Monday, July 23, 2018

களவாடிய கவிதை




நம்மைத் திருடுகிறார்கள்.
நம் எழுத்துகளை
அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்.
திருடுவது எளிது.
அதைவிட எளிது 
திருடியதை எழுதி பிரபலமாகிவிடுவது.
யார் முதலில் எழுதியது 
யாரை யார் திருடினார்கள்
என்பதெல்லாம் 
பொற்றாமரைக் குளத்தின் ரகசியங்களாய்
சூரிய வம்சத்தின் ஆட்சிக்குட்பட்டதாய்
பாதுகாக்கப்படுகின்றன.
திருடுகிறவர்களுக்கு நம் எழுத்துகளின் சொல் 
ஒரு சப்தம்.
சொல்லகராதியின் நகல்.
அவர்களால் சொற்களைக் கொண்டே
சொற்களைக் கட்டுடைக்கும் நம் அரசியலின்
ஒற்றைப்புள்ளியைக் கூட 
உயிர்ப்பித்துவிட முடியாது.
ஆயுத எழுத்துகளை அர்த்தமுள்ளமாக்குவது
வெறும் புள்ளிகள் மட்டுமல்ல.
அதையும் தாண்டிய குருஷேத்திரம்.
தோழி..
உன் வாழ்க்கையை நானும்
என் வாழ்க்கையை நீயும்
வாழ்ந்து விட முடியாது.
பசாங்குகள் நமக்குத் தெரியும்.. 
முக நூல் திருடர்களின் முகமூடி.
களவாணிகளின் பண்டமாற்றும்
கூட்டாளிகளின் விற்பனைத் தந்திரங்களும்
நீயும் நானும் அறியாதது அல்லவே!

அவர்களிடம் சொற்களின் உறவுமுறைகளைக் கேட்டுப்பார்.
களவாடியதை உறவு கொண்டாட முடியாமல்
கள்ள உறவிலும் கைப்பற்ற முடியாமல்
அவர்களின் அடியாட்களைக் கொண்டு
உன்னை  மிரட்டுவார்கள்
மிரட்டினால் பணியவில்லையா
இருட்டில் அடைப்பதும் விலக்கி வைப்பதும்
அவர்களின் மனுதர்மம்.

சொற்கள்..
எதுகையும் மோனையும் தேடி அலைவதில்லை.
சொற்களில் வாழ்தல் என்பது
சொற்களைத் தாண்டிய உயிரின் தேடல்.
உன்னை உன் மாதவியைத் திருடியவனுக்காக
பொற்கைப் பாண்டியன் தண்டனைக் கொடுக்கப்போவதில்லை.
உன்னிலிருக்கும் உன்னை 
வெறும் சொற்களுக்குள் அடைத்துவிட முடியாது
எனதருமைத் தோழியே..
சொற்கள் அவர்கள் வாசலில் தற்கொலை
செய்து கொண்டன.
அவர்கள் செத்தப் பிணத்தைத் தூக்கிச் சுமக்கிறார்கள்.
சுடலை ஆண்டவன்.. நம் சொக்க நாதன்
 சொர்ணவல்லிகளைப் புணர்வதில்லை.
ஓம் நமசிவாய.
கொற்றவை அணிந்திருக்கும் மாலையில்
மண்டையோடுகள் சிரிக்கின்றன.

(களவாணிகளுக்கு சமர்ப்பணம்)




1 comment: