Friday, August 24, 2018

சூர்யா@நட்புமண்டலம்.4





சூர்யா..சாதிச் சண்டையில் நம் நட்பில் சகதிப் பட்டுவிடுமோ
என்று பயந்த நாட்களும் உண்டு.
எங்கள் மூதாதையர்கள் உன் மூதாதையர்களின் அடிமைகளாக..
அதுவும் எப்படிப்பட்ட அடிமைகளாய்.. 
எங்கள் பெண்கள் ரவிக்கை அணிய
அனுமதிக்கப் பட்டதில்லை. 
ஏன் எங்கள் தெருக்களில் ஆண் நாய்கள் வளர்க்க 
அனுமதிக்கிடையாதாம்.
இதெல்லாம் எனக்கு ரொம்பவும் 
பிற்காலத்தில்தான் தெரியவந்தது. முதல் முறையாக நான் எந்தச் சாதி 
என்று அறிந்தவுடன் ஒருவாரம் உட்கார்ந்து அழுதேனாம். 
என் அம்மா சொல்வார்கள். 
நானும் நீயும் வேறு வேறு சாதி என்பதால் அழுதேனாம்.
உன் சாதியாக நான் மாற வேண்டும் என்று அழுது ரகளைச் செய்தேனாம்.

இந்த இப்பிறவியில் மாற்ற முடியாதது என்ற புரிதல் கூட இல்லாமல்
“சாதிகள் இல்லையடி பாப்பா “ என்று வளர்க்கப்பட்டதன் விளைவு..!
இப்போது நினைத்தால் என் அறியாமையை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
ஆனால் எனக்குள் அந்த அழுகை ஒரு நெருப்பாக 
எரிந்துக் கொண்டே இருக்கிறது.
காற்றடிக்கு ம் போது ஜூவாலையாக எரியும் நெருப்பு..
“சாதி அற்றவள் நான்” என்ற தண்ணீரில் அணையாத நெருப்பு..
நெருப்பின் கங்குகள் எனக்குள்..
என்னை எரித்துக்கொண்டும் எரிந்துக்கொண்டும்..
என் சிதையின் நெருப்பில் சேரும் வரை 
எரியத்தான் செய்யுமோ சூர்யா?
அழுகை வெறியானது.
எவருக்கும் தாழ்ந்தவரில்லை என்ற வெறி வேகமெடுத்தது.
முடியாதது எதுவுமில்லை 
வானம் என் வசப்படும் என்று முட்டி மோத வைத்தது.
பள்ளிக்கூடம், கல்லூரிப் போட்டிகளின் பரிசுகளாக
 தங்கப் பதக்கங்களாக என்னைச் சுற்றி வந்தப்போதும்
என் வெறி அடங்கவில்லை.
அது கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு
கொண்டு வந்துவிட்டது!
கவிதைகளை அதுவும் நீ தரும் கவிதை புத்தகங்களை மட்டுமே 
படித்திருந்த என்னைக் கவிதைப்போட்டியில் கலந்து கொள்ள வைத்தது. 
உனக்கு நினைவிருக்கின்றதா? 
அந்த கவிதைப்போட்டியின் தலைப்பு "போர்வாள்"

புரட்சியின் காற்றே! என்னை நினைவிருக்கின்றதா?
சக்தியைப் பாடி உன் பக்தியைக் காட்ட நினைத்தவனே
நான் தான் இருட்டை உனக்கு அறிமுகப்படுத்தினேன்
உன் விடியலில் வெளிச்சம் விழுந்தது.
அக்னிக்குஞ்சே அடைக்காத்தேன்.
அதனால்தான் -
புரட்சி தீயாக நீ புதுப்பிறவி எடுத்தாய்.
நான் -
உன் தாய்
உன் ஆதி தாய்!
உன்னை-
பிரசவிக்காமலேயே
தமிழமுதூட்டிய
உன் ஊழித்தாய்!
இன்று-
உறைக்குள் வாளாக
உறங்கிக் கிடக்கின்றேன்
உன் -
போர்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றேன்.
புரட்சிக் காற்றே..
உன் போர்வாள் எழுதட்டும் 
புதியசரித்திரம் !
(இது கவிதையா ஆ? கேட்டுடாதீங்க..)
இப்படியாக வாசிக்கப்பட்ட கவிதைக்கு கைதட்டல் கிடைத்தது.
நீ மட்டும் கை தட்டவில்லை.
உன் முகத்திலும் அதிர்ச்சி.
எனக்கும் கவிதை எழுதத்தெரியும் என்பது
உனக்கு மட்டும் புதுச் செய்தியல்ல.எனக்கும்தான் சூர்யா.
என்கவிதைக்கு முதல் பரிசு.. உன் கவிதை இரண்டாம் பரிசு
. நீ அற்புதமான மரபுக்கவிதையை சந்தம் தவறாமல் எழுதி 
உனக்கே உரிய சூடானக் குரலில் மேடையில் முழங்கினாய். 
ஆனால் 
என் கவிதைக்கு எப்படி பரிசு கொடுத்தார்கள்..?
அதன்பின் எல்லோரும் சொன்னார்கள். 
உணர்ச்சி மயமாக வாசித்தேனாம்.
என் குரலில் சத்தியத்தின் 
கம்பீரம்..இருந்ததாம்..
ஆனால் சூர்யா .. 
என் முதல் கவிதையே என் கடைசிக் கவிதையும் ஆகிவிட்டது.
நீ தான் சூர்யா கவிதைக் கோட்டையில் உன் ராஜங்கத்தை
நடத்திக் கொண்டிருந்தாய். நடத்திக் கொண்டிருக்கின்றாய்.
உன்னை வைத்தே என் வாழ்வின் எல்லா நியதிகளையும் 
முடிவுகளையும் தீர்மானித்தேன். நீ தான் எனக்கு குருவாக 
இருந்தாய். என் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்காத 
குருவல்லவா நீ.!!
உன்னைப் போலவே மற்றவர்களையும் எண்ணிப் பழகியதில் தான் 
எத்தனை எத்தனைக் காயங்கள்.
பக்கம் நெருங்கிப் பழகியப்பின் தான் எவ்வளவு அதிர்ச்சி..!
அறிஞர்களின் அறிவுச்சுடரில்தான் எவ்வளவு இருட்டு.!
கவிஞர்களின் கவிதைகளில்தான் எத்தனை பொய்முகம்..!

சூர்யா யாருமே உன்னைப் போல இல்லையடா..
நீ தீயென்று எழுதினால் வாசிக்கும்போது சுட்டது.
உன் எழுத்தில் சத்தியம் சுவாசித்துக் கொண்டிருந்தது.
சத்திய சோதனைகள் நமக்கும் இருந்தன.
(வளரும் நட்பு)

1 comment: