது மங்கையின் பங்களிப்பு.
.

No comments:

Post a Comment