Thursday, February 7, 2019

திட்டியின் விஷமோ தவக்கோலம்?


காமத்தை நீ சூடிய மலர்களின்
வாசனையாய் தெளித்து வைத்திருந்தாய்
காமத்தை உன் ஆடலின் அசைவுகளில்
மறைத்து வைத்திருந்தாய்.
காமத்தை உன் இசையின் பெருவெள்ளமாய்
நதிகளில் நிரப்பினாய்
காமத்தை ஆடிப் பாடி
அலைகளில் நீராடி
மூழ்கி முத்தெடுத்து
பயணித்தவள் நீ..
உன் மகளை
மாபெரும் பத்தினி மகள்
என்று உன்னிடமிருந்து விலக்கியவள் நீ
அருந்தவப் படுத்தும் அதிகாரத்தை மட்டும்
திருந்தாச் செய்கை என தெளியாத து ஏன்?
இராகுலன் அவன்..
இலக்குமி நான்.
திட்டியின் விஷமோ
என் தவக்கோலம் தாயே?
பிச்சைப் பாத்திரங்கள்
நிரம்பி வழிகின்றன.
உதயக்குமரனின் தேரோசை
அமுத சுரபி அறியாத பிச்சைப்பாத்திரம்
கருவறை பிளக்கும் பெருவலி
பளிக்கறை கதவுகள் திறக்கின்றன..
பெரும்பசி என்னை எரிக்கிறது.
இதுவோ இதுவோ அது..
காம ம் அறியாமல்
காமத்தைக் கடந்துவிட்ட தாக
நானும்
கடந்துவிடுவாள் என்று நீயும்
நடித்துக் கொண்டிருக்கிறோம் தாயே.
பிச்சைப்பாத்திரத்துடன்
நானும் சபிக்கப்பட்டிருக்கிறேன்.
என் முலைப்பால் அருந்தும்
திட்டியின் குஞ்சுகளை
காயச்சண்டிகையின் கணவன்
என் செய்வான்?
சித்தார்த்தனின் தாகம் தீர்க்க
போதிமரத்தின் வேர்கள்
நீர்த்துளிகளைத் தேடி பயணிக்கின்றன.
கந்திற்பாவைகளை அனுப்பி
என்னை அழைக்காதே…
”காம ம் கடந்த வாய்மையள் “
என்று சுதமதி சொன்னது போதும்.
மதுரையில் கூல வணிகனின் கடைவீதிகள்
இரவுகளில் விழித்திருக்கின்றன.
இதுவே ஆயின் கெடுக அதன் திறன்
என அங்கிருந்து புறப்படுகிறேன்.
அதுவரை…
உதயக்குமரனின் அமுதசுரபியாய்..
(திட்டி.. இராகுலனை தீண்டிய விஷப்பாம்பு)

1 comment:

  1. கருவறை பிளக்கும் பெருவலி super

    ReplyDelete