Sunday, August 1, 2010

மித்திநதிக் கரையில்


வணக்கம்...

தமிழ்மணம் நட்சத்திர வலைப்பதிவாளராக எனக்கு வாய்ப்பு
கொடுத்திருப்பதற்கு நன்றி.

இனி நான் உங்களுடன்....




மித்திநதிக் கரையில்
-------------------------------------------





கடலலையின் ஈரம் காயாமல்
கண்ணில் கனவுகளுடன் காத்திருக்கும் நாட்கள்
அம்ச்சி மும்பை, எங்கள் மும்பை மாநகரம்..
இந்தியா ரூபாயின் மதிப்பை எங்கள் சந்தையின் ஏற்றமும் இறக்கமும் தான்
இன்றுவரை ஆட்சி செய்கிறது.
இந்த மாநகரத்தின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு குடிசைகளில் வசிக்கிறார்கள்.
(2001 மக்கள் கணக்கெடுப்பு). அந்த 48 விழுக்காட்டில் 60 விழுக்காடு குடிசையில் '
வசிப்பவர்கள் தமிழர்கள்தான். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக
இன்றும் சொல்லப்படும் தராவி பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்கள்.

எப்போது நடந்தது இந்த புலம்பெயர்ந்த வாழ்க்கை?
இப்போதுதான் நடந்தது என்று எவரும் எழுதி வைக்கவில்லை.
பல்லவ அரசன் நரசிம்ம பல்லவன் வாதாபி கொண்டதும் பரஞ்சோதி கணபதி
கண்டதும் வெறும்கதையல்ல. அவை வரலாற்று நிகழ்வுகள்.
ஆனாலும் வென்ற பகுதிகளில் தன் சொந்தங்களுடன் வாழ்க்கையைத் தொடரவில்லை
அன்றைய தமிழன்.

தமிழ்நாட்டையும் மராத்திய மண்ணையும் இன்று இணைத்து நிற்கும் இந்தியா என்ற
தேசத்தின் பிறப்பும் அரபிக்கடலோரம் தமிழனின் வருகையும் ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையவை.

>அன்றைய ஆங்கிலேய அரசின் வெள்ளைத்துரைமார்களுக்கு
சமையல் வேலை செய்யும் "பட்லராக' பல தமிழர்கள் இருந்தார்கள்.
அந்த துரைமார்களும் குடும்பத்துடன் இந்தியாவின் எங்கு சென்றாலும் தங்களுடன் தங்கள்
பட்லரையும் அழைத்துச் சென்றார்கள். இப்படி பட்லராக வந்தவர்களில் பெரும்பாலோர்
ஓடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

>இந்து மதமும் அதன் சாதியக் கொடுமையும் தெருவில் நடப்பதற்கும் அனுமதி மறுத்தக் காலத்தில் ஆங்கிலேய அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தில்
இடமளித்தது. அதன் விளைவாகவும் பலர் புலம்பெயர்ந்தார்கள்.

> மும்பையில் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் அன்றிலிருந்து இன்றுவரை
குடிசைத் தொழிலாகவே நடந்து வருகிறது. சுகாதாரமில்லாத சூழலில்
மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் இக்குடிசைத் தொழிலில்
வேலைச்செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் தினக்கூலிகளாக தமிழகத்திலிருந்து
கொண்டுவரப்பட்டனர். தாராவி பகுதியில் இக்குடிசைத் தொழில் நடத்தியவர்கள்
சேட் என்றழைக்கப்பட்டார்கள். அங்கிருந்த சால் வீடுகள் மனிதர்களின் குடியிருப்புகள்
அல்ல. பதனிடப்பட்ட காய்ந்த தோல்களை அடுக்கிவைக்கும் சேமிப்பு அறைகளாக
(godown) இருந்தவைதான் காலப்போக்கில் தோல்பதனிடும் தொழிற்சாலையில் வேலை
செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளாக சேட்டுகள் வழங்கினார்கள். (கவனிக்க: விற்பனை அல்ல)


> பருத்தி அதிகம் விளையும் மராட்டிய மாநிலத்தில் துறைமுகமான மும்பையிலிருந்து
அதிகமான துணிகள் ஏற்றுமதி/இறக்குமதி நடைபெற்றது. அப்போது கொள்ளை
லாப நோக்கில் நூற்பாலைகள் நிறுவப்பட்டு பருத்தி நூல்கள் இங்கிலாந்துக்கு
ஏற்றுமதியானது. அந்த நூற்பாலைகளில் வேலைத்தேடி வந்து குடியேறியவர்கள் பலர்.

> வானம் பார்த்த பூமி, மழையை நம்பிய விவசாயம். இந்த வறுமையில்
வயிற்றுப்பிழைப்புக்காக கூலிகளாக தமிழர்கள் மும்பைக் கடலோரம் வந்தார்கள்.

> ஆங்கிலேய அரசின் அரசுப்பணிகளில் அமர்ந்த தமிழர்கள் அரசு பணிகளில்
இடமாற்றம் ஏற்பட்ட போது அதிகாரமிக்க தங்கள் பதவியை விடாமல்
மாற்றலாகிய இடங்களுக்கு குடிப்பெயர்ந்தார்கள்.

> ஆங்கிலேய அரசின் இரயில் போக்குவரத்து, துறைமுகத் தொழில், சிகிரெட்,
புகையிலை தொழிற்சாலைகள்.. இவற்றில் எல்லாம் கிடைத்த வேலைவாய்ப்புகள்
தமிழர்களை இக்கடலோரம் ஈர்த்தது.

> பிறந்த தமிழ்நாட்டில் சாதியக்கொடுமைகளால் விலங்கினும் கேவலமாக வாழ்ந்த
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவரான பாபாசாகிப்
அம்பேத்கர் பிறந்த மண்ணில் "மனிதர்கள்" என்ற முகம் கிடைத்தது. முகவரி கிடைத்தது.
அதனாலேயே அவர்களில் பெரும்பாலோர் குடும்பத்துடன் மராட்டிய மண்ணின் மைந்தர்களுடன் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும் சாதி மத இன அடையாளங்களுக்கு அப்பால் இவர்கள் யாருக்கும்
இந்த மண்ணில் எவ்வித உரிமையும் இல்லை. இந்த மாநில அரசின் அதிகாரங்களில்
இவர்களுக்கான பக்கங்களும் இல்லை.
நகராட்சி மன்ற தலைவர் என்ற அரசு பதவிக்கு மேல் எதையும் நினத்துப் பார்ப்பதும்
இன்றுவரை இவர்களுக்கு கனவுதான்.

இந்த மாநகரத்தின் வெளிச்சத்தில் இன்னும் இருண்டு கிடக்கிறது எத்தனையோ
கோடானக்கோடி உழைப்பாளர்களின் குடிசைகள். இந்தக் குடிசைகள்தான்
இந்நகரத்தின் வியர்வைத்துளிகள்.


இம்மாநகரத்தின் நான்காவது தலைமுறையாக இந்தக் கடலோரம் நின்று
பார்க்கின்றேன். என் கடந்த காலங்களையும் எம் தந்தையர் வாழ்ந்த வாழ்க்கையின்
சாயல்களையும் . உப்புக்கரிக்கிறது கடல் நீரும் எங்கள் கண்ணீரும்.







நட்சத்திரங்கள் இல்லாத என் வானத்தில்
கண்சிமிட்டும் அந்த வெளிச்சம்..
இப்போதும் சாளரத்தின் திரைச்சீலைகளை விலக்கி
என்னை நோக்கி கை அசைக்கும் வெள்ளைப்பறவைகள்.
இரவைப் பகலாக்கும் வெளிச்சங்களுக்கு நடுவில்
தரையிறங்கும் விமானங்கள்.
ஆகாயத்தின் மேகங்களுக்கு நடுவிலிருந்து
மண்ணைத் தொடும் நேரத்தில்
தேடுகின்றன என் கண்கள்
இந்தக் கான்கீரிட் காடுகளில்
காணாமல் போன என் கடலலைகளை.

பெட்ரோல் டீசல் போடாத
எங்கள் மூன்றுச் சக்கர வாகனங்கள்
எங்களைப் போலவே
மேடுபள்ளம் இல்லாத புல்தரை
எங்கள் குடியிருப்புகளைப் போலவே
எங்கள் அலைகளும் கழிவுகளுடன்.
கடலுக்குள் சிப்பியாம்
மழைத்துளியே சிப்பிக்குள்
முத்துக்களாய் ஜனிக்கிறதாம்..
பருவம் தவறாமல்
பருவமடையும் எம் கார்மேகத்துளிகள்
எங்கள் சிப்பிக்குள் முத்துக்களை
விதைப்பதே இல்லை.
ஜனசமுத்திரத்தைப் போலவே
அலைசமுத்திரமும்
சிப்பிகளை விலக்கி வைத்த பாவத்திற்கும்
சேர்த்தே சிலுவையைச் சுமக்கிறது.

தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!!
வாழ்க திராவிடம்!
வாழ்க பாரத மணித்திருநாடு!!
எத்தனை மேடைகள்..
எத்தனைக் கொடிகள்..
ஒலிக்குப்பைகளைச் சுமந்த
எங்கள் காற்றிடம் கேளுங்கள்..
சொல்லக்கூடும் எங்கள் குடிசைகளின்
தொடர்கதையை.

"மாடியில் இருந்து துப்பினால்
குடிசையில் விழும்
குடிசையிலிருந்து துப்பினால்
மாடியே விழும்" **
தெறிக்கும் நறுக்குகள்
எம் கடலடியில் மவுனவாசிப்புகளாய்.
தீப்பெட்டிகளாய் அணிவகுக்கும் குடிசைக்குள்
தீக்குச்சிகளாய் அடங்கிக்கிடக்கும் வாழ்க்கை.
தீக்குச்சிகள் உரசினால் தீப்பிடிக்கும்.
உரச முடியவில்லையே..

சாதி மழை
சமய மழை
அரசியல் மழை
அதிகார மழை
பதவி மழை
பண மழை
ஏதொ ஒரு மழையில் நனைந்து
உரசினாலும் தீப்பிடிக்காத
ஒடிந்தக் குச்சிகளாய்..எங்கள் தலைமுறை.
எங்கெல்லாம் குடிசைகள் இருக்கிறதோ
அங்கெல்லாம் கேட்கிறது
"செம்மொழியான தமிழ்மொழியாஆஆஆம்.ம்..."

தமிழ்ச்சங்கங்கள்
தமிழன் புகழ்பரப்பும் சண்முகாநந்தா அரங்கம்
பூ மணக்கும் மாதுங்கா
செம்பூர் முருகன் திருக்கோவில்
இதைவிட்டால்
டோம்பிவலி விரார் நவிமும்பை கல்யாண்
கிளைப்பரப்பி விரிந்திருக்கும் எங்கள் தமிழுலகம்
எப்போதும் விலக்கியே வைத்திருக்கிறது
மித்தி நதிக்கரையில்
மிதக்கும் குடிசைகளை.

----------------------

(** கவிஞர் காசி.ஆனந்தனின் நறுக்குகள்).

மித்தி எங்கள் மும்பையின் நதி.

-----------------------------------------------

Monday, July 26, 2010

ஜடாயு எதிர்வினைக்கு நன்றி

மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் என் கருத்துக்கு எழுதியிருக்கும் எதிர்வினைக்கு மிக்க நன்றி.

ஜடாயு:

-----------

>புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது ஒரு *மொழியையும்*, *பிரதேசத்தையும்* மட்டுமே குறிக்கும் சொல்லாகவே சம்ஸ்கிருத இலக்கியம் முழுமையும் பயன்படுத்தப் பட்டு வந்தது, கால்டுவெல் காலம் வரை." >

மிகவும் சரி. அப்படியே ஏற்றுக்கொள்வதில் எதுவும் சிக்கலில்லை!

ஜடாயு:

--------------

>கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |

கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. //

என்று புதியமாதவி எழுதுகிறார். இந்த சுலோகம் “தென்னிந்திய மக்களை” பொதுவாகக் குறிக்கவில்லை. “பஞ்ச திராவிடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து தென்னிந்திய பிராமணர் குழுக்களைக் குறிக்கிறது. இவர்கள் விந்தியத்திற்குத் தெற்கே வசிப்பவர்கள். >

இந்த இடத்தில் மட்டும் மிகவும் சரியாக திராவிட என்ற சொல் 5 தென்னிந்திய பிராமணர் குழுக்களைக்

குறிப்பதாக ஏற்றுக்கொண்டிருப்பதற்கும் ....மிக மிக நன்றி.

இப்போது எனக்குச் சில சந்தேகங்கள் அய்யா:

தென்னிந்தியாவில் தமிழர்களை அவர்களே விரும்பாத, அடையாளமாக்காத, திராவிடர் என்ற அடையாளத்துடன்

ஒரு கருத்துருவாக்கம் வருகிறது. அக்கருத்து பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தில் தலையாய இடம் பெற்றது இருக்கட்டும்.

தமிழர்கள் திராவிடர்களாக்கப்பட்ட போது .... இந்த தென்னிந்திய பிராமணர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?

தென்னிந்திய பிராமணர்களுக்குத் தங்கள் அடையாளம் பறிபோனதில் ஒரு கலகமே வெடித்திருக்க வேண்டாமோ?

ஏன் அப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை?

எனக்கு இந்த இடத்தில் தான் அய்யா ஏகப்பட்ட சந்தேகங்கள் வந்து தொலைக்கிறது.

* தங்களுக்கான அடையாளத்தை இழக்கும் தருணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் கள்ளமவுனம்

சாதித்தது ஏன்?

பிராமணர்கள் என்றாலே ஆரியர்கள். திராவிட கருத்துருவாக்கம் பிராமணர்களுக்கு வழங்கிய

கொடை இதுதான். கால்டுவெல், திராவிட மொழிக்குடும்பம் இத்தியாதி எல்லாம் வருவதற்கு முன்பே

வட இந்திய மனுவும் வேதங்களும் சகலமும் ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் பெற்று பிராமணர்கள் எல்லோரும்

ஆரியர்களாகி சமஸ்கிருதம் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தின் அறிவு பீடத்தில் அமர்ந்துவிடுகிறது.

அதுவும் வெள்ளையர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் ஓர் அறிவுபீடம்.

அதனால் தானோ என்னவோ இந்தச் சுண்டைக்காய் திராவிட அடையாளம் ஒழிந்து போனதில்

தென்னிந்திய பிராமணர்களுக்கு வருத்தமோ இழப்போ இல்லை. ஆரியமாகி உலக அரங்கில்

உயர்ந்த பீடம் கிடைக்கும் போது யாருக்குத்தான் இழக்க மனம் வரும்?

>பிரிட்டிஷார் வர்ண சாதிப் பாகுபாடுகளை எங்ஙனம் திரித்தனர் என்பது பற்றிய தவறுதலான பார்வை...

என்று நீங்கள் சொல்வதின் உங்கள் பக்கத்தை என்னால் சரியாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ராம் ஸ்வரூப்பின் கட்டுரையை உங்கள் மொழியாக்கத்தில் வாசித்தேன்.

உங்கள் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது.

Annihilation of caste - பாபாசாகிப் அம்பேத்கரின் கட்டுரை நீங்கள் வாசித்திருக்க கூடும்.

இல்லை என்றால் கட்டாயம் வாசிக்கவும்.

நன்றி.





நன்றி.:thinnai.com 


Sunday July 25, 2010




கடந்த இருவாரங்களாக தமிழ்செல்வன் எழுதிய கிறிஸ்தவ திராவிட மாயவலை கட்டுரையையும், அதற்கு புதியமாதவி எழுதியுள்ள எதிர்வினையையும் படித்தேன்..

தமிழ்செல்வன் எழுதியிருப்பதில் தகவல் பிழைகள் உள்ளன (திராவிட என்ற சொல் உருவாக்கம், கால்டுவெல் ஆகியவை தொடர்பாக).. ஆனால், அவரது கட்டுரை கிறிஸ்தவ மதமாற்றங்கள், தமிழ் கலாசார, வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றில் கிறிஸ்தவ அமைப்புகளும், திராவிட இயக்கமும் இணைந்து செயல்பட்டுள்ள சில விஷயங்களை சரியாகவே விளக்கியுள்ளது என்று நான் கருதுகிறேன்.

புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது ஒரு *மொழியையும்*, *பிரதேசத்தையும்* மட்டுமே குறிக்கும் சொல்லாகவே சம்ஸ்கிருத இலக்கியம் முழுமையும் பயன்படுத்தப் பட்டு வந்தது, கால்டுவெல் காலம் வரை.

தமிழ -> தமிள -> த்ரமிள -> த்ரமிட -> த்ரவிட என்பது தான் இந்தச் சொல்லின் உருவாக்கம். இதில் இடையில் உள்ள மூன்று வடிவங்களும் பிராகிருத மொழியில் வழக்கில் இருந்தவை. பிராகிருத இலக்கியங்களில் இச்சொல் வடிவங்கள் வருகின்றன.

// கல்ஹனரால் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "ராஜதரங்கினி" என்ற காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலும்

கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |

கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. //

என்று புதியமாதவி எழுதுகிறார். இந்த சுலோகம் “தென்னிந்திய மக்களை” பொதுவாகக் குறிக்கவில்லை. “பஞ்ச திராவிடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து தென்னிந்திய பிராமணர் குழுக்களைக் குறிக்கிறது. இவர்கள் விந்தியத்திற்குத் தெற்கே வசிப்பவர்கள்.

இதற்கு அடுத்த சுலோகத்தைப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். அந்த சுலோகம் “பஞ்ச கௌடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து வட இந்திய பிராம்மணர்களைப் பட்டியலிடுகிறது. இவர்கள் விந்தியத்திற்கு வடக்கே வசிப்பவர்கள்.

ஸாரஸ்வதா​: காந்யகுப்³ஜா: கௌ³டா³: உத்கலமைதி²லா​: |

பஞ்சகௌ³டா³: இதி க்²யாதா விந்த்⁴ஸ்யோத்தரவாஸின: ||

(நன்றி: http://en.wikipedia.org/wiki/Brahmin)

இந்த சுலோகத்திலும் முழுக்க முழுக்க பிரதேச வேறுபாடுகள் மட்டுமே சுட்டப் படுகின்றன. இனவேறுபாடுகள் அல்ல.

பிரிட்டிஷார் வர்ண, சாதி வேறுபாடுகளை எங்ஙனம் திரித்தனர் என்பதைப் பற்றிய தவறுதலான பார்வையையே அவரது பதில் அளிக்கிறது... இது பற்றி சிறந்த சிந்தனையாளர்கள் ராம் ஸ்வரூப் எழுதிய the logic behind the perversion of caste என்ற கட்டுரையைப் படிக்கக் கோருகிறேன். இந்தக் கட்டுரையை நான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன் -

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி? - http://www.tamilhindu.com/2010/05/perversion-of-caste-by-ram-swarup/

அன்புடன்,

ஜடாயு

தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக

அண்மையில் தோழர் தமிழ்ச்செல்வன் திண்ணையில் எழுதியிருந்த கீழ்க்கண்ட கட்டுரைத் தொடரை வாசித்தப் போது சில செய்திகளை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்தேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=21007042&format=html

கோவையில் நடந்து முடிந்த செம்மொழி திமுக திருவிழாவில் பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கப்பட்டதையும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூட, காலாவதியாகிப் போன ஆரிய-திராவிட கோட்பாடுகளை இன்னும் ஆதரித்து வருபவர் தான் என்ற விமர்சனத்தை வைத்திருப்பதும் இன்றைய சூழலில் ஆரிய திராவிட இனவரலாற்றை ஆய்வு மனப்பான்மையுடன் அணுகும் அனைவருக்கும் இணை கோடாக இருக்கும் இன்னொரு பாதையை அறிமுகப்படுத்தும் முன்னுரையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் போகிற போக்கில் தமிழ்ச்செல்வன் அவர்கள் சில கருத்துகளை உதிர்த்து செல்கிறார்.

***விமர்சனத்திற்குரிய அக்கருத்துகள்:

கிறுத்துவ மதத்தைப் பரப்பவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு தமிழகத்திற்கு வந்திறங்கிய பாதிரிமார்களுள் ஒருவரான ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. சங்க கால இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து இடைக் கால இலக்கியங்களிலும் நூல்களிலும் கூட ’திராவிடம்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மண்ணின் மைந்தர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கிறுத்துவ பாதிரியான கால்டுவெல் அவ்வார்த்தையை பிரயோகித்துள்ளார் என்பதும் உண்மை. ஒரு பக்கம் அரசியல் நிறுவனமான ஆங்கிலேய அரசு, மண்ணின் மைந்தர்களைப் பிரித்து ஆள்வதற்காக, ஆரிய-திராவிட கோட்பாடுகளைப் பயன் படுத்தியது என்றால், மறுபக்கம் மத நிறுவனங்கள் நம் பூர்வீக மொழியைக் கைபற்றி, கலாசாரத்தை அழித்து, நம் தேசத்தை கிறுத்துவமயமாக்க அதே கோட்பாடுகளைப் பயன்படுத்தின.*** என்கிறார்.

>ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. என்கிறார் தமிழ்ச்செல்வன்.

அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் எழுதியிருக்கும் "சவுந்தர்யலாகிரி" நூலின் 75வது பாடல் திருஞானசம்பந்தரை 'திராவிடசிசு' என்று அழைக்கிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இன வரலாற்று ஆய்விலும் திராவிடர் தமிழர், திராவிட தேசம், தமிழ் தேசம் என்ற பார்வையிலும் மிகவும் ஆணித்தரமான ஓர் அடையாளமாகி இனவரலாற்றை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறது.



கல்ஹனரால் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "ராஜதரங்கினி" என்ற காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலும்

கர்னாடக ஆஸ்ச்ச தைலங்கா திராவிட மஹாராஷ்ட்ரகஹோ l

குர்ஜராஷ்சேத்தி பஞ்சைவ திராவிட விந்தியதக்ஷஜீனே ll

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது.

புராணங்களில் பாகவத புராணம் (9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் ) 'திராவிட தேசத்து ஈஸ்வரனும்' என்று பதிவு செய்திருக்கிறது.

எனவே திராவிடம் என்ற இங்கு ஏற்கனவே இருந்த ஒரு கருத்தியலைத்தான் கால்டுவெல் தன் ஆய்வில் எடுத்துக் கொண்டாரே தவிர அவர் உருவாக்கிய வார்த்தையோ கருத்துருவாக்கமோ அல்ல.

இனி, கால்டுவெல் ஆய்வுகளை மதமாற்ற கருவியுடன் இணைப்பதும் , பொத்தம் பொதுவில் குற்றம் சாட்டுவது வரலாற்றின் சில பக்கங்களை இருட்டடிப்பு செய்யவே உதவும். கால்டுவெல் மதமாற்றம் செய்யவில்லை என்று வாதிடுவது என் நோக்கமல்ல. அதற்காக தான் அவர் வந்தார். ஆனால் அவராலும் அவருடைய மதமாற்ற ஆயுதத்தாலும் ஏற்கனவே தடித்துப் போய்க்கிடந்த இந்த தமிழ்ச்சமூகத்தின் சாதிய ஆதிக்கத்தை இம்மி அளவு கூட அசைக்க முடியவில்லை. அதில் அவருக்கு மிகப்பெரிய தோல்விதான். பறையர்கள் ஆதிதிராவிடர்கள், ஆதித்தமிழர்கள் என்று தன்னுடைய ஆய்வு நூலில் அவர் பின்னூட்டாக இணைத்திருப்பதை அப்படியே கிழித்துவிட்டு மறுபதிப்புகள் வெளியிட்ட தமிழ் அறிவுஜீவிகளுக்கும் பல்கலை கழகங்களுக்கும் அவருடைய சமூகப்பார்வை ஒவ்வாமையை இன்றைக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. நான் வலியுறுத்த வரும் செய்தி இன்றுவரை இந்தச் சாதித்தமிழ் ஏற்றுக்கொள்ளாத ஒரு கருத்தை தன் ஆய்வில் முன்வைத்த கால்டுவெல் கூட பறையர்களை மதமாற்றம் செய்யவில்லை. அதாவது தன்னுடைய மதமாற்ற கோட்பாட்டுக்கும் எல்லைத்தாண்டாத பாதுகாப்பான ஒரு சாதிய அமைப்பை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவர் மதமாற்றியதெல்லாம் நாடார் சாதி மக்களைத்தான். அவர் மட்டும் இந்தச் சாதிய எல்லைக் கோட்டைத் தாண்டி இருப்பாரேயானால் அவரால் எதையும் சாதித்திருக்க முடியாது. இந்தச் சாதிய சமூகம் அவரைப் புறந்தள்ளி இருக்கும். என்னவோ கால்டுவெல் , பாதிரிமார்கள் வருவதற்கு முன்பு இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தது போலவும் அவர்கள் வந்துதான் நம்முடைய கலாச்சாரத்தை அழித்தது போலவும் தமிழ்ச்செல்வன் வருத்தப்படுவது புரியவில்லை!

அவர் மண்ணின் மைந்தர்கள் என்றும் நம்முடைய கலாச்சாரம் என்றும் பேசுவது யாரை, யாருடைய கலாச்சாரத்தைப் பற்றி என்பதும் யோசிக்க வைக்கிறது.

ஆங்கில அரசுக்கு ஆரியம் திராவிடம் அதிகம் தேவைப்படவில்லை. ஏனேனில் ஆரியம் திராவிடம் என்ற இரட்டைப்பிரிவு இந்திய சமூகத்தை வலிமைப்படுத்திவிடும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதைவிட ஏற்கனவே இந்திய சமூகத்தில் நிலவிய ஆயிரக்கணக்கான சாதியப்படிநிலைப் பிரிவை அவர்கள் அப்படியே சேதப்படுத்தமால் இருந்தால் போதும் என்று நினைத்தார்கள். அதில்தான் அவர்களுக்கு ஆதாயம் இருந்தது.

கிறித்தவ மதமாற்றத்திற்கு இங்கிருந்த சாதியமும் அதைக்காப்பாற்றிய இந்து மதமும் காரணமே தவிர இந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் புதுக்காரணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மராத்திய மாநிலத்தில் (அன்றைய பம்பாய் மகாணத்தில்) ஆங்கில ஆட்சி செய்த ஒரு மாற்றம் தான் மகர்களின் எழுச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தது இதுதான்:

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் காரண காரியங்களை ஆராய்வதற்கு 1858ல் ஏற்படுத்தப்பட்ட பீள் கமிஷன் சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி ஏற்கனவே இந்தியாவில் இருந்த சமூகப்படிநிலை கட்டுமானத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று முடிவுக்கு வந்தது. அதாவது சாதிய வர்ணபாகுபாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்வது என்பதுதான் அது. (We cannot practically ignore it (the caste system) so long as the natives socially maintain it). இக்கமிஷனின் பரிந்துரையை ஏற்று 1890ல் ஆங்கிலேயர் தங்கள் படைகளைச் சீரமைத்தனர். அப்போது இராணுவ தளபதியாக இருந்த லார்ட் கிட்சனர் (Lord Kitchner, commander in chief of the indian army discontinued the mahar recruitment on the plea that the mahars did not belong to the martial races of india) படைவீரர்கள் சேர்ப்புக்கான விதிகளை இந்திய சமுதாய அடித்தளக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றம் செய்தார்.

எனவே என்னவோ ஆங்கிலேயர்களும் பாதிரிமார்களும் வந்துதான் நம் மண்ணின் மைந்தர்களைப் பிரித்தார்கள் என்றெல்லாம் சொல்வது உண்மைகளை இருட்டடிப்பு செய்யவே உதவும். நெய்தல்நில மக்கள் பரதவர்கள் மதமாற்றத்திற்கும் கொங்கன் கடற்கரை நெய்தல் நில மக்கள் மதமாறியதற்குமான அரசியல் காரணங்கள் பல. மதமாற்றத்திற்கான காரணங்கள் சமூகத்திற்கு சமூகம், இடத்திற்கு இடம் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

கால்டுவெல் செய்ததெல்லாம் திராவிடம் என்ற சொல்லை தமிழர்களுடன் இணைத்தது தான். அது சரியோ தவறோ விமர்சனத்திற்கு உரியதுதான் ஆனால் அவருடைய நூலில் அவர் செய்திருக்கும் ஆய்வுகளையோ அந்த ஆய்வுகளின் மூலம் அவர் எடுத்திருக்கும் முடிவுகளையோ மறுப்பதற்கு இடமில்லை. தமிழ்த்தேசியப் பார்வையை முன்வைக்கும் முனைவர் த.செயராமன்., திராவிடம், திராவிடர், திராவிட தேசம்.. ஆகிய சொற்கள் வரலாற்று ரீதியாக பார்ப்பனர்களோடு தொடர்புடைய சொற்கள், இச்சொற்களோடு பார்ப்பனர்களுக்கு முதல் உரிமையும் முற்றுரிமையும் இருக்கிறது ' என்கிறார்

தமிழ்ச்செல்வன் பொத்தம் பொதுவாக கருத்துகளை எழுதிச்செல்வதை விட வரலாற்றுச் சான்றுகளுடனும் மாற்றுக்கருத்துகளையும் அறிந்து அதை ஆய்வுக்கு உட்படுத்தி மறுவாசிப்பு செய்வதும் இன்றைய தேவை மட்டுமல்ல, அவரிடமிருந்து என்போன்றவர்கள் எதிர்ப்பார்ப்பதும் ....

----------

Tuesday, July 13, 2010

கடல் - Sunanda Pradhan - Oriya poet


யுகம் யுகமாய்
கடல்பக்கம் திரும்பாத நான்
திடீரென ஒருநாள்
காற்றைக்கிழித்து நீந்தி
கடலுக்கு வந்தேன்
ஈரமானக் கனவுகளுடன்.

பொங்கும் காதல் மார்பில்
நிம்மதியாக தலைசாய்த்து
கடலைப் பார்க்கிறேன்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
எவ்வளவு காலம்?
தெரியாது.
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

தெரியவில்லை
என் எதிரில் நிற்பது
கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்வது
கடலா இல்லை நீயா?
நனைக்கும் ஈரத்திலிருந்து விலகி
ஆசைதீரக் கடலைப் பார்த்துக் கொண்டே
ஆனால்.. ஆனால்..
நீதான் அது!
ஏன் நடிக்கவேண்டும்
உன் குரல் கேட்கவில்லை என்று?

சின்ன நண்டுவைப் போல
ஓடினேன் கடலுக்குள்
புடவை மடிப்புகளைச்
சரிசெய்துக்கொண்டே
தயக்கமின்றி
இன்னும் இன்னும் ஆழமாய்...
உடலெங்கும் கொஞ்சி சீராட்டும்
கடல் அலைகள் தந்த
உணர்வுகளுடன்..

இதோ..
நானே அலையாகிவிடாமல்
வெளியில் இழுத்தாய்
அங்குமிங்கும் பார்க்கிறேன்
எங்கே..? காணவில்லை உன்னை!
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
கடற்கரைமட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய்
சின்னப்புள்ளியாய்..

------------

Saturday, July 3, 2010

தமிழ்ப் பாடநூல்களில் தமிழ்--நா.மு

WELL DONE Naa.Mu.sir!




தமிழ்ப் பாடநூல்களில் தமிழ்
--நா.முத்து நிலவன்--

கோவையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடக்கும் வேளையில், தமிழ்வளர்ச்சி குறித்த பல்வகைச் சிந்தனைகள் எழுவது இயல்பே. இதில், தமிழ்நாட்டு உயர்நிலைப்பள்ளிப் பாடநூல்களில் தமிழறிவு குறித்த சிந்தனைகளையும், அதுபற்றிய நம் ஆலோசனைகளையும் முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து --10ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று-- வரும் மாணவர்கள்; தாம் நினைப்பததைப் பிழையின்றி எழுதவேண்டும், சரியான உச்சரிப்புடன் பேசவேண்டும் ஆனால் இந்த இரண்டும் நம் பள்ளிப் பாடநூல்களின் வழியாகப் பெரும்பாலும் நிறைவேறவில்லை என்பதுதானே இன்றைய நிலை? இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவது, சிந்தனையை வளர்ப்பது இதையெல்லாம் விடவும் சொந்த சிந்தனையை வெளிப்படுத்தும் சாதாரண மொழிஆற்றல்தானே பள்ளிப்பருவத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்? இதற்கு நமது தமிழ்ப்பாட நூல்களை அல்லாமல் வேறு அடிப்படை இருக்கமுடியுமா என்ன?

அடிப்படை மொழியறிவுக்கான பயிற்சி :
மொழிப்பாடத்தின் முக்கியநோக்கம் பிழையின்றி எழுதவும் பேசவுமான பயிற்சிதான். இதற்காகத்தான் மொழிப்பாடங்களில் இரண்டாம்தாள் வைக்கப்படுகிறது. ஆனால், இதற்கென்று தனித்த எளிமையான பாடப் பகுதியே இல்லை. மாணவர்களால் வெறுக்கப்படும் இலக்கணப்பகுதிகளும் மனப்பாடம்செய்தோ எதையாவதுபார்த்தோ எழுதக்கூடியதான கட்டுரைப் பகுதிகளுமே உள்ளன. பிறகு?
நம் தமிழில் ‘க்’முதல் ‘ன்;’வரையான மெய்யெழுத்துகளின் வரிசை அமைப்புக்கான காரணமென்ன? இதையறிந்து கொண்டால் எழுத்துப்பிழைகள் வெகுவாகக் குறையும். இதை நமது மாணவர்க்குச் சொல்லித்தர வேண்டாமா? (தமிழாசிரியர்க்குச் சொல்லியிருந்தால் அல்லவா அவர் தம் மாணவர்க்குச் சொல்வார்?) தமிழ் முதுகலை படித்தவர்களிடம் கூட இந்தக் கேள்வியை நீங்கள் துணிந்து கேட்கலாம்! பெரும்பாலும் சரியானபதில் கிடைக்காது என்பதுதான் எனது அனுபவத்தில் கண்ட கசப்பான உண்மை!
தமிழ் மெய்யெழுத்துகளின் வரிசையில், காரணத்துடனான ஓர் ஒழுங்குமுறை உள்ளது.
1.க் எனும் வல்லினத்தை அடுத்து 2.ங்; எனும் மெல்லின எழுத்து,
3.ச்; எனும் வல்லினத்தை அடுத்து 4.ஞ் எனும் மெல்லின எழுத்து,
5.ட்; எனும் வல்லினத்தை அடுத்து 6.ண்;; எனும் மெல்லின எழுத்து,
7.த்; எனும் வல்லினத்தை அடுத்து 8.ந் எனும் மெல்லின எழுத்து,
9.ப் எனும் வல்லினத்தை அடுத்து 10.ம் எனும் மெல்லின எழுத்து,
அடுத்து வரிசையாக 11.ய், 12.ர், 13.ல், 14.வ், 15.ழ், 16.ள் எனும் இடையின எழுத்துகள், இறுதியாக மீண்டும் 17. ற் எனும் வல்லின எழுத்தை அடுத்து 18. ன் எனும் மெல்லின எழுத்து, இதில், இடையில் வரும் இடையின எழுத்துகளைத் தவிர்த்து ஏனைய 16 எழுத்துகளும் ‘வல்லினத்தைஅடுத்து மெல்லினம’; எனும்வரிசையில் --க,ங.ச,ஞ,ட,ண எனும் வரிசையில்-- அடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதற்கும் காரணம் உண்டு! தமிழ்ச் சொற்களின் எழுத்து அமைப்புமுறையே இதன் அடிப்படைக் காரணம். அதாவது தமிழ்ச்சொற்களில் வல்லின உயிர்மெய்எழுத்துக்கு முன்பாக மெய்எழுத்து வந்தால் அது அதற்குரிய மெல்லினமாக மட்டுமே வரும். உதாரணமாக ‘க’எனும் வல்லினவர்க்கத்தைச் சேர்ந்த உயிர்மெய்எழுத்து வரும் சொல்லில், அதற்குமுந்திய எழுத்து ‘ங்’ எனும் மெல்லின மெய்எழுத்தாகவே வரும். (க,கா,கி,கீ.கு,கூ முதலான 12எழுத்தும் ‘க’வர்க்கம் என்பதுபோல)
எ.கா.:1.‘தங்கம்’- ‘ங்’ எழுத்தையடுத்து ‘க’வர்க்கம் அல்லாத வெறெந்த எழுத்தும் வராது!
எ.கா.:2.‘மஞ்சள்’-‘ஞ்’ எழுத்தையடுத்து ‘ச’வர்க்கம் அல்லாத வெறெந்த எழுத்தும்; வராது!
எ.கா.:3.‘பந்து’- ‘ந்;’ எழுத்தை அடுத்து ‘த’வர்க்கம் அல்லாத வெறெந்த எழுத்தும் வராது!
தமிழ் எழுத்துகளின் இந்த ‘வர்க்க ஒற்றுமையை’ தமிழ்மாணவர்க்கு நாம் சொல்லித்தரவில்லை!
இந்த அடிப்படையிலேயே மெய்எழுத்துகளின் வரிசையும் அமைக்கப் பட்டுள்ளது என்பதைச் சொல்லித்தந்துவிட்டால் எழுத்துப் பிழை வெகுவாகக் குறைந்துவிடும். வல்லினம் எங்கு மிகும், மிகாது என்பதை உதாரணங்களைக் கொண்டன்றி இப்போது சொல்வதுபோல ‘விதி’களைமட்டுமே கூறி விலகிவிடக்கூடாது. இதை விட்டுவிட்டு, சும்மா “வல்லினஎழுத்து ஆறுக்கும் மெல்லினஎழுத்து ஆறும் இனம்” என்று பொத்தாம் பொதுவாக மனப்பாடம் செய்யச்சொல்லி வந்திருக்கிறோம். எழுத்துப்பிழையும். உச்சரிப்புப் பிழையும் மண்டி வளர்கிறது!

குண்டு ‘ல’ வும், வெள்ளிக்கால் ‘ள’ கரமும் :
இவ்வாறே ‘மண்டபம்’ அல்லது ‘கண்டு’ நண்டு’ எனும் சொற்களை எழுதும்போது, ‘ரெண்டு சுழி ன வா?’ அல்லது ‘மூணுசுழி ண வா?’ எனும் சந்தேகம் (?) வருமானால், அடுத்துள்ள எழுத்து ட எனில் அது ‘ண’ எழுத்துத்தான் எனத் தெளியலாம். இதனால்தான் ‘ண’ என்பதை ‘மூணுசுழி’என்று சொல்லாமல் ‘டண்ணகரம்’ என்று சொல்ல வேண்டும். இவ்வாறே ‘ரெண்டுசுழி’யை ‘றன்னகரம்’ எனச் சொல்லவேண்டும்.
“குண்டு ல” வை உச்சரிப்புக் கருதி ‘ஒற்றல் லகரம’; எனவும், “வெள்ளிக்கால் ள” வை ‘வருடல் ள’கரம் எனவும் சொல்லித்தந்தால் பெயருடன் உச்சரிப்பும் தெளிவாகிவிடும்.
நுனிநாக்கு மேல்வாயின் நுனி அண்ணத்தில் ஒற்ற வருவது ஒற்றல் ‘ல’கரம்.
நுனிநாக்கு மேல்வாயின் நடு அண்ணத்தில் வருட வருவது வருடல் ‘ள’கரம்.
இந்தஎழுத்துகளை உச்சரிக்கும்போது நாக்கும் உதடும் எவ்வாறு செயற்படும் என்பதை எளிய படங்களோடு விளக்கலாம். இவை தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்வழிக் கற்றல்-- அ.ஆ.கல்வி-திட்டத்தில் உச்சரிப்புக்கான ஒருசில படங்கள் உள்ளன. இது எழுத்துப்பிழை நீக்கத்திற்கும் விரிவடைய வேண்டும்! இதுபோல எழுத்துப்பிழை நீக்கத்திற்கும், உச்சரிப்புப் பிழை நீக்கத்திற்குமான பகுதியை ஆழப்படுத்தாமல் ஆயிரம் இலக்கணங்களைப் பாடம் வைத்தாலும் அவை வெற்று மனப்பாடமாகவே அமையும். பிழைகளும் தொடரும்!

பகுத்தறிவும் தமிழறிவும் :
பொதுவாகத் தமிழ்ப் பாடநூல்களின் அமைப்பு முறை சலிப்பூட்டுவதாகவே உள்ளது.இரண்டு தலைமுறையாக உள்ள தமிழ்ப் பாடநூல்களின்; அமைப்புமுறை மாறி, மாறி, ‘பழையன கழிந்து, புதியன புகுந்துவர’ வேண்டாமா?
ஆனால், மையமாக நாம் விரும்பும் தமிழறிவு-பகுத்தறிவு-சமூகஉணர்வு சார்ந்த செய்திகள் எந்தத் தமிழ்ப்பாட நூலிலும் மாணவர்க்கு முழுமையாகத் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, காப்பியங்களிலம், சிற்றிலக்கியங்களிலும் மண்டிக்கிடக்கும் பெண்ணடிமை, மற்றும் மூடநம்பிக்கைக் கருத்துகள் பாடப்பகுதிகளில் ஊடாடிக் கிடப்பதும் வருத்தத்திற்குரியது! இதில் கட்சிபேதமெல்லாம் கிடையாது! ஆட்சிமாறினாலும் பாடநூல் ஆசிரியர்; மாறமாட்டார், அவர்களே மாறினாலும் அறிவுசார் செய்திகளில்லாமலே பாடநூல்வருவது மட்டும் தொடரும்!தகவல்களை மட்டும் தரும் பாடங்களால் அறிவு வளருமா என்ன? தகவல் வேறு அறிவு வேறு அல்லவா?

பெரியாரைப் பற்றிய பாடங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. இது நல்லதுதான், ஆனால், பெரியாரின் தலையாய கருத்தான ‘கடவுள் இல்லை’ என்பது பற்றி, அவரைப்பற்றிய எந்தஒரு பாடத்திலும் ஒருவரிகூட இல்லை. இப்போதுள்ள 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் 6ஆம் பாடமாக திரு நெ.து.சு. எழுதிய ‘இவர்தான்; பெரியார்’ பாடத்திலும் சரி, இப்போது வெளிவந்துள்ள 6ஆம் வகுப்புச் சமச்சீர்க்கல்வித் தமிழ்ப்பாடநூலிலும் சரி ‘பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்’ எனும் செய்தி மட்டும் இல்லை! அப்புறம் எதற்குப் பெரியாரைப்பற்றிப் பாடம்வைக்க வேண்டும்? வெறும் தகவலுக்காகவா? ‘பிரச்சினையைத் தூக்கி நடுவில் வை. சுற்றி சுற்றி வா! தொட்டுவிடாதே’ என்பது கந்தர்வன் எழுதிய கவிதை!

ஒருபக்கம் பெரியாரைப்பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் பாடம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப்போராடிய பல மூடநம்பிக்கைகளை அதேபாடநூலின் வேறு பக்கங்களில் தொடரும்படிப் பாடம் வைப்பதுபற்றி என்ன சொல்ல?

புராணமா? வரலாறா? குழப்பும் பாடப் பகுதிகள்:
பொய்மூட்டைகளான புராணங்களை ஏதோ நம்நாட்டு வரலாறு போலவே பாடக்குறிப்புகளில் தரப்படுகிறது! 1996இல் மறுபதிப்புக்கண்ட பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் இடம் பெற்றிருந்த ‘திருவிளையாடற் புராணம்’ பகுதிக்கான முன்னுரை இப்படித் தொடங்குகிறது : ‘சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் ஒன்று தருமிக்குப் பொற்கிழி அளித்ததாகும்’ இந்த முன்னுரையின் கடைசி 2 வரிகளையும் பாருங்கள் : ‘சோமசுந்தரக் கடவுள் புலவனாய்த் தோன்றி நக்கீரனுடன் வாதிட்டதையும் விளக்குவதே நம்பாடப்பகுதி யாகும்’!(பக்கம்:34) இதன்பின் 1997ஆம்ஆண்டுப் பாடநூலில் இதே பெரியபுராணம் பற்றிய குறிப்புரையில், ‘‘தில்லைப்பெருமான் ‘உலகெலாம்’ என்ற அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடினார்’’ என்று (பக்:48) மாணவர்க்குச் சொல்லப் பட்டுள்ள செய்தி, புராணமா? வுரலாறா? இவ்விரு பாடநூல்களின் நூலாசிரியர்குழுத் தலைவர் டாக்டர் மு.பி.பா.என்னும் ஒருவரே! இதில் கவனிக்க வேண்டிய செய்தி-- 1996இல் தமிழ்நாட்டு ஆளும்கட்சி மாறினாலும் இந்த நூலாசிரியர் மாறவில்லை என்பதுதான்! கற்றோர்க்கு ‘சென்ற’ இடமெல்லாம் சிறப்பு!

இவை பத்தாம்வகுப்பில் என்றால், 2005தொடங்கி, இந்தஆண்டும் பாடமாகஉள்ள 8ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் திருவிளையாடற் புராண முன்னுரையில் “புராணம் - பழைய வரலாறு”-என்றே பொருள் சொல்லியிருப்பது வெகுசிறப்பு! இந்த நூலாசிரியர் குழுத்தலைவர் திரு.வி.கணபதி “மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடற் புராணம்” என்று தெளிவாகவே சொல்லிவிட்டார் (பக்:36) இந்த நூலாசிரியர் இருவரும் ‘திருவிளையாடல்’ தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் என்பது மட்டும் தெரிகிறது! நாமும் நல்ல கலையை ரசிப்போம், அதற்காக இப்படியா!

இந்த ‘வரலாற்றுக் கற்பனை’க்கு ஊற்றுக்கண்ணான குறுந்தொகைப் பாடல்(எண்:02) ‘கொங்குதேர்வாழ்க்கை’ யில், ஆசிரியர்பெயர் ‘இறையனார்’ என்றுள்ளதே தவிர அதில் செண்பகப் பாண்டியனும் இல்லை, நெற்றிக்கண் திறந்த சிவாஜிகணேசனும் இல்லை! ‘நெற்றிக் கண்திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்ட ஏ.பி.நாகராஜனும் இல்லை! நடிப்பும் வசனமும் நன்றாக இருந்ததால் மாணவர்களைப் போலவே இந்த நூலாசிரியர்களும் புராணக் கற்பனையை நடந்த வரலாறாகவே நம்பி, மாணவர்களையும் நம்ப வைத்துவிட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

இவ்வாறே தற்போதுள்ள 7ஆம் வகுப்புச் செய்யுள் பகுதியில் வரும் ‘சங்கரன் பெற்ற புண்கள்’ பாடல்பகுதிக் கதைகளும், ‘முப்புரம்எரித்தது’போலப் பற்பல புராணப் புனைவுகளும், வரலாற்றோடு குழப்பும் பகுதிகளாக நிறையவே உள்ளன… நல்லவேளை இந்தப் புராணங்களை வரலாற்றுப் பாடநூல்களில் சேர்க்காமல் போனார்களே?

விதியை வலியுறுத்தும் பாடப்பகுதிகள்!:
சிலப்பதிகாரப் பாடங்களில், அறிவுப்பூர்வமாகச் சொல்ல வேண்டிய பகுதி, கண்ணகியின் பாத்திரப் படைப்பு. ‘திருமணம் ஆனபெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு முற்பகுதிக் கண்ணகி உதாரணம் எனில், ஒருவேளை அப்படிஇருந்துவிட்டால் பின்னர் எப்படிஇருக்கவேண்டும் என்பதற்கே பிற்பகுதிக் கண்ணகி உதாரணம்’ என்றல்லவா சொல்லித் தரவேண்;டும்? அதைவிட்டு ‘சிலம்பு கூறும் மூன்று நீதிகள்;’ என்று கற்பைப் பற்றியும், விதியைப் பற்றியும் வலியுறுத்தவா சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது? ‘கற்பைப் பற்றி என்னவிளக்கம் சொல்ல வந்தாலும் அது பெண்ணடிமைத் தனத்தில்தான் முடியும்’ என்றுசொன்ன தந்தைபெரியார் இப்படிச் சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது சரிதான் என்று சொல்வாரா? 2003முதல் இப்போதுவரை பாடநூலாக உள்ள பத்தாம் வகுப்புச் செய்யுள் பகுதியில், பாடப்பகுதிக்கும் அப்பாற்பட்டு இந்த ‘மூன்று நீதிகள்’ நூல்குறிப்பில் தரப்பட்டுள்ளன! அதை மாணவர்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ கேள்வி-பதில் பகுதியிலும் ‘சிலம்புஉணர்த்தும் மூன்று நீதிகள் என்ன?’ என்று(பக்:39)சேர்த்திருப்பதன் நோக்கம் என்ன? ‘மாணவர்களின் விதி இதையெல்லாம் படித்துத்தான் ஆகவேண்டும்’ என்பது தானோ? ‘விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயடா?!’

சாதி ஒற்றுமையைப் படி! - குலப்பெருமையும் பேசு!:
தமிழ்நாட்டுப் பாடநூல் அனைத்திலும் முதல்பக்கத்திலேயே ‘தீண்டாமை ஒழிப்பு’ வாசகங்கள் இடம்பெற்றிருப்பது பொருத்தம்தான். உள்ளேயும் பல்வேறு பாட-செய்யுள் பகுதிகளில் சாதிஒழிப்பு மற்றும் சமத்துவக் கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. பாராட்டத்தான் வேண்டும். ஆனால், நுட்பமாகச் சில இடங்களில் நூலாசிரியர்களின் கவனக்குறைவு காரணமாக ---அல்லது மிகுந்த கவனத்துடன்--- இடம்பெறும் ‘சாதிய’ மற்றும் ‘குலப்பெருமை’ தகவல்களை என்ன செய்வது? 1997இல் --கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு-- வெளிவந்த பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூலில், ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ எனும் --குலக்கல்வித திட்டத்திற்கு ஆதரவான-- பழமொழிப்பாடல் இடம்பெற்றது எவ்வாறு? இதில், இந்தப் பாடலைமட்டும் தனியாக எடுத்துப் போட்டு ‘அணிவிளக்கம்’ தந்த சிறப்புக்கவனம் வேறு! பல தலைமுறைகளை நாசப்படுத்துமல்லவா இது?

இதேபோல, 1996வரை இருந்த தமிழ்ப்பாடநூலின் ‘கம்பராமாயண’ பாடற்பகுதியில் ‘இராமனின் குலச்சிறப்புகளை விளக்கச் சொல்லி’ ஒரு கேள்வி, அதே பகுதியில் கம்பர் ‘உவச்சர் மரபு’எனும் சாதிய விளக்கம் வேறு! இதைப் படிக்கும் மாணவர் நெஞ்சில், சாதிப்பெருமையும் குலப்பெருமையும் ஆழப்பதியுமே தவிர அது தவறு எனும் கருத்து வளராதே! இந்தக் கவலை பாடநூல் ஆசிரியர்க்கு இருக்கவேண்டாமா?!

பெண்ணடிமையை வலிறுத்தும் பாரதிதாசன்!:
ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் ‘குடும்ப விளக்கு’ பாடப்பகுதி இருந்தது. ‘பரவாயில்லையே! பெண்கல்வியை வலியுறுத்தும் சிறுகாவியமாயிற்றே!’ என்று மகிழ்ந்துபோனேன். அதுவே கொஞ்சம் அதிகமாகி, படித்தபெண்ணும் வீட்டுவேலைகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்னும்தொனி அதிகரித்துவிட்டதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதையும் தாண்டிக் கேள்விபதில் பகுதியிலேயே ‘ஒரு பெண் காலையில் எழுந்து செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன?’ என்று கோடுபோட்டுத் தருவதை பாரதிதாசனே மன்னிக்கமாட்டார். இதற்குக் காரணம் பாடநூலாசிரியர்தம் மண்டையில் ஊறிய பெண்ணடிமைத்தனமன்றி வேறென்னவாக இருக்கும்?

இல்லாவிட்டால், சிற்றிலக்கியப் பகுதியில், ‘உலா’வைப் பாடமாக வைக்கும் போதெல்லாம், ‘வீதிஉலா வரும் அரசனின் அழகைப் பார்த்து, ஏழுபருவப் பெண்களும் ‘ஆசைப்பட்டு’ புலம்புவதுதான் உலா’ என்னும் விளக்கம் மறக்காமல் தரப்படுவதேன்? ‘பேதைப் பருவ’(ஆறுவயது?!) பெண்ணுக்கும் அரசன்மேல் காமம்’ என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே ‘ஓவ’ரா இல்ல? ஒருபக்கம் ‘பெண்மைவெல்க’, ‘பெண் கல்வி’ என்னும் செய்யுள்கள், மறுபக்கம் ‘பெண்என்பவள் நுகர்பொருளே’எனும் கருத்தூட்டம்...ஏன்? (அறிந்தோ அறியாமலோ ‘ஆம்பளைக்கு ஏழுபருவம் கிடையாதா சார்?’ என்று கேட்கும் மாணவரிடம் மாட்டிக்கொள்ளும் ஆசிரியர்கள் பாவம்!)

ஆட்சி மாறினால் பாடநூல் மாறும்! உள்ளடக்கம் மாறாது! :
2004ஆம் ஆண்டுமுதல் இப்போது வரை தொடரும் 7ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் “பாரதரத்னா எம்.ஜி.ஆர்.”என்று 8பக்கப் பாடம் உள்ளது! அதிலும், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரமும், வாலியும் எழுதியுள்ள பாடல்கள் பலவற்றைப் போட்டு “… என்று எம்.ஜி.ஆர். பாடி நடித்துள்ளார்” என்று பாடம் வைத்தால் பிள்ளைகளின் பகுத்தறிவு வளர்ச்சிக்;குக் கேட்கவா வேண்டும்? வாழ்க அண்ணா நாமம்! வளர்க பெரியாரின் பகுத்தறிவு!
1996வரை இருந்த பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் அப்போதைய முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் ‘மதுவிலக்கில் மனப்புரட்சி’ எனும் பாடம் இருந்தது! ஆட்சி மாறிய அடுத்த -1997ஆம்- வருடம், அந்தப் பாடம் காணாமல்போய் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் ‘குறளமுதம்’ வைக்கப்பட்டது! இது ஒரு சிறு செய்திதான், இது போல 1979ஆம் வருட ஆரம்பப் பாடவகுப்பு ஒன்றில், மொரார்ஜி தேசாய் பாடமாக இருந்தார். அவர் மாறியதும், அடுத்தவருடம் அந்தப் பாடம் இல்லை. இது என்ன விளையாட்டு? ஆட்சி மாறினால், தலைவர்கள் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம், பாடம் வைக்கப்படும்போது, தலைமுறை கடந்த தலைவர்களாக இருப்பவரைத்தானே பாடநூல்களில் இடம்பெறச்செய்ய வேண்டும்? இதுபற்றிய அக்கறை வேண்டாமா?

இதே போலத்தான் 1996ஆம் ஆண்டுவரை இருந்த 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் பின்அட்டையில், “மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா” அவர்களின் பெண்மையைப் போற்றும் ஐந்துவரி வாசகம் இடம்பெற்றிருந்தது! இப்போது 2010இல் வந்திருக்கும் 6ஆம் வகுப்புச் சமச்சீர்க் கல்வித் தமிழ்ப்பாட நூலின் பின் அட்டையில் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு விளம்பரம் வந்துள்ளது!

பாடாய்ப் படும் பழமரபுக் கதைகள்:
பழமரபுக் கதைகள் நமது பெரும் சொத்து! அதிலிருந்து இன்றைக்குப் பொருந்துமாறு எடுத்தாள்வது எளிதான செயலன்று! பத்தோடு பதினொன்றாக அவற்றைப் பயன்படுத்தும்போது எதிர்விளைவே நிகழும்!
அரிச்சந்திரனைப் பற்றி அவன் ‘தன்னை இழந்து, தன்நாட்டை இழந்து, மனைவி-மக்களை இழந்தும் வாய்மையைக் காப்பாற்றி வரலாறாய் ஆனவன்’ எனும் பெருமை சொல்லப்படுகிறது. எனக்குத் தோன்றும் சந்தேகம், ‘அரசனின் கடமை மக்களைக் காப்பாற்றுவதா? வாய்மையைக் காப்பாற்றுவதா? என்பதுதான். வாழும் மக்களைக் காப்பாற்றாத அரசன், வாய்மையைக் காப்பாற்றி என்னசெய்யப் போகிறான்? இந்தக் கதை சரியானதா? அல்லது ‘பொய்மையும் வாய்மை இடத்த..’ திருக்குறள் சரியானதா? என் சிற்றறிவுக்கு எட்டியவரை, திருக்குறள்தான் சரி.
தனக்குக் ‘கற்றுக்கொடுக்காத’ துரோணாச்சாரிக்கு, குருதட்சணையாக கட்டைவிரலை வெட்டிக் கொடுத்த ஏகலைவன் செயல், ‘குருபக்தி’ என்றல்லவா போற்றப் படுகிறது! இதை ஆச்சாரியின் ‘குருத்துரோகம்’ என்றல்லவா சொல்லித்தந்திருக்க வேண்டும்? ஏனிந்தத் தலைகீழ்ப் பாடம்?
இதுபோல, மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித்தரப்பட வேண்டிய பலநூறு பழமரபுக் கதைகள் இன்னமும் அப்படியே சொல்லித்தரப்படுவதால், பழம்பெருமையாலல்ல அழுகிய கருத்துக்களால் அல்லவா எமது மாணவர்கள் அலங்கரிக்கப் படுகின்றனர்? சொத்து இருந்தும் பிச்சையெடுக்கும் எமதுநிலைக்குக் காரணம் இதுதான்!

இலக்கணம் என்னும் பெருஞ்சுமை !
‘போலப் புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே’ என்னும் நன்னூல் நூற்பா ‘உவம உருபுகள்’ எனும் பிரிவில் இலக்கணப் பாடத்தில் இடம்பெறுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சொல்லப்பட்ட 12உருபுகளில் ஒன்றுகூட இப்போது வழக்கில்இல்லை. (போல எனும்சொல் எழுத்துநடையில் மட்டுமே வருகிறது) ஆனால், வழக்கில் இருக்கும் உவமஉருபுச் சொற்கள் ‘மாதிரி’ ‘ஆட்டம்’ ‘கணக்கு’ முதலானவையே! ஏளிமையாக மனத்தில் நிற்கும் இவற்றை எழுதினால் மதிப்பெண் கிடைக்காது! மதிப்பெண் வேண்டுமெனில் வழக்கில்இல்லாத சொற்களை விழுங்கி செரிக்காமலே வாந்தி எடுக்க வேண்டும்! இதுதான், பெரும்பாலான இலக்கணப் பாடங்கள் இன்றைய மாணவர்க்குச் சுமையாக இருக்கக் காரணம்! இதற்கென்று பாடநூல் குழுவினர் கடுமையாக உழைத்தாக வேண்டும். இலக்கண மரபும், இன்றைய வழக்குச் சொற்களின் பொருளறிவும் மிகுந்த – முக்கியமாக மாணவர் நிலையில் யோசிக்கத்;தெரிந்த-- எதார்த்த அறிஞர்களை அழைத்துப் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், இலக்கணம் வெறும் மனப்பாடச் சுமையே எனும் கருத்தை மாற்ற இயலாது!

இதேபோல, வழக்குச் சொற்களைக் ‘கொச்சைச் சொற்கள்’ என்று சொல்லும் (ஏழாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் பக்:74) பண்டிதத் தனம் மாறியாக வேண்டும். பேச்சுமொழி வேறு, எழுத்து மொழி வேறு. இரண்டும் அதனதன் போக்கில் வளரும். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்…’ என்று வழக்கிற்கு முக்கியத்துவம் தந்து இலக்கணம் படைத்த தொல்காப்பியன் ஒன்றும் முட்டாளல்ல! மிகப்பெரிய மொழியறிஞன்! வழக்கிற்கு முக்கியத்துவம் தராத இலக்கணம் மொழிவளர்ச்சிக்கு உதவாது!

நிறைவாகச் சில சொற்கள்…
பாடநூல்கள் அடுத்த தலைமுறைக்கானவை என்னும் அக்கறையுடன், நமது தமிழின் விழுமியங்களுடன் இன்றைய வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் மொழிப்பயிற்சிகளுடன் சமகாலப் போட்டி உலகில் நமது மாணவர்கள் வெற்றிபெறும் கூர்மையுடன் இருக்கவேண்டும். சமச்சீர்க் கல்வி ஒரு நல்ல முயற்சிதான். அதிலாவது இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்பதே நம் நியாயமான எதிர்பார்ப்பு!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதார நூல்கள்: 1991-2010வரை வந்துள்ள 6,7,8,9,10 வகுப்புத் தமிழ்ப்பாட நூல்கள்.
கட்டுரை ஆசிரியரின் அலைபேசி: 94431 93293 இக்கட்டுரையை வெளியிட்டமைக்கு
நன்றி : ‘உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுச் சிறப்புமலர்- தீக்கதிர்’-18-06-2010
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, June 24, 2010

கவிஞனைச் சந்திக்க நேர்ந்தால்.


கவிஞனின் கவிதையை ரசித்தால்
வாசியுங்கள் மீண்டும் மீண்டும்..
வார்த்தைக்கு வார்த்தை அப்படியே
மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்
அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்
திறந்த வெளியில்
மேற்கூரையில்
தனியாக நின்று
தனக்குத் தானே
சொல்லிப்பாருங்கள்

ஆனால் வேண்டாம்
அந்தக் கவிஞனை
நேரில் சந்திக்கும் முயற்சிகள்
வேண்டவே வேண்டாம்.
அப்படியே எப்போதாவது
சந்திக்க நேர்ந்தால்......
கவிதை மீதான உங்கள் ரசனை
முட்டை ஓடுகளைப் போல
உடைந்துவிடக்கூடும்!

கவிதையைப் போல
கவிஞனின் உள்ளம்
அப்படியொன்றும் அழகானதல்ல.!
அவன் இதயம்
புதுப்புனலின் அலைகளைப் போல
பொங்கி எழுவதில்லை.
சாதாரண மனிதர்களின் நடுவில்
அவன்
ரொம்பவும் சாதாரணமானவன்.

கவிதையைப் படியுங்கள்
மறந்துவிடுங்கள் கவிஞனை!
எங்கோ எப்போதோ
அவனைச் சந்திக்க நேர்ந்தால்
காதலின் வசீகரத்தையோ
கவிதையின் ஆன்மாவையோ
தேடாதீர்கள் அவனிடம்.

(Translation from Indian Literature
sahitya akademi's bi-monthly journal
May-June 2009 No:251)

oriya poet Sunanda Pradhan

வரைபடம்


நட்சத்திரப் பூக்களை
ஒவ்வொன்றாய் அடுக்கி
வெந்நிற மேகத்தின் மார்பில்
யாரோ வரைந்த வரைபடம்

அந்த வரைபடத்தில்
கணக்கிலடங்கா பால்வீதிகள்
பவனிவரும் சூரியன்கள்
சந்திரன்கள்
நடசத்திரக் கூட்டங்கள்
கோள்கள்
எத்தனை எத்தனையோ உலகங்கள்
என்ணிலடங்கா பூமி உருண்டைகள்!

பசுமை நிறைந்தப் பூமி
பழுப்பு நிறத்தில் குன்றுகள்
பனிப்படர்ந்த மலைச்சிகரங்கள்
எண்ணிலடங்கா நதிகள்
கடல்கள் ஏரிகள்
மனிதர்கள் பறவைகள் பூச்சிகள்
மரங்கள் செடிகள்
மலர்கள் கனிகள்
எங்குப் பார்த்தாலும்
ஒளிமயமாய்
அழகாய் அந்தப் பூமி.

அந்த இனிய பூமியில்
சூரியக் கதிர்கள் சுட்டெரிப்பதில்லை
எல்லா இரவுகளிலும்
ஒளிவீசும் நிலவு வெளிச்சம்
புயல் காற்று புயல் மழையின்
அச்சம் இல்லை
கள்ளம் கபடமில்லாத
குழந்தையைப் போல
சாந்தமானக் கடல்
அடக்கமான இளம் பெண்களைப் போல
கரைகளை உடைக்காத நதிகள்
பாலைவனத்தைச் சந்திப்பதில்லை.
பருவமாற்றமோ சீற்றமோ
அறியாத அற்புத உலகம்!

தேன் சொட்டும் மலர்கள்
எப்பொதும் பூத்துக் குலுங்கும்
பசுமை நிறைந்த வெளி
பழுத்துத் தொங்கும்
தீஞ்சுவைக் கனிகள் நிறைந்த
தாழ்வான மரக்கிளைகள்.
வேண்டும் போதெல்லாம்
ஏரிநீரே
தித்திக்கும் பாலாக
மாறும் அதிசயம்.
புன்னகைத் தவழும் மழலையின் முகங்களுடன்
இந்த மண்ணின் மனிதர்கள்
அவர்கள் அறிந்ததில்லை
துன்பமும் துயரமும்.
பேராசை பொறாமை
கோபம் அச்சம்
விரோதம் வஞ்சகம்
இத்தியாதி வார்த்தைகளை
அறிந்திருக்கவில்லை
அவர்கள் அகராதிகள்.

துப்பாக்கிகளை
அணுஆயுதங்களை
சட்டங்களை
உருவாக்கும் வித்தைகளை
அறிந்திருக்கவில்லை அவர்கள்.

அவர்கள் அறிந்ததெல்லாம்...
ஒரு கைதேர்ந்த கலைஞன் உருவாக்கிய
இந்த வரைபடத்தை.
இதுவரை யாரும் உருவாக்காத
இந்த ராஜாங்கத்தை.
அற்புதங்கள் நிறைந்த
இந்தப் புண்ணிய தளத்தை!.


Translation from Indian Literature
sahitya akademi's bi-monthly journal
May-June 2009 No:251


Kum Kum Roy - Oriya Poet
poem - THE MAP
-----------------------------

Friday, May 14, 2010

பயணக்கட்டுரை

காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
====================================




பெருநகர வாழ்க்கை என் மண்ணையும் மனிதர்களையும் பார்க்கும்
ஏக்கத்தை என் போன்றவர்களுக்கு நிரந்தர வியாதி ஆக்கியிருக்கிறது.
வியாதி முற்றிவிட்டால் கோடைவெயில் என்று கூட பார்க்காமல்
ஓடிப்போய் எம் மண்ணில் கால்வைத்து திருவிழாவுக்கு வந்தக்
குழந்தை போல எல்லாவற்றையும் வாங்கி அப்படியே முழுங்கி..
புஞ்செயிலும் நஞ்செயிலும் கை அசைக்கும் காற்றாடிகளுடன்
சேர்ந்து நாமும் கை அசைத்து நட்சத்திரங்களை எண்ணி அடுக்கி
மாங்காய், பப்பாளி, புளி சாப்பிட்டு இளநீரையும் மோரையும்
பருகி வேப்பம் பூ மணத்தை அனுபவிக்கும் சுகம் இன்றைக்கும்
இருக்கத்தான் செய்கிறது. அந்த சுகமான அனுபவங்களின் ஊடாக
வள்ளியூருக்கு அருகிலிருக்கும் பாம்பன்குளத்தில் சில நாட்கள்...
உண்டதும் கண்டதும் உணர்ந்ததும்..

வள்ளியூரில் நுங்கு சர்பத்
--------------------------
.நண்பர் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் தினப்பாடு கவிதையை யுகமாயினியில்
வாசித்தது முதல் எங்க ஊரு நுங்கு சாப்பிடும் ஆசை நாளுக்கு நாள்
அதிகமானது. நினைத்தவுடனேயே நுங்கு அப்படியே வாய்க்குள்
'லபக்டபக்' என்று வழுக்கி வழுக்கி அப்படியே தொண்டைக்குள்
இறங்கும்போது ஒரு சுகம் வருமே...ம்ம்ம்ம் ஆஅ.. அனுபவித்தால்
மட்டுமே அந்தச் சுவையைப் புரிந்து கொள்ள முடியும்!

சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அப்படியே சென்னைக்கு அக்கா மகன் திருமணத்திற்கு
போனவள் வள்ளியூருக்கு ஒரு ஓட்டம் ஓடி வள்ளியூர் கடையில் நுங்கு சர்பத்
வாங்கி கரண்டியால் எடுத்து உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டே
யுகமாயினி சித்தனுக்கு ஒரு போன்போட்டு நுங்குசர்பத் குடித்துக் கொண்டிருப்பதைச்
சொன்னபிறகுதான் ஒரு சின்ன சந்தோஷம்!


அனாதையாகிப்போன சாமி:
-----------------------------



எங்க ஊருக்கு கால்நடைகளுடன் வந்து குடியேறிய மூதாதையர் குடியேறிய
இடத்தில் கும்பிட ஒரு தெய்வம் வேண்டுமென்று மலையாளத்து சாமியார்களிடம்
கேட்டார்களாம். அவர்களும் மண்கலயத்தில் சாமியைப் பிடித்து அடைத்து
கொடுக்க அதைக் கொண்டுவந்து தோட்டத்தில் வைத்து கும்பிட்டு வந்தார்களாம்.
சேவல் கோழி பலி கொடுத்து கும்பிடுவது வாடிக்கை. காலப்போக்கில் அவர்கள்
சாமியைக் கொண்டு வைத்த இடத்தில் என் கணவரின் மூதாதையர் வீடுகட்டி
குடியேறினார்கள். வழக்கம்போல சாமிக்கு சேவல் அறுத்து பூஜை செய்வது
தொடர்ந்தது. பின்னர் சாமியைக் கும்பிட்ட அந்தக் குடும்பத்தார் அனைவரும்
கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டார்கள். சாமியை யாரும் கவனிக்கவில்லை.
சாமி அனாதையாகிவிட்டாரே என்று கவலைப்பட்ட என் மாமியாரும் பக்கத்துவீட்டு
இப்படி நம்ம இரண்டு வீட்டு திண்ணைகளுக்கும் நடுவிலிருக்கு சாமியை
அம்போ என்று விட்டுவிடலாமா.. கொண்டுவந்தவர்கள் சாமியைக் கைவிட்டுவிட்டாலும்
நாம கைவிட்டுவிட்டால் நல்லாயிருக்கா என்று சாமி மீது பரிதாபப்பட்டு
இனிமேல் அவரைக் கவனித்துக் கொள்வது நம் பொறுப்பு என்று ஓர் எழுதாத
தீர்மானத்தை போட்டுக்கொண்டார்களாம். அதன்படி... இன்றுவரை
பசு மாடு ஈனினால், கன்னுக்குட்டிக்கு வயிற்றுவலி வந்து ரத்தம்ரத்தமா சாணிப்
போட்டால் மேயப்போன மாடு காணாமல் போய்விட்டால்... இப்படியாக கால்நடைச்
சம்பந்தப்பட்ட சகல கோரிக்கைகளையும் சாமியிடம் வைத்து கும்பிட்டுக்கொண்டு
இருக்கிறார்கள். என்ன இப்போது நாங்கள் சேவல் பலி கொடுப்பதில்லை!
சர்க்கரைப்பொங்கல் டேஸ்ட்டுக்கு சாமியை மாற்றிவிட்டோம்.


கருப்பட்டி புண்ணாக்கு
------------------------
இந்த எங்கள் சாமிக்கு பூஜை செய்ய இந்த முறை சாமான்கள் வாங்க நானே
முன்வந்தேன். எப்படியோ நுங்குசர்பத் சாப்பிட வள்ளியூருக்கு ஆட்டோவில்
போகிறோம் வாங்கிவந்துவிடலாம் என்று எண்ணி ஒத்துக்கொண்டேன்.
தேங்காய் மூன்று, இரண்டு இளநி, இரண்டு சீப் வாழைப்பழம், பத்தி, சந்தணம், குங்குமம், திருநீறு, சாம்பிராணி, மூனு மாலை, கொஞ்சம் விடுபூ, வாழைஇலை,
வளக்கெரிக்க எண்ணெய் , திரி இத்தியாதிகளுடன்
பயாச சாமான்கள் இத்துடன் சாமிக்கு வைத்துக்கும்பிட கருப்பட்டி புண்ணாக்கு.
இதில் லிஸ்ட் எழுதும்போதே கருப்பட்டி புண்ணாக்கு என்பது எனக்குப் புதிதாக
இருந்தது. சாமிக்கு வச்சி கும்பிடற கருப்பட்டி புண்ணாக்கு என்று சொல்லுமா
எந்தக் கடையிலுல் குடுப்பாங்க... என்று சொல்லி அனுப்பினார்கள்.
வள்ளியூரில் கடை கடையா கருப்பட்டி புண்ணாக்கு கேட்டு அலைந்தேன்.
திடீரென பெய்த கோடை மழையில் வள்ளியூர் ரோட்டில் தண்ணீர் ஓடியது.
ஒர் ஆட்டோவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடை கடையாக கருப்பட்டி
புண்ணாக்கு கேட்டால்...

"ஏம்மா.. கருப்பட்டி புண்ணாக்கா.. அப்படி நாங்க கேள்விபட்டதே இல்லியே.
எள்ளுப் புண்ணாக்குத்தான் இருக்கு. வாங்கிட்டுப்போங்க.."
இல்ல.. இல்லா எனக்கு நல்லா தெரியும். அத்தை கருப்பட்டி புண்ணாக்குனுதான்
சொன்னாங்க..னு உறுதியாக நான்.
ஆட்டோ டிரைவரும் 'கருப்பட்டி புண்ணாக்கு கேள்விப்படலியே, அக்கானு"
சொல்ல வேறுவழியின்றி எள்ளுப்புண்ணாக்கு வாங்கிக்கொண்டு போனேன்.
வள்ளியூரில் பெய்த மழை பாம்பன்குளத்தில் பெய்யவில்லை.
ஏன் தெரியுமோ..? நாங்க எங்க திண்ணையிலிருக்கும் சாமிக்கு பூஜை
செய்யப்போறதாலனு அத்தை சொன்னார்கள். ம்ம்ம் அவர்கள் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்.

ஒருவழியாக பூஜை முடிந்தப் பின் தெரிந்தது... கருப்பட்டி புண்ணாக்கு கதை.
கருப்பட்டியும் புண்ணாக்குமாம். கருப்பட்டி + புண்ணாக்கு.
அவர்கள் சொன்னவுடன் என் முகத்தில் அசடு வழிந்ததை அப்படியே சாமிமீது
பயபக்தியுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டு சர்க்கரைப் பொங்கலை
ஒரு வெட்டு வெட்டுவதில் குறியாக இருந்தேன்.
ஊருக்குப் போனால் "ந்நோ டு டயட் கண்ரோல்"


எங்க ஊரு விளம்பரங்கள்:
---------------------------

விளம்பரங்களில் பிதுங்கி கசிந்து சிந்தி சிதறி சந்தி சிரிக்கிறது
எம் தமிழகச் சாலைகள்.
பெருநகரங்கள் மட்டுமல்ல, குக்கிராமங்களிலும் பிஸ்லரி பாட்டிலும்
இலவசமாக எம் தமிழனத்தலைவர் வழங்கிய தொலைக்காட்சியில்
மாமன் மச்சான் நண்பன் திருமண வாழ்த்துகள் தனித்தனி செய்திகளாக
வண்ண வண்ண புகைப்படங்களுடன் ஓடி என்னை ஆச்சரியப்படுத்தியது.
மட்டுமல்ல..
இவர்களுடன் சேர்ந்து அவரவர்களின் சினிமா கதாநாயகர்கள்,
விஜய், தல, சிம்பு, ஏன் வடிவேலு வரை... வந்து இவர்களுடன் சேர்ந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கம்போல கொடைவிழா அழைப்பிதழ்களுடன் பூப்புநன்னீராட்டு
விழா அழைப்புதழ்களும் பெரிய போஸ்டர்களாக அச்சிடப்பட்டு நீக்கமற
நிறைந்திருந்தது எங்கள் கிராமத்து சுவர்கள்.

சென்னை பெருநகரத்தில் தொல். திருமாவின் சுவரொட்டிகள், விளம்பரங்கள்
கொஞ்சம் அதிகமாகவே கண்ணில் பட்டது என்றால் தமிழனத்தலைவருடன்
தளபதியும் சேர்ந்திருக்கும் போஸ்டர்கள் ..இது புதிதாக எழுதப்படாத சட்டமாக
வந்திருக்குமோ.. மாவட்ட வட்ட நகர பெருநகர பஞ்சாயத்து சகலத்திலும்
சக்கரவர்த்தியுடன் சேர்ந்திருக்கும் இளவரசர் .. தெற்கே போகப்போக...
சக்கரவர்த்தியுடன் சேர்ந்து எங்க மதுரை இளவரசு படமும் போஸ்டராக
இருந்தது. இதுவே தமிழ்நாட்டின் வடக்கு தெற்கு மாநிலங்களுக்கான மிகப்பெரிய
வேறுபாடாக சரித்திர பேராசிரியர்கள் என்னுடைய இந்தப் பயணக்கட்டுரையிலிருந்து
முடிவுக்கு வரலாம்.

தோழர் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி அவர்களைச் சந்திக்க வள்ளியூரிலிருந்து
நெல்லை. வயக்காடெல்லாம் வீட்டுமனைகளாகி அடுக்குமாடிகளாகி..
ரொம்பவே மாறித்தான் இருக்கிறது எங்க ஊரு.
ஆனால் திகசி மாறவே இல்லை. தள்ளாத வயதிலும் மாத்திரைப் போட்டுக்கொண்டு
சமுதாய மாற்றங்கள் குறித்தும் செம்மொழி மாநாடு குறித்தும் மாவோயிஸ்டுகள் குறித்தும் நிறையவே பேசுகிறார். அவரிடம் தமிழகத்தின் விளம்பரங்கள்
குறித்து பேசிய போது திகசி க்குத் துணையாக இருக்கும் தோழர் வள்ளி
புதிதாக இன்னொரு செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.
மதுரையில் இழவு வீட்டு நிகழ்ச்சிக்கு மூன்றுமணி நேரத்துக்கு மேல் ஓடுகிற
திரைப்பட சோகப்பாடல்களின் குறுந்தகடு கடைகள் இருக்கிறதாம்.
குறுந்தகடை வாங்கி இழவு வீட்டில் சோக ராகத்தை ஒலிக்க வைத்துவிடுவார்களாம்.
ஒப்பாரிப் பாடல்களும் குறுந்தகடாக கிடைக்கிறதாம்.

அடுத்தமுறை நான் ஊருக்குப் போகும்போது மாமன்மகள் வயசுக்கு வந்ததை
போஸ்டர் போட்டு கொண்டாடும் மக்கள், அவள் முழுகாமல் இருப்பதையும்
போஸ்டர் போட்டு அறிவித்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை!



பேருந்தில் ஊனமுற்றவர்கள் என்று எழுதப்பட்டிருந்த எல்லா பெயர்ப்பலகைகளும்
எடுக்கப்பட்டு " மாற்றுத்திறனாளிகள்" என்று மாற்றப்பட்டிருந்தது.
மிகவும் குறுகிய காலத்தில் இந்த நல்லதும் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக
பாராட்ட வேண்டும் அரசை.
அத்துடன் பேருந்தில் பயணம் செய்யும் போது திருவள்ளுவரின் திருக்குறளுடன்
சேர்ந்து இன்னொருவரின் பொன்மொழிகளும் வாசிக்க கிடைக்கின்றன.

நான் வாசித்த பொன்மொழி:
-------------------------------

" நான், நீ என்று சொன்னால் ஒட்டாத நாக்கு நாம் என்று சொல்லிப்பாருங்கள்.
ஒட்டும் - கலைஞர்"

இப்படி புதிதாக முளைத்திருக்கும் பொன்மொழிகளை அரசு பேருந்துகளில் வாசித்த
அனுபவத்தை மட்டும் ரகசியமாக சொல்லுகிறேன். நீங்களும் எல்லோரும்
வாசித்திருப்பீர்கள். என்னை விட பாக்கியசாலிகள் நீங்கள். இப்படி புதிய பொன்மொழிகளை நிறைய அரசு சார்பாகவே வாசிக்கும் அனுபவம் என்னைவிட
உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. இதெல்லாம் சரியா தவறா என்று யோசிக்க
உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. பிறகென்ன... இலவசமாக தொலைக்காட்சி
மட்டுமா.. கேஸ் அடுப்பும் கொடுக்கப்போகிறார்களாம் எங்கள் ஊரில்.
எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிகள் இருப்பதால் இப்போதெல்லாம் யாரும்
திண்ணையில் உட்கார்ந்து பழங்கதைகள் பேசுவதில்லை!

பக்கத்து வீடுகளுக்குப் போனால் எல்லாரும் ரொம்ப ப்ஸியாக இருக்கிறார்கள்
மெகாத்தொடர்கள் பார்த்துக்கொண்டு. நாம்தான் அவர்களுக்குத் தொந்தரவாக
வந்துவிட்டோமோ என்று சொரணை வந்து நாமே எழுந்துவந்துவிட வேண்டியதுதான்.
ஒருதாய் ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டார் அவருடைய மகனுக்கு அறுவைச்சிகிச்சை நடக்க இருப்பதைச் சொல்லி. என்னவென்று விசாரித்தப்போது
மகனுக்கு வியாதிவந்துவிட்டதையோ அறுவைச்சிகிச்சையையோ நினைத்து
வருத்தப்பட்டதைவிட கலைஞரின் காப்பீட்டு திட்டத்தில் இந்த வியாதி, இந்த
அறுவைச்சிகிச்சை இடம் பெறவில்லையே என்றுதான் ரொம்பவும் வருத்தப்பட்டுக்கொண்டார். அவரே சொன்னார்..
"கவலையை மறக்க டி.வி. இருக்கு,
எவகிட்டேயும் போயி பாடு பழக்கம் பேசனும்னு இல்ல"

வாழ்க அரசு.. வளர்க... அவர்களின் இலவசத் திட்டங்கள்.
----------

விலைமதிப்பில்லாத
வாழ்க்கை
மிதக்கிறது.
இலவசங்களில்

யாருக்கும் நீந்திக்
கரையேறுவது பற்றி
அக்கறையில்லை.
மிதப்பதே சுகம்
உதவி 24X7 டாஸ்மார்க்

எதிர்நீச்சலென்று
எவன் பேசினாலும்
எதிரி.
அடி தடி வெட்டு
எரி எரி
உயிருடன் எரி.
எவனிருக்கான்
ஏன் என்று கேட்க.




மும்பை.
12/05/2010









..

Wednesday, April 21, 2010

குறுஞ்செய்திகள்



குறுஞ்செய்திகளின்
எல்லைத் தாண்டிய
தீவிரவாதம்
எங்கள் பிரதேசத்தில்
செத்துப் போன மனிதவாடை.

தனிமையின் இருளை
விரட்டிய வானம்பாடிகள்
காணாமல் போய்விட்டன.
காதலைக் கொண்டாடிய
சிட்டுக்குருவிகள்
எட்டிப் பார்ப்பதில்லை
எம் சன்னல்களை.
கூட்டம் கூட்டமாய்
கொல்லைப்புறத்தில்
எப்போதும் கூடும்
காக்கைகள்
விருந்துவரவில்லை என்பதால்
வேறு எங்காவது
போயிருக்க கூடும்.

ஆண்டுக்கு ஒருமுறை
பிறந்தநாள்
திருமணநாள்
பொங்கல் தினம்
பெண்கள் தினம்
வாழ்த்துகளாக
ஒலித்துக்கொண்டிருந்த
அமுதராகங்கள்
ஊமையாகிவிட்டன..

எல்லோருக்கும்
எல்லா வாழ்த்துகளையும்
நகலெடுக்கும் வரிசையில்
நிரம்பி வழிகிறது
குறுஞ்செய்திக் கூடம்


எனக்கே எனக்கான
எந்தச் செய்தியும்
குறுஞ்செய்தி அலைவரிசையில்
இல்லை என்றாலும்
வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை.

Saturday, March 27, 2010

ஆதவன் தீட்சண்யா - 20


ஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி
என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள்.
இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது.
விநோதங்கள் நிறைந்த எங்கள் மும்பை வாழ்க்கையில்
இதெல்லாம் ரொம்பவும் சர்வ சாதாரணமான ஆச்சரியங்கள்தான்.

தவமாய் தவமிருந்து தமிழ்த்தாய் பெற்றேடுத்த தவப்புதல்வன் என்றெல்லாம்
ஆ.தீ பற்றி சொல்லிக்கொள்ள எதுமில்லை என்பதால் அவருடைய பிறப்பு,
வளர்ப்பு அத்தியாயங்களை வாசிக்காமல் விட்டுவிடலாம்.

இத்தனைக் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் என்றெல்லாம் கணக்கெடுப்பு
நடத்தி பட்டியல் போட்டு தொங்க விடுவதால் மட்டுமே இலக்கிய உலகில்
இடம் பிடித்துவிடலாம் என்றால் அதற்கு தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் இவர் நிச்சயமாக இல்லை.

ஆதவன் சொன்னதை ஆதவனின் பொன்மொழிகள் என்று தொகுத்து
உங்களிடம் வாசித்துவிடலாம் என்றால் இதுவரை தொகுக்கப்பட்ட
வாசிக்கப்பட்ட பொன்மொழிகளை வைத்துக்கொண்டு ஒரு பிஸ்கோத்தும்
வாங்க முடியவில்லை என்பதால் ஆ.தி. 20 என்ற தலைப்பில் அவரைப்
பற்றிய சிறப்பு அம்சங்களைத் தொகுத்து அவருடைய மொழியிலேயே
உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
(அது என்ன ஆதி 20 என்று யாராவது மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள
வேண்டாம். இன்றைக்கு மார்ச் 20 என்பதால் ஒரு நினைவுக்காக, அம்புட்டுதான்)

இனி,


*என் எழுத்துகளின் இலக்கு,
நிச்சயமாக எந்த பீடத்தையும் அலங்கரிப்பதற்காகவோ ஏதாவது விருது வாங்குவதற்காகவோ அல்ல. என் மக்களின் துன்ப துயரங்களைச் சொல்லி
என்மக்களிடமே ஒப்பாரி வைப்பதும் என் நோக்கமல்ல. எழுதப்படிக்கத்
தெரிந்தவர்களில் பெரும்பாலோர் தலித்தல்லாதவர்கள் என்கிற நிலையில்
அவர்களது வாசிப்புக்கு செல்கிற எனது ஆக்கங்கள், அவர்களது மனசாட்சியோடு
ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கொஞ்சம் அகங்காரம் போல தெரிந்தாலும் நான் மனிதன், நீ யார் என்று
ஒவ்வொரு ஒடுக்குமுறையாளரையும் என் படைப்பின் வழியே கேட்க விரும்புகிறேன்.

*
இலக்கியத்தின் மீது புனிதக்கலவையை பூசி மெழுகுகிற கொத்தனார்கள் சிலபேர்
என்னிடம் "ஆண்ட்டி லிட்டரேச்சர் டோன்" இருப்பதாக குற்றம் சாட்டுவதுண்டு.
என்னையும் என் மக்களையும் பொருட்படுத்தாமல் எழுதப்பட்ட எழுதப்படுகிற
குப்பைகளை அவர்கள் இலக்கியம் என்று கொண்டாடுவார்களேயானால் அந்த
இலக்கியத்திற்கு எதிராக நான் செயல்படுகிறவந்தான்.

*
கம்பராமாயணத்தை மொழி ஆளுமைக்காகவும் கம்பனின் கற்பனைக்காகவும்
இலக்கியம் என்ற ளவில் ரசிக்கலாம். அதைவிட்டு கற்பனைக் கதையை
உண்மை என்று நம்பி ராமன் எப்பேர்பட்டவன் தெரியுமா? என்று பேசுபவர்களோடு
நான் உடன்படவில்லை.

*
ஜீவா இலக்கியங்களை நிராகரிக்கும் போக்கு ஏற்பட்டபோது அதைத் தூக்கிப்
பிடித்தார். அதற்காக ராமனைக் கொண்டாடவோ அவனை வழிபடவோ செய்யவில்லை.

*
ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன்
என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் துவங்கிய
அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான்
என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

*
வர்க்க நீக்கம் ( declassification) செய்து கொள்வது போலவே சாதிநீக்கம் (decastification) என்பதன் அவசியத்தை இடதுசாரிகள் புரிஞ்சிருக்காங்க. கன்னட பார்ப்பனரான சீனிவாசராவி போய்தானே தஞ்சாவூரிலே மக்க்ளைத் திரட்டறாரு. அவரு சாதிய கைவிட்டுவிட்டுதானே போறாரு.

*
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே
ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்கிறவர்களிடமே
தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். ஒடுக்குகிறவனைப் பார்த்து
நீ அவனை ஒடுக்குகிறாய் என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான்
இருந்தது.

*
அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக் கொண்டு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள்.
இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள்
பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு மனமிரங்காத அரசும்
அதிகாரிகளும் ஒருவேளை பட்டினிப் போராட்டதைப் பார்த்தா மனமிரங்கப்
போகிறார்கள்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற
போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

*
சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டு தன்னைக் கொண்டாட வேண்டும் என்று
எதிர்ப்பார்ப்பது அபத்தமான காரியம்.

*
கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால்
உழவனையோ தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டுவிடுமா?

*
ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம்.
ஆனால் தமிழ்ச்சமூகம் 7கோடி மக்களைக் கொண்டது. இந்த இலக்கியம் குறித்து
தெரியாமலேயே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு
எப்படி பொருந்துவது என்றுதான் யோசிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு
நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்துவிட்டால் எந்த மாற்றமும்
நடக்காது.

*
நீ எங்கள் பக்கம் இல்லை என்றால் பின்லேடன் பக்கம் தான் என்கிற ஜார்ஜ்
புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப் பிரிப்பை செய்து
கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்காரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும்
உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்கிறார்கள்.
அம்பேத்காரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராக களமிறக்கும்
இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பி இருக்கிறார்கள்.
ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாக தொடர வேண்டியிருக்கிறது.

*
மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் .. இந்த மூன்றின் பொதுப்பண்புகளை
உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நம் புரிதலே யன்றி மூன்றும்
ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள்
அல்ல.

*

பெரியாரியம் மார்க்சியம் அம்பேத்கரியம் இணைந்து செயல்படும் தளம்
வெறும் கனவாய் முடிந்துவிடுமோ என்கிற என் போன்ற திராவிடர் இயக்காரர்களின்
உணர்வுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாய் உள்ளது ஆதவனின் கருத்துகள்
என்கிறார் நீலகண்டன்.

*
அழியாக் கவிதை நோக்கி ஆதவனின் பேனா அசைகிறது : என்கிறார்
ச.தமிழ்ச்செல்வன்.

*
தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தொகுத்தால்
அதில் ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை இடம்பெறும் என்கிறார்
எழுத்தாளர் பிரபஞ்சன்.

* அடியில் கையொப்பமிட்டு ஆ.தீ.வாகிய நான் பூரண சித்த சுவாதீனத்துடன்
எழுதிய கவிதைகள் என்று அவர் உறுதிமொழி தந்திருக்கும் கவிதைகளிலிருந்து
3 கவிதைகள்.


மூன்று கவிதைகள் உங்களுக்காக..

கவிதையின் தலைப்பு: ஆமென்.

மரமாக வளர்ந்தது
தண்டனைக்குரிய குற்றமில்லை
ஈராயிரமாண்டுகளின்
துருவேறிய ஆணிகளைப் பிடுங்கி
விடுவியுங்கள்
சிலுவைகளை.

*

கவிதையின் தலைப்பு: வரம்.

ஆத்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா]
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்.

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பளசாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.

*

கவிதை தலைப்பு: கவனமாய் கடக்கவும்.

துர்சொப்பனங்களில் நெரிப்பில்
படுக்கையில் மூச்சா போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப் போல அச்சமூட்டக்கூடும்.
எழுத்திலிருந்து துண்டித்து மேலே தெரியும்
மெய்யெழுத்துப் புள்ளி
தலைவேறு முண்டம்வேறாய் தரிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தும்.

ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப் போல தெரியும்.

என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
நடுக்கற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்

ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்
அடுத்தடுத்த பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துகளாலாகி
நீங்கள் யாவரும் வெறுக்கத்தக்கவொரு
கவிதை இருக்கிறது.

----

ஆதவன் தீட்சண்யாவின் கவனமாய் கடக்கவும் என்ற எச்சரிக்கை வரிகளை
நினைவூட்டி உங்களை அச்சப்படுத்துவது என் நோக்கமல்ல.
ஆதவன் தீட்சண்யா அற்புதமான காதல் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்
என்பதை என் செய்தியாக பதிவு செய்து விடை பெறுகிறேன்.

Monday, March 1, 2010

எதிர்வினைகளும் என் தரவுகளும்

கீற்று ஆசிரியர் எனக்கு அனுப்பிய ரவி ஸ்ரீநிவாசன் அவர்களின் கடிதம்:

From: Editor, keetru.com (editor@keetru.com)
Sent: 26 February 2010 22:42PM
To: puthiyamaadhavi@hotmail.com
FYI

---------- Forwarded message ----------
From: ravi srinivas
Date: Fri, Feb 26, 2010 at 6:38 PM
Subject: Khans vs Gandhis - article in Keetru
To: Editor


Dear Editors
The article by Puthiya Madhavi has some information on Feroze Gandhi. How authentic is that information. What is the proof for இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி ஆனார்? யார் காரணம்? இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான் பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும் பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான்
She writes
சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின் சத்திய சோதனையில் இந்தப் பெயர் மாற்றக் கதை மட்டும் மிஸ்ஸிங்.!!
If you go through his autobiography you will find that it covers only some part of his life. Major events in his life and in the freedom struggle were not covered as they happened later. The second part of his autobiography was published in 1929. Feroze Gandhi married Indira Nehru in 1942. The website of Indian Parliament states
http://164.100.47.132/LssNew/biodata_1_12/713.htm

Second Lok Sabha
Members Bioprofile


GANDHI, SHRI FEROZE, Cong., (Uttar Pradesh—Rae Bareli—1957): S. of Shri Jehangir Gandhi; B. Bombay, September 12, 1912; ed at London School of Economics, London; m. Shrimati Indira Nehru, March 26, 1942; 2 S.; Managing Director, Associated Journals Ltd.: Publisher 'The National Herald" and "The Navjivan"; Member, Provisional Parliament, 1950—52, and First Lok Sabha, 1952—57.

Hobby: Printing.

Permanent Address: C/o "The National Herald" Lucknow.

[Voting results at the Election:

Electorate: 8,06,589

Shri Feroze Gandhi .. 1,62,595

Shri Nand Kishore .. 1,33,342

Shri Raghavendra Datt .. 94,109]
So what is the evidence for the allegations and accusations she has made.Is she willing to cite from authentic sources to substantiate her claims particularly about the parents of Feroze Gandhi . She even accuses Mahatma Gandhi. Is she willing to provide evidence for her remarks against him.

She can either prove her claims and if she cant she has to tender an unqualified apology for making such allegations and deragotory remarks and withdraw her entire article. If any congress functionary or politician decides to file a case against you and her for publishing a defamtory article you will be in deep trobule, unless you or she is able to prove the claims made in her article to the satisfaction of the court. Feroze Gandhi was no ordinary person. He was dead long ago but the article was not just on him as the author had accused the Father of Nation also.

As a publisher you have to be aware of laws relating to defmation, cyberspace and freedom of expression. Ignorance is no excuse. Please understand this. Dont allow contributors to Keetru to misuse Keetru for spreading lies and making defamatory statements. Please understand your liabilities under the law and running a website for publishing articles and providing digital versions of magazines does not grant you any blanket exemption from the laws of the land.

You check whether her whether she has evidence for what she has stated in the article.Gossip and hear says are not credible evidences before law. If a case is filed for defamation, she cannot state that her article is based on info. found in some sites and get away with that because she has made defamatory statements.
thanks for your attention
ravi srinivas




--
என்றும் அன்புடன்,
கீற்று நந்தன்



என் தரவுகள்:



கீற்று ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கடித்தத்தை எனக்கு அனுப்பி இருப்பதற்கு நன்றி. அவருடைய அறச்சீற்றம்
பெருமைக்குரியது தான். எனினும் உண்மைகளை எவரும் புதைத்துவிட முடியாது.கட்டுரைகள் எழுதும் போது அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் நான் எழுதுவதில்லை. ஆதாரங்களை வேண்டுமென்றே தான்
தவிர்த்தேன். தேவையில்லாமல் சிலரின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்கும் இன்னொரு
பக்கத்திற்கு செல்வதைத் தவிர்க்கும் நோக்கம் மட்டும்தான்.
என் கட்டுரையின் நோக்கம், கான் காந்தியாக்கப்பட்டது ஏன் என்பதும் அதை காந்தி எவ்விடத்திலும்
பதிவு செய்யாமல் மவுனம் காத்ததும் தான்.

என் கட்டுரைக்கான ஆதாரங்கள்:

1) http://www.sikhsundesh.net/nehru_dynasty.htm
Nehru Dynasty என்ற புத்தகத்தைப் பற்றி Harmohan Singh walia
எழுதியிருக்கும் குறிப்புகள்

2)Indira Gandhi's new biographer Katherine Frank - Indira: The Life of Indira Nehru Gandhi;



3) http://www.outlookindia.com/article.aspx?211174
& India today apr02, 2001 regarding kartherine frank book



4) The love saga of Gandhi family by Sharon Supriya
இவர் Nehru Dynasty ல் எழுதப்பட்டிருக்கும் கான் காந்தியான விசயத்தை
ஏற்றுக்கொள்கிறார்.

5)Marriage to Feroze Khan Gandhi
http://en.wikipedia.org/wiki/Indira_Gandhi#Marriage_to_Feroze_Khan_Gandhi
File:The marriage ceremony of Feroze Khan Gandhi and Indira Gandhi, 26 March 1942 at Anand Bhawan, Allahabad.jpg

When Indira and Feroze Khan Gandhi (then only Feroze Khan) returned to India, they were in love and had decided to get married, despite doctors' advice.[5] Indira liked Feroze's openness, sense of humor and self-confidence. Nehru did not like the idea of his daughter marrying and sought Mahatma Gandhi's help to dissuade their love relationship. Mahatma Gandhi as a solution adopted Feroze Khan and gave him his name hence the name Feroze Khan Gandhi or Feroze Gandhi. Indira was adamant and the marriage took place in March 1942 according to Hindu rituals.[6]



6) From: http://www.expressindia.com/news/ie/daily/19980210/04150074.html
Dynasty keeps away from Feroze Gandhi's neglected tombstoneIndia
BY Coomi Kapoor
இந்தியன் எக்ஸ்பிரஸ் 1998, பிப், 10 ஃப்ரோஸ்காந்தியின் கல்லறை குறித்து பேசுகிறது.
பார்சிகள் கல்லறை கட்டுவது இல்லை.


7) http://www.youtube.com/watch?v=m8szEazLkTw

ஜெயா டி.வி (தமிழ்) இந்திரா- ஃப்ரோஸ்கான் காந்தி திருமணத்தைப் பற்றி
சொல்லும் you tube ஒலி, ஒளி காட்சிகள்.

8) எல்லாவற்றுக்கும் மேலாக இந்திராவின் இளைய மருமகள் மேனகாகாந்தி
இந்திரா மீது தொடுத்த வழக்கு. ஆதாரம் newyork times, may 2, 1984
"Around the world, Mrs Gandhi not HIndu by maneka gandhi.
அந்த வழக்கில் இந்திராவுக்காக வாதாடிய வக்கீல் காட்டிய ஆதாரம்
இந்திரா அவர்கள் இந்து முறைப்படியும் வைதீக திருமணம் செய்து கொண்ட
புகைப்படங்கள்.

மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று
சம்மந்தப்பட்ட புத்தக ஆசிரியர்கள், மேனகா காந்தி , ஜெயா டி.வி , விக்கிபிடியா
ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் என் கட்டுரையை நீக்குவது பற்றி எனக்கு எவ்வித
ஆட்சேபனையும் இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ்க்கும் கீற்றுக்கும் என் நன்றியும் வணக்கங்களும்.

அன்புடன்,


புதியமாதவி,
மும்பை.

Tuesday, February 23, 2010

KHANS vs GANDHIS




MY NAME IS KHAN திரைப்படம் உள்ளூர் அரசியல் தாதாகிரி தனங்களால்
மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில் திரையிடப்பட்டது மும்பையில்.
அதனாலேயே நிறைய ஸ்டார் அந்தஸ்த்தை திரைவிமர்சன ஊடகத்தில்
மிகவும் எளிதாகவும் பெற்றது. My name is khan, iam not a terrorist
இதுதான் கதையின் மையம். வழக்கம் போல கரண் ஜோகரின் காட்சி
அமைப்புகள் வெளிநாட்டு கதை தளம் ,. கதாநாயகன் பெஞ்சில்
உட்கார்ந்திருக்கும் காட்சி , இத்தியாதி நிறைய சொல்லிக்கொண்டே
போகலாம்.

பம்பாய் , ரோஜா, நாயகன் என்று இந்தியாவின் வெவ்வேறு இடங்களை
கதைத்தளமாக்கி இந்திய முகத்துக்கு ஏற்ற மாதிரி நடிகைகளைத் தேர்வு
செய்து இந்தியாவின் பெருநகரங்களில் வசூலை அள்ளும் வித்தையில்
மணிரத்னம் எப்படி கெட்டிக்காரரோ அது போலவே பாலிவுட்டில்
வெளிநாட்டு இந்தியர்களை முன்வைத்து அதற்கு ஏற்றது மாதிரி கதைக்கரு,
கதை நிகழ்வுகள், கதை நிகழ்விடங்களை அமைத்து இந்திய பாலிவுட்
சினிமாவை உலக அரங்கில் ஜெர்மன், சீனா, ஜப்பான், அமெரிக்கா, நார்வே,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் அரபு நாடுகளுக்கு எடுத்துச் சென்று
டாலர்களிலும் யூரோக்களிலும் குளிர்காயும்
வித்தையை நடத்திக் கொண்டிருப்பவர் கரன் ஜோகர். போலந்து, ஜெர்மனி, ரஷ்யாவில் எந்த பாலிவுட் படங்களுக்கும் கிடைக்காத சிவப்பு கம்பள வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதும் உண்மை.


அதற்கான மிகச்சிறந்த கதைக்கருவாக கிடைத்திருப்பது அமெரிக்காவில்
11/9 க்கு முன்பும் அந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னும் .
கதைக்கரு, தளம் இவற்றில் கரண் கள ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை என்று
குறைபட்டுக் கொள்கிறார் நியுயார்கிலிருந்து திரைவிமர்சனம் எழுதும் அஸீம் சாப்ரா. (Aseem Chhabra). இந்த விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்
MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்கு , மற்ற KHAN நடிகர்களிடம் இல்லாத துணிச்சல் ஷாருகானிடம் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் தவறில்லை.


கதையில் அவருக்கிருக்கும் உளவியல் சிக்கலும் அதன் காரணமான
உடல் அமைப்பு, எண்ணம், செயல்பாடுகளில் காட்டும் வித்தியாசம்
கதைக்கு வலு சேர்க்கிறதா என்பதை கரண் ஜோகரிடம் தான் கேட்க வேண்டும்.
கதை நாயகன் இப்படிப்பட்டவனாக காட்டப்பட்டால் தான்
MY Name is khan, iam not a terrorist என்று அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம்
சொல்ல நினைப்பதை மக்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று
கற்பனை செய்து ஒரு மிகப்பெரிய விசயத்தைச் சொல்வதற்கு ஒரு நொண்டிக்
குதிரையில் பயணித்திருக்கும் கோமாளித்தனத்தைக் கண்டு காமெடி
காட்சி இல்லாத குறையை இப்படி நிவர்த்தி செய்து கொண்டார்களோ என்று
சமாதானம் சொல்லிக்கொண்டாலும் .. சரி விட்டு தள்ளுங்கள்.

இனி விசயத்திற்கு வருவோம். நடிகர் ஷாருகானுக்கு அமெரிக்கா போயிருந்தப் போது அவருடைய KHAN என்ற பெயர் அடையாளம் காரணமாக தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பல மணிநேரம் காத்திருக்க வைத்தார்கள். மம்முட்டிக்கும் இதே நிலமை ஏற்பட்டது. ஏன் இந்தியாவின் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டதை எல்லோரும் அறிவோம்.

மத அடையாளத்தை தீவிரவாதியின் அடையாளமாகக் காட்டியதில் வல்லரசுகள்
மட்டுமல்ல, உலகளாவிய அனைத்து ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு
இருக்கத்தான் செய்கிறது.

அதனால் தான் MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதில்
இருக்கும் புரிதல், MY name is Rahul, iam not a terrorist என்று சொல்வதில்
கிடைப்பதில்லை.


அமெரிக்காவின் இச்செயல் என்னவோ 11/9 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்றோ உளவியல் சிக்கல் என்றோ கரண்ஜோகர் காட்டியிருப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையல்ல. ஏனேனில், ஈரானிய திரைப்படம் - வட்டம் (2000) படத்தின் இயக்குநர் (Jafer Panahi) ஜாஃபர் பனாஹி டிரான்ஸிட் விசா வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காக நியுயார்க்
விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு ஹாங்காங்குக்கே திருப்பி அனுப்ப பட்டார்.
ஹாங்காங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்து புவனோஸ் அய்ரஸில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு செல்லும் வழியில் 15.4.2001ல் இது நடந்தது. அப்போது அமெரிக்காவில் அவரது வட்டம் திரைப்படம் திரையிடப் பட்டிருந்தது. அப்படத்திற்காக அவருக்கு "கருத்துச் சுதந்திரத்திற்கான" பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை திருப்பி அனுப்பி தனக்குப் பட்டம் வழங்கிய திரைப்பட சங்கத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

KHAN என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு
மட்டுமல்ல நம் மகாத்மாக்களுக்கும் அலர்ஜியாகத்தான் இருந்திருக்கிறது.


இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் அரச பரம்பரைக்கு காந்தி என்ற
அடையாளம் ஏன் வலிந்து கொடுக்கப்பட்டது?
Khans எல்லோரும் காந்தி என்று மாற்றம் பெற்றது ஏன்?
இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சோனியாகான், ராகுல்கான்..
இப்படியாக ஒரிஜினலாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இந்திராகாந்தியின் பெயரில் இருக்கும் காந்தி யார்?
இப்படி நிறைய கேள்விகள் அண்மைக்கால வரலாற்றிலிருந்து
மிகவும் சாதுரியமாக கள்ள மவுனத்தின் மூலம் மறைக்கப்பட்டு
மறக்கப்பட்டு விட்டது.









இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி
ஆனார்? யார் காரணம்?
இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான்
பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும்
பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இசுலாமிய
மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டார்.
ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்று சிலர் சொல்கிறார்கள்.
அவருடைய தாய் பார்ஸி என்பதும் பார்சிகளில் காந்தி என்ற குடும்பபெயர்
இருப்பதும் மறுப்பதற்கில்லை. இலண்டனில் மசூதியில் இந்திராவும்
ஃப்ரோஸ்கானும் நிக்காக் செய்து கொண்டதை இலண்டன் பத்திரிகைகள் செய்தியாக்கின.

அதன் பின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்
மகாத்மா என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள்.
காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்தார்
என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எல்லாம் யாரும் நினைத்தால்
சம்பந்தமில்லாமல் யாருடைய குடும்ப பெயரையும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்ன? இதெல்லாம் மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம்.

சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின்
சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!

இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு காந்தி
வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு khan களை காந்தியாக்கியது தான்..
இலண்டனில் ஃப்ரோஸ்கான் என்ற பெயர் ஃப்ரோஸ்காந்தி என்று ஒரு
அஃபிடவிட் (affidavit) மூலம் மாற்றம் பெற்றது. இதில் ரொம்பவும்
புத்திசாலித்தனமாக இது பெயர் மாற்றம் மட்டும்தான், மத மாற்றம் அல்ல
என்பதும் குறிக்கப்பட்டது. அதன் பின் இந்தியா திரும்பியவுடன் இந்திராவுக்கும்
கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து
வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஃப்ரோஸ்காந்தி இறந்தப் பின் இசுலாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை
பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள்.
சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.
ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனேனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

தாய்வழி குடும்ப பெயரைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை..
இந்திய அரசியலில் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு சாதுரியமாக,
திட்டமிடப்பட்டு எதிர்கால அரசியல் அதிகாரப்பகிர்வுக்கு துணை செய்யும்
வகையில் ஆளும் வர்க்கத்தால் சாதிக்க முடிந்தது என்பதை நினைத்துப்
பார்க்க வைத்தது ஏதொ ஒரு வகையில் இந்தப் படம் .

MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்குப் பதிலாக
MY Name is Gandhi, iam not a terrorist என்று சொல்லிப்பாருங்களேன்.
கேட்பவர்கள் நமக்கு எதோ ஆகிவிட்டது என்கிற மாதிரி பார்ப்பார்கள்.
நமக்கே கூட சத்தமாக அதைச் சொன்னால் ஏதொ கருத்துப்பிழை
உள்ள சொல் தொடரைச் சொன்னது போலிருக்கும்!!

பால் பச்சையாக இருக்க முடியுமா?
ரோசா செடியில் மல்லிகைப் பூக்குமா?
காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா?
என்று நம் மூளையே நம் கட்டுப்பாட்டை மீறி நம்மிடம் பேச ஆரம்பிக்கும்!

காந்தி, எங்கள் தேசப்பிதாவே.. உங்களின் எளிமைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அரசியல் ஞானம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அதிலும் குறிப்பாக தன்னுடைய அடையாளப் பெயரான காந்தி என்ற
குடும்ப பெயரையே ஃப்ரோஸ்கானுக்கு வழங்கிய உங்கள் அரசியல் அறிவு
யாருக்கு வரும்? ஜவஹர்லால் நேரு குடும்பம் இதற்காக உங்களுக்கு
நன்றி சொல்கிறார்களோ என்னவோ... இந்திய மக்கள் நாங்கள் நன்றி
சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்!.

ஷாருக்கானுக்கு ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம்.
MY Name is khan, iam not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிய
வேண்டாம். ஒரு அஃபிடவிட் வாங்கி உங்கள் khan பெயரை காந்தி என்று
மாற்றிக் கொள்ளுங்கள். ஷாருக்காந்தி ..... சொல்வதற்கு இனிமையாகத்தான்
இருக்கிறது.

Wednesday, February 10, 2010

பெண்வழிபாடு

*வளர்ச்சி கூடவும் தளர்ச்சி நீங்கவும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளவும். துர்க்கையை வழிபட்டால் துயரங்கள் நீங்கும்* அவளுக்கு வயது 13 அவள் பேதை. * வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்கு பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவுக் கொள்ளும். * பேதையின் மலரும் மொட்டுகள் காற்றில் அசைந்தாடியது. டாப் ஸ்லிப் அதற்குள் அணியும் டைட் ப்ரா அவள் இன்னும் அணிய ஆரம்பிக்கவில்லை. அதனோலேயே எப்போதும் புத்தகக்கட்டை பையிலிருந்து எடுத்து மார்பில் சேர்த்து அணைத்துக் கொண்டு நடப்பது அவளுக்கு வழக்கமாகிவிட்டது. எப்பொதும் கணக்கில் தப்பு செய்தால் 'ணங்'குனு தலையில் கொட்டும் டியூசன் சார் இப்போது அப்படிக் கொட்டுவதில்லை. பக்கத்தில் வந்து முதுகுப் பக்கமாக தட்டுவதும் அப்படியே கைகள் முன்பக்கம் நகர்த்துவதும் யாரும் பார்க்காத போது அப்படியே விரல்களால் கிள்ளிவிடுவதுமாக.. கத்தவும் முடியவில்லை . யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. டியூசனுக்குப் போகமாட்டேன்னு அழுது அடம்பிடித்து எல்லா ரகளையும் செய்து பார்த்துவிட்டாள். " நீ வாங்கற மார்க்குக்கு டியூசன் வேண்டாம்னு வேற சொல்றியா?" வீட்டில் ஆள் ஆளுக்கு திட்டியது தான் மிச்சம். 'அந்த சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அதுதான் போகமாட்டேனு சொல்றா" 'இவ சேட்டை எல்லாம் அவருக்கிட்ட நடக்காதில்லே.. அதுதான்.." 'ஏண்டா.. அவதான் ஒரே ப்டிவாதமா போகமாட்டேன்கிறாளே பொம்பளைக் குட்டி படிப்புக்கோசரம் ஏண்டா இப்படி அலட்டிக்கிறே...' 'சும்மா இரும்மா.. இவ படிச்சா தான் இவளுக்கு லைஃப். என்ன பண்றது மூத்தவா அவுங்க அம்மா மாதிரி சிவப்பா பிறந்திருக்கா பிரச்சனை இல்லை.. இவ என்ன மாதிரி கருப்பால்லே இருக்கா. எதோ ஒரு எஞ்ஜினியரிங் அது இதுனு படிச்சி நல்ல சம்பளம் வாங்கினா அவ படிப்பையும் சம்பளத்தையும் பார்த்து நல்ல இடமா அமையும்னு நான கணக்குப் போடறேன்.. இவ என்னடானா என் கணக்கை தப்பாக்கிடுவா போலிருக்கே.. மகன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்று பெரிசு மவுனமாக முந்தானையை எடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் மார்பகங்களை போர்த்து இழுத்துச் சொருகிக்கொண்டது. அப்பா மட்டுமில்லை சித்திமார் மாமா என்று சொந்த பந்தங்கள் எல்லோரும் அவள் அவளுடைய அப்பா மாதிரி கருப்பா பிறந்ததுக்காக ரொம்பவும் தான் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். அவளுக்கு அப்படி எல்லாம் வருத்தமே வருவதில்லை. தன்னைக் கண்ணாடியில் பார்த்து அடிக்கடி ரசித்துக் கொள்வாள். அதுவும் குளித்துவிட்டு வந்தவுடன் டவலைச் சுத்திக்கொண்டு இடுப்பு சுளித்துக் கொள்கிற மாதிரி தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நடிகையின் குளிக்கிற காட்சிகளையும் நடித்து நடித்து தன்னைத் தானே ரசித்துக் கொண்டிருப்பாள். எப்படியோ ஒருவழியாக டியுசன் முடிந்தது. என்னவானாலும் சரி இனிமேல் இந்த மாதிரி டியுசன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்துவிட்டாள். +2வில் எல்லோரும் டீச்சர் xy யிடம் தனிக்கோச்சிங் அதாவது பிரைவேட் டியூசன் எடுத்துக் கொண்டார்கள். சும்மா சொல்லக்கூடாது டீச்சரின் கோச்சிங் மாணவர்கள் தான் இதுவரை கணக்கில் 100/100 எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்ற ரிகார்டு வேறு இருந்தது. அதிலும் லேடி டீச்சர் என்பதால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றொர்கள் பயமில்லாமல் போட்டார்கள். மற்றவர்கள் கோச்சிங் பீஃஸை விட 5000 ரூபாய் அதிகம் என்றாலும் லேடி டீச்சர் என்பதால் பெற்றோர்கள் விரும்பி பணத்தைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல் போட்டிப்போட்டுக் கொண்டு வந்து சேர்த்தார்கள். 10 மாணவர்களுக்கு மேல் சேர்ப்பதில்லை என்பதால் ரொம்பவும் டிமாண்ட் இருந்தது. அவளுக்கு இடம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். *அவளுக்கு வயது 15. அவள் பெதும்பை * * கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. * பெதும்பைக்கு டீச்சர் நன்றாகவே கணக்கு சொல்லிக்கொடுத்தாள். ரொம்பவும் கண்டிப்பாகவும் இருந்தாள். எப்போதும் சிடு சிடு வென இருப்பதாக அவளுக்கு தோன்றியது. கொஞ்சம் இந்த டீச்சர் சிரித்தால் நல்லா இருக்குமோனு நினைத்தாள். அதை எப்படியும் டியூசன் முடிவதற்குள் டீச்சரிடம் சொல்லிவிட வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். இதற்குள் வீட்டில் அவள் அக்காவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அக்கா நல்ல கலர். இருந்தாலும் அவள் அழகாக இருக்கிறாள் என்பதாலேயே யாரும் சீர் செனத்தி இல்லாமல் அக்காவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. அக்காவுக்கு நகைச் செய்யும் போதும் சரி வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கும் போதும் சரி இவளுக்கே இப்ப்டினா இந்தா நிக்காளே இவளுக்கு என்ன பாடு படப்போறேனோ என்று அப்பா பெதும்பையைப் பார்த்து அடிக்கடி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். வழக்கம் போல அதை எல்லாம் கேட்டும் கேட்காதது மாதிரி அக்காவின் திருமணத்தில் தான் என்ன மாதிரி உடை அணிந்து கொள்ள வேண்டும், அதை உடுத்துக்கொண்டு எப்படி அங்கேயும் இங்கேயும் நடக்க வேண்டும் என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெதும்பை. அக்காவைப் போலவே மாப்பிள்ளையும் நல்ல கலரா உசரமா இந்த டி,வி விளம்பரத்தில் வர்றவன் மாதிரி எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு பெதும்பைக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அக்கா திருமணத்தால் டியுசனுக்கு ஒருவாரம் போகமுடியவில்லை. டீச்சர் அதற்குள் ஒரு சேப்டர் நடத்தி அடுத்த சேப்டருக்கு போய்விட்டாள். அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. வேனும்னா இரவில் 9 மணிக்குப் பின் வந்து ஒரு மணி நேரம் தனியாக பாடம் கேட்கலாம் என்று டீச்சரே சொன்னவுடன் பெதும்பைக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எவ்வளவு நல்ல டீச்சர்.. வீட்டில் சொன்னவுடன் யாரும் எதுவும் எதிர்ப்பு சொல்லவில்லை. அதுவும் லேடி டீச்சர் என்பதால் 'லேட் ஆனா நீ வரவேண்டாம், டீச்சர் வீட்டிலேயே தங்கிக்கோ விடிஞ்சப்புறம் வந்தா போதும். தெரு நாய்கள் ராத்திரி 10 மணிக்கப்பறம் சைக்கிள் முன்னாலே ஓடிவந்து குரைச்சி ரகளைப் பண்ணுதுக,.. நேத்து இப்படித்தான் அடுத்த தெரு மயிலு மவன் 10 மணிக்கு பஸ் டாப்பிலிருந்து சைக்கில்ல வந்திருக்கான் தெருநாய் கூத்திலே பையன் சைகிளை அங்கங்கே திருப்பி கீழே விழுந்து முட்டியைப் பேத்துக்கிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பெதும்பை சிட்டாக டீச்சர் வீட்டுக்குப் பறந்தாள். டீச்சர் இவள் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டு இவளுக்காக காத்திருந்தாள். ஒவ்வொன்றாக இவளுக்கு புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்தாள். இரவில் டீச்சர் வீட்டில் விடிய விடிய மெல்லிய நைட் லேம்ப் வெளிச்சம் இருந்ததால் அவளுக்குப் பயமாகவே இல்லை, வீட்டில் அக்காவுக்கு திருமணம் ஆனபின் அவளுக்குத் தனியாகப் படுக்க பயமாக இருந்தது. பாட்டியின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ளலாம். ஆனால் இவளுக்கு தூங்கும் போது பேஃன் வேணும். பாட்டிக்கு பேஃன் காத்தே ஆகாது. அம்மா பக்கத்தில் போய் படுத்துக் கொண்டால் பாதி நாள் நடுச்சாமத்தில் அம்மா அருகிலிருக்க மாட்டாள். கேட்டால் அப்பாவுக்கு கால்ப்டித்துவிட போயிருந்ததாகச் சொல்வாள். அப்பாவுக்கு கால்பிடித்துவிட்டால்தான் தூக்கம் வரும்.. அதுக்காக இப்படியா.. நடுச்சாமத்தில் அம்மாவைக் கால்பிடித்துவிட சொல்வது!..என்று அப்பாவின் மீது தான் அவளுக்கு கோபம் வரும். அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருக்கும். டீச்சர் வீட்டில் தூங்கினால் இந்தப் ப்ரச்சனை எதுவுமே இல்லை. நிம்மதியாக தூங்கி எந்த்ரிச்சி டாண்னு அம்மா காபி போடும் போது வீட்டுக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது. அன்றைக்கு அவளுக்குச் சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது. டீச்சரும் சரி தூங்கலாம் என்று சொல்ல்விட்டாள். தூக்கத்தில்... அவள் கால்களை அகட்டி வைத்து மெத்தென்று .. உடல்.. கதகதப்பாக வெட்ப பெருமூச்சுடன். அவள் உதடுகளைக் கவ்விக்கடித்து.. அவள் தொடைகளைத்தடவி உதடுகளால் முத்தமிட்டு அவள் கூந்தலைத்தடவி உடலை இழுத்து அணைத்து காற்றுகூட நடுவில் புகுந்துவிட இடமின்றி இரு பெரும்மலைகளுக்கு நடுவில் இருக்கும் இரண்டு சிறிய குன்றுகளாய் பெதும்பையின் மார்புகளைத் தடவி நீருற்றின் குளிர்ச்சியாய் ஈரமாக்கி.. இதுகனவா நனவா.. என்ன நடக்கிறது? சட்டென்று போர்வையை விலக்கிக்கொண்டு வெளியில் வந்துவிட முடியாதபடி ஆகாயமே காவல் காத்த நிலவில்லாத வானத்தில் ... கதகதப்பான அணைப்புக்குள் பெதும்பை தூங்கிப் போனாள். * அவளுக்கு வயது 19. அவள் மங்கை. * பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம். * எஞ்சினியரிங் சீட் கிடைத்து விட்டது. சென்னையில் அண்ணா கல்லூரியில். விடுதி வாழ்க்கை. எப்போதாவது லீவில் அக்கா வீட்டுக்குப் போகலாம். ஆரம்பத்தில் அடிக்கடி போனாள். ஆனால் என்னவொ அவளுடைய அக்கா அவளுக்குத் தெரிந்த அக்கா மாதிரியே இல்லை. டோட்டலா அக்கா மாறிப் போயிருந்தாள். எல்லாம் அத்தானுக்குப் பிடித்த மாதிரி தான். சாப்பாட்டிலிருந்து கட்டிக்கொள்ளும் புடவை கலர் வரை.. எப்படி ஒரு மனுஷியால் இவ்வளவு தூரம் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்று அவளுக்கு அதிசயமாக இருந்தது.. அத்தான் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் ரொம்பவும் விலை உயர்ந்தாகவும் ரொம்பவும் அழகானதாகவும் இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்து அது அது இடத்தில் வைத்திருந்தார்கள். எதையாவது அவள் தொட்டுப் பார்த்தால் கூட அக்கா சத்தம் போடுவாள். 'கையை வச்சிக்கிட்டு சும்மா இரேண்டி.. அத்தான் சத்தம் போடுவாரு.. ரொம்ப காஸ்ட்லி ஐட்டம்.. 'என்பாள். வீடுனா அப்படி இப்படி பொருட்கள் அங்கேயும் இங்கேயுமா கிடக்கனும். அதுதானே மனிதர்கள்.. உயிருள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளம். அதை விட்டுட்டு இப்படியா மியுசியம் மாதிரி பைஃவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி.. ஒரு செட்டப்பில் .. அவளுக்கு என்னவொ அக்கா வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் பெரிய பெரிய ஹோட்டல் ரிசப்ஷன் ஹால் தான் நினைவுக்கு வரும். சொல்வதில்லை. * ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * அக்கா உண்டாகி இருக்கிறாள் என்று அம்மா பட்சணமெல்லாம் செய்து கொண்டு பார்க்க வந்திருந்தாள். அம்மாவும் அக்காவும் டாக்டரிடம் போயிருந்தார்கள். அத்தான் ஆபிஸிலிருந்து சீக்கரமே வந்துவிட்டார். வழக்கம்போல அத்தானும் அவளும் ஹாலில் உட்கார்ந்து டி.வி, பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தான் ரொம்பவும் நெருக்கமாக அவள் தொடையைத் தொட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவள் எதிர்பார்க்காமல் அவள் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டார். 'என்ன இது.. ப்பிளிஸ் எந்த்ரிங்க திஸ் இஸ் நாட் கரெக்ட்..ப்பிளீஸ்ஸ்ஸ்ஸ்' அவள் குரல் உடைந்தது. அழகையை அடக்கிக் கொண்டாள். அவள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அத்தானின் கைகள் அவள் துப்பட்டாவை விலக்கி அவள் கழுத்துப் பகுதியை தடவி கீழிறங்கியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவனைத் தள்ளிக்கொண்டு எழுந்தாள். 'ரஸ்கல்.. நீ நடந்துக்கிட்டதை என் அக்கா கிட்டேயும் அம்மா கிட்டேயும் சொல்றேன் பாரு.. ' ஆத்திரத்துடன் சேர்ந்து அழகையும் வந்தது. அவன் அவள் அருகில் வந்தான். 'ஏய் இந்தப்பாரு..., உன் அக்கா அழகுக்கு முன்னோலே நீ தூசி.. யாரும் உங்க அக்காவை விட்டுவிட்டு நான் உங்கிட்டே வந்தேன்னு நீ சொன்னாகூட நம்ப மாட்டாங்கடீ.. சும்மா கிடந்து அலட்டாதே.. எம் மேலே உனக்குத்தான் கண்ணு.. நீ தான் உன் அக்கா இல்லாத நேரம் பார்த்து எம்மேலே விழுந்தேன்னு நான் சொன்னா அதைத்தாண்டீ நம்புவாங்க.. போடி போ.. சொல்லு.. சொல்லுடி..' அவன் சொல்ல சொல்ல அவன் மீது அருவெருப்பு வந்தது. அதன் பின் அவள் தன் அக்கா வீட்டுக்குப் போவதை தவிர்த்தாள். அப்படியே போனாலும் அக்கா இருக்கும்போது போய்ட்டு உடனடியாக வந்துவிடுவாள். அம்மாவிடம் மட்டும் அத்தான் நடந்துக் கொண்டதை ஊருக்குப் போயிருக்கும் போது சொன்னாள். 'எங்கிட்டே சொன்னமாதிரி இதை வெளியில் யாருக்கிட்டேயும் சொல்லிடாதேடி. அக்கா வாழ்க்கையே வீணாக்கிடுவானுக. பொண்ணா பொறந்திட்டா இப்படி ஆயிரம் வரும் போகும்.. மனசுக்குள்ளேயே போட்டுக்கனும் புரியுதாம்மா..' சொல்லிவிட்டு அம்மாவும் சேர்ந்து அழுதாள். அம்மாவின் அழுகையில் அவள் இதுவரை யாரிடமும் சொல்லாத சொல்ல முடியாத எல்லாமும் கலந்திருந்தது. அவளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போவதில் அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டில்லி என்று எங்கே கிடைத்தாலும் போயிடலாம் சென்னை மட்டும் வேண்டாம் .. சொந்தக்காரங்க இல்லாத இடத்தில் சுதந்திரமாக தனியாக இருக்க வேண்டும் .. அந்த நினைப்பே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் வேலைக்குப் போவதற்குள் நல்ல இடத்திலிருந்து அவளுக்கு வரன் வந்துவிட்டது. நல்ல வாட்டச் சாட்டமான பையன். எம்.டெக் படிச்சிருக்கான். ஒரே பையன். எந்தப் பிக்கல் பிடுங்கலும் கிடையாது. சீர் எதுவும் டிமாண்ட் பண்ணலை. போடரதைப் போடுங்கனு சொல்லிட்டாங்க. வீட்டில் எல்லோரும் இவளுக்கு வந்திட்ட அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் வாய்க்கு வாய் பேசிக்கொண்டார்கள். அம்மா தான் எல்லார் வாயும் ஒன்னுபோலிருக்காது என்று இவளுக்கு கண்ணேறு கழித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்ததலிருந்து அவளுக்கு கண்ணேறு கழித்ததாக நினைவில்லை. அதுவும் அவளுக்கில்லை. அவளுக்கு கிடைக்குப்போகும் கணவனால் கிடைத்திருக்கும் போனஸாகவே இருந்தது. * ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும். இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும். * அவளுக்கு வயது 27. அவள் அரிவை. எல்லா பெண்களுக்கும் மனசுக்குள் இருக்கும் ஆவல் அவளுக்கும். ஏன் தன்னை மனைவியாக தன் கணவன் ஏற்றுக்கொண்டான் என்பதை அறிந்து கொள்ள துடிப்பது. அந்த நேரத்தில் அவள் கணவன் சொல்லும் காரணங்கள் பெரும்பாலும் பொய்யாக இருக்கும். அது நிஜமல்ல என்றாலும் அவன் சொல்லும் பொய்யை உண்மை என்று அந்தக் கணத்தில் நினைப்பதில் ஒரு தனிசுகம். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அவளும் கேட்டாள். ஆனால் அவன் பொய் சொல்லவில்லை. உண்மையை எந்த ஆடைகளும் அணிந்து போர்த்தாமல் நிர்வாணமாக சொன்னான். நான் பார்த்ததில் நீ தான் ரொம்பவும் சாதரணமா இருந்தே. ரொம்ப சிம்பிளா இருந்தே. படிச்சிருக்கே.. இதெல்லாம் காரணங்கள் என்றாலும் இது எல்லாவற்றையும் விட நிதர்சனமான காரணம்.. சாதாரணமான லுக் இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற ஆம்பிளை பயப்பட வேண்டாம்.. நிம்மதியா இருக்கலாம்.. னு சொல்லிட்டு அவளைத் தன்பக்கம் இழுத்தான். அவன் இழுத்தவுடன் தன்னிடம் அவனை இழுத்து அணைக்கும் அவள் கைகள் ஒடிந்து போனது. அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும் படுக்கையில் சுருக்குப்பையைக் கிழித்து நுழையும் கத்தியின் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது. அவனுடைய இரு குழந்தைகளையும் பெற்று வளர்த்தாகிவிட்டது. அவளுக்கு நேரம் போவதற்காக டிடிபி வேலை செய்தாள். வீட்டில் இருந்து கொண்டே செய்வதால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவனுடைய கணினியையோ லேப்டாப்பையோ பயன்படுத்தக் கூடாது. என்ன காரணம் கொண்டும் அவனுக்கு விடுமுறை நாட்களில் அவள் அந்த வேலைகளைச் செய்யக் கூடாது. தொழில்துறை கணினித் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை டிடிபி செய்வதில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது. எல்லா புத்தகங்களிலும் எழுதியவர்கள் தன்னுரையில் அவளுக்கு நன்றி சொன்னார்கள். பக்கத்திற்கு 50 முதல் 100 வரை கூட அவளுக்கு வருவாய் வந்தது. இந்தப் பணம் அவளுடையது. அவள் விரும்பியபடி அதைச் செலவு செய்யலாம். அப்படி நினைத்து தான் அவ்வை முதியோர் இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தாள். அந்த ரசீதை அப்படியே ஹாலில் இருந்தது, அதைப் பார்த்துவிட்ட அவள் கணவன் அதை விரும்பவில்லை என்பது அவன் கடுகடுப்பான முகத்தைப் பார்த்தே அவளுக்குத் தெரிந்தது. இதைப் பற்றி பேசினால் தானே வம்பு.. அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். * சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன. * அவளுக்கு வயது 29 அவள் தெரிவை. வீட்டுக்கு வேலையை எடுத்துக் கொண்டு வரும் நண்பர் vx டம் பொறுக்க முடியாமல் சொல்லி அழுதிருக்கிறாள். அவர் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். எப்போதாவது அந்த நண்பருடன் வெளியில் போய்வருவாள். நிறைய புத்தகம் படிப்பவர். நல்ல பதிப்பாசிரியர். அவருக்கு நிறைய எழுத்தாளர்களை பேராசிரியர்களைத் தெரிந்திருந்தது. அடிக்கடி அவளிடம் சொல்லுவார். 'நீயும் உன்கதையை எழுதேன்' என்று. Men are taught to apologize for their weaknesses, women for their strengths.(Lois Wyse) என்று அவர் சொல்லியதைப் பல நாட்கள் நினைத்து பார்த்திருக்கிறாள். எவ்வளவு சரியான வார்த்தைகள். Men define intelligence, men define usefulness, men tell us what is beautiful, men even tell us what is womanly. என்று ~Sally Kempton சொன்னதைச் சொல்லி ஆக்ஸ்போர்ட் அகராதி முதல் ஹாலிவுட் படங்கள் வரை பெண் எப்படி சித்தரிக்க்பட்டிருக்கிறாள், அவளுக்கான இடம் என்ன, இதை எல்லாம் சொல்வதும் எழுதுவதும் தீர்மானிப்பதும் யார் என்றெல்லாம் நிறைய பேசிக்கொண்டு வந்தார். அவர் பேச பேச அவளுக்கு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. அடிக்கடி நண்பரின் நினைப்பு வந்தது. இதைச் சொன்னால் நண்பர் அதற்கு என்ன பதில் சொல்வார் என்பதை நினைப்பதும் தான் நினைத்தது சரிதானா என்று அவரிடம் அதைக் கேட்டு அவர் சொல்வதை வைத்து டிக் அடித்துக் கொள்வதும்.. எல்லா நேரங்களிலும் அவர் நினைவு தன்னை ஆக்கிரமித்திருந்ததை அவள் உணர்ந்து கொண்டாள். அப்படித்தான் ஒரு நாளிரவு.. கணவன் அருகில் வரவும் அவளுக்கு அப்போதும் அவர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்துவிட்டது. "பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம்." மங்கிய வெளிச்சத்தில் அவளைச் சுற்றி அவர் பேசிய சொற்களின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தீண்டியது. அந்த அணைப்பில் அந்தக் கைகளில் அந்த முகத்தில் அந்தப் பெருமூச்சில் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் வந்து உட்கார்ந்து கொண்டன. அவள் கண்களை மூடிக் கொண்டாள். திறந்து நிசத்தைப் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு இந்த நினைப்பு பிடித்திருந்தது. சுகமான அனுபவமாக இருந்தது. எனோ எந்தக் குற்ற உணர்வுமில்லை. மனசுக்கு நிறைவாக இருந்தது. தான் ரசிக்கும் ஒருவரிடம் தான் விரும்பும் ஒருவரிடம் தன்னை ரசிக்கும் ஒருவரிடம் தன்னை விரும்பும் ஒருவரிடம் தன் உடலை மட்டும் விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது யார்? அன்று புதிதாகப் பிறந்தது போலிருந்தது. மீண்டும் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டாள். *அவளுக்கு வயது 45 அவள் பேரிளம்பெண். * தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான். * குழுந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அவளுக்கு அவள் நண்பர் மூலம் நிறைய நிறைய ஆர்டர் கிடைத்தது. நண்பருடன் இருக்கும் நாட்களும் பொழுதும் அதிகமாக இருந்தது. இரு குடும்பங்களும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வரப் போக இருந்தார்கள். அன்று நண்பருடன் அவள் டாக்ஸியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். என்னவோ தெரியவில்லை. அவர் அவளுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்த மாதிரி இருந்தது. சரி அதனால் என்ன.. கண்ணை மூடிக் கொண்டு அவரைக் கட்டி அணைத்துவிட்டு இப்போ எதற்கு இப்படிப் பாசாங்கு செய்ய வேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அவர் சாதாரணமாக அவள் தொடையில் கை வைத்துக் கொண்டார். காற்றில் பறந்த அவள் தலைமுடியை அவர் பின்பக்கமாக ஒதுக்கினார், அவர் கைகள் அவள் கழுத்தைத் தடவியது. கழுத்துப் பகுதியில் தான் உணர்வு நரம்புகளின் முடிச்சுகள் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவர் தன் கைகளை பின்பக்கமாக நீட்டி அவள் தோள்களை அணைத்துக் கொண்டார். அவளுக்கு இப்பொது அழுகை வரும்போலிருந்தது. அப்படியே அவர் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது. தனக்கு என்னவாகிவிட்டது? தொண்டை வறண்டு போனது. அவள் இருப்பிடம் வந்துவிட்டது. டாக்ஸிக்காரன் மீட்டருக்கு அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சரிதான் போயிட்டுப் போறான்.. "ஆஜ் தோ பூரா வசூல் கியா" என்று சொல்லிக்கொண்டே அவர் அவள் பின்னால் வந்தார். அவளுக்கு நடைத் தள்ளாடியது. எட்டாவது மாடி. லிப்டுக்குள் நுழைந்தவுடன் இரும்புக்கதவு பூட்டிக் கொண்டது. அவர் சொன்ன வார்த்தைகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன. அன்று வீட்டில் யாருமில்லை. அவருடன் தனியாக கழிக்கப்போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றி காத்திருந்தது உண்மை. அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவரும் வழக்கம் போல ஹாலில் வந்து உட்கார்ந்தார். இருவருக்கும் சேர்த்து சூடாக டீ போட்டாள். கிச்சனில் நுழைந்தவரிடம் என்ன அப்படி புதிதாகப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டு வைத்தாள். வாருங்களேன் காற்றாட திறந்த பால்கனியில் உட்கார்ந்து டீ சாப்பிடலாம் என்று அழைத்தாள். அவரும் முகத்தைக் கழுவிவிட்டு அவளுடன் சேர்ந்து திறந்துவெளி பால்கனியில் உட்கார்ந்தார். யு வடிவத்தில் உட்காருவதற்கு ஏற்ற மாதிரி கட்டிவிடப்பட்டிருக்கும் பால்கனி சுவர்.. இழுத்து பூட்டிக் கொள்ள வசதியாக இரும்பு கம்பிகள். செடிகள். இரும்புக் கம்பிகளை விலக்கி வைத்து வசதியாக இருவரும் பால்கனி சுவரில் உட்கார்ந்து கொண்டார்கள். அவள் மெதுவாக அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிடி இறுகியது. மறுநாள்.. இது தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல.. கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து.. பால்கனியிலிருந்து தவறி விழுந்துவிட்டார்கள் என்று அவர்கள் இருவரின் முடிவைப் பற்றி பத்திரிகைகளும் டிவிக்காரார்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். * பிரத்தியங்கரா தேவியை வழிபட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.* --------------------------------------------------------------------- .... நன்றி: விலங்குகளின் பாலுறவு குறித்து மருத்துவர் டி.காமராஜ் குறிப்புகள் & வயது அடிப்படையில் பெண்களை ஏழு வகைப் படுத்தும் பெருங்கதை யுகமாயினி பிப்.2010 இதழில் வெளிவந்திருக்கும் கதை

Wednesday, February 3, 2010

முள்வேலி





காதல் புனிதம்
கற்பு தெய்வீகம்
தாய்மை பெண்மை என
கூர்மழுங்காத ஆயுதங்களால்
கைப்பற்றப்பட்ட
விளைநிலத்தில்
புதைந்து கிடக்கிறது
காலத்தின் கண்ணிவெடி.
வெடித்தால்
விளைநிலம் தரிசாகலாம்
பயமுறுத்துகிறது
வெள்ளை உடையில் வரும்
தேவைதைகள் கூட்டம்.
தேவதைகள் அறிந்ததில்லை
முள்வேலிகளின் பசியை.