Thursday, July 3, 2008

தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?

'தமிழர்களை விரட்டி அடி'

"ஸாலா மதராஸிக்கு.., அட்டோ'

'தென் இந்தியர்கள் மும்பை மண்ணின் மைந்தர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்'

'வட இந்தியர்கள் மும்பையை நாசப்படுத்தும் நச்சுக்கிருமிகள்'

'பீகாரிகள் மும்பையின் புற்றுநோய்.'

'ஏக் பீகாரி சவ் ப்பிமாரி'
(ஒரு பீகாரி நூறு வியாதிகள்) ( சாம்னா பத்திரிகை 06/3/2008)

1966ல் தொடங்கி 1970ல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த கோஷங்கள் இன்றுவரை
வெவ்வேறு காரணங்களுக்காக தொடர்கிறது.

ஒரு அடுத்த தலைமுறையும் இக்குரலை அப்படியே உள்வாங்கிக்கொண்டு
மும்பையை அதிர வைக்கிறது.

அன்று பால்தாக்கரே இன்று அவரிடமிருந்து பிரிந்து நிற்கும் ராஜ்தாக்கரேயும்
அவரைவிட உக்கிரமாக இக்குரலை எடுத்துச் செல்லும் காட்சிகள்
அடிக்கடி அரங்கேறுகிறது.

இக்குரல்களுக்குப் பின்னால் இருக்கும் நியாயங்கள், உரிமைகள், தேவைகள் ஒரு பக்கம்.

இந்தியச் சட்டம், இந்தியக் குடியுரிமை, இந்திய இறையாண்மை.. இவை மறுபக்கம்.

இந்த இரண்டுக்கும் நடுவில் அரங்கேறிய காட்சியில் மூன்றாவதாக ஒரு பார்வை
தாக்கரேக்களாலும் பதில் சொல்ல முடியாத மூன்றாம் பார்வை
அண்மையில் வெளிவந்துள்ளது.

மராட்டிய மண் மராட்டியர்களுக்கே,
வட இந்தியர்களை விரட்டி அடி
என்று நேற்றுவரைக்குரல் கொடுத்த இவர்கள் யார்?

இவர்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
இல்லை.
இவர்கள் மராட்டிய மண்ணுக்கு வந்து இரண்டுதலைமுறை தான் ஆகிறது!

வட இந்தியாவிலிருந்து இன்றைக்கு இவர்கள் விரட்ட நினைக்கும் பீகாரிகளைப் போல,
உ.பி. பையாக்களைப் போல, தென்னிந்தியர்களைப் போல இவர்களும் வேலைத்தேடி,
பிழைப்பு தேடி இந்த மராட்டிய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்!

இப்படி சரித்திர உண்மையை அறுசுவை உணவின் போது மிளகாயைக் கடித்த மாதிரி
போட்டு உடைத்திருக்கிறார் புனே பல்கலை கழக பேராசிரியர் ஹரி நர்க்கே (Hari Narke).
தேசியவாத காங்கிரசு பத்திரிகையான ராஷ்டிரவாடியில் அவர் கட்டுரை ரொம்பவும்
காரசாரமாக வெளிவந்துள்ளது.

" Mumbai, June 24 (ANI): Nationalist Congress Party’s mouthpiece Rashtravadi has said that the Thackerays came to Mumbai two generations ago for jobs and have no right to assault those coming in search of livelihood in the financial capital of India.
NCP mouthpiece made this claim in an article published in this month’s issue.
A renowned scholar and Professor at the Pune University, Hari Narke, has written the strong-worded article in the Rashtravadi.
Narke flayed Maharashtra Navnirman Sena chief Raj Thackeray, who is Bal Thackeray’s nephew, over attacks on migrants in Mumbai.
“Raj should read the autobiography of his grandfather Prabodhankar Thackeray (Bal Thackeray’s father). Prabodhankar, who studied in Madhya Pradesh, has written how he travelled in other states for livelihood,” Narke said.
“This proves that the Thackerays, who are not original inhabitants of Mumbai, came to this city in search of livelihood,” the scholar said.
Incidentally, Maharashtra Government published Prabodhankar’s literature in 1995 at the behest of Narke, the article said.

பால்தாக்கரேயின் தந்தையார் பிரபோதன்கர் தாக்கரே தன் சுயசரிதையில் பிழைப்புத் தேடி அவர்கள்
மும்பைக்கு வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

பேரன் ராஜ்தாக்கரே தாத்தாவின் எழுத்துகளைப் படித்தால் நல்லது! என்று தெரிகிறது.

தாக்கரேக்கள் யார்? என்ற கேள்வி எழும்போது அவர்கள் CKP இனம்/சாதியைச் சேர்ந்தவர்கள் என்று
தெரியவருகிறது. தாக்கரே என்ற குடும்பபெயர் (surname) இந்த வம்சம்/இனம்/சாதியின் பெயரில்
ஒன்றாகும்.

யார் இந்த CKPக்கள்?
----------------------

CKP - Chandraseniya Kayastha Prabhu

சந்திரசேன் ய கயஸ்த பிரபு வம்சம்.

பல்வேறு வரலாற்று செய்திகளும் புராண/ நாட்டார் கதைகளும் இவர்களைப் பற்றிய
நிறைய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

* காஷ்மீர அரசன் சந்திரசென் பரசுராமரால் கொல்லப்படுகிறான். அவன் மனைவி
அரசி கங்கா/கமலா? கர்ப்பினியாக இருப்பதால் அவளைக் கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான்.
அவள் வயிற்றுப் பிள்ளைகள் தான் சந்திரசென்ய வாரிசுகள் என்ற பொருள்பட
சந்திரசேன்ய கயஸ்த பிரபுக்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பிரபு என்ற சொல் அரசுமரியாதை/
அதிகாரத்தை உணர்த்துவதாக கொள்ளலாம்.

* கயாவில் வாழ்ந்த இனக்குழு மக்கள் கயஸ்தா என்றழைக்கப்படுகிறார்கள்.

* H S Wilson (1819) கயஸ்தா என்றால் பேரதிகாரம் படைத்தவர்கள் என்று பொருள்.'
ஷத்திரிய ஆணுக்கும் சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவர்கள் இவர்கள் என்கிறார்.

* 7வது 8வது நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கயஸ்தர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின்
மத்திய பகுதிக்கு நகர்ந்தார்கள். புத்த மதம் கோலோச்சிய காலத்திலும் அதற்குப் பின்
அலாவுதீன்கில்ஜியின் படை எடுப்பிலும் இப்பிரபுக்கள் குஜராத், கொங்கன் கடற்கரை வழி
மராட்டிய மாநிலத்திற்கு வந்தார்கள்.
அப்படி 1305ல் 42 கயஸ்தா பிரபுக்கள் மராத்திய மண்ணிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ளதை
வரலாறு பதிவு செய்துள்ளது.

* ஜீனாப் நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் இவர்கள் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.
ஜீனாப் என்ற சொல் சமஸ்கிருதத்தில் சந்திர என்று மருவி வந்துள்ளது.
seniya என்ற சொல் shreni என்ற சமஸ்கிருத சொல்லின் திரிபு.
சந்திர சேன்ய என்றால் சந்திர/ஜீனாப் மக்கள் என்று பொருள். (People of chandra/chenab).

*ஜ.நா. சமூகவியல் கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கயஸ்தா பிரபுக்கள் சிந்துவெளி
நாகரிகத்தின் மக்கள் என்றும் இவர்களின் சிறுதெய்வ /பெண்தெய்வங்கள் வழிபாட்டு
வழக்கம் அதை உறுதி செய்வதாகவும் சொல்கின்றார்கள்.

* உலக மக்கள் சமூகத்தின் கல்வி/ஆய்வு நிறுவனம் (International institute of
population studies and research centre) சிந்துவெளி மக்களின் மரபணுக்களுடன் (DNA)
கயஸ்த பிரபுக்களின் மரபணுக்கள் 94.3% ஒத்துப் போவதாக கண்டுபிடித்துள்ளது.

* விவசாயமோ கால்நடை வளர்ப்போ கயஸ்தா பிரபுக்களின் தொழிலாக எப்பொதுமே
இருந்ததில்லை. சிந்துவெளி நாகரிகத்திலும் இவர்கள் அரசு நிர்வாகத்தை கவனித்த
வம்சதினராகவே இருந்திருக்க வேண்டும்.
எனவே தான் இவர்களின் புலம்பெயர்தல் எப்போதும் அரசு/அரசாட்சி அமைப்புகளுடன்
தொடர்புடையதாகவே அமைந்துள்ளது.

* இவர்கள் இசுலாமிய பேரரசிலும் அரசு நிர்வாகத்தில் பணி செய்திருக்கிறார்கள்.

* மராட்டிய வீர சிவாஜி யின் 'என்னுடைய ஒரு கனவு' (mala ek swapna ahe)
என்ற புகழ்மிக்க வீர உரையில் மராட்டிய மண்ணுக்கும் தன் இந்துப் பேரரசை நிறுவும்
பணியிலும் வீர தீரத்துடன் தோள்கொடுத்து உதவிய சந்திர சேன்ய கயஸ்த பிரபுக்களுக்கு
நன்றி சொல்லுகிறார்.

* சில சரித்திர ஆசிரியர்கள் மொகலாய பேரரசுகளின் காலத்தில் கல்வி அறிவு புலமையில்
வல்ல பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் ஒன்றுகூடி புதிதாக உருவாக்கிக்கொண்ட
சாதி அல்லது இனம் தான் கயஸ்தா என்கிறார்கள்.

இக்கூற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ தெரியவில்லை. எனினும் இன்றுவரை
கயஸ்தா பிரபுக்களுக்கும் வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் நடுவில் பனியுத்தம் நடக்கத்தான்
செய்கிறது.
கயஸ்த பிரபுக்கள் புணூல் அணிதல்./வேதம் ஓதுதல் கூடாது என்று பார்ப்பனர்கள் அவர்களை எதிர்த்து
நிறைய கலகம் செய்திருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் 1913ல் பாலாஜி அவ்ஜி சிட்நிஷ்
(Balaji avji Chitnis) என்ற கயஸ்த பிரபு தன் மகனுக்கு புணூல் அணியும் சடங்கிற்கு
பார்ப்பனர்கள் எதிர்க்க அவர் அன்றைய இந்துமத தலைவரிடமிருந்து ஒப்புதல் பெற்ற கடிதம்
இன்றைக்கும் மும்பை அரசு ஆவணக் குறிப்பேட்டில் உள்ளது.
( Letter from Shankarachaya Vidhanrusingha Bharati from Karvir Peeth in year 1913 )

*இவர்களை எழுத்தாளர் சாதி என்றும் சிலர் சொல்வதுண்டு.

* இவ்வம்சத்தினர் எழுதும் மை அத்துடன் போர்புரியும் வாள் இரண்டையும் வழிபடும்
மக்கள். இதற்கும் பிரம்மாவுக்கும் வழக்கம்போல நம் புராணங்கள் எழுதி வைத்திருக்கும்
கட்டுக்கதைகள் நிறைய உண்டு.!

இந்த வரலாற்றின் பின்னணியில் பார்த்தால் இன்றைக்கு ராஜ்தாக்கரேயால் அதிகம்
விமர்சிக்கப்படும் இந்தி திரை நடிகர் அமிதாப்பச்சனும் கயஸ்த பிரபுதான்.

"அட..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
ஓட்டு வாங்கும் உலகத்திலே
பதவி ஒன்றுதான்
புரிந்து கொள்ளடா..
மண்ணின் மைந்தர்கள் உலகத்திலே..
அட ..
அண்ணன் என்னடா தம்பி என்னடா..."*

இக்கட்டுரையில் மற்றவர்கள் கருத்தைத் தொகுத்துச் சொன்னதுடன் என் பணி
முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
புலம்பெயர்ந்து வந்த கயஸ்த பிரபுக்கள் இரண்டாவது/மூன்றாவது தலைமுறை இன்றைக்கு
எங்கள் (!! )மும்பையை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்த மும்பைக்கு நான்காவது தலைமுறை!!!!!!!!!!!!!!!!!!!!
அப்படியானால் எனக்கும் மும்பைக்கும் உள்ள தொடர்பு
இவர்களின் தொடர்பை விட இறுகியதாக நெருக்கம் உள்ளதாக் இருக்க வேண்டுமே!
அப்படி இருக்கிறதா?
சத்தியமாக இல்லை.

நான் இந்த நான்காவது தலைமுறையிலும் இந்த மண்ணில் என் தனிப்பட்ட
தமிழச்சி என்ற அடையாளத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் என்றைக்குமே இந்த மண்ணில் ஒரு தொட்டிச்செடி தான்.
அதுவும் எங்க தாமிரபரணி மண்ணைப் பத்திரமாக எடுத்து வந்து
இங்கே அபரிதமாகக் கொட்டும் மழையிலும் கொளுத்தும் சூரிய ஒளியிலும்
என்னை என் இலைகளை என் பூக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதிலும் என் விதைகள் என்ன காரணம் கொண்டும் இந்த மண்ணில்
விழுந்து முளைவிட்டு வளர்ந்து இந்த மண்ணில் வேரூன்றி
இந்த மண்ணுக்குள்ள செடிகளாக மரங்களாக இதன் அடையாளங்களுடன்
வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இன்றுவரை ரொம்பவும் கவனமாக
கண்ணில் வேப்பெண்ணெயை ஊற்றிக் கொண்டு காவல்நாயைப் போல
காத்துக் கொண்டிருக்கிறேன்!


நான் எப்போதுமே எவ்வளவு தலைமுறைகள் இங்கே வாழ்ந்தாலும்
இதில் மாற்றமிருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் தாக்கரேக்கள்/ கயஸ்த பிரபுக்கள் இந்த மண்ணைத் தங்களுடையதாக
சுவீகரித்துக்கொண்டவர்கள். அவர்களின் பிறப்பிடம் வேறாக இருந்தாலும்
அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணுடனும் இந்த மக்களுடனும் பின்னிப் பிணைந்து
இருக்கிறது. பிரிக்க முடியாது. இந்த மண்ணின் மக்களுடன் அவர்கள் திருமண உறவுகளின்
மூலம் கலந்து இந்த மண்ணுக்கான அடையாளத்துடன் தங்களின் அடுத்த தலைமுறையை
உருவாக்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால அதிகமாக இனக்கலப்பு நடந்த
இனங்களில் இந்த இனமும் ஒன்று.

மனிதன்/ இன வரலாறு என்று நதி மூலம் தேடினால்
என் கால்கள் இலெமுரியா தாண்டி ஆப்பிரிக்க வானத்தின் காடுகளில்
தடம்பதிக்கும்.

இறுதியாக:

தாக்கரேக்களும் வட இந்தியர்கள் தான் , CKP க்கள் தான் என்ற சரித்திர உண்மை
இந்திய வரலாற்றில் இனியொரு புதிய அத்தியாயத்தை எழுதக்கூடும்.
அதாவது தாக்கரேக்கள் மராட்டியம் தாண்டி இந்திய/இந்துத்துவ அடையாளத்துடன்
வீரியமாக வெளிவருவார்கள். அதற்கான முன்னுரையை சுக்தேவ் மேத்தாவுடனான
பால்தாக்கரேயின் நேர்காணல் -( Book - Maximum City) வெளிப்படையாகவே
பதிவு செய்துள்ளது.

3 comments:

 1. From: velu mani (sethuramalingam_velumani@yahoo.com)
  Sent: 07 July 2008 12:38PM
  Reply-to: sethuramalingam_velumani@yahoo.com
  To: puthiyamaadhavi@hotmail.com

  Thanks for your article in thinnai about Thakkareys.

  Not only Thakkareys, we need to re invent all those who shout for regional slogan need to find out their roots and tell publics to educate.

  Once again thanks for your article on behalf of Tamil readers.  I am very happy to hear you are from Thamiraparani. I am also from that basin and now living in Secunderabad.  Reagrds

  S.Velumani

  ReplyDelete
 2. From: CK Moorthy (ckmoorthy2004@yahoo.com)
  Sent: 05 July 2008 14:34PM
  Reply-to: ckmoorthy2004@yahoo.com
  To: puthiyamaadhavi@hotmail.com  Dear Puthiyamaadhavi,  I read your thinnai Takkarekkal, it was breif and fantastic information.  Thank you very much for your Courageous !!!!  Regards  C Krishnamoorthy

  ReplyDelete
 3. சும்மா அதிருதில்லே கட்டுரை. மிக அழகாக நுணுக்கத்துடன், பதிவு செய்து தாக்கரேவிந் சாயம் காட்டியமைக்காக நன்றி.

  தாமிரபரணி தீரத்தின் விதைகள் வீணாவதில்லை என்பதில் நானும் அந்த தீரத்தின் ஒஆரத்தில் இருந்து வந்த ஒரு சின்ன வாசிப்பவன்.

  அன்புடன் சூர்யா.

  ReplyDelete