Thursday, August 30, 2018

காணாமல் போனவர்கள் தினம் 30 ஆகஸ்டு


(இன்று சர்வதேச காணாமல் போனவர்கள் தினம்.)
இவர்கள் ஏன் காணாமல் போனார்கள்?
இவர்களைத் தொலைத்தது யார்?
இவர்களைப் பிடித்து வைத்திருக்கும்
அந்த கொடிய அரக்கன் யார்?
இவர்கள் குற்றவாளிகளா?
இவர்கள் மீது என்ன குற்றம்?
குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பது தானே
சட்டப்படி உங்கள் நீதி!
இது என்ன தண்டனை!
காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிக்க முடியாத உங்கள் மோப்ப நாய்களை
என்ன செய்யலாம்..!
...
திரும்பி வராத மகனுக்காக
இன்னும் எத்தனைக் காலங்கள்
காத்திருப்பாய் தாயே.
அவன் புகைப்படத்தை நீ
தொட்டுத் தடவும் போது
உன் கருவறை வெடித்துச் சிதறும்
ஓசையில் சிதறாதக் கோட்டைகள்..
இனி.. திறக்கப்போவதில்லை
எந்தக் கதவுகளும்.
இனி வரப்போவதில்லை
அன்னையின் புதல்வர்கள்.
ஆனாலும்
அவன் வந்துவிடுவான் என்று
வழக்கம்போல அவளிடம் சொல்கிறேன்.
அவள் என்னைத் திரும்பி பார்க்கிறாள்.
அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல்
என் பாதைகள் திசைமாறுகின்றன.
.....
அவன் உயிருடன் இருக்கிறானா..?
அவனை எரித்தீர்களா புதைத்தீர்களா
எந்தக் கல்லறையில் அவன் உறங்குகிறான்?
அவன் பெயர் உங்கள் காணாமல் போனவர்கள்
பட்டியலில் இன்றும் இருக்கிறதா?
அவன் புகைப்படத்தைக் கையில் ஏந்தி
ஆண்டுதோறும் உங்கள் பேரணிக்கு வருகிறாள் அவள்.
மற்ற நாட்களில் அவனைத் தேடி அலைகிறாள்.
காடுகளிலும் மலைகளிலும் தேடிக் களைத்துவிட்டவள்
இப்போதெல்லாம் உங்கள் செய்திகளிலும்
அவனைத் தேடுகிறாள்.
காணாமல் போன அவனுக்காக
காத்திருக்கும் மனைவியை
பாதி விதவையாக்கி
மீதி மனைவியாக்கி
அலையவிட்டது போதும்.
அவன் பிணமாகவாவது கிடைக்கவேண்டும்.
அவள் தேடலுக்கு எதாவது அர்த்தமிருக்கட்டும்

No comments:

Post a Comment