Monday, November 2, 2020

VENTILATOR (corona Love story)

வெண்டிலேட்டர்

------------------------------------


பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆஸ்பத்திரி.

இன்னும் டாக்டர்களுக்கும்  நர்சுகளுக்கும் தேவையான

பாதுகாப்பான உடையும் சானிடைசர்களும் முகக்கவசமும்

கூட தேவையான அளவு கொடுக்கப்படவில்லை என்ற

புகார் ஓங்கி ஒலித்தது.

     அதைக் கேட்டுக்கொண்டு எந்தப் பதிலும் சொல்லாமல்

டாக்டர் அரவிந்த்நாளை சந்திப்போம்என்று சொல்லிக்கொண்டே

காலையில் நடந்த மீட்டிங்கிலிருந்து வெளியேறினான்.

அவன் நெற்றிச் சுருக்கத்தில் கவலையின் ரேகைகள்

ஓட ஆரம்பித்தன. வேகமாக கையை வீசிக்கொண்டு நடப்பது

தான் அவன் ஸ்டைல். அவன் டீமில் இருக்கும் பயிற்சி டாக்டர்களும்

நர்சுகளும் ஓட்டமும் நடையுமாக அவன் பின்னால் வருவார்கள்.

இது எப்போதும் நடப்பது தான் என்றாலும் இப்போது அவன்

நடையின் அதிவேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கைகளில்

பைஃல்களைத் தூக்கிக்கொண்டு சிஸ்டர் ரேவதி அவன் பின்னால்

வந்து கொண்டிருந்தாள்.

அவசரப்பிரிவில் ஏபிஜி - (arterial blood gas- ABG) ரத்தப்பரிசோதனை

செய்த ரிபோர்ட்டுடன் பேஷண்டுகள் காத்திருந்தார்கள். ஏபிஜி ரிப்போர்ட்

பேஷண்டுகளின் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை

ஆக்ஸைடு லெவலை காட்டும். அவர்கள் அனைவருக்குமே கொரொனா

பாசிட்டிவ் .

வெண்டிலேட்டர் பற்றாக்குறை. தினமும் 10 முதல் 15 கொரொனா பாசிட்டிவ்

கேஸ்கள் வந்தால் அதில் குறைந்த து 5 பேருக்காவது உடனடியாக

வெண்டிலேட்டர் பொருத்த வேண்டி இருக்கிறது. வந்திருக்கும் கொரொனா

பேஷண்டுகளில் பலருக்கும் ஏற்கனவே சுவாசப்பிரச்சனையும்  பிரான் கி

யோலஸ் (Bronchioles – Bron key  ols) என்ற நுரையீரலில் காற்றை

சுவாசிக்கும் நுண்துளைகள் அடைப்பட்டிருக்கும் பிரச்சனையும்

இருந்தது, கொரொனா பாதிப்பு அவர்களின்  நுரையீரல் பெருந்துளைகளையும்

அடைத்துவிட்டதால் இனி வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் அவர்கள்

சுவாசிக்க முடியாது என்ற  நிலைமையில் வந்திருந்தார்கள். கொரொனா உலகத்தில்

வெண்டிலேட்டர்களுக்கான தேவை மிகவும் அதிகரித்த நிலையில்

ஆஸ்பத்திரிகளும் அரசாங்கமும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல்

திணற ஆரம்பித்தன.

     சரி, வெண்டிலேட்டரைப் பொருத்திவிட்டால் உயிர்ப் பிழைப்பது

உறுதியா என்று கேட்டால் அதற்கான உத்திரவாதமும் இல்லை. இதுவே

வெண்டிலேட்டர் வார்டில் ஒரு கனமான மன அழுத்தத்தை நிரப்பி

ஒவ்வொருவர் முகத்திலும் அதுதானே வந்து அப்பிக் கொண்டது.

     டாக்டர் அரவிந்த் வார்டுக்குள் நுழைந்தவுடன் கல்லறை தோட்டத்து

அமைதியில் திரைச்சீலைகள் கடைசி அப்பத்திற்காக காத்திருந்தன.

இன்றைக்கு எந்தப் பேஷண்டுக்கு வெண்டிலேட்டரை எடுத்துடச் சொல்லப்

போகிறாரோ என்ற பதட்டத்தில் சிஸ்டர் ரேவதி ஒவ்வொரு பேஷண்ட்

கட்டிலுக்கு வரும்போதும் திக் திக் பரவும் பதட்ட த்தை மறைத்துக்

கொண்டு டாக்டர் கேட்பதற்கு மட்டும் பதில்சொல்லிக் கொண்டு

வந்தாள். அவர்கள் பேசிக்கொள்வது வெண்டிலேட்டரின்

காதுகளில் விழுவதில்லைமரணத்தை எழுதும் அவர்களின்

அந்த மொழி குளிர்ந்த அந்த வார்டில் உறைந்துப் போய்

வெளியில் செல்லாமல் அங்கேயே தேங்கி தேங்கி இயக்கத்தின்

தேக்க நிலையை பிரதிபலித்தன.

மருந்துகள் கண்டுப்பிடிக்கப் படாதவரை டாக்டர்கள்

ரோபர்ட்டுகள் மாதிரிதான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். எதைக்

கொடுப்பது?. ஆண்டிபயாடிக் கொடுத்தால் கொரொனா கிருமி

ஓடிவிடுமாஅவர்களுக்கும் அதைச் சொல்ல முடியவில்லை.

கையில் சரியான மருந்துகள் இருந்தாலும் மரணத்தை வெல்ல

முடியாது என்பதை அறிந்தவர்கள் தான் டாக்டர்களும்.

தங்கள் பெருமைக்காக அவர்கள்நான் அவரைப் பிழைக்க

வைத்தேன்..  நானில்லாவிட்டால் அவர் 5 வருஷத்திற்கு முன்பே

போய்ச்சேர்ந்திருப்பார்னு சொல்லிக்கொள்வது உண்டுதான்.

இப்போது அப்படியும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

ஒருவகையில் அவர்களும் கொரொனாவை எதிர்கொள்ள

முடியாமல் அப்பப்போ என்னவெல்லாம் தோனுதோ

அதை எல்லாம் மீடியாவில் உளறிக்கொண்டுதான் இருந்தார்கள்.

     அரவிந்த் எப்போதுமே மீடியாவிலிருந்துவிலகியே இருந்தார்.

எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. ஆஸ்பத்திரி நிர்வாகத் திற்காக

வாட்ஸ் அப் குழுவிலும் சக மருத்துவ நண்பர்களுடன் கருத்துப்

பரிமாறவும் வைத்திருந்தார். அதைத் தவிர்க்க முடியவில்லை.

 

திடீர்னு அவரும்

அன்னக்குட்டி எங்கே? வரலியாஎன்று கேட்டவுடன்

ரேவதிக்கும் புரிந்துவிட்ட து. அன்னக்குட்டி முகநூலில் எழுதிய

பதிவுதான் இப்போது ஓடிக்கொண்டிருந்தது. அதை டிவிக்காரர்கள்

வேறு எடுத்துப்போட்டு விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்னக்குட்டி ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க டாக்டர்.

வெண்டிலேட்டரை நிறுத்தும் போதெல்லாம் நிகழும் மரணத்திற்கு

என்னவோ தான்தான் காரணம் , தன் கையால்தான் அவர்களுக்கு

மரணம் நிகழ்கிறதுனுநினைக்க ஆரம்பிச்சிட்டாங்கஅந்த ஸ்ட்ரெஸ்

மன அழுத்தம் அதிகமாயிடுச்சி. அதனால்தான் வரல.

எனக்கென்னவோ இந்த கொரொனா வார்டில் ஒரு வாரத்திற்கு

மேல் சிஸ்டர்ஸ் வேலைப்பார்த்தால் அது கொஞ்சம்

ஸ்ட்ரெஸ்ஃபுல்லாகத்தான் இருக்கும்னு தோனுது டாக்டர்

 

ம்.. நம்ம ப்ரொபஸனில் இப்படி எல்லாம் ஸ்ட்ரெஸ் எடுத்தா

எப்படி நோயாளிகளைக் கவனிக்க முடியும்? “ அரவிந்த் அழுத்தம்

திருத்தமாக சொல்லிக்கொண்டே பேஷண்டுகளின் பைஃல்களைப்

பார்த்தார்.

இப்போ அன்னக்குட்டி ப்ளேஸ்ல யார் வந்திருக்கா

சிஸ்டர் மாலா வந்திருக்காங்க. 40 வருஷ எக்ஸ்பிரியன்ஸ்.

இன்னும் ரெண்டு மாசத்தில ரிடையர்ட் ஆகப்போறாங்க

ரேவதி சொல்லி முடிக்கவும் சிஸ்டர் மாலா டாக்டர்

அரவிந்தை நோக்கி வேகமாக எழுந்து வந்தாள்.

சிஸ்டர் மாலாவைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்துவிட்டு

வார்டிலிருந்து வெளியில் செல்லும் டாக்டரை மாலாவும்

மாலாவை ரேவதியும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

ஆல் த பெஸ்ட் சிஸ்டர்என்று சொல்லிவிட்டு சிஸ்டர் ரேவதி

நர்சிங்க் ஸ்டேஷனுக்குப் போனாள்.

அந்த வார்டில் வெண்டிலேட்டர்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தன.

இந்த வெண்டிலேட்டர் என்பது உடம்புக்குத் தேடையான காற்றை

உடலுக்குள் செலுத்தும் மிஷின். அதாவது மூச்சுவிட உதவி செய்யும்

எந்திரம். நுரையீரல் பழுதுப்பட்டுவிட்டால் இந்த வெண்டிலேட்டரை

பொருத்தி அதை  ஓட வைக்கிறார்கள்நோயாளியின் வாய் அல்லது

மூக்குத்துவாரத்தின் வழியாக  வெண்டிலேட்டர் ட்யூப்பை உடம்பில்

நுழைத்து வெண்டிலேட்டர் வழியாக சுவாசிக்க வைப்பார்கள்.

இன்னும் சில நோயாளிகளுக்கு மூச்சுக்குழாயில் ஒரு துவாரம்

போட்டு அது வழியாக வெண்டிலேட்டர் ட்யூப்பை பொருத்தி

விடுவார்கள்.

இரவும் பகலும் ஆஸ்பத்திரி மயான அமைதியில் இயங்கிக்

கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு எதோ திகிலான பேய்ப்படம்

பார்ப்பது போல இருந்தது.

அன்று டாக்டர் அரவிந்த கொஞ்சம் லேட்டாகத்தான் வார்டுக்குள்

நுழைந்தார். டாக்டர் வீட்டுக்குப் போய் ஒரு மாசத்திற்கு மேலாகிவிட்ட து

என்று சிஸ்டர் மாலா சொல்லித்தான் சிஸ்டர் ரேவதிக்கும்

தெரியவந்தது.

ஐ திங்க் இந்த பேஷண்டுக்கு ஏற்கனவே லங்க்ஸ் போயிட்டு

போலிருக்கு” 5 ஆம் எண் பெட்டில்  நேற்றிரவு புதிதாக வந்து

அட்மிட் ஆகியிருக்கும் பேஷண்டின் மெடிக்கல் ஹிஸ்டரி

பேப்பரை ஒரு வரி விடாமல் டாக்டர் அரவிந்த் கவனிப்பது

தெரிந்தது.

நம்ம பெரிய டாக்டரின்  நண்பர்னு சொன்னாங்க.

கொஞ்சம் பெரிய இடம்போல இருக்கு..”

அவன் அந்த பேஷண்டின் பைஃலை ரேவதியிடம் கொடுத்து

விட்டுசரி, ரெண்டு நாளு பார்க்கலாம். எதாவது ஹோப்

இருக்கானு தெரிஞ்சிடும். நமக்கு புதுசா வெண்டிலேட்டர்கள்

எதுவும் வரப்போறதில்ல. இருக்கிறதை வச்சிக்கிட்டு தான்

சமாளிக்கனும். யாருக்கு ரொம்ப முக்கியம்னு தீர்மானிக்கறது

கஷ்டம் தான். “

டாக்டர் அரவிந்த் அங்கிருந்து வெளியில் செல்லவும்

சிஸ்டர் மாலா அந்த பேஷண்டின் பைஃலை எடுத்துப்

புரட்ட ஆரம்பித்தாள்.

குடிச்சு குடிச்சு லங்க்ஸ் அரிச்சிப் போயிருக்கு. இதில கொரொனா

ஈஸியா புகுந்து மரண விளையாட்டு காட்டுது.

வாய்வழியாக வெண்டிலேட்டர் குழாய்.. ஓடிக்கொண்டிருக்கும்

மானிட்டர்.. அசைவில்லாமல் அவன் படுத்திருந்தான்

 

சிஸ்டர் மாலா அவனருகில்

சென்று மெல்ல அவனைப் போர்த்தி இருக்கும் போர்வையை

சரி செய்து கொண்டே மெலிந்த அவன் விரல்களைத் தொட்டாள்.

அந்த வார்டின் ஏசி குளிரில் அவன் உறைந்துப் போன பனிக்கட்டி

போல படுத்திருந்தான். காலம் ஓடிக்கொண்டிருந்த நதியை

உறையை வைத்து அவளைச் சுற்றி கடந்தகாலத்தின் சமாதியை

எழுப்ப ஆரம்பித்தது.

அவன் கைகளின் குளிர் அவள் உடலெங்கும் மெல்ல மெல்ல

பரவி தேகத்தைச் சுடச்சுட பிய்த்து தின்றுவிடுமோ ? அவள் சட்டென

அவன் கைகளைப் போர்வைக்குள் திணித்துவிட்டு தாடி எலும்புகள்

துருத்திக்கொண்டு பயமுறுத்தும் அவன் முகத்தை மீண்டும் பார்க்க

மனசில்லாமல் அடுத்த பேஷண்டுகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

வார்டிலிருந்து வெளியில் வந்து முகக்கவசத்தை நீக்காமல்

கை உறைகளை மட்டும் எடுத்துவிட்டு கைகளை டெட்டால் சோப்பு

நுரைகளால் கழவ ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம் அப்படிக் கழுவிக்

கொண்டிருந்தாள் என்று அவளுக்குத் தெரியவில்லை.

வெளியில் வரவும் வார்டுகளில் வேலைப் பார்ப்பவர்கள் டூட்டி

முடிந்து கிளம்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. கொரொனா செகண்ட்

ஸ்டேஜில் கொரொனா நோயாளிகளைக் கவனிக்கும் டாக்டர்களோ

சிஸ்டர்களோ அவர்கள் வீட்டுக்குப் போவது தடை செய்யப்பட்ட து.

ஆஸ்பத்திரி நிர்வாகம் அவர்கள் தங்குவதற்கு ஹாஸ்டலில் ஏற்பாடு

செய்திருந்தது.

சிஸ்டர் மாலாவும் தன் விடுதி அறைக்குப் போய் உடைகளை

கழட்டிவிட்டு ஷவரில் குளிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளூம்

இந்த ஷவர் குளியலில் உடம்பின் அசதியும் மனசின் இறுக்கமும்

குறையும். இன்று அவள் உடல் நனைய நனைய ஒவ்வொரு துளியிலும்

சிரிப்பும் அழுகையும் கொஞ்சலும் ஊடலும் காதலும் அந்த தீண்டலும்

அவளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன.

ஈரத்தலையை துவட்ட விருப்பமில்லை. நைட்டியில் உடம்பின் ஈரம்

ஒட்டிக் கொண்டிருப்பது கூட தெரியாமல் கண்ணாடி முன்னால்

உட்கார்ந்திருந்தாள்.

அவன் கைகள் அவள் இடுப்பைச் சுற்றி இறுக ஆரம்பித்தன. அவன்

மூச்சுக்காற்றின் சூட்டில் அவள் தேகம் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

காற்றின் வேகம்.. காடு எரிந்து சாம்பலாகிப்போனது. கூடு கட்டி

இளைப்பாறிய பறவைகள் வானத்தில் சிறகடித்து  வனத்திலிருந்து

கூட்டம் கூட்டமாக பறந்து செல்ல ஆரம்பித்தன. ஒரு கணத்தில்

வெந்து தணிந்தது காடு.. அக்னிக்குஞ்சை சுமந்து கொண்டு

வாழ்வதென்பது வனங்களும் அறியாத ரகசியமாய்..” ….

அவள் கைபேசி அழைத்தது. அதுவும் நல்லதா போச்சு, அவள்

கண்ணாடி பின்பங்களிலிருந்து வெளியில் வந்து செல்போனை

எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் போய் பேச ஆரம்பித்தாள்..

என்னடா..”

மம்மா.. டின்னர் சாப்பிட்டியா

யெஸ் டா.. நீ..”

நானும் தான்

ஓகே டா…. என்ன இது அதிசயமா இருக்கு..

மம்மா சாப்பிட்டியானு எல்லாம் கேட்கிற

ஏம்மா.. கேட்கப்பிடாதா..ம்ம்ம்கொஞ்சம்

ஸ்டெரஸ்..உன் குரல் கேட்கனும் போல இருந்துச்சு..’

எனக்கும் தாண்டா

அப்புறம்மா..  நாம பார்க்கிற எல்லாருமே நம்ம பேஷண்டுகள்

தாம்மா.. அதுக்கு மேலே எந்தப் பேஷண்டையும் பார்க்காதே. சரியா

என்னப்பா.. எனக்கே அட்வைசா! இன்னும் ரெண்டு மாசத்தில

ரிடையர் ஆகப்போறேண்டா

சரிம்மா.. ஆரம்பிச்சிடாதே. நம்ம சிஸ்டர் அன்னக்குட்டியின்

முடிவு எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குமா

ஆமாண்டா.. திஸ் கொரொனா காலத்தில் நத்திங்க்

இஸ் நார்மல்

டேக் கேர் மா.. ஐ லவ் யூ. குட் நைட்

ஐ டூ. குட்  நைட் டா

தலையைத் துவட்டிக்கொண்டே ரூமில் டெலிவரி ஆயிருக்கும்

டின்னர் பிளேட்டைத் திறந்து பார்த்தாள். சப்பாத்தி சப்ஜி எதுவும்

சாப்பிட விருப்பமில்லை. வயிறு பசி மறந்துவிட்ட நிலையில்

மாத்திரை போடுவதற்கு எதாவது சாப்பிட வேண்டுமே என்று

சூடான பாலில் ரெண்டு பிரட் துண்டுகளை முக்கி சாப்பிட்டு

விட்டு கொஞ்ச நேரம் கழித்து படுத்தாள்.

மேடம்.. ப்ளீஸ்.. எனக்கு அவரை ஒரே ஒரு முறைப் பார்க்கனும்

மேடம்..எதாவது பண்ணுங்கம்மா.. ப்ளீஸ்.. நீங்க பிள்ளைக்குட்டிகளோட

நல்லா இருப்பீங்கம்மா. அவரு முகத்தை ஒரே ஒரு முறை

நீங்க வெண்டிலேட்டரை  நிறுத்தறதுக்கு முந்தி பார்க்க விடுங்கம்மா..

மேடம்..ப்ளீஸ்ஸ்ஸ்அந்தக் குரலின் அதிர்வுகள் அவள் படுத்திருந்த

கட்டிலைச் சுற்றி ஓடிக்கொண்டே இருந்தன. அந்த வைப்ரேஷனில்

அவள் உடல் குலுங்கியது..

பிள்ளைக் குட்டியோடா நல்லா இருப்பீங்கம்மா

உடலை ஆளுயரத்திற்கு யாரோ தூக்கி தரையில் போட்ட மாதிரி

வலி எடுக்க ஆரம்பித்தது.

ப்ப்ளீஸ்டா.. என் வயித்தில உன் பிள்ளய சுமந்துகிட்டு

இருக்கேண்டா.. இப்போ போயி.. “

ஸ்ஸோ.. இதைச் சொல்லி என் எதிர்காலத்தையே நாசமாக்கப்

போறியா.. நீ நர்ஸ் தானே.. என்ன செய்யனும்னு உனக்குத்

தெரியாது?”

ட்டேய்

ஷ ட் அப். டோண்ட் கால் மீ அகெய்ன்.. பிச்

..   நீங்க நல்லா இருப்பீங்கம்மா.. பிள்ளக்குட்டியோட

நல்லா இருப்பீங்கம்மா….

அவளால் அவள் மூடி இருக்கும் போர்வையை விலக்கி

எந்திரிக்க முடியவில்லை. அவள் கைகளும் கால்களும்

அசைய மறுத்தன. சத்தம் தொண்டைக்குள்ளேயே முடங்கிப்

போனது.

மெல்ல மெல்ல அவளுடல் தளர்ந்து எழுந்து உட்கார்ந்த உடன்

வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த சூட்கேசைத் திறந்து அப்பாவின்

நீண்ட கைத்தறி நேரியலை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

வெடவெடத்து நடுங்கும் உடலுக்கு அது கதகதப்பாக இருந்தது.

அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள்..அப்பா அவள்

தலையைத் தடவிக்கொடுக்கிறார்.

அப்பா.. தாயில் சிறந்த தொரு கோவிலுமில்லை.. அப்போ  நானும்

கோவிலாப்பா

தூங்கும்மா.. மனசைப்போட்டு குழப்பிக்காதே

இல்லப்பா..  பிறக்கப் போற குழந்தைக்கு

அப்பனோட இனிசியல் போட முடிஞ்சாத்தான் அம்மாவாறது கூட

பெருமை..இல்லியாப்பா

அப்பா எதுவும் சொல்லவில்லை. அவள் முதுகில் தட்டிக்கொடுக்க

ஆரம்பித்தார்.

ஸாரிப்பா..”

எதுக்கும்மா

அவமானமா இருக்குலாப்பா..என்னையே எனக்குப் பிடிக்கலப்பா

ந்னோ.. நீ எதுக்குடா அவமானப்படனும்..எமாத்தினவனும் தப்பு

செய்தவனும் தலை நிமிர்ந்து வாழற இடத்தில.. நீ எதுக்குமா

அவமானப்படனும்.. அப்பா இருக்கேண்டா.. “

இப்போதும் அப்பாவின் துண்டு அவளைத் தடவிக்கொடுத்தது.

 

வெண்டிலேட்டரை நிறுத்தும் போது பேஷண்டின் வீட்டுக்குப் போன்

செய்து தகவல் சொல்ல வேண்டும். அதாவது இதுவும் மரணச் செய்தியை

முன் அறிவிப்பாக சொல்லும் கொரொனா முறை. இறுதிச்சடங்குகளை

செய்வதற்கு கூட உடலை வீட்டுக்கு கொடுப்பதில்லை. அதிலும் பல

குளறுபடிகள் நடந்துவிட்டதால் ஆஸ்பத்திரி நிர்வாகமே இறுதிச்

சடங்கையும் செய்ய ஆரம்பித்துவிட்டது. இதெல்லாமே ஓர்

அசாதாரணமான சூழலை உருவாக்கி இருந்தன. டாக்டர்களை விட

இதில் நேரடியாக பங்கெடுக்கும்  நர்சுகளும் வார்டு பாய்களும்

டிரைவர்களும் மரணத்துடன் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென புறப்பட்டு வந்த சுனாமியில் உடைந்துப் போன படகுகள்

சிதைந்துப் போன கடற்கரையோர குடிசைகள்.. எல்லாம் முடிந்தப் பின்

கடல் உள்வாங்கி அமைதியாக இருப்பது போல ஆஸ்பத்திரி இயங்கிக்

கொண்டிருந்தது.

அன்றைக்கு கொரொனா பேஷண்டுகளின் எண்ணிக்கை எதிர்ப்பார்த்ததை

விட அதிகமாக இருந்தது . மீடியாக்கள் அலறிக்கொண்டிருந்தன. அதிலும்

பாதிக்கப்பட்டு வந்திருப்பவர்கள்  நடுத்தர வயது இளம்வயது இளைஞர்களாக

இருந்தார்கள். முப்பது வயது கூட ஆகவில்லை. டாக்ஸி டிரைவராம். உடனடியாக

வெண்டிலேட்டர் பொருத்தி ஆக வேண்டும்

சிஸ்டர் மாலாவுக்கு அவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.

அவள் எதை நினைத்து இந்த ஒருவாரமும் பயந்து கொண்டிருந்தாளோ

அது நடக்கப்போகிறது என்று அவளுக்குத் தெரிந்துவிட்டது.

கடைசிமுறையாக 5 ஆம் எண் பேஷண்டின் முகத்தை அருகில்

போய்ப் பார்த்தாள். அன்றைக்குப் பார்த்து அசாதாரணமான ஓர்

அமைதி அவன் முகத்தில். அவன் வாசனை கூட மெல்ல மெல்ல

அவளருகில் வருவதை அவள் உணர்ந்தாள்.

டாக்டர் அரவிந்த் 5 ஆம் நம்பர் பேஷண்டின் வெண்டிலேட்டரை

நிறுத்துவிடச் சொல்லி எழுதிவிட்டு சிஸ்டர் மாலாவிடம்

எதுவும் சொல்லாமல் வார்டிலிருந்து வெளியேறினார்.

 

வெளியில் ஓடிப்போய் டாக்டர் அரவிந்தின் கைகளைப் பிடித்துக்

கொண்டு அவளுக்கு கதறி ஓவென அழவேண்டும் போலிருந்தது.

டாக்டர் அரவிந்தின் நடையில் எப்போதுமிருக்கும் அந்த வேகமில்லை.

டாக்டரின் உருவம் அவள் கண்களிலிருந்து மறையும் வரை

அவள் பார்த்துக் கொண்டே நின்றாள்.

இனி, நடக்க வேண்டியவைகளைக் கவனிக்க வேண்டும்

ஐந்தாம் எண் பேஷண்டின் வீட்டுக்குப் போன் செய்து சொல்லியாக

வேண்டும். அதை எதிர்முனையில் இருப்பவர் எப்படி எதிர்கொள்ளப்

போகிறார் என்பதை நினைக்கும் போது அவள் குரலில் இதுவரை

அவள் அனுபவித்திராத கலக்கம் ஏற்பட்டது

கையுறையிலிருந்து இதயம் வெடித்து ரத்தக்குழாய்கள்

 சிதறி அவள் முகமெங்கும் ரத்தக்கறை

அவள் பிரசவ வலியில் துடிக்கிறாள். அந்த வலியினூடாக

அவன் முகம் அடிக்கடி அவள் முன் வந்து அவள் வலியை

அதிகமாக்குகிறது. அவளுடைய தோழி அமுதா தான் பிரசவ

வார்டில் அவளருகில் அவள் கையைப் பிடித்துக் கொண்டு

நிற்கிறாள். குழந்தையின் அழுகுரல்அமுதா கண்ணீரை

அடக்கிக்கொண்டு பச்சைத்துணியில் போர்த்தியிருந்த

குழந்தையை அவளருகில் கொண்டு வந்து காட்டுகிறாள்.

குழந்தையின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த ரத்தவாடையில்

அப்பனின் வாசனை

அப்பாவைப் போலவே மூக்கும் முழியும் பாருசொல்லும்

போதே மாலாவின் குரல் உடைகிறது..

அமுதா குழந்தையை துடைப்பதற்கு எடுத்துச் செல்கிறாள்

… …….

மாலா வேகமாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு மெடிக்கல் காலேஜ்

வாசலுக்கு வந்தவுடன் மரத்தடியில் காத்திருக்கும் அவன்

எவ்வளவு நேரமாச்சுடி.. சீக்கிரமா வரக்கூடாதா..”

அவள் எதுவும் சொல்லாமல் சைக்கிளில் இருந்து இறங்கி

சைக்கிளை உருட்டிக் கொண்டே அவனுடன் நடக்க ஆரம்பிக்கிறாள்.

நீ பெரிய டாக்டராகி.. நாம ரெண்டுபேரும் கிராமத்துக்குப்

போயிடுதோமாம். “

அங்க்கே போயி டாக்டர் விவசாயம் பார்க்கிறார்னு . .. புரட்சி

பண்ண சொல்றியா?”

இல்லடாநம்ம ஜனங்களுக்கெல்லாம் நீ மருத்துவம் பார்க்கிறியாம்.

 நீ சைக்கிளில் போய்ட்டு வீட்டுக்கு வரும் போது நான் எதோ ஒரு

பிரசவம் பார்க்க போயிடரேனாம்.. நீங்க என்னைத் தேடிக்கிட்டு

அங்கேயே சைக்கிளில் வந்திடரீங்களாம். அப்புறமா அந்த நிலா

வீசும் அந்திப்பொழுதில் சைக்கிள் பின்னால நான் உங்க முதுகில்

சாய்ந்திருக்க நீங்க …”..

நிறுத்து .. கட் கட் கட்ஏண்டி அப்போவும்  சைக்கிள் தானா..!

ஒரு காரில் போற மாதிரி உனக்கு கனவு கூட வராதா..!!”

கனவுகளும் கண்விழிக்கும் போது முடிந்துப் போய்விடுகின்றன.

சில கனவுகள் நம்மைத் துரத்திக் கொண்டே கடைசிவர

வருகின்றன. கனவுகளுக்கு மரணமில்லையோ..’

சிஸ்டர் மாலா.. ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு

போனில் அழைத்தாள். எதிர்முனையில் ரிங்க் போனது..   

மிஸஸ் விஜயகுமார் ஹியர்

அவள் குரல் காதில் விழுந்தது.

அவள் எப்படி இருப்பாள். பணக்கார வீட்டுப் பெண். அதுவும்

ஒத்தைக்கு ஒரு பெண். பணக்காரப்பெண்களுக்கு தனி அழகும்

செழுமையும் இருக்கத்தானே செய்யும்..

ஐ யம் சாரி..உங்கள் கணவருக்குப் பொருத்தி இருக்கும்

வெண்டிலேட்டரை நிறுத்தப் போகிறோம்ம்ம்

எதிர்முனையிலிருந்து எந்தக் குரலும் வரவில்லை. அவள்

போனை வைத்துவிட்டது  தெரிந்தது.

இப்போ மாலாவுக்கு ஓனு கத்தி அழனும் போலிருந்திச்சி.

அந்த வார்டின் வெண்டிலேட்டருக்கெல்லாம் கை கால்கள்

முளைத்து  நடந்து வந்துப் பேயாட்டம் போட்டன.

ஒவ்வொரு பேயும் 5ஆம் எண் பேஷண்டின் கட்டிலைச் சுற்றி

சுற்றி வந்தன. மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தன.

கத்தரிக்காய் எங்களுக்கு..

கைலாசம் உங்களுக்குஉங்களுக்கு..

காதல் தீ எங்களுக்கு

காரு பங்களா உங்களுக்கு .. உங்களுக்கு

கைப்பிள்ளை எங்களுக்கு ..ராசா..யாரையும்

காணலியே உங்களுக்கு.. உங்களுக்கு

பேய்களின் ஒப்பாரி முடிந்து அவை  கொஞ்சம் கொஞ்சமாக

பேஷண்டின் கைகால்களைப் பிய்த்து தின்ன ஆரம்பித்தன.

பேய்களின் வாயிலிருந்து ரத்தவாடை..

ந்நோ.. ந்னோஅவள் சப்தம் வார்டின் வெண்டிலேட்டர்களுக்கு

அச்சத்தைக் கொடுத்திருக்கும்

5 ஆம் எண் பேஷண்ட் அருகில் சிஸ்டர் மாலா மயங்கி விழுந்தாள்.

ஓடி வந்த சிஸ்டர் ரேவதி மாலாவின் அருகில் வந்து அவளைத்

தூக்கி உட்கார வைக்க முயற்சி செய்தாள்..

அந்த ஏசி  வார்டிலும் எல்லோரும் வேர்க்க ஆரம்பித்தது.

சிஸ்டர் மாலாவை பக்கத்திலிருக்கும் நார்மல் பேஷண்ட்

வார்டில் ஒரு கட்டிலில் படுக்க வைத்துவிட்டு  சிஸ்டர்

ரேவதி வெண்டிலேட்டர் வார்டுக்குள் வந்தாள். 5 ஆம் எண்

பேஷண்டின் மானிட்டர்கள் தூங்கிவிட்டன.

வெண்டிலேட்டர் ஓய்வெடுக்க ஆரம்பித்தது.

பேஷண்டின் முகத்தை வெள்ளைத்துணியால் மூடிவிட்டு

பைஃலில் குறிப்பெழுதினாள்.

டாக்டர் அரவிந்துக்குச் செய்திப் போனது. சிஸ்டர் மாலாவைப்

பார்க்க வந்தார். இருவரின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி

வெளியில் வரமுடியாமல் தேங்கி நின்றது. முகக்கவசத்தை

இருவருமே கழட்டிக் கொண்டார்கள். சிஸ்டர் மாலாவின்

தலையில் கைவைத்து மெதுவாக தடவிக் கொடுக்கும் போது

மாலாவுக்கு அப்பாவின் கைகள் தடவிக்கொடுத்த அந்த

இரவு நினைவுக்கு வந்தது.

ஸாரி ப்பா…”

நீ எதுவும் தப்பு செய்யலடா செல்லம்

தன் நடுங்கும் கைகளால் மகனின் கைகளை இறுகப்

பற்றிக்கொண்டாள் சிஸ்டர் மாலா..

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

------------------------------------------

(நன்றி : புதியமனிதன். இதழ் 68, 01 நவம்பர் 2020) 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment