Sunday, June 21, 2020

எழுகிறேன் நான்..


நான் எழுகிறேன்..
சரித்திரத்தின் கசப்பான பக்கமாக
புனைவுகளின் திருப்பங்களுடன்
என்னை எழுதலாம் நீ
குப்பைகளுக்குள் என்னை அமுக்கி வைத்திருந்தாய்.
ஆனால் நானோ
தூசியைப் போல மேலெழுகிறேன்.
என் மரியாதை இன்மை உன்னைத் தொந்தரவு செய்கிறதா?
ஏன் உன்னைச் சுற்றி இருள் கவிந்திருக்கிறது?
என் வீட்டு அறையில் எண்ணெய்க்கிணறு இருப்பது போல
நான் நடந்து கொள்வதாலா!
நிலவையும் சூரியனையும் போல
மாறாத அலைகளைப் போல
நம்பிக்கைகள் மேல் எழுதுவது போல
இப்போதும் நான் எழுச்சியுடன்.
கண்ணீரில் சரிந்துவிழும் தோள்களை
ஆன்மாவின் அழுகையில் பலகீனமாகிவிட்ட என்னை
கவிழ்ந்த தலையுடனும் குனிந்தப் பார்வையுடனும்
உடைந்துப் போய்விட்ட நிலையில்
பார்க்க விரும்புகிறாயா?
என் அகந்தை உன்னைப் புண்படுத்துகிறதா?
என் கொல்லைப்புறத்தில் தங்கச்சுரங்கம்
கண்ட து போல நான் குதூகலிப்பது
உனக்கு மகா கேவலமாகத் தெரிகிறதா?
உன் சொற்களால் என்னைச் சுடு.
உன் பார்வையால் என்னை வீழ்த்து.
உன் வெறுப்பால் என்னைக் கொலைசெய்.
ஆனாலும் நான்
காற்றைப்போல மேலெழுவேன்.
என் கவர்ச்சி உன்னைக் கலங்கடிக்கிறதா?
தொடைகள் சந்திக்கும் இட த்தில்
வைரங்களைக் கண்டெடுத்தது போல
நான் ஆடும் நடனம்
உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா!
சரித்திரக்குடிசைகளின் அவமானத்திலிருந்து
நான் எழுகிறேன்.
கடந்த காலத்தின் வலியுடன் கூடிய வேர்களிலிருந்து
நான் எழுகிறேன்.
கருங்கடல் நான். பரந்து விரிந்தவள்.
கடல் அலைகளில் கேட்கிறது
வாழ்வும் வளமும்.
நடுங்கும் இரவுகளையும் அச்சத்தையும்
விட்டுச்செல்கிறேன்.
நிர்மலமான பகற்பொழுதில் நான் எழுகிறேன்.
மூதாதையர்கள் கொடுத்தப் பரிசுகளைக் கொண்டுவருகிறேன்.
நான் ஒரு கனவு.
அடிமைகளின் நம்பிக்கையாய்.. நான்
எழுகிறேன்..
எழுந்து கொண்டே இருப்பேன்.
- Maya Angelou

No comments:

Post a Comment