Wednesday, November 11, 2020

அப்பாவின் பயணம்

 


அப்பா ஊருக்கு வந்துவிட்டு பம்பாய் புறப்படுகிறார்.

அப்பாவை வழியனுப்ப ஒரு கூட்டமே திரண்டு வந்து

நெல்லை ஜங்ஷனில் காத்திருக்கிறது. அட்டைப்பெட்டிகளுடன்

கோல்டால் நிறைத்து பம்பாயிலிருந்து வரும் அப்பா புறப்பட்டு

செல்லும் போது கனமில்லாமல் மனிதர்களின் மனம்களை மட்டும்

சுமந்து கொண்டு புறப்படுவார்…

வீட்டில் நாங்களும் குடும்ப சகிதமாகவும் ஊர் சகிதமாகவும்

அப்பாவை வழியனுப்ப சேரன்மகாதேவியில் ரயிலைப் பிடித்து

ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் நிற்போம்.

அப்பாவை வழியனுப்ப வரும் ஒவ்வொருவருக்கும் 

பம்பாயில் எதாவது வேலை ஆக வேண்டி இருக்கும். 

அவற்றில் பெரும்பாலனவை

ஓடிப்போன மகன், பணம் அனுப்பாத புருஷன், 

போலீசுக்கு பயந்து தலைமறைவாக பம்பாய் வந்தவர் 

இப்படியான கதைகள் தான் பெரும்பாலும் இருக்கும். 

அப்பா எல்லா விவரங்களையும் பொறுமையாக 

கேட்டுக் கொள்வார்..  

அப்புறம் என்ன பம்பாய் வந்தவுடன்

 அவர்களைத் தேடி கண்டுப்பிடித்து எதோ செய்வார்… 

இந்தக் காணமல் போன நபர்கள்

பெரும்பாலும் அன்றைய பம்பாய் தாதா குழுமத்தில் 

இருப்பார்கள்.


டிரெயின் ப்ளாட்பாரம் வந்தவுடன் கொஞ்சம் பரபரப்பாகிவிடும்.

அப்போதுதான் அப்பாவை வழியனுப்ப வந்திருப்பவர்களை

அப்பா வழியனுப்பி வைப்பார். வந்தவர்களுக்கு பஸ் செலவு,

போகிற வழியில் காபி தண்ணி சாப்பிட என்று ..

அப்பாவின் ஜிப்பாவில் எந்தப் பாக்கெட்டில் இந்த புதுப்புது

ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன என்பதை நான் தூரத்தில்

இருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு 

கவனித்துக் கொண்டிருப்பேன்.


டிரெய்யின் புறப்பட்டவுடன் ஏறிக்கொள்வார்….

வாசலில் நின்று கை அசைக்கும் போது 

அந்தக் கை அசைப்பு எங்களுக்காக 

என்று பிள்ளைகளும் அம்மாவும் கை அசைத்து

விடை கொடுப்போம்….

அப்பாவின் உருவம் மெல்ல மெல்ல

 கண்களிலிருந்து மறையும் வரை…. 

ஒரு புள்ளியாக மறையும் வரை…

காத்திருந்து விடை கொடுத்த நாட்கள்….

கவித்துவமானவை.

இன்றும்… அப்பா கை அசைத்து …

 வெகுதூரம் ..பயணித்துவிட்டார்,

ஆனால் இது என்ன…

ஆண்டுகளும் தூரங்களும் கூட கூட

சிறு புள்ளியாகும்  அப்பா

இப்போதெல்லாம் ..

பெரிதாக வளர்ந்து கொண்டே போகிறார்,

அதை நேர்கொண்டு சந்திக்க முடியாமல்

திணறுகிறேன்..

அப்பாவை வாசிக்க முடியாமல்..

தோற்றுப் போன நாட்களுக்காய்

இனி கண்ணீர் விட்டு என்ன பயன் ?

அப்பாவின் மரணம் கூட கவித்துவமாகி

என் மீது கவிகிறது…

(அப்பாவின் நினைவு நாள் : 12, 13 நவம்பர் 1986)

 

 

 

1 comment:

  1. I still remember the days when we used to eagerly wait for the ceremony of the holdor (package) that he brings from Bombay to be unpacked. Even after 34 years we still miss you appa. Even now when I am in trouble I look for you. When I think of you my eyes fill with tears. You are our identity even today. Proud of you appa. Love you

    ReplyDelete