Saturday, January 30, 2010

என் பசி




என் பசி
----------------> மராத்திய மொழிக்கவிதை


ஒத்துக்கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை.

உணர்ந்து கொண்டேன்
இழந்துப்போன
என் உரிமைகளை.

நானே வலிய வந்து
ஏற்றுக்கொண்டு விட்டேன்
-என் சுதந்திரம்
பறிக்கப்பட்டதை-

என்னைக் கட்டிப்போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய்
என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக்
காட்சிப்பொருளாக்கும்
கண்காட்சிகளை
என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.

என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்


கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?

---- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan)
கவிதை நூல் "தத்புருஷ் " ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின்
தமிழாக்கம்.)

Monday, January 18, 2010

மராத்தி எழுத்தாளர் அர்ஜூன் டாங்ளேயுடன் நேர்காணல்




கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிடாது
-----------------------------------------------------------------------------
(நன்றி: புதுவிசை - டிச 2009)

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் ( தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:

Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )

Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... - சிறுகதைகள்

Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்

Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு

அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித்ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:

A Corpse In The Well : (translations From Modern Marathi Dalit Autobiographies) 1992

No Entry For The New Sun: Translations From Modern Marathi Dalit Poetry

Homeless In My Land: Translations From Modern Marathi Dalit Short Stories

Poisoned Bread: Translations From Modern Marathi Dalit Literature

மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.

1.

உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில்உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.

அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என்இளமைக்காலம்.

ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானேநிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?

இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்ப தாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன் பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின்அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்துஅவர் நடத்திய பேரணியிலும், கருப்புச்சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும்இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.

இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழிமாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்ட சபை உறுப்பினர்களும் 7 நாடாளுமன்றஉறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின்பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டுகருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர்வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும்இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப்படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டேபோன்றவர்கள் லெனின் எழு திய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விருஇயக்கத்தாரும் கட் டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்றுநீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?

உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும்உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலா ளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக் கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வைரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்துகொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.

இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?

அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத் தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமைகடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற் கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால்கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன்தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம்காப்பாற்றப் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட் டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன்.களப்பணியிலும் சாலைப்போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில்கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங் களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்னஇருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார் கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டுமனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட் டும் காந்தியாகட்டும்இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில்மிதிபட்டுவிட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருத லாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. லோக்கல்டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதிவாழ்ந்து கொண்டு தானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தா லும்அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமை யில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள்இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும்காரணங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அடிமட்ட நிலை யில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பைபோன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்னபோது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற் கான முகம் மாறாமல் அப்படியேவாழ்ந்துகொண்டிருப் பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தைமறைத்துக்கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழ வேண்டியஅவசியம் என்ன?

காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங் களையும்நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணி களில் களப்போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும்யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில்சாதிச் சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு ணர்வு ஆதிக்கச்சாதியினரைஎரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிகஅதிகமாக சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?

பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும்ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும்பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாகஎண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநி லங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்பு கள்போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.

50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்ததுஅம்பேத்கரின் ஜடியாலஜிதான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டு மல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்குமார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?

அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?

1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்தக் காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட் டங்களைக் கண்டுஅச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி. யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டி யத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன்சேர்ந்து பணியாற் றினார்கள். கலை இலக்கியத் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.

இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?

அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கிய மும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பைஉருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும்இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள்வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.

அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்க லாம் என்று நீங்கள்எப்போதாவது நினைத்தது உண்டா?

ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள்ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல் லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாததூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும்இடத்தில்தான் விட்டுக் கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர் களைஉதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பது உண்டுதான்..நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில்நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகி றோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தை கள் அமைப்பின் அவசியத்தை இன்றும்என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!

ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல் பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ராஅடிப்பவர்கள்தான். இது ஒரு பல கீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப் பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர்சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.

இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச்செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடுசேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக் கொள்வதாக தலித்இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும்ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத் தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக்கொள்கைகளை மறந்து விட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்தியஅரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையைஉணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கைநாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர் கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்காக காத்திருக்கும்தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடு வதும் இல்லை,இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க் குழாயும் மின்சாரமும் வழங்கும்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணரவேண்டும்.

இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிறஇயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள்என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டியகாலக்கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப் பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்சாத்தியப்படும். அந்த அமைப் பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றி ணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.பாபா சாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.

தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதிசர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?

பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண் டும்சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?

தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை.பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக் டர் லோகியா, ஆச்சார்யஅதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத்தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநிலவாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டாலும் மத்தியஅளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்சஅடிப்படைக் கொள்கைகளின் அடிப்படை யில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங் கிணைக்கும் ஓர் அமைப்புஇன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.

தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம்என்ன நினைக்கிறீர்கள்?

சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒரு சாரார் இந்து தலித்துகள்.ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அம்பேத் கரை இந்து தலித்துகள்ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கி றார்கள். மாத், மதங் என்றுஇங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக்கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்துவிட்டது. இன்று அரசானதுசட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறைசெலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில்முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்தசவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?

இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகி விட்டது.உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. அமெரிக்காவிலிருந்துஅறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது.

ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலக மயமாதல்என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டினால்நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்குதலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்றுபோராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித் துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம்சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசை வாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டகுணம்குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களைஎதிர்கொள்ள முடி யும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கி றதோ என்ற அச்சம் கவலைத்தருகிறது.

தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள்அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?

போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித்அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண் களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள்கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டுபிள்ளைகளை வன்கொடுமைசெய்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படை யில்இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணி யம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்திஇன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.

ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே

பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலை மைக்கு வரவில்லைஎன்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள்அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகபொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.

இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இது வரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ளபெரும்பாலான சிலை கள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத் துறை விளம்பரங்களில்ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலை களை ஆந்திராமுழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள் ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகைபொது மக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள்எல்லாம் மாயாவதியின் சிலை வைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.

மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?

இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோலஅவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalith idealogy.

சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?

சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் வேண்டிக் கேட்டு, கேட்டது கிடைத்து விட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னை யும் தன் கடவுளையும்ஏமாற்றிக்கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில்வெளிக்காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப்படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கானஇடம்..

இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில்டாலராக சம்பாதிக் கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் டாலராக விஷவ இந்துபரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம்தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்து கள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும்என்னையும்போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத் தின்ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங் களின் தனிமனிதவிழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

II

இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டு விட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?

மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபா சாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமைகொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்குகொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சமஉரிமைப்போராட்டக் களத்தில் முன் நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம் கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில்அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்விஅடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும்யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.என் தொகுதியில் இருக்கும்அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்குஅழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமதவேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக் குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும்கவனிக்கத் தவறிவிட் டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு,இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்?எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்,சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள்,தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படி யான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்சாதாரண மனிதனுக்கு ,கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகு மக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.

பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க் கையைகொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால்மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறி வியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத் தத்தில்புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம்பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட் பதும் பவுத்தத்தில் சாத்தியமேஇல்லை. தனிமனிதனை, அவ னது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. இந்தஇடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாகஅமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோமுதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார் கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளையதலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்து கொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசராகொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..

ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர் களின்கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்குவந்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்துயாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை! ( நான்: ஆமாம்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)

ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்திஅசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன.இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பலசமயங்களில் இதனால் தான் நான்அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மதம்அகம்சார்ந்தும் அரசியல் புறம்சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கிஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.

எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதா?

இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.

பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும்துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?

எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக் காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ் வியல்தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.

நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானேஅழைக்கிறார்கள்?

50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக் கையை,சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயேஎல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்றகயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலைஎங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.

சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக்கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?

புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பைமாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரிய மல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட் பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாகஅதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.

III

தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?

தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்தி லும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கின்றன.

தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?

மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக் கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந் தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க் கம்,கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.

தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும்இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.

தலித் படைப்புகள் ஒரே சாயலில் -ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?

ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும்தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பது தான் உண்மை. புதிய சொல்லாக்கங் களை, பழைய சொற்களுக்குப்புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக் கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித்இலக்கிய சொல் லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!

நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளி வந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும்மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங்கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டசிறுபத்திரிகைகள் நாளடைவில் தனி நபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக்கொண் டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப் , ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்குமகத்தானது.

மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ்மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level)அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான்என் போன்றவர்களின் விருப்பம்.

தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடமிருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?

நான் 1967 களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன்சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப் பணியில் சற்றுகுறைந்திருக்கலாமே தவிர எழுத்துப் பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?

பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்கநான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.

மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?

(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும் , என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுய சரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம்என்ற எண்ணமிருக்கிறது.

***

Wednesday, December 23, 2009

பனைமரம்





ஒற்றைப் பனைமரம்
-------------------

உங்கள் தோட்டத்தில்
பனைமரத்தின் வேர்கள்
அத்து மீறி நுழையவும் இல்லை
ஆசைக் கொண்டு அலையவுமில்லை.

உங்கள் தென்னை மரங்களுக்கு
குழித் தோண்டி
பக்குவம் பார்த்த நீங்கள்
இந்தப் பனைமரத்தின்
மண்ணையும் வளைத்து
வேலிப்போட்டு
தோட்டம் கண்டீர்கள்.!

தனிமரங்கள் தோப்பாகாது
மரங்களுடன் இருப்பதே
இந்த மரத்திற்கும் சிறப்பு
கனவுகளின் மயக்கத்தில்
உங்கள் தோட்டத்தின்
கம்பீர தோற்றத்தில்
உலாவந்தது பனைமரத்தின்
பச்சை நிழல்கள்.

கறுப்பின விடுதலையை
கர்ஜித்து கர்ஜித்து
வைரம் பாய்ந்த கறுப்பு தோள்களுடன்
வலம் வந்தது
பனை மரத்தின் கருக்குகள்.

மரங்கள் அடர்ந்த உங்கள்
தோட்டம்
சோலையானது.
பலருக்கு மாலையானது
எப்போதும் தொடர்ந்தது
மாலைகளுக்கான
மரியாதை அணிவகுப்புகள்.

ஒருவர் நிழலில்
ஒருவர் மயங்கி
ஒருவர் நிழலில்
ஒருவர் ஒதுங்கி
தனக்கென நிழல்களில்லாத
மரங்கள் அடர்ந்த
உங்கள் தோட்டத்தில்
ஒற்றைப் பனைமரத்தின்
நிழல்..
தோட்டத்தின் நிழல்களைத் தாண்டி
விழுவதைக் கண்டு
தீடிரென ஒருநாள்
அதிர்ந்து போனது
உங்கள் தோட்டத்து முள்வேலிகள்.


முகம்மாறிய
உங்கள்
முகம் அறியாமல்
தன் நீண்ட நெடிய நிழல்காட்டி
உங்கள் மேடையில்
நாட்டியமாட நினைத்தது
பனைமரம்.
கறுத்த பனைமரங்களுக்கு
இடமில்லை.
விலக்கி வைத்தது
உங்கள் புதுப்புது விதிகள்.

யாரையோ சந்தோஷப்படுத்த
எப்போதும்
விலக்கி வைக்கப்படுகிறது
பனைமரத்தின் நிழல்.
பனைமரத்தின் மண்ணில்
பத்திரமாய் வளர்ந்தக்கதையை
மறந்து போனது
எல்லா மரங்களும்.
'வெட்டுவது கூட
கிளைகள் வளர்வதற்குத்தான்'
தத்துவம் பேசுகிறது
வாழை.
"எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும்
பொருந்துமானால்
ஏன் பிறக்கிறது
இன்னொரு தத்துவம்?"
கிளைகளே இல்லாத
பனைமரத்தை
வெட்டினால்
எப்படி ஜீவிக்கும்
இந்த ஒற்றைப்பனை.?

கேட்கிறது
தோட்டக்காரனிடம்.
'உன் நிழல்கள்
தோட்டத்திற்குள் மட்டுமே விழவேண்டும்'
ஆணையிடுகிறது
ஆட்சி அதிகாரம்.
உயரமாக இருப்பதும்
கிளைகள் இன்றி
பிறப்பதும்
கறுப்பு பனைகளின் கம்பீரம்.
நிழல்களைச் சுருக்குவதும் விரிப்பதும்
பனைமரங்களின் வசமில்லை.
அரசும் அதிகாரமும்
மாற்ற முடியாத
பிரபஞ்சத்தின் விதியை
கிழக்கில் உதிக்கும் சூரியனிடம்
கேளுங்கள்
சொல்லக்கூடும்-
.இயக்கவாதிகளின்
நிழல்களைக் கூட
கட்டுப்படுத்தும் அதிகாரம்
தன்னிடம் இல்லை என்பதை.

=============================

2 மொட்டைப் பனைமரம்
--------------------------------
செந்நீரைச்
செம்மொழியில் கரைத்து
தெளித்துவிட்டார்கள்.
உப்புக்கரித்தது.

தித்திக்கிறது
என்று
தீர்மானம் போட்டார்கள்
பனைமரத்தையும்
பக்கத்தில் நிறுத்தி.

ஏமாந்து விட்டதையும்
ஏமாற்றிவிட்டதையும்
மறைக்காமல்
ஆகாயத்தை நோக்கி
அலறியது பனை.

கருக்குகளை வெட்டி
பனை ஓலைகளை
எரித்து
ஒற்றைப் பனைமரத்தை
மொட்டைப் பனைமரமாக்கி
நிறுத்திவிட்டார்கள்
ராட்சதக் காற்றாடிகள்
போட்டிப்போடும்
புஞ்சைக்காட்டில்
தன்னந்தனியாக.

இன்னும் விழுந்துவிடவில்லை
மொட்டைப் பனைமரம்.
எப்போதாவது
தோட்டங்களுக்குள்
நுழைவதற்கும்
நிழல்களில் அமர்வதற்கும்
அனுமதி மறுக்கப்பட்ட
கறுப்பு மனிதர்கள்
வரக்கூடும்
மொட்டைப் பனைமரத்தின்
ஒற்றை நிழலில்
ஒதுங்கி இளைபாற.

--------------------------

Sunday, December 13, 2009

தெலுங்கானா ஸீரியலுக்கு அடுத்த ஒளிபரப்பு


தனி மாநிலம் கேட்ட தெலுங்கானாவுக்கு தலையசைத்தாலும் அசைத்தார்கள்
எங்கே பார்த்தாலும் தனிமாநில கோரிக்கைகள்.
இந்தியப் பூகோளப் பாடம் படிக்கிற மாதிரி இருக்கு.
சும்மா சொல்லப்பிடாது நம்ம பக்கத்து வீட்டு சந்திரசேகர ராவ் இருந்த உண்ணாவிரதத்தை.
மனுசர் நிசமாலுமே சாப்பிடாமா இருந்தாருனு சொல்லுதாங்க.
எதுக்கு உடம்பைக் கெடுத்துக்கனும் சொல்லுங்க?
கொஞ்சம் சொல்புத்தி சுயபுத்தி இல்லாட்டாலும் அடுத்தவனைப் பார்த்து நடக்கிற
புத்தியுமா இல்லை. எதுக்காக இப்படி 11 நாளு உண்ணா நோன்பிருக்க வேண்டும?
பக்கத்து மாநிலமான நம்மைப் பார்த்தாவது காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும் அதிரடி உண்ணாவிரத ஸ்டைலைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டாமோ?

டில்லியிலே ரொம்ப குளிருங்க. குளிரில் தலையாட்டினதை நம்ம டில்லிக்காரங்க
தெலுங்கானாவுக்கு சரினு சொல்லிப்பிட்டாங்கனு எழுதப்போக இங்கே பாருங்க
இன்னிக்கு பத்திரிகையிலே வந்திருக்கிற ஏகப்பட்ட தனிமாநில கோரிக்கைகளை.

> நாங்க தான் முதல்ல தனிமாநிலம் கேட்டோம்னு சொல்றாங்க நம்ம கூர்க்கா மக்கள்.
மே.வங்கத்துடன் இருக்கப் பிடிக்கலையாம் அந்த டார்ஜிலிங் கூர்க்கா சனங்களுக்கு.
முதல்ல கேட்ட எங்களுக்கு கொடுக்காமா அது என்ன தெலுங்கானாவுக்குனு
கேட்கிறாங்க.

> எங்க மராத்தி மாநிலம் ( அய்யோ நான் இப்படி எழுதியிருக்கதை மேரா ராஜ்தாக்கரெ மானுஷ்களிடம்
யாராவது போட்டுக் கொடுத்திடாதீங்க அண்ணாச்சீங்களா, எம் பிழைப்புக் கெட்டுப்போயிடும்!)
5 வருடங்களுக்கு முன்பே 'விதர்பா' தனிமாநில கோரிக்கையை வைத்தது. பாவம் அப்படி
வைத்தவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர். யாரும் அவர் சொன்னாருனு
கண்டுக்காமா விட்டுட்டாங்களொ என்னவோ.
இப்போ மீண்டும் 'விதர்பா' வந்திடுச்சி.
ஒரே கூட்டணியிலிருக்கும் சிவசேனா எதிர்ப்பு, பா.ஜனதா ஆதரவு.

> சும்மா சொல்லப்பிடாது எங்க மாயாவதியை. பின்னே என்ன உ.பி எவ்வளவு பெரிய மாநிலம்.
தனி ஆளா தூத்து பெருக்கி துடைக்கிறவங்களுக்குத்தானே கஷ்டம் தெரியும்.
அவுங்களும் கடிதாசி எழுதிட்டாங்க அவுங்க கஷ்டத்தை. உ.பி இரண்டா இல்லை மூணா பிரிச்சா
ரொம்ப நல்லா நிர்வாகிக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
பண்டல்காண்ட்., மேற்கு உ.பி, கிழக்கு உ.பினு 3 மாநிலங்காளாகிடும்.


>இதை எல்லாம் பார்த்திட்டு இருக்கிற நம்ம தமிழ்நாட்டிலிருந்து ஏன் எந்தக் குரலும் வரலைனு
எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குங்க. என்னவோ நம்ம் தமிழினத்தலைவரை எல்லொரும்
அரசியல் சாணக்கியர் அது இதுனு புகழாராங்க. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்காமா
இப்படி கம்முனு இருக்காரோ.
இப்போ போயி அவர் சந்திரசேகர ராவிடம் வருத்தப்பட்டுக்கவோ முறைச்சுக்கவோ கூடாதுங்க.
சில வேலை இல்லாததுகள் தேவையில்லாமல் சந்திரசேகர ராவ் உண்ணா விரதத்தையும் அவர்
உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துக்கொண்டிருப்பது அவரைக் கடுப்பேற்றி இருக்கும்.
இதெல்லாம் என்ன சின்னக் கொசுக்கடி மாதிரி அவருக்கு.
அப்படியே லைட்டா தட்டிவிட்டுட்டு தனக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி
தன்னால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தாங்க என் ஆசை.

* தமிழ்நாடு மாநிலத்தை இரண்டா பிரிச்சிடலாம். ஒன்று தஞ்சை, கடலூர் என்று வடமாநிலங்களை
உள்ளடக்கிய சோழ மண்டலம். இன்னொன்று மதுரையைத் தலைநகராகக் கொண்ட தெற்கு மாநிலங்களை
உள்ளடக்கிய பாண்டிய மண்டலம். எந்தெந்த மண்டலங்களுக்கு யார் யார் முதல்வர்னு நான் சொல்லியா
உங்களுக்குப் புரியனும்?
மதுரையைத் தலைநகராகக்கொண்டு மூன்று சங்கங்கள் வைத்து அரசாண்ட் நம் பாண்டியர் வரலாற்றை
சரித்திர சான்றுகளுடனும் இலக்கியச் சான்றுகளுடனும் எழுதவும் நிரூபிக்கவும் நம் தமிழினத் தலைவர்
தமிழக முதல்வரை விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்?
சோழ மண்டலம் கண்ட ராஜ ராஜ சோழன் என்ற பட்டமும் நான்காவது தமிழ்ச்சங்கம் கண்ட
பாண்டியன் என்ற பட்டமும் கொடுத்துவிடலாம். தமிழகம் எங்கும் நம் சோழ பாண்டியர் வரலாற்றை
கதை கவிதைகள் எழுதி சாமாய்ச்சிடலாம்!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ( ரொம்ப பழசாகிப் போன சொலவடைனு கோவிச்சிக்காதீங்க)
அடிச்ச கதையா தமிழகத் தலைவர் அவரை வாட்டி வதைக்கும் 'யாருக்குப் பட்டாபிஷேகம்" என்ற
பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமாக தீர்வு கண்டுவிடலாம்.
பெண்ணியம், பெண்ணுரிமை அது இதுனு பேசற நானே எங்க கனிமொழியை அப்படியே அம்போனு
விட்டுவிடுவேன்னு நினைச்சீங்களா.
நெவர். அவுங்களுத்தான் இப்போ டில்லிக்குப் போற ரூட் க்ளியர் ஆயிடுமே! இனிமே என்ன
டில்லியில் நிறைய கருத்துக்களம் நடக்கும். அப்புறம் டில்லியில் தமிழ்ச்சங்கமம் நடக்கும்.
அசத்திடலாம். அய்யோ நினைச்சாலே ரொம்பவும் சந்தோஷமா இருக்குங்க. அங்கேயும் கவியரங்கத்தில்
போய் நம்ம ஆதவன் தீட்சண்யா மாதிரி தோழர்கள் காச்சு பூச்சுனு கத்தாமா கவிதை வாசித்தோமோ
வாசிக்கலியோ டில்லியைச் சுத்திப் பாத்தமா வந்தோமானு வரனும்னு இப்போவெ சொல்லி வையுங்க.

> அப்புறம் இன்னொரு முக்கியமான செய்திங்க.
யாரும் ஏன் டில்லி அரசு தெலுங்கானாவுக்கு தலையசைச்சாங்கனு மண்டையைப் போட்டு
கசக்கிப் பிழிஞ்சிக்கவேண்டாம்.
தப்பித்தவறிக் கூட இது சந்திரசேகர் ரர்வ் உண்ணாவிரதத்தின் மகிமை, வெற்றினு நினைச்சி
காந்தியம் பேச ஆரம்பிச்சாடாதீங்க. வருஷக்கணக்கில் மணிப்பூரில் மனோராமா உண்ணா நோம்பிருப்பதை
ஏன் கண்டு கொள்ளவில்லை இந்திய அரசுனு தேவையில்லாத கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள்.

.> உலகத்தில் என்ன நடந்தாலும் அதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக நம்ம காம்ரேட்கள்
தொண்டை வறள கத்திக் கொண்டிருப்பார்கள். சோவியத் ஒன்றியத்தை உடைத்த அமெரிக்கா
ஆசியாவின் பெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவைத் துண்டு துண்டுகளாக
உடைக்கும். உடைக்க வைக்கும் .. மன்மோகம் சிங் இதெற்கெல்லாம் தலையாட்டியே ஆகவேண்டும்
என்று பேசுவார்கள், நீங்கள் என்ன செய்யுங்கள்.. உங்கள் டி.வி சேனலில் மானாடா மயிலாட பாருங்கள்,
அதுப் பிடிக்காட்டா உலக அரங்கில் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவின் கிரிக்கேட்
மேட்சைப் பாருங்கள். காம்ரேட்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் தலைவலி வரும். எனவே முன்னெச்சரிக்கையாக
அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

> பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுனா என்னானு இத்தனை வருஷமும் புரியாம
இருந்தேனா. இப்போ புரிஞ்சிட்டுங்க. தெலுங்கானா வேணும்னு ஒரு கூட்டம், வேண்டாம்னு ஒரு கூட்டம்.
டில்லிக்காரன் பயங்கர எம்டன். சரினு சொல்ற மாதிரி சொல்லி எப்படி ந்நோ சொல்லிட்டிருக்கான்
கவனிச்சீங்களா. How to say YES when you want to say NO என்று இந்த எம்டனகளை வச்சே
தலையாணி மாதிரி தடியா புக்கு போடலாம்.

இப்படியே நாளையும் பொழுதையும் இவனுக எல்லாம் கழிச்சிடுவானுக. அப்புறம் பொதுசனத்தைப் பத்தி
பேசவோ யோசிக்கவோ இந்த பார்லிமெண்டு, சட்டசபை , பத்திரிகை, டி.விக்காரன் இவனுக்கெல்லாம்
எங்கே நேரமிருக்கும்? அது என்னா லிபரன் கமிஷன் அது இதுனு எதோ காதில் விழுந்ததே...
எல்லாத்துக்கும் கோவிந்தா..
எங்க ஊரிலே
சாம்பார் பருப்பு விலை கிலோ 100 ரூபாங்க. அட வெங்காயம், உருளைக்கிழங்கி விலை கிலோ 25க்கும் மேலே.
இப்போ புரியுதா ஏன் டில்லிக்காரன் YES சொன்னானு.
புரியாட்டாலும் ஒன்னும் குடிமுழுகிப் போயிடாதுங்க. கோவையில் நடக்க இருக்கும் செம்மொழி மாநாடு
ஏற்பாடுகள் குறித்து எழுதுங்களேன் யாராச்சும்.
செம்மொழி மாநாடு நடக்கும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறொம் என்பதை
நினைத்து நினைத்து பூரித்துப் போகும், தமிழாக நான்



பின்குறிப்பு:
சில தனி மாநிலக் கோரிக்கைகளின் நியாயங்களை இனவரைவியல் ஆய்வுக்குட்படுத்தி
எழுத உட்கார்ந்தேன். புத்தகம் படிச்சி குறிப்பெடுத்து எப்பவுமே ஸீரியசா எழுதி எழுதி என் கணினி மவுசுக்குப் போரடித்துவிட்டதாம்!

Saturday, December 12, 2009

+ மக்கள் சக்தி _ மைனஸ்_ அரசியல் சக்தி ? ஏன் ?????



-----------------------------------------------------

டிசம்பர் 06, மும்பை தாதர், அண்ணல் அம்பேத்கரின் கல்லறை இருக்கும் இடமான
சைத்தியபூமி ..
கூடும் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12, 14, 15 இலட்சம் இந்த வருடம்
15 இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்கிறது மும்பை காவல்துறை.
எதற்காக இவர்கள் வருகிறார்கள்?
திருப்பதிக்கோ அய்யப்பனுக்கு மாலைப் போட்டு கூட்டம் கூட்டமாக
செல்லும் மனித மனங்களில் வேண்டுதல்களும் வேண்டியதைக் கொடுத்ததால்
அதற்கு கைமாறாக எதையாவது கொடுக்க நினைக்கும் மனித இயல்பும்,
அவனுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்துவிட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்..
எனக்கு எப்போது கொடுக்கப்போகிறாய் என்ற கேள்வியும் நீ கொடுக்கும் வரை
உன்னை நான் விடப்போவதில்லை என்ற தீர்மானமும் இப்படியாக ஏதோ ஓர்
எதிர்பார்ப்பின் உந்துதல் காரணமாகவே பக்தி என்ற பெயரில் மனிதர்கள்
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற தளம் நோக்கி லட்சக்கணக்கில் ஆண்டுதோறும்
போகிறார்கள்.
இதில் அடிக்கடி புண்ணிய தளங்களை மாற்றிக்கொண்டிருக்கும் பேர்வழிகளும் உண்டு.
நாங்கள் எதையுமே வேண்டி போவதில்லை என்று சொல்லும் ஆன்மீகப் பேர்வழிகளும்
முக்தி, தேவலோகம், சொர்க்கம் , ஆன்மவிடுதலை என்று எதாவது ஒரு காரணத்தை
முன்னிட்டுதான் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இத்தியாதி எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 50ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டம் கூட்டமாக
மும்பை தாதர் கடற்கரையிலிருக்கும் சைதன்யபூமிக்கு வருகிறார்கள் இவர்கள்.
பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்த நாளான டிசம்பர் 06ல் சைதன்யபூமிக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தியை
ஏற்றி வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
இலட்சம் இலட்சமாக டிசம்பர் 5, 6 நாட்களில் மும்பையை நோக்கி வரும் இவர்களுக்காக
மும்பையின் காவல்துறை என்னவெல்லாமோ முன்னேற்பாடுகள் செய்கிறது.
குறைந்தது 1500 தொண்டர்கள் தாதர் ரோடுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குச்செய்வதில்
காவல்துறைக்கு உதவுகிறார்கள். ஆங்காங்கே தலித் அமைப்புகள், எஸ்.சி, எஸ்.டி யூனியன்கள்
வருகின்றவர்களுக்கு தண்ணீர் வழங்குவது முதல் உணவு வழங்குவதை வரை தங்களால் இயன்றதை
செய்து வருகிறார்கள்.

அன்றும் இன்றும்
-----------------

தொடர்ந்து இந்நிகழ்வை நான் பார்த்து வருகிறேன். பொதுவாக 5ஆம் தேதி மாலை சிவாஜி பார்க்
போனால் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியே இரவு 12 மணிவரை
கடைசி டிரெயினைப் பிடித்து வீட்டுக்கு வருகிற மாதிரி இருந்துவிட்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு 6ஆம் தேதி பகல் 2 மணிக்கு புறப்பட்டால் தாதரில் இறங்கியவுடனேயே
கூட்டத்துடன் கூட்டமாக நாமும் நடந்தாக வேண்டும் என்பதை விட அந்தக் கூட்டம் நம்மை
நகர்த்திச் செல்லும் என்பதுதான் சரியாக இருக்கும்.
15 அல்லது 20 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தைக் கடக்க 2 மணிநேரமானது.
'தாயி.. இவளைப் ப்டித்துக் கொள்' என்று சொல்கிறார் ஒருவர்.
அவள் அம்மா வரவில்லை. பக்கத்துவீட்டு குழந்தை என்னை நம்பி அனுப்பியிருகிறாள்'
என்று சொன்னவருக்கு நடுத்தர வயதிருக்கும். அவர் குழந்தை என்று சொன்ன குழந்தைக்கு
10லிருந்து 12க்குள் இருக்கும். என் மும்பை மூளை தப்பு தப்பாக கற்பனைச் செய்து கொண்டு
கவலைப்பட்டது!

அன்று பார்த்தவர்களுக்கும் இன்று பார்ப்பவர்களுக்கும் இடையில் ஓர் அப்பட்டமான
வேறுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. படித்த ஆணும் பெண்ணுமாய், தூய்மையான
உடையில், கம்பீரமாக நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருப்பதாய்ப் பட்டது.
எண்ணிக்கையில் ஆண்களுக்கு குறையாத அளவு பெண்களும். வெள்ளை நிற
புடவை/சுடிதாரில். இந்த ஆண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 15 இலட்சத்தையும் தாண்டியிருக்கும்
என்கிறார்கள் காவல்துறையினர்.
இவர்கள் வந்ததால் மும்பை நகரமே குப்பைமேடாகிவிட்டது என்று சில வருடங்களுக்கு முன்
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதி தன் எரிச்சலைக் காட்டிக்கொண்டது.
இன்று A sea of people throngs chaityabhoomni in dadar என்று எழுதுகிறது.
அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது மேடைகளும் மேடையை அலங்கரிக்கும் கோஷங்களூம்.

மக்கள் கூடும் இடம் என்பதால் சம்பந்த மில்லாத அரசியல் தலைவர்கள் எல்லோரும் அம்பேத்காருடன்
போஸ்டரில் போஸ் கொடுப்பார்கள், நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு போஸ்டர்கள் மயமாக காட்சியளிக்கும்..
சிவாஜி பார்க்கில் பெண்களும் ஆண்களூமாய் கைகளை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குவார்கள்.
ஈவ்டிசிங், ஆண்கள் பெண்களிடம் காட்டும் சில்மிஷம், கூட்டம் அதிகமாக இருப்பதால் நடக்கும் திருட்டு,
கூட்டங்களில் குடித்துவிட்டு நடக்கும் ரகளைகள்.. இப்படியான எந்தக் குற்றங்களும் இங்கே நடப்பதில்லை.
குடிப்பதும் திருடுவதும் தலித் ஆண்களின் குணாதிசயமாக காட்டப்படும் ஊடகக் காட்சிகளை இங்கே நாம்
பார்க்கவோ படம் பிடிக்கவோ முடியாது.

அறிஞர் அண்ணாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கின்னிஸ் ரிகார்ட் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப்பின் இன்று அந்த தம்பிமார்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றுதான்
தெரியவில்லை! பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்து 53 வருடங்கள் கழித்து ஒரு தலைமுறை மாறி இன்னொரு தலைமுறை
தன் அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு சைத்திய பூமிக்கு வருவது உலக அரங்கில் வேறு
எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.




இந்த மனித சக்தியை ஒன்று திரட்டி அரசியல் சக்தியாக ஏன் மாற்ற முடியவில்லை?

அம்பேத்கருக்குப் பின் வந்த எவருமே அம்பேத்கரின் இடத்தைப் பிடிக்க முடியாதுதான் எனினும்
தலித்துகளின் நம்பிக்கைக்குரிய ஓரு தலைமை ஏன் உருவாகவில்லை.

ஆண்டுதோறும் சைத்திய பூமிக்கு வருகின்ற வழக்கம் இந்த 50 வருடங்களில் ஒரு சடங்காக
சம்பிரதாயமாக மாறிவிட்டதா?

வந்திருக்கும் எத்தனைப் பேர் அம்பேதரின் சிந்தனைகளை கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு
வாழ்வியலாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

ஒவ்வொரு வருடமும் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள் உளவியலைப்
புரிந்து கொள்ளூம் முயற்சியில் அவர்களை வாசித்துக் கொண்டும் நேசித்துக் கொண்டும்
இருக்கிறோம் நானும் என் அரபிக்கடல் அலைகளும்.

Monday, December 7, 2009

சைத்தியபூமியில்..





சட்டப் புத்தகத்தின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் உரிமைகளை நம்பி
உறங்கிக்கொண்டிருக்கிறான் இவன்
அரைநூற்றாண்டுகளாக ....

Tuesday, December 1, 2009

பாட்டுலகின் பாட்டனார்கள்

பாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன்
-------------------------------------------------



புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்றும் - நம்
தந்தையர் நாடென்றும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப்
பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வேஷமிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலை காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியை
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
-------

தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்- என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.

-------------


திங்களைப் போல் செங்கதிர்ப்போல்
தென்றலை போல் செந்தமிழ்ப்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி..
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்துப் போன
என்னையும் உன் மண்ணையும்.

---

எங்கள் போர்முரசே
தெந்திசையைப் பார்த்து
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த
புத்தனின் கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளை கனவுகளை
அக்னிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.

உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதற கதற
ரத்தம் சொட்ட சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.

----

உன் வீட்டில்
உன் கவிதைகளை
உரக்க வாசித்தே
ஊராளும் கூட்டம்
தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு
இலவசமாக பல்பொடி
வழங்கலாம்
போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்
மருத்துவர்கள் மாறி மாறி
கூட்டணி அமைத்து
கூட்டணி உடைத்து
தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்
காலை 10 மணிமுதல்
பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும்
அதிசயங்கள் நடக்கலாம்
பார்வையாளர் வரிசையில்
பதுங்கி இருக்கிறது
உறைக்குள் வாளாக
உறங்கும் போர்ப்படை.

---


தமிழ்த் தேசியத்தை
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக-
முலை வீசி எறிந்த -எம்
கொற்றவை சாட்சியாக-
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
'கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்'

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல- அவன்
பாடல்களும் கனவல்ல.

-----

(28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கத்தில்
"பாட்டுலகின் பாட்டனார்கள் " வரிசையில்..
"பாவேந்தன் பாரதிதாசன்" தலைப்பில் என் உரைவீச்சு.)

Friday, September 25, 2009

மவுனவெளி


பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.

தொட்டுப்பார்த்துக்
களைத்துப்போனது
காற்று
மூடிக்கொண்டன
கருவறைக் கதவுகள்

யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.

*

செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
'புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை"
ஆமென்.'

*

காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.

-------------

Friday, September 18, 2009

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்









ஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08

செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை

வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற

தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்

பயணச்சீட்டு தொகையை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
10ஆம் தேதிக்குத்தான் ஏர் இந்தியாவில் இடம் கிடைத்தது.
எனவே 9/9/09ல் சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரம் கோபுர

தரிசனங்களுக்காக சென்று வந்தேன்.

சென்னையின் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத பத்து வருடம்

பின்னோக்கிய வட்டத்தில் காஞ்சிபுரம். சுட்டெரிக்கும் வெயில்.
பல்லி தரிசனம் கண்டால் செய்த பாவம் எல்லாம் கரைந்துவிடும்
என்று ஒரு கோவில்.. 2500 ஆண்டு பழமைவாய்ந்த மாமரமே
தலவிருட்சமாக இருக்கும் இன்னொரு கோவில், சிவனில்லாமல்
சக்தி மட்டுமே காமாட்சியாக காட்சியளிக்கும் தாய் வழிபாட்டின்

எச்சமாய் காமாட்சி அம்மன், எப்போதும் வெண்ணெய் நெடி கலந்து
புளிச்ச மோரின் வாசம் துளசி மணத்துடன் சேர்ந்து மணக்கும் பெருமாள்

கோவில்.. இப்படியாக கோவில்களின் நகரமாக சோழர் பல்லவர்

கட்டடக்கலையுடன் கவனிப்பாரின்றி சிலையாகிவிட்ட சிற்பங்கள்..
பக்தர்களின் பசியை மிகவும் அக்கறையுடன் வியாபாரமாக்கியிருக்கும்
சரவணபவனில் கை நனைத்துவிட்டு காஞ்சிபுரத்தில் நான் விரும்பிய

தரிசனத்தை நோக்கி பயணித்தேன்.

வண்டி ஓட்டுநருக்கு பெயர் தெரிந்திருந்தது. ஆனால் முகவரி

தெரியவில்லை. அருகிலிருந்த பெட்டிக்கடையில் விசாரித்தப் போது அவர்

சரியாக வழி சொன்னார். அதுவே அப்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியைத்

தந்தது. ஒருவேளை அந்தப் பெட்டிக்கடைக்காரர் 'வழி தெரியாது' என்று

சொல்லியிருந்தால் அதிர்ச்சி என்னைத் தாக்கியிருக்கும். அந்த மாதிரி

அதிர்ச்சி ஏற்படவில்லை என்பதால் ஏற்பட்ட நிம்மதியும் பல வருடங்கள்
நான் பார்க்க விரும்பிய ஓரிடத்தைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியும்
கலந்த கலவை உணர்வுகள்.

நான் 30 வருடங்களுக்கு முன் முதன் முதலாக வாசித்த அறிஞர்

அண்ணா குறித்த புத்தகம் நினைவுக்கு வந்தது. முதல் பக்கத்திலேயே
காஞ்சி என்றால் அண்ணா என்ற கருத்து எழுதப்பட்டிருக்கும்.
அதற்கு கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவில் நடைபெற்ற உண்மைச்

சம்பவம் பேசப்பட்டிருக்கும்.

கிருபானந்தவாரியார் தன் சொற்பொழிவில் ஒவ்வொரு தளங்களின்

பெயரையும் சொல்ல சொல்ல கூடியிருந்தவர்கள் அந்தந்த தளங்களின்

மகான்கள் பெயரைச் சொன்னார்கள். அந்த வரிசையில் அவர் காஞ்சி

என்று சொன்னவுடன் கூட்டத்தினர் (அதுவும் ஆன்மிக சொற்பொழிவு

கூட்டத்தில்!) அண்ணா.. அண்ணா என்று ஒரே குரலில் ஒலித்ததாகப்

பதிவு செய்யப்பட்டிருந்தது. வாரியார் காஞ்சி என்றவுடன் காஞ்சி

காமக்கோடி பீடாதிபதியின் பெயரைத்தான் எதிர்பார்த்தார் என்றும் கூட்டம்

அண்ணா என்றவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவருக்கு ஏற்பட்டது

என்றும் கட்டுரையாளர் எழுதியிருந்தார்.. ( புத்தக ஆசிரியர் பெயரும்

தலைப்பும் நினைவில் இல்லை. )
காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தை நோக்கிப் பயணம் செய்தப் போது

இக்கருத்து மட்டும் நினைவில் வந்தது.

அண்ணாவின் பெயரைச் சொல்லி வளர்ந்துவிட்ட கட்சிகள்.. அண்ணாவின்
முகத்தைக்கூட அவர் நூற்றாண்டை முன்னிட்டு மட்டுமே

அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளில் இடம் கொடுக்கும் அவலத்தை நான்

உணர்ந்திருக்கிறேன். எனினும் இவ்வளவு மோசமாக தி.மு.க.வின்

ஆட்சியில் அதுவும் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை ஒரு சடங்கு

போல கொண்டாடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ...

அங்கே நான் பார்த்த காட்சிகள்..

ஒரு பெண் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார். முகப்பில்

தலைவாசலுக்கு மேல் அண்ணாவின் புகைப்படத்தை ஆணி அடித்து

மாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புகைப்படத்தின் பிரேமுக்குள்

சின்னச்சின்ன மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த

மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்தார்கள். அதுதவிர

அண்ணாவின் புத்தகங்கள் ஒரு சில கண்ணாடி அலமாரிக்குள் இருந்தன.
மலிவு விலைப் பதிப்பு புத்தகங்கள். அண்ணா பயன்படுத்திய மூக்கு

கண்ணாடி, எழுதும் இங்க் பேனா, இரண்டு பக்கத்தில் எழுத்துகள் மஙகிய
நிலையில் இருந்த அவர் நாட்குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. மற்றும்

அண்ணாவின் புகைப்படங்கள். 20 முதல் 30க்குள் இருக்கும். அனைத்து

புகைப்படங்களும் அந்தக் காலத்தில் தினத்தந்தியில் வந்த
சாதாரண வாசகனும் அறிந்த புகைப்படங்கள் தான். குறிப்பிட்டு சொல்லும்

படி எதுவுமில்லை. அண்ணாவையும் தி.மு.க.வையும் ஒன்றாக பார்க்கும்

சிலர் சொல்லக்கூடும்.. அண்ணா நூற்றாண்டை ஒட்டி அண்ணாவின்

இல்லம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் அப்படி இருந்திருக்க்

கூடுமென. ஆனால் அங்கு வேறு எதுவும் இருந்ததற்கான

அடையாளங்கள் எதுவுமில்லை..!
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டிருந்தது. 10/09/1930 ..







"நாளை அண்ணாவின் திருமண நாள்"
என்று நினைத்துக் கொண்டே புகைப்படம் எடுத்தேன்.
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் நிறைய செய்திகளை இன்று

நமக்குத் தருகிறது. ( இது குறித்தும் எழுத வேண்டும்)


அண்ணாவின் இல்லத்தில் அரசு வைத்திருக்கும் அண்ணாவின் நினைவுப்

பொருட்களை விட அதிகமாக அந்தக் காலத்தில் அண்ணா சம்பந்தப்பட்ட
புகைப்படங்கள், புத்தகங்கள், கையொப்பமிட்ட கடிதங்கள் எங்கள் வீட்டில்

கூட இருந்தது. அண்ணாவை தன் அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட
எண்ணற்ற தம்பிமார்களின் இல்லங்களிலும் இருந்திருக்கும்.

இன்னொரு செய்தி.. அண்மையில் அண்ணாவின் திருவுருவம் பொதித்த

நாணயத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அண்ணா நூற்றாண்டு

நிறைவு விழாவில் தமிழக முதல்வரின் பேச்சு. 16/9/09 தினத்தந்தி

மும்பை பதிப்பில் முதல் பக்கம்.. கலைஞரின் பேச்சு ..
தினத்தந்தியை நம்பிவிடுவதற்கில்லை. கலைஞர் அண்ணா குறித்து

பேசியதை எடிட் செய்துவிட்டு மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி குறித்து

பேசியதை மட்டும் வெளியிட்டு விட்டார்களொ என்னவோ..!

எங்கள் மும்பையில் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா

நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் அப்பாவு சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டார். அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கையும் மக்கள்

பணியும் போற்றுதலுக்குரியதுதான். அதில் எனக்கும் கருத்து

வேறுபாடில்லை. ஆனால் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு விழாவாக

இல்லாமல் அப்பாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவாக தவிர்க்க

முடியாமல் தடம் மாறியதைக் கண்டேன். !


திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.

Thursday, August 13, 2009

சூரிய கிரகணம்


ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
பூமகளை ஆட்சிசெயும்
ஞாயிறு போற்றுதும்

கொலை கொள்ளை
இனவெறி
இனப்படுகொலை
எது நடந்தாலும்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்..

ஜெய ஜெய ஜெய ஜெய
ஜெய ஜெய ஜெய ஜெய
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்

ஆர்ப்பரிக்கும் குரலோசையில்
தென்குமரி கருவறை
விழித்துக்கொண்ட தருணம்.......

விடியலைத் தொலைத்த
பதட்டத்தில்
ஆகாயத்தை அதிரவைக்கும்
சிறகுகளின் படபடப்பு
மயங்கித் திரியும்
அதிகாலைச் சேவல்கள்
இரவல் வெளிச்சமாய்
வாழ்ந்த வாழ்க்கையை
புரட்டிப்போடும்
பூமியின் நிலவு

சுட்டெரிக்கும்
சூரியக்கங்குகள்
எரித்துவிடக்கூடும்
அவள் இளமுலையை

ஹரிஓம் ஹரிஓம்
ஜெய ஜெய ஹரிஓம்
அச்சுறுத்துகிறது
அவன் எழுதிய
குருஷேத்திரம்

அடங்க மறுத்தலின்
அடையாளமாய்
ஆர்ப்பரிக்கும் தென்குமரி
ஒற்றைச் சிலம்புடன்
கொற்றவை
தீமிதிக்கிறாள்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஆதித்தாயே ஓம்சக்தி

சடச்சட சடவென
சரிந்து விழுகிறது
நிழலுக்கும் சொந்தம் கொண்டாடும்
உரிமையை இழந்த
சூரியக்குடைகள்.

'எல்லாம் தான் தான்'
அவன் எழுதிய
மறைமொழியை
மறுவாசிப்பு செய்யும்
மங்கையின் விழிகளில்
அவன் இழந்துப்போனது
தேர்கள் பவனிவந்த
பிரபஞ்ச வீதிகளை மட்டுமல்ல
பூமியில் பதிந்த
நிழல்களின் சுவடுகளையும் தான்.

கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்
பூமகளை வாழவைக்கும்
கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்..

--------------------------------------

Thursday, July 23, 2009

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்



என் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி
என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை
மட்டுமே. மும்பையில் என்னையும் நாஞ்சிலாரையும் அறிந்த நண்பர்கள் நாஞ்சிலாரின் அணிந்துரைக்காக
என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன்பின் நானும் என் பணிகளுக்கு நடுவில் மறந்துப்போனேன்.
கவிதைகளையும் கவிதைகள் அனுப்பியதையும். சில மாதங்கள் கடந்து அவர் அணிந்துரையும் கடிதமும்
வந்தது. அணிந்துரை நாஞ்சிலாரின் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அவர் தந்த அணிந்துரையை விட மிகவும் முக்கியமானது அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்.

கானமுயலெய்த அம்பினில் யானைப் பிழைத்த
வேல் ஏந்தல் இனிது

என்று முடியும். அக்கடிதம். இன்றும் ஒவ்வொரு நூலும் அச்சில் வெளிவரும் போது நான் எடுத்து மீண்டும் மீண்டும்
வாசித்துக் கொள்ளும் ஒரு கடிதம் நாஞ்சிலாரின் கடிதம் தான்.
எங்காவது என் சிறுகதைகள், கவிதைகள் வாசித்தால் அதைப் பற்றி தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல
அதிலிருக்கும் குறைகளையும் தெளிவாக என்னிடம் சொல்லும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சிப்ப்படுத்தும்
தருணங்கள். மழையில் மிதந்த மும்பை, தீவிரவாதிகள் தாக்கிய மும்பை, குண்டுவெடிப்புகளில் காயப்பட்ட
மும்பை.. இப்படியாக மும்பையைப் பற்றிய செய்திகள் வாசிக்கப்படும் போதெல்லாம் அதைப் பற்றி
பேசியிருக்கிறார். பெரும்பாலும் கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது
சமூக அக்கறையுடன் மும்பை, மும்பை சார்ந்த செய்திகளைப் பேசியிருக்கிறார்.

அவர் குடும்பத்தில் அடுத்தடுத்து துயரச் செய்திகள் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டு பேசிய போது
'இனிமேல் குடிப்பதில்லை ' என்று முடிவு செய்திருப்பதாகவும் தனக்கென நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும்
சொன்ன குடும்பத்தலைவனைப் பார்த்தேன்.

ஓரளவு இன்று நாஞ்சில் நாடனின் படைப்புகளை முழுமையாக வாசித்திருக்கிறேன், அவரைப் பற்றியும்
அறிந்திருக்கிறேன் என்ற பின்புலத்தில் இன்று அவர் படைப்புகளை மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும்
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாஞ்சிலாரின் படைப்புகளில் பெண் காதாபாத்திரங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? என்று
நண்பர் கே.ஆர்.மணி என்னிடம் கேட்டார். அப்போது தான் நாஞ்சிலார் படைப்புகளில் உலாவும்
பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நாஞ்சில் நாடனா.. அவர் கதைத்தளம் முழுக்கவும் ஆண்களின் ஆக்கிரமிப்பு..ஆண்பார்வையில்
நகரும் கதைகள் என்பது புறந்தள்ள முடியாத உண்மை. நாஞ்சில்நாடன் தன் கதைகளில் பெண்ணியம்
பேசுவதாகவோ அல்லது பெண்விடுதலைப் பேசி தன்னை பெண் விடுதலையின் நாஞ்சில் தலைவனாகவோ
அடையாளம் காட்டிக்கொள்ளும் பம்மாத்துகளைச் செய்வதில்லை. நாஞ்சிலாரின் கதைகளின் ஊடாக
பயணிக்கும் போது நாம் சந்திக்கும் பெண்கள் மிகவும் சர்வசாதாரணமாக பெண்ணியத்தையும் பெண்விடுதலையையும்
பாட்டிவைத்தியம் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்! அவர்களுக்கே உரிய நாஞ்சில் மொழி நடையில்
கதைக்கு மிகவும் தேவையான அளவு மட்டுமே கருத்துகள் தெளிக்கப்பட்டிருக்கும்.
எந்தக் கதையிலும் கதையை விட்டு விலகியோ துருத்திக்கொண்டொ அவர் பேசும் பெண்ணியம்
தனித்து நிற்பதில்லை. பெண்ணியம் மட்டும் அல்ல.. நாஞ்சில் நாடன் அவர் படைப்புகளில் பேசும் சமூக அரசியலும்
அப்படித்தான். நாஞ்சிலார் கதைகளில் சமூக அரசியல் பேசுகிறாரா ? என்று பலர் வியப்படையலாம்.
அவர் படைப்புகளின் ஊடாக நடத்தும் சமூக அரசியல் குறித்து கோவை ஞானி அவர்களும் மிகவும்
வியப்புடன் என்னிடம் பேசியிருக்கிறார். தனிக்கட்டுரையாக இது குறித்தும் எழுத வேண்டும்.

நாஞ்சிலாரின் முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள் முழுக்கவும் ஆணின் பார்வையில் நகரும் கதைதான்.
அதுவும் ஒரு 25, 27 வயது இளைஞனின் பார்வையில் வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் முதலில் அறிந்த ஆண் அவள் தந்தை. அவளுக்குத் திருமணமாகி
இன்னொருவன் மனைவியானப் பின் அவள் தன் கணவனை தன் தந்தையுடன் அதிகமாக ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.
அதிலும் குறிப்பாக ஆளுமையும் அதிகாரமும் கொண்ட தந்தையாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இந்த ஒப்புமையின் ஏற்ற இறக்கங்களின் பாதிப்புகள் ஓர் ஆணின் பார்வையில் தலைகீழ் விகிதத்தில்
பேசப்படுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் எதுவும் பேசப்படவில்லை.
இந்திராகாந்தியின் வாழ்க்கையில் தந்தை-கணவர் என்ற இருவருக்கும் நடுவில் அவர்
இழந்துப் போன வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரே கூட
இல்லஸ்டேட் வீக்லி பத்திரிகையில் ஒரு நேர்காணலில் இதைக் குறிப்பிடத் தான் செய்திருக்கிறார்.


நாஞ்சிலாரின் பெண்கள் சிலரின் முகம் தெரிவதில்லை. பலருக்கு தனிப்பட்ட எந்த அடையாளமும்
கிடையாது. தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு வெறுப்போ கூட கிடையாது.
'எச்சம்' சிறுகதையில் எல்லோரும் போனபின் செத்துப்ப்போன பலவேசம் பிள்ளையின் சிதைக்குப்
பக்கத்தில் வந்து தன் இரு பெண்குழந்தைகளுடன் நின்று அழுதுவிட்டு வாய்க்குள்ளேயே புலம்பிக்கொண்டு
போகும் உருவங்கள். முகம் தெரிவதில்லை, வார்த்தைகள் குறைப்பிரசவமாகிப் போகும் இடத்தில்
நாம் பார்க்கும் பெண்களின் மவுனத்தில் தான் கதையின் அதுவரை எழுதப்பட்ட அனைத்து சொற்களும்
மறுவாசிப்புக்குள்ளாகி கதையைக் கனப்படுத்துகின்றன.
அப்படித்தான் நாஞ்சிலாரின் சில பெண் கதைப்பாத்திரங்களும்,

மாமிசப்படைப்பு நாவலில் (பக் 71)
"இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்கு வயத்திலேருந்து வர்ச்சிலேயே கூட கொண்டு வந்தானுகோ?
எவனோ எழுதி வச்சான்.. பெண்டாட்டியோ மகளொ பாக்கதுக்கு செவப்பா லெச்சனமா முலையும் தலையுமா
இருக்காளா? இன்னா நாப்பது கோட்டை விதப்பாடு..." என்று சொல்லும் போது பெண் என்னவாக பயன்படுத்தப்பட்டாள்
என்பதைக் காட்டுகிறார்.
இவருடைய பெண்களுக்கு ஆண் சமுதாயம் பெண்ணியல்புகளாக செதுக்கி வைத்திருக்கும் கற்பியல் குறித்த
கோட்பாடுகள் இல்லை. பெரும்பாலான பெண் கதைப்பாத்திரங்கள் அக்கா என்றும் மதனி என்றும்
அழைக்கப்படுகிறார்கள். அக்காவுடனும் மதனியுடனும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாலியல் உறவுகளைத் தின்று
செரித்து நிற்கும் ஆண்களுடன் முரண்படாமல் இசைந்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்.
உபாதை சிறுகதையில் வரும் பூமணி, தவசி சிறுகதையில் வரும் விசாலம், தலைகீழ் விகிதங்கள்
க்தைநாயகி இவர்கள் தான் விதிவிலக்கானவர்கள். அதிலும் குறிப்பாக உபாதை கதையின் பூமணி.
கங்காதரன் பிள்ளையிடம் வசமாக மாட்டிக்கொண்ட போதும் தன் சாதுர்யத்தால் அவரைத் தள்ளிவிட்டு
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள்.
தவசியில் வரும் விசாலம் கணவனால் கைவிடப்பட்டு குழந்தையுடன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
வயிற்றுப்பசி தீர்க்க காத்திருக்கும் தவசி. இக்கதையில் கூட தவசியைப் பற்றிய காட்சிப்படிமம் நம்மை
அதிகம் சிந்திக்க வைக்கிறது.
"சற்றும் கவர்ச்சியின் சாயை அடிக்காத உடலமைப்பு. மேல்வரிசைப் பற்கள் முரண்பாடான கோணத்தில் இருக்கும்.
என்ன முயற்சி செய்தாலும் வாயை மூடவே முடியாது. கதவோ, திரையோதான் போட வேண்டியதிருக்கும்...
விசாலத்திடம் யாருக்கும் விளையாடத் தோன்றாது. அந்த சோகம் தங்கிய முகத்தைப் பார்க்கவே ஆகாது ஆண்களுக்கு"
இப்படிப்பட்ட விசாலம் தவசியாகி - பிச்சை எடுப்பதற்கு - காரணம் அவள் ஆண்களை ஈர்க்கவில்லை என்பதும்தான்.
"அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள்" என்று வாசித்த புதுக்கவிதை வரிகள்
நினவுக்கு வருகிறது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனால் தாம்பத்ய சுகம் அனுபவிக்க முடியாத பெண்கள்,
கணவனால் தாய்மை அடைய வாய்ப்பில்லாத பெண்கள் இவர் கதைகளில் சமூகம் விதித்திருக்கும்
ஒழுக்க கோட்பாடுகளை மீறியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால்
பெண் தன் கணவன் தவிர்த்து பிறிதொரு ஆணை விரும்புவதற்கும் உடலுறவுக்கு இசைவதற்கும்
மேற்கூறிய காரணங்களையே நாஞ்சிலார் தன் கதைத்தளத்தில் கையாண்டிருக்கிறார்.
இந்தக் காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக
நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை.

"கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள்.
அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து
அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியல் யோசிக்கும்
அளவுக்கு அவனையும் அவன் உடலையும் மேயக் காத்திருக்கும் பசு அவள்.

நாஞ்சிலார் அவர்கள் மங்கலம், குழூவுக்குறி, இடக்கரடக்கல் கட்டுரையில் பெண்
ஆண் உடல் மீது கொண்டிருக்கும் கவர்ச்சி குறித்தோ ஈர்ப்போ குறித்தோ ஏன் பதிவு செய்யவில்லை என்பதைப்
பற்றி சங்க இலக்கியம் தொட்டு கம்பன், கலம்பகம் வரை பேசியிருக்கிறார். நகக்குறி இடுதல் குறித்து எழுதும்போது
: பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி
சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா.." என்றெல்லாம் கேள்விகளை முன்வைக்கிறார். அவருடைய கதைமாந்தர்களில்
பொன்னம்மை தான் ஆண்குறியைப் பார்த்து ரசித்ததாக அல்லது ஏங்கியதாகக் காட்டப்படும் பெண். ஆனால்
பொன்னம்மை ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்கு ஒரு காரணம் கதைப் போக்கில்சொல்லப்படுகிறது.
" முப்பது இருக்குமா? ஆனால் முப்பதுக்கு மதிக்க முடியாது. பிள்ளை குட்டி எதுவும் இல்லை என்பதாலோ
படை குதிரை போல்தான் இருக்கிறாள்!" (பக் 276)

பிள்ளை குட்டி இல்லாத பெண் என்ற ஓரு வரி நாஞ்சில் நாடன் அவள் செயல்களுக்கு சொல்லும் ஒரு காரணமாகவே
கருத வேண்டியுள்ளது.
அவளுக்கு குழந்தைகள் இருந்ததாக எழுதியிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றி எந்தக் குறிப்பும்
எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால் பொன்னம்மை பிள்ளைக் குட்டி இல்லாதவள் என்று எழுதுவதன் மூலம்
அறிந்தோ அறியாமலோ இப்படிப்பட்ட காரணங்களை பெண் பிறிதொரு ஆணை
விரும்புவதற்கான காரணங்களாக காட்டுவது ஏன்? இம்மாதிரியான காரணங்களே சமூக விதிவிலக்குகளுக்கான
விதிகள் ஆக்கப்படுவதை நாஞ்சில் நாடன் அவர்களும் நன்கு அறிவார்.
இந்தப் பொன்னம்மை தான் எட்டுத் திக்கும் மதயானையில் வரும் சுசிலா.
சுசிலாவும் இப்படித்தான் பேசுகிறாள்..
"எனக்கு வெலக்கம் வர்ற நாளு தப்பி இருவது நாளாச்சு.. முப்பிடார் அம்மன் கண்ணைத் தொறந்து பாத்திருக்கா,
பந்திரெண்டு வருசத்துக்குப் பொறவு. ஆணாலும் பெண்ணாலும் இது ஒனக்க பிள்ளை. .ஓர்மையிலே வச்சுக்கோ.."
என்று பூலிங்கத்திடம் சொல்கிறாள்.
12 வருட தாம்பத்ய வாழ்க்கையில் அவளுக்கு கணவன் மூலமாக குழந்தை இல்லை. அவள் பூலிங்கத்துடன்
கொண்ட உறவுக்கு இது ஒரு காரணமா?
இதே நாவலில் வரும் கோமதியும் கணவனால் ஒரு குழந்தைக்குத் தாயானப் பின் கைவிடப்பட்டவள்.
அவளுக்கு பூலிங்கத்துடன் உடலுறவு உண்டு. ஆனால் அவனுக்கு மனைவியாக வாழ விரும்பவில்லை.
குழ்ந்தை நீனாவுடன் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தும் அவளால் அவனுடன் வாழ்க்கையை
தொடர முடிவதில்லை.
செம்பகத்தின் கணவனோ உடலுறவுக்கே தகுதியில்லாதவன். அதுவே பூலிங்கமும் செண்பகமும் இணைவதற்கான
வலுவான காரணமாக அமைந்துவிடுகிறது.
பெண்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள அவர் நாவலான எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சிலாரின் பெண் பாத்திரப்படைப்புகளின்
பல்வேறு முகங்களைக் காணும் தளமாக அமைந்திருப்பதுடன் பெண்ணியம் குறித்த பல்வேறு கருத்துகளைப்
போகிறப் போக்கில் சொல்வதற்கான தளமாகவும் அமைந்திருக்கிறது.

தாயின் நடத்தைச் சரியில்லை என்று தாயுடன் உறவு கொண்டவனைக் கொலை செய்த பரமுவிடம் பூலிங்கம்
கேட்கிறான்.. :" தப்பா ஒரு ஆள் ஒனக்க அம்மை மேலே கை போட்டிருந்தா கொடுக்கரிவாளை வச்சுக் கொத்திப்
போட்டிருக்க மாட்டாளா? ஆனா அவ அப்படிச் செய்யல்லே. அந்த ஆளு தப்பா நடக்கப் பாக்காண்ணு ஒங்க அப்பா
கிட்டே சொல்லல்லே.. இல்லியா? நீ எங்கிட்டே கோவப்படாம யோசிச்சுப்பாரு.. காசுக்காச்சுட்டி போகப்பட்ட பொம்பிளையா?
இல்லேல்லா? பின்னே எதுக்கு அவளும் உடை குடுத்தா?

............
இதெல்லாம் நம்ம கணக்கிலே ஆம்பிடாத விசயம்டே..

இங்கே பரமுவின் அம்மாவாக பெயரிலியாக காட்டப்படும் பெண்தான் எவ்வித காரணமும் சொல்லப்படாமல்
இன்னொரு ஆணிடம் உறவு கொண்டதாகக் காட்டப்படும் பெண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

"காவல், கற்பு, குலம், பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று
தெரியவில்லை.
சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும். கரையான் புற்று வளர்வதைப்போல.
சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன், சொற்களைத் தூக்கித் தூர எறிய முடியாமல்,
சொற்களைச் சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலைப் பாக்குப்
போலக் குதப்பித்திரியும் மனிதன்.."

பூலிங்கம் குரலில் ஒலிக்கும் நாஞ்சில்நாடனின் குரல் இது.

குடும்பச்சுமையில் தன்னைக் கவனிக்காது நாற்பது வயதிலேயே உருவமற்று கட்டொழுங்கு இல்லாமல்
போகும் பெண்களைப் பற்றியும் பாபி கதைப் பாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார் நாஞ்சில்நாடன்.

"தன் உடலைச் சீராக வைத்துக் கொள்வதிலும் சேட்டைக் கட்டியிருந்த தாம்பத்யக் கயிறு தழையாமல்
பார்த்துக் கொள்வதிலும் சாமர்த்தியம் போதவில்லை போலும். இந்தியக் குடும்பப் பெண்களுக்கு நாற்பத்தைந்து
வயதுக்குள்ளேயே எல்லாம் ஆடி அடங்கிவிடும் போலிருக்கிறது. பிறகு பெசரெட் செய்வதும் பெண் பிள்ளைகளுக்குச்
சீர் விடுவதும் பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றுவதும் சனீசுவரனைச்
சுற்றுவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிடும் போலும்" (பக் 71) என்கிறார்.

நாஞ்சில் நாடனின் கதைக்களம் நகரமாக இருக்கலாம். ஆனால் கதை மாந்தர்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் நாஞ்சில் நாட்டு பெண்கள். அவர்கள் தனக்கென தனி அடையாளம் இல்லாதவர்கள். ஆண்களால்
வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் தனித்து விடப்பட்டவர்கள். ஆண் துணைக் கிடைக்கும் போது
நெருப்பில் பற்றிக்கொள்ளும் பஞ்சு போல எரிந்து போகிறவர்கள். எனினும் கற்பு, திருமண உறவு
என்று கற்பிக்கப்பட்டிருக்கும் சமூக விதிகளை வார்த்தைகளால் அல்ல தங்கள் வாழ்க்கையால்
வளைத்து போட்டு வாழக்கற்றுக் கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக வாய்திறந்து பேசுவதில்லை.
அவர்களின் மவுனங்களும் செயல்களுமே கதைக்களத்தில் ஆண் கதை மாந்தர்களின் முகத்தைக்
காட்டும் கண்ணாடிகளாகவும் இருக்கின்றன.

நாஞ்சில் நாடனின் பெண் கதைப் பாத்திரங்கள் பெரும்பாலும் அவர் தலைமுறையை/அவர் அம்மாவின் தலைமுறையைச்
சார்ந்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
கதைப் போக்கில் கதைக்கான பிரச்ச்னை முடிச்சு அந்த தலைமுறைக்கான எண்ண ஓட்டத்தில்
அவிழ்க்கப்படுகிறது. அதே முடிச்சு இன்றைய பெண்ணிடம் கிடைத்திருந்தால் அவள் என்ன் செய்திருப்பாள்
நாஞ்சிலார் அவள் என்ன செய்வதாக நினைப்பார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

இன்றைய இளம் தலைமுறை பெண்களின் செயல்களும் பிரச்சனைகளுக்கு அவர்கள் எடுக்கும்
முடிவுகளும் நாஞ்சில் நாட்டிலும் மாறித்தானிருக்கும். அந்த மாற்றங்களை அவர் வருங்காலத்தில் பதிவு செய்ய
வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ர்பும் விருப்பமும்.
"தாய் பயன்படுத்திய சொற்களை மனைவி பயன்படுத்தவில்லை, ஆனால் அறிந்திருந்தாள்,
மனைவி அறிந்த அச்சொற்களை மகள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை" நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களுக்காக
வருத்தப்படும் நாஞ்சில்நாடன் இந்த மாற்றங்கள் வெறும் சொற்களில் மட்டும் நிகழவில்லை, வாழ்வியல்
வாழ்க்கை மதிப்பீடுகள் என்று பல்வேறு தளத்தில் நிகழ்ந்திருப்பதை பதிவு செய்ய வேண்டும்.

ஒரு மகனாக தந்தையாக, தனையனாக, நண்பனாக ஏன் தாத்தாவாகவும் அவரைச் சுற்றி இருக்கும்
பெண்களின் தலைமுறை சிந்தனை மாற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவர் படைப்புகளின்
கதை மாந்தர்களின் தலைமுறை வட்டம் பூர்த்தி அடையும்.


நாஞ்சில் நாடன் பெண்ணிய விடுதலைக்காக பெண்ணியக்குரல் எழுப்ப தன் பெண் கதைப்பாத்திரங்களைப்
படைக்கவில்லை. ஆனால் அவரின் பொன்னம்மை, சுசிலா, கோமதி, பானு, செம்பகம், பேய்க்கொட்டு மதனி,
விசாலம், பூமணி , பரமுவின் அம்மா என்று பல்வேறு பெண்முகங்களைக் காட்டி அவரவர் செயல்களின் மூலம்
கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் அதிகமாக அந்தந்த பெண் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்கள்,
உணர்வுகள் குறித்து பேசவில்லை, பெரும்பாலும் அவர்களுக்காகவும் அவர்கள் குறித்தும் பேசுவதும்
கதையின் ஆண் கதை மாந்தர்களாகவே இருப்பது ஆண் பார்வையில் சித்தரிக்கப்படும் பெண் கதை
மாந்தர்கள் என்று சொல்வதற்கே இடமளிக்கிறது.
நாஞ்சிலார் அவர்களே சொவ்லது போல எந்த ஒரு செயலுக்கும் இரண்டு பார்வைகள் உண்டு.
வண்டிக்காரனின் பார்வையில் பேசப்படுவது மட்டுமல்ல. வண்டியை இழுக்கும் மாடுகளின் பார்வையிலும்
பேசப்பட வேண்டும் என்பார்., அதையே தான் அவர் படைத்திருக்கும் பெண் கதைப் பாத்திரங்களுக்கும்
பொருத்திப் பார்க்கிறேன்.
விசாலம் கதையில் பேசவே இல்லை. பேசியிருந்தால் கைக்குழந்தைக்குப் பசி தீர்க்க பிச்சை எடுப்பதை
" தவசி" என்று சொல்லத் துணிவாளா? அல்லது தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை - இச்சமூகத்தை
அரக்கர்கள் என்று அடையாளம் காட்டுவாளா?
சுசிலாவுக்கு தனக்கு தாய் அந்தஸ்த்துக் கிடைக்கிறது.
ஆண் துணையின்றி வாழும் கோமதியின் வறண்ட நிலத்தில் அவன் மழையாகும் போது
அவளுக்கு அந்த ஈரம் தேவைப்படுகிறது.
செம்பகத்தின் கணவன் தாம்பத்ய உறவுக்கு லாயக்கில்லாத அவலம்தான் அவளை பூலிங்கத்தின்
தோள்களில் சரிந்து விடச் செய்கிறது.
அப்படியானால் ஆண்-பெண் ஈர்ப்பு, உடலுறவுகளுக்கு இவை மட்டுமே காரணமா என்றால் இல்லை.
இக்காரணங்களைத் தாண்டிய ஆண்-பெண் உறவுகளை நாஞ்சிலார் தன் கதைக்களத்தில் பயன்படுத்தவில்லை
என்பதை மட்டுமே இப்பொதைக்குச் சொல்லிக்கொள்ளலாம்.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் ஈர்ப்பு நிலைப் பற்றி சதுரங்க குதிரையில் ஒரு
சின்னக்கோடு வரையப்பட்டிருக்கும். அவர் படைப்புகளில் வாழும் மற்ற பெண்களுக்கு
அம்மாதிரியான மன உணர்வுகள் இருந்திருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு ஆண் கதை
மாந்தரும் யோசிக்கவே இல்லை.
சுசிலா பூலிங்கத்தை மோகித்ததும் கோமதி பூலிங்கத்தை மோகித்ததும் வெறும் உடல் சார்ந்த தேவை
மட்டும்தானா? அவர்களின் பக்கம் இருந்த நியாயங்கள், உணர்வுகள் அனைத்துமே
ஆண் கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுவதால் வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட அகமனம் சார்ந்த ஆண்-பெண் ஈர்ப்புநிலை பேசப்படவே இல்லை.
பெண் ஆணை நாடுவதும் உடலுறவுக்கு இசைவதும் கதைகளில் சொல்லப்படும் காரணங்களாக
மட்டுமே இருக்குமானால் அது பெண்ணை எந்த வகையிலும் பெருமைப் படுத்தாது.
செம்பகம் பூலிங்கத்தை தவிர வேறு எந்த ஆணை அந்தச் சூழலில் சந்தித்திருந்தாலும் கூட
அவனுடன் ஓடிப்போயிருப்பாள் என்று கருத கதைக்களத்தில் நிறைய இடம் இருக்கிறது.
ஆண் உடலுறவுக்கான தேவை இருக்கும் போது பெண் அந்தச் சூழலில் சந்திக்கும்
எவனுடனும் உடலுறவுக்கொள்ள இசைவது போல காட்டுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லை.
ஆண் மடியில் படுத்தவுடன் எந்தப் பெண்ணும் அடுத்தக்கட்டமாக உடலுறவுக்கு இடம் கொடுத்து
விடுவளா. ?
பல மாதங்கள் பட்டினிக்கிடந்தவன், தாகமாக இருந்தவன் பழைய கஞ்சியைக் கண்டதும்
எடுத்து குடித்து வாயைத் துடைத்துக்கொண்டு நிற்பது போல் பெண் உடலும் பெண் மனமும்
இருப்பதில்லை.
உடல் தேவைகளைத் தின்று செரித்து வாழ்ந்த ஆச்சிகளும் மதனிகளும் உண்டுதான்.

நாக்கில் எச்சில் ஊறும் நாஞ்சில் நாட்டு வகைவகையான சமையல்களைப் பற்றி புத்தகம் போடும் அளவுக்கு
எழுதக்கூடியவர் நாஞ்சில் நாடன். அப்போதெல்லாம் அந்த வகைவகையான சமையல்களைச் செயது பரிமாறும்
நாஞ்சில் நாட்டு வளைக்கரங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதினால் என்ன எழுதி இருப்பார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன். வெறும் ருசி மட்டுமல்ல அந்த ருசிகளுக்குள் அவர்கள் இழந்துப் போன வாழ்க்கையின்
எத்தனையோ ருசிகரமான உணர்வுகள், ரகசியங்கள் வெளிவரலாம்.





மும்பையை மும்பை மக்களை தன்னுடம் தன் படைப்புகளுடனும் இணைத்து சீரஞ்சீவியாக
வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்.

Friday, June 19, 2009

காணாமல் போன கடலலை

ஏழு கடல் தாண்டி
ஏழு மலைத் தாண்டி
ஒரு குகை.
ஒற்றைக்கண் அரக்கனின்
இமைகளில்லாத இரவுகள்
சிறகொடிந்த மைனாவாய்
சிறை எடுக்கப்பட்ட
எங்கள் இளவரசி
கனவுகளுடன் காத்திருக்கிறாள்
எப்படியும் வந்துவிடுவான்
பறக்கும் கம்பளத்தில்
பட்டத்து ராஜா என்று.

கடலை நிரப்பிக்
கட்டிடம் கட்டியதும்
மலையைக் குடைந்து
மரங்கள் மறைந்ததும்
அவள் கனவுகளில் காட்டும்
கண்ணாடிகளைத் தேடுங்கள்
கனவுகளின் கருக்கலைப்பில்
மரணம் சம்பவிக்குமென
மருத்துவர்கள் சொன்னதை
மறந்து விடாதீர்கள்.

கனவுகள் கட்டிய
கல்லறைக்குள்
காலம் அவளைப் புதைப்பதற்குள்
தோண்டி எடுத்து
காப்பாற்றி விடுங்கள்
அவள்
கனவுகளாவது
உயிர்ப் பிழைக்கட்டும்.

Monday, June 8, 2009

இந்தியக் கருவாடும் வெள்ளைப்பன்னிகளும்

பிரபலங்கள் எழுதும் பத்திகளை விட உங்களையும் என்னையும் போல
சாதாரண பொதுசனம் எழுதும் எழுத்துகளில் இருக்கும் பாசாங்கில்லாத சத்தியத்தின்
குரல் இப்போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பக்கங்கள்.
அப்படித்தான் 31மே2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை பதிப்பில்
'சிக்கன் ஹலால்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி.
எழுதியவர் தன் பெயரைக்கூட "இந்தியக்குடிமகன்" - son of india
என்றுதான் அடையாளப்படுத்தி இருந்தார்.
http://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOIM&showST=true&login=default&AW=1244016793984



அவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல நம்மில் பலருக்கும் ஒவ்வொரு பயணத்திலும்
ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல கொதித்து அடங்கிவிடும்
பால் போல நாமும். அந்த நேரத்தில் ஆத்திரம் கொண்டு அதன் பின் அதை மறந்து
எப்போதும் போல இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குள்
அடங்கிப்போகிறோம். அதற்கான காரண காரியங்களை நம்மில் பலர் யோசிப்பதில்லை.
(அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?)

எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வானூர்தியில் வெள்ளைக்காரனுக்கு
மட்டும் தனிக்கவனமும் மரியாதையும் செலுத்தும் இயல்பு என்னவோ அந்த விமானப்பணிப்பெண்ணுக்கு
மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறு. நம் எல்லோரிடமும் எப்போதாவது அந்த உணர்வு, மனநிலை
இருக்கிறது. ரொம்பவும் இயல்பாகவே நம் எண்ணங்களில் கலந்திருக்கும் ஒரு மதிப்பீடு.
வெள்ளைக்காரன் உசத்தி.. கறுப்பன் தாழ்வு என்ற எண்ணம் தான்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு சுற்றிப்பார்க்க வரும்போது அனுபவிக்கும் மேட்டுக்குடி
மரியாதையை எந்த ஓர் இந்தியனும் உலகில் வேறு எங்கும் அனுபவிக்கும் வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியா, இலண்டன் என்று பல்வேறு நாடுகளில் இந்தியனுக்கு ஏற்படும் நிறவெறிக்
கொடுமைகளை அண்மையில் ஊடகங்கள் வழி அதிகம் தெரிந்து கொண்டிருப்பதும்
அன்றைய சூடான காலை காபி போல சூடானச் செய்தி.. அதற்குமேல் அதற்கான முக்கியத்துவம்
எதுவுமில்லை.

பாலின் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்.!
பால் போல ஒளீவீசும் நிலவின் அழகு.
என்பதை எல்லாம் உலக மொழிகள் அனைத்திலும் எழுதி வைத்து தலைமுறை தலைமுறையாய்
நம் எண்ணத்தில் விதைத்துவிட்டார்கள்.

இருளடர்ந்த கரிய மேகங்கள் அழகு
ஒளி நுழைய முடியாத அடர்ந்த வனம் அழகு
கரிய பாறையிலும் வளைந்து நிமிர்ந்து செங்குத்தாய் மண்ணின் மடிக்கிழித்து திமிறி நிற்கும்
மலைமுகடுகள் அழகு.. சுருள் கேசமும் தடித்த உதடுகளும் மின்னும் கண்களுமாய்ச் வெள்ளை நிறப் பல்
தெரிய பளிச்சென சிரிக்கும் ஆப்பிரிக்க குழந்தையும் அழகுதான்.

ஆனால் அழகு என்று சொன்னவுடன்
சிவந்த ரோஜாவும்
தூயமை என்றவுடன் வெள்ளை நிறமும் அடையாளமாய்
நம் எண்ணத்தில் கலந்திருப்பது எதனால்?
மாங்கொழுந்து நிறமுடைய கண்ணகியின் கொள்ளுப்பேரன்கள்
மணமகள் விளம்பரத்தில் எப்போதும் அழகானப் பெண் தேடும் வரிகளுக்குள்
ஒளிந்திருக்கிறது வெள்ளை நிறம் உசத்தி என்ற எண்ணத்தின் அடையாளம்.
அம்மாவும் அப்பாவும் அக்காவும் தங்கையும் கருப்பாக இருந்தாலும்
அதற்கான காரணங்கள் புரிந்தாலும்..
'fair good looking girl' தேடி அலைந்து கொண்டிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர்களை
நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?







கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ..
என்ற பாடலைக்கூட ஓர் ஆண் பெண்ணைப் பார்த்து பாடுவதாகக் காட்டி இருந்தால்..!!??
ஹிட் ஆகியிருக்காது!!
அதையும் இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சிவந்த பொன்னிற பெண் பாடியதால்தான்
பாடலும் ஹிட் ஆகியது. மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இம்மாதிரி கருத்துகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்/விற்பனைப் பொருட்களை
ஒரு 10 வருடங்கள் ஊடகங்கள் விலக்கி வைத்தாலே போதும்.. இந்த மாயையிலிருந்து
ஓரளவு வளரும் தலைமுறையாவது விடுபடும்.