Tuesday, September 23, 2025

என் எழுத்துப்பயணமும் வாழ்வும்



எழுத்து எனக்குத் தவமல்ல.
என் உயிர்மூச்சும் அல்ல.
எழுத்து என் சகமனிதனுடன் நான் கொண்டிருக்கும் உறவு.
சில நேரங்களில் அது என் சுயபரிசோதனை.
என் கனவுகளின் இன்னொரு மொழி.



நான்குத் தலைமுறைகளாக மும்பையில் வசிக்கும் தமிழ்க்குடும்பம்.
என்றாலும் என் கல்லூரி வாழ்க்கை தமிழ்நாட்டில் தான்.
திராவிட இயக்கத்தின் அதிலும் குறிப்பாக அறிஞர் அண்ணா காலத்திய
பம்பாய் அரசியலில் முக்கியமான பங்கு வகித்தவர் என் தந்தையார்
பி.எஸ்.வள்ளிநாயகம் அவர்கள். திராவிட இயக்கத்தின் இதழ்களுக்கு நடுவில்
நான் வளர்ந்தேன் என்பது தான் உண்மை. 

அப்போதுதான் கண்ணதாசனின் வனவாசத்தை எங்கள் வீட்டுக்கு வந்த ஒருவர்
பரிசளித்தார். எல்லோரும் மகாத்மா காந்தியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் அன்னை கஸ்தூரிபா என்ற புத்தகமும் எனக்கு வாசிக்க கிடைத்தது. இவை அனைத்தையும் விட இன்னொரு முக்கியமான சம்பவம்
நான் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் முதுகலைப் படிக்கும்போது
தற்கால இலக்கியம் என்ற பாடப்பிரிவில் அறிஞர் அண்ணாவின் பார்வதிபாய் பி.ஏ. என்ற நாவலும் பாடமாக இருந்தது. விடுமுறைக்கு வழக்கம் போல
மும்பை சென்ற நான் பார்வதிபாய் பி.ஏ நாவலைப் பற்றி என் தந்தையாரிடம்
உரையாடினேன். மு.,வ, நீலபத்மநாபன், ஜானகிராமன் , நெருடா , கு.பா.ரா,
புதுமைப்பித்தன். ஏன் ஜெயகாந்தன் வரை நான் கொண்டாடிக்கொண்டிருந்தக் காலக்கட்டம். எனக்கு பார்வதிபாய் நாவலை இன்னின்ன காரணத்தால் ரசிக்க முடியவில்லை. இட்ஸ் நாட் அப்டு மை லெவல், மை ஸ்டேன்டர்ட் என்று சொன்னேன். என் தந்தைக்கு வந்தக் கோபம், இப்போதும் எனக்கு நினைவுக்கு 
வருகிறது. அந்தக்காட்சி. "அவர் வாயிலிருந்து சொற்கள் வெடித்தன.
அண்ணாவை விமர்சிக்கின்ற அளவுக்கு நீ பெரிய ஆளா ஆயிட்டியா?"
என்று கத்தினார். நான் வயடைத்துப்போய்விட்டேன். அதன் பின் முதுகலையில்
நான் வாங்கிய தங்கமெடல் கூட என் தந்தையார் உள்ளத்தை மாற்றவில்லை.
அத்துடன் எனக்கும் என் தந்தைக்கும் நடுவிலிருந்த பொதுவெளி அடைப்பட்டுவிட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பின்  அவருக்கு அப்போதைய அரசியல் மீது ஒவ்வாமை ஏற்பட்டது. விலகியே இருந்தார்.
அக்காலக்கட்டங்களில் வளர்ந்து நிற்கும் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக அவர் கவலைப்பட்டதை விட தான் உழைத்த அரசியல்
கட்சியின் நிலைப்பாடு குறித்தும் எதிர்காலம் குறித்தும் அதிகமாகவே கவலைப்பட்டார். என்னிலையிலிருந்து இறங்கி நான் அவருடன் பேசி
இருக்கலாம். ஆனால் ஏனோ என்னால் அப்போது அது சாத்தியப்படவில்லை.
மும்பையில் என் இல்லம் தோழர்களின் இல்லமாகவே இருந்தது.
தோழர்களுக்கு இடையூறாக இருந்ததாலேயே எங்கள் வாழ்க்கை
விடுதிகளில் தொடர்ந்தது. 
எதிரணியினர் பேரம் பேசினர். அவர் எதற்கும் அசையாமல் கடைசிவரை
தன் கொள்கைகளுடன் வாழ்ந்து மறைந்தார். 

மதுரை பல்கலை கழகத்தில் கனகசபாபதி, நடராஜன், நவநீதகிருஷ்ணன், சு.வேங்கட்ராமன், ராமசாமி, இவர்கள் எல்லாம் என் பேராசிரியர்கள்..பல்கலை கழகத்தில் வியாழவட்டம் எங்கள் இலக்கிய விமர்சனத்தை கூர்மைப்படுத்திய காலக்கட்டம்.  கல்லூரி நூலகமே கதி என்று இருந்தக்காலம்., புத்தகங்களே என் வாழ்க்கை
என்றிருந்த நாட்கள் அதன் பின் வரவே இல்லை. வாழ்க்கையின் நெருக்கடிகள் என்னை அரபிக்கடலோரம் கொண்டு தள்ளியது.
மும்பையில் பன்னாட்டு வங்கியில் வேலை, அதன் பின் திருமணம்,
குழந்தைகள், சொந்தவீடு வாங்க ஓடிய ஓட்டம்... வாழ்க்கை என்னை 
அலைக்கழித்தது. நானே ஒரு தீவாகிப்போனேன். என்னைச் சுற்றி எப்போதும்
மும்பையின் ஜனக்கூட்டம். அதுவும் தினமும் நான் பயணம் செய்த
மின்சாரவண்டியில் நிரம்பி வழியும் ஜனத்திரளுக்கு நடுவில் என் மூச்சுத் திணறும். ஆனாலும் என்னவொ நான் தனியாக நிற்பதாகவே தோன்றும்.
வேலைப்பளு ஆபிஸிலும் வீட்டிலும் அழுத்தும். அப்போதெல்லாம்
எப்போதோ வாசித்த ஏதாவது ஒரு கவிதை எனக்குள் ஓடும்.
அக்காலக்கட்டங்களில் நிறைய ஆங்கிலப்புத்தகங்களை வாசித்தேன்.
மும்பையில் சாலையோரங்களில் உலகத்தின் அத்தனைப் புத்தகங்களும்
கிடைக்கும். மும்பை ஃபோர்ட் ஏரியாவில் வேலை. அரைமணிநேரம்
லஞ்ச் டைம். அதில் 10 நிமிடங்களில் சாப்பிட்டுவிட்டு 20 நிமிடங்களில்
அந்தச் சாலைகளில் புத்தகங்களைத் தேடும் அவசரம்.
கமலாதாஸிலிருந்து லிம்பாளே வரை அங்குதான் எனக்குப்பரிச்சயமானார்கள்.
நான் அந்தச் சாலையோர புத்தகவியாபாரிகளிடம் சில ஒப்பந்தங்களே 
செய்துகொண்டேன். அதாவது புத்தகங்களை வாங்கிக்கொண்டு வாசித்துவிட்டு
பக்கங்கள் கசங்காமல் திருப்பிக்கொடுத்தால் வாங்கிய விலையில் 30 முதல்
40 விழுக்காடு வரை தள்ளுபடி செய்துவிட்டு அந்தப் புத்தகவியாபாரியே வாங்கிக்கொள்வார். நமக்குத் திருப்பிக்கொடுக்க விரும்பாத புத்தகங்கள்
என்றால் நாமே வைத்துக்கொள்ளலாம். இப்படி எல்லாம் புத்தகங்கள்
வாசித்துக்கொண்டிருந்தது தான் அச்சூழலில் என் சுயமிழக்காமல் என்னை வாழவைத்துக்கொண்டிருந்ததாக நினைக்கின்றேன்.



.
அக்காலக்கட்டத்தில் மும்பையிலிருந்து தரமான மாத இதழாக
சீர்வரிசை என்ற இதழ் வெளிவந்தது. அந்த இதழில் நூல்விமர்சனப்
பகுதிக்கு தமிழகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் வந்தன.
நான் அந்தப் புத்தகங்களை வாசித்து விமர்சனம் எழுதும் வாய்ப்பு அப்போது
கிடைத்தது. அப்படித்தான் தமிழ்நாட்டின் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது
என்பதையே நான் முழுமையாக தெரிந்து கொண்டேன் எனலாம்.
சீரிவரிசை இதழில் தொடர்ந்து வெளிவந்தக் கவிதைகளை தொகுத்துப்
புத்தகமாக வெளியிட்டதில் சீர்வரிசையின் பங்கு முக்கியமானது.

இதன் பின், பாபர் மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியாக நடந்த
மும்பை குண்டுவெடிப்புகள்... அந்தக் குண்டுவெடிப்புகளின்
சாட்சியாக கையறுநிலையில் நான் நின்றேன். என்னை மிகவும்
பாதித்த இந்தக் காலக்கட்டத்தில் நான் என் வலி தாங்கமால் 
கதறினேன், அழுதேன், கூச்சலிட்டேன், சண்டைப்போட்டேன்,
வாதம் செய்தேன்... தாராவியில் நான்கு தலைமுறையாக வாழ்ந்தக் குடும்பம்
என் குடும்பம், இசுலாமியர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் நாங்கள்.
அந்தக் கலவரமும் அதன் பின் தொடர்ந்த நடந்த குண்டுவெடிப்புகளும்
எங்கள் வாழ்வை அலைக்கழித்தன. மதமும் கடவுள் வழிபாடும்
தனிமனிதர் சம்பந்தப்பட்டவை. அதை அரசியலாக்கும் போது
அது சாதாரணமனிதர்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைக்
கண்கூடாகப் பார்த்தேன். அதுவே என்னை அன்றாட அரசியலை
நிராகரிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கியது. 

 பெரியாரைக் கொண்டாடியப்போது
ஏற்றுக்கொண்டவர்கள் அம்பேத்கரைக் கொண்டாடிய போது
தங்கள் புறக்கணிப்புகளாலும் கள்ளமவுனத்தாலும் தங்களின் சாதிய
முகத்தை எனக்குக் காட்டினார்கள். 
இந்த அனுபவங்களின் ஊடாகவே சாதியத்தின் முகத்தை மிக அருகில்
பார்த்தேன் எனலாம். சாதிகள் இல்லை என்று நாங்கள் வளர்க்கப்பட்டதும்
கற்பிக்கப்பட்டதும் எவ்வளவு கற்பிதமானது என்பதைப் புரிந்துக்கொண்டபோது
ஏற்பட்ட காயமும் வலியும் ஆற்றிக்கொள்ளமுடியாதவை.


இந்திய தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவை என்பதை முன்வைத்து
நடக்கும் campaign for electoral reforms in India- CERI அமைப்பு எம். சி இராஜ்
அவர்கள் தலைமையில் வங்காள தேசத்தில் டாக்கா நகரில் துவங்கியது.
அக்கருத்தரங்கில் மும்பை பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்துக் கொண்டேன்.
இப்போதும் அது குறித்த களப்பணிகள், வொர்க்‌ஷாப் என்று மராத்திய
மாநிலத்தில் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன்.

நுனி நாக்கின் ஆங்கிலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக
இருக்கும் இலக்கிய வட்டங்கள் மும்பையில் மிகவும் பிரபலமானவை.
Lead India movement , times of india , kalakOdda , times of india நடத்தும்
இலக்கியத் திருவிழா ஆகிய நிகழ்களில் கலந்து கொண்டிருக்கிறேன்
ஆனால் times of Indiaன்  lead india movement ன் கவிதை வாசிப்புகளில்
கலந்துகொள்ளும் தருணங்களில் எல்லாம், இந்தப் பிரபலத்துடன் நானும் 
மேடையில் இருந்தேன், கவிதை வாசித்தேன் 
என்று சொல்லிக்கொள்வதை தவிர
இந்நிகழ்வுகளின் பங்களிப்புகள் எனக்கு ஒத்துவரவில்லை என்றுதான்
சொல்லவேண்டும். ஏனோ தெரியவில்லை நான் அப்போதெல்லாம்
அவர்களில் ஒருத்தியாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஜெய்பீம்காம்ரேட்
என்ற ஆவணப்படத்தை நேஷனல் ஃப்லிம் பெஷ்டிவலில் பார்த்தப்போது
மும்பையில் தங்களுக்கு ரொம்பவும் அருகில் இம்மாதிரி சம்பவங்கள்
நடக்கின்றன என்பதை ஆச்சரியத்துடன் பார்த்த சீமான் சீமாட்டிகளை
நான் பார்த்தேன். அதனால் தான் இக்கூட்டங்களில் இருக்கும் போதெல்லாம் அவர்களில் ஒருத்தியாகிவிடக் கூடாது என்கிற உள்ளுணர்வோடு இருக்கின்றேனோ என்று தோன்றுகிறது. 


 

கவிஞர் அன்பாதவன் , புதுக்கோட்டை நா.முத்துநிலவன் ஆகியோர் மூலம் தமிழகத்திலிருந்து வெளிவரும்  வெளிவரும் சிற்றிதழ்களில்
தொடர்பு ஏற்பட்டது. கணையாழி முதல் கல்வெட்டுப்பேசுகிறது வரை
சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்தேன். சிறுகதை, கவிதைகள் என்று
எழுதியதை புத்தகமாகக் கொண்டுவருவதில் மும்பை எழுத்தாள்ர் மன்றமும்
தமிழ்நாட்டில் நண்பர்களும் இன்றுவரை உதவியாக இருக்கிறார்கள்.
கவிதாசரணின் நட்பும் தொடர்பும் என் விமர்சனங்களுக்கு உரம் சேர்த்தன.



தமிழ்நாட்டின் இலக்கியச் சூழலை 
நான் தூர இருந்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் இல்லாமல் வாழ்க்கை
என்னை மும்பைவாசியாக்கிவிட்டதற்க்காக வருத்தப்பட்ட நாட்கள்
எவ்வளவு அபத்தமானவை என்பது எனக்குப் புரிகிறது,
மணிப்பூரின் பெண்களின் போராட்டம் தமிழ்நாட்டு பெண்ணியத்தைப்
பாதிக்காதது குறித்து கூட நான் விமர்சனப்படுத்தவில்லை. ஆனால்
வாச்சாத்தி பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமை கூட கண்டுக்கொள்ளப்படாமல் கடந்து செல்லப்பட்டிருப்பதை
என்னமாதிரியான பெண்ணியமாக எடுத்துக் கொள்வது என்று
எனக்குத் தெரியவில்லை. 

மும்பை வாழ்க்கை என் உலகத்தை
விசாலமாக்கி இருக்கிறது. பல்வேறு மொழிக்கவிஞர்கள் எழுத்தாளர்களுடன்
பழகும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது. அர்ஜூன் டாங்களே முதல்
தோழி கவிதாமகாஜன் வரை என் நட்பு வட்டம் விரிவடைந்திருக்கிறது.
உலகின் எந்த ஒரு மாற்றமும் இந்தப் பெருநகர வாழ்க்கையை
உடனே பாதிக்கும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
உலகமயமாதலின் வாசலாக இருக்கும் மும்பை பெருநகரம்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தி இருக்கும்
மாற்றங்களை அவலங்களை மாறிவரும் வாழ்வின் மதிப்பீடுகளை
அதன் பாதிப்புகளை நான் பார்க்கிறேன். அனுபவிக்கின்றேன்.
அதை எனக்குத் தெரிந்த வகையில் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


எப்போதும் என்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள தயாராக 
இருக்கின்றேன். 
 "காலியானப் பாட்டில்"  " அறிமுகம்" என்ற  சிறுகதைகள் எல்லாம்
அப்படியான சுயவிமர்சனத்திலிருந்து வந்தவை தான்.
பன்னாட்டு வங்கி வேலையும் இப்பெருநகர வாழ்க்கையும் இச்சூழலில் வாழும் பெண்களைப் பற்றிய புரிதலை
அவர்களின் ஏக்கங்களை இயலாமையை என் கதைப்பாத்திரங்களாக்கியது.
மும்பையின் வாழ்விடங்களைப் பற்றி நாஞ்சில் நாடன் எழுதியிருப்பது
கற்பனை அல்ல. இடம் என்ற கருப்பொருள் இங்கே மனிதர்களின்
வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளையும் சமூகத்தின் ஒழுக்கநியதிகளையும் கடைப்பிடிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.
மும்பையில் நண்பர் ராஜாவாய்ஸ் அவர்கள் தமிழ்ப்போஸ்ட்
என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பித்தார். அந்த ஆசிரியர் குழுவில்
நானும் இடம்பெற்றேன். தனியறை சிறுகதைகளை அந்த இதழில்தான்
தொடர்ந்து 26 வாரங்கள் எழுதினேன்

உண்மைகளை வெளிக்கொண்டுவருவதில் முக்கியப்பங்காற்ற வேண்டிய ஊடகங்கள் இன்றைக்கு என்ன செய்துக்கொண்டிருக்கின்றன என்பதை
சமூக அக்கறையுடன் கவனித்து வருகின்றேன். ஒவ்வொரு செய்திகளுக்குப் பின்னாலும் இன்னொரு செய்தியும் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றது. paid news இன் செய்தி அதிர்வலை வட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
அதனால் தான் பொதுஜன அபிப்பிராயங்களுடன் ஒத்துப்போவதோ
அல்லது கொண்டாடுவதோ சாத்தியமில்லை. இந்தச் சூழலே பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும் அது குறித்த கட்டுரைகளையும் எழுத 
வேண்டிய இக்கட்டான சூழலை என் போன்றவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அண்மையில் எழுதிய சச்சினின் பாரதரத்னாவை நிராகரிக்கும் ஓர் இந்திய அன்னை என்ற கட்டுரை எல்லாம் இவ்வகைப்பட்டதுதான்.


ஜனரஞ்சகமான இதழ்கள் மேலும் குறிப்பிட்ட தமிழ்நாட்டின் சில இதழ்களில்
எழுதினால் மட்டுமே அதிகமான வாசகர்களைச் சென்றடைய முடியும்
என்றும் எழுத்தாளர் என்ற முத்திரைக் கிடைக்கும் என்றும் இப்போதும்
என் நட்பு வட்டத்தில் சிலர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
முன்னது உண்மை ஆனால் அடுத்து அவர்கள் சொல்வது ?
இதை என் எழுத்துகள் உடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு நன்றி சொல்வது தவிர
இது குறித்து எனக்கு மெனக்கெட நேரமில்லை. எழுதியதை என்னளவில்
கணினி மூலமாக எடுத்துச் செல்வது எனக்கு எளிதாகவும் வசதியாகவும்
சமரசமின்றி என் கருத்துகளுடன் என் எழுத்துப் பயணத்தைத் தொடர
ஏதுவாகவும் இருக்கிறது. அதனாலேயே அதிகமாக இணைய இதழ்களில்
எழுத ஆரம்பித்தேன். எனக்கான உலகம் இப்படித்தான் விசாலமாகிக்கொண்டே
இருக்கின்றது.

பொதுவாக எழுத்தாளர்கள் எழுதி முடித்தப்பின் அவர்களுக்கும் அவர்கள்
கதை மாந்தர்களுக்குமான தொடர்பு அற்றுப்போய்விடுவதாகவும்
அதன் பின் மூன்றாவது மனிதராக நின்று பார்ப்பதாகவும் பலர் சொல்லியிருப்பதை வாசித்திருக்கின்றேன். ஏனொ நான் அப்படி இல்லை,
என் கதைமாந்தர்கள் எப்போதும் என்னுடன் வாழ்ந்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள். எழுதி வெளிவந்தப்பின்னரும் அவர்களுடனான
என் தொடர்பு அறுபடுவதே இல்லை. அதன்பின்னரும் அவர்கள் என்னுடன்
உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் .. பண்பாட்டு முகமூடி அணிந்து
நான் அவர்களின் கதைகளில் விளையாடி இருக்கும் சித்துவிளையாட்டுகளைக்
கண்டு என்னை அவர்கள் விழித்திருக்கும் போதும் தங்கள் மவுனமொழியில் விமர்சனம் செய்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

எழுதியது துளி. எழுதாமல் இருப்பது கடல்போல என்
னுடன் என் முன்.
நான் நிற்பதோ பத்திரமாக கடற்கரையில்.
என்ன செய்வது சொல்லுங்கள், 
என் கால்களை நனைக்கும் அலைகளின் ஈரத்துடன் நானும் என் எழுத்தும்.
பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி,
நடுக்கடலுக்குப் போக வேண்டும்.. ஆழ்கடலில் எரிமலைகள் இருக்கின்றதாமே
அதை என் எழுத்துக்கள் சந்திக்கும் நாள் வருமா, தெரியாது.
இதுவரை எழுதியது எல்லாம் அந்த ஒரு பயணத்திற்கான ஒத்திகைதான்.

#புதியமாதவி
#puthiyamaadhavi















Sunday, September 21, 2025

காமக்கிழத்தியும் தேவி வழிபாடும்




காமக்கிழத்தியும்

தேவி வழிபாடும்.



சடங்குகளில் வரலாற்றின் சுவடுகள் மறைந்திருக்கின்றன.

தேவி வழிபாடு செய்வதற்கு வடிவமைக்கப்படும் தேவியின் சிலைகள் காமாட்சிபுரத்திலிருந்து/ காமக்கிழத்தியின் பிடிமண் பெற்று செய்யப்படுகிறது. 

Mud from a prostitute's doorstep, a ritualistic and symbolic addition. 


ஏன்?


இதை  அறிய வந்தப்போது  பலருக்கு " வால்காவிலிருந்து கங்கை வரை" நினைவுக்கு வரும். அது மட்டுமல்ல சங்க காலத்தில் வாழ்ந்த  காமக்கிழத்தியும் நினைவுக்கு வரும். 


தலைவன் - தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும் காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம் என்பதை சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும் அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் அறியலாம்.

திருமணம் என்ற ஏற்பாடு உருவானதற்கு காரணமாக பொய்யும் வழுவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் உருவான திருமண ஏற்பாட்டை ஏற்காத பெண்களும் இருந்திருக்கிறார்கள். இப் பெண்கள்  " அன்னையே இனக்குழு சமூகத்தின் தலைவி" என்பதன் எச்சம்.


நம் வழிபாட்டு முறையில் தென் குமரியின் மகன் குமரன் என்று அழைக்கப்படுகிறார். குமரன்,  குமரியின் கணவன் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். 


திருமண ஏற்பாட்டை விலக்கிய பெண்கள் தலைமைத்துவம் மிக்கவர்கள்.  போர்க்கலையில் சிறந்தவர்கள். இசை நடனம் ஓவியம் என்று பல கலைகளிலும் வல்லவர்கள்.

இந்தப் பெண்களை இவர்களின் தலைமைத்துவத்தை

இவர்கள் இனக்குழு வாழ்க்கையில் தலைமுறை தலைமுறையாக மனித குவத்திற்காக செய்த வீரமிகு வரலாற்றை...

அவர்களிடம் " பிடிமண்" வாங்கி சிலை செய்யும் தேவி வழிபாட்டில் மனித வரலாறு பொதிந்து வைத்திருக்கிறது.


நவராத்திரி முதல் இரவு


வெள்ளை உடையில் இருக்கிறேன்.

 யாரும் என்னைத் தொட்டு விடாதீர்கள்.

எந்தக் கறையும் இன்றி 

இந்த இரவை 

காமட்டிபுரம் 

கடந்து விட வேண்டும்.

மொட்டு விரியும் தருணம் இது. 

உயிரின் ரகசியம் பொதிந்த இரவு.

பால் வீதியை வெளியில் நிறுத்தி இருக்கிறேன். 

நட்சத்திரங்களின் கண்களை 

கரிய மேகத் துண்டுகளால் கட்டி விடுங்கள். 

இந்த ஓரிரவிலேனும்

வெள்ளை தாமரையில் 

என்னுடல் பூத்திருக்கட்டும்.

ஹே 

சென்னிமல்லிகார் ஜுனா..

ஒவ்வொரு இதழாக 

இரவின் விரல்கள் தீண்டி 

உதிர்வதற்குள்

விடிந்த விடாத 

காமனை எரித்த 

முதல் இரவு. 


( இக்கவிதையிலும் இந்த வரலாற்றின் ரகசியத்தை எழுதி இருந்தேன். பலருக்கும் புரியவில்லை! 🙂🙏)

Wednesday, September 17, 2025

விடுதலை அரசியல்.

 



புதிய
மாதவியின் கவிதை தொகுப்பினூடாக
- கவிதாசரண்

💥💥💥




புதிய மாதவியை உங்களில் பலருக்குத் தெரியாம லிருக்கலாம் அதனால் என்ன ? உங்களில் பலரை அவருக்கும் தெரியாது என்பது போல இயல்பாக எடுத்துக் கொள்ளலாம். எனக்கும்கூட அவரை அதிகம் தெரியாது. அவரது கடிதங்கள். கவிதைகள் மூலமாகவே அறிமுகம். ஆனாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவரது பெயர் என் நினைவில் சுடர்கிறது. தெரிதல் என்பது நேரில்  அறிதல், பேசிப்பழகுதல், சொந்தம் கொண்டாடுதல் சண்டை போட்டு நிறுவுதல் என்பதாகவே முழுமை பெற்று விடுவதில்லை. ஏப்ரல் 2003 கவிதாசரண் இதழில் அவருடைய கடிதம் ஒன்று வெளியாகி இருந்தது.. ஓர் அபவாதமாக என் விமர்சனங்கள் திசை திருப்பப்பட்டபோது எங்கள் குரலின் எதிரொலியாகத் தன் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். எங்களைப் பற்றி அவர் பெற்றிருந்த தெரிதலின் அம்சம் அது. அவரைப் போய் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்லிக் கொள்வது சற்றுக் கூச்சமாகத்தான் இருக்கிறது. எங்களை விட நன்கறிந்த நுண்ணறிவுள்ள
பெண்மணி அவர்.
அவரைப்போல அப்படியொரு கனிவையும் பரிவையும் தன்னெழுச்சியாகக் காட்டுவதென்பது எல்லோருக்கும் முடிகிற காரியமல்ல. அவரை ஒரு கவிஞராகப் பார்ப்பதை விட ஒரு நல்ல மனுஷியாக, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்துருகும் பிறவியாகப் பார்த்து மகிழ்வதே ஒரு சுகமான அனுபவம். சொல்லைப்போல் வறியதொன்றில்லையாதலால் பல பெருமைகள் சொல்லாமையில்தான் நிறைவடைகின்றன.

புதிய மாதவியைத் தொடுபுள்ளியாக வைத்து இக்கட்டுரை விரிகிறது. மற்றபடி இது அவரையோ அவரது கவிதைகளையோ முதன்மைப்படுத்தி மதிப்பிடும் முயற்சியல்ல. ஒருவகையில் தமிழினம் என்று பீற்றிக்கொள்ளத் தெரிந்த நம்மை நாமே மறுமதிப்பீடு செய்து கொள்ளும் சிறு முயற்சி. இதில் புதிய மாதவியின் சில சொல்லாடல்கள் கவனம் பெறுகின்றன. ஒன்றைப் பாராட்டித்தான் அதன் ஓர்மையைச் சிறப்பிக்க வேண்டுமென் பதில்லை. புறக்கணித்துவிட முடியாதபடி விமர்சிப்பதற்கு விஷயம் இருப்பதே பெரிய விஷயம்தான்.

1994ஆம் ஆண்டில் இதழுக்குக் குறிப்பிடத்தக்க இரண்டு கடிதங்கள் வந்தன. 'சாரதா' இதழ் நேர்காணலில் ச.தமிழ்ச்செல்வன் என்னும் தோழர் தலித் பிரச்சினைகள் பற்றி சர்வ அலட்சியமாய் உதிர்த்திருந்த கருத்துகளைக் கண்டித்து கவிதா சரண் கடுமையாகச் சில கேள்விகளை முன் வைத் திருந்தது. அக்கேள்விகளால் தூக்கம் தொலைத்த தாகச் சொல்லி அவ்விரு கடிதங்களும் எழுதப்பட்டிருந்தன. ஒரு கடிதத்தை  இரா. நடராசன் எழுதி யிருந்தார். 
(கவிதாரண் அக் நவம் 1994.) தன்னளவில் தனித்துவம் மிக்க, கட்டுரை வடிவிலான நீண்ட கடிதம். கவிதாசரணின் கேள்விகளை மேலும் கூர்மைப்படுத்திய கருத்துக்குவியல். அந்த வல்லமை அவருக்கு வெகு இயல்பாய்க் வந்திருந்தது. ஒரு தலித்தை விடவும் தலித் படும் அல்லல்களை ஆழமாகத் தொகுக்க வல்லவர் அவர். மற்றொரு கடிதத்தை எழுதியவர் புதியமாதவி ,மும்பை வாசி. மும்பைத் தமிழ் மன்றங்கள் நன்கறிந்த பெயராயிருக்கும் அவருடையது. 
சீர் வரிசை' சண்முகராசன் அவர்களால் இதழுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். தலித் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெகு  எதார்த்தமான மொழியில் விவரித்த அக்கடிதம் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சி யையும் அளித்தது. (டிசம். 1994 இதழில் வெளியிடப்பட்டது). வியப்புக்குக் காரணம் அதை எழுதியவர் ஒரு பெண்மணி என்றாலும் கடிதம் ஒரு பெண் பிரதியாக அடையாளம் காட்டாமல் ஒரு பொதுமைத் தன்மையுடன் அழுத்தமான அரசியல் மொழியில் எழுதப்பட்டிருந்தது. மகிழ்ச்சிக்குக் காரணம் அது இதழின் குரலாய் ஒலித்தது.

எழுதுகிறவர்களைப் பெண் 
ஆண் என்று வகைப்படுத்துவது சிலருக்குப்பிடிக்காமல் போகலாம். ஆனால் நமக்கு அது வரலாற்றுத் தேவையாகப்படுகிறது. படைக்கவும் சிந்திக்கவும் தொடங்கியுள்ள அண்மைக் காலத்துப் பெண்கள் ஆணின் பொருண்மையற்ற பிம்பமாக அழிந்து போவதை வெறுக்கிறார்கள், புத்துணர்வு பெற்ற பெண்ணியவாதிகளாகவும் தன்னிலை பேசுகிறவர்களாகவும் வெளிப்படுகிறார்கள். பெண்ணின் அனைத்துப் பரிமாணங்களையும் புத்துருவாக்கம் செய்வதற்கு அப்படிப்பட்ட புதுவெளிச்சம் தேவையும் நியாயமும் ஆகிறது. பெண்ணின் முழுமுதற் பிரச்சினையே அவள் பெண்ணாயிருக்க அனுமதிக்கப்படுகிறாளா என்பதுதான். அவள் ஒரு தாயாக. சகோதரியாக, மனைவியாக, வேசியாகப் பெயர் தாங்கி, ஒரே நேரத்தில் உண்கலமாகவும் கழிவுக் கூடையாகவும் நடத்தப்படுகிறாளே தவிர, பெண்ணா யிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த இருட்டடிப்பைச் சகித்துக் கொள்கிறவள் தன் அடுப்படியில் ஒரு விறகாய், ஒரு திரியாய், ஒரு பொறியாய்க் கரைந்து போகிறாள். பெயர் தாங்கியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறவள் 'தன்பிள்ளை, தன்கணவன், தன்குடும்பம்' என்னும் சுதந்திரமற்ற பற்றுக்கோடுகளில் ஊசலாடி அடங்குகிறாள். இந்த வட்டத்துக்குள்ளும் அடங்காமல் தன்னைத் தாதிமைக்குத் தத்தம் பண்ணுகிறவள் எல்லா உயிர் மேலும் பற்றிப் படரும் தாய்மைப் பரிவு என்னும் அரூப இழைகளால் தன்னை நெய்தெடுத்துக் கிழிபடுகிறாள். இவை யாவும் ஒரு பெண் தன்னிலையைப் பின்னிருத்தக் கிடைத்துள்ள வாய்ப்புகள், பரிவுணர்வு என்பது கனிந்த மன நிலையில் எல்லா உயிர்களுக்குமான பொதுப் பண்புதான் என்றாலும், அடக்கப்படும் பெண் தன் அடிமைத்தனத்தை மறந்திருப்பதற்கு கிடைத்த தனிப்பெரும் பண்பாகத் 'தாய்மை' என்னும் பெயரில் உன்னதப்படுத்தி, வரலாறியாத காலந்தொட்டு புகட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது; அது ஒரு பிறவிக்கொடையாக அவள்பால் ஊன்றப்பட்டிருக்கிறது. உண்மையில் இதுதான் அவளுடைய அடிமைச் சங்கிலியின் ஆதார மையம். இதைக் கடந்து தன்னை மனுஷியாகப் புத்துயிர்த்துக் கொள்ளத்தான் பெண்ணினம் இன்று போராடிக் கொண்டிருக்கிறது.

புதிய மாதவியின் வெளிப்பாடு இதற்குப் புறம்பானதல்ல என்றாலும் அடிப்படையில் அந்தக் கோட்பாட்டுச் சாரமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என்றே சொல்ல வேண்டும். சமூகத்தின்பால் மிகுந்த கரிசனமும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகக் கடும் விமாசனமும், தலித் விடுதலையில் தன்னெழுச்சியும் கொண்ட பொதுமானுடப் பார்வை அவருடையது. அதை ஓர் இயக்கவாதியின் மடைதிறப்பாகவும் நாம் மதிப்பிடலாம். நுண்ணரசியல் வகைமைகளில் குவியம் கொள்ளாத ஓர் எதிர் அரசியல் பார்வை அது, இன்னும் நுணுக்கமாக அணுகினால், பெரியார் காலத்து சுயமரியாதை சிந்தனையில் முளைப்பெடுத்து, பெரியார் காலத்திலேயே சுருங்கி, பெரியாரோடு தேங்கிப்போன், கவிதை மயக்கமற்ற திராவிட இயக்கத் தொகுப்புதான் என்றால் இதற்கு முன்பே இம்முடிவினை நான் தொடர்பார்வையாக அதனை அடையாளம் காண வேண்டும். 
(இவ்வகை கணிப்புகளுக்கு நான் வர உதவியது புதிய மாதவியின் புதிய கவிதை தொகுப்பு தான் என்றால் அது மிகை இல்லை. இதற்கு முன்பே என் முடிவினை நான் எட்டி இருக்க முடியும். இந்தப் புள்ளியில் குவியப்படவில்லை என்பதே காரணம்).

 காந்தியடிகளின் கடைசி மூச்சு 'ஹேராம்' என்னும் சொற்படிமமாகத் திரண்டு ஒரு முணுமுணுப்பாய்க் காற்றில் கலந்ததாக உலகமகாப் பொய்ப்புனைவு ஒன்று உருவாக்கப்பட்டது. அவரை அருகிருந்து சுட்ட கோட்சே அப்படியொரு பொய்  வாக்குமூலம் கொடுத்தானோ என்னவோ. அன்று முதல் இந்தியாவை அந்த படிம முழக்கம் பேயாய்ப் பிடித்தாட்டுகிறது. அதனால் பீடிக்கப்பட்ட ஒவ்வொருத்தரையும் பேயாகவே உருமாற்றிக் கொண்டிருக்கிறது.  அந்த மனிதமற்ற தலைப்பில்தான் புதிய மாதவி தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். தலைப்புக் கவிதை ஏற்கனவே கவிதாச்சரனில் வந்தது.
கூடவே 'ஏ ...அல்லா..: என்னும் கவிதையும். நூல் வெகு நேர்த்தியாக வந்திருக்கிறது. பிசிறு இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கிறது.   நூல் முழுதும் உயர்வகை வழுக்குத் தாள் பயன்படுத்தப்  பட்டிருக்கிறது. நூலை அனுப்பிய சில நாட்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புதிய மாதவியிடம்  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதோடு "இவ்வளவு விலை உயர்ந்த ஆர்ட் தாளை நூல் முழுமைக்கும் பயன்படுத்தியிருப்பது வெகு அபூர்வம் அம்மா"
என்றும் சொன்னேன். 
அவர் இந்தச் சுட்டலை எதிர்பார்த்தார் போல்  மிகுந்த அடக்கத்தோடு, "அது என் கணவர் எனக்களித்த கொடை,  ஐயா '" என்றார். மயக்கமற்ற கவிதை போன்ற அந்தப் பதில்கூட அவர் செதுக்கலைக் காட்டுகிற தடயமாய் இருக்க வல்லது. கவிதை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது: "அது வடிவத்தில் இல்லை ஐயா, அதன் வாசத்தில் பிடிபடுவதாக்கும்." என்றார் ஒரு நண்பர், மெய்யாய் இருக்கும். குழலும் யாழும் மழலையை விடவா இனியன என்று தெரியாமலா கேட்டார் நம் திருவள்ளுவர்.

'சீர்வரிசை' சண்முகராசன் அவர்கள் நூலின் மதிப்புரையில் புதிய மாதவியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "மும்பை வாழ் தமிழர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்த குடும்பத்தின் நான்காவது தலைமுறை புதிய மாதவி... மும்பை திராவிட  இயக்க வேர்களில் இவருடைய தந்தையார் திரு சு வள்ளிநாயகமும் ஒருவர்.  சுயசிந்தனையோடு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அவர் வல்லவர். என்கிறார். இதுதான் புதிய மாதவியின் மூலமும் பின்புலமும். கவிதாசரணில், பிப். ஏப்ரல் 2003 ல் வெளிவந்த அவரது கடிதமும் இதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பெரியார் காலத் து சுயமரியாதைப் பயிலரங்கில் பயிற்சி பெற்றவர்களா யிருப்பார்கள் இவரது மூத்தோர்கள். பெரியாரின் திராவிடர் கழக வேர்களாய் இருந்து கிளைகளாய்ப் பூத்திருப்பார்கள். மும்பைக்காரர்கள் என்பதால் சிதைவுருவாக்கம் பெற்று விடாமல், மூல பலத்தோடு முற்றிக் கனிந்திருப்பார்கள். புதிய மாதவி அந்தக் கனிகளின் சாறு . பெரியார் இயக்கம் என்னும் பெருங்காயக் குப்பியில் காயமும் வாசமுமாக எஞ்சியுள்ள எச்சம். திராவிடர் இயக்கப் பெறுமதியைப் பொறுத்த அளவில் தமிழகம் பெரும்பாலும் காலிப் பெருங்காயக் குப்பிதான். அதில் ஒட்டிக் கொண்டிருந்த வாசமும் காலியாகிவிட்டது. ஆனால் அது இன்னும் பெருங்காயக் குப்பி என்றே பெயர் கொண்டிருப்பதால் வாசம் இருப்பதாகப் பாசாங்கு செய்யப்படுகிறது.

பெரியாரை யுக புருஷர் என்றழைப்பது நம்மைப் பொறுத்தவரை குறைச்சலான மதிப்பீடுதான். ஏனெனில் யுகயகாந்திரமாக நாம் சிறுமைப்பட்டுக் கிடந்ததை அவர் மூலமாகத்தான் அறிந்தோம். இனியொரு முறையும் ஏமாந்துவிடக் கூடாது என்னும் சங்கல்பத்துக்கும் அவரைத்தான் முன்னோடியாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கும்கூட அவரைத்தான் காரணமாக்கப் போகிறோம். இதில் நம் அறிவின்மையும் இயலாமையும் தப்பித்தலும் எத்தனை சதவீதம் என்பது முக்கியமற்றுப் போய்விடும் போல் தெரிகிறது.

பெரியார் தன் பின்பற்றிகளையும், அவர்களின் அடியொற்றி நடக்கும் வழித் தோன்றல்களையும் இன்றைய சூழலில் எப்படிப்பட்ட இக்கட்டுக்கு ஆளாக்கிச் சென்றுள்ளார் என்பதை புதிய மாதவி மூலமாகவே நாம் அறியலாம்.

அவர் சொல்கிறார்:

'தெய்வமே!

நாத்திக அறிவையும்

ஆஸ்திக மனசையும்

ஒரே உயிரில் ஏன்

ஒன்றாகத் தொடுத்தாய்?"

நல்லவேளை! புதிய மாதவி 'கடவுளே, கடவுளே' என்று கசிந்துருகவில்லை. அறிந்தோ, அனிச்சையாகவோ 'தெய்வமே, தெய்வமே' என்றே விளிக்கிறார். கடவுள் - கருத்தின் உருவகம்; சமஸ்கிருதம் உருத்தேற்றிய, எல்லாக் குப்பைகளையும் ஒன்றிணைக்கத் தோதான சரக்குப் பெட்டகம். தெய்வம் மனிதராய் இருந்து மறைந்து போன இருப்பின் மறுபடியாக்கம். அந்நியமற்ற பயபக்திக்கும் உறவுகளோடான குறை இறைஞ்சலுக்கும் வடிவமைத்துக் கொண்ட தமிழ்  விதந்தேற்றும் நன்றிக்கடன்.


இந்தக் கவிதையில் தென்படும் இன்னொரு அம்சத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். புதியமாதவி பெண் நிலை வெளிப்பாட்டாளர் அல்ல. ஆனால் அடிப்படையில் அவர் ஒரு பெண் உணர்வாளர்தான் என்பது அனிச்சையாக இங்கே வெளிப்படுகிறது. "தெய்வமே.. தெய்வமே" என்று பெண்களால்தான் நெக்குருக முடியும், 'கடவுளர்' களிலும், 'தெய்வங்களைக் கண்டடைய முடியும். உருகக்காரணம் அவர்களின் பிறவித் தனிமை. மாதவியும் உருகுகிறார். எப்போதெல்லாம் அவர் பெண் உணர்வு களுக்குத் தாவுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவரது கவிதை வரிகளில் கவித்துவமும் கூடி வருகிறது. ஏக்கமே கவிதையின் இழையாகும் போல் மகளுக் கேங்கும் தாயாக, நட்பெனும் நெல்லிக்கனிக்கேங்கும் நங்கையாக வெளிப்படும் கவிதைகளில் அமுதம் துளிர்க்கிறது. பெண்ணொளிதான் கவித்துவத்தின் அமுதூற்றம் போல் தெரிகிறது.

வெகுமக்களுக்கு மனமே அறிவு. ஒளி பெற்றவர்களுக்கு அறிவே மனம், இரண்டும் ஓர் உயிரின் உயிர் தாங்கும் நபரின் அடுத்தடுத்தபடி நிலை வெளிப்பாடு. ஆஸ்திக மனசைவிட நாத்திக அறிவு-திறன் கூட்டப்பட்ட ஒளி உமிழ்வு.

அடிப்படையில் கடவுள் மறுப்பு என்பது எதிர்நிலை அங்கீகரிப்புதான். இருக்கும் ஒன்றுதான் இல்லாமலும் இருக்கும். ஒழித்தல் என்பது இருத்தலின் மேற்செல்லல். ஒழித்தலின் திரும்புதல் இருத்தலின் மனநிலை..

இதுபோன்ற விசாரங்களிலெல்லாம் பெரியார் சிக்காமலே போய் விட்டார் என்பது இக்கவிதையில் ஊடாடும் அலைவு.

உலகத்தில் எல்லா மொழிகளையும் போலத் தமிழும் ஆண்மொழிதான். பெண்ணுக்கும் அதுவே மொழியாக ஒரு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள், பொதுத் தன்மையிலான ஆண் சுட்டுகள் பெண்ணையும் உள்ளடக்கிக் கொண்டவை என்று. உதாரணமாக, "கடவுளை மற மனிதனை நினை" என்பதில் உள்ள 'மனிதன்' இருபாலருக்கும் பொதுவான சுட்டுச் சொல் என்பது இலக்கணம், இந்த உதாரணமே பெரியார் இயக்கவாதிகளுக்கும் தவிர்க்க முடியாத இலக்கணமாயிருந்தது என்பதைத் தெளிவாககுகிறது. அதனால்தான் புதிய மாதவியும் அதே கவிதையில் ''நான் மனிதன் என்று/ என் கவிதை பிறக்கின்றது" என்கிறார். மாதவி என்றில்லை. பெண்கள் பலரும் வேறு வழியில்லாமல் அல்லது மொழியில்லாமல் அவ்வாறுதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அநீதியைப் பொறுக்க மாட்டாமல்தான் பெண் கவிஞர்கள் பலரும் பெண் நிலைக்குத் தாவினார்களோ என்னவோ. (ஆனால் மொழியிலக்கணப் பயன்பாட்டில் அவ்வளவு சுத்தமெல்லாமா பார்க்கிறார்கள். என்னும் கேள்வியையும் எளிதாகப் புறக்கணித்து விடுவதற்கில்லை. ஒளவை காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை உணரப்பட்டதா என்று ஆய்ந்து பார்க்கலாம். ஆனால் பிற்கால ஔவை ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்குமான பொதுச் சுட்டாக 'மானிடர்' என்னும் சொல்லை ('அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது') பயன் படுத்துகிறாள்.

புராண பிரவசனக்காரர்களுக்கு அடுத்தபடியாக திராவிட இயக்கக்காரர்கள்தாம் வேத, இதிகாசக் கதைகளையும், சமஸ்கிருதப்படிமங்கள், பாவனைகளையும் அதிகம் எச்சில்படுத்தியிருப்பார்கள் என்று நம்பலாம். ஒன்றை ஏற்கிறவர்களைக் காட்டிலும் மறுக்கிறவர்கள்தாம் அதைப் பற்றித் துல்லிய அறிவு பெற்றிருக்க வேண்டும் என்னும் தர்க்க நியாயப்படி அது நேர்கிறது என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். ஒரு கட்டத்தில் எதிர்ப்பின் பிடிப்புகள் மழுங்கும்போது அவை பற்றிய விளிப்புகள் எவ்வித பிரயாசையோ, வியாக்யானமோ இன்றி, நம்பிக்கையின் பாவனைகளாக ஒலிக்கத் தொடங்கிவிடும்.

இதை விளையாட்டாகச் சொல்வதாகவே வைத்துக் கொள்ளுங்கள் . ஒரு வகையில் வேறெவரையும் விட திராவிடக் கட்சிக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாய் மாறுவது எளிது என்று சொல்லலாம். இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் ஒரு கோடுதான் பிரிக்கிறது. இந்தக்காலை அந்தப்பக்கம் எட்டி வைத்தால் போதும், அது  ஒரு சமரசம் போல. பிழைத்துக் கிடப்பதற்கான நல்லம்சம் போலவும். சமரசம் சவக் குழிகளில் மட்டும்தானா? அடிமைப்படும் இனக் குழுக்களிலும் கூடத்தான்.

விளையாட்டுகள் எப்போதும் வினையாகத்தான் கனிகின்றன. அது பற்றிய விளக்கமாகத்தான் இக் கட்டுரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விளையாட்டின் அப்பாவித்தனமான வெளிப் பாடாக புதிய மாதவியிடமிருந்தே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.


'வான் மழை போற்றுதும்' என்று கவிதைக்குத் தலைப்பு கொடுத்துவிட்டு அந்த மழையை 'வருண பகவானே - வருண பகவானே' என்று கவிதை நல்ல பக்தையைப் போல உருக்கமாக விளிக்கிறார். உருகுதல் என்பது கரைதலின்  ஓர் அம்சம்.

அக்கவிதையில் உள்ள வேறுபலநல்ல வரிகளில் ஒரு கொத்து -

"வருண பகவானே!

அடுக்கு மாடியின்

கண்ணாடிக் கதவுகள்

உன்னை ரசிக்கலாம்

ஆனால்

உன்னை

வாழ்த்துவதும் வணங்குவதும்

எங்கள் குடிசைகள்தான்."

கவிதை எழுதுவது குடிசைவாசியா. குடிசை வாசிக்கா என்பதும் கூர்மையான கேள்வியாகிறது. குடிசைவாசிகள் இடி இடிக்கும்போது அர்ச்சுனனைக் கூப்பிடுவார்கள் மழையடிக்கும்போது வருண பகவானைக் கூப்பிடமாட்டார்கள்.

மழையை 'மழையே' என்று அழைக்க நமக்கு மனசில்லை. அதன் எளிமை பொசுக்கென்றி ருக்கிறது. சின்னக் குழந்தைகளின் அம்மணம் பார்த்தாற்போலக் கூச்சமாயிருக்கிறது. நாம் என்ன நீர் மோர் குடித்த காலத்திலா வாழ்ந்து கொண்டி ருக்கிறோம்? சாணி உருண்டையை பிள்ளையா ராகப் பிடித்து வைத்து, தேங்காய்க் கீற்றை நகத்தால் கிள்ளியெடுத்துப் பிள்ளையாருக்குக் கணபதித்து, வணங்கி முடித்த மறுபொழுதில் நிலத்திற்கு எருவாக்கிய தலைமுறையிலா வாசம் செய்கிறோம்? பெப்சி கோலா குடித்து, ஏவுகணை பிள்ளையாரை தரிசித்து தேசபக்தர்களான காலத் தில் அல்லவா குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். கூடவே பெரியார் பிறந்த மண்ணிலா இந்தப் பேயாட்டங்கள் என்றும் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொள்கிறோம். எனில், தெய்வங்களை விட்டால் வேறு யாரிடம் முறையிட?

★★★

பெரியார் இயக்கம் தமிழ்ச் சூழலில் எதைச் செய்தது, எதைச் செய்யாமல் விட்டது, பெரியாரின் பங்களிப்பில் தமிழகம் பெற்ற முன் நகர்வு என்ன, பின்னடைவு என்ன என்னும் விமர்சன பூர்வமான கேள்விகளை முன்வைத்து இதுவரை எந்தவொரு நடுநிலையாளரும் ஆய்வு செய்ய முன் வர வில்லை. அப்படி முன் வந்தால் அவர் உடனடி யாகத் தமிழினத் துரோகியாகவோ பார்ப்பனக் கைக்கூலியாகவோ முத்திரை குத்தப்படும் அபாயம் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்ததுண்டு. இன்று அந்த நிலைமை மாறியிருக்கிறது. பெரியார் பரவலாக விமர்சிக்கப்படுகிறார். அதேசமயம் அவர் உயிரோடில்லாத சூழலில், அவரது பெயரைக் கெடுத்துக் கைக்கூலி பெறவும் இனத்துரோகி ஆகவும் ஒரு விமர்சகனுக்கு வாய்ப்புகளும் கூடியுள்ளன. இந்த நிலையில் அப்படியொரு ஆய்வு முயற்சியைத் தன்னிரக்கம் கொள்ளாத தன்னிலையைத் துறக்காத ஒரு தலித் மேற்கொள்வது இரண்டு காரணங்களால் பொருத் தமாயிருக்கும் என்று படுகிறது. முதற்காரணம், சமூகம் சார்ந்த அறிவும் சுரணையுமுள்ள ஒரு தலித் தன்னிலையாளர் இனத் துரோகியாகவோ கைக்கூலியாகவோ சுருங்கிவிட முடியாது என்பது அவரது அடிப்படை அலகு. வழிதவறிக் கறை பட்டுக் கொண்டிருக்கும் பெரியாரின் பெயர் தாங்கிகளுக்கெதிரான விமர்சனங்கள், பெரியாருக்கான விமர்சனங்களல்ல என்ற தெளிவு அவருக்கிருக்கும். இரண்டாவது காரணம் பெரியார் இயக்கத்திற்குத் தலித் பங்களிப்பு ஒன்றும் அற்பசொற்பமானதல்ல. ஆனால் அதற்கேற்ப அவர்கள் பொருட்படுத்தப் பட்டார்களா, சமன்மை பெற்றார்களா என்பன தவிர்க்க முடியாத கேள்விகள், உரிமையோ, உதவியோ, கேட்காமல் தரப்படுவதில்லை. அலறாமல் கவனிக்கப்படுவ தில்லை. 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் தரப்படும்' என்பது எல்லோருக்குமான பொது விதிதான். 'அழுதபிள்ளை பால் குடிக்கும்' என்பது சம்பந்தனுக்கு மட்டுமல்ல ஒரு தலித் குழந்தைக்கும்
ஆன விதிதான். தட்டுவதும், கேட்பதும், அழுவதும் சுயமான முன்முயற்சிகள். இந்த முன்முயற்சி களுக்கான சுய தயாரிப்புகளை தலித் இனக் குழுக்கள் பெற்றிருந்தார்களா, பெறுவதற்கான குறைந்தபட்ச தகைமைப்பண்புகளேனும் அடை யாளம் காணப்பட்டனவா என்பனவெல்லாம் ஆய்வில் கண்டறியப்பட வேண்டிய உண்மைகள். இவற்றை
ஒரு தலித் ஆய்வாளர் செய்யும் போது தலித் விடுதலை அரசியல் புத்தொளி பெறக்கூடும். இந்தியாவின் எல்லாவித சாதிமதச் சமூக அவலங்களுக்கும் இன்று  தலித்விடுதலைஅரசியல்  ஒற்றைத் திறவுகோலாய் இருக்கிறது.

 தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த கையோடு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் இரண்டு சீரழிவுகள் பாதித்தன. ஒன்று பரிசுச்சீட்டு. மற்றொன்று மதுக்கடை திறப்பு. (பெரியாரிடம் பாடம் கேட்டவர்களின் போக்கிரித்தனமான வீழ்ச்சியாகவும் நாம் அவற்றை மதிப்பிடலாம்)
இரண்டும் மக்கள் வருமானத்தையும் அதனூடாக வாழ்வின் போக்குகளையும் பாதித்த சீரழிவுகள். உறுதியில்லாத நல்வாய்ப்பை நம்பி ஊதாரிகள் ஆக்கியது பரிசு சீட்டு. அரசு வருமானத்துக்காக புது குடியர்களை வெள்ளமெனப் பெருக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது மதுக்கடை திறப்பு.
 (மார்க்ஸ் கட்டுரை குடியை அறநெறிப் பிரச்சனையாக்குவது கேள்விக்குள்ளாகிறது. குடியின் எல்லைகள் எல்லாக் காலத்திலும் பிரச்சினைகளோடு உணரப்பட்டிருந்தன. குடியும் குடித்தனமும் அவரவர் சமர்த்து. இதில் அடுத்தவர் தலையீடு தேவையில்லை என்பது அதன் ஆதார செய்தி) 

மனிதனின் முதன்மையான ஆக்க சக்திகள் இரண்டு ஒன்று மூளை. மற்றொன்று கைகள், மூளை நினைத்து உருவாக்குவதைக் கைகள் வடிவமைத்து இயக்குகின்றன. அப்படிப்பட்ட முதன்மை உறுப்பான மூளையின் இயல்பைக் குலைக்க வல்லது மது . மதுவோடு ஒப்பிடும்போது பரிசுச்சீட்டு நிகழ்த்திய சீரழிவுகள் புறவயமானவை; பொய்க் கனவு பற்றியவை. இரண்டும் அடிப்படையில் பொருள்வயப் பிரச்சினைகள் மட்டுமே. பாதிப்புற்றோரின் எண்ணிக்கை அளவிலும் அவை ஏற்படுத்திய சீரழிவின் வீச்சிலும் கணக்கிடப் படுபவை.  இவற்றை ஒரே ஒரு சட்டத்தால் நம் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். அதனால் எந்த பண்பாட்டுப் பிரச்சனையும் எழப்போவதில்லை.

இவற்றுக்கு இணையாக, தமிழகத்தின எட்டுத் திசைகளையும் அறிவுத்தளத்தில் தட்டியெழுப்பிய அமைப்புதான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம். பின்னாளில் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்ற இயக்கம். இனி அதைப் பெரியார் இயக்கம் என்றே அழைக்கலாம் (பெரியார் இயக்கத்தைப் போய் பரிசுச்சீட்டு, மதுக்கடை திறப்போடு இணைத்துப்பேசி கொச்சைப்படுத்தி விட்டதாக நீங்கள் நினைக்கக் கூடும், எனக்கு மட்டும் அதில் விருப்பமா என்ன? காமராசர் பெயரிட்ட ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை'யும் அவரைப் பச்சைத் தமிழன்' என்று உயர்த்திப் பேசிய பெரியாரையும் இணைத்துப் பேசுவது போலத்தான் இதுவும் என்று எடுத்துக் கொள்வதே நல்லது.) பெரியார் இயக்கம் நிகழ்த்திய அறிவு நிலைத்தாக்கத்தை ஒரு சட்டத்தால் துடைத்துவிட முடியாது. அதனால்தான் அவருடைய ஓர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அந்தத் தாக்கத்தைத் தகர்த்து விடலாம் என்று அவருக்கெதிரான குறை விமர்சனங்கள் பெருக்கப்படுகின்றன.

பெரியார் ஓர் அரை நூற்றாண்டுக் காலம் தமிழகத்தைத் தட்டியெழுப்பினார். அவர் எழுத்தையும் பேச்சையும் செயலையும் அவற்றின் அடர்த்தியையும் பார்க்கும்போது, அவருக்கு இணையாக இந்தியாவில் இன்னொருத்தர் எந்தக் காலக் கட்டத்திலும் இயங்கியதாகத் தெரியவில்லை. அவருக்கு இணையான தீவிரத்தை ஒருவேளை சம்பந்தன் காலத்துச் சைவ மீட்பு இயக்கம் பெற் றிருக்கக்கூடும். 'அன்பே சிவம்' என்னும் மதத்தை மீட்க அவன் காலத்தில் எண்ணற்ற இரத்தக் குளியல்கள் நிகழ்த்தப்பட்டன. பெரியார் இயக்கம் தோன்றிய அதே காலத்தில் தோற்றம் பெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட பொறுப்பேற்க வேண்டிய கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் கணக்கு வழக்கில்லை. எல்லாம் காந்தி கணக்குதான். ஆனால் தவறுதலாகக் கூடக் கொலைக்கறை படியாத. முன்னறிவிப்பில்லாமல் போராட்டம் நடத்தியறியாத பெரியார் இயக்கம் இன்று வரை அராஜக இயக்கமாகவே எதிரிகளால் பேசப்படுகிறது. இது ஒன்றே போதும், அதிகார மையத்துக கெதிரான பெரியார் அரசியலின் தீவிரத்தை அறிந்து கொள்ள . ஒருவேளை 'பூணூலை அறு, குடுமியை வெட்டு' பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடி' என்றெல்லாம் சொல்லால் அறைகூவல் விடுத்தது செருப்பால் அடிப்பதைவிட, செருப்பால் அடிப்பேன் என்பது அதிகபட்ச தண்டனைக்குரியது என்னும் விதிப்படி மோசமான வன்முறையாகப் பேசப்பட்டிருக்கும்

பெரியார் நிகழ்த்தியது எதிர் அரசியல், வைதிக, வர்ணாஸ்ரம தர்மங்களால் நிறுவப்பட்ட அனைத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கிளார்; புரட்டிப் போட்டார்; அடித்து நொறுக்கினார். இதை வேறு வகையில் சொல்வதானால் புல் பூண்டுகளால், முட்புதர்களால், நச்சுச் செடிகளால் மூடுண்டு கிடந்த விளைநிலத்தைப் புழுதி பறக்க உழுது போட்டார். வெடிப்பும் வீறல்களும் மிகுந்து, நச்சுயிர்களின் வாழிடமாகிச் சிதிலமடைந்து கலகலத்துப்போன கட்டிடத்தை புதிய நிர்மானத்துக்காக இடித்துத் தரைமட்டமாக்கினார். இது ஒரு வகை 'அழிவு' வேலை என்றே சொல்ல வேண்டும்.


பெரியாரின் எல்லா 'அழிவு' வேலைகளையும் தமிழகம் தாங்கிக் கொண்டது என்பது இதிலுள்ள கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம். அவர் நிகழ்த்திய 'அழிவு' வேலைகளோடு ஒப்பிடும்போது, சந்தித்த எதிர்ப்புகள். தாக்குதல்கள் என்பதைப் பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லாதவை. அவரால் பிள்ளையாரை உடைக்க முடிந்தது. ராமனுக்கு செருப்பு மாலை போட முடிந்தது அரசியல் சட்டத்தை எரிக்க முடிந்தது. எல்லாம் முன்னறிவிப்போடு செய்தவைதான். இந்தியாவின் பிற மாநிலங்களில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத 'அழிவு' வேலைகள். அதனால்தான் இன்றும்கூட உபி போன்ற மாநிலங்களில் அவருக்கு ஒரு சிலை வைக்க முடியவில்லை. தலைநகரில் உள்ள பெரியார் மையத்தை ஆதிக்க சக்தியினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவர் முதலில் திராவிட நாடு கேட்டார் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள் அவரது எதிர் அரசியலை அநாகரிகமாக மதிப்பிட்டது அதற் கொரு காரணமாயிருக்கக்கூடும். பெரியாரைத் தமிழகம் மட்டுமே பெரியாராக'த் தாங்கிக் கொண் டதைப் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்க வேண்டும்

பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தாரோ அவற்றின் நிழல்கூடப் படாமலேதான் தமிழர் களின் தொன்மை வாழ்வியல்முறை அமைந் திருந்தது .பார்ப்பனக் கருத்தியல் ஒற்றைத் தன்மை கொண்டது.ஒரேநாடு,ஒரே மொழி,ஒரே  கலாச்சாரம் என்பதாக.  அதை முற்றும் நிராகரிக்கிற முழக்கம்தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". பார்ப்பன் ஊடுருவலுக்கு முற்பட்ட சாதியற்ற மதமற்ற, கடவுளற்ற ஆன்மிகப் புனைவற்ற நாகரிக வாழ்வியல் என்பது தமிழ்ச்சமூகத்தில் மட்டுமே நிலவியிருந்தது . கணியன் பூங்குன்றன் ''தீதும் நன்றும் பிறர் தர வாரா!" என்று பேசும் போது, அது பிறவிப்பயன் என்றோ மதம் சார்ந்த பாவ புண்ணியம் என்றோ, கடவுள் சார்ந்த வரம் சாபம் என்றோ மடமை பேசவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நம் வாழ்க்கையைத் தொல்பழங்காலத்துக்குத் திருப்பிக் கொண்டு போக முடியாது . ஆனால் சாதி மத, கடவுள் கறைபடாத தொன்மைப் பண்பாட்டையும் அதைப் பேசும் மொழியையும் மீட்டெடுத்துக் கொள்ள முடியும் ஆயிரக் கணக்கான கறையற்ற தமிழ்ச்சொற்கள் பார்ப்பனக் கலாச்சாரத் தாக்கத்தால் புறக் கணிக்கப்பட்டன. மறக்கடிக்கப்பட்டன; இழிவுபடுத்தப்பட்டன. வடமொழி சொற்களால் மாற்றீடு செய்யப்பட்டுக் கறைபடுத்தப்பட்டன. பௌத்தம்,ஜைனம் சைவம், வைணவம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் மதங்களால் தமிழ் வளர்க்கப்பட்டது உண்மை. ஆனால் அதற்கும் முன்னே கடவுளையும் மதத்தையும் கடுகளவும் கற்பிக்காத, முதிர்ந்த நாகரிகம் உள்ள மாந்தரின் கவிதைமொழியாகத் தமிழ் இருந்தது அதனினும் உண்மை " தமிழ் காட்டு மிராண்டி மொழி" என்று சொன்னதற்குப் பெரியாருக்குக் காரணங்கள் இருக்கலாம் ஆனால் சாதிமதக் கறை படிந்த மொழி என்பதற்காகத் தமிழைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலத்துக்கு மாறச் சொன்னது நியாயமற்ற கோரிக்கை. தமிழ். கறை படிந்த மொழி எனில் இந்தியாவில், அல்லது அகிலத்தில் வேறு எந்த மொழிதான் கறைபடியாத மொழி? போதிய மொழிப் பயிற்சியும், பழந்தமிழ் பரிச்சயமும் உள்ளவர்களுக்கு அப்படியொரு மீட்டுருவாக்கத்துக்கு உகந்த மொழி தமிழ்தான் என்பது தெரிய வரும், ஆங்கிலத்துக்குள்ள தகுதி அது அகிலத்தை ஆண்டவனின் மொழி. பன்னாட்டுச் செலாவணியுள்ள மொழி என்பதைத் தவிர வேறென்ன? விஞ்ஞான மொழி என்னும் அதன் தகுதிக்காக,உலகத்தார் தங்கள் பண்பாட்டு மொழிகளையெல்லாம் உருவிப்போட்டு விட
வேண்டுமா? பெரியாரின் நோக்கம் சந்தேகத் திற்கப்பாற்பட்டது என்பதற்கா ஒரு பிழையைப் பேசாமல் விட்டு விடுவது நியாயமாகாது.

கடவுளைத் தூக்கியெறியச் சொலகிறார் பெரியார். தரக்கியெறிந்து விட்ட இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி பிறக்கிறது 'நடு வீட்டில் நரகல் கிடக்கிறது, எடுத்தெறி என்றால் எதை வைக்கிறது என்கிறாயே,:  என வெடிக்கிறார். இது ஒரு அறிவு ரீதியான பதில் என்பதில் ஐயமில்லை. கடவுளை நரகலாகப் படிமப்படுத்தி, எடுத்தெறிவதை முன்னுரிமைப் பிரச்சினையாக்கும் பதில். ஆனால் ஒரு பாமரனுக்கு இது போதுமான பதிலல்ல. அவனுக்கு மாற்றுகள் தவிர்க்க முடியாதவை.

சிறகுள்ளவைகளையே பறவைகள் என்கிறோம். மனித வாழ்வில் சிறகுகள் என்பவை ஆடுவதும் பாடுவதும் கொண்டாடுவதுவமே, நம்பிக்கைகளில் உறைவிடமே மனித மனம். ஆகவே கடவுளை எறிந்து விட்டால் அதற்கு இணையாக நம்பிக்கை வைக்க ஒன்றியிருக்க,  உறவு கொண்டாட,  ஊமை ஆறுதல் பெற, ஏதேனும் மாற்று வேண்டும் . :கடவுளை மற, மனிதனை நினை ' என்பது சொல்வதற்கு இனிக்கலாம். பசியாலும் சுயநலத்தாலும் வார்க்கப்பட்ட மனிதனுக்கு சகமனிதனை நினைப்பதொன்றும் உள்ளுருக்கும் விஷயமல்ல. இங்கேதான் சிறு தெய்வ வழிபாடு அர்த்தமுள்ளதாகிறது. சிறு தெய்வங்கள் மதங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் இல்லை, சொத்து சுகங்களைக் கட்டியாளும் நிறுவனச் சின்னங்கள் இல்லை. சிறு தெய்வங்கள் தமிழ் வாழ்வின் நம்பிக்கை அம்சங்கள், பெருந்தெய்வங்கள் அதாவது கடவுளர்கள் மதங்களின் உருவாக்கம்.
 சிறு தெய்வங்கள் அதாவது நாட்டார் தெய்வங்கள் உறவின் கிளை அம்சம்; நம்பிக்கையின் நட்புருவம், கிராமங்களில் இன்றும் நீங்கள் பார்க்கலாம்: ஒரு பாமர இந்துப்பெண் தன் பாதையில் தென்படும் பள்ளிவாசலையும், மாதா கோவிலையும் அனிச்சையாக வணங்கி விட்டே செல்கிறாள். இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வழிபடும் முறையை அறிந்தவளானால் அவர்களைப் போலவே வணங்கவும் தயங்குவதில்லை. அவளுக்கு வழிபாட்டிடங்களை மதப் பிரதிகளாகப் பார்க்கும் குறு மனப்போக்கு இன்னும்கூட உருப்பெற வில்லை. சிறு தெய்வங்கள் வாழ்ந்த மனிதர்களின் பிரதிகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களாய்ப் பிறந்து தங்கள் உயிர்த் தியாகங்களால் தெய்வங்கள் ஆனவர்கள் அவர்கள், தமிழகத்தில் 18 சித்தர்கள் .‌தங்கள் பாடல்களால் அறியப்படு கின்றனர். அவர்களின் சமாதிகளின் மேல் எழுந்துள்ள கோவில்கள்தாம் சக்தி உள்ளவை என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. அக்கோவில்கள் பெருந்தெய்வ வழிபாட்டிடங்களாய் நிறுவனப்பட்டிருந்தாலும் அவற்றை சிறு தெய்வங்களின் உறைவிடங்களாகவே பாவித்துக் கொள்ளும் மனப்போக்காகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் . தெய்வங்களை மதங்களோடு இணைத்துப் பார்க்க மறுக்கும் தமிழ் வாழ்வின் வெளிப்பாடு. 

ஒவ்வொரு நபருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. இந்தியாவில் அது சாதி அடை யாளமாகக் குவியம் பெறுகிறது. ஒரு சமூகப் போராளி எந்த அடையாளத்திலிருந்து தன்னுணர்வும் கிளர்ச்சியும் பெற்றெழுந்தானோ அந்த அடையாளத்திலிருந்தே தன் கலகத்தைக் கட்டமைக்கிறான். அவன் விடுதலைப் போராளி என்பதால் தன் கலகத்தை ஒற்றைப்புள்ளியில் சுருக்கி விடாமல் பலநோக்குப் பரிமாணங்களில் விரிவுபடுத்திக் கொள்கிறான். அம்பேத்கர் தலித் அடையாளத்திலிருந்து தன்னுணர்வு பெற்றார். ஆகவே தலித் விடுதலை என்னும் தொடக்கப் புள்ளியிலிருந்து தன் போராட்டத்தை விரிவு படுத்தினார். அதுபோல பெரியார் குத்திர அடையாளத்திலிருந்து கிளர்ந் தெழுந்தவர். ஆகவே அவர் தன் போராட்டத்தை குத்திர இழிவு நீக்கத்தைத் தொடக்கமாகக் கொண்டு விரிவு படுத்தினார். ஒரு நதி தன் மூலத்திலிருந்தே வலிமை முழுவதையும் திரட்டிக் கொள்வதில்லை. துணைநதிகளின் பெருக்கமே அதனை வற்றாத பெருநதியாக வளர்த்தெடுக்கிறது. தலைவர் களும் அப்படித்தான் என்பது நம் அடிப்படை புரிதலாயிருந்தால், அவர்களைப் பற்றிய நியாயமற்ற விமாசனங்களைத் தவிர்ப்பதன் மூலம் நம்மை யோக்கிய மானவர்களாகத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பெரியார் தன் சமூகப் பணிகளாக விதவைத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம், பெண் விடுதலை முதலானவற்றை முன்வைத்து இடைவிடாமல் பரப்புரை நிகழ்த்தினார். விதவைத் திருமணத்தை எடுத்துக் கொண்டால் விதவைக் கொடுமைகள் நிறைந்த சமூகக் குழுக்களுக்கே அது முக்கியமான பிரச்சினையாய் இருக்கும். அப்படிப்பட்ட குழுக்கள் ஒட்டுமொத்த சமூகத்தில் ஒரு 15% அல்லது 20% மக்களைக் கொண்டி ருக்கும். பெரியார் பிறந்த சாதியிலும் அந்தக் கொடுமை நிலவியது. வர்ணாசிரம சீலத்தைத் தங்கள் மேலான ஒழுக்கமாகப் பாவித்த சாதிகளில் நிகழ்ந்த கொடுமை அது, பிற சாதிகளில் அது ஒரு பிரச்சினையே இல்லை. இதனை வைத்துக் கொண்டு பெரியார் தன் சாதிக்கே முன்னுரிமை கொடுத்தார். சாதிப் பிரச்சினையையே ஒட்டு மொத்த சமூகப் பிரச்சினையாக ஊதிப்பெருக்கினார் என்று விமர்சனம் வைத்தால் அது நம்மைக் குறுங்குழுவாதிகளாகவே படம் பிடித்துக் காட்டும் . சாதி மறுப்புத்
திருமணங்கள் எல்லாருக்குமான விஷயம். ஆனால் இதைப் பரவலாக செய்து கொண்டவர்கள் இடைநிலைச் சாதிக்காரர்களே. அதாவது இடைநிலைச் சாதி ஆண்கள், தாழ்த்தப் பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண் டார்கள். தாழ்த்தப்பட்ட ஆண்கள் பார்ப்பனப் பெண்களைத் தவிர பிறசாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பெரியார் காலத்தை விட இன்றுதான் பெரும்பாலும் கொலையில் முடிவதாக இருக்கிறது. பெரியார் காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்த சாதி மறுப்புத் திருமணங்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளே நடைபெறுவது வெகு அபூர்வமாயிருக்கிறது. இதுமாதிரி செயல்களை ஊக்கப்படுத்த உட்குழுத் தலைமைகள் முன் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. தலைமைகள் உருவாக்கக் கிடைத்த நல்வாய்ப்புகள் கண்டு கொள்ளப்படவில்லை.

கலப்புத்திருமணங்கள் புரட்சிகரமானவைதான் என்றாலும் அவை நிகழ்ந்தேறிய முறையில் ஒரு எதிர்நிலை அம்சமும் இருக்கிறது. 'மேல்' சாதிக்காரன் அவனைவிடக் கீழ்ச் சாதிப் பெண்ணை மணம்புரிந்து கொள்வதை மனுநீதி விதிவிலக்காய் அனுமதிக்கிறது. மாறி மணம்புரிவதைக் கொலைக் குற்றம்போல் நிராகரிக்கிறது அதைத்தான் இந்த மனுசாதிகளும் அனுசரிக்கின்றன. பெரியார் முன்னெடுத்த ஒட்டுமொத்த சமூகப் புரட்சி, அவரது இயக்கக்காரனை மனுதர்ம ஆதரவாளனாகக் காட்டும் முரண்பாடே செயல்வடிவம் பெற்றது. இந்த வகையில் பார்ப்பனப் பெண்களை நாம் பாராட்ட வேண்டும். தாழ்ந்த சாதி ஆண்களை மணந்து கொண்டு அதற்கு கழுவாயாகத் தங்கள் தலைவர்களை நல்ல 'இந்து'வாக, மேல்நிலைப் படுத்திவிட்டாலும் அடிப்படையில் அவர்கள் மனுவின் எதிரிகள்: ஆனாலும் மதத்தின் அங்கங்கள்.

பெண் விடுதலைப் பேச்சில் பெரியார் அதன் எல்லா எல்லைகளையும் தொட்டவர்.
 எல்லைகளையே உடைத்தவர். ஆனால் பெரியார் தொண்டர்கள் பெண்ணைப் பெண்ணாகப் புரிந்து கொள்ள, அனுமதிக்கக் கற்றார்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் ஒரு விளிச் சொல்லாகவே எல்லோரையும் தோழர்கள் ஆக்கிவிட்டதைப்போல, பெரியார் இயக்கத்திலும் பெண்களை ஆண்களுக்குச் சமமாக, ஆண்களாக, ஆண்களின் பிம்பங்களாகவே பார்த்தார்கள். அதன் வளர்ச்சியாக, பெண்களை ஒழுக்கச் சின்னமாக, கற்பரசிகளாக. ஒரு வகையில் பாவிக்கும் காதலற்றவர்களாகப் பாவிக்கும் மனநிலையிலேயே உறைந்திருக்கிறார்கள். பெரியார் அந்த அளவுக்குத்தான் புரிந்து கொள்ளப்பட்டார்; செரிக்கப்பட்டார்.

இந்நிலையில்தான் அவரது ஆக்கப்பணிகள் அழிவுப் பணிகளாக அல்லது அவற்றின் தொடர்ச்சியாக அடையாளங்காணப்பட்டனவே தவிர, திட்டமிட்ட ஆக்கங்களாக, பண்பாட்டுத் தளத்தில் வரையறை செய்யப்பட்ட தீர்வுகளாக முன்னெடுக்கப்படவில்லை. பெரியார் பணிகள் அவருக்குப் பிறகு. அவர் கொண்டிருந்த பொருளில் தொடரப்படவும் நிலைப்படுத்தப்படவும் இல்லை. உண்மையைச்  சொல்வதானால் இந்தப் பின்னடைவு பெரியார் காலத்திலேயே உருவாகி விட்டது.

'உலகத்தில் ஒரே ஒரு கிறிஸ்தவர் இருந்தார் அவர்தான் இயேசுநாதர்' என்பார்கள். அதுபோல பெரியார் இயக்கத்தில் ஒரே ஒரு தொண்டர் இருந்தார் அவர் பெரியார் தான்' என்று சொன்னால் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.அவ்
வகையில் பெரியாரைச் சுற்றி இருந்த சீடர்கள் நாணய குறைவானவர்கள் மட்டுமல்ல, அழுக்குப் பிறவிகள். பெரியார்தான் தினமும் குளிக்காத  பல்தேய்க்காத துணி மாற்றிக் கொள்ளாத அழுக்குப் பிறவி என்று சொல்லி மனதுக்குள்ளேயே தங்களை பாராட்டிக் கொள்ளும் வாசனைத் தடவிய அழுக்குப் பிறவிகள். விதிவிலக்குகள் எங்கேயும் இருக்கும். இறுதி மூச்சு வரை பெரியார் தொண்டர்களாய் இருப்பவர்கள் உண்டு. நான் பேசுவது பெரும்பான்மை பற்றி. 

பெரியார் காலத்திலேயே அவர் நிழலில் நிறம் ஏற்றுக் கொண்டவர்கள்
அவருக்குப் பொய்யாகத்தான் நடந்துக் கொண்டார்கள் . பெரியார் தேசியங்களை கேள்விக்கு உட்படுத்திக் கொண்டிருந்தபோது அவர் சீடர்கள் தமிழ் தேசியம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இன்று திருமாவளவன் செய்வது போல் அன்று தங்கள் பெயர்கனை மாற்றிக் கொண்டார்கள். தமிழ்ப் பெருமிதம் பேசினார்கள். பாண்டிய சோழ மன்னர்களின் பாம்பரைகளாக தங்களை வடிவமைத்துக்  கொண்டார்கள். ஆண்ட பரம்பரையாகத் தங்களை அடையாளப்  படுத்திக் கொள்கிறவர்கள் அனிச்சையாக அதிகார மையங்களின் அயோக்கியத் தனங்களை மோசிக்கிறவர்களாக, நியாயப்படுத்துகிறவர்களாக மாறிவிடுகிறார்கள்.  இந்தப்பேர்வழிகள்தாம் மெல்ல மெல்லச் சரிந்து சாதிப்பெருமிதம் கொண்டவர்களாக விடைத்துக் கொள்கிறவர்கள் . பெரியார் காலத்து அந்தப் போக்குகளை அவரும் வகைபிரித்து விமர்சிக்கவில்லை . பெரியார் பெண் விடுதலை பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் கண்ணகியை கற்புடை தெய்வமாக போற்றிக் கொண்டிருந்தார்கள். தேவதாசிப் பிரியனான ராஜராஜ சோழனை, பொற்காலச் சோழப் பேரரசனாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டையும் ஒன்றிணைத்து பார்ப்பதுதான் இந்துத்துவா புனிதம். அது அவர்களுக்குப் பெரியாரின் சீடர்கள் என்ற பெயரிலேயே வாய்த் திருந்தது. பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லி அந்த கற்பரசர்கள் வெளியேறினார்கள். பெரியாரை பெண் விடுதலைக்கு எதிரான அந்த குற்றவாளியாக்கி விட்டுச் சென்றார்கள். அவர்கள் ஆட்சி அமைக்கும்போது  'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று ஒற்றைத்துவம் பேசும் சுதந்திரப் பிராமணனாக தங்களை உயர்த்திக் கொண்டார்கள். அந்த வாசகத்தின் எதிரொலியாகத்தான் ' பிஜேபி தீட்டுக் கட்சி அல்ல' என்று சொல்லி அவர்களோடு 
தோள் சேர்த்துக் கொண்டு, தங்களை 'நல்ல' இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டது . எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை" என்று இன்னும் வெட்கமில்லாமல் சொல்வார்கள். நல்ல இந்து நாத்தி கனாயிருப்பது விசேஷம் என்பது அவர்களுக்கும் தெரியும்.

 பெரியார் தன் ஆக்கப்பணிகளைத் தொடரத் திட்டங்களோ தோழமை உறவுகளோ, செயலறிவுப் புலமைகளோ, அதிகார வலிமைகளோ, வயதோ கொண்டிருக்கவில்லை. அவற்றைத் தேடிச் செல்வதும் அவர் கோட்பாட்டுக்கு ஏற்புடையதல்ல.  கடைசிக் காலத்தில் இயக்கச் சிதைவுகளுடேயும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது  ஒரு 'பச்சைத் தமிழனைக்' கண்டடைந்ததன் மூலமாகத்தான். அந்தத் தமிழன் ஆட்சி இழந்ததும் விரைவிலேயே அவரது பெயர் தாங்கிச் சீடர்கள் அவரைப் புதைத்து விட்டார்கள். 

பெரியார் இயக்கம் தேங்கிக் கிடக்கிறது. சந்தனமே ஆனாலும் தேங்கிப் போனால் அது நாற்றச் சேறுதான். இந்தத் தேக்கத்தால் தமிழகம் திரும்புகால் அலையில் சிக்கிக் கொண்டு விட்டது. மாபெரும் கடல் அலை அதன் தலைமீது அழுக்கையும் நுரையையும் சுமந்து கொண்டு கரை நோக்கிச் சீறி வரும். கரையில் மோதி, கடக்கமாட்டாமல் கால் மடக்கி வற்றிய கடல் நோக்கி எவ்விதப் பிரயாசையும் இன்றி மடிந்து விழும். அலை கரை நோக்கி வரும்போதும் அழுக்கோடு வந்தது. ஆனால் அந்த அழுக்கை நிராகரிக்கிற மூர்க்கம் அதற்கிருந்தது. இப்போது மடிந்து விழுகிறது. அழுக்கு ஒரு சுமையாக வந்து அழுத்துகிறது; தவிர்க்க முடியாத அதிகாரச் சுமையாகும்.

இனி ராமன் நல்லவனாகத் தெரிவான். மாதவி சொல்வது போல், 'குகனைத் தம்பி என்றான் குரங்கைக் கூட நண்பன் என்றான்' என்பது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும், அதற்குப்பின்னிருந்த வஞ்சகம் தெரிந்தாலும் சொல் ஏறாது. பா.ஜ.க எத்தனை வானரங்களைத் தம்பிகளாகச் சேர்த்துக் கொண்டு ஆள்கிறது. ராமன்தான் அவர்களுக்கு முன்னோடி. பெரியார் நல்லபடி போய்ச் சேர்ந்து விட்டார். ராமன் எவ்வளவு நல்லவனாயிருந்தால் 96 ஆண்டுகள் தன் பெயரில் அவனைச் சுமந்திருப்பார்! இப்படிச் சொல்லித்தான் இனி நம்மால் பெரியாரையும் நிம்மதியையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
 
.
ஃஃஃ


தொகுப்பிலிருந்து

சில துளிகள்...

1. ஹே...ராம் 
உன் ராம ராஜ்யத்தில் மனித தர்மம் ஏன் 
வாலி வதையானது?

2. ஏ... அல்லா 
எரிகின்ற
 புகை வண்டிகளில்
 இனி உன் 
குரான் ஒலிக்கட்டும்

3. தெய்வமே உன் கடைசி அவதாரமாவது எங்கள் சேரியில் நடக்கட்டும்

4. நான்கு முகங்கள் எட்டுக்கைகள் 
அசுரர்களைக் கொன்ற ஆயுத பலங்கள் கோட்டைகள் கொடிகள் இத்தனை இருந்தும் ஆண்டவனே 
உனக்கு ஏன் 
எங்கள்
 கருப்புப் பூனைகளின் காவல்!

5. அவள் விழிநீர் நெருப்பாகச் சுட்டாலும் நெருப்பை அணைக்கும்

6. வாஸ்து சாஸ்திரத்துக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் கண்ணகியின் கற்பு சாஸ்திரத்தைக் கற்றிருக்க நியாயமில்லை.

7. நீமட்டும்தான் 
பெண்ணை 
அலங்காரம் கூட அடிமைப்படுத்தும் 
என்றாய்

8. மின்சார யுகத்தில் கூட மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து போகும் நட்சத்திரங்கள்

9. தமிழா! 
உன் தூக்கத்தில் 
திராவிடம்
கானலாகிவிட்டது .
காவேரி பகற்கனவாகிவிட்டது

10 சுற்பில் நான் புதுக்கவிதை 
காதலில்தான் மரபுக்கவிதை.

11. நட்பு 
மேலானது என்பதால்தான் எட்டாத வானத்தில் நீ 
எட்டி விடும் கனவுகளில்
நான்.

12. நான் இயல்
நீ இசை.
நம் நட்பு நாடகம் என்று
ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாய்.

13. இந்த
மனிதச் சங்கிலியை
 சாதிச் சங்கிலி தொடும்போதெல்லாம்
தாராசு
 தடம் புரள்கிறது.

14. கம்யூனிசம் 
வர்க்கங்கள் பேசி
 வறண்டு போனது. 
காந்தியம் கதராடையாகி 
கிழிந்து போனது.

15. என் கனவுகளில்கூட 
தன் மண்ணின் வாசனையை பரிமாறிக் கொண்டிருந்த என் கிராமம் தொலைந்து போய்விட்டது.

16. கூடு கட்ட
கிளைகள் இல்லாத என் குருவிகள் 
டி.வி. ஆண்டனாக்களில் தலைகீழாக 
தர்ணா செய்கின்றன.

17. பசியை 
அவள் சாப்பிட்டாள்.
 பசியின் உடலை 
அவன்
 பசி சாப்பிட்டது.

18. ஓரிரவில் கள்ளச்சாராயம் 
அவனை சாப்பிட்டபோது விதவையின் கோலத்தில் அவளுக்கு விடியல் பிறந்தது.

19, கதறினாள் சின்னாத்தா எந்தக் கண்ணனும் வரவில்லை .
அவள் கதறலுக்கு ஓடி வர அவள் என்ன 
அய்வருடன் படுத்த தர்மராசனின் தர்மபத்தினியா?

கவிதாசரண் இதழ் 
செப்- அக் 2003
பக் 2 - 7




Friday, August 29, 2025

புதிய ஆரம்பங்கள்

 


அவள் கண்களில் இனம் புரியாத மருட்சி. எப்போதும் அவள் என்னையும் என் முகத்தையும் நேரில் பார்த்து பேசுவதே இல்லை.அது அவள் என்னிடம் வேலை செய்பவள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்கள் நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடன் திடகாத்திரமாக இருப்பார்கள் என்பது நான் படித்தப் பாடம். அப்படி எந்த விதமான திடகாத்திரமும் இவளிடம் இல்லை. நான் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள். அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கும் அவளுடைய பதில்.

இந்த மாவட்டத்திற்கு பணி மாற்றம் கிடைத்தவுடன் இந்திய வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறது இந்த இடம் ? என்று தேடிப்பார்த்தேன். பஞ்சாபிலிருந்து பிரிந்து தனிமாநிலமாகிவிட்ட அரியானாவில் இருந்தது இந்த மாவட்டம்.மேவாட் மாவட்டம்.( Mewat district). எந்த விதமான தொழில் அபிவிருத்திகளும் இல்லை. விவசாயம் மட்டுந்தான். பெரும்பாலும் எல்லா ஆண்களும் வாகன ஓட்டுநர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலமாவது இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக இருப்பவனுக்கு யாரும் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்களாம். அவள் தான் ஒரு நாள் இந்தச் செய்தியைப் பேச்சுவாக்கில் சொன்னாள். இரண்டு மாதங்கள் ஆனது அவள் சகஜமாக என்னுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசுவதற்கு.

அவளுடைய கதையை அவள் சொன்னாள். அவள் பெயர் ரத்னா. அவள் சொந்த ஊர் அசாமில் இருந்தது. அடிக்கடி லாரி ஓட்டிக்கொண்டு வரும் அவள் கணவன் நெடுஞ்சாலையில் இருக்கும் இவர்களுடைய தேநீர்க்கடையில்தான் லாரியை நிறுத்துவான். நேநீருடன் சேர்ந்து சுடச்சுட சப்பாத்தியும் கிடைக்கும். அவனை முதன் முதலாக அவள் பார்த்தபோது அவளுக்கு பத்துவயது கூட ஆகவில்லை. அவன் எப்போதும் அதிகாலையில் அல்லது இரவில்தான் வருவான். வந்தால் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் தேநீர்க்கடையில் வெளியில் போட்டிருக்கும் கட்டிலில் படுத்துக்கொள்வான். ரத்னாவின் அம்மா அவனை விழுந்து விழுந்து கவனிப்பாள். எல்லாம் சுடச்சுட அவனுக்கு கிடைக்கும். எப்போது வந்தாலும் அவன் அவளுடைய அம்மாவுக்கு ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்தது. அவன் வந்துவிட்டால் இவளுக்கும் ஏக குஷியாக இருக்கும். ஏதாவது திண்பதற்கு கிடைக்கும் என்பதால். இரவில் மட்டும் அவளுக்குப் பயமாக இருக்கும். அவளைத் தனியாக தூங்க வைத்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு விட்டு அவளுடைய அம்மா போயிருப்பாள். தம்பி, தங்கைகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒருநாள் அப்படித்தான் இரண்டு வயது கூட நிரம்பாத அவளுடைய தம்பி நடுராத்திரியில் விழித்து அழுதுகொண்டிருந்தான். அம்மாவைத் தேடி. அவள்தான் மூத்தப் பெண். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தாள். அவள் சமாதானப் படுத்துவதைக் கண்டு கோபத்தில் அவனுடைய சத்தம் இன்னும் அதிகமானது. அவள் எழுந்துபோய்க் கதவைத் தட்டினாள். அந்தச் சாலையில் அவர்கள் வீடு மட்டும்தான். மற்ற குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்தில் இருந்தன. அவள் தம்பியின் சத்தமும் அவள் கதவை இடித்தச் சத்தமும் சேர்ந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கதவின் இடுக்குகள் வழியாக பேரிரைச்சலுடன் அந்த நடுஇரவை அலற வைத்தது.

கதவு திறக்கவே இல்லை. அழுது அழுது அந்தச் சத்தத்தில் தொண்டைக் கட்டிக்கொண்டது அந்தச் சின்னப் பையனுக்கு. அவள் மடியில் அவன் பெருவிரலைச் சூப்பிக்கொண்டு படுத்திருந்தான். அவள் விரித்திருந்த கிழிந்தப் போர்வை நனைந்தது. அவள் அவனுடைய ட்டிராயரைக் கழட்டி விட்டு அவனைச் சற்றுத்தள்ளிப் படுக்க வைத்தாள். அவளுடைய பைஜாமாவும் நனைந்து போனது. அதிகாலையில் எப்படியோ தூக்கம் வந்து தொலைத்தது, அவளுடைய அம்மா வந்து இவள் தலைமயிரைப் பிடித்து இழுக்கும்வரைத் தூக்கம் கலையவில்லை.

..நல்லா திங்கறியே.. சொரணை இல்லை உனக்கு..இந்த வயதில் இப்படி படுக்கையை நனைச்சிருக்கியே நாயே’ என்று கத்தினாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘படுக்கையை நான் ஈரமாக்கவில்லை.. பெரிசா கத்த வந்திட்டியே..கதவை வெளிப்பக்கமா பூட்டிட்டு நீ எங்கே போய் தொலைஞ்சே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா வெறிப்பிடிச்சவள் போல் தம்பி தங்கைகள் எல்லோரையும் அடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இப்போது என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை.

வெளியில் வந்தவுடன் கடைக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்து வேகமாக கழுவி வைத்தாள். தண்ணீர்ப் பிடித்து நிரப்பினாள். அதுவரை அந்த லாரிக்காரன் வெளியில் கிடந்தக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அந்த துப்பட்டாவைப் பார்க்க பார்க்க அவளுக்கு லாரிக்காரன் மீது கோபம் வந்தது. அப்பா கொடுத்த சாய்க் கப்பை எடுத்துக்கொண்டு அவனிடன் போனாள். அவன் கண்விழித்திருந்தான். இவள் கைகளில் இருந்து சாய்க் கப்பை வாங்கியவன் இவள் கன்னத்தில் தட்டினான். பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டாள். தூரத்திலிருந்த அம்மா அவர்கள் இருவரையும் பார்த்தாள். இப்போது அம்மாவின் பார்வையை எதிர்த்து நின்று அவள் பார்த்தபோது அம்மா அவள் பார்வையைத் தாங்காமல் வீட்டுக்குள் போய்விட்டாள். இப்படித்தான் இந்த லாரிக்காரனின் உறவு இவர்கள் குடும்பத்துடன் ஆரம்பித்தது.

அடுத்து 6 மாதம் கழித்து வந்தவன் ரூபாய் 2700 கொடுத்துவிட்டு இவளை அவனுடன் அழைத்துவந்துவிட்டான். தம்பி தங்கைகளை விட்டுவிட்டு அவளுடைய அப்பாவை விட்டுவிட்டு அந்த மலையடிவாரத்து காற்றை விட்டுவிட்டு அவனுடன் தனியாகக் கிளம்பிவர முடியாது என்று அவள் அழுதப்போது அவளுடைய அம்மாவும் சேர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். லாரிக்காரன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அவனுக்கு சொந்தமாக நிலமிருக்கிறது, சாப்பாட்டுக்கு இந்த மலையடிவாரத்தில் லாரிக்காரனிடமும் காட்டு இலாக்கா காரர்களிடமும் மாறி மாறி படுக்க வேண்டிய அவஸ்தை இருக்காது என்று அவளுடைய அம்மா சொன்னபோது அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

அம்மா சொன்னபடியே அவனுக்கு 3 ஏக்கர் நிலமிருந்தது. வீட்டில் எல்லோரும் அந்த நிலத்தில்தான் உழைத்தார்கள். அவனுடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். இவன் தான் மூத்தவன். அவனுடைய அப்பா வயது 60 தாண்டிவிட்டது. இருந்தாலும் நல்ல வாட்டச்சாட்டமாக இருந்தார். இவளுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையுமில்லை.

வயிறு நிறைய மூன்று நேரமும் சாப்பிடும்போதெல்லாம் வீட்டு ஞாபகம் வரும். வீட்டு நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் குறைத்துக்கொண்டாள்.

வீட்டை நினைத்தவுடன் அம்மாவின் நினைவு வரும் அம்மாவை நினைத்தால் இப்போது தன் கணவனாக இருக்கும் இவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைவது தெரியும். சில சமயங்களில் அவனுடைய வார்த்தைகள் அவளை அப்படியே பொசுக்கும். உச்சக்கட்ட ஆலிங்கனத்தில் அவள் தன்னை மறக்கும்போது ‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று உதிரும் அவன் உளறல்கள்.. ..ஒரு மலைப்பாம்பு தன்னை இறுக்கிப்பிடித்து மூச்சு மூட்ட வைப்பது போலிருக்கும். பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு எழுந்திருக்க முயலும் ஒவ்வொரு முறையும் அவன் பிடி இறுகும்.கண்களை மூடி கால்களை விரித்து சருகளாய் அவள் இலை அவனுடைய வெட்ப மூச்சில் தீப்பிடித்து எரியும். அவள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவனுடைய தம்பி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் அப்பா வந்து சமாதானப்படுத்தினார். தம்பிகள் மூவரும் அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது

அவள் காதிலும் விழத்தான் செய்தது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் என்பது அவளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் ஏதாவது மாற்றம் நம் வீட்டிலாவது நடக்காதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.

‘நீ இதற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இருக்கிற 3 ஏக்கர் நிலத்தை நாங்கள் நாலுபேர் பங்கிட்டுக்கொண்டால் என்ன தேறும்? 3 ஏக்கர் நிலத்திற்கு குறைவா இருந்தா எந்தப் பெண் எங்களைத் திருமணம் செய்து கொள்வாள்? ..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒண்ணும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..’ அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள். அவனுடைய தம்பி இருட்டில் அவளை நெருங்கி அணைத்தப்போது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதொன்றும் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அருகில் அந்த ஊர்ப் பெண்களின் கூட்டம்.

‘என்ன ரத்னா பயந்திட்டியா.. மூத்தவனை விட சின்னவந்தான் ரொம்ப நல்லவன்.அதிர்ந்து பேச மாட்டான். இந்தப் பாரு ,, நீ கத்தி மயக்கப்போட்டு விழுந்ததிலிருந்து ஒண்ணும் சாப்பிடாமா உன் பக்கத்திலெயே உட்காந்திருக்கான். மேவாட்டுக்கு வந்துட்டு இதுக்கு மாட்டேன்னா எப்படி வாழமுடியும் சொல்லு..’ பக்கத்து வீட்டு அஞ்சு சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் அவள் கணவனுடன் பிறந்தவர்கள் 5 பேர். அவள் கணவன்தான் இவளைத் திருமணம் செய்து கொண்டு பீகார் மாநிலத்திலிருந்து அழைத்து வந்தான். அண்ணன், தம்பிகள் எல்லோருக்கும் சேர்த்து எட்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள்.

மெதுமெதுவாக சின்னவனின் அமைதியும் அன்பானக் கவனிப்பும் அவளைச் சமாதானப்படுத்தியது. லாரிக்காரனிடமிருந்த முரட்டுத்தனம் இவனிடமில்லை. எல்லா வற்றையும் விட இவளுக்கு மனநிம்மதி கொடுத்தது.. இவன் எந்த நேரத்திலும்..

‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று சொல்வதில்லை. சின்னவனின் குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்தது. வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமாகவே இருந்தது. லாரிக்காரன் வெளிப்படையாக சந்தோஷப்படுவது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவன் குமைந்து கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைப் பார்க்க பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மலைப்பாம்பைப் பிடித்து அதன் தலையில் ஏறி நாட்டியம் ஆடுவது போல சந்தோஷம். அவன் வீட்டுப்பக்கம் வருவதையே தவிர்ப்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் அதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. அவன் வீட்டிலிருக்கும்போது வேண்டும் என்றே சின்னவனை அழைத்து அவனருகில் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் குழந்தைப் பிறந்தப்பின் அடுத்தவன் முறை வந்தது.

அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும் வரும்போது அந்த வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பக்கத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

இவனிடம் லாரிக்காரனின் முரட்டுத்தனமில்லை. சின்னவனின் மென்மையுமில்லை. ஓர் அவசரம்.. அவசரம் .. அவசரம்.. பத்துநாள் பட்டினிக் கிடந்தவன் கஞ்சியை ஒரே வாயில் ஊற்றி மேலும் கீழுமாகக் கொட்டிக்கொண்டு நிற்கும் அவசரம் இவனிடம்.

இவள் முகத்தை அவன் நேர்க்கொண்டு பார்ப்பதே இல்லை. இவளும் அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. நான்காவது முறை வந்தப்போது இவள் உடல் கிழிந்து கிடந்தது. தைக்க முடியாதக் கிழிசலாய் எந்த உடம்பையும் போத்திக்கொள்ள லாயக்கு இல்லாமல் தொங்கியது. ஆத்திரத்தில் அவன் இவள் கிழிசல்களைப் பிடித்து இழுத்து சிதைத்தான். ‘அந்த இருட்டில் அவள் கதறல்…. அவளுடைய தலைமுடிக் கலைந்து முன்னால் விழுந்து ஆடியது. அவள் கண்களில் வெறித்தனம்…டேய்.. நான் உன் அம்மாடா.. உங்க அப்பனை எங்கே கூப்பிடு.. உன் அண்ணன்மாரைக் கூப்பிடு.. அவள் உடல்வேகமாக முன்னும் பின்னும் ஆடியது. எங்கிருந்து அவள் குரலுக்கு இத்தனை கொடூர சத்தம் வந்தது என்பது தெரியவில்லை. மறுநாள் பூசாரி வந்து மந்திரித்தார். அவள் அமைதியாக கட்டிலில் படுத்திருந்தாள். பக்கத்தில் அவளுடைய மாமனார் விசிறியால் அவளுக்கு காற்று வீசிக்கொண்டிருந்தார்.

நல்ல வாட்டச்சாட்டமான 60 வயதுக்கிழம். அந்த வீட்டிலேயே அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்.அந்தக் கிழத்தின் பார்வையைச் சந்திக்க விருப்பமில்லாமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். லாரிக்காரன் வந்து அவள் உடலைத் தொட்டுப்பார்த்தான். குளிர்ந்திருந்தது அவள் உடல். அவன் கவலையுடன் அங்கிருந்து நகர்ந்தான். சின்னவனும் அடுத்தவனும் வந்து எட்டிப்பார்த்தார்கள். அவள் பக்கத்தில் அவர்களுடைய அப்பா இருப்பதைக் கண்டவுடன் பக்கத்தில் வராமல் வெளியில் போய்விட்டார்கள். கிழம் அவள் பக்கத்திலேயே இருந்தது. அவளை விட்டு அங்கிருந்து நகர்வது மாதிரியே தெரியவில்லை. அவளுக்கு வந்திருப்பது கிழவனின் மனைவியின் ஆவி அல்லவா. மறுநாள் அவளைப் போலீஸ் கைது செய்தது.

‘மாமனாரை இரவில் அரிவாளில் வெட்டிக்கொலை செய்த மனநிலை சரியில்லாத மருமகள்’ என்று பத்திரிகைகள் மேவாட் மாவட்டத்தில் நடந்தக்கொலையைப் பற்றி எழுதின. முதல் முறையாக அந்த ஊருக்கு போலீஸ் வந்தது. பத்திரிகைகாரர்கள் வந்தார்கள். ‘அண்ணன் தம்பிகளுடன் வாழ்க்கை நடத்தும் நவயுக திரெளபதிகள்..

மாமனாரின் ஆசைக்கும் மறுப்பு சொல்லாமல் எரியும் குடும்பவிளக்குகள்..

ஊடகங்களுக்கு பெருந்தீனியாகப்போனது மேவாட் மாவட்டத்தின் கதைகள்.’

அன்று என்னைப் பார்க்க வந்திருந்த சேவா சங்கத்தின் காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ரத்னாவின் கதை என்னை மிகவும் பாதித்தது.

‘என்ன மேடம்.. எத்தனை வருடமா இந்தக் கதை நடக்கிறது இங்கே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். “போலீஸ், சட்டம், நீதி இதெல்லாம் இருந்துமா..?’

அந்தக் காரியதரிசி பெண் என்னைப் பார்த்து சிரித்தாள். எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ ஒரு புகாரும் இதுவரைக் கிடையாது. நானும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் மேடம். இந்த ரத்னா கூட மனநிலைச் சரியில்லாமல் கொலை செய்ததாகத்தான் ஒத்துக்கொண்டிருக்கிறாளே தவிர உண்மைக் காரணம் எதையும் சொல்வதில்லை. சரி.. நாளை இவர்கள் ஊரில் நடக்க இருக்கும் எங்கள் திரெளபதி நாடகம் பார்க்க வாருங்கள் என்றழைத்தாள். ஊருக்கு ஏற்ற நாடகம்தான் என்று எண்ணிக் கொண்டே வருவதாக சம்மதம் தெரிவித்தேன்.

அந்த நாடகத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் நாற்காலிகள். மற்ற ஆண்களும் பெண்களும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகளில் ஒன்றிரண்டு பெண் குழந்ததைகள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த தலைகீழ் விகிதத்தைப் பார்க்கும்போது அந்த ஊரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைச் செய்து கொள்ளவே பயமாக இருந்தது.

‘ திரெளபதியின் துகிலை உரியும்போது அங்கே கூட்டத்தில் மயான அமைதி..

பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையிலிருந்து சேலைகளை ஒருவர் முடிச்சுப் போட்டுக்கட்டி துச்சாதனன் இழுக்க இழுக்க அனுப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்கள் யாரும் மரக்கிளையிலிருந்து வந்து கொண்டிருக்கும் சேலைகளைப் பார்க்காமல். .’க்ருஷ்ணா..க்ருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். அடுத்தக் கட்டம்.. திரெளபதி சபதம் செய்துகொண்டிருந்தாள். ஆண்தான் பெண் வேடமிட்டிருந்தார். சபதம் செய்யும்போது திரெளபதியின் குரலில் ஆணின் சத்தம் தொனித்தது. அதுவரைப் பெண்குரலில் பேசிக்கொண்டிருந்தவர் வீரவசனம் பேசும்போது தன்னை மறந்து ஆண்குரலில் வீரத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டு சபதம் செய்யும் காட்சி எனக்கு வேடிக்கையாக

இருந்தது. பெண்களின் கூட்டத்திலிருந்து கேவி கேவி அவர்கள் அழும் குரல்கள் வந்தன. அந்தக் காட்சிக்கு அழாத ஒரே பெண் நான் மட்டும்தான் என்பது அதன் பின் நினைவுக்கு வந்தது.

மறுநாள் அந்தக் காரியதரிசி வந்திருந்தாள். நான் அவர்களின் நாடகத்தைப் பார்த்ததில் அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

நாடகம் எப்படி இருந்தது மேடம்’

அவள் கேள்விக்கு நான் நேரடி பதில் சொல்லாமல் ‘எத்தனை வருஷங்கள் இந்த நாடகம் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

’35 வருஷமா மேடம்’

‘ம்ம்ம் இந்த நாடகத்திலே இந்த ஊரு திரெளபதிகளுக்கு என்ன மெசஜ் கொடுக்கறீங்க?’ ‘என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. திரெளபதி வந்த ஒவ்வொரு காட்சியிலும் இந்த ஊரு பெண்கள் எப்படி அழுதார்கள்னு நீங்க நேரிலேயே பாத்தீங்களே..’

‘அப்போ 35 வருஷமா இந்த திரெளபதிகளை அழ வச்சதுதான் உங்க நாடகத்தின் வெற்றின்னு சொல்ல வர்றிங்களா’

‘ அழ வச்சது மூலமா இந்த நாடகம் அவுங்களுக்கு ரொம்ப பெரிய உதவியைச் செய்திருக்கு மேடம்’

‘வாட் டூ யு மீன்’

‘யெஸ் மேடம். அழறப்போ மனசிலிருக்கும் பாரம் குறையுமில்லியா’

எனக்கு அவளுடைய பதிலைக் கேட்டு சிரிப்பு வந்தது.

‘அழறது மனப்பாரத்தைக் குறைக்கும்தான். ஒத்துக்கறேன். ஆனா அதுவே பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியுமா’

‘எங்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்க மேடம்..’

‘அட என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நீங்கள் எல்லாம் நினைச்சா நிறைய விஷயங்களை இந்த மக்களுக்குச் சொல்ல முடியும்.. இதே திரெளபதி கதையை பழைய பாண்டவர் சபதத்திலிருந்து மாத்துங்க. பாண்டவர்களே துகிலுரியும் இந்த திரெளபதிகளுக்கு பாண்டவர்களின் சபதம் சரிப்படுமா யோசியுங்க. புதுசா .. முடியும் உங்களால்.. இவுங்களுக்கு ஏத்த மாதிரி.. பாஞ்சாலி சபதத்தை மாத்துங்க..’

அந்தப் பெண் அமைதியாக நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் பின் நானும் வேலையில் பிஸியாக இருந்துவிட்டேன்.

அடுத்து ஆறுமாதங்கள் கழித்து பக்கத்து ஊரில் ‘நவயுகத் திரெளபதி’ நாடகம் போட்டார்கள். சேவாசங்கத்திலிருந்து நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புக்கு மேல் அழைப்பு. நல்ல குளிர். சால்வையை இழுத்துப்போர்த்திக் கொண்டு நானே காரை ஓட்டிக்கொண்டு போனேன். வழக்கம்போல பெண்களின் கூட்டம். வழக்கம் போல காட்சிகள். கடைசிக் காட்சி திரெளபதி சபதம்…

‘எங்கே அந்த வில் விஜயன்..? என்னைத் தன் மனைவியென வென்றெடுத்து வந்தவன் வென்று வந்தப் பரிசு பெண் என்று சொல்லாமல் பொருள் என்று சொன்னானே!

ரத்தமும் சதையும் துடிப்பும் கொண்ட பெண் என்ன ஜடப்பொருளா? பொருள் என்பதால் அல்லவா அண்ணன் -தம்பிகள் அனைவருக்கும் உரியதென அன்னை குந்தி அறியாமல் சொல்லிவிட்டாள். அறியாமல் சொல்லியதையே அறமாக்கி அண்ணன் தம்பிகள் பெண்டாள அனுமதித்த அந்தப் பாவி அர்ச்சுணன் எங்கே .. கொண்டு வாருங்கள் அவனை..காட்ட வேண்டும் அவனிடம் பெண்ணின் வீரம் என்ன என்பதை.’

‘அண்ணன், தம்பிகள். பெரியப்பா, ஆசான் எல்லா உறவுகளையும் தருமத்தின் முன்னால் வென்றெடுக்க போர்க்களத்தில் கீதை உபதேசித்த கண்ணன் எங்கே? கொண்டுவாருங்கள் அவனை. எங்கே போனது அவன் கீதையின் உபதேசம்..

என்னை ஐவருடன் படுக்க ஆணையிட்ட போது எங்கே போனது கண்ணனின் உபதேசம்..? கீதையை உபதேசித்த அவன் நாக்கைப் பிடித்து இழுத்து அறுக்கும்வரை என் குரல் அடங்காது.. கொண்டு வாருங்கள் அவனை…’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பெண்கள் கூட்டத்தில் அமைதி.. அவர்கள் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கே கல்லெறி,, நாடகத்தில் தொங்கிய தீரைச்சிலைகளில் தீ பற்றிக்கொண்டது. கலவரம் வெடித்தது.

மறுநாள் அங்கே 144 தடை யுத்தரவு அமுலுக்கு வந்தது.

சிலர் நாடகத்திற்கு ஆதாரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் மாறியதால் ஏற்பட்ட கலவரம்.

நாடகத்தைப் புதிதாகப் போடச்சொன்னது நான் தான் என்ற செய்தியை பெருமையுடம் அந்த சேவா சங்கத்தின் காரியதரிசி சொல்லப் போக அதுவே எனக்கு வினையாக வந்த வாய்த்தது.

மறுநாள் என் மேலதிகாரியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

‘ உங்களுக்கு என்று புதிதாக ஒரு மாவட்டத்தைத்தான் இனிமேல் உருவாக்கணும்.

வாட் இஸ் திஸ் .. எங்கே போனாலும் ஒரு கலவரம்..அதில் கட்டாயம் நீங்க சம்மந்தப்பட்டிருக்கிறிர்கள்! பஞ்சமி நில மீட்புனு போவீங்க.. இருளர்களின் போராட்டம்னு கூட்டத்திற்கு தலைமைத்தாங்க போவீங்க.

ஆதிவாசிகளின் நில உரிமைப் போராட்டம்னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு விட்டுட்டு வந்திருவீங்க..! உங்களை எங்கே போஸ்டிங் பண்ணினாலும் அங்கே புதுசா நீங்க என்ன தலைவலியை எங்களுக்கு கொண்டு வரப்போறிங்களோனு பயமா இருக்கு..நீங்க அரசாங்க வேலை செய்யப் போறிங்களா இல்ல பொதுநலச்சேவை செய்யப் போறீங்களா..?’

‘இரண்டையும் நான் ஒண்ணாத்தான் சார் நினைக்கேன்’

அவர் தலையப் பிடித்துகொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘சாரி .. உங்களுக்குனு எந்த டிபார்ட்மெண்டையும் கொடுக்கற மாதிரி இல்லே.

எந்த மாவட்டத்திலும் போஸ்டிங் இல்லை.. டிபார்ட்மெண்ட் இல்லாத மாவட்டம் இல்லாத எந்த வேலையும் செய்யாத அரசாங்க அதிகாரியாக இருங்க..’

” நன்றி சார்..’ என்று நான் சொன்னவுடன் அவர் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்.

இப்போது நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தோம். அவருக்கும் தெரியும் அவரால் முடியாதப் பல காரியங்களை நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன் என்பது. அதில் அவருக்கும் பெருமைதான். ஆனால் அவருடைய நாற்காலி அதை ஏற்றுக்கொள்ள இடம் கொடுக்கவில்லை.

நாற்காலிக்கு அருகில் அவரும் நாற்காலியை விட்டு ரொம்ப விலகி நானும் நின்று கொண்டிருந்தோம்.

பிகு:

கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில் நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அண்மையில் உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானாவின் செய்திக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த அவலங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. திரெளபதி நாடகத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் கண்ணீர் விடும் செய்தியை ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த உண்மைச் செய்திகளே இக்கதையின் கரு. நன்றி. –


Sunday, August 24, 2025

குடும்பம் பெண் × பொய்களும் அபத்தங்களும்




தமிழ் எழுத்துலகில்  பெண்ணியம் குறித்த கருத்துகளை மேற்கத்திய  பெண்ணியத்துடன் ஒப்பிட்டும் தமிழின் பொற்கால சங்க இலக்கியத்துடன் அதன் போக்குகளை  நுணுகி ஆராய்ந்தும் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் ராஜ்கெளதமன் முக்கியமானவர். இந்த ஆய்வுகளின் மூலம்

தமிழரின் பெண்ணியப் பெருவெளியை அடையாளம் காட்டுகிறார். 

குடும்பம், தனிச்சொத்து , அரசு – தோற்றம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்த ஏங்கெல்ஸின் குடும்பம் குறித்தும் அது பெண்ணிய தளத்தில் பொய்யாகப் போனதையும் பண்பாட்டு ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தியவர் ராஜ்கெளதமன் அவர்கள்.

சங்க காலம் :

சங்க இலக்கியம் இருவேறு பெண்களைக் காட்டுகிறது. மலை, காடு, கடல், வயல் பகுதிகளில் உழைத்தவர்கள் குறமகள், கொடிச்சி, பரதவப்பெண், நுழைச்சி, உமணப்பெண், உழத்தியர், கடைசியர், ஆய்மகள், எயினப்பெண், மறப்பெண், புலைத்தி, பருத்திப்பெண், கட்டுவிச்சி, அகவன் மகள், விறலி, பாடினி, மூதில்மகள், வெறியாடும் மகள் என்றெல்லாம் சுட்டப்படம் இப் பெண்கள் உழைக்கும் பெண்கள். பேராசிரியர்களும் சங்க காலத்தைப் பொற்காலமென நிறுவ முயலும் ஆய்வாளர்களும்.சங்க காலத்தில் பெண் சுதந்திரமாக இருந்தாள் என்றும் ஆண் பெண் உறவில் பெண்ணுக்கு சுதந்திரமும் உரிமையும் இருந்தது என்பதற்கும் இன்றும் சங்க காலத்தின் இப்பெண்களை மட்டுமே எடுத்துக்காட்டுவார்கள் . ஆனால் இப்பெண்களுடன் வாழ்ந்த மேட்டுக்குடி பெண்கள் சங்க காலத்தில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும் அவர்களின் வாழ்க்கை  குடும்பம் சமூக தளத்தில் இன்றுவரை பண்பாட்டு மேனிலை ஆக்கமாக உருமாறி இருப்பதையும் தன் ஆய்வுகளின் வழி வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் ராஜ்கெளதமன் அவர்கள்.

குடும்பம் ,ஒருதார மணமுறை , ஆணாதிக்க தந்தை வழிப் பண்பாட்டில் வந்தவர்கள்தான் என்ற வகையில் இந்தப் பெண்களுக்கு ஒற்றுமை உண்டே தவிர இவர்களின் வாழ்க்கை வேறாக இருந்தது அந்த வேறுபாடு பொருளாதர ரீதியால் வரையறுக்கப்பட்டிருந்தது என்றாலும் அந்த வரையறையின் கோடுகள்தான் பண்பாட்டு தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. 

        இனவிருத்தி இருவருக்கும் பொது. ஆண் தலைமை குடும்பம் பொது என்றாலும் உழைக்கும் பெண்களுக்கு உற்பத்தியில் பங்கு இருந்தது.  வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல், உழைப்பின் பொருட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து செல்லும் சுதந்திரம் இருந்தது. ஆனால் மேட்டுக்குடி பெண்கள் சுகபோகத்தில் வாழ்ந்தாலும் பசி வறுமை அறியாதவர்கள் என்றாலும் அவர்களின் வாழ்க்கை அதிகார மையத்தின்   கைகளில் இருந்தது. எனவே நிச்சயமற்றதாக இருந்தது. கட்டுப்பாடு , காவல் மிகுந்ததாக இருந்தது. தலைவனுக்கு அவளைத் தவிர வேறு ‘உரிமை மகளிரும் ‘ அவனுடைய பாலியல் விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும். இப்பெண்களின் உலகம் முழுக்கவும் ஆண் சார்பு நிலையில் இருந்ததைக் கவனப்படுத்துகிறார் ராஜ் கெளதமன். பண்பாட்டு ரீதியாக பெண் சுதந்திரத்தை அனுபவித்த உழைக்கும் பெண்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு உழைக்காத இந்த மேட்டுக்குடி பெண்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் புனிதங்களும் பண்பாட்டு ரீதியாக ஒட்டுமொத்த பெண்களுக்குமானதாக கட்டமைக்கப்பட்டதையும் விளக்குகிறார். சங்க கால புலவர்களின் பாடல்களில் வெளிப்படும் வருணனை முதல் வாழ்க்கைச் சடங்குகள் வரை அனைத்திலும்

இது எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக முன்வைக்கிறார்.

            மேட்டுக்குடிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நோன்பு , விரதம் இருந்தார்கள். தை நீராடித் தவமிருந்தார்கள். பிள்ளைகள் பெற வேண்டி சாமியைக் கும்பிட்டார்கள். உழைக்கும் பெண்களிடம் இதைக் காணமுடியவில்லை. தெருவில் உப்பு விற்ற உமணப்பெண், மீன்விற்ற பரதவப்பெண், பரணில் கிளி விரட்டிய குறவர்மகள், பால் தயிர் விற்ற இடையர் பெண் ..இவர்கள் எல்லாம் தனக்கான ‘நல்ல’ கணவன் வேண்டுமென எந்தக் கடவுளிடமும் வேண்டுதல் செய்யவில்லை.

விரதமிருக்கவில்லை. தனக்கான ஆணைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையையும் அது மறுக்கப்படும்போது அவனோடு உடன்போக்கு செல்லும் துணிச்சலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் இனக்குழு சார்ந்தும் தங்களின் தொழில் சார்ந்துமே அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஆனால், மேட்டுக்குடி பெண்கள் ,

‘மனைக்கு விளக்கு’ , ‘மனையோள்’ , ‘மனை மடந்தை ‘ , இல்லாள், இல்லாட்டி என்று வீடு குடும்பம் சார்ந்தே பெண்ணின் அடையாளத்தை ஏற்படுத்தினார்கள். ஆண் குழந்தையைப் பெற்று வம்சவிருத்திக்கு உதவுவதே பெண்ணின் சிறப்பாக போற்றப்பட்டது. தந்தையாலும் தமையனாலும் கொண்ட கொழுநனாலும் மட்டுமல்ல அவள் ஈன்ற ஆண்மகவாலும் அப்பெண் அடையாளப்படுத்தப் படுகிறாள். பெண்ணுக்கு என்று தனி அடையாளமாக உழைக்கும் பெண்களிடம் இருந்தவை அனைத்தும் பண்பாட்டு ரீதியின் மேனிலை ஆக்கத்தில் காணாமல் போனது. 

     பெண்ணின் அறியாமையை  பேதை, மடமகள், மடவரல், மடந்தை என்று சொல்லி அதையே அப்பெண்ணின் அழகியல் பண்பாக புலவர்கள் போற்றினார்கள். ஆண் இதற்கு மாறாக சான்றோன், பேரறிவாளன், புலவன் என்று அறிவுடன் தொடர்புடையவனாக போற்றப்பட்டான். 

     பெண் தான் விரும்பும் ஆணுக்கு முன் நாணி தலைகுனிவது இயல்பான மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடு ஆணுக்கும் உண்டு என்கிறார் ராஜ்கெளதமன்!

மேலும் இந்த மெய்ப்பாடுகள் இச்சமூகத்தால் உருவாக்கப்பட்டு அவள் மீது திணிக்கப்பட்டவை. “இப்படிக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சூழலில் வெளிப்படும் மெய்ப்பாடுகளே, பெண்ணின் முழுநேர , முழுவாழ்க்கைக்குரிய உயர்ந்தப் பண்புகளாக போற்றி உரைக்கப்பட்டன. பெண்ணுக்கு உயிர் ஆண் என்ற ஆணாதிக்கச் சித்தாந்தம் கொடிகட்டிப் பறந்தது. பெண் உடலால் உணர்ச்சியால் அளக்கப்பட்டாள், ஆண் அவனது சமூகச் செயலால், அறிவால் அளக்கப்பட்டான். பெண் செயலற்றவள், அடக்கமானவள், ஆண் செயலூக்கமானவன். பெண்ணுக்கு உலகம் அவள் வீடு . அவள் உடல். டிஆணின் உலகம் அறிவு, சமுதாயம்.” ( தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு பக் 145)  இக்கருத்துகளை நிலை நாட்டியதில் சங்க இலக்கியத்திற்கு பெரும்பங்குண்டு. பண்பாட்டு ரீதியாக இதை நோக்கியே தமிழ்ச் சமூகம் நகர்ந்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.  

மார்க்சியப் பெண் 

           நிறப்பிரிகை 1991ல் (7/7/91)   நடத்திய பெண்ணியம் கூட்டுவிவாதம் பற்றிய ஒரு எதிர்வினையாக ராஜ்கெளதமன் இந்தியப் பண்பாட்டு தளத்தில்  மார்க்சியப் பெண்ணும் மேற்கத்திய பெண்ணும் எங்கே நிற்கிறார்கள் ? ஏன் ? என்ற ஒரு சிந்தனைப் புள்ளியைத் தொடுகிறார்.

          ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து , அரசு – தோற்றம்’ நூலில் தனிச்சொத்துடமை உருவாக்கம் எவ்வாறு குடும்பம் அமைப்பு தோன்ற காரணமாக இருந்தது என்பதை விளக்குகிறார். இதை எடுத்துக்கொண்ட ராஜ்கெளதமன், “ தனிச்சொத்துடமை முறை நீங்குகிற போது , குடும்பமும் நீங்கும் என்பது இதன் தர்க்க நீட்சி” என்பார். (தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பக் 49)  பெண் முதலாளியச் சமூக உற்பத்தி முறையில் நுழைகிறபோது அவளுடைய விடுதலை சாத்தியமாகும் என்ற எங்கெல்ஸ்சின் கருத்தும் பொய்த்துவிட்டது என்பதுதான் ராஜ்கெளதமன் முன்வைக்கும் கருத்து. சோசலிஸ்டுகளின் சிந்தனாப் போக்கிலும் தந்தைவழி சமூக மதிப்பீடுகளே இருக்கின்றன என்பதை வரலாற்று  ரீதியான தரவுகளுடன் முன்வைக்கிறார் ராஜ்கெளதமன். 

          பூர்ஷ்வா , நிலவுடமை சமூக அமைப்பிலும் சோசலிச சமூக அமைப்பிலும் ஆணுக்கு இணையாகவும் , ஏன் அதிகமாகவும் சம்பாதிக்கும் இன்றைய பெண்களுக்கும் விடுதலை கிடைத்துவிட்டதா? பொருளாதர சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அவளுக்கான முழு விடுதலையை சாத்தியப்படுத்தி இருக்கிறதா ? என்று இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதுதான் ராஜ்கெளதமன் அதை தன் சமூகப் பார்வையாக முன்வைத்திருக்கும் பெண்வெளி விரியும். 

சமகாலம்

      “இந்திய நடுத்தர வர்க்கத்தின் மற்றொரு பண்பைப் பார்க்க வேண்டும். இன்று பெண்கள் படிப்பது, பணம் சம்பாதிப்பது, ஆணுடன் சமமாக கைகோர்த்து நடப்பது எல்லாமே, ‘விடுதலை’ போல தெரிந்தாலும் , இவை பெரிதும் ஆணாகப் பார்த்து , அவன் செளகரியம்- கெளரவம் ஆகியவற்றுக்காகப் பெண்ணுக்கு வழங்கிய சலுகைகள்தாம். இது ஆணாகப் பார்த்துப் பெண்ணுக்கு வழங்கிய ‘சுதந்திரம்’ ஆதிக்க சாதிகள், அடிநிலைச் சாதிகளுக்குத் தருகிற சில ‘சலுகைகள்’ போல இவை” என்று சமகால சமூக யதார்த்தத்தை முன்வைக்கிறார். ராஜ்கெளதமன். (தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பக் 55) நாம் நம் அனுபவங்களின் ஊடாக இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் “பெண்கள் படிக்கவும் சம்பாதிக்கவும் தரப்பட்டிருக்கும் சலுகைகளும் அவளுக்கான திருமணச் சந்தையில் அவள் மதிப்பீடுகளுக்கானவைகளாக மாறிவிட்டன ‘ எனலாம். 

      பெண் விளிம்பு நிலையில் நிற்கிறாள், அனைத்து ஆதிக்கச் சக்திகளும் அவளை அடக்குவதில் போட்டிப்போடுகின்றன. பொருளாதர ரீதியில் வர்க்க்கமாகவோ , சாதி மத ரீதியில் தீண்டத்தாகாதோர் பட்டியலிலோ உழைப்பு ரீதியாக பாட்டாளி என்றோ அவளை தனித்து வகைப்படுத்திவிட முடியவில்லை. இவை எல்லாமும்தான் அவள் என்றாலும் அவளை அப்படி எவரும் அடையாளப்படுத்துவதில்லை. இந்தப் பொது அடையாளத்திலும் பெண்ணை விட ஆண் மட்டுமே தெரிகிறான். பெண் இதிலும் அவனுடன் வாழும் அவன் மனைவியாகவோ தாயாகவோ மகளாகவோ மட்டுமே இருந்து அவளுக்கான இந்த அடையாளங்களையும் இழந்திருப்பது வெளிப்படை.

      பெண்ணைப் பற்றி எழுத வந்த சங்ககாலப் புலவர்கள் அவளுடைய உடலைப் பற்றியே பாடினார்கள். அவளின் அங்கங்கள், அவற்றுக்குரிய பாலியல் பெறுமதிகளையும் அது ஆணின் பாலியல் நுகர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் மட்டுமே எழுதினார்கள். இன்றைய நவீன கவிதைகளிலும் இதுவே தொடர்கிறது. இன்றைய நுகர்ப்பொருள் கலாச்சாரத்தில் சோப்பு விற்பனைக்கு அருவியில் குளித்து ஈரத்துடன் காட்சி தரும் பெண்ணுடல் தேவைப்படுகிறது. கார் விற்பனைக்கும் கருவி விற்பனைக்கும் .. சந்தையில்  விற்கப்படும் அனைத்தையும் விற்பதற்கு விளம்பரப்பலகையாக பெண்ணுடல் மாறி இருப்பது அன்றைய பெண்ணுடல் வருணனையின் தொடர்ச்சிதான்.

     குடும்பம் என்ற ஆண்மைய அமைப்பு பெண்ணை அவள் பாலியல் அடையாளத்துடன் மட்டுமே வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அதை ஓர்மையுடன் காப்பாற்றி வருகிறது. அதைப் பண்பாட்டு ரீதியாக காப்பதில் மொழியும் சங்க காலம் முதற்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இலக்கியங்களும் 

மதங்களும் நம்பிக்கைகளும் அடித்தளமிட்டிருக்கின்றன. காலப்போக்கில் தோன்றிய சிந்தனைப் பள்ளிகளும் பெண் , குடும்பம் என்ற புள்ளியில் போதாமைகளுடன் இருப்பதும் தெளிவாகிறது.  இக்கட்டமைப்புகளுக்கு எதிராக பெண்கள் திரளும்போதும் குரல் கொடுக்கும்போதும் 

“பெமினிஸ்டுகள் போக்கிரிகள், பொறுப்பற்றவர்கள், பெமினிசனம் இவர்களுக்கு ஒரு பொழுதுப்போக்கு, இவர்கள் நளினமற்றவர்கள், குடும்ப நிம்மதியைக் குலைக்க வந்தக் கோடாரிகள், விடுதலை என்ற போர்வையில் யாரோடும் படுக்க விரும்பும் இசை கேடான வாழ்க்கை நடத்துபவர்கள், “ என்ற குற்றச்சாட்டுகள் எளிதாக பெண்களாலேயே பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன. குடும்பம் பெண்ணின் தேவை கருதி உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு என்பது கூட பாதி உண்மையாக இருக்கலாம். ஆனால் யாருடைய தேவை கருதி யார் உருவாக்கிய அமைப்பு என்பது தான்  நம் கேள்வி. 

     குடும்பம் என்ற அமைப்பின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் பொய் அபத்தங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. இக்கட்டமைப்பு தீடிரென யாரோ ஒரு தனி நபரால் உருவாக்கப்பட்டதல்ல.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரலாற்று ரீதியான மாற்றங்களுக்கு வளைந்து கொடுத்து பண்பாட்டு ரீதியாக பெண்ணின் புனிதங்களாக அவள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.  

     இன்றைய இந்திய மகளிர் அமைப்புகள் பொருளாதர நலன்களுக்காக போராடுகின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது பேரணி நடத்தி தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன.  இதெல்லாம் பெண் விடுதலையைப் பெற்றுத் தருமா? என்பதை ராஜ்கெளதமன் முன்வைக்கும் பண்பாட்டு ரீதியாக அணுக வேண்டி இருக்கிறது.

 **********

ஆக.25, 2025 

பேரா. ராஜ் கெளதமன்

75 வந்து பிறந்தநாள்.

வரலாற்றை மீள் வாசிப்பு செய்து

வழிகாட்டிய ராஜ் கெளதமன் அவர்களுக்கு 🌹💐💥💥💥🙏🙏🙏

    துணை நின்ற நூல்கள்:

>தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு – ராஜ்கெளதமன்.

 கெளரி பதிப்பகம் , புதுச்சேரி. 1994.

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் – ராஜ்கெளதமன்.

காலச்சுவடு . 2003.

Saturday, August 23, 2025

பாலியல் சுரண்டல்கள். வைரமுத்து vs சின்மயி

 வைரமுத்து சின்மயி &

கோணங்கி 




  

   “எழுதுகிறவன் தான் எழுதியவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் “ மக்சிம் கார்க்கி. 

கலை இலக்கிய உலகத்தின் உன்னதப் பீடங்கள் சரிகின்றன.

அவன் மனிதனாக மனிதாபிமானமுள்ளவனாக இருக்கிறானா என்பது

முதன்மையாகி அவன் தகுதிகள் என்று நினைக்கப்படும் அனைத்தும்

தகுதி இழக்கின்றன. படிப்பு, பட்டம், அறிவுத்திறன், கலை இலக்கிய ஆற்றல்

இத்தியாதி போற்றுதலுக்குரிய தகுதிகள் சரியும் காட்சி கலாச்சார

பண்பாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் நியாயங்களைப் புறந்தள்ளிவிட்டு வாழப்பழகியவர்களுக்கு இன்றையப் பெண்களின் 

குரல் பெரும்வெடிப்பாகி அச்சுறுத்துகிறது. ஆண்மைய அதிகார வர்க்கம் இதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.

  “ஒரு குழந்தையுடன் படுப்பது ஓர் உன்னத அனுபவம், ஞானஸ்நானம் போன்ற ஒரு  நிகழ்வு, ஒரு புனிதமான அனுபவம் “ என்று எழுதியவர்

பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் மட்ஷனப்.

(GABRIEL MATZNEFF) குழந்தைகளுடன் அவர் கொண்ட பாலியல் வேட்கையை

 (pedophilia)    பாலியல் பயண அனுபவங்களை அவர்  தன் கதை கட்டுரைகளில் டைரி குறிப்புகளில் எழுதி வந்ததை பிரஞ்சு இலக்கிய உலகம்


குற்றமாக கருதவில்லை. அவருக்கு விருதுகளும் அரசு உதவித்தொகையும்

கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார்.  ஆனால் 14 வயதில் அவரால்

பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வனேஷா ஸ்பிரிங்கோரா

( Vanessa Springora) தன் அனுபவத்தை எழுதியபோது அதுவரை இலக்கியத்தின்  புனைவு என்ற போர்வையில் பொதிந்திருந்த வக்கிரங்கள் வெட்ட வெளிச்சமாகின.

  கேபிரியலின் கதையை காப்பி அடித்து நம் ஊர் எழுத்தாளர்

தமிழில் எழுதியக் கதை எவ்விதமான சலசலப்புகளும் இன்றி,

 பின்நவீனத்துவ மோஸ்தரில் கொண்டாடப்பட்டது. 

காட்சி ஊடகம், சினிமாப் பாடல்கள் , காட்சிகளின் உடல்மொழி,  இரட்டை அர்த்தம் தொனிக்கும்  வசனங்கள், விளம்பரங்கள் இத்துடன்

உன்னத இலட்சியங்களை விதைக்கும் கலை இலக்கியப் பண்பாட்டு அரசியலும் ‘பாலியல் சுரண்டலை’ அவமானமாக கருதுவதில்லை. சமூகத்தின் தலைகுனிவாக கருதாமல் கள்ள மவுனத்தில் கடந்து செல்வதுடன் , தங்கள் பாலியல் வறட்சியைத் தீர்க்கும் வழியாகவும் கொண்டிருக்கின்றன. 

பெண் மீதான பாலுறவு கவர்ச்சியே பின்நவீனத்துவ கோட்பாட்டில் உலகமயமாக்கப்பட்டுள்ளது.  செக்ஸ் க்ளப்புகள், காபரேக்கள், மசாஜ் நிலையங்கள் எல்லாம் ஆண் பெண் கூட்டாகவும் தனித்தனியாகவும்

அவரவர் ரசனைக்கேற்ப பாலுறவு பண்டங்களை வாங்கிக்கொள்ளும்

சந்தைகளை உருவாக்கி இருக்கின்றன.  இந்த ஆணாதிக்க சுரண்டல் அமைப்பில் ஜனநாயகம் என்பது சுரண்டுவதற்கான வழிகளை விரிவுப்படுத்தி ‘சுரண்டலை’ ஜனநாயகப்படுத்தி இருக்கிறது.. முதலாளித்துவ முறைமையின்

புதிய ஜனநாயக விரிவாக்கங்கள்  பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் அனைத்துவகையான பிரதிகளையும் உருவாக்கி சந்தைப் படுத்திக்கொண்டே பெண்ணுரிமைப் பேசுகிறது. புரட்சி முகமூடிகளை அணிந்து கொண்டு பேரணி நடத்துகிறது.

   

        சரி நிகர் 123ல் ‘கோணேஸ்வரிகள்’ என்ற தலைப்பில் கலா

என்பவர் எழுதிய கவிதை ஆணாதிக்கம் இனவாதத்துடன் இணையும்

போது ஒரு பெண் சந்திக்கும் இனவாத ஆணாதிக்க அடக்குமுறையைத் தெளிவாக முன்வைத்திருக்கிறது.

நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு

வேதனையைத் தரவில்லை.

மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்

அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.

அன்பான என் தமிழிச்சிகளே,

இத்தீவின் சமாதானத்திற்காய்

நீங்கள் என்ன செய்தீர்கள் ! ?

ஆகவே: வாருங்கள்

உடைகளைக் கழற்றி

உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்

என் அம்மாவே உன்னையும் தான்.

சமாதானத்திற்காய் போரிடும்

புத்தரின் வழிவந்தவர்களுக்காய்

உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.

பாவம்

அவர்களின் வக்கிரங்களை

எங்கு கொட்டுதல் இயலும்.

வீரர்களே ! வாருங்கள்.

உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

என் பின்னால்

என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.

தீர்ந்ததா எல்லாம்.

அவளோடு நின்றுவிடாதீர் !

எங்கள் யோனிகளின் ஊடே

நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே :

வெடிவைத்தே சிதறடியுங்கள்.

ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி

புதையுங்கள்

இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!

உங்கள் யோனிகளுக்கு

இப்போது வேலையில்லை”

இனவாதம், சாதிவாதம், மதவாதம் அனைத்தும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமைகள், வல்லாங்குகள் பொதுசமூகத்தின் கூட்டு மனநிலையாக இருக்கின்றன.

தனிமனிதனாக பெண்ணிய வன்கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்

மனிதன், சமூகத்தின் அங்கமாக இருக்கும்போது வேறொருவனாகிவிடுகிறான், அதாவது அவன் தனித்திருக்கும்போது அவன் பிரக்ஞை வெளிப்படுத்தும் நியாயங்கள் சமூகத்திரளின் துளியாக இருக்கும்போது காணாமல் போய்விடுகின்றன. சமூகத்தின் அரசு, அதிகாரவெளி தீர்மானிக்கும் விதிகளுடன்  ஒத்துப்போகிறான்.அல்லது எதிர்க்க முடியாமல் அமைதியாக

இருப்பதன் மூலம் அக்குற்றத்திற்கு அவனும் உடந்தையாகிவிடுகிறான். சமூகத்தின் அதிகாரவெளியோ தன் கொண்டாட்டத்திற்கும் தன்னை மகிழ்விப்பதற்கும்   கலை இலக்கிய பண்பாட்டு அரசியலைப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆடல் பாடல் கலைகளை அதிகார வர்க்கம் வளர்த்தெடுத்த பின்னணியிலிருந்து இதை அணுக வேண்டும். 

எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியை வன்புணர்வு செய்யலாம் என்று நம் கடவுள்களைக் கொண்டு கற்பிக்கிறது. (உதாரணம் மகாபாசுவத புராணம்) மதப்பூசல்களுக்கு பெண்ணுடல்கள் பலியாகின்றன. நிறுவனமயம்

ஆக்கப்பட்ட மதம் தன் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பெண்ணுடலை ‘ புனிதம்’ ‘ஒழுக்கம்; என்ற கருத்தாடல்களின் ஊடாக

இழிவுப்படுத்துகிறது.  இப்பண்பாட்டு அரசியலை சடங்கு சம்பிரதாயங்கள் மரபுகள் மூலம் நிலை நிறுத்தியிருக்கிறது. எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நிலவுடமை சமூகத்தில் கலைஞன் கவிஞன்

ஆகியோருக்கு பொதுசமூகம் உருவாக்கி வைத்திருக்கும் தனிமனித  ஒழுக்கங்களை மீறுகின்ற  லைசன்ஸ் இருந்தது. காரணம் அவன் அதிகாரவர்க்கத்தை மகிழ்விப்பவன். அதிகார வர்க்கத்தின்

எல்லை மீறிய கொண்டாட்டங்களுக்குத் தீனிப்போட்டவன். அதிகாரவர்க்கத்துடன் அதனால் நெருக்கமானவனும் கூட. . 

நிலவுடமை சமூகத்தின் இதே நிலை முதலாளித்துவ சமூகத்தில்

முழுக்கவும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விலைப்பட்டியல்கள்

தீர்மானிக்கப்பட்டன.

முடியாட்சியின் அதிகாரவெளியைக் கட்டுடைத்த மக்களாட்சியின் பண்பாட்டு அரசியல்,  ஆடல் பாடலை பொதுஜன வெளிக்கு கொண்டுவந்துவிட்டதில்

மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றாலும் ஆடலும் பாடலும் அதை

 நிகழ்த்துகின்ற உடல்மொழியும் ஆண்மைய அதிகார வேட்கையின் பசித் தீர்க்கும் நுகர் கலாச்சாரப் பண்டம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.  இன்றைய கணினி யுகத்தில் அவை புதியப்புதிய வடிவம் பெற்றிருக்கின்றன. உலகமயமாதல் சந்தையில் பாலியல் ஆதிக்கமும் பாலியல் சுரண்டலும் பல்வேறு உத்திகளுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  ஒரு பக்கம் பெண்ணியம், பெண் உரிமை, பாலின சமத்துவம் பேசிக்கொண்டே பெண்ணுடலை நுகர்பொருள் பண்டமாக்கி சந்தையில் கடைப்பரப்பி விற்கிறது  இன்றைய முதலாளித்துவ டிஜிட்டல் ஜன நாயக உலகம்.. இந்தப் புதிய ஜன நாயகத்தின் பல்லிடுக்குகளில் சிக்குண்டு சிதைந்து தன் இருத்தலுக்காக வாலசைக்கிறது கலை இலக்கிய உலகம்.

     ஆண் பெண் உறவு நிலையில் குடும்பம் என்ற  நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கவிதிகளை யாருமே மீறுவதில்லை என்று

என்று சொல்லிக்கொள்வது பெருமையாக இருந்தாலும், இன்று அந்தப்

பொய்யானப் பெருமிதங்களின் தேவை ஆண் பெண் இருபாலருக்கும் இல்லை. சமூகம் ஆண் பெண் உறவு நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 

தனிப்பட்ட ஆண் பெண் இருபாலாரின் ஒப்புதலுடன் நடக்கும் பாலியல் விதி மீறல்களை நம் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. நம் இந்திய சட்டம் கூட திருமணம் ஆன கணவன் மனைவி உறவில் திருமணத்திற்கு அப்பால் இருக்கும் எதிர்ப்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதவில்லை. காரணம் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் ஒப்புதலுடன் நடக்கிறது என்று விளக்கம் தருகிறது. ஆனால் இக்காரணம் மணமுறிவுக்கு வலுவான காரணம் என்பதை இந்தியச் சட்டம் ஏற்றுக்கொள்கிறது.

         கவிஞர் கண்ணதாசனுக்கு பல பெண்களுடன் பாலியல்

தொடர்பு இருந்தது என்பது சமூகப் பிரச்சனையாக்கப்படவில்லை. கண்ணதாசனை எவரும் குற்றமிழைத்தவராக நினைக்கவில்லை.

திராவிட அரசியலை முன்வைத்த அறிஞர் அண்ணா, நடிகை பானுமதி

குறித்து சொன்னது பாலியல் சுரண்டலாகவில்லை. . காரணம் கண்ணதாசனும் அண்ணாவும் பிரபலமானவர்கள் என்ற சமூக அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு பெண்களை அவர்களின் விருப்பமின்றி அணுகவில்லை. பாலியல் விதிமீறல்கள் இருந்தன. ஆனால் பாலியல் சுரண்டலில்லை. 

எனவேதான் பாலியல் மீறல்கள் என்பதும் பாலியல் சுரண்டல்கள் என்பதும் வேறானவை. பாலியல் மீறல்களில் தனிமனித உணர்வுகள் மட்டுமே காரணமாகின்றன. ஆனால் பாலியல் சுரண்டல் என்பதில் அதிகார வர்க்கத்தின் கை ஓங்கி நிற்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு  நடக்கும் பாலியல் செயல்களையே  பாலியல் சுரண்டல்கள் எனலாம். இன்றைய பெண்கள் அதிகார வர்க்கத்தின் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்..

      ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து #metoo இயக்கம் அமெரிக்காவில் 2017ல் மிகப்பெரிதாக எழுச்சிப் பெற்றது. 

     #metoo ஹேஷ்டேக் ஓரியக்கமாக மாறி ஆண்மைய சமூகத்தின் உன்னத பீடங்களை கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும்  இரு பாலியல் பிரச்சனைகள்  மிக அதிகமாக விவாதிக்கப்பட்டன. 

1., பத்மசேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபலன் X பள்ளிமாணவிகள் 

2 பாடலாசிரியர் வைரமுத்து X பாடகி சின்மயி

இரண்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் என்றாலும் இரண்டையும் ஒரே பின்னணியில் அணுகிவிடமுடியாது.

பள்ளி ஆசிரியர் என்பது  குரு ஸ்தானம். “மாதா பிதா குரு தெய்வம்..” என்ற வரிசையில் தெய்வத்திற்கும் முன்னராக வைக்கப்பட்டிருப்பவர் குரு.

சமூக அறமதிப்பீடுகளின் மிக முக்கியமான ஓர் அடையாளம் ஆசிரியர். 

ஓரு ஆசிரியரை நம்ப முடியவில்லை என்றால் வேறு யாரைத்தான் நம்புவது?  என்ற அச்சம் பொதுவெளியில் கவலைக்குரியதானது.

பாதிக்கப்பட்ட மாணவியர் பாலியல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள். மேலும் நம் குடும்ப அமைப்பு பெற்றோர்களிடம்

பிள்ளைகள் இதைப் பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு

உரையாடல் வெளியையும் புரிதலையும் முழுமையாக கொண்டிருக்கவில்லை. இப்பிரச்சனை ராஜகோபால் என்ற தனிமனிதரின்

பாலியல் வக்கிரமா அல்லது இப்பிரச்சனை பள்ளி நிர்வாகத்துடன்

தொடர்புடையதா?/ குற்றம் செய்தவரை நிர்வாகம் பாதுகாக்கிறதா?

இப்பிரச்சனையை பல்வேறு கோணங்களில்  அணுக வேண்டி இருக்கிறது.


      இரண்டாவது பாடலாசிரியர் வைரமுத்து , பாடகி சின்மயி விவகாரத்தில் பேசப்பட்ட கருத்துகள் . சினிமா உலகின் உள்ளும் புறமும் அறிந்தவர்தான் சின்மயி. இதில் பாடலாசிரியர் அதிகாரமிக்கவர். சினிமாவிலும் சினிமாவைத் தாண்டிய அரசியலிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி இருப்பவர். அவரைக் குற்றம் சுமத்தினால் தனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் சின்மயி உடனே பொங்கி எழவில்லை. இதையும் பெரிய குற்றமாக்க வேண்டியதில்லை. இதுவும் இருத்தலுக்கான போராட்டத்தில் பெண் அனுபவிக்கும் பாலியல் சுரண்டல்.

இதைப் பற்றிய முக்கியமான கருத்துரைகள் நாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.


1) பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் 

“இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்: என்ற தலைப்பில்

சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

“ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம் “

என்பதை முன்வைக்கும் பேரா. அ.ராமசாமி அவர்கள் 

 இப்பிரச்சனையை இன்னொரு கோணத்தை நோக்கி நகர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.  

“வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட சின்மயி எப்போதும் பிராமணிய அதிகாரத்தோடு தன்னை முன்வைக்கிறார். அதனால் அவரது குற்றச்சாட்டு சந்தேகத்துக்குரியதாக மாறுகிறது. சந்தேகத்துக்குரிய ஒன்றில், தமிழகப் பொதுப்புத்தி பிராமணீய எதிர்ப்பையே மேற்கொள்ளும். இதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன “ என்கிறார்  பேரா. அ. ராமசாமி.

     பாலியல் சுரண்டலை காலமெல்லாம் அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களுக்காக பேசுவதை எப்போதும் சாதிப்பிரச்சனையாகவே அணுகும் சமூகம்தான் நம் சமூகமும் .  சின்மயி போன்ற மேல்தட்டு வர்க்கத்து பெண்கள் ஒடுக்கப்பட்ட பெண்களின் பாலியல் சுரண்டலுக்காக என்றுமே குரல்  கொடுத்தவர்கள் இல்லை. பெண்களுக்கும் சாதியும் வர்க்கமும் உண்டு. அதனாலேயே சின்மயி பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் செல்லவேண்டும் என்பது அபத்தம்!

       பாலியல் சுரண்டல் ஆண் பெண் உறவு நிலையில் மட்டும் நடக்கும் பாலியல் அத்துமீறல் அல்ல.  சமபாலின உறவுகளிலும் பாலியல் சுரண்டல் இருப்பதை எழுத்தாளர் கோணங்கி மற்றும் எழுத்தாளர் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பாலியல் விவகாரங்கள் வெளிப்படுத்தின. ஆண் பெண் உறவில் பாலியல் சுரண்டலுக்கு செவிமடுக்கும் பொதுஜனவெளி சமபாலின பாலியல் சுரண்டலைக் குறித்து அதிகம் பேசுவதில்லை.

         “கோணங்கியின் பாலியல் அத்துமீறலை பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் , கோணங்கிக்கு மயிலிறகால் தடவுவது போல சிலர் கண்டனங்கள் தெரிவித்தனர். அதுவும் எப்படி? கோணங்கி நாமாவளி பாடிவிட்டு , கோணங்கி போற்றி, கோணங்கி சரணம் எல்லாம் மொழ நீட்டுக்கு பாடிவிட்டு …”அண்ணன் கோணங்கிக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ எப்படி இருக்கிறது கதை? “ என் கிறார் அராத்து. 

      பாலியல் அத்துமீறலை கலை இலக்கிய உலகித்தினருக்கு விதிவிலக்காகவும்  ஒரு லைசன்ஸாக நம் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இக்கருத்தை முன்வைக்கும் வகையில் கோணங்கியை கண்டிக்கிறவர்களை எல்லாம் பாமரத்தனமானவர்கள் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 

கோணாங்கி விவகாரம் மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையில் “ இலக்கியவாதிகளிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம், அதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனேன்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடன் அவனுடைய படைப்புசக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்பட வேண்டும் ஏற்கப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன் பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்பட;லாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்.”

 தன் கருத்துக்கான ஆதாரங்களை வரலாற்றிலிருந்து முன்வைக்கிறார் ஜெயமோகன். “ வரலாறெங்கும் பெருங்கலைஞர்கள், கவிஞர்கள் பிழைபட்ட ஆளுமை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். கம்பன் தாசித் தெருவில் அலைந்தவன். கம்பராமாயணம் தமிழிலக்கியத்தின் உச்சம். மெளனியும் ஜி நாஜராஜனும் விபச்சாரத்திலும் குடியிலும் திளைத்ததை அப்படித்தான் இலக்கிய உலகம் புரிந்துக் கொள்கிறது. தாசியின் வீட்டு திண்ணையில் நோயுற்றுக் கிடந்து மறைந்த இசை மேதைகள் தமிழகத்தில் உண்டு. தாகூரின் தீராதக் காதல் வேட்கைகள்  அவருடைய எண்ணற்ற காமத்தொடர்புகள் தாகூர் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய காதலிகள், கள்ளக்காதலிகள் கண்டடையப்பட்டனர். ஆனாலும் தாகூர்தான் இந்தியாவின் கவிமுகம். அவர் மதிக்கப்பட்டது அவருடைய நுண்ணுணர்வாலும் அதன் வெளிப்பாடான கவிதையாலும்தான். அவர் நல்ல மனிதர் என்பதனால் அல்ல. அந்த வேறுபாட்டை உணராதவர்கள் பாமர்ரகளே “  இப்படியாக ஜெயமோகன் கோணங்கியை எழுத வரும்போது காட்டும் இந்த எடுத்துக்காட்டுகளில் தனிமனித  ஒழுக்க மீறல் இருக்கிறதே தவிர பாலியல் சுரண்டலோ தன் அதிகாரத்தை தங்கள் பாலியல் மீறலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகவோ இல்லை. இந்த சமூக வேறுபாடு அறியாதவர் அல்ல ஜெயமோகன். ஆனால் எதோ ஒருவகையில் ஜெயமோகன் கோணங்கிக்கு அராத்து சொன்னது போல மயிலிறகால் தடவிக் கொடுக்கிறார் என்பதை ஒரு பாமர வாசகனும் புரிந்துக் கொள்ள முடியும். 

       பெண்ணியம் என்பது ஒற்றைப்புள்ளியில் அடங்கிவிடும் தளமல்ல,

பாலியல் சுரண்டல் என்பது அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.

சமூகத்தில் எத்தனைப் பிரிவுகள் இருக்கிறதோ அத்தனையும் பெண்களிடமும்

படிந்திருக்கிறது. அவள் பெண் என்பது மட்டுமல்ல அவளுடைய அடையாளம்.

பல்வேறு வர்க்க இன சாதி மத கலாச்சார அடையாளங்களின் பின்னணியில் தான் அவள் அனுபவங்களை அணுக வேண்டி இருக்கிறது. (intersectionality in feminism)


  காய்த்தல் உவத்தலின்றி இப்பிரச்சனையில் வெளிப்படையாக தெரியும்

சில குளறுபடிகளையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

பாதிக்கப்பட்டப் பெண் சின்மயி விவகாரத்தைப் பேசும் ஊடகங்கள் இது தொடர்பான பலரின் கருத்துளை முழுமையாக முன்வைக்காமல் ஒரு சில வரிகளை மீண்டும் மீண்டும் பேசுகின்றன. 

குறிப்பாக ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி , பாடகியும் இசையமைப்பாளருமான ஏ ஆர் ரெஹானா அவர்கள் பாடகி சின்மயி விவகாரம் குறித்தும்

சின்மயி குறித்தும் என்னவெல்லாம் சொன்னார் என்பதைப் பற்றி முழுமையாக சொல்லாமல் ‘வைரமுத்து  நடத்தை குறித்து பல  பெண்கள் தன்னிடம் சொன்னதாக’ சொன்னதை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிப்பரப்பிக் கொண்டி,ருக்கிறார்கள்.

  சின்மயியுடன் சேர்ந்து மொத்தம் 17 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்.  அதில், பாடகி சின்மயி

பதிவு செய்திருக்கும் #metoo 17 ..  குற்றச்சாட்டை வாசித்தேன். அதில், 

கல்லூரி மாணவி புத்தகவெளியீட்டில் வைரமுத்துவை  சந்திக்கிறார். அதன் பின் டிவி சேனலில் அப்பெண்ணின் கைபேசி எண்ணை கேட்டு வாங்குகிறார் வைரமுத்து. அதன் பின் அப்பெண்ணை தனியே வந்து சந்திக்கும்படி அழைத்ததாக அப்பெண் சொல்கிறார். இதுவரை ஒகே. 

ஆனால், ஒரு மணி நேரத்தில் 50 அல்லது 60 முறை போனில்

அழைத்துக்கொண்டே இருந்ததாக கூறுவது , போன் தொடர்பு எண்ணை அந்தப் பெண் மாற்றிக்கொண்டே இருந்தாலும் அதையும் கண்டுபிடித்து வைரமுத்து தொந்தரவு செய்ததாக கூறுவது….

இதை வாசித்தவுடன் எழும் சில கேள்விகளைத் தவிர்க்கமுடியவில்லை.

 ஒருவரின் அழைப்பு தொந்தரவு செய்கிறது என்றால் அவரை ப்ளாக்

(block) செய்துவிடும் வசதி உண்டு. எண்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை!     மேலும் இப்பிரச்சனையை  ஊடக நண்பர்கள் உதவியுடன் வைரமுத்து மனைவியை அணுகி ஒருவழியாக இப்பிரச்சனையிலிருந்து விடுபட்டதாக சொல்லியிருக்கிறார் 

#metoo 17 பெண்.!

இதை எல்லாம் வாசிப்பவருக்கு என்னமாதிரியான சந்தேகங்கள்

எழுகின்றன என்பதை அவரவர் வாசிப்பு அனுபவத்திற்கே விட்டுவிடுகிறேன்.


. வைரமுத்து சார்பாகப் பேசிவிட்டால் எங்கே தானும் பாலியல் சுரண்டலுக்கு உடந்தையானவராக அதை ஆதரிப்பவராக இருக்கிறோம் என்று சமூகம் நினைத்துவிடக் கூடாதே என்ற தற்காப்புடன் மவுனமாக இருக்கிறது திரையுலகமும் இசையுலகமும் அரசியல் உலகமும்.. 

இதுபற்றி கருத்து சொல்லியவர்களும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்

பாடலாசிரியர்கள்தான் தன்னிலை விளக்கம் சொல்ல வேண்டும்

என்று சொல்கிறார்கள். அதாவது தனிப்பட்ட ஓர் ஆண் பெண் சார்ந்த

தனிமனிதப் பிரச்சனையாக பார்க்கிறார்கள். சின்மயிக்கு ஆதரவாக

எழுதி இருக்கும் தாமரை தன் வாழ்க்கையின் சொந்த அனுபவத்துடன்

இதையும் அணுகி இருக்கிறார். பாடலாசிரியர் தமயந்தியும் சின்மயி பக்கம்

தன் ஆதரவை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்.

    ஓஎன்வி விருது மறுபரிசீலனைக்கு உள்ளான இக்கட்டான தருணத்தில்

தமிழ் இலக்கிய உலகம் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடந்து

சென்றிருக்கிறது புதுக்கோட்டை எழுத்தாளர் நா. முத்து நிலவன் அவர்கள்

“ வைரமுத்து இந்த விருதுக்கு தகுதியானவரில்லை என்றால்

வேறு யாருக்குத்தான் அந்த தகுதி இருக்கிறது” என்று இலக்கிய விருதின்

பக்கமாக நின்று குரல் கொடுத்திருக்கிறார். 

   குடும்பத்தில் பள்ளிப்பருவத்தில் கல்லூரி வளாகத்தில் பேருந்தில் பயணத்தில் கூட்ட நெரிசலில் பணி செய்யும் இடத்தில்..இப்படியாக ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்தே மவுனமாக தன் வாழ்க்கையில் பாலியல் கொடுமையை அத்துமீறலை சுரண்டலை பாலியல் வக்கிரத்தை கடந்து வந்திருக்கிறாள். அதனால்தான் பெண்ணியப்பெருவெளி, சின்மயியின் குரலுக்கு செவிசாய்க்கிறது. தார்மீக ஆதரவு கொடுக்கிறது.

   எழுத்தாளர் கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.,

தன் சுயசரிதை ‘சிதம்பர நினைவுகள் ‘ பக்கத்தில் தன் சபலம் குறித்து

எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

 அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும் ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும் சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள். “தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை” என்று சீறுகிறாள். பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு என்று அடையாளம் காண்கிறாள். 

     தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதை சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள். பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட சுள்ளிக்காடு செல்கிறார்.  ஓர் ஆணாக தன் சபலத்தை வெளிப்படுத்தியதற்கு அவர் வெட்கப்படவில்லை. . இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும், அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும் சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம். மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும் அதை உரக்கச் சொல்லும்போது அதுவே அவருடைய   நேர்மையின் வெளிப்படாகி கொண்டாடப்படுகிறது. 

   தமிழ் கலை இலக்கிய வெளியில் சுள்ளிக்காடு போல தன் மனப்பிறழ்வை, சபலத்தை, பாலியல் உறவை  வெளிப்படையாக யாரும் பேசியதாக தெரியவில்லை. தமிழ்ச் சமூகம் பாலியல் விவகாரத்தில் ஒரு இரும்புத்திரையை அணிந்திருக்கிறது.

No means NO.

வேண்டாம், விருப்பமில்லை, முடியாது என்று ஒரு பெண்

சொன்னால் ஆண் பெண் உறவில் அதிகாரமிக்க ஆணுலகம்

அதைக் கேட்டாக வேண்டும். தவறினால் தலைகுனிவுகள் ஏற்படும்.

பாலியல் சுரண்டலை பெண் எதிர்க்கும் வல்லமை இதுவரை ஆண்

சந்திக்காத பெண்ணுலகம், பெண்ணின் பேராற்றல் போற்றுதலுக்குரியது.

ஆண் , பெண்ணின் எதிரி அல்ல.

ஆணும் அவன் நட்பும் காதலும் இல்லாத உலகில்

வாழ எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை.

அவள் உடல் மீதான அதிகாரம் அவளுக்கானது.

அதை எந்த அதிகாரமையமும் தனக்கானதாக ஆக்கிக்கொள்ள

முடியாது. 

நம் சட்டங்களும் நீதிமன்றங்களும் சாட்சிக்கூண்டுகளில்

சிறைப்பட்டிருக்கின்றன. . எல்லாவற்றையும் சட்டத்தின் முன்னால்

நிறுத்தி நீதிப் பெற முடியாது. அதனால்தான் எழுதப்பட்ட சட்டம் செய்யாததை மனித இனத்துக்கு மட்டுமே இருக்கும் மனசாட்சி

செய்துவிட முடியும் என்று நம்புகிறோம்.


நடந்தது என்ன?

சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் மனசாட்சி மட்டுமே

அறியும். வாழ்வில் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கான

தண்டனைகளையும் நியாயங்களையும் மனசாட்சியின் முன்னால்

வைக்கட்டும்..  நாமும் தான்.


பின்குறிப்பு. 

தரவுகள்  கட்டுரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் இணையதளம்  வலைப்பூ முகநூல், டுவிட்டர், யு டூயுப் பதிவுகளிலிருந்து )

நன்றி: அம்ருதா இதழ்  ஜூலை 2025

#புதியமாதவி

#பாலியல்சுரண்டல்கள்

#அம்ருதாஇதழ்_புதியமாதவி

#வைரமுத்து_சின்மயி

#கோணங்கி