Monday, November 24, 2014

புத்தகம் வெளியிட இருக்கும் தோழிக்கு



என் தோழியைப் பற்றி நானே பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது..
இந்த ஆகாயத்தின் கீழிருக்கும் எதைப்பற்றியும் அவளுடன் என்னால்
உரையாட , விவாதிக்க  முடியும். முரண்படும் கருத்துகளும் உண்டு.
எங்கள் நட்புக்கு அவை எதுவும் தடையாக இருந்ததில்லை.
 தோழியைப் பற்றிய இவ்வளவு அறிமுகம் ஏன்?
என்று நினைக்கின்றீர்களா?
நான் எழுதப்போகும் விஷயத்தை நீங்கள் வழக்கம் போல புனைவு
என்று கருதிவிடக் கூடாதல்லவா... அதனால்தான்!

உண்மைகளை புனைவுகளாகவும் புனைவுகளை அபுனைவுகளாகவும்
கருதிக்கொள்வதில் நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது
நான் சொல்லப் போவதெல்லாம் ரொம்பவும் தீவிரமாக யோசித்து
உதிர்க்கும் கருத்துகள் தான்.

அவளுக்குப் புத்தகம் வெளியிட வேண்டுமாம். அதுவும் கவிதைப்
புத்தகம். சரி.. பேஷா வெளியிடலாம்.. என்று நான் வேறு ஒருநாள்
சொல்லி வைத்ததால் தினமும் நச்சரிக்கிறாள்.

அவளுக்குச் சொன்ன டிப்ஸ்:

1)"உன் கவிதைப் புத்தகங்களை தமிழ்நாட்டில் இருக்கும் இரு
உலகப் பெயர் பெற்ற பதிப்பகங்க்கள் வெளியிட்டால் தான்
நீ கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவாய். அதிலும்
குறிப்பாக "பெண்ணியக்கவிஞர்" என்று.

2) புத்தகவெளியீட்டையும் ஜாம் ஜாம்னு நடத்த வேண்டும்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடத்தினால் தான் கவனிக்கப்படுவாய்.

3) புத்தக வெளியீட்டிற்கு கட்டாயம் ஸ்டார் அந்தஸ்த்து கவிதாயினி/
ஸ்டார் அந்தஸ்த்து வெகுஜன பத்திரிகையில் எழுதும் எழுத்தாளர் அவருடன்
ஒரு வலது/இடதுசாரி எழுத்தாளர் கட்டாயம் இருக்கிற மாதிரி பார்த்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் மீடியா கவனிக்கும். புரட்சி எழுத்தாளர்
என்ற அடையாளமும் வந்துவிடும்.

4) மாடலிங் துறையில் profile  தயாரிக்கிற மாதிரி நீயும்
ஒரு profile தயாரிக்க வேண்டும். உனக்கு என்று
ஒரு தனி காமிரமேன்/காமிரவுமனை வைத்துக் கொண்டால்
நல்லது.

5) இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம். என் தோழி என்பதால்
வெளிப்படையாக சொல்கிறேன்.
நீ கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
இத்தனை வருட என் எழுத்து அனுபவத்திலிருந்து
சில கசப்பான உண்மைகள்..
சொன்னா புரிஞ்சிக்கோ..
எழுத்து, திறமை, சுய சிந்தனை, சுயமரியாதை, வாசிப்பனுபவம்,
புரட்சி கருத்துகள்.. எல்லாம் வெறும் புண்ணாக்கு தான்
இத்தியாதி சகல்த்தையும் விட வலிமையானது ஜாதி.
அதனால் தான் சொல்றேன்..
 எழுத்து மற்றும் ஊடகத் துறையிலிருக்கும்
 உன் ஜாதி ஆட்களைக் கொஞ்சம்
கவனிச்சிக்கோ. என்னை மாதிரி "சாதியற்றவள்" என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு குட்டிச்சுவராகிவிடாதே!



No comments:

Post a Comment