Wednesday, April 17, 2019

டியர் சூர்யா

Image result for women watching sky painting


டியர் சூர்யா…
ஓட்டுப்பெட்டிகள் உனக்காக காத்திருக்கின்றன.
நீ களத்தில் நிற்கிறாய்,
நான் வெளியில் நிற்கிறேன்.
நான் பார்க்கும் காட்சிகளை நீ பார்க்க முடியாது
அந்தக் காட்சிகளின் ஊடாக நான் வந்தடையும் புள்ளிகள்
நமக்கான இடைவெளிகளை அதிகப்படுத்திக்
கொண்டே இருக்கின்றன.
காதலையும் நட்பையும் மட்டுமே பேசுவதுடன்
முடிந்து விடுவது அல்ல 
நமக்கான உலகம்.
அதில் நீயே என் ஆசானும் என் வெளிச்சமும்.
ஆனால் வெளிச்சத்தை விட இப்போதெல்லாம்
இருள் தான் சக்தி வாய்ந்த தாக மாறிவிட்ட து.
வெளிச்சத்தில் புலப்படாத காட்சிகள் இருளுக்குள்
தன்னை நிர்வாணமாக்கி ஆட்சி செய்கின்றன.
அதுவே போதையாகி பசித்தவனைத் தூங்க வைக்கிறது.
அவன் நிம்மதியாக தூங்குகிறான் என்று
காட்சிப்படுத்தி உன்னை விற்கிறார்கள் அவர்கள்.
ஒலிக்குப்பைகளால் நிரம்பி இருக்கும் 
உன் வாசலை 
இன்றைய மெளனத்தால் துடைத்து எடு.
அத்தருணத்தில் என் மெளனம் 
உன் வாசலில் கோலமாக விரியட்டும்.
கோலத்தின் ஒவ்வொரு புள்ளிகளையும்
மனசாட்சி என்ற கோடுகளால் இணைத்து விடு.
கோலம் தனக்கான வடிவத்தை கண்ட டையும்.
அந்தக் கோடுகளில் இணையாமல்
கோடுகளுக்குள் வந்துவிடாமல்
சிதறிக்கிடக்கும் புள்ளிகளை
யார் வைத்தார்கள்?
ஏன் வைத்தார்கள்?
கோலம் சிதைந்துவிடக் கூடாது.
உன் வாசல் வாழ்க்கையின் கதவுகள்..
என்ன செய்யப்போகிறாய்?
அதைத் துடைத்துவிடுவது தான்
கோலத்தின் வடிவத்திற்கும்
வாசலின் விடியலுக்கும் நல்லது.
இன்றைய மவுனத்தால் துடைத்துவிடு சூர்யா..

உரையாடல்களின் கதவுகளை மூடுவது
போராளிகளின் வழியல்ல.
போராட்டங்கள் அனைத்துமே உரையாடல்களில் தான்
முடிய வேண்டும். 
ஆயுதப் போராட்டங்கள் கூட உரையாடல்களில் தான்
வெற்றி பெறுகின்றன.

முதலில் அரசியல் விடுதலை வரட்டும்.
பொது எதிரியை முறியடிப்போம் என்று
புதிது புதிதாக பேசுகிறாய்.
எதிரணியைக் கூட நீ பகைவனின் முகமாக
சித்தரிக்கிறாய்.
இது உன் போதாமையைக் காட்டும் என்பதையும்
புரிந்துக் கொள்ள மறுக்கிறாய்.

முதலில் அரசியல் விடுதலை வரட்டும் என்ற
உன் சொற்றோடர் எனக்குப் புதியது அல்ல.
நம் வரலாற்றுக்கும் புதிதல்ல.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் 

சமூக விடுதலை இன்றிஅரசியல் விடுதலை சாத்தியமில்லை 
என்ற கருத்தை முறியடிக்க சொல்லப்பட்ட வாதம்
முதலில் அரசியல் விடுதலை வரட்டும்
அதன் பின் 
சமூக விடுதலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள்..
உனக்கு இதை நினைவூட்டவது
எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
என் மொழியை என் எழுத்தை என் கருத்தை
நீ நிராகரிக்கலாம். சூர்யா..
அது உன் விருப்பம் சூர்யா..
அது ஒரு வகையில் தனிப்பட்ட உன் உரிமையும் கூட.
உன் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கிறேன்.
அதையே உன்னிடமும் எதிர்ப்பார்க்கிறேன்.
இந்த எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை.
இதை உன் அதிகாரத்தால் நீ முறியடிக்க முடியாது.
என் உரையாடல்கள் தொடரும் சூர்யா..
உனக்கும் சேர்த்து தான் நான் 
உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
நீ வெற்றி பெறுவாய்…
உன் கூட்டமும் கூட வெற்றி பெறலாம் சூர்யா..
ஆனாலும் உன் வெற்றிகளை என்னால்
கொண்டாட முடியாது.
உன் வெற்றிகளுக்காக நீ கொடுத்த விலை..???
அது…. எதிர்காலத்தில்
உன்னை ஊமையாக்கிவிடும்.
உன் குரல்வளை நெறிக்கப்படும் போது
இப்போது ஒலிக்கும் என் குரல்
உனக்காக மீண்டும்..
காற்றில் கலந்து உன்னைக் கண்ட டையும்.
மண்ணும் மரமும் 
காடும் கழனியும்
ஆறும் ஆற்றுமணலும்
கடலும் வானமும் 
எல்லோருக்குமானது.
காற்றலைகளை நீ சொந்தம் கொண்டாட முடியாது.
கடல் அலைகளை நீ விற்க முடியாது.
வானத்தின் நட்சத்திரங்கள் உன் அதிகாரத்திற்கு அடிபணியாது..
சூர்யா…
கருந்துளைகளைக் கண்டுப்பிடித்துவிட்ட காலமிது.
பிரபஞ்சம் விரிகிறது.
விசைகளின் இயக்கத்தில்
கோள்கள் உரசிக்கொள்கின்றன.
சூர்யா
கருந்துளைகளின் ஈர்ப்பில் காணாமல் போய்விடுமோ 
நம் பூமி..

No comments:

Post a Comment