Tuesday, July 17, 2018

தாலிப்பனை



தாலிப் பனை பூத்துவிட்டது..
யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்
தாலிப்பனை பூத்துவிட்டது
முதல் பூவே, கடைசி பூவாய்
தாலிப்பனை பூத்துவிட்டது.
எனக்காக அவன் நட்டுவைத்திருந்த
தாலிப்பனை பூத்துவிட்டது.
யுகங்கள் கடந்துவிட்டன.
அவன் வர வேண்டிய நேரமிது.
அவன் தலைமுடியும் பாதமும் தேடி
அலைந்தவர்கள் திரும்பிவிட்டார்கள்.
தாலி பனை பூத்துவிட்டது.
தோலுரித்த பாம்பை போல
சுருண்டு படுத்திருக்கிறாள் அவள்.
மேகம் இருண்டு மலைகள் பிளக்கும் ஓசை.
மத நீர் வழியும் களிறுகள்
அவளை அசைக்கின்றன.
புத்திரர்கள் வாரிசுகளுடன் வரிசையாக
காத்திருக்கிறார்கள்.
குமாரத்திகள் புறப்பட்டுவிட்டதாக
செய்திகள் வருகின்றன.
அவள் கவிதைகள் மவுனத்தில் உறைந்து
கனமாகிவிடுகின்றன.
அவள் பாடல்களை இசைத்தப் பாணர்களும்
விறலியரும் காந்தரப்பண் இசைக்கிறார்கள்.
கண் விழிக்காமல் படுத்திருக்கிறாள்..
தாலிப் பனை பூத்துவிட்டது
ஒற்றை பூவிதழை தோழி எடுத்துவருகிறாள்.
யுகங்களாக காத்திருந்தவள்
கடைசியாக கண்திறக்கிறாள்.
தாலி பனை பூத்துவிட்டதை
பூவின் வாசனையும் தோழியின் முகமும்
சொல்கின்றன.
அவன் குலச்சின்னங்கள் எழுதிய
தாலியுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவன் வந்துவிடுவா னா.
கொற்றவை மணல் காட்டில் மழைத்துளிகள்.
கனவோ.. கற்பிதமோ
ஓம் நமசிவாய..
ராஜ நாகங்கள் ஆடுகின்றன.

1 comment: