கணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு
எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல்
இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ
அவளை அனுபவிக்க பட்டா போட்டு உரிமை வழங்கப்படவில்லை!
மனைவி “ந்னோ “ என்று சொன்னாலும்
அது ந்னோ தான்.
அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை அனுபவிக்கும்
நினைப்பவன் அனுபவிக்கிறவன் கணவே ஆனாலும்
அதை எதிர்கொள்ளும் பெண்ணின் மன நிலை
என்னவாக இருக்கிறது..???!!!
ஈவ் டீசிங்கில் ஆரம்பித்து போர் மேகத்தில் பரவி
இறுதியாக படுக்கை அறைக்குள் வந்து
பக்கத்தில் படுத்திருக்கும் கணவனுடன்
முடிந்துவிடுகிறது ஆழியாளின் இக்கவிதை.
காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்
..
நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
என்னை உற்றுக்கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.
இதுவரைக்கு இந்தக் கவிதை தெருவில் போகும்
ஒவ்வொரு பெண்ணையும் தனக்கான இச்சைத் தீர்க்கும்
பார்வையுடன் அலையும் பல்வேறு ஆண்களைக் குறிக்கிறது.
அதிலும் இவர்களுக்குள்ளும் பல்வேறு வடிவங்கள் உண்டு
நாய் மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு பின்னாலேயே
சுற்றுபவன் இரத்த வெறியுடன் இரவில் அலையும் ஓநாய்
என்று நிறைய வகைகள் உண்டு என்கிறார்.
அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்குமென
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்
..
இப்போது இக்கவிதையில் அந்தப் பெண்ணுக்கு
தெருவில் உலாவும் தன்னைத் துரத்தும் மிருகங்களைக்
கண்டவுடன் மன்னம்பேரியையும் கோணேஸ்வரியையும்
துரத்திய மிருகங்கள் நினைவுக்கு வருகிறது.
நாம் போர்க்கால வரலாற்றுக்குள் நுழைகிறோம்.
அதன் ஒவ்வொரு பக்க ங்களிலும் போரின் வெற்றி
என்ற மகுட த்திற்குப் பின்னால் இருக்கும் அவலம்
தெரிகிறது. எதிரி நாட்டை வென்றவன் அந்த நாட்டின்
பெண்களை எதற்காக சிறைப்பிடிக்க வேண்டும்?
அவர்கள் ஆணுலக அதிகாரப்போட்டியில் பெண்ணுடல்
அவர்களின் வன்ம ம் தீர்க்கும் பொருளாக
இருப்பது ஏன்?
இதோடு இந்தக் கவிதை முடிந்திருந்தால்
போர்க்காலத்தில் காலம் காலமாய் பெண்கள்
அனுபவிக்கும் கொடுமையைப் பற்றி எழுதிய
ஒரு கவிதையாக மட்டுமே இருந்திருக்கும்.
கவிதையின் முடிவில்
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
இந்தக் கடைசி வரிகள்… குடும்ப என்ற நிறுவனத்தின்
சில பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.
வாழ்த்துகள் ஆழியாள்..
ஆழியாள்:
ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி
ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களில் ஒருவர்.
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.
அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில்
ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில்
ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும்,
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும்
பெற்றவர். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா
வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள்
பணிபுரிந்து தற்போது ஆஸ்திரேலியா தலைநகர் கான்பராவில்
வசித்து வருகிறார்.மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர்.
இவரது கவிதைத் தொகுபபுகள்
உரத்துப்பேச,
துவிதம்,
கருநாவு,
பூவுலகை கற்றலும் கேட்டலும்
No comments:
Post a Comment