கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்...
பாரதிதாசனின் கவிதை வரிகள் வெறும் கற்பனை அல்ல.
நிஜமாகி இருக்கிறது. இதைச் செய்து காட்டியவன் உங்களையும்
என்னையும் போல ரொமபவும் சாதாரணமான மனிதன்,
எந்த ஆளபலமோ அரசியல் பலமோ பணபலமோ அதிகார பலமோ
இன்றி ஒற்றை மனிதனாக 22 வருடங்கள் உழைத்து
ஒரு தனிமனிதன் தன் மனைவிக்காக கட்டிய தாஜ்மகால் இது!
அவன் பெயர் தசரத் மஞ்சிகி.
மனைவி பஃகுனிதேவிக்கு காயம் ஏற்பட்டவுடன் மருத்துவரிடம்
கொண்டு செல்லும் வசதி அவன் வாழ்ந்த சிற்றூரில் இல்லை. அவன்
கிராமத்திற்கும் மருத்துவமனை இருக்கும் தூரத்திற்கும் உள்ள தூரம்
என்னவோ 15கி.மீட்டருக்கும் குறைவானதுதான். ஆனால் இடையில்
இருப்பதோ ஒரு மலை. (gehlour hills) எனவே அந்த ஊரில் வாழும்
அனைவரும் மலையைச் சுற்றி 80 கி.மீ பயணித்து தான்
மருத்துவமனைக்குச் செல்ல முடியும். (atri and wazirganj of gaya town,
in bihar state)
காயமடைந்த தன் காதல்
மனைவியை எடுத்துக்கொண்டு 80 கி.மீ பயணித்து மருத்துவமனையைச்
சென்றடைவதற்குள் "யூ ஆர் டூ லேட்" என்று சொல்லி விடுகிறார் டாக்டர்.
அன்றைக்கு அவன் ஒரு முடிவு எடுக்கிறான். இம்மாதிரி ஒரு காரணத்தால்
எனக்கு ஏற்பட்ட இழப்பு இனி எவருக்கும் ஏற்படக்கூடாது என்று.
கையில் கடப்பாறை, கூடை, மண்வெட்டி சகிதம் மலையடிவாரம் சென்று
இரவு பகலாக மலையை உடைக்கிறான். ஊரும் உறவும் அவ்னைப் பார்த்து
எள்ளி நகையாடுகிறது. " சரியான லூசுப்பய" என்று தானே நம் சமூகம்
சொல்லி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மலை உடைகிறது.
அவன் உழைப்பைக் கண்டு ஒரு சிலர் அவனுக்கு உணவும் இன்னும்
சிலர் அவனுக்கு போனால் போகிறது என்று மலையை உடைத்தெடுக்க
கடப்பாறையும் கொடுத்து உதவுகிறார்கள். நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி வருடங்கள் உருண்டோடி... 22 ஆண்டுகள்..
.. மலையைக் குடைந்து அவன் பாதையை போட்டுவிட்டான்.
80 கி.மீ பயணிக்க வேண்டிய அவசியமில்லை இனி, அவன்
கிராமத்து மக்களுக்கு. 13 கி.மீ தூரம் பயணித்தால் போதும்.
360 அடி நீளம், 25 அடி ஆழம், 30 அடி அகலம் .. கொண்ட இந்த
மலையைக் குடைந்து தனிமனிதன் உருவாக்கிய தாஜ்மஹால்.....
பளிங்கு கற்களால் மன்னன் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜுக்கு
கட்டி எழுப்பி இருக்கும் தாஜ்மஹாலை விட எந்த வகையிலும்
குறைந்ததில்லை. என்னளவில் இதுவே எனக்கும் என் வருங்கால
தலைமுறைக்கும் என்றும் நம்பிக்கை கொடுக்கும் தாஜ்மஹால்.
தசரத் மஞ்சிகி போற்றுதலுக்கு உரியவர்
ReplyDelete