Wednesday, February 13, 2019

நொண்டிச்சிந்து காதலன்





உன்னைப் பலர் காதலித்திருக்கலாம்
நீயும் சிலரைக் காதலித்தாய்.
உன் கண்ணம்மாவுக்காக
உருகி உருகி கவிதைகள் எழுதினாய்
பலரைப் பைத்தியமாக்கினாய்
தாசனுமாக்கினாய்.
ஆனாலும் என்னை மட்டும் தான்
எவரும் அறியாமல்  காதலித்தாய்..
உன்  காதலின்  வாசனையை
அந்தியில் மலரும் பூக்களிடம்
ரகசியமாக மறைத்து வைத்திருந்தாய்
உன் நடை உடை மீசை முண்டாசு..
அட ஏதோ ஒன்று
இப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறது.
என்னைக் காதலித்தப் பலரும்
நான் காதலித்த சிலரும்
மழைக்காலத்தின் ஈரமாய்
வருகிறார்கள் .. நனைகிறார்கள்
போய்விடுகிறார்கள்..
நீ மட்டும் ஏன்
வெயிலைப் போல  நிரந்தரமாய்
என் காதல் பூமியின்
நிழலாகத் தொடர்கிறாய்?
பாடிக் கலந்திட துடிக்கிறாய்
தவம் பண்ணியது இல்லையடி
என்று அழைக்கிறாய்
என் செய்வேன்..?
எமகாதகா.. என் காதலா..
உன் முண்டாசு அவிழட்டும்.
என் முந்தாணியாய் விரியட்டும்..
வா..
காணி  நிலம் , முழு நிலவு
பத்தினிப் பெண் கேட்ட உன் காதலை
என்னைச் சந்திக்க வரும்போது
எடுத்து வராதே.
மலைத்தேனும் திணைமாவும்
உனக்காக காத்திருக்கிறது.
இதுவரை நீ அறியாத சுவை
உன் கவிதைக்குள் அடங்காத அருவி
என் காதல் வனம்..
வாபாரதி.. வா
நொண்டி சிந்து பாடுவோம். வா.

1 comment: