Sunday, April 12, 2026

கவிதை மொழி மந்திர உச்சாடனம்

 


தமிழ் கவிதைவெளியின்

மாந்திரீக மொழி.

தொன்மங்களையும் மாந்திரீகக் கூறுகளையும் 

தன் வாழ்வின் தொல்குடி மரபிலிருந்து தமிழ் இலக்கிய பரப்பிற்கு எடுத்து வந்த கவிதைகள் என் டி ராஜ்குமாரின் கவிதைகள்.


அவர் கவிதைகளை  வாசிக்கவில்லை. ராகமாக பாடினார். கவிதை 'நிகழ்த்து கலை'யானது. தமிழ் கவிதை வெளியில் அதுவரை அழகியலாக காட்சியளித்த சமவெளிப் பகுதியை தன் வனத்தின் பிசாசுகளை கொண்டு மந்தீரிகங்களை உச்சரித்து விரட்டினார். 


அவர் கவிதை மொழி ஒரு இனக்குழுவின் மொழி. ஒடுக்கப்பட வாழ்க்கையின் பிரதி. பூர்வத் தமிழின் அடையாளம். சங்கத் தமிழின் அசல் களம்.

தமிழ் கவிதை என்பதே ஒரு பொதுச் சமூகத்திற்கானது,பொதுமொழ, ஒரு பொதுப் பார்வை கொண்டது. அது தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தை கொண்டது என்றெல்லாம் இருந்த அதிகார கட்டுமானங்களை அவர் கவிதை வெளி உடைத்து நொறுக்கியது. அதிகாரப் பண்பாட்டின் அடையாளங்களை முன்வைத்த கவிதை மொழியை தன் தொல்குடி மரபின் தத்துவ மரபுகளோடு தனித்தன்மையோடு கொண்டு வந்ததில் இவர் கவிதைக்கு முக்கியப் பங்கு உண்டு.

இன்னொரு வகையில் சொல்ல போனால் தொல் குடி மரபை இன்றைய நவீன கவிதைக்குள் கொண்டு வந்து சேர்த்தது என்டி ராஜ்குமாரின் கவிதைகள். 


அவர் கவிதையில் முளைத்திருக்கும் காடு ஆதி தமிழ்க்குடியின் உறைவிடம்.

வைதிக மரபுக்கு எதிராக அது முன்வைத்த தத்துவங்களை தன் வனத்தில் அவர் குழி தோண்டிப் புதைக்கிறார்.

தொல்குடியின் சடங்குகளும் மந்திரங்களும் உற்பத்தி சார்ந்த நம்பிக்கைகள். அவை களவாடப்பட்டிருக்கின்றன.

களவாடிய திருடர்கள் அவர் மந்திரம் உச்சரித்து விரட்டுகிறார். 

தொல்குடியின் சுடலைத் தீயில் ஆடும் சித்தன்.

தன் மொழியின் மாந்திரீகத்தால் நமக்கும் நம் வாழ்விற்கும் எதிரானவர்களை வாதை செய்வதற்கு ஏவி விடுகிறது அவர் கவிதைகள்.


குன்றத்தில் வெறி கொண்டு ஆடும் வேலன்.

கைகளில் கவிதையின் கூராயுதம்.

கண்களில் மந்திர உச்சாடனம்.

தமிழ்க் கவிதை உலகின் சித்தன்.

🔥🔥🔥


வாழ்த்துவதில் எமக்கும்

பெருமிதம்.

வேர்ச்சொல் விருது பெறும் மாபெரும் கவிஞர்

என் டி ராஜ்குமாருக்கு

வாழ்த்துகள் .



#நீலம் 

#வேர்ச்சொல்விருது

#என்டிராஜ்குமார்

#தலித்கவிதை

#Neelam 

#புதியமாதவி

2 comments:

  1. சிறப்பு... மகிழ்ச்சி... நல்வாழ்த்துகள்.... தமிழ் இயலன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார். 🙏 புதியமாதவி

    ReplyDelete