Friday, November 8, 2019

அயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....

என் நீதி தேவதையே..
நீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது?!
எதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன்
எங்களைச் சுற்றி..
போதும்...
நீ கண்களைக் கட்டிக் கொண்டு நீதி வழங்கியது
போதும் தாயே.
விழி..
விழித்திருப்போம்
விழித்தெழுவோம்.
கவிஞர்களுக்கு தங்கள் கவிதை 
சாகாவரம் பெற வேண்டும் என்ற பேராசை உண்டு. 
எனக்கும் தான்.
ஆனால் இந்தக் கவிதை 
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் போது 
என் மார்பில் குண்டுகள் பாய்கின்றன... ..
இக்கவிதை சகாவரம் பெறுவதில்
என் பூமி அதிர்கிறது.
வேர்களுடன் என் மரங்கள் சாய்கின்றன..
 ஹேராம்..

No photo description available.
ஹே..ராம்..!
உன் ஜனனம் ஏன் சாபக்கேடானது?
நீ முடிசூட வரும்போதெல்லாம்
எங்கள் மனிதநேயம் ஏன்
நாடு கடத்தப்படுகிறது?
ஹே..ராம்..!
கோட்சேவின் குண்டுகளில்
மகாத்மாவின் மரணத்தில்
நீ ஏன் மறுபிறவி எடுத்தாய்?
ஹே..ராம்..!
உன் ராமராஜ்யத்தில்
மனித தர்மம் ஏன்
வாலி வதையானது?
ஹே..ராம்..!
உன் அக்னிப்பரீட்சையில்
சீதையின் உயிர் ஏன்
சிதையுடன் கலந்தது?
ஹே..ராம்..!
குரங்குகளின் இதயத்தில் கூட
குடியிருக்கும் நீ
மனிதர்களின் இதயத்தில்
வாடகைக்கு கூட
ஏன் வர மறுக்கிறாய்?
ஹே..ராம்..!
இந்து என்றும் இசுலாமியன் என்றும்
கிறித்தவ்ன என்றும் சீக்கியன் என்றும்
உன் ராமராஜ்யத்தில்
வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை
தீயில் எரித்துவிட்டோம்!
ஹே..ராம்..!
எங்களுக்கு
இனி அவதாரபுருஷர்கள்
தேவையில்லை.
ஹே..ராம்..!
உன்னை இன்று
நாடு கடத்துகின்றோம்..!
ஹே..ராம்..!
இது தசரதம் ஆணையுமல்ல.
கைகேயி கேட்கும் வரமும் அல்ல.
பூமிமகள் சீதை
உனக்கு இட்ட சாபம்..!!!
-----
2003 ல் வெளிவந்த என் கவிதை தொகுப்பு
"ஹேராம்"
என்னுரையில் எழுதியிருந்த வரிகளை மீண்டும்
வாசிக்கிறேன். ஒரு புள்ளி கூட மாறாமல்
இருப்பதில் ஏற்படும் கவலையுடன்.
ஹேராம் கடவுளின் அவதாராமா இல்லையா 
என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
 அவதாரபுருஷனாக ஹேராம் இருந்துவிட்டுப்
போகட்டும். இந்திய மொழிகளின் காவியத்தலைவனாக ஹேராம்
வாழ்ந்துவிட்டுப் போகட்டும். 
ஆனால் அரசியல்வாதியின் "அம்பாக"
ஹேராம் வாலிவதை செய்கின்றபோது ,
 மதத்தின் பெயரால் மனிதநேயம்
 மாண்டுபோகின்ற போது - 
ஒவ்வொரு சாதாரண இந்தியக் குடிமகனின்
வலியும் வேதனையும் அறிவாயோ நீ..
ஹேராம்...

2 comments: