Saturday, April 30, 2016

ஜெய் மகாராஷ்டிரா



மே 1, உழைப்பாளர்கள்  தின வாழ்த்துகள்.
மே 1, மகாராஷ்டிர தினமும் கூட.
சென்னை மாநிலத்தைப் போலவே பம்பாய் பிரசிடென்சியும்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசத்தின் சில  பகுதிகளை உள்ளடக்கியதாக  இருந்தது.  மொழிவழி மாநிலமாக இந்தியாவைப் பிரிப்பதற்கு முதலில் ஆதரவு கொடுத்த காங்கிரசு ஆட்சிக்கு வந்தப்பின் அப்பிரிவு இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதியது.
நேரு இக்கருத்தில் உறுதியாக இருந்தார். ஆனால் மராத்தி பேசும் மக்கள்
தங்களுக்கான மாநில கோரிக்கையை முன்வைத்து பிப். 6, 1956ல் சம்யுக்த மகாராஷ்டிர சமிதியை உருவாக்கினார்களா. அவர்களின் தொடர் போராட்டத்தில் ஃப்ளொரா பவுண்டனில்
அவர்கள் நடத்திய பேரணியில் பலர் உயிரிழந்தார்கள். அன்றைய நிதித்துறை அமைச்சராக இருந்த டி. தேஷ்முக்  தன் எதிர்ப்பை காட்ட பதவி விலகினார். சற்றொப்ப 105 பேர் உயிரிழந்தார்கள். அவர்களுக்கான நினைவு சின்னம் தான் ஹுடாம சவுக்கில்  இருக்கிறது. இப்போராட்டத்தில் பம்பாய் நகருக்கு மராட்டியர்களும் குஜராத்திகளும் உரிமை கொண்டாடினார்கள். நடுவண் அரசோ பம்பாய் நகருக்கு தனி ஸ்டேட்
அந்தஸ்த்து கொடுக்க விரும்பியது. பம்பாய் எங்கள் நகரம், பம்பாய் எங்கள் மண்,
என்று இம்மண்ணின் மைந்தர்கள் எடுத்த போராட்டம் வெற்றி பெற்றது.
மே 1, 1960 ல் மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது.
இன்றைய தினத்தை மகாராஷ்டிர மாநிலத்தவர் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடுகிறார்கள்.
ஜெய் மகாராஷ்டிரா என்ற முழக்கத்துடன்.

சீமான்

சீமான் அரசியல்வாதியா?
இன்னொரு கெஜ்ரிவால் போல சீமான் ஆக முடியுமா?
அல்லது
சீமான் ஒரு கனவுலத்தை விரும்பும் இளைஞர்களுக்கு
நம்பிக்கை ஊட்டும் தலைவராக வளர்ந்து கொண்டிருக்கிறாரா?
நாம் தமிழர் கட்சிக்கோ சீமானுக்கோ எந்த ஒரு ஊடகத்தின்
ஆதரவும் இல்லை என்றாலும்
இளைஞர்களின் ஆதரவு ஏறுமுகமாக இருக்கிறது.

தினத்தந்தி தொலைக்காட்சியில் பாண்டேயின் கேள்விகள்
ஒவ்வொன்றாக விழும்போது சீமான கொஞ்சம் தடுமாறினார்,

:உங்களுக்கு என்னய்யா வேனும்?
காரு வேண்டுமா?
இறக்குமதி செய்யறேன்யா...!
என்று சொன்னபோது கொஞ்சம் பொருளாதரம் இடித்தது.
இறக்குமதி செய்வதற்கு பணம் வேண்டுமே! அதை எப்படி பெறுவது?
ஏற்றுமதி இருந்தால் தானே இறக்குமதியை சரி செய்யலாம்.
இந்த இரண்டும் ஏறுமாறாக இருப்பதால்தானே இந்திய ரூபாயின்
மதிப்பு இறங்குமுகமாகவே இருக்கிறது.
இந்த லாஜிக் ரொம்ப சிம்பிள்.

எது எப்படியோ சீமான் ஒரு சக்தியாக ,
திராவிட அரசியலுக்கு மாற்றுசக்தியாக வளர்ந்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்
என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லும் காலம் வ்ரவில்லை.
தமிழ்நாட்டு வாக்களர் பட்டியலில் 18 வயது முதல் 39 வயதுவரை
உள்ள வாக்களர்கள் மொத்த வாக்களர்களில் சற்றொப்ப 50%..
என்பதையும் கணக்கில் கொண்டால் எதிர்காலத்தில்
தமிழக் அரசியலில்
சீமான் கவனிக்கப்பட வேண்டியவர்.

Monday, April 25, 2016

விருத்தாசலமும் கனக சுப்புரத்தினமும்





இவர்கள் இருவரும் நண்பர்கள், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கும்
கருத்தியல் ரீதியான வேறுபாடுகளுக்கு நடுவில் இருவரும் ஒருவரை ஒருவர் கொண்டாடினார்கள், மதித்தார்கள்,
ஆனாலும் என்னவோ இவர்கள் இருவரையும் கொண்டாடியவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை, புரிந்துணர்வை.. ..
பெரிதாக பேசிக்கொள்வதில்லை.
ஒருவர் என் தந்தை கொண்டாடிய பாரதிதாசன் என்ற கனகசுப்புரத்தினம்.( தன் ஒரே மகனுக்கு சுப்புரத்தினம் என்று பெயர் சூட்டி பெருமை கொண்டவர் என் தந்தை பி.ஏஸ்.வள்ளிநாயகம் அவர்கள்)
இன்னொருவர் நான் என் வாசிப்பில் கண்டடைந்த புதுமைப்பித்தன் என்ற விருத்தாசலம்.
"தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம் இவைதவிர பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினமும் ஒருவர்"
என்று உரக்க சொன்னவர் புதுமைப்பித்தன்.
1931க்குப் பின் வெளிவந்த மணிக்கொடி இதழ்களில் பாரதிதாசனின் மிகச்சிறந்த கவிதைகள் வெளிவந்துள்ளன. அக்கவிதைகளைக் கொண்டாடுகிறார் திஜரா.
பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா 29/07/1946 ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொற்கிழி வழங்கியபோது அந்த நிதிதிரட்டும் குழுவில் உறுப்பினராக இருந்தவர் புதுமைப்பித்தன். பொருளாதர நெருக்கடி, வேலை இல்லை.. இச்சூழலில் புதுமைப்பித்தன் தன் பங்கிற்கு வழங்கி இருந்த
அன்பளிப்பு தொகை ரூ.100/ .... !!
புதுமைப்பித்தனை கொண்டாடும் மணிக்கொடி வட்டமும் சரி,
பாரதிதாசனைக் கொண்டாடிய/கொண்டாடும் திராவிட இயக்க/ திராவிட அரசியல் மேடைகளும் சரி..
இந்த இருவருக்கும் நடுவில் இருந்த தமிழ் உறவை
ஏன் கொண்டாடவில்லை?
புதுமைப்பித்தன் பிறந்தநாள் : 25 ஏப்ரல் 1906
பாரதிதாசன் பிறந்தநாள் : 29 ஏப்ரல் 1891.

Tuesday, April 19, 2016

நிலம் எனும்..

நிலம் எனும்
-----------------


"அம்மா... உழவர்களும் அவர்களின் தொழிலும் இவ்வளவு உயர்ந்தது என்றால்
ஏனம்மா என்னை நீ விவசாயி ஆக்கவில்லை?" என்று என் மகன் கேட்பது போல.ஒரு பொங்கல் நாள் முகநூல் பதிவில் எழுதியிருந்தேன்.
நாம் அனைவருமே விவசாயத்தை, விவசாயிகளைக் கொண்டாடுகிறோம்,
மதிக்கிறோம், கவிதை எழுதுகிறோம், இன்னும் என்னவெல்லோமோ
செய்து கொண்டிருக்கிறோம். ஆனால்.. நம் வீட்டிலிருந்து ஒருவரையும்
அந்த மையப்ப்புள்ளிக்குள் விட்டுவிடாமல் மிகவும் பத்திரமாக
வெளிவட்டத்தில் சுற்றவிட்டிருக்கிறோம்.
கிராமத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் மச்சியிலும் நெல்லும் தானியங்களும் காய்ந்து கொண்டிருக்கும்.. 30  வருடங்களுக்கு முன்.
இப்போது எந்த வீட்டிலும் நெல் மூடைகளை காணவில்லை. இலவச தொலைக்காட்சியில் மக்கள் மெகா தொடர்களைப் பார்க்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதொ கிடைக்கிறது. வீட்டுக்காவலுக்கு பெரிசுகள் மட்டும் . மாதாமாதம் அவர்களுக்கு
நகர்ப்புறத்திலிருந்து வரும் மணியார்டருக்காக தபால்காரரை எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் வீடுகள்..  வீடுகள்.. வீடுகள் .. வீட்டு மனைகள்..
இப்போதெல்லாம் வீடுகளொ வீட்டு மனைகளோ குடியிருப்புக்கானவை மட்டுமல்ல.
 அவர்களின் அசையா சொத்து, சில வருடங்களில்
ஒன்றை பத்தாக்கும் அலாவூதின் அற்புதவிளக்கு.
இந்த இரு வாழ்க்கையின் போராட்டங்கள்.. ஆண் - பெண் உறவில் ..
சு.வேணுகோபாலின் "நிலம் எனும் நல்லாள்" நாவலாக...
நிலம் சார்ந்த மனிதனாக பழனிக்குமார்.
நிலத்தை வாழ்க்கையாக நினைக்கிறான்.
நகரத்தில் வாழும் அவன் மனைவிக்கு நிலம் வாழ்க்கை அல்ல.
அது ஒரு சொத்து. பண மதிப்பீடு.
தன் நிலத்தை விற்பது என்பது பழனிக்குமாருக்கு தன் ஜீவனைக் காயப்படுத்துவது போல.
அவன் மனைவிக்கு நிலத்தை விற்பது என்பது லாப நஷ்ட கணக்கு.
இந்தப் போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த காதல் காணாமல் போய்விடுகிறது.
இரண்டு பூனைகளும் சண்டைப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்துவது போல கழிகிறது அவர்கள் வாழ்க்கை.
அவரவருக்கான நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் .. பழனிக்குமாரும் ராதாவும் நமக்குள்
.. ஒருவகையில் இது எம் தலைமுறையின் நாவல்.

பழனிக்குமாரின் பிள்ளைகளுக்கு இப்பிரச்சனை இருக்காது.
அவர்கள் மனைகளை வாங்கலாம், விற்கலாம்..
அவர்கள் மனைகளின் தரகர்களாக இருப்பார்களே தவிர
நிலத்தின் மைந்தர்களாக
 நிலத்துடன் உறவு கொண்ட மனிதர்களாக இருக்கப்போவதில்லை.
நாவலில் சில வரிகள்:
"அகல விரித்த கால்களுக்கிடையில் கோயிலைக் குவித்துச் சேர்த்து உருட்டிக்கொண்டிருக்கும் மாசாணி, தன் பருவம் பற்றி அறியாப் பேதை மாசாணி. மணற்கோவில் இந்த மாசாணி முன் ஒன்றுமில்லை. அது வெறும் மணல். அவள் உயிரோட்டமுள்ள கோவிலாக அமர்ந்திருக்கிறாள். பாவாடை ஏறி விலகி மாசாணியின் கருவறை வாசல் பயமுறுத்துகிறது. அவள் கால்களுக்கிடையில் கன்னி கனலாய்ச் சுடர்கிறாள். மனிதவடிவில் தான் கோயில்களை உருவாக்கியிருக்கிறானோ
ஆதிக் கலைஞன். ஆதி அம்மை, அங்கையற்கண்ணி உடலே கோபுரமாக அமர்ந்திருக்கிராள்.
அணையா விளக்கை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது..."
(தமிழினி வெளியீடு.)


Saturday, April 16, 2016

முரண்வெளி


முரண்கள் எல்லாம் பகை முரண்கள் அல்ல.
உடன்பாடுகள் எல்லாம் நட்பு உடன்படிக்கைகளும் அல்ல.
முரண்வெளியில் பயணிப்பது கத்திமுனையில் நடப்பது போலதான்.
நட்பு முரண்களாக என் வெளி விரிகிறது.
லெனின் சொன்னது போல என் ஆயுதத்தை நான் தீர்மானிப்பதில்லை.
என் எதிரில் நிற்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
காந்தி மகானைப் போல நான் அஹிம்சைவாதி அல்ல.
நிராயுதபாணியாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை
கொலை செய்த களம்.. 
அபிமன்யுவின் மரணத்தைவிட கொடியது.
தனிமனித ஆசாபாசங்களில் எவரும் எனக்கு வேண்டாதர்கள் அல்ல.
எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும்
உங்கள் உள்ளம் கொதிக்கிறதா.. அப்படியானால் நீ என் நண்பன்..
என்று என்னருகில் வந்து மீண்டும் சொல்கிறான் சேகுவேரா.
நான் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல என் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அதைச் சொல்வதற்கான என் உரிமையை எவரும் பறித்துவிட முடியாது..
வால்டேர் எனக்காகவே .. உங்களுடன் பேசுகிறான்.
காதலைப் பற்றியும் கத்தரிக்காய் குழம்பு வைப்பதை பற்றியும் எழுதுவதில்லை தான். நான்!
எழுதத்தெரியாது என்பதால் அல்ல.!!
அபிப்பிராயங்கள் உண்மைகளாகிவிடுவதில்லை.
நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும்
என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடமில்லை. 
காலம் என் கைப்பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறது.
முடிவுகளை விட முயற்சிகள் முக்கியமானவை.
வெற்று வாழ்த்துகளில் செத்துக்கொண்டிருக்கும் ஜீவனுக்கு
நட்பு முரண்வெளி யில் ஒரு சொட்டு அமுது.

Wednesday, April 6, 2016

என்ன வை .....க்க்கோ




இப்படி விவரமில்லாத ஆளா இருக்கீங்களே.
தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு எப்படி ஓட்டுப்போடுவார்கள்?
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்..
உங்கள் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட கால்நடை மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி கூட
உங்களுக்கு கொடுக்கமுடியாது போலிருக்கிறதே!!!
கலைஞர் என்ன சாதி?
இந்த விவரம் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள்
இப்படி உளறிக்கொட்டும் வரைத் தெரியாமல் இருந்தது.
என்னதான் திராவிட அரசியல் வழி வந்தக் குடும்பத்தில்
பிறந்து வளர்ந்திருந்தாலும்.. நாங்கள் இந்த தகவல்
தொழில்நுட்பத்தில் ரொம்ப "வீக்".
வாழ்க எம் பெருமான் ஈ வெ. ரா.
ஆனால் எதையோ சொல்லிட்டு , அப்புறம் நீங்க
மாஞ்சி மாஞ்சி கெஞ்சி கெஞ்சி மன்னிப்பு
கேட்டிருக்கிறதை வாசிக்கும் போது எனக்கு
விக்கி விக்கி அழுகை வந்திடுத்து..
உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கத்தான் எழுத வந்தேனா..
ஆனா பாருங்க வைகோ.. உங்க கும்பகர்ண கதையைக்
கேட்டுட்டு உங்க மீது பரிதாபம் வேறு வந்து தொலைச்சிடுச்சி.
இந்த மாதிரி சாமாச்சாரத்தை எல்லாம் எப்போ யார் முன்னாலே பேசனும்னு ...
சரி.. சரி.. நீங்க இன்னும் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..

Sunday, April 3, 2016

பஃறுளியின் வாசனை




புலம்பெயர்தல் என்பது
ஜீவராசிகளின் தொடர்கதை.
பனிப்பிரதேசத்தின் பறவைகள்
கூடுகட்டி குஞ்சுகள் பொறிக்க
நம் மண்ணின் மரக்கிளைகளைத் தேடி
பல்லாயிரம் மைல்கள் தாண்டி
பறந்து வருகின்றன.

கடல் சூழ்ந்த நம் பூமியில்
நம் கரைகளைத் தொடாத
பசிபிக் கடலின் ஆமைகளும்
முட்டையிடும் பருவத்தில்
நம் நெய்தல் நிலம் தேடி
பயணிக்கின்றன.

மனிதனும்
நிலம் தேடி நீர் தேடி
பசி தீர்க்க பயணித்த தூரத்தை
காலத்தை
கணக்கில் எடுத்தால்
பிரமிப்பாகவே இருக்கிறது.

இப்பயணங்களில் தமிழனின் குரல்
திரைகடலோடி திரவியம் தேடிய
பெருமையை ,
பொருள்வழிப் பிரிதல் என்று வகைப்படுத்தி
பெருமையுடன் பேசுகிறது.
இப்பெருமைகளின் மறுபக்கத்தில்
இன்றும் தங்கள் இருத்தலுக்காக
புலம்பெயரும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இப்புலம்பெயர்தல்
நம் பெருமைமிகு வரலாற்றின்
இருண்ட மறுபக்கம்.
அந்த மறுபக்கத்தில்
அரபிக்கடலோர மித்திநதிக்கரையில்
நானும் என் கவிதைகளும்.

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும்.
இது நதிகளின் உரிமை.
அந்த உரிமையும் மறுக்கப்பட்ட
மித்தி நதியில்
மிதக்கின்றன எங்கள் வாழ்க்கைப்படகுகள்.

நாலு தலைமுறைகளுக்கும் மேலாக
இந்த மண்ணில் எங்கள் வாழ்க்கை
எங்கள் இருத்தலுக்கான வாழ்க்கையில்
தொட்டிச்செடிகளாகவே தொடர்கிறது
எங்கள் வேர்களின் பயணம்.

காங்கிரீட் காடுகளில்
கண்ணாடி ஜன்னல்களின் வழியாக
நீலநிற வானத்தை எட்டிப்பார்க்கும்
தொட்டிச்செடிகளின்
இலைகள் மட்டுமே அறியும்
மறுக்கப்பட்ட நிலத்தடி மண்ணின் வாசனையை
கட்டுடைத்துப் பயணிக்கும்
வேர்களின் பயணத்தை.

மாநகரத்தின் ஜனக்கடலில்
கரைந்துவிடவோ கலந்துவிடவோ முடியாமல்
ப்ஃறுளியின் மணல்மேடுகளில்
புதையுண்ட எங்கள் நிஜங்களைத் தேடி
கடலடியில் பயணிக்கிறோம்
ஆமைகளைப் போல.

கபாடபுரமும் குமரிக்கோடும்
எங்கள் கண்முன் விரிகிறது.
சிவனே எம் இனக்குழு தலைவனாய்
எங்களுடன் உரையாடுகிறான்.
கொற்றவையின் கைப்பிடித்து
நடக்கிறது எங்கள் கவிதை.

பெண்ணிய பெருவெளியில்
தந்தை பெரியாருக்கு முன் வாழ்ந்த
பெருமகனாய்
நெற்றிக்கண் திறந்து வழிகாட்டுகிறான் அவன்.
அவனோடு பயணிக்கிறேன்
அங்கே
மருதம் திரிந்த பாலையில்
அவன் மனைக்கிழத்தி
காதல் மறுக்கபப்ட்ட கொற்றவையாய்
பெருமூச்சு விடுகிறாள்.
என் கனவுகள் கலைகிறது.

மண்ணில் புதையுண்ட பஃறுளியின் ஈரம்
கடலடியில் நீரோட்டமாய்
பாய்ந்து வருகிறது.
அனாதையாக நிற்கும் எங்கள் இருத்தலை
முத்தமிட்டு வாரி அணைத்துக்கொள்கிறது.

பஃறுளியி மகள் நான்
நதிகளுக்கு என்று வரையறுக்கபப்ட்டிருக்கும்
எல்லைகள் கடந்து பயணிக்கிறேன்.
பஃறுளி என் முகம்.......
கதை என்றும் கட்டுரை என்றும்
விமர்சனம் என்றும்
கவிதை என்றும்
நீங்கள் கற்பித்திருக்கும்
அனைத்து வடிவங்களிலும்
அவளே நானாக..
என் மொழியாக..

மழைப்பொழியும் ஒரு கார்கால நள்ளிரவில்
பஃறுளியின் ஈரம்
என் தொட்டிச்செடிகளின் இலைகளில்
பட்டுத் தெறிக்கிறது..
நாளைய விடியலில்
என் தொட்டிச்செடிகள் பூத்திருக்கும்
எனக்காகவும் உங்களுக்காகவும்

அந்தப் பூக்களை
உங்கள் வாசலுக்கு எடுத்துவரும்
எழுத்து அறக்கட்டளைக்கும்
அறக்கட்டளை குழுவினருக்கும்
என் ஆதித்தாய் பஃறுளியின் வாழ்த்துகளுடன்.

உங்களன்பு,

புதியமாதவி.
மும்பையிலிருந்து,.

15 ஆகஸ்டு 2015 சுதந்திர தின நள்ளிரவில்..
(மவுனத்தில் பிளிறல் கவிதை தொகுப்பில்.. என்னுரை)

Tuesday, March 22, 2016

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா.. (1)


தேர்தல் அரசியலைக் கடுமையாக விமர்சித்த வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் . 16 ஜூலை 1989 சென்னை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.
சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் இந்த நான்கும் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குறிக்கோள் என்று முழங்கினார். 
மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை
மக்களின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவது தான் தங்கள் இலட்சியம் என்று அறிவித்தார்.
தலைவர் பதவி வன்னியருக்கும் செயலாளர் பதவி
தாழ்த்தப்பட்டவருக்கும் வழங்கப்படும் என்பது அவர்
அறிவிப்பில் மிகவும் முக்கியமானது. அதன்படி
தலைவராக பேராசிரியர் தீரன், செயலாளராக எழில்மலை
(இந்த இருவருமே தற்போது அக்கட்சியில் இல்லை என்று
நினைக்கிறேன்.)
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அன்றைய துவக்க விழாவில் அவர் கொடுத்த வாக்குறுதிகளின் முக்கிய சாராம்சங்கள்:
* நான் எக்காலத்திலும் சங்கத்திலோ கட்சியிலோ எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்.
*என் வாழ்நாளில் தேரதலில் போட்டியிட மாட்டேன்.
என் கால்செருப்பு கூட சட்டமன்றத்திலோ/நாடாளுமன்றத்திலோ நுழையாது.
*பொதுக்கூட்டங்கள்/பொது நிகழ்ச்சிகளுக்கு சொந்தச் செலவில் வந்துப்போவேன்.முடியாதபோது
ஓய்வெடுத்துக்கொள்வேனே
தவிர அடுத்தவர் செலவில் வந்து போக மாட்டேன்.
*பிரதமர் பதவியைக் கொடுத்தாலும் சரி, சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி, இந்த ராமதாஸ் விலை போக மாட்டான்.
இது என் தாய்மீது சத்தியம்.
*என் வாரிசுகளோ , சந்ததியினரோ , யாரும் எக்காலத்திலும் சங்கத்திலோ கட்சியிலோ எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!!!!
*இவற்றை எல்லாம் உங்கள் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...
 (அவரு சொன்னாருனு நானும் எழுதி வைத்திருந்தேன்.. !)
என் தாய்மீது செய்து கொடுத்த சத்தியத்தை மீறி நான் நடந்தால் என்னை
நடுரோட்டில் நிறுத்தி வைத்து ச+++ல் அ++++ள். (எடிட்டிங் என்னுடையது)
----
காலம் எவ்வளவு மாறிவிட்டது, 
மருத்துவரை குறை சொல்ல முடியாதுதான்
அரசியலில் இதெல்லாம் சகஜம்பா...

Saturday, March 19, 2016

இருத்தலுக்கான "வலி"



எனக்கு அவர்கள் ஓர் ஆடையை அணிவித்தார்கள்.
அவர்களும் அணிந்து கொண்டார்கள்.
அவர்கள் ஆடையில் வண்ண வண்ணப் பூக்கள்
பூக்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள்.
ஏக்கத்துடன் கழிந்தது என் இரவுகள்.
ஓர் அமாவசை இரவில்  அவர்கள் கொடுத்த ஆடைகளைத் துறந்து
அம்மன (ண)ம் ஆன பொழுதில் ...
பவுர்ணமி வெளிச்சத்தில் பட்டாம் பூச்சிகள்
கொலை செய்யப்பட்டன.
எரிக்கப்பட்டது என் ஆடைகளும்.
இப்போதெல்லாம் 
ஆடைகளைக் கழட்டுவதோ மாற்றுவதோ
கனவில் கூட வருவதில்லை.
என் வாரிசுகளையும் அவர்கள்  கொடுத்த
ஆடைகளுடனேயே பிரசவிக்க சம்மதமே.

Friday, March 11, 2016

எழுதாதே ....ஆபத்து

அரசியல் பற்றி எழுதாதே
ஆபத்து .. 
எங்கிருந்து ஆட்டோ ரிக்‌ஷா பாய்ந்துவரும் என்று
எவராலும் சொல்லமுடியாது..
எச்சரிக்கிறார்கள் என்மீது கொஞ்சம் அக்கறைக்கொண்டவர்கள்.

கவிதை எழுது என்று சொல்கிறாள் தோழி..
எழுதலாம் தான்..
என் கவிதைகளைத் தற்காலிகமாக "கடமை"
என்ற கடன் தீர்க்க அடமானம் வைத்திருக்கிறேன்..
கடனும் வட்டியும் சேர்ந்து என்னை மூச்சுத்திணறடிக்கிறது.
கவிதை எழுதுவது இப்போதைக்கு முடியாதுதான்.

சரி.. எழுத ஆரம்பித்து முற்று பெறாமல் இருக்கும்
நாவலை எழுத ஆரம்பிக்கலாம்..
ஆனால் நாவலின் கதவுகள் சாத்தி இருக்கின்றன.
பெரிய பூட்டு வேறு தொங்கிக்கொண்டிருக்கிறது.
வழக்கம் போல நான் சாவியைத் தொலைத்துவிட்டேன்.
கதைமாந்தர்கள் வேறு கட்சிமாறிவிட்டார்கள்.
கூட்டணியும் உறுதியாகவில்லை
.
'நாவல்'பழம் சர்க்கரை வியாதிக்கு நல்லதாமே
சுட்டப்பழமோ சுடாதப்பழமோ
வாங்கித்தின்று கொட்டையை துப்பி
தூரவீசாமல் பத்திரப்படுத்தி
காயவைத்து பொடி செய்து
தேனில் குழைத்து சாப்பிட்டால்
அவ்வையைப்போல அதிகநாட்கள் வாழலாம்
.
அவ்வைக்கு கிடைத்த அதியமான்
எனக்கும் கிடைக்காமலா போய்விடுவான்?

Tuesday, February 23, 2016

புதுமைப்பித்தன்


உலக சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில்
 நம் புதுமைப்பித்தன் தவிர்க்கமுடியாதவர் என்பது
அன்றும் இன்றும் என் அபிப்பிராயம். அவர் தழுவல் சிறுகதைகளுக்கு
எதிராக உரக்க குரல் கொடுத்தவர். ஆனால் அவருடைய 'புதிய ஒளி'
தொகுப்பில் 5 சிறுகதைகள் மாப்பசான் கதைகளின் தழுவல்தான்
என்பது ஆதாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
இதெல்லாம் பு.பி. எனும் பிரம்மராக்ஷஷ் மீது எனக்கிருக்கும் மரியாதையை,
மயக்கத்தை  குறைத்துவிடவில்லை! (புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஷ்
எழுத்தாளர் ராஜ்கவுதமன் எழுதியிருக்கும் புத்தகம்)

புதுமைப்பித்தனிடம் மணிக்கொடி காலத்தில் சிறந்த 10 சிறுகதைகளைத்
தேர்வு செய்து புத்தகம் வெளியிடலாம் என்று சொன்னார்கள்.
அவர் உடனே தன்னுடைய 10 சிறுகதைகள் தான் அப்புத்தகத்தில்
இடம் பெறும் தகுதி பெற்றவை என்று சொன்னதாக ஒரு செய்தியை
அடிக்கடி எங்கள் பல்கலை கழக வளாகத்தில் பேசுவோம்.
எனக்கென்னவோ புதுமைப்பித்தனின் இந்த அசாத்தியமான
தன்னம்பிக்கை, (திமிர்...?!) ஆளுமை ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

Saturday, February 20, 2016

நீங்கள் தேசத்துரோகியா..?



நீங்கள் மனுவிரோதியா?
பரவாயில்லை.
நீங்கள் நாத்திகவாதியா..?
அதனால் என்ன? இந்துமதம் நாத்திக வாதத்தை
ஏற்றுக்கொள்கிறது என்று இந்துமத காவலர்கள்
அடிக்கடி சொல்கிறார்கள்.
அதனால் பாதகமில்லை.
நீங்கள் பெரியாரிஷ்டா..?
ஒகே ஓகே..
ஸ்ரீ இராமனுஜம் நமஹ.
நீங்கள் அம்பேத்கர்வாதியா?
ஓ அதனால் என்ன? பேஷ் பேஷ்..
கடவுள் முன்னால் அனைவரும் சமம்.
ஒன்றும் பிரச்சனை இல்லை.
நீங்கள் மார்க்சியவாதியா..?
அப்படினா என்னனு கேட்டு வைக்காதிங்க.
ப்ளீஸ்.. என் தோழர்கள் அனைவரும்
தங்களை மார்க்சிஸ்ட் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு அவர்கள் ரொம்பவும் முக்கியம்.
அவர்களிடம் என்றாவது தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் விடுமுறை
இருந்தால் பேசிப்பாருங்கள்.
அற்புதமாக விளக்கம் தருவார்கள்.
எனக்கு அவ்வளவு நேரமில்லை.
சரி.. இப்படி நீங்கள் யாராக இருந்தாலும்
எதைப் பற்றி எவரைப் பற்றி விமர்சித்தாலும்
நீங்கள் தேசத்துரோகிப் பட்டியலில் வரமாட்டீர்கள்.
நீங்கள் மோடியை விமர்சிக்கலாம்.
சங் பரிவாரை விமர்சிக்கலாம்.
பிஜேபி அரசியல் கட்சியை விமர்சிக்கலாம்.
அதிமுக - ஜெ , மகாமகம் இப்படி எதைப் பற்றி
வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
சுபாஷ் சந்திரபோஷ் விமான விபத்தில் இறந்துப்போனாரா
அல்லது
ரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தாரா?
இது சம்பந்தமான ஆவணங்களைத் தேடி அலைந்து
எந்தமாதிரியான முடிவுக்கும் நீங்கள் வரலாம்.
அத்ற்கெல்லாம் உங்களுக்கு உரிமை உண்டு.
காஷ்மீர் பிரச்சனையில் அருந்ததிராய் மாதிரி பேசலாம்.
அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.
ஆனால்...
இந்திய திருநாட்டில் ..
சமூகத்தில் தாழ்த்தப்பட்டவன்/பிற்படுத்தப்பட்டவன்/ ஆதிவாசி
இவர்கள் எவரும் இசுலாமியர்களுடன்  சேர்ந்து குரல்
கொடுத்தால் அவன் "தேசத்துரோகி".
இந்தக் கூட்டணி எப்போதும் கூடாது என்பதில்
இந்துத்துவவாதிகள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிதான் இந்துத்துவவாதிகள் மகாத்மா காந்தியுடன்
கை குலுக்கும் இடம்.
ஆட்சி, அதிகாரம் , நாற்காலி இத்தியாதி எதற்காகவும்
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள்
சமரசம் செய்து கொள்ளவே மாட்டார்கள்.
அகில இந்திய அளவில் பிஜேபி தோற்றுப்போன
மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக
கவனித்தால் இன்னும் சில அல்ஜீப்ரா கணக்குகளுக்கு
விடை கிடைக்கும்.



Sunday, February 14, 2016

கூடா நட்பும் கூடும் நட்பும்


தாங்கலடா சாமீ..
மதிப்பிற்குரிய தலைவர்மார்களே...
நீங்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும்
கூடுங்க்ள்.. ஆனால் கூடுவதற்கும் கூடாமல் இருப்பதற்கும்
எதாவது காரணங்கள் மட்டும் சொல்லாதீர்கள்.
தாங்கலடா சாமீ..

எ.கா. விளக்கவுரை.:

2014 ஏப்ரல் மாதம் காங்கிரசு தலைமையிலான மத்திய அரசிலிருந்து
திமுக விலகிய போது கலைஞர் சொன்னார்:
காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில்
திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும்
பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம்
மத்திய அமைச்சரவை யிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும்  விலகிக்கொண்டது. >

அப்போது அது கூடா நட்பு.
இப்போது கூடும் நட்பாகி இருக்கிறது.

தமிழினத்திற்கு இப்போது நன்மைகள் கோடிகோடியாக வந்துவிட்டதாலும்
அதுவும் காங்கிரசால் மட்டுமே வரமுடியும் என்பதாலும்
கூடா நட்பு கூடுகிறது.
என்று சொல்லப்படும் காரணம்...

எரிகிறது .. மேன் இன் இந்தியா..



* வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் எவ்வளவு முதலீடு
கொண்டுவந்தீர்கள்?

*நீங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் முதலீடை
வைத்து உங்கள் வெளிநாட்டு பயண்ச்செலவைக் கூட
ஈடு செய்ய முடியாது.

*ஜெய்தாபூர் அணுமின் திட்டம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின்
வாழ்வாதாரத்தை பாதித்துவிட்டது.

*பால்கர் துறைமுகத்தில் அன்னிய முதலீட்டை புகுத்தினால்,
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இன்று மாலை மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா மேடை
தீ பற்றி எரிந்தது. கலை நிகழ்ச்சி நடைபெறும் போது மேடையின்
அடியிலிருந்து தீ பரவியது. மராட்டிய முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ்
முதல் பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சம் வரை .. பிரபலங்கள்
அமர்ந்திருந்தார்கள். தீ விபத்தால் எவருக்கும் ஆபத்தில்லை என்பது
முக்கியமான செய்தி. அதைவிட முக்கியமான செய்தி..
இநத விழாவைக் குறித்து சாம்னா பத்திரிகையில்
சிவசேனா வைத்திருக்கும்  மேற்கண்ட  விமர்சனம்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் அழித்து பெருக்கும் முதலீடுக்கு
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வைத்திருக்கும் பெயர்
வளர்ச்சி..!

சனிக்கிழமை மேக் இன் இந்தியா வாரவிழாவை மும்பையில்
துவக்கி வைத்துவிட்டு சென்றிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி
இதுவரை சென்றிருக்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், அதற்கான
செலவு, வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் முதலீடு, அந்த முதலீடுகளின்
மூலமும் பாதிப்புகளும்.. இதெல்லாம்.. வெறும் கணக்கு விவகாரம்
மட்டுமல்ல..நம்  தலைவிதியைக் கிறுக்கும் புள்ளிகள்.

Thursday, February 11, 2016

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை



பகலெல்லாம் குலைத்து குலைத்து
தொண்டை வற்றிப்போன நாய்கள்
சில இரவுகளில் தூங்குவதுண்டு.

வெளிச்சத்தில் சில நாய்கள்
ஒன்றை ஒன்று கடித்து குதறினாலும்
இருட்டில் கலவிக்குப் பிறகுதான் தூங்குகின்றன.

அயலவனைக் கண்டால் குரைக்கின்ற நாய்கள்
அபூர்வமாகிவிட்டன.
டைகர் பிஸ்கோத்துகளை பொறுக்கித்தின்னும் நாய்கள்
வீட்டுக்கதவுகளைத் திறந்துவிடுகின்றன

சில நாய்கள்
பிரியாணி பொட்டலத்தின் எலும்புத்துண்டுகளுக்காக
நட்சத்திர விழாக்களில்
மேடை ஏறுகின்றன.

அடிக்கடி எஜ்மானனை மாற்றிக்கொள்ளும்
நாய்களுக்கு
நன்றி என்பது அயல்மொழி ஆகிவிட்டது..

ஓநாய்களின் இரத்தவாடையுடன்
வாலாட்டுகின்றன் நாய்கள்.

நாய்கள் ஜாக்கிரதை என்பது எப்போதுமே
நாய்களுக்கு அல்ல.
நமக்குத்தான்.

Wednesday, February 3, 2016

அண்ணாவும் எம் ஜி ஆரும்


அண்ணாவின் நினைவுகள்
-----------------------------------------



திமுக ஆட்சிக்கு வரவில்லை. அதிமுக பிறக்கவில்லை.
எம் ஜி ஆர் அக்காலக்கட்டத்தில் திமுகவில் முக்கியமானவர்.
அப்போது திரைப்படத்துறையினர் மெரினா கடற்கரையில்
கண்டனக்கூட்டம் நடத்தினார்கள். இன்றைய டிஜிட்டல் யுகம்
அல்ல. காமிராவில் ப்ஃலிம் சுருள்களை மாட்டித்தான்
படங்கள் எடுக்கப்பட்டன. சினிமா எடுப்பதற்கான கச்சா
ப்ஃலிம் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை
என்பதால் அரசு திரைப்படங்களுக்கு ஒதுக்கும் ப்ஃலிம்
அளவுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை எதிர்த்து தான்
திரைப்பட துறையினர் மாபெரும் கண்டனக்கூட்டம்
நடத்தினார்கள். அக்கூட்டத்தில் இறுதியாகப் பேசிய
எம் ஜி ஆர் "அரசியல் கட்சி எதுவும் நமக்காக வாதாடவில்லை,
கண்டனக்குரலை எழுப்பவில்லை. நான் சார்ந்த திராவிட
முன்னேற்ற கழகமும் இதில் கொஞ்சமும் அக்கறை
காட்டவில்லை" என்றார்.

திமுக வில் எம் ஜி ஆரின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
அண்ணாவிடம் அரங்கண்ணல் போன்றவர்கள் இதைப் பற்றி
பேசினார்கள். அண்ணாவை அறிக்கை வெளியிடவும்
வற்புறுத்தினார்கள். அண்ணா மறுத்துவிட்டார்.

"பேசியது எம் ஜி ஆர். அறிக்கை வெளியிடுவது நானா?
என்ன இது வேடிக்கையாக இருக்கிறது! எம் ஜி ஆரை ஆதரித்து
அறிக்கை விடுவதா? கண்டித்து அறிக்கை விடுவதா? இரண்டும்
தவறாகிவிடுமே! கொஞ்சம் பொறு, காலம் கனியும்" என்று
பதில் சொன்னார்.

அண்ணாவுக்கு விளக்கம் சொல்ல எம் ஜி ஆரே நேரில் வந்தார்.
அப்போது அண்ணா மாடியில் எழுதிக்கொண்டிருந்தார். மாலை 7
மணிக்கு வந்தவர் இரவு 10 மணி வரை அண்ணா எழுதி முடித்து
கீழெ இறங்கி வரும் வரை காத்திருந்து விளக்கம் சொன்னார்.

"தவறுதான் அண்ணா. உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன்"
என்றார்.

அதற்கு அண்ணா.. "உணர்ச்சி வேகம் இருக்கட்டும், பிரச்சனையை
முதலில் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
திரைத்துறையினர் யாராவது என்னிடம் பேசினீர்களா?
அல்லது திமுக வின் ஆதரவு கேட்டீர்களா? அப்படி இருக்க
எப்படி உங்களை ஆதரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?
கழகம் ஆதரித்தால் அதற்காகவே ஏறுமாறாக நடவடிக்கை
எடுக்க கூடியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்........
இந்த அண்ணாதுரை மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால்
காமராசர் உதவி இருப்பார்.அதையும் இவர் கெடுத்தார்!
என்று பேசக்கூடியவர்கள் உங்கள் தரப்பில் சிலர்
இருக்கிறார்கள் அல்லவா?"

"ஆம் அண்ணா, தவறு என்னுடையது தான்.."

"சரி.. நீங்களே ஓரு அறிக்கை வெளியிட்டுவிடுங்கள்.."

அண்ணா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

மேற்குறித்த சம்பவத்தை ஒவ்வொருவரும்
கூட்டி குறைத்து பேசியதை நானறிவேன்.

அண்ணா குறித்த பல்வேறு நினைவலைகள்..
ஊடாடுகின்றன.
அண்ணா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
என்ற ஓர்மையுடன் அண்ணா என்ற  ஆளுமையை
கொண்டாடுகிறேன்.


Saturday, January 30, 2016

தேசப்பிதாவும் ஒரு தமிழனும்

டியர் தேசப்பிதாவே...

Ahmedabad, January 15, 1916 _ Gandhi's letter to VOC, whose draft reply is seen below Gandhi's signature.

உங்கள் நினைவு நாளில் உங்களைப் போற்றவில்லை என்றால்
நான் தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்படலாம்.
எனவே..
போற்றி போற்றி
தேசப்பிதாவைப் போற்றி
போற்றி போற்றி
மகாத்மாவைப் போற்றி..
போற்றி போற்றி
எப்போதும் லேட்டாகவே
விழித்துக்கொள்ளும்
மகாத்மாவின் உள்ளுணர்வைப் போற்றி..
போற்றி போற்றி போற்றி..
வாழ்க தேசப்பிதா.

இதெல்லாம் இருக்கட்டும்.
ரூ 394 & 12 அணா தொகை
தென்னாப்பிரிகாவில் வாழும் தமிழர்
கப்பலோட்டிய வ உ சிக்கு திரட்டிய நிதி..
வாங்கி வந்த நீங்கள்
வ உ சி கேட்காமலேயே அவருக்குத் திரட்டிய தொகையை
கொடுத்திருக்க வேண்டும்.
அல்லது நீங்கள் சென்னை வந்திருந்தப்போது
1915 மே மாதத்தில் வ உ சி உங்களைச் சந்திக்க வந்திருந்தப்போதே
எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால்.. நீங்களோ.. 6 மாத காலம் எடுத்துக் கொண்டீர்கள்.
அதுவும் வ உ சி பலமுறை கெஞ்சியும்
பணம் பெறுவதற்கான உரிமையைக் கோரியும்
நீங்கள் காலம் தாழ்த்தினீர்கள்.
வாங்கி வந்த தொகை எவ்வளவு என்று தெரியாது
என்று சொன்னீர்கள்.
தென்னாப்பிரிகாவிலிருந்து அவர்கள் ரசீதுகள்/கணக்கு ஏடு
அனுப்பும் வரை காத்திருக்க வைத்தீர்கள்..

சரி.. எபபடியோ..
ரூ 394,& 2 அணாவை
நீங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள்!
அதற்காகவே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

நீங்கள் கணக்கு விஷயத்தில் இவ்வளவு கறாராக
இருந்தது சரிதான். ஆனால் அத்தொகை உங்களிடம் சிலகாலம்
இருந்ததால், அதற்குரிய வட்டிப்பணத்துடன் நீங்கள் திருப்பிக்
கொடுத்திருந்தால் .. இன்னும் கூட இரண்டு போற்றி போற்றி
கூடுதலாகப் போட்டிருப்பேன்.

அது எப்படி.. உங்கள் சத்தியசோதனையில்
இந்தக் கணக்கு மட்டும் கழிக்கப்பட்டது?

மகாத்மாஜி..
உங்களுடன் உங்கள் பரிவாரத்தில் இருந்த
கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதுதான்
இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது.
"To keep Gandhiji in Poverty , the congress party has to spend
millions of rupees"

நன்றி: வ உ சிக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பதிப்பித்து
உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆ.இரா.வேங்கடாசலபதி
அவர்களுக்கு..



Tuesday, January 19, 2016

நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி..




அவன் தற்கொலைக்கு நாமும் தான் காரணம்

அவனுக்காக கண்ணீர் வடிக்கும் உங்கள்
கண்ணீரின் ஈரம் வற்றிவிடுவதற்குள்
என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்கள்
பதில் சொல்வது
உங்களுக்குப் பழக்கமல்ல என்றால்
உங்கள் மனசாட்சியிடம்
இக்கேள்விகளை விட்டுவிடுங்கள்.
அவன் தற்கொலைக்கு அவன் மட்டுமா காரணம்?
நீங்களும் தானே.
சாதி வன் கொடுமைகள், இம்மாதிரி அதிர்ச்சி தரும்
தற்கொலைகள் நடந்தால் மட்டுமே
கண்ணீர் சிந்தும் உங்களின் கருணை உள்ளம
உங்களை சாதிக்கொடுமைக்கு எதிரானவராக
காட்டும் தூரிகையாக இருக்கிறதே தவிர
இன்றுவரை நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
எதை / எவரை எல்லாம் கொண்டாடுகிறீர்கள்?

இதோ பாருங்கள்,,,

நம் எல்லோருக்குமே இரு அடையாளங்கள் இருக்கின்றன.
ஒன்று இன அடையாளம், இன்னொன்று சாதி அடையாளம்.
இது தவிர்க்கமுடியாத யதார்த்தம்.
சமூக நெருக்கடிகள் ஏற்படும்போது இரு அடையாளங்களும்
எதிரெதிராக .அம்மாதிரி சந்தர்ப்பங்களில் நாம் எப்படி
நடந்து கொள்கிறோம்?
சாதிக்கொடுமையைச் செய்தவர் நம் சொந்த சாதிக்காரன் என்றால்
அவனைக் க்ண்டித்த கலைஞன்/ எழுத்தாளன் யார்?
நிகழ்காலத்தில் சாதிகள் ஒன்றையொன்று மனிதாபிமானமில்லாமல்
தாக்கிக்கொண்டிருக்கும் போது
சங்ககாலத்தின் வீரத்தையும் காதலையும் பேசி, ஜல்லிக்கட்டில்
நம் பண்பாடு புதைந்திருப்பதாக வெத்துக்கூப்பாடு போடும்
கூட்டத்தை/ உரத்துப் பேசும் தலைவர்களை வளர்த்துக்
கொண்டிருக்கிறோம்.
இதோ இந்த ம்ரணத்திற்காகவும் ராகுல்காந்தி முதல்
டில்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் வரை
கண்டண அறிக்கைகளை வெளியிடலாம்
இந்த அரசியல் நமக்குப் புதிதல்ல.
ஏனேனில் கண்டன அறிக்கையில் சொல்லப்படும்
எதையும் செயல்படுத்தும் திட்டம்
இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும்/தலைவருக்கும் இல்லை.

*

ரோஹித்.. உன் தற்கொலைக்கு நீ மட்டும் காரணமல்ல.
எனக்குத் தெரியும்.. ஒடுக்கப்பட்ட மக்களின் இறையாண்மையை
மதிக்காத ஒவ்வொரு இந்தியனும் உன் தற்கொலைக்கு
காரணமானவர்கள்.

*

உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய்
விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள்
எவை வரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற
முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும்
உங்களையே சாரும்.

நமது உரிமைக்ளுக்காக நாம் நமது சொந்தக் கால்களில்
நின்றுதான் போராட வேண்டும். எனவே, உங்கள்
ஆற்றலனைத்தையும் திரட்டித் தொடர்ந்து போராடுங்கள்.
போராட்டத்தின் வாயிலாகவே அதிகாரமும் பெருமிதமும்
உங்களை வந்தடையும்...
- டாக்டர் அம்பேத்கர்
(1931, ஆக 14ல் வட்டமேசை மாநாட்டுக்கு
இலண்டனுக்குப் புறபப்டுவதற்கு முந்திய நாள் அவருக்கு
ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில் பேசியது)

**

my BIRTH IS MY FATAL ACCIDENT ??????????????????????????

**

ROHIT'S SUICIDE NOTE: :

காலை வணக்கம்!

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி விட்டதாகவும் உணர்கிறேன்.  நான் ஒரு எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல் ஒரு அறிவியல் எழுத்தாளராக… இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது.

எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை அத்தனையும் பிடிக்கும். மக்களையும்…. அவர்கள் இயற்கையிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டார்கள் என்பது புரியாத போதும். நமது உணர்வுகள் இரண்டாம் பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமாகவே மதிக்கப்படுகிறது.

ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஒரு அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு ஓட்டாக, ஒரு நம்பராக… கல்வி பயிலும் இடம், தெருக்கள், அரசியல் எங்கும் யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட…. ஒருபோதும் நட்சத்திர துகள்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒளி படைத்த மனிதனாக அவனை நடத்துவதில்லை. காயப்படாமல் அன்பு செலுத்துவதென்பது கடினமாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு கடிதத்தை இப்போதுதான் நான் முதன்முறையாக எழுதுகிறேன். இதுவே கடைசியாகவும் அமைந்து விட்டது. எனது கருத்துகள் அர்த்தமற்றதாக இருந்தால் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

என்னுடைய பிறப்பு மோசமான ஒரு விபத்து, என்னுடைய குழந்தைப்பருவ தனிமையிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை. நான் யாராலும் பாராட்டப்படாத ஒரு குழந்தை, ஒரு வேளை, இந்த உலகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு அவசரமும் இல்லை. ஆனால் நான் எப்போதும் அவசரகதியிலேயே இருந்தேன்.

இந்தநொடி நான் காயமடைந்தவனில்லை. நான் சோகமாக இல்லை. வெறுமையாக இருக்கிறேன். என்னைப் பற்றிய அக்கறை சிறுதும் அற்றவனாக இருக்கும் இந்தநிலை மிகவும் பரிதாபகரமானது. அதனால்தான் நான் இதைச் செய்கிறேன்.

மக்கள் என்னை கோழை என்று அழைக்கலாம். சுயநலக்காரன் மற்றும் முட்டாள் என்று கூட. ஆனால், நான் போன பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொல்வது குறித்து எனக்கென்ன அக்கறை?. இறப்புக்கு பிறகான கதைகள், பேய்கள் அல்லது ஆவிகள் குறித்தெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவற்றின் மூலம் நட்சத்திரங்களுக்கு பயணித்து வேறு உலகங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என நம்புகிறேன்.

இந்தக் கடிதத்தை படிக்கும் உங்களில் யாராவது, எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால், ஒரு சிறிய வேண்டுகோள்.

எனக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஏழு மாதங்களாக வர வேண்டிய கல்வி உதவித் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளது. அந்தத்தொகை எனது குடும்பத்தாருக்கு கிடைக்க வழிசெய்யுங்கள். என் நண்பன் ராம்ஜிக்கு நான் 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவன் அதை திருப்பிக் கேட்கக் கூடியவன் இல்லைதான். இருந்தாலும், தயவு செய்து அவனுக்கு அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

என்னுடைய இறுதிஊர்வலம் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் இருக்கட்டும். நான் தென்றலைப் போல வந்து தென்றலைப் போல போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். உயிரோடு இருப்பதை விட சாவதே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

“ நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி”

உமா அண்ணா, உன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொண்டதற்காக என்னை மன்னித்துக் கொள்.

அம்பேத்கர் மாணவர் பேரவை குடும்பத்தினருக்கு,

உங்களை எல்லாம் ஏமாற்றியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது தீவிரமான அன்பு செலுத்தினீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

கடைசி முறையாக, ஜெய்பீம், அம்பேத்கர் வாழ்க!

(இதுபோன்ற தற்கொலைக்கடிதங்களில்) வழக்கமாக எழுதும் ஒன்றை நான் மறந்து விட்டேன்…!

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமல்ல. தங்களது செயலாலோ வார்த்தைகளாலோ என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு, இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு என்னுடைய நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள். எதிரிகளையும்…

Tuesday, January 12, 2016

MONOPOLY ராஜ்யங்கள்


அரசியலில் எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாவிடாலும் திமுக தான்
ப்ரதான எதிர்கட்சி போல ஒரு தோற்றம். அவர்களிடன் ஊடக எதேச்சதிகார
வல்லமை இருப்பதால் தான் இத்தோற்றத்தை தொடர்ந்து தக்கவைத்துக்
கொள்வது சாத்தியமாகிறது. இதை எந்த புதிய ஊடகக் கொம்பனும்
கண்டுகொள்வதில்லை! என்ற உண்மை குறிப்பிட்ட அக்கட்சியின்
அதிகார எல்லையின் சாம்ராஜ்ய வலிமை.
அரசியல் எதேச்சதிகாரம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இல்லையா என்று
கேட்டால் 'இருக்கிறது' இன்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தகுதி நிர்ணயித்ததன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை எப்போதுமே ஆளப்படும் வர்க்கமாக வைத்திருக்கும் அரியானா
போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர்கள்,
ஆதிக்கச்சாதி எதேச்சதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால்,
தமிழகத்தில் மட்டும் தான், எட்டுக் கைகளுடன் அவதாரம் எடுத்து
எட்டுத் திசைகளிலும் தன் அதிகாரத்தை நிறுவி அதன் மூலம் ஒரு
மோனோபோலி ராஜ்யத்தை உருவாக்கி அரசாண்டு கொண்டிருக்கிறது.

கலை, இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி , கருத்தரங்கம் என்று
தமிழ்நாட்டின் அறிவுஜீவிகள் சங்கமிக்கும் தளத்தில் ' தமிழ், தமிழினக்
காவலர்" என்ற அடையாளங்களை வலிமையாக முன்னிறுத்தியும்
இந்த அடையாளங்களை எப்போதும் கூவிக்கொண்டிருக்கும்
பைங்கிளிகளை வளர்த்து பறப்பது போல நூல் கட்டி பறக்க
விட்டிருப்பதும் இந்த ராஜாங்கத்தின் வெற்றி.
சமூக விடுதலை என்று பேசும் போதெல்லாம் "பெரியாரின் வாரிசுகள்"
என்ற பொய்யான முகம்.. எப்போதாவது அந்த வேஷமும் இவர்களின்
நாடக மேடைகளில். அப்போதெல்லாம் கோமாளி கள் போல
இவர்கள் காட்சி அளிக்கிறார்கள். இருந்தாலும் 'நிறுத்துடா உன்
கோமாளித்தனத்தை' என்று நெஞ்சுத்திராணியுடன் சொல்ல
ஒரு அசல் கருப்புச்சட்டைக்காரன்  தமிழ் மண்ணில் இல்லை.
கவிப்பேரரசு வகையாறாக்களை உருவாக்கி 24 x 7  அதீத சுயமோக
மனநோய்ப்பிடித்து சீழ்ப்பிடித்து வடிகிறது இந்த ராஜாங்கம்
உருவாக்கி இருக்கும் நம் சமூகம்.
இதை எல்லாம் கேள்வி கேட்பதாக தன்னைக் காட்டிக்கொள்ளும்
அதி நவீன இலக்கியத்தோட்டத்தின் ஒட்டு மொத்தக் குத்தகைக் காரர்கள்
கண்ணுக்குத் தெரியாத இன்னொரு சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறார்கள்.
அவர்கள் நடத்தும் இலக்கிய இதழ்களில் கவிதை கதை வெளிவந்தால் மட்டுமே கவிஞர் அந்தஸ்த்து உலக அரங்கில் கிடைக்கும் என்ற
மோனோபோலி. அதிலும் குறிப்பாக சமூக பிரக்ஞையற்ற, ஹார்மோன்
பிரச்சனைகளில் அவஸ்தைக்குள்ளாகும் முலை யோனிகள் மட்டுமே
அந்த ராஜாங்கத்தின் பெண்ணிய முத்திரைகள். எதிரணியில் இருக்கும்
பைங்கிளிகள் கூட அத்தோட்டத்தில் பறந்த வந்தப்பிறகுதான்
தனக்கான பச்சை நிறச்சிறக்குகளை பெற்றன என்பது இந்த ராஜாங்கத்தின் பெருமையும் தனிச்சிறப்பும்! இவர்களின் பதிப்பகத்தின் மூலம் புத்தகம் வெளீவந்தால் தான் இலக்கிய அந்தஸ்த்து கிடைக்கும் என்ற பம்மாத்து
இந்த கண்ணுக்குத் தெரியாத ராஜாங்கத்தின் கதவுகள் இரும்பை விட
வலிமையானவை. இதன் காவலர்கள்  ஆயுதம் ஏந்துவதில்லை என்றாலும்
எந்தப் புரட்சிக்காரனையும் மடக்கிப்போட்டும் மடக்க முடியாதவனை
கள்ள மவுனத்தில் கடந்து சென்று இல்லாமல் ஆக்கிவிடும் புதிய போர்முறைக்கு சொந்தக்காரர்கள். 
இந்த இரு ராஜாங்கமும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல தோற்றமளிக்கலாம். ஆனால் இவர்களுக்குள் ஓர் புரிந்துணர்வு
இருக்கிறது. கப்பம் கட்டாத புரிந்துணர்வு. வியாபார உத்திக்காக
தேவைப்பட்டால் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து ரத்தம் வரும்
காட்சிகள் கூட அரங்கேறும்.  ஆனால் இந்த இரு இராஜாங்கத்தின்
காவலர்கள் தான் பொது ஜனங்களின் பொதுப்புத்தியில் அபிப்பிராயங்களை
கருத்துகளை உருவாக்குகிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் தான்
அறிவுஜீவிகளின் மண்டை ஓட்டிலிருந்து ஒளிவட்டமாக சுழன்று
கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த எதேச்சத்கார ராஜாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில்
தீவிரமாக செயல்பட்ட  'கவிதாசரண்' போன்றவர்கள் இன்று காணாமல்
போய்விட்டார்கள். இன்னும் சிலர், அதள பாதாளம் வரைக்கும்
பாய்ந்திருக்கும் இவர்களின் அதிகாரத்தின் முன்னால் துவண்டு போய்
ஒதுங்கிவிட்டார்கள்.
இதோ... இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கள் இரவுகளும்
இரவுகளுக்குத் துணையாக சன்னல் ஆகாயத்தில் 
துணைநிற்கும் நட்சத்திரவெளியும்.


Tuesday, January 5, 2016

பதன்கோட் தாக்குதல் .. இந்திய உளவுத்துறையின் தோல்வி


பதன்கோட் தாக்கப்பட்டிருப்பது கவலை தரும் செய்தி.
பதன்கோட் சதாரண விமானப்படை தளம் மட்டுமல்ல.
அத்தளத்திற்கு சில சிறப்பம்சங்கள் உண்டு.
* பாகிஸ்தானின் தாக்கினால் அதை எதிர்கொள்ள இந்திய
இராணுவம் உருவாக்கிய முதல் சிறப்பு விமானப்படைத்தளம்.
*108 Squadron Hawkeyes that fly the MiG-21 fighters and also the 125 Helicopter Unit Gladiators.
*தேவைப்பட்டால் பாகிஸ்தான் பகுதியைத் தாக்கும் மிக் போர்விமானங்கள் எப்போதும்
தயார் நிலையில் இருப்பதும் இத்தளத்தில் தான்.
*இந்திய-பாகிஸ்தான் போர் நடந்தப்போதெல்லாம் முதல் தாக்குதலுக்குள்ளாகும் முக்கியமான போர்த்தளம் இது
.
கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட தளத்திற்கு இந்திய இராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவ முடிகிறது என்பதும், தாக்குதல் நடத்த முடிகிறது என்பதும்
கவலைப்பட வேண்டிய செய்தி.
"நேற்றுவரை பாகிஸ்தான்நமக்கு எதிராக எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்து
நாம் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கூச்சலிடுவோம்.
விவாதம் செய்வோம். அவ்வளவுதான். அதன் பின் வழக்கம்போல அடுத்த ப்ரேக்
நியூஸ் .. வெட்ககேடு.. " என்று கொந்தளிக்கிறார் மேஜர் ஜெனரல் சட்பீர் சிங் (ஓய்வு).
நம் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? உளவுத்துறையின் தோல்வி இது
என்று தன் கருத்தை வைக்கிறார் அவர்.
"இது தீவிரவாதிகளின் தாக்குதல் அல்ல
.ஐ எஸ் ஐ த திட்டமிட்டு நடத்திய தாக்குதல்.
தீவிரவாதிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் நம்மீது நடத்திய யுத்தம் ."என்கிறார்
இராணுவ அறிவியல் ஆய்வு செய்யும் அசோக் கே பெகுரியா .
இது ஒன்றும் எதிர்பாராமல் நடந்த தாக்குதல் அல்ல. எப்போது நம் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் லாகூரில் இறங்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாரோ அப்போதே
இதற்கான ஒத்திகையும் காட்சிகளும் எழுதப்பட்டு விட்டன.
எப்போதெல்லாம் பாகிஸ்தான் ஆட்சியில் இருப்பவர் இந்தியாவுடன்
நல்லுறவு கொள்ள விரும்புவதாக தெரிந்தால் கூட போதும்..
பாகிஸ்தானின் இராணுவமும் உளவுத்துறையான ஐ எஸ் ஐ யும் இப்படி எதையாவது செய்து எல்லா கதவுகளையும் மூடிவிடும்..
சொல்லப்போனால்,
இந்திய பாகிஸ்தான் உறவு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்களொ அவர்களின் ஆட்சியோ தீர்மானிக்கும் விஷயமட்டும் அல்ல.
அதற்கும் மேலே.