பெண் வழி பாடு-புதிய மாதவி
-ஒரு பார்வை-பொன்.குமார்
புதிய மாதவி ஒரு தொடர் படைப்பாளி. கதை, கவிதை, கட்டுரை என்னும் தளங்களில்இடை விடாது இயங்கி வருபவர். சிறுகதைகள் அடங்கிய அவரின் தொகுப்பு ' பெண் வழிபாடு '.
சமூகத்தில் ஆணுக்கு ஒரு நீதி. பெண்ணுக்கு ஒரு நீதி.
ஆணின் நிலை வேறு. பெண்ணின்
நிலை வேறு. பெண்ணைப் பலவீனப் படுத்திய சமூகம் பெண்களின் வாழ்நிலையைப் பல
பருவங்களாக பிரித்து வைத்துள்ளன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை
தெரிவை, பேரிளம் பெண் என்று பருவங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு குறிப்பிட்ட
வயது. எல்லா பருவங்களையம் கொண்டு
பெண் வழிபாடு என்னும் சிறுகதையை எழுதியுள்ளார். ஒவ்வொரு பருவத்திலும் பாலியல் தொடர்பாக
பெண்கள் எதிர் கொள்ளும்
பிரச்சனைகளைத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் தாங்கள் விரும்பும் வாழ்க்கையை நேசிக்கும்
ஒருவனுடன் வாழ முடியாத நிலை உள்ளதை உணர்த்தியுள்ளார்.
'எஸ்தரும் கருப்பண்ணசாமியும்" ஒரு வித்தியாசமான
கதை. எஸ்தர் ஒரு கிருஸ்துவ பெண்.
கருப்பண்ணசாமி ஓர் இந்து சாமி. அதுவும் சிறு தெய்வம். எஸ்தருக்கு கருப்பண்ண சாமியே
பிடித்திருக்கிறது. கறுப்பு என்பதே முக்கிய காரணம். வெளிச்சத்தை விட இருட்டையே
அதிகம் நேசிப்பவள். பகலை விட இருளே அவளுக்குப் பிடித்தமானதாக உள்ளது. ஏசுவை விட
கருப்பண்ண சாமியையே அதிகம் வழிபட
விரும்புபவளாக உள்ளாள். கறுப்பு என்பது
ஒதுக்கப் படக் கூடாது என்கிறார்.
நடிகன் வயதானாலும் நாயகனாகவே ' நடிக்கிறான்'.
நடிகை வயது ஆக ஆக அக்கா,
அம்மா, ஆயா என்று வயதான வேடங்களே வழங்கப் படுகின்றன. ஒரே நடிகனுக்கு காதலி,
மனைவி, தாய் என்றும் நடிக்க வேண்டி உள்ளது. பாட்டியாகவும் நடிக்க வேண்டி வரும்.
நடிகையாகப் பட்டவள் மனத்தளவில்
மிகவும் பாதிக்கப் படுகிறாள்."
அவளும் அம்மா வேடமும் ' கதையில்
ஒரு நடிகையின்மன இயல்பைக் காட்டியுள்ளார். வயதானதால் புறக்கணிக்கப் படுவதை அவள் மனம் ஏற்க
வில்லை. இதனால் நடிகையின் வாழ்க்கைச்
சீரழிவதையும் தெரிவித்துள்ளார். கதையின் சில
நிகழ்வுகள் நடிகையர் திலகம் சாவித்திரியின்
வாழ்வை நினைவுப் படுத்துகின்றன.
புற வாழ்க்கையில் ஒருவருடன் வாழ்ந்தாலும் அக வாழ்க்கையில் தன்னைக் கவர்ந்த, தான்
நேசித்த ஒருவரை மறவாமலும் மறக்க
முடியாமலும் வாழ்வர். இரு பாலருக்கும் பொருந்தும்
எனினும் புதிய மாதவி பெண்களின் மன நிலையைப் பிரதிபலிக்கும் விதமாக ' பாட்டிஎன்ன சொல்லி விட்டாள்?' கதை அமைந்துள்ளது. பாட்டியிடம் உள்ள கதையே
பேத்தியிடம் தொடர்கிறது என்கிறார்.
கதையின் முடிச்சைச் சாதாரணமாக அவிழ்க்க
முடியவில்லை.
ஒரு சிறுகதையை எழுதுவதை விட
அதற்கான தலைப்பு வைப்பது ஓர் இனிமையான
அவஸ்தை. ஆசிரியருக்கும் அந்த சிக்கல்
ஏற்பட்டு தனக்குத் தானே சமரசப்
படுத்திக் கொண்டு ஒரு பொதுவான தலைப்பாக
வைத்த பெயர் ' அம்மாவின் காதலன் (ர்).'
தலைப்பிற்காக தடுமாறியது சரி என்றே தெரிகிறது. அம்மாவிற்கு கல்யாணத்திற்கு முன் காதல்
வந்திருக்குமா, அப்படி வந்திருந்தால் அந்த காதலன்
யாராக இருப்பான் என்று தேடுவதாக
கதைச் செல்கிறது. வாசகர்களுக்கும்
அம்மாவின் காதலன் எவராக இருக்கும் என்று ஒரு
தேடலுக்காக வழிவகுத்துள்ளார்.
கதைக்கான கரு ஒவ்வொருவருக்கும் ஒரு
மாதிரி கிடைக்கும். எங்கு, எப்போது கரு
கிடைக்கும் என்றும் தெரியாது. "பரிஷித் '
என்னும் கதைக்கான கரு பைரப்பாவின் பருவம்
நாவலின் கடைசிப் பக்கங்களில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். த்ரெளபதைக்குக் குழந்தை
பிறந்து இறந்து விடுகிறது. அப்போது அபிமன்யுவின் மனைவிக்கு பிறக்கும் குழந்தையைக் குந்தி
வேண்டிக் கொண்டதன் பேரில் கிருஷ்ணன்
உத்தரைக்குத் தெரியாமல் த்ரெளபதைக்குத்
தெரியாமல் அவளருகில் கிடத்துகிறான். .
அக் குழந்தையின் பெயரே பரிஷத்.
பின்பு கர்ணின் மகன் விருஷகேதுவின் மகனைக் கண்ட த்ரெளபதை பரிஷத் சாயல் கண்டு
சந்தேகம் கொள்கிறாள். சமாதானப் படுத்தியும் ஏற்க முடியவில்லை. பாண்டவ வம்சம்
தொடர்வதற்கான முயற்சி என்கிறார்.
ஆசிரியர் கற்பனையைக் கலந்து மகாபாரதம் மீது
மக்கள் கொண்டுள்ள கற்பிதத்தை உடைத்துள்ளார்.
பரிஷித் போலவே' தசரதபுரம் ' கதையும் தொன்மத்தை வைத்தே எழுதப் பட்டுள்ளது
தசரத புரத்தின் அந்தப் புரத்தில் அண்டை நாட்டிலிருந்து
சிறை எடுக்கப் பட்ட பெண்கள்
அடைக்கப் பட்டு தசரதனின் கைங்கர்யத்தால்
குழந்தைகள் பிறந்து விடுகின்றன. அவர்கள்
தனியாக குடியிருப்பு வைக்கப் படுகின்றனர்.
இதற்கு இராமனே ஏற்பாடு. அறிந்த சீதை
மனம் பாதித்து அசோக வனம் சென்று விடுகிறாள்.
புதிய மாதவியின் புதிய பார்வையால்
தசரதபுரம் மீதான மதிப்பு சரிந்து விடுகிறது.
பின் நவீனத்துவ யுத்தி பின் பற்றப்பட்டுள்ளது.
"ஹஸ்தினாபுரம் எங்கும் அப்பன் பெயர் தெரியாத
அடுத்த தலைமுறை ",என்று 'பரிஷத்
கதையில் காணப்படும் வரியும்
"" எல்லோர் முகத்திலும் ராமனின் சாயல்" என்று
' தசரதபுரம் ' கதையில் காணப் படும் வரியும்
புராணங்கள் மீதான ஆசிரியரின் மதிப்பீட்டைக்
காண முடிகிறது.
பெற்ற பிள்ளைகளை விட பேரப் பிள்ளைகளின்
மீதே தாத்தா பாட்டிகளுக்குப் பாசம்
அதிகம். பிரியம் மிகுதி. பேரன்களோடும்
பேத்திகளோடும் இருக்கவே மனம் விரும்பும்.
ஏங்கும். அமெரிக்காவில் இருக்கும் தன் மகன்
வயிற்றுப் பேத்தியைக் காண தீராத
ஆவலுடன் அளவற்ற ஆசையுடன் செல்கிறாள் பாட்டி. ஆனால் குழந்தையைக் கையில்
லோஷன் போடாமல் எடுக்க அனுமதிப்பதில்லை.
அப்படியே எடுத்து கொஞ்சவும் அதிகம்
அனுமதிப்பது இல்லை. மிகுந்த வருத்ததுடன் ஊர் திரும்புகிறாள் பாட்டி. ஒரு பாட்டியின்
உணர்வை'மரகதம் பாட்டி யுஎஸ் விசிட்'
கதை மூலம் தெரிவித்துள்ளார்.
1746ஆம் ஆண்டு மார்தாண்ட வர்மாவின் ஆட்சியில் 15 குழந்தைகளைப்பலியிட்ட சம்பவத்தை வைத்து புனையப் பட்ட ஒரு கதை ' தேவ பிரசன்ன ராஜ்யம்'. ஒரு
நாட்டில் பாக்சைடு இருப்பது தெரிந்தால் வல்லரசுகள் ஆக்கிரமிக்கும், அழிக்கும்என்பதையும் கதை உணர்த்துகிறது. வல்லரசுகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்றும் எச்சரித்துள்ளது.
புராணங்களை வைத்து பல கதைகளை புனைந்த புதிய மாதவி ஒரு ' லேட்டஸ்ட் புராணக்கதை ' யும் எழுதியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை ' முன் ' வைத்து ஒரு புதிய புராணத்தை
உருவாக்கியுள்ளார். 'விநாயகர் சதுர்த்திக்காக வித்தியாசமாக கலைத் திறமையால் சிலைகளைஉருவாக்குகிறார்கள் கலைஞர்கள். ஆனால் இச்சிலைகள் தண்ணீரில் கரைக்கப் படுகின்றன
கலைகள் வீணாக்கப் படுகின்றன. காரணம் கடவுள்களைச் சிலைகளாக்கியதாக பெருமைப்பட்டதால் கடவுள்கள் இட்ட சாபம் என்று ஒரு கற்பனையைக் கூறியுள்ளார்.
கலைகளுக்காவும் கலைஞர்களுக்காவும் வருந்தியுள்ளார்.
வாகனம் இயக்குவது ஒரு கலை. சாலை நெரிசலில் சாமர்த்தியமாக வாகனத்தைச்
செலுத்துவதற்கு மிகுந்த சாதுர்யம் தேவை. பயணிகளை பாது காப்புடன் சென்று சேர்க்கும்கடவுள் ஓட்டுநர். ஓட்டுநர்கள் பற்றிய கதை அரிதென்றே கூறலாம்.
ஆசிரியர் ' டிரைவருக்குசலாம்'போட்டுள்ளார்.
சலாம் போடச் செய்துள்ளார். ஓட்டுவது தொடர்பான தன்
அனுபவத்தையும் தெரிவித்துள்ளார்.
எண்ணிக்கைக்காக இணைக்கப் பட்டுள்ளது போல் உள்ளது ' மகளிர் தினம்'.
மகளிர் முன்னேற்றம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மகளிர் மேம்பாடு அடைய
வேண்டும் என்னும் முனைப்புடன் பல்வேறு படைப்புகள் வந்துள்ளன. வந்து கொண்டும்உள்ளன. மகளிர் முன்னேற்றம் பேசும் ஒரு பெண் தன் வீட்டிலேயே பெண்களை
வேலைக்கு வைத்திருப்பது குறித்து விமரிசித்துள்ளார். ஒரு கனமான கதையில் கனத்தைக்காணவில்லை.
பெண் வழிபாடு என்னும் இத் தொகுப்பில் பெரும் பாலான கதைகள் பெண்களை மையப்படுத்தியே உள்ளன. இயல்பாகவே புதிய மாதவி ஒரு பெண்ணிய வாதி என்றாலும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் பெண்ணியத்தில் இருந்து சற்றே விலகி உள்ளன. சற்றே சிந்தித்து
பார்த்தால் பெண்களின் பிரச்சனைகளைப் பேசுதவாகவும் உள்ளன. ஒவ்வொருபெண்ணுக்குள்ளும் ஓர் அந்தரங்கம் இருப்பதையும் வெளிச்சப் படுத்தியுள்ளார். 1980இல்
செம்பூர் பகுதியல் 17 வயதில் பாலியல் வன் கொடுமைக்குள்ளாகி பின்பு வாழ்வில்
வெற்றிப் பெற்றுக் காட்டிய ஷோகய்லா அப்துல்லலிக்கு தலை வணங்கியதன் மூலம் தான்ஒரு பெண்ணிய வாதியே என்று உறுதிப் படுத்தியுள்ளார். கால நிகழ்வுகளைக் கொண்டு
கதைகளைப் புனைந்த மாதவி தொன்மங்களைக் கொண்டும் எழுதியுள்ளார். இராமாயணம்மகாபாரதம் ஆகிய இரண்டையுமே விமரிசனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார். புராணங்களைவைத்து ஒரு புதிய புராணத்தை உருவாக்கியுள்ளார். இக் கதைகள் பேசப் படுவது போல்
புதிய மாதவியும் பேசப் படுவார்.
எந்தவித சமரசத்துக்கும் உட்படாது தான் சொல்ல நினைத்தைத் தன் எழுத்தில் தயக்கமின்றிக் கட்டுடைத்து வெளிப் படுத்தியிருக்கும் புதிய மாதவியின் கதைகள்் வாசிக்கப்படவேண்டியவை. பெண்ணியம் சார்ந்து என்கிற கருத்தைக் கடந்து புதிய மாதவியை ஒரு பெண் படைப்பாளர் என்கிற ஒரு கண்ணோட்டத்தையும் கடந்து இக் கதைகளை வாசித்தல் நலம்" என்று அணிந்துரையில் சித்தன் பிரசாத் குறிப்பிட்டிருப்பது உண்மையே என்று வாசிப்பவர்கள் உணர்வர். பெண் வழி பாடுக்குரியவள் என்பதை உணர்த்தியுள்ளார்.
வெளியீடு
இருவாட்சி சென்னை
No comments:
Post a Comment