Wednesday, June 17, 2020

கறுப்பு வீனஸ்

அவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும்
தடித்த தொடைகளுக்கு நடுவில்
நீங்கள் எதைத் தேடினீர்கள்..”
ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீனஸ்
(Hottentot Venus / Black venus)
என்றும் அவள் அழைக்கப்படுகிறாள்.
சாரா பார்ட்மென் என்ற கறுப்பினப்பெண்
அந்த இனத்திற்குரிய உடல் அமைப்பு..
ஏழடி உயரம், (சிலர் அவள் நாலரை அடி
உயரம் தான் என்றும் சொல்லுகிறார்கள்)
அதில் துருத்திக்கொண்டு தெரியும் குன்றுகளாய் 
அவள் கனத்த இரு முலைகள்,,
அவள் பின்பகுதியோ.. உயர்ந்த மேடு..
அவள் நிழல் பிம்பத்திற்குள்
அடங்க மறுக்கும் புட்டம் (buttocks)..
வெள்ளையர்களுக்கு அவள் உடல்
ஒரு அதிசயமான காட்சிப்பொருள்..
பெண்ணின் குண்டான பின்பகுதி
பருத்த பிட்டம் தான் கவர்ச்சியானது
என்று கருதப்பட்ட காலத்தில் அவள்
அப்படி இருப்பது .. லண்டன் பிரபுக்களுக்கு
கிளர்ச்சியூட்டும் போதையாக ..
இதெல்லாம் சேர்ந்துதான் அப்பெண்ணை
காட்சிப்படுத்தும் வியாபாரத்திற்காக
லண்டன் நோக்கி பயணிக்க வைத்தது.
அழைத்துச் சென்றவன்… அவளை வைத்து
காசு சம்பாதித்தான். அவள் நிர்வாணமாகவே
காட்சிப்படுத்தப்பட்டாள் . 
சிலர் அதை மறுக்கிறார்கள்.
அவள் சருமத்தின் நிறத்தில் ஆடையை
அணிந்திருந்தாள் என்றும் எப்போதுமே
 அவள் நிர்வாணமாக வரவில்லை என்றும்
சொல்கிறார்கள். சரும நிறத்தில் ஆடை என்றால்
பார்ப்பவர் கண்களுக்கு அவள் அணிந்திருக்கும் ஆடைத் தெரியாது… ஆடையுடன் இருப்பதை அவள் மட்டுமே
அறிந்திருப்பாள்….
( தமிழ்ச்சினிமாக்களில் இப்படி சரும நிற ஆடையில்
 வயதான கதா நாயகர்களுடன் ஆடிய நடிகைகளின் பாடல் காட்சி நினைவுக்கு வருகிறதா.. !)
குறிப்பாக கறுப்பு வீனஸின் பாலியல் உறுப்புகளை வெள்ளைச்சமூகம் அதிசயமாகப் பார்த்தது.
காசு கொடுத்துப் பார்த்தது. அவளைத்
தொட்டுப்பார்க்க அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட து.
காட் ஷில்லா (godzillaa) என்ற கற்பனை விலங்கை காட்சிப்படுத்தியது போல அவளை அவள் உடலை லண்டன் காட்சிப்படுத்தியது. பாரீஸ் காட்சிப்படுத்தியது.
கலை அறிவியல் உடலியல் ஆய்வு என்று பல்வேறு பெயர்களில் அவள் காட்சிப்படுத்தப் பட்டாள்.
அவளை லண்டன் மார்னிங்க் போஸ்ட் (20/9/1810)
most correct and perfect Specimen என்று விளம்பரப்படுத்தியது.
அவளை நிர்வாணமாக வரைவதற்கு கூட்டம்
அலைமோதியது. அவள் உடலை கார்ட்டூன் சித்திரமாக்கி வெள்ளைச்சமூகம் தன் கலையார்வத்தை
 தீர்த்துக்கொண்ட து.
1789 ல் தென்னாப்பிரிகாவில் பிறந்த அவள்
கேப் டவுணில் இருந்து 1810 (Hendrick Caezar)
ஹெண்ரிக் கீசருடன் புறப்பட்டு வருகிறாள்.
அவளைத் தங்கச்சங்கிலியில் பிணைத்து
அழைத்து வந்து காட்சிப்படுத்தி.. 
பெரிய மனிதர்களின் திருமண வீடு வரை 
அவளே விருந்து பொருளாக காட்சிப்படுத்தப்பட்டு… 
ஒரு கட்டத்தில் அவள் யோனியின்
அளவும் அதைத் தொட்டுப்பார்த்த கூட்டமும் .. 
அவள் 26 வயது நிரம்புவதற்குள் மரணித்துவிட்டாள்.
சாவு கூட அவளுக்கு விடுதலையைக் கொடுக்கவில்லை. இறந்துப்போன அவள் உடலின் பாலியல் உறுப்புகளைப்
பதப்படுத்திக் காட்சிப்படுத்தியது பாரீசின் மியூசியம்.
அவள் எலும்புக்கூடு தொங்கவிடப் பட்ட து.
தென்னாப்பிரிகாவில் நெல்சன் மண்டேலோ வெற்றி பெற்ற பின் பாரீசுக்கு வேண்டுகோள் வைத்தார்.
எங்கள் மண்ணின் மகளை அவள் உடலை
திருப்பிக்கொடுங்கள். அவள் மரணத்தையும்
இழிவுப்படுத்திவிடாதீர்கள் என்றார்.
அதன் பின் எட்டு வருடங்கள் கழித்து அவளுடலின் 
எஞ்சிய பகுதிகள் பாரீசிலிருந்து அவள்
தாய் நாட்டுக்கு அனுப்ப பட்ட து.
09 ஆகஸ்டு 2002 தென்னாப்பிரிகாவில்
மகளிர் தினம் .. விடுதலை நாள்.
அந்தப் பெண்ணுக்கும் அன்றுதான் விடுதலை கிடைத்தது.
அவள் உடலை (உடல் பகுதிகளை) முறைப்படி 
இறுதிச்சடங்கு செய்து புதைத்தார்கள்…
வீனஸ் அவர்களுக்கு அழகின் தேவதை.
ஆனால் கறுப்பு வீனஸ்…??
அவள் தாய்மண்ணின் வளத்தைப் போலவே
வளமான முலைகளுடன் அவள்.
அவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும்
தடித்த தொடைகளுக்கு நடுவில்
நீங்கள் எதைத் தேடினீர்கள்..
அவள் யோனியும்
குழந்தைகளைத் தானே பிரசவித்தது!!
Who is Saartjie Baartman? | HelloBeautiful

4 comments:

  1. சரித்திரங்கள் சில எவ்வளவு இழிவாக இருந்திருக்கிறது.

    ReplyDelete
  2. ஈனப்பிறவிகள் வாழ்ந்த சரித்திரம்.

    ReplyDelete
  3. சரித்திரம் பேசும் உருக்கமான கவிதை. இதுபோல், ஜோன் ஆஃப் ஆர்க், போன்றோரை பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  4. பரிதாபத்திற்குரிய பெண் அவள்!!

    கவிதையை எழுதியவர் யார்?

    ReplyDelete