வீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன் புறமுதுகு காட்டியிருந்தால் அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை அறுத்தெறிவேன்என்று பொங்கி எழுந்து போர்க்களத்தில் ஒவ்வொரு சடலங்களாய்ப் புரட்டிப் பார்த்து தன் மகன் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடப்பதைக் கண்டு ஈன்ற பொழுதின் பெரிதுவந்த புறநானூற்றுதாய்மார்களைப் பற்றி நம் தமிழ்ப் புலவர்களும் மேடைகளும் தெவிட்ட தெவிட்ட சொல்லியிருக்கிறார்கள்.
அந்தத் தாய்மார்கள் யாரும் போர்க்களத்தில்
போர்ப் புரிந்தவர்கள் இல்லை. ஆனால் போர்க்களத்தில் போர்ப்படையில் நிற்கும் இன்றைய பெண்ணிடமிருந்து
மனித நேயத்தின் மாண்பினைக் காட்டும் -
பண்பாட்டின் எச்சமாய் கவிதைகள் பிறக்கின்றன.
கவிஞர் அவ்வையின் 'தாயின் குரலாக' ஒலிக்கிறது யுத்தங்கள் இல்லாத தேசத்தின் குரல்.
போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற தாய்நிலமே
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை..
என்று சொல்லிவிட்டு
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?
என்று கேள்வி கேட்டு தாய்நிலம்
தன் புதல்வர்களின் உயிரைக் குடிக்கும் எமனாகிவிட்ட முரணை 'தாய்நிலம்' என்ற சொல்லை கவனக்குறியுடன் கொடுத்து வாசகனுக்கு உணர்த்தியிருப்பார்.
கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கி விட்டாய்
இன்னும் அடங்காதோ உன் பசி?
என்று தாய்நாட்டுக்காக போரில் மடிவதை விட போரே இல்லாத நாளைய உலகம் தன் புதல்வர்களுக்கு வசப்பட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்.
இக்கவிதை போரில் மகனை இழந்த ஈழத்து
தாயின்கண்ணீர் என்றால் போருக்குப் போய்விட்டு திரும்பிய மகனின் தாய் வடிக்கும் கண்ணீரை போர்க்களம் அறியுமோ?
ஆமி பீட்டர்சன் எழுதியிருக்கும் கவிதை ஈராக் போர் கதை மட்டுமல்ல.
பேராசையால் வல்லரசு கனவுகளில் நடக்கும் யுத்தங்களுக்கு விடுதலை உரிமை என்று பெயரிட்டு.. தொடரும் சோகத்தின் எழுதமுடியாத கதையாக..
கவிதை:
இந்தக் கதையில் இருப்பதைவிட
சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது
குருதியாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட போர்க்கதைகளில்.
என் மகன் போருக்குப் போனான்
மிகுந்தப் பெருமையுடன்.
கொதிக்கும் பாலை நிலமான ஈராக்கில்
அவன் போரிட்டான்.
அவன் நண்பர்கள் தோழர்கள்
அவன் சன ங்கள்
ரத்தவெள்ளத்தில் மரணித்தப் போது
அவர்கள் முடிவுக்கு அவனே சாட்சியாக இருந்தான்.
“டாமியை எங்கே காணவில்லை?”
திசை எங்கும் சிதறிப்போன அவனை
மணிக்கணக்காக தேடுகிறார்கள் அவன் தோழர்கள்.
மணலில் தோண்டப்பட்ட பதுங்குகுழியில்
தூங்குகிறார்கள்
வீடுகளைப் பற்றிய கனவுகளுடன்.
அவன் நண்பர்களின் பெருவிரலில் கட்டப்பட்ட
அடையாள அட்டைகளுடன்
வெளியில் அனுப்ப படும்போது
அயல்தேசத்தில் யாரிடம் சொல்வது?
எதிரிகளிடமா
அவர்கள் குடும்பத்திடமா?
அவனுக்குத் தெரியும்
அவன் தாயும் அவனைப் போலவே
உறங்காமல் தவிக்கிறாள் என்பது.
சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம்
அவளுக்குச் செய்தி அனுப்புகிறான்.
“அம்மா , கவலைப்படாதே” என்று.
அவன் சந்திக்கும் கொடுமைகள்
அவனுக்கானவை.
தனித்தே எதிர்கொள்கிறான்.
போர் முடிந்துவிட்ட து.
அவனை என்னிடம் அனுப்புகிறார்கள்.
நம் விடுதலைக்காக போரிட்டவனுக்கு
விடுதலையே கிடைக்கவில்லை!
போரில் மாண்ட நண்பர்களை நினைத்து
நினைத்து ஏங்குகிறான்.
இரண்டு பக்கமும் அடிபட்டு கிழியும்
மத்தளம் ஆகிறது அவன் வாழ்க்கை.
அவன் தூங்கும் போதும்
யுத்த த்தின் சப்தம் அடங்கவில்லை.
அவன் படுக்கையில் அலறுகிறான்.
அவன் இப்போதும் போர்க்களத்தில் தான்.
யாருக்கும் அந்த சப்தம் கேட்பதில்லை.
அவன் மீண்டும் மீண்டும்
அந்த நடுக்கத்தில் வாழ்கிறான்.
அவன் இப்போதும் போராடுகிறான்.
இதை யாரறிவார்?
அவன் அன்னையைத் தவிர.
அவள் அவனைத் தேற்றுகிறாள்.
அவன் மீண்டும் அவள் மகனாக
வருவானா?
வல்லரசுகள் தேசியத் தலைவர்கள்
அறிவார்களா
விடுதலை என்பது தாயின்
முதல் கண்ணீர்த்துளியிலிருந்து
புறப்படுகிறது என்பதை..!
No comments:
Post a Comment