Thursday, August 23, 2018

சூர்யா@நட்புமண்டலம்.3

<ஆரியமாயை பேசிய நீ எப்படியடா அக்ரஹாரத்தின்
அழகுத்தேவதையைக் காதலித்தாய்?" ம்>

உன் காதல் மனைவியைப் பற்றி உன் “நான்” என்ன நினைக்கிறேன்?
நீ இன்றுவரைக் கேட்டதில்லை.
ஆனால் என் கண்களில் தெரியும் குறும்புத்தனத்தை நீ வாசித்தாய்.
என் எண்ண அலைகளை உன் பட்டுத்தெறிக்கும் பார்வை அளந்துவிடும்.
எனக்குத் தெரியுமடா..
டேய்.. இராட்சசனே..
இந்த உன் அந்தரங்கம் மட்டும் நான் வாசிக்க முடியாத
உன் கவிதையாக தொடர்கிறது.
உன் காதலியே உன் மனைவியானதைக் கேள்விப்பட்டு எவ்வளவு
சந்தோசப் பட்டேன் தெரியுமா? ஒரு சந்தேகம் சூர்யா..
ரொம்பவும் தீவிரமாக ஆரியமாயை பேசிய நீ ..
ஆமாம்.. நீ எப்படியடா ஒரு அக்ரஹாரத்தின் அழகுத் தேவதையைக்
காதலித்தாய்?
அக்ரக்ஹாரத்தைக் காதலிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை.
அழகின் தேவதையைக் காதலிக்க கூடாது என்றும்
நான் சொல்ல வரவில்லை.
ஆனால், ஓர் அக்ரக்ஹாரத்திற்காகவும் 
அழகின் பூச்சுக்காகவும் மட்டுமே காதலிக்க முடியுமா.. ?
"காதலுக்கு கண்ணில்லையடி தோழி" என்று சொல்லாதே.
எனக்குத் தெரியும் இமைகள் மூடித் தூங்கும்போது கூட 
அறிவின் கண்கள் விழித்திருக்கும் என் சூர்யாவுக்கு!
இந்தக் காதல் எப்படி .. எந்தப் பார்வையில்!
புரியலைடா.
உன் காதலியுடன் நீ என்னடா பேசினாய்?
என்ன பேசியிருப்பாய்? என்று எண்ணி பார்க்கின்றேன்.
உனக்கு பிடித்த உன் காரல்மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், 
மாசேதுங், காண்டேகர், ராகுல் சாங்கரிதித்தியான், ஜீவா, திருக்குறள் , 
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கார்,ரவீந்திரநாத் தாகூர்,
பாரதி, பாரதிதாசன்
.....என்று உன் சிந்தனையை ஆக்கிரமித்து உன் 
மூளையில் எல்லா செல்களிலும் நிரம்பி வழியும் எதையும் எடுத்து 
நீ அவளுடன் பருகி இருக்க முடியாது
..இந்த சுவைகளை அறியாதவள் அவள்.
அவள் அறிந்தது மிஞ்சிப் போனால் தேவாரம் , திருவாசகமா இருக்கும்.
ஆண்டாளின் பாசுரங்களை அவள் 
உனக்காக உருகி உருகிப் பாடியிருப்பாளோ?😂
இல்லை மனைவியாக வருபவளுக்கு உன் அறிவுக்களஞ்சியம்
தேவையில்லை என்பது என்ன மாதிரியான
சிவப்பு சித்தாந்தம்? 

வேண்டாம்.. என் சூர்யாவின் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள்,
என் சூர்யாவை காதலிக்க வைத்த அவளிடம்
நான் அறியாத ஏதொ ஒன்று இருந்திருக்கும்.
இருந்திருக்க வேண்டும்.
அந்தக் கெமிஸ்ட் ரியை என் பெளதீக அறிவின்
சூத்திரங்களுக்குள் திணிப்பதை நான் விரும்பவில்லை.
உன் மனைவியை நான் முதன் முதலில் பார்த்தவுடன்
அதிர்ச்சி அடைந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
பின்னே என்ன? என் சூரியாவின் மனைவியை இரண்டு சாண் அளவு
ஜரிகை பார்டர் போட்ட பட்டுப் புடவையில்
.. கூந்தலில் வாசமில்லாத சிவப்பு கனகாம்பர பூக்களை
கூடை கூடையாக சுமந்து கொண்டிருக்கும் கோலத்தில்
பார்த்தால் அதிர்ச்சி வராமல் என்னடா வரும்?
அலங்காரம் கூட பெண்ணை அடிமைப் படுத்தும் என்ற
சிந்தனையை என்னில் விதைத்தவனின் கை பிடித்தவள்
அலங்காரத் தேர் போல என் முன்னால் நின்றாள்.
சூர்யா, இன்றுவரை உன் இந்த காதலின் ரகசியம் மட்டும் நான் அறியாத,
அறிந்து கொள்ள முடியாத
ரகசியமாகவே இருந்துவருகின்றது..
சூர்யா...உன்னுடைய இந்த வட்டம் மட்டும்
உனக்கானதாகவே இருக்கட்டும்.

1 comment:

  1. அதானே...? அதிர்ச்சி வரவில்லையென்றால் தானே அதிர்ச்சி...!

    ReplyDelete