Monday, February 25, 2019

பரியேறும் பெருமாளும் சில வழக்குகளும்


பரியேறும் பெருமாளை நமக்குத் திரையில் கொண்டுவந்த மாரிசெல்வராஜ் அவர்கள் நன்றாகவே பேசுகிறார். அந்தப் பேச்சின் ஊடாக இன்னும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர் தன்னை ஒரு கலைஞன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் எவருக்கும் வருத்தமில்லை. ஆனால் அக்கலைகளின் ஊடாக அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கும் அக்கலைஞன் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறு என்ன?
பரியேறும் பெருமாள் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் நிறைய யோசிக்க வைத்தது.
“ என் பெற்றோர்கள் என்னை அப்படி வளர்க்கவில்லை. திருப்பி அடிக்கச் சொல்லவில்லை. ஜெயித்துக் காட்டு என்றார்கள்."
"சாதி இந்து என் நண்பன். அவனுடன் நான் எப்படிப் பேசுவது? இதுதான் என் படம்…”
"வெற்றி என்பது திருப்பி அடிப்பதல்ல; என் கருத்தை என் பார்வையை எதிராளிக்கு கொண்டு செல்வது தான் வெற்றி..."
"பொதுவாக சினிமாவில் கதாநாயகன் தனியாளாக நின்று எதிர்ப்பவனை திருப்பி அடிக்கும் காட்சிகளையே பார்த்தவர்களின் உளவியல் தான் இக்கேள்விகளை எழுப்புகிறது."
"பரியேறும் பெருமாள் ஒரு கலைவடிவம்… நான் ஒரு சினிமா கலைஞன்"
இப்படியாக மாரி செல்வராஜ் தன் பொன்மொழிகளைச் சொன்னபோது கேட்க சுகமாகவும் இதமாகவும் இருந்தது, கைதட்டினோம்.
படம் வெளிவந்து மும்பையில் கொடுத்தது போல பாராட்டு பத்திரம்/ விருது பத்திரம் 150 க்கும் மேலாக வாங்கி விட்ட தாக அவர் சொன்னபோதும் கைதட்டினோம். ஆனால் அப்படிக் கொடுத்த அந்த 150 அமைப்புகள் யார்? யார்? என்பது அவருக்குத் தெரியும். அதை அவர் நன்றாகவே புரிந்து கொண்டுமிருப்பார் என்பதும் புரிந்தது.
காரணம் அவர் தன் உரையாடலின் ஒரிட த்தில் நம் சமூகம் மூன்று வகையான மக்களைக் கொண்டிருக்கிறது.
1) சாதி வெறி பிடித்தவன் (சாதி இந்து என்று நான் புரிந்து கொண்டேன்)
2) சாதியால் ஒடுக்கப்படுபவன்
3) இந்த இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டு நமக்கென்ன என்று கடந்து செல்பவன்.
இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என்று சொன்னார் மாரி.
பரியேறும் பெருமாள் இந்த மூன்றாம் வகை மனிதர்களிடம் என்ன மாதிரியான சின்ன அசைவலையை உருவாக்கி இருக்கிறது!
சரிதானே… இந்த த் தம்பி சொல்வது சரிதானே! என்ற எண்ணத்தைக் கட்டமைத்து இருக்கிறது என்று மாரி சொல்ல வருகிறார். இதைத்தான் அவர் தன் சாதி இந்து நண்பனுடன் நான் நட த்தும் உரையாடல் என்று முன்வைப்பதாகப் புரிந்து கொண்டேன்.
இதற்காக மாரி கொடுத்திருக்கும் விலை என்ன?
சட்டக்கல்லூரி களம், சாதி மோதல்கள், ஒடுக்கப்பட்டவன் மீது மூத்திரம் அடிக்கும் சாதி வெறி, அண்மையில் கவனிப்புக்குள்ளான ஆணவக் கொலைகள், அதன் பின்னணி, அதற்கு எழுந்த குரல்கள், கறுப்பி, நீல நிறம்… இப்படியாக தன் கலைவடிவம் கவனிப்புக்குள்ளாகும் ஒர் அரசியலை மாரி வைக்கிறார். ஆனால் அதே அரசியல் சார்ந்தக் கேள்விகள் வரும் போது கலை என்ற போர்வைக்குள் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார்.. இது சினிமா உலகில் இருத்தலுக்கான போராட்டம் என்பதையாவது அவர் ஒத்துக் கொண்டிருக்கலாம்!
ஒரு பார்வையாளன் கதையின் கதா நாயகன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்று காட்டும்போது அதே சமூகத்தைச் சார்ந்தவன் அக்கதையின் ஊடாக மாரி வைக்கும் சில வசனங்களை காட்சிகளை எப்படி உள்வாங்கி இருப்பான் என்ற புரிதல் மாரிக்கு இருக்கிறது. ஆனால் அவன் அவரை நோக்கி வைக்கும் சில தன் உணர்ச்சியான கேள்விகள் மட்டும் அவரைத் தொந்தரவு செய்கின்றன.
நான் வைத்தக் கேள்வி…
கதையில் சாதி இந்து கதாநாயகியின் அப்பா பரியேறும் பெருமாளிடம் சொல்லும் ஒரு வசனம்..
“ நல்லா படிங்க தம்பி.. எதிர்காலத்தில எது வேணும்னா மாறலாம் இல்லியா..”
இந்த அறிவுரை… அப்படியே பாபாசாகிப் அம்பேத்கரின் வாசகத்துடன் சேர்ந்து பார்வையாளனுக்குள் போகிறது. என்னவோ ஒடுக்கப்பட்டவன் எல்லாம் படிச்சிட்டா சாதி மாறிடும் என்ற சாதி இந்துவின் அறிவுரை… அவன் சாதி என்ற கட்டமைப்புக்கு வைக்கும் அறிவுரை மாதிரி ஒரு தோற்றம்.. அதுதான் படிச்சா மாறிடும் என்று சொல்லும் புத்திசாலித்தனம்…
இன்னும் சிலர் சொல்வார்கள்… இப்போல்லாம் யாரு சாதிப் பார்க்கா?
நீங்க ஏன் மேடம் சாதிக்கொடுமை தலித் என்றெல்லாம் பேசவேண்டும்?
என்னிக்காவது நாங்க உங்கள தலித்துனு நினைச்சிருக்குமோ இல்ல அப்படி நட த்தி இருக்கோமா…’
இந்த டயலாக் தான் சாதி இந்துவின் இந்த அறிவுரைக்குள் ஒளிந்திருக்கிறது. அம்பேத்கார் சொன்னார்... “கல்வி தான் ஒடுக்கப்பட்டவனுக்கான ஒரே ஆயுதம்" என்று. கல்வி தான் அவனை முன்னேற்றும், கல்வி தான் அவனுக்கு பொருளாதர வலிமையைக் கொடுத்து வயிற்றுப் பாட்டுக்காக அடிமையாக இருக்கும் நிலையை மாற்றும். இக்கல்வி தான் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடும் மனவலிமையை, உடல் வலிமையை, அதிகார வலிமையை, அரசியல் வலிமையைக் கொடுக்கும். இவ்வளவும் அம்பேத்கர் சொன்ன "நீ படி" என்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியல்.
இதே அர்த்தம் தொனிக்கும் வசனத்தை ஒரு சாதி இந்து, ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து சொல்லும் போது அதற்கான அர்த்தங்கள் என்ன? இதைப் பரியேறும் பெருமாள் தான் புரிந்து கொள்ள வேண்டும்…
என்னவோ அம்பேத்கர் மாதிரி படிச்சிட்டா… சாதி இந்து அப்பா தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்திடுவார்னு ஒரு தட்டையான சமன்பாட்டுக்கு வந்திடக்கூடாது.
ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து இதைச் சொல்கிறவர் யார் என்பதைப் பொருத்து அதற்கான பொருள் தானே வந்தடைகிறது ! இச்சமூகம் நாள் தோறும் நட த்திக் கொண்டிருக்கும் இந்த அறிவுரைகள் சாதி என்ற கட்டுமானத்தின் மீது நாய் தன் காலைத் தூக்கிக் கொண்டு அடிக்கும் மூத்திரம் மாதிரி தான்!
இங்கே நம் பரியேறும் பெருமாளுக்கு இருக்கும் பிரச்சனை கல்வியோ, தகுதியோ அல்ல; அதையும் தாண்டிய வேறு ஒன்று. அதை நேர்கொள்ள முடியாமல் வைக்கும் அறிவுரைகள் யாரைத் திருப்திபடுத்த..?
இன்னொரு கேள்வி… இக்கதையில் மிகவும் சிறப்பான ஒருவரின் நடிப்பு, பரியேறும்பெருமாளின் அப்பா. அந்த நாட்டுப்புற கூத்துக்கலைஞன். இப்பட த்தில் அவன் பெண் வேடமிட்டு ஆடும் கலைஞனாக காட்டப்பட்டு, அதனால் ஏற்படும் சமூகத்தின் இழிந்த பார்வையை எதிர்கொள்ளும் கலைஞன். நாட்டுப்புறக்கூத்து கலைஞன் பாத்திரங்கள் எண்ணற்றவை இருக்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் காட்டுவது ஏன்? இப்படியான ஒரு கதாபாத்திரம் கூடாது என்றோ அல்லது இழிவு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இக்கதாபாத்திரம் ஏன் இப்படி காட்டப்படுகிறது?
இக்கதையுடன் சேர்த்துப் பார்க்காமல் தனியாகப் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இக்கதாபாத்திரம், இக்கதைக்கு அதுவும் ஒடுக்கப்பட்ட கதாநாயகனின் அப்பா என்ற பாத்திரத்திற்கு என்ன பின்னணியைக் கொடுக்கிறது? அதே நேரத்தில் சாதி இந்து கதாநாயகியின் அப்பாவின் தோற்றம் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது? இந்த இரண்டு காட்சிகளுக்கும் நடுவில் பெரிய பள்ளதாக்கு மாதிரி ஏற்றத்தாழ்வுகளை மாரி ஏன் காட்ட வேண்டும்? இன்றைய சாதி சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் உளவியல் தானே இதெல்லாம்..! தலித் என்றால் இப்படித்தான் இருப்பான்.. தலித் வீட்டில் நம்ம பொண்ணுக போய் குடித்தனம் நட த்த முடியுமா? என்ற பொதுப்புத்திக்கு இக்காட்சிகளும் தீனி போடுகின்றன.
உதிரியாக வரும் கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் அவர்களின் வசனங்கள் தான் பரியேறும் பெருமாளைத் தூக்கி நிறுத்தி பரிமேல் சவாரி செய்ய வைத்திருக்கின்றன. சாதி இந்துவுடன் மட்டுமல்ல சாதி கிறித்தவன், சாதி இசுலாமியர் எல்லோரும் நமக்கு நண்பர்கள் தான். அனைவருடனும் நாம் உரையாடுவோம். உரையாடத்தான் வேண்டும். ரொம்பவும் கவனமாக.. நிதானமாக உரையாடத்தான் வேண்டும். உரையாடலில் தெறிக்கும் நம் ஒவ்வொரு சொல்லிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அச்சொற்கள் கடந்து வந்த பாதையும்….
கறுப்பி என்பது ஆன்மா மட்டுமல்ல
கறுப்பி என்பது கலை மட்டுமல்ல
கறுப்பி என்பது அழகியல் குறியீடு மட்டுமல்ல
கறுப்பி என்பது ஒரு வரலாறு.
பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்துகள்.
மாரி செல்வராஜ் அவர்களைச் சந்திக்கவும் உரையாடல் நட த்தவும் களம் அமைத்துக் கொடுத்த மும்பை விழித்தெழு இயக்கம் தோழர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
( நன்றி. கீற்று இணையதளம்)

4 comments:

  1. சிறப்பான அலசல்....புதிய பார்வை.. சிந்திக்க வைக்கிறது.நன்றி மா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ***இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என்று சொன்னார் மாரி.***

    Hate crimes should be dealt with law and order. It is not the problem or ordinary citizen. It is utter nonsense to call the ordinary citizens who do not get involved in the middle of fanatics as "DANGEROUS". It is none of their damn business to get involved. Hate crimes and discrimination need to be dealt by Law enforcement officers! If your country do not have law and order, then nobody can save you!

    ReplyDelete
  4. BTW, I have not seen pariyerum perumal but I have seen these people (both kinds) in my real life while growing up in India as a "dangerous" ordinary citizen.

    ReplyDelete