Thursday, April 26, 2012

ஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும்





ஆவணப்படங்கள் வரிசையில் தனக்கென தனி இடத்தை ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படம் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ஆனந்த் பட்வர்த்தன். அவருடைய ஆவணப்படங்கள் அனைத்துமே சமூகப்பிரச்சனைகளை அதுவும் சமகால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது என்பது தனிச்சிறப்பு. (பார்க்க: அவருடைய ஆவணப்படங்களின் பட்டியலை)

தணிக்கைகள், மத நிறுவனங்கள், அரசு இந்த மூன்றும் பிரிக்க முடியாத கண்ணிகள். ஒழுக்கத்தின் பெயராலும் பண்பாடு கலாச்சாரத்தின் பெயராலும் மத நிறுவனங்கள் தூக்கிப் பிடிக்கும் பதாகைகளை எப்போதும் தணிக்கை வழி காப்பாற்றுவதில் அரசே கவனமாக இருக்கிறது. அரசியல், பாலுறவு, வன்முறை என்ற வட்டத்தில் தணிக்கை இருந்தாலும் பாலுறவு, வன்முறை ஆகியவற்றில் காட்டும் தளர்வை அரசியல் சார்ந்த பாலுறவு, வனுமுறைக் காட்சிகளை எப்போதும் தடை செய்வதில் தணிக்கைக்குழுக்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.

பாலுறவு வன்முறை சார்ந்த திரைப்படங்கள் தமிழிலும் எத்தனையோ வந்தாகிவிட்டது. ஆனால் அதே அந்த பாலுறவு/வன்முறை சமகால அரசியல் சார்ந்ததாக இருப்பதை தணிக்கையின் கரங்களால் ஆரம்பத்திலேயே அரசுகள் வெட்டி எறிவதில் கவனமாக இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தான் வாழும் காலத்தில் தன் கண்முன்னால நிகழும் பாசிசம், மதவெறுப்பு, இனவெறுப்பு, சாதியம், பெண் இழிவு என்று தொடரும் நிகழ்வுகளை வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து பார்த்துக் கொண்டிருக்காமல் அப்படியே ஆவணப்படுத்தும் போது ஆவணப்படுத்தும் அக்கலைஞன் சந்திக்கும் தடைகளும் போராட்டங்களும் பெருங்கதை. புனுவல், ஆந்த்ரே வாட்ஜா, கென் லோச், விண்டர்பாட்டம், லார்ஸ் வான் டிரையர் வரிசையில் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்களும் அடங்கும். தணிக்கை, அரசு அதிகாரம், கோர்ட் வாசல் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி - வழக்கம்போல - சில எடிட்டிங் நடந்து தற்போது நமக்குப் பார்க்க கிடைத்திருக்கிறது ஜெய்பீம் காம்ரேட்.

மூன்று மணிநேரம் + 20 நிமிடங்கள், 14 வருடங்கள் தயாரிப்பு என்று பார்வையாளர்கள் கண்முன்னே விரிகின்றது இந்த ஆவணப்படம். ஜூலை 11, 1997ல் மும்பை, காட்கோபர் பகுதியில் ரமாபாய் காலணி குடியிருப்பில், காவல்துறையின் கண்மூடித்தனமான மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டில் , பாபாசாகிப் அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவுப்படுத்திய நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்

வகையில் கூடிய மக்களில் 10 பேர் அந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி விடுகிறார்கள். மும்பையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்திலும் தலித்துகள் ஒன்றுகூடி அரசாங்கத்தின் அராஜகத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களும் மனித உரிமை ஆர்வலர்களின் உரத்தக் குரலும் பல்வேறு ஊடகத்தளங்களில் இன்று நமக்கு வாசிக்க கிடைக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தம் மக்களின் சோகம் நெஞ்சை அழுத்த அந்த மன அழுத்தம் காரணமாக அந்த நிகழ்வு நடந்து ஆறு நாட்களுக்குப் பின் தலித் களப்பணியாளரும் பாடகரும் இடதுசாரி கவிஞருமான விலாஸ் கோக்ரே தன்னை மாய்த்துக் கொள்கிறார். இந்தக் காட்சியுடன் தன் காமிராவை பேச வைக்கிறது இந்த ஆவணப்படம். இடதுசாரி மராட்டியக் கவிஞரான விலாஸ் ஆனந்த பட்வர்த்தனின் "பம்பாய் எங்கள் நகரம்" (Bombay our city) என்ற ஆவணப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர். தனக்குத் தெரிந்தவரான விலாஸின் தற்கொலையும் அதற்கான சமூகக் காரணிகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் 1974ல் சிவசேனாவுக்கு எதிராக நடந்தப் பேரணியில் கொலை செய்யப்பட்ட தலித் பைந்தரின் பகவத் ஜாதவ், அத்துடன் கயர்லாஞ்சியில் நடந்த சாதியக் கொடுமை, அதை நியாயப்படுத்திப் பேசும் ஆதிக்கச்சாதியின் குரலாக "அந்தப் பெண்கள் ஒரு மாதிரி.. அவர்களுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் நினைத்தார்கள்” என்று ஒலிக்கும் குரல்... 330 மில்லியன் இந்துக் கடவுள்களாலும் காப்பாற்ற முடியாத

தலித் இந்துக்களின் வாழ்க்கை அவலம், இவை அனைத்தையும் தன் உரத்தப் பாடல்களின் மூலம் ஒலித்த கபீர் கலா மஞ்சின் பாடகி சீத்தள் சாத்தேவின் ஜீவன் ததும்பும் குரல்... சுதந்திர இந்தியாவின் சமூக அவலத்தையும் சாதி முகத்தையும் தோலுரித்துக் காட்டியதில் பட்வர்த்தனின் முயற்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.

படம் முழுக்க ஒலித்த கபீர் கலா மஞ்சின் பாடல்களும் இறுதியில் கபீர் கலா மஞ்ச் அமைப்பு தடை செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தலைமறைவான நிலையில் அவர்களுக்கு தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் என்ற முத்திரை குத்தப்பட்ட தருணத்தில் இப்படம் இப்போது வெளிவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததாக ஆனந்த பட்வர்த்தன் கூறுவதும் நினைவு கூரத்தக்கது.

இப்படம் பார்த்தவுடன் சில கேள்விகள் எழுந்தன. என் சந்தேகங்களை உறுதிப்படுத்தியது மும்பையில் கலினா பகுதியில் பல்கலை கழக வளாகத்தில் அரசியல்/சமூகவியல் கல்வித் துறை  ஏற்பாடு செய்திருந்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்வும் அதன் பின் நடந்தக் கலந்துரையாடலும்.

தற்கொலை செய்துக் கொண்ட விலாஸ் ஓர் இடதுசாரிக் கவிஞன். பாடகன். இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞன். அவன் தற்கொலைக்குக்கு முன் இடதுசாரி அமைப்பிலிருந்து அதன் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக விலக்கி வைக்கப்படுகிறான் விலாஸ். தன் வாழ்நாளில் நம்பிக்கையுடன் சார்ந்திருந்த ஓர் அமைப்பிலிருந்து ஒரு களப்பணியாளன் விலக்கி வைக்கப்படும் போது அவன் எதிர்கொள்ளும் மன உளைச்சலும் ஏமாற்றமும் நம்பிக்கை இன்மையும் கொண்ட வறண்ட நேரத்தில் தான் அவன் சார்ந்த அவன் சமுதாய தலித் மக்களின் தலைவரான அம்பேத்கரின் சிலைக்கு நடந்த அவமதிப்பும் அதற்காக நடந்தப் பேரணியில் ரமாபாய் காலனி மக்கள், அவனுடன் வாழ்ந்தவர்கள் அநியாயமாய் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வும் நடக்கிறது. அவன் தற்கொலை செய்துக் கொண்ட போது அவன் தலையில் ஊதா நிற ரிப்பன் காட்சி அளிக்கிறது. படத்திலும் இக்காட்சியின் ஊடாக சிவப்பு ரிப்பன் /ஊதா நிற ரிப்பன் என்ற நிறங்கள் பேசப்படுகின்றன. விலாஸ் எதனால் இடதுசாரி அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டான் என்பதோ அது குறித்த விவாதங்களோ எவராலும் பேசப்படுவதில்லை.

இந்தப்படத்தை ஆவணப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பேசும்போது பட்வர்த்தன் மிகவும் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டார், அதாவது தான் பட்வர்த்தனாக - உயர்ந்த சாதிப் பட்டியலில் இருக்கும் சாதிக்குடும்பத்தில் பிறந்த பட்வர்த்தன் என்ற அடையாளம் காரணமாகவே இந்த ஆவணப்படம் எடுப்பது எனக்கு ஓரளவு சாத்தியமானது என்கிறார். அதாவது தலித்துகளுக்கு நடந்த வன்கொடுமைகளை ஆவணப்படுத்துவது பட்வர்த்தன்களுக்கு மட்டுமே சாத்தியமான செயல். ஒரு கோக்ரேவோ ஜாடவோ தலித் ஓருவரால் ஆவணப்படுத்துவது மிகவும் கடினமானது தான் என்பதை ஒத்துக் கொள்கிறார். இதுதான் இந்திய சமூகத்தில், சுதந்திர இந்தியாவில் யதார்த்தம் என்பதை தலித்துகளும் ஏற்றுக்கொள்ளவே வேண்டியதாக இருக்கிறது.

ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு காட்சிகள் பட்வர்த்தனின் அரசியல், மேல்சாதி மேட்டிமைத்தனத்தால் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

2010ல், தலித்துகள் கொலை செய்யப்பட்ட அதே காட்கோபர் ராமாபாய் காலனிக்கு 14 வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பட்வர்த்தன். பிஜேபி, சிவசோனா கூட்டணி அரசு ஆட்சியில் தான் ரமபாய் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஆனால் அதே கட்சிகளுக்கு 14 வருடங்கள் கழித்து தலித்திய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கை கோர்த்து அவர்களின் தேர்தல் வெற்றிக்காக பேசும் காட்சியும் சுவரொட்டிகளும் பதாகைகளும்! இந்தக் காட்சிகளின் மூலம் தலித் அரசியலையும் தலித் அரசியல் தலைவர்களும் அற ஒழுக்கத்திலிருந்து தவறியவர்களாகவும் தம் மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்களாகவும்... காட்டப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு மிகவும் எளிதாக சட்டென இந்த எண்ணங்கள் மேலோங்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால்... அரசியல் அரங்கில் நிகழும் இம்மாதிரியான சோரம் போன, வெட்கங்கெட்ட கூட்டணி அவலங்களுக்கு காரணமானவர்கள் யார்? தலித்திய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தலித்திய தலைவர்கள் மட்டும் தானா காரணம்?

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசியல் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கூட அரசியல் சாணக்கியமாகவே பேசும் அறிவுஜீவிகள் அதே சாணக்கியத்தனத்தை தலித்திய அரசியலில் மட்டும் ஏன் காணத் தவறிவிடுகிறார்கள்? தலித்துகளுக்கான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே மாதிரியானவை. அவைகளுக்குள் ரொம்ப பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை.

அதிக வாக்குரிமை பெற்றவரே வெற்றி பெற்றவராக தேர்ந்தெடுக்கப்படும் மெஜாரிட்டேரியன் எலக்டோரம் சிஸ்டத்தில் தலித்துகளுக்கான தேர்தல் வெற்றி என்பது மற்ற அரசியல் கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்தால் மட்டுமே சாத்தியம் என்பதே உண்மை. எந்த மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. தலித் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பி.ஜே.பி , சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்ததை நியாயப்படுத்துவது நம் நோக்கமல்ல. ஆனால் இந்த நியாயங்கள் தலித்திய அரசியலில் கடைப்பிடிக்க முடியாமல் இருப்பதற்கு தலித்திய அரசியல் தலைவர்கள் மட்டுமா காரணம்? பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூட திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைப்பதைப் பற்றி கேட்டபோது கொள்கை கூட்டணி, முற்போக்கு கூட்டணி என்றெல்லாம் பம்மாத்துப் பேசாமல் ‘யார் அதிகம் சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி’ என்று சொன்னதைக் கூட எவ்வளவு வெளிப்படையாக, உண்மையாக இருக்கிறார் என்றல்லவா பாட்டாளிகள் பரசவப்பட்டார்கள்! எனவே இந்திய அரசியலில் தலித் அரசியலுக்கு மட்டும் இந்த நியாய, அநியாய சட்டங்களும் அளவுகோள்களும் வைத்துக் கொள்வது எப்படி நியாயமாகும்?

திமுக குடும்பச் சண்டையில் தினகரன் பத்திரிகை ஊழியர்கள் அநியாயமாக உயிர்ப்பலி ஆனார்கள்! தினகரன் பத்திரிகையில் வேலைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நியாயமா? அடுக்குமா? என்று கேள்வி கேட்டார்களா? பட்வர்த்தனுக்கு இதெல்லாம் தெரியம்தான்! ஆனால் தலித்துகள் யாரும் இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க கூடாது. ஏனென்றால் பட்வர்த்தன்கள் தலித்துகளுக்காக இவ்வளவு போராடி கஷ்டப்பட்டு இதெல்லாம் ஆவணப்படுத்துவதுகிறார்கள் என்பதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். பட்டவர்த்தன்களை விட்டுவிட்டால் இதை எல்லாம் வெளி உலகத்திற்கு கொண்டு வர பாவம், தலித்துகளுக்கு வேறு யார் தான் இருக்கிறார்கள்?

ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்கள்:

Ø    1971 - புரட்சியின் அலைகள் - பீகார் இயக்கத்தைப் பற்றியது

Ø    1978 - அரசியல் சிறைக்கைதிகள்

Ø    1981 - எழுவதற்கான நேரம்

Ø    1985 - பம்பாய் எங்கள் நகரம்

Ø    1990 - நண்பர்களின் நினைவாக

Ø    1992 - ராமனின் பெயரால்

Ø    1995 - பிதா, மகன், தர்மயுத்தம்

Ø    1996 - நர்மதா டைரி

Ø    1996 - மில் தொழிலாளர்கள்

Ø    2002 - போரும் சமாதானமும்

Ø    2011 - ஜெய்பீம் காம்ரேட்


நன்றி: கீற்று டாட் காம்

Friday, April 20, 2012

பாம்பாட்டி



கனவுகளிலும் என்னைத் துரத்துகிறது
பாம்புகளின் கூட்டம்.
மகுடி எடுத்து வாசித்து
மயக்க வேண்டும்
கடிப்பதற்குள் எப்படியாவது
கட்டிப்போட வேண்டும்
கனவுகளில் தேவதைகள்
வரப்போகிறார்கள்
நட்சத்திரங்களுடன்
நடனமாடிக்கொண்டே வரக்கூடும்
அவர்கள்.
பாம்புகள் பயமுறுத்தினால்
என்னையும் என் கனவுகளையும்
அவர்கள் விலக்கி வைக்கலாம்.
பாம்புகளைப்  பிடிக்கும்
பாம்பாட்டி
என் படுக்கை அறையில்
பாம்புகளுக்காகக் காத்திருக்கிறான்.

இப்போதெல்லாம் 
பாம்புகள் வருவதில்லை
ஏனேனில் எனக்கு
கனவுகளும் வருவதில்லை.
பாம்பாட்டி பொட்டிக்குள்
பத்திரமாக 
படுத்திருக்கிறேன்
படம் எடுத்து ஆடுகிறேன்
நானே பாம்பாகிப் போனதறியாமல்.



Sunday, April 15, 2012

என் சுற்றுப்பயணங்கள்




மரத்தின் இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
நிறம்மாறிக் காத்திருக்கின்றன
இலையுதிர்க்காலத்திற்காய்
என்னைப் போலவே.

வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங்காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு சங்கீதமாய்.

எவரும் துணையில்லாத
பயணத்தில்
செக்குமாடுகளாய்
பூமியைச் சுற்றியே
வலம் வருகின்றன
என் பால்வீதிகள்.

எப்போதாவது
என் வட்டத்தைத் தாண்டி
எட்டிப்பார்க்கும் கண்களை
எரித்துவிடுகின்றன
எரிநட்சத்திரங்கள்.

கழுத்தில் கட்டியிருக்கும்
கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே
தீர்மானிக்கப்படுகின்றன
எனக்கான
என் சுற்றுப்பயணங்கள்.


Thursday, April 12, 2012

தோழர் சங்கமித்ராவின் மறைவு

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர், சங்கமித்ராவின் மறைவு செய்தியை
தமிழ் உலகம் மின்னஞ்சல் மூலம் அறிந்துக் கொண்டேன். என் ஹேராம் கவிதை நூலை
வாசித்துவிட்டு அவர் எனக்கு எழுதிய கடிதத் தொடர்பு மூலம் எனக்கும் அவருக்குமான
தோழமை உறவு கடைசி நாட்கள் வரைத் தொடர்தது. அவருடைய இதழின் ஆசிரியர் குழுவில்
என் பெயரையும் சேர்க்க அவர் விரும்பிய அளவுக்கு எங்களுக்குள் கடிதப் போக்குவரத்தும்
தொலைபேசி உரையாடல்களுமாக நீடித்தது. அண்மையில் ஓரிரு மாதங்கள் அவருடன்
பேசவில்லை. எனக்கான என் கடமைகளின் ஓட்டத்தில் இன்று, நாளை என்று நாட்கள் ஓடி,
இப்போது ..... என்னுடைய இந்த வலைப்பூவில் கூட எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில்
அவருடைய தன் முன்னேற்ற சிறுகதைகளையும் 99% அவருடைய அனுபவங்களாய் வெளிவந்த
படைப்புகளையும் விரும்பி வாசித்த ஒரு வாசகராய் விமர்சகராய்.. நான்.

தலைவலி காய்ச்சல் வந்தால் கூட அதற்கும் பார்ப்பனர்கள் தான் காரணம் என்று நெத்தி அடியாக
பேசுவார், எழுதுவார். பல சமயங்களில் அதுவே எங்களின் விவாதக்களமாக அமையும்.
அவர் எனக்கு அனுப்பும் அஞ்சல் அட்டைகள் ரொம்பவும் பிரசித்தமானவை. அஞ்சல் அட்டை
நண்பர் என்று கூட என் பிள்ளைகள் அவரை அடையாளப்படுத்துவார்கள். அதைச் சொன்ன போது
அதற்கும் அவர் கொடுத்த விளக்கமும் சிக்கனம் குறித்த அவர் கருத்துகளும் இப்போதும் பசுமையாக
நினைவில் இருக்கிறது.







தோழர் சங்கமித்ரா குறித்து என் ஆசான் கவிதாசரண் அவர்கள் மே 2008ல் எழுதியிருந்தக் கட்டுரையை
மீள்பிரசுரம் செய்கிறேன்.


சங்கமித்ரா 65 என்ற தலைப்பில் சங்கமித்ராவாக அடையாளப்படும் பெரியாரியவாதியான நண்பர் பா. இராமமூர்த்தியின் 65 ஆண்டுகால வாழ்வியல் சித்தரிப்புகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுக்கடங்காமல் பீறிட்டுப் பொங்கும் பாதாள ஊற்றுப் போன்ற இவரின் விடாப்பிடியான வினையூக்கங்களும் அடித்துப் பேசுவதான எழுத்தாக்கங்களும் ஒரு சராசரி நபரை வியர்க்கவைக்கக் கூடியவை என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள விவரங்கள் அழுத்தமான சான்றாதாரங்களாகின்றன. இத்தனைக்கும் இத்தொகுப்பு எவ்வித நெறிப்படுத்தலோ தணிக்கை முறையோ இன்றி, கைக்குக் கிடைத்தவற்றைப் பொறுக்கிப் பிணைத்ததாகவே தோற்றமளிக்கிறது. உண்மையில் இந்த எளிமையே தொகுப்பின் நம்பகத்தன்மையை அழுத்தமாக மேம்படுகிறது.

அசுரப் பனைமரத்தை ஒரு மின்னணுச் சித்திரமாக்கினாற் போல - மின்னணு சித்திரத்திற்கு ஒரு அபூர்வத்தன்மை உண்டு. சித்திரம் நுணுங்க நுணுங்க அதன் துல்லியம் தூக்கலாய் வெளிப்படும் - சங்கமித்ராவின் சலிப்பற்ற எழுத்துகளும் செயல்பாடுகளும் தொகுப்பின் நெசவிழைகளாகிக் கனம் சேர்க்கின்றன.

இந்த நண்பரைக் கடந்த 14 ஆண்டுகளாக என் நினைவில் தங்கிய பெயராகவும் நபராகவும் எனக்குத் தெரியும். ஆயினும் இந்த நூல் மூலமாகவே இவரது பரந்துபட்ட அறிவியக்கச் செயல்பாடுகளை முழுமையாகவும் முதன்மையாகவும் அறிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது. இவரைக் கவனப்படுத்தத் தொடங்கியதிலிருந்து எனக்கொரு காட்சி விரிவதுண்டு. தண்டி யாத்திரை பற்றிய பழைய செய்திப் படச்சுருளில் வேகுவேகென்று நடந்து செல்லும் காந்தியாரைத் தொடர்ந்து அவரது தொண்டர்கள் அரக்கப்பரக்க ஓடுவார்களே - அதுபோல இவரும் தன் வாசகர்களை ஓடவிட்டு உவக்கிறவர் என்பதாக. தவளைப் பாய்ச்சலாய் எம்பித்தாவும் இவரது மொழிக்குள் பூக்கும் உருவெளிக் காட்சி அது.

இவரது "ஒரு எருதும் சில ஓநாய்களும்” என்னும் தன்வரலாற்று நாவல்தான் இவரைப் பற்றி நான் படித்த முதல் நூல். அதைப் படித்தபோது என்னில் முகிழ்த்த இரண்டு படிம உணர்வுகளை இங்கே இப்போது பதிவு செய்வது தவறாகாது என்று கருதுகிறேன். அலகு குத்திக் கொண்டவனைப் பார்த்த மாத்திரத்தில் சிலீர் என்று என் மயிர்க்கால்கள் பொடித்துக் கொள்ளும். இவரது செயல் தீவிரம் அப்படியோர் அலகு குத்தலாக என்னைச் சிலுப்பியது முதல் உணர்வு. மற்றொன்று நான் சென்னைக்கு வந்த புதிதில் கண்ட ஒரு காட்சியோடு தொடர்புடையது. நட்டநடுப் பகலில் சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த ஒரு பெண் கணத்தில் தன்னை அம்மணமாக்கிக் கொண்டு, "ஐயோ என்னைப் பாருடா, என் துணியை எடுத்துத் தாடா” என்று கத்தினாள். நான் அப்போது எதிர்ப்புறத்தில் பேருந்துக்காக நின்றிருந்தேன். மனம் திக்கென்றதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை. குப்பென்று தீப்பற்றிக்கொள்ளும்முன் மனப்புலம் சுருண்டொடுங்கும் கண நேர மரத்தனம் அது.

ஜிவ்வென்று கவனங்கள் குவியத் தொடங்கும்போதே சட்டென்று ஒரு போலீஸ்காரர் குறுக்கே பாய்ந்து, அவள் மேல் துணியை அள்ளிப்போட்டு, தரதரவென்று இழுத்து வந்து சாலையோரத்தில் தள்ளிவிட்டு, காலைத் தூக்கி மிதிக்கப் போகிறவரைப்போலப் போக்குகாட்டி "அடி ஞொம்மாள” என்று அச்சுறுத்திவிட்டுப் போனார். அவர் தலை மறைந்ததும் "போடா தூம. ராத்திரி வா” என்றாள் அந்தப் பெண். சங்கமித்ரா ஒளிவு மறைவின்றி வெகு அம்மணமாக உண்மைகளைப் போட்டு உடைக்கிறார் என்பதால் இந்தக் காட்சி அப்போது என் நினைவுக்கு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய்ப் புரிந்தது. நாகரிகம் என்னும் பெயரில் நான் பேணிய பூஞ்சைத்தனமும் நியாயம் என்னும் பெயரில் அவர் நிகழ்த்திய அதிரவெடியும் இதைவிடச் சிறப்பாய் உருவகப்பட்டிருக்க முடியாது. இந்தக் கணம் வரை அப்படிம உணர்வுகள் என்னைவிட்டுக் கலைந்துவிட்டதாகச் சொல்வதற்கில்லை. மாறாக அது என்பக்கத்து நியாயமாய் ஒரு கோட்பாட்டுக் கவசம் பூண்டு கொண்டுவிட்டது.

நட்பற்ற சூழலை எதிர்கொள்ளும் ஒரு நிராதரவானவன் தன் எதிராளிக்கு மனிதார்த்தத்தைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தனது இருத்தலை எதார்த்த தளத்தில் உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதான கோட்பாடு அது. அடங்க மறுப்பதும் திருப்பியடிப்பதுமான எதிர்த்தாக்குதலின்றி சமத்துவமே சாத்தியமில்லை என்னும் நடைமுறை புலப்பாட்டுக்குப் பின்னும் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பதைக் காட்டுமிராண்டித்தனமாகவே பாவித்தொதுக்கும் மீட்சியற்ற கோழைத்தனமாகக்கூட இதைக் கொள்ளலாம். ஆனால் மனித மனத்தின் ஞாபக மடிப்புகள் இப்படியாகத்தான் அர்த்தங்களைச் சேமிக்கின்றன, மனிதர்களைத் தகவமைக்கின்றன என்பது என் சிக்கலுக்கு சிறப்பு சேர்க்கும் சாட்சியங்களாகின்றன.

இவரது எழுத்துகள் ஒன்றைத் தெளிவாகச் சொல்வன: வெகு நாசுக்காக நவீன இலக்கியம் படைப்பதாகப் பாசாங்கு செய்யும் பம்மாத்து வேலையெல்லாம் இவருக்கு வேண்டாத பொழுதுபோக்குகள். எதிராளியை மட்டை யடியாகச் சாத்தும் எழுத்து வல்லாண்மையே இவருடைய ஒற்றைத் திரள் வெளிப்பாடு. "என் இலக்கு சரியாக இருக்கும்போது சுட்டுத்தள்ள வேண்டியதுதானே. இடையே பேச்செதற்கு?” என்பது இவரது கறார்த்தனம். இக்கவனங்களூடாக, இவரது எழுத்துகளின் அபூர்வ இலக்கியப் போதவிழ்ப்புகள் சரியாகவம் நிறைவாகவும் உள்வாங்கிக் கொள்ளப் படுகினறனவா என்பது அதிர்ச்சி தரக்கூடிய கேள்வியாகிவிடுகிறது. இவரிடம் உள்ள கதைகள் இவரது வங்கிப் பணி நாட்களை விடவும் அதிகமாக இருக்கக் கூடும். அந்தக் கதைகளும் "நிசத்தைப் போலொரு கற்பனை உண்டுமா!” என்னும்படியாகத் துடிக்கத் துடிக்க வாழ்வைப் பேசுபவை. மொழியின் சாகசக் கலையாக மனதை நெகிழ்விப்பவை.

கணிக்கவும் மதிக்கவும் தெரியும்போது மட்டுமே வைரப் பொடிகள் அரியவையாகின்றன. அல்லாதுபோனால் அவை விடியல் முற்றத்தில் மிதிபட்டழியும் கோலத்துகள்தான் அல்லவா. இவருக்கும் இவரைப் போன்ற சீற்றம் பயிலும் சூத்திர முத்திரையாளர் பலருக்கும் இதுபோன்றதொரு மலிப்படுத்தல்தான் நேர்ந்துகொண்டிருக்கிறது.

இவரைப் பொறுத்தவரை எதிர் அரசியலுக்கான எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மொழிக்காகவும் தர்க்க ஒருங்கிணைவுக்காகவும் சுணங்கி நிற்பவரல்லர். இதில் கவனத்துக்குரிய ஓர் அம்சம், இவரது மொழியில் பெரியார் காலத்தில் நேர்த்தி செய்யப்பட்ட தர்க்க ஒருங்கிணைவு வெகு இயல்பாகப் பொருந்திக் கொள்கிறது என்பதுதான். இந்தப் பின்புலத்தில் இவர் தன்னைத் தனித்துவமாக நிறுவிக் கொள்ளவேனும் எதிராளியுடன் ஓர் உரையாடலை பேணக் கூடியவராக இருக்கிறாரா என்றால் இல்லை. இடம் பொருள் ஏவல் தாக்கங்களுக்கேற்ப மொழிப்படவும் செயல்படவும் அவரவர்க்கும் ஒரு வழி துலங்கும். இது அவருக்குத் துலங்கும் வழி என்பதில் எனக்குக் கொஞ்சம் ஆதங்கம் உண்டு - அதுதான் அந்தப் பழைய நாகரிகப் பூஞ்சைத்தனத்தில் நுரைத்த ஆதங்கம். நம்மைக் காதுகொடுத்துக் கேட்க வைப்பதில் எதிராளியுடன் நமக்கு இணக்கம் வேண்டாம் எனில், ஒன்று நாம் அவனைப் பொருட்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், மற்றொன்று அவனை நம் கட்டைவிரலுக்குக் கீழே அழுத்தி வைக்க வேண்டும். இரண்டுமே காலச்சுழற்சியில் நம்மைத் திருப்பித் தாக்கும் பழி தீர்க்கும் ஆயுதங்கள். ஆகவே, வெல்வதற்காகவேனும் எதிராளியை நாம் அரவணைத்தாக வேண்டும். இல்லையெனில் காற்றில்லாமலும் உயிர் வாழக் கற்றிருக்கும் பார்ப்பனக் கற்றாழைக் குணத்தால் நாம் முழங்கும் நியாயங்கள் யாவும் சூழலை மாசுபடுத்தும் சத்தங்களாகவே மலினப்பட்டுப்போகும். இவரை வாசிக்கும்போது தன்னூற்றாக ஏற்படும் பதற்றத்தில் எனக்கு இந்த எண்ணம் தீவிரப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வெள்ளம் எவ்வளவு வேகமாயிருந்தாலும் மீன்கள் எதிர்நீச்சலைத் தவிர்ப்பதில்லை.

பொது வாழ்வில் பங்கேற்கிற பலருக்கு சங்கமித்ரா ஒரு விஷயத்தில் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்பதை நாம் மறக்காமல் நினைவு கூரவேண்டும். இவர் எதை நம்புகிறாரோ அதுவாகவே இருக்கிறார், அல்லது இருக்க முயல்கிறார். ஒப்புக்காகவும் மெப்புக்காகவும் வாழும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் இது ஓர் அரிய அம்சம். சில மாதங்களுக்கு முன் ஒரு பேராசிரியர் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்தேன். பேராசிரியர் இலட்சியப் பிடிப்புள்ள இயக்கவாதி. அங்கே வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களுமாக இருந்தனர். அவர்களுள் நான் அறிந்தவர்களும் என்னைத் தெரிந்தவர்களும் வெகு சிலரே. ஆனால் அவர்களில் மிகப் பலரும் தமிழ்க் காவலர்களாகத் தங்களை பொதுக்களத்தில் முன்னிறுத்திக் கொள்கிறவர்கள். அவர்களூடாக நான் தொட்டுச் சென்ற ஒரு முக்கால் மணி நேரத்தில் ஒரு விஷயம் வெகு தூக்கலாக என்னை அந்நியப்படுத்தியது. அதாவது அவர்களில் 80 சதவீதம்பேர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் - பலர் பச்சை அட்டைக்காரர்களாக அல்லது அதற்காகக் காத்திருப்பவர்களாக. பிள்ளைகளை மட்டுமல்லாமல் தங்கள் பெண்களையும்கூட அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கே பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் பலர். இது ஒன்றும் தற்செயலாய் நேர்ந்துவிடக்கூடியதில்லை.

தங்கள் மக்களை மொழி ரீதியாகவும் குழந்தைப்பருவத்திலிருந்தே அதற்காக நேர்த்தி செய்தவர்கள் அவர்கள். இம்மை அறங்களில் தங்கள் இலட்சியங்களையெல்லாம் ஊறப்போட்டுக் கொண்டிராத விளாம்பழங்களாயிருந்து வென்றெடுத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, மதவாத தேசபக்தர்கள், மார்க்சியவாதக் கட்சிக்காரர்களென்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லாருமே ஒருவகையில் அமெரிக்காவுக்காக இங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அ. மார்க்ஸ் ஒருமுறை எனக்கெழுதிய கடிதத்தில் "கல்வி விஷயத்தில் என் குழந்தைகள் என்னைக் குற்றம் சொல்லக்கூடும்” என்று எழுதியிருந்தபோது அவர் தன்னளவில் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே அப்போது எனக்கு முக்கியமாகப்பட்டது. ஆனால் நடைமுறையில் பொய்யர்களோடுதான் லட்சியவாதிகள் குற்றவாளிகளாய் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது என்பதை அந்தத் திருமண விழாப்போதில் கண்டு நசுங்கும்படியாயிருந்தது.

நான் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் குறுக்கிட்டால் அவர்கள் இருவரும் பிரித்துவைத்த உதடுகளோடு தங்கள் அமெரிக்கப் பிள்ளைகளைப் பற்றிப் பேசத் தொடங்குவதும், மேலும் மேலும் அது போன்ற குறுக்கீடுகள் தொடர்வதுமாக அந்த இடத்தில் என் இருப்பு வெகு அற்பமாகவும் அந்நியமாகவும் விலக்கப்படுவதாயிருந்தது. இந்த அமெரிக்கப் பிள்ளைகளின் தந்தையர்களுக்குத் தமிழ்தான் மூச்சு. ஓய்வுகால மூச்சு. பென்ஷனர்கள் எந்த இசமும் பேசக்கூடாது. எந்த இயக்கத்திலும் பங்கேற்கக்கூடாது. மீறினால் பென்ஷனை இழக்க நேரிடும் என்று ஒரு விதி போட்டால் இவங்கள் தங்கள் தமிழ்ப் பாதுகாப்புணர்வைக் கழிவறைக் கருவூலமாக்கிக் கொள்வார்களாயிருக்கும். சொல்ல மறந்துவிட்டேன் - அவர்களில் பெரும்பாலோர் ஓய்வூதியக்காரர்கள் - என்னைப்போல.

இத்தகைய பின்புலங்களில்தான் சங்கமித்ரா போன்றவர்கள் கண்கூசும்படி வெயிலாடிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ நிழல்களைப் போல நிச்சயமற்றவர்களாயிருக்கிறோம். வெட்கப்படுவதுகூட நமக்கு வேண்டாத வியர்க்குறு போலாகிக் கொண்டிருக்கிறது. சங்கமித்ராவின் எழுத்துகளையெல்லாம் தொகுத்தால் பெரியார் பேசியதற்கும் எழுதியதற்கும் சமமாகக்கூட வரலாம். ஆனாலும் பெரியார் என்னும் குருவுக்கு சங்கமித்ரா ஒரு மெய்யான சீடர் மட்டும்தான். இந்த சீடத்தனம்தான் பெரியாருக்கு இணையாக வினையாற்றிய குத்தூசி குருசாமி போன்றவர்களையெல்லாம் காணாமல் போக்கிவிட்டது. சீடனுக்குள்ள உறவு குருவின் கருத்துகளோடுதான் என்றாலும் குருவின் மரணமே சீடன் நிற்பதற்கான ஆதார இடம்; அதாவது விளையாட்டுக் களம். மனிதர்கள் சமூகமாகத் திரண்டதன்பின் பல்கும் குறைகளினூடாக, வழிகாட்ட வந்தவர்களை அவர்களது பௌதிக மரணத்தோடு முற்றுப்பெற்றவர்களாகத் தீர்த்துக் கட்டுவதிலிருந்துதான் அவர்கள் மதங்களாக வடிவமைக்கப்படுவதும் சீடர்கள் போதகர்களாகப் பரிணாமம் கொள்வதும் நேர்கிறது.

அந்த நிலையில் குருவின் கருத்துகளும் கருத்தேற்புகளும் பின்தள்ளப்பட்டு குருவின் முற்றுப்பெற்ற பௌதிக பிம்பமே போற்றுதலுக்குரியதாகிவிடுகிறது. இந்த பிம்பம் குருவின் பௌதிகச் சொந்தங்களோடு வரலாற்றுறவு பேசுகிறது. குரு விமர்சிக்கப்படும்போது, அவர் கருத்தின் மேல் அக்கறைகொள்ளாத - ஆனால் பௌதிகச் சொந்தங் கொண்டாடும் சீடனுக்கு விமர்சகன்மேல் ஆத்திரம் வருகிறது. குருவின் கருத்தைப் புறக்கணித்ததற் காகத் தன்மேல் கழிவிரக்கம்கூடத் தோன்றுவதில்லை. அண்மைக்காலங்களில் பெரியார் விமர்சிக்கப்பட்டபோது பெரியாரியவாதிகள் வெளிப்படுத்திய நியாயமான கோபத்தினூடே பெரியார் மதமாகச் சுருங்கும் ஆபத்தான கூறுகளும் பின்புலத்தில் வெளிப்பட்டன. இன்றைய பெரியாரியர்களில் பெரும்பாலோர் அமெரிக்கப் பிள்ளைகளின் தமிழ்ப் பெற்றோர்களைவிடத் தரத்திலும் குணத்திலும் பெரிதாக வேறுபட்டவர்களல்லர். தன்னளவில் சரியாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஒப்புக்கு வாழ்கிறவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காகக்கூட பொறுப்பேற்க விரும்பாதவர்கள்.

பெரியார் போன்றவர்களுக்கு நாம் ஏன் சீடர்களாயிருக்க வேண்டும்? ஏன் நாம் அவர்களின் தொடர்ச்சியாய் இருக்கக்கூடாது? பெரியார்களின் பௌதிக எல்லை அறுவடை செய்யப்பட்ட கருப்பங்கழிகள்போல. இதில் எளிமைப்பட்டுப்போகும் சீடத்தனம் என்பது காடு கொள்ளாமல் கழிக்கப்பட்டுக் கிடக்கும் தோகைகள்போல. ஒரு தீப்பொறியில் பொசுங்கி அடங்குபவை. அங்கே மிகுந்திருப்பவை அடித்தூர்கள். சரசரவென்று முளைப்பெடுத்து கருப்பங்காட்டை இன்னொரு மகசூலுக்கான பச்சைவனமாகப் போர்த்துக்கொள்ளும் கருத்துத் தூர்கள். நாம் ஏன் அந்த மறு மகசூலாய் இருக்கக்கூடாது? இந்த மறு மகசூல்கள் ஒவ்வொரு விளைச்சலிலும் நிலம் நீர் காற்று வெளிகளால் புதுப்பரிமாணங்களைப் பொதிந்து கொள்ளக்கூடியவை. இந்தச் சுழற்சி சாகுபடி எங்கேயும் முற்றுப் பெறுவதில்லை. இதில் பெரியார்கள் புத்துயிர்க்கப்படுகிறார்கள். காலத்தால் நேர்த்தி செய்யப்படுகிறார்கள். தொடர் உரையாடலாய் செழுமைப்படுத்தப்படுகிறார்கள். சங்கமித்ராக்கள் அந்த நேர்த்தியின் பரிமாணங்களாக வேண்டியவர்கள்.

Monday, April 2, 2012

தெரிந்த முகங்கள்.. தெரியாத செய்திகள்

* மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனர்டோ டா வின்சிக்கு மோனலிசாவின் உதடுகளை
வரைவதற்கு மட்டும் 12 வருடங்கள் ஆனதாம்.

டா வின்சி ஒரு கையால் ஓவியம் வரைந்துக் கொண்டே இன்னொரு கையால் எதையாவது
எழுதும் ஆற்றலும் உள்ளவராம்.

மோனலிசா ஓவியம் 1503ல் முடிக்கப்பட்டது.


* ஜான் கென்னடி 20 நிமிடங்களில் 4 தினசரி செய்திதாள்களை வாசித்துவிடுவாராம்.

* பில் கிளிண்டன் இடது கை பழக்கம் உள்ளவராம்.

*ஹிட்லர் பெர்லின் நகரத்தின் பெயரை ஜெர்மானியா என்று பெயர் மாற்றம் செய்ய
நினைத்திருந்தாராம்.
(நல்லவேளை.. பெர்லின் தப்பியது.!!)

*ஹிட்லர் 1936ல் ஒலிம்பிக்கின் போது ஜெஸ்ஸி ஓவனிடம் கை குலுக்க மறுத்துவிட்டார்,
காரணம் ஓவன் ஒரு கறுப்பர் என்பதால்.


*மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டு பயம்.!


* சார்லி சாப்ளின் தன் 4ஆம் வயதிலேயே மேடையில் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்துவிட்டார்.
1920-30 களில் அவர் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் நிகழ்ச்சி நடத்த
வந்தாராம். அப்போது மட்டும் அவருக்கு ரசிகர்களிடமிருந்து வந்திருந்தக் கடிதங்களின்
எண்ணிக்கை சற்றொப்ப 73,000.

*சார்லி சாப்ளின் போல வேடமிட்டு வரும் மாறுவேடப் போட்டியில் ஒரு முறை
அவரே கலந்து கொண்டார். ஆனால் பாவம்... அவருக்கு கிடைத்தது 3 ஆம் பரிசு தான்.


*உங்கள் பிறந்தநாளை இந்த உலகத்தில் இருக்கும் 9 மில்லியன் பேர் கொண்டாடுவார்கள்.
ஏனேன்றால் அன்றுதான் அவர்களுக்கும் பிறந்த நாளாக இருக்கும்.


Sunday, March 25, 2012

உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் ஆறா வடு




சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை.
அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும்
அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு
தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது.

போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும்
மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த
ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம்,
கதை, கவிதை எல்லாமே எதற்காக...? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து
கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும்
அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான
பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன.

சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல்
அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால
சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது.
ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில்
எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு
வரிகளும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் சார்ந்து (நாவலில் இயக்கம் என்ற சொல் பொதுவாக விடுதலைப்
புலிகள் இயக்கத்தையே குறிக்கிறது) செயல்படும் சூழலும் இயக்கத்திற்கு
எதிரான நிலையில் செயல் பட வேண்டிய கட்டாய சூழல் சிலருக்கு
ஏற்பட்டதையும் அந்தச் சூழல்களை இயக்கம் எவ்விதமாக அணுகியது
என்பதும் மிகவும் தெளிவாக பதிவாக்கி இருக்கிறது.

காதல் செய்கின்ற தனிமனித உரிமைக்குத் தடையாக இயக்கம் இருந்ததா?
என்ற குற்றச்சாட்டுக்கும் திருமணத்திற்குப் பின் இயக்கத்தை விட்டு
விலக அனுமதிக் கோரும் இளைஞனின் நிலைமை என்னவாக
இருந்தது என்பதையும் போகிற போக்கில் நண்பன் ஒருவனின் அனுபவமாக
சொல்லிச் செல்கிறார். "விலகுவதற்கான துண்டைக் கொடுத்தால் பங்கர்
காலத்தையும் உள்ளிட்டு எப்படியும் மூன்று வருடங்களுக்காவது பனிஸ்மெண்ட்
கிடைக்கும். அப்படியொன்றை நினைத்துப் பார்க்க விசர் பிடிக்குமாற்போல
இருந்தது. முன்னர் சண்டைகளில் அறிமுகமான நண்பனொருவன் திருமணத்தின்
பின் விலகுதற் பொருட்டு இப்பொழுது த்ண்டனை அனுபவித்தப்படி இருந்தான்.
தொடக்கத்தில் அவனை ஆறு மாதங்கள் பங்கரில் போட்டார்கள். உடல் இளைத்து
கண்கள் உட்சென்று அடையாளம் தெரியாதபடிக்கு உருமாறியிருந்தான்."
அவனைச் சந்தித்த போது அவன் கேட்டான்... "காதலித்தது பிழையாடா மச்சான்"
என்று. இந்தச் சந்திப்பின் தாக்கத்தில் அமுதனுக்கு தன் காதலுக்குத் தடையாக
"ஒரு பெரும் தனிக்கோடு துப்பாக்கியைப் போல இதயத்தைக் குறுக்கறுத்துப்
போனது. அந்தக் கோட்டினை நான் இயக்கம் என்று குறித்தேன்" என்று விவரிப்பது
குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் இன்னொரு முக்கியமான செய்தியையும்
போகிற போக்கில் சொல்லிச் செல்கிறான அமுதன். அதாவது அவன் அகிலாவைச்
சந்திக்கும் முன் நண்பனுக்குச் சொன்ன பதிலும் அகிலாவைச் சந்தித்து காதல்
வயப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தப் பின் அவனுக்குள் ஏற்படும்
மேற்கண்ட உணர்வும் மிகவும் நுண்ணிய கவனிக்கத்தகுந்த மாற்றம் .
எந்த ஒரு தனிமனிதப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் போது அந்தப் பிரச்சனையுடன்
நேரிடையாக சம்பந்தப் பட்டவனின் பார்வையை விலக்கி வைத்து
அமைப்பு சார்ந்தோ இயக்கம் சார்ந்தோ எடுக்கின்ற கூட்டு முடிவுகளும்
பொத்தம் பொதுவான முடிவுகளும் எவ்வளவு சிக்கலானவை என்பதையும்
அவற்றால் அவன் பிரச்சனைக்கான தீர்வை முழுமையாகக் கண்டடைய முடியாது
என்பதையும் வாசகனுக்கு உணர்த்துகிறது.

ஈழப் போராட்ட வரலாற்றை எழுத வரும் எவராலும் இந்திய அமைதிப்படை
ஈழ மண்ணில் நடத்திய பாலியல் வன்கொடுமைகளை எழுதாமலேயே இருக்க
சாத்தியமில்லை என்பதற்கு இந்த நாவலும் விதிவிலக்கல்ல. தேவியின் கதை
இந்த நாவலில் இடம் பெற்றிருப்பது இதற்காகத்தான்.

போர்க்காலத்தில் உயிருடன் தப்பித்து பிழைக்க வேண்டும் என்று அலையும்
ஓரிளைஞனும் அவன் குடும்பமும் அவன் காதலியும் எம்மாதிரியான
பிரச்சனைகளை எல்லாம் அனுபவித்தாக வேண்டும் என்பதை
தன் அனுபவமாக்கியோ அல்லது தன் சுய அனுபவத்துடன்
தான் கண்டதைக் கேட்டதை அறிந்ததை எல்லாம் சரியான அளவில்
சேர்த்துக் கொடுத்திருப்பதில் ஆறாம் வடு வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும்
இப்படைப்பின் இலக்கிய அந்தஸ்தை இக்கதையின் முடிவாக அமையும்
குறியீடு தீர்மானித்திருக்கிறது. .

கதை முடிவில் , மரணிக்கும் தருவாயில்
அமுதன் தன் செயற்கை காலைக் கழட்டி விட அது மிதந்து சென்று
இத்திரிஸ் கிழவனின் கைகளில் கிடைப்பதாக முடித்திருப்பது.
இத்திரிஸ் எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன்.
சூடானில் தப்பித்து வந்து வாழ்ந்தவன்.
" ஓ வழிப்போக்கனே, உன் வழியில் என் எரித்திரிய தாயைப்
பார்த்தால் கூறு, அவள் விடுதலையை நானே பெற்றுத் தருவேன் என்று"
என்ற பாடல் வரிகளை எப்போதும் பாடிக்கொண்டிருப்பவன்.
ஒரு செயற்கை காலுக்காக காத்திருப்பவன்... அவன் கையில்
கிடைக்கிறது அமுதனின் பைபர் க்ளாஸினால் ஆன வழுவழுப்பான
செயற்கை கால்"
விடுதலைப் போராட்டங்களை எவருடைய மரணமும் நிறுத்திவிட முடியாது.
போராட்டத்தில் காலை இழக்க வேண்டி வரலாம், செயற்கை காலுடன்
பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம், அப்போதும் கூட பயணத்தில்
வரும் இடையூறுகளால் சென்றடைய வேண்டிய இலக்கை அடையும்
முன்பே தனி ஒருவனின் பயணம் மரணத்தில் முடிந்துப் போகலாம்,
ஆனால் விடுதலை ? எப்படியும் வந்தே தீரும். இளைஞனால் முடியாததை
கிழவன் செய்து விட முடியும், ஆணால் சாதிக்க முடியாததை பெண்ணால்
சாதித்துவிட முடியும்... விடுதலைக்கான போராட்டங்கள் எல்லா
சமூகத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்ட எல்லா மண்ணிலும்
அந்த மனிதர்களின் வாழ்க்கையில் தொடர் சங்கிலியாகத் தொடரும்,
விடுதலை வந்தே தீரும்" இப்படியான பன்முகப் பார்வையைக்
காட்டும் குறியீடாக வருகிறது இத்திரிஸ் கிழவனும் அவனுக்கு
கிடைத்த இளைஞன் அமுதனின் செயற்கை காலும்.

கள்ளத்தோணியில் தப்பித்துச் செல்லும்
ஈழத்து தமிழரும் அவருடன் சிங்களவர்களும்.
தமிழர்கள் மட்டுமே தப்பித்து செல்ல பயணித்தார்கள் என்று காட்டாமல்
அவர்களுடன் பத்து சிங்களவர்களும் இருந்ததாகச் சொல்வதன் மூலம்
உயிர்ப்பிழைக்க தப்பித்து ஓட வேண்டிய கட்டாயம் அந்தச் சமூகத்திற்கும்
ஏற்பட்டது என்பதையும் உணர்த்திவிட முடிகிறது


உயிர்வாழ்தலுக்கான தப்பித்துச் செல்லும் வாழ்க்கையில் சொந்த
நாட்டில் கையும் களவுமாகப் பிடிப்பட்ட போது போலீஸ்காரன்
கேட்கிறான் லஞ்சமாக பல இலட்சங்கள். கடவுச்சீட்டு வாங்க
ஏஜன்ஸிக்காரன் கேட்கிறான பல இலட்சங்கள். அதிலும் பலர்
ஏமாற்றிவிடுகிறார்கள். இதை எல்லாம் தாண்டி கள்ளத்தோணியில்
ஏறி இத்தாலிக்கு கொண்டு செல்வதாகக் கூறி பயணிக்கும் போது
சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களின் சொற்ப பணத்தையும்
கொள்ளை அடிக்கிறார்கள். வழி நெடுக தப்பித்தலுக்கான இவர்கள்
பயணத்தில் இவர்கள் ஏமாற்றப்படுவதும் தண்டிக்கப்படுவதும்
கொள்ளை அடிக்கப்படுவதும் தொடர்கிறது என்பதை
கதை நெடுக ஒவ்வொரு அனுபவங்களின் ஊடாகவும்
குறியீடாகவும் எழுதிச்செல்கிறார் சயந்தன்.


இயக்கம் குறித்த சில கருத்துகளை விமர்சிப்பதற்கென்றே மொழிபெயர்ப்பாளராக
வரும் நேரு அய்யாவின் கதாபாத்திரம் , நேரு அய்யாவின் கருத்துகளை
ஆரம்பத்தில் வெறுப்பதும், நேரு அய்யா யாருக்காவும் காசு வாங்கிக்கொண்டு
மொழி பெயர்த்துக் கொடுப்பார் என்று விமர்சிப்பதும் என்று ஆரம்பித்து
கதைப் போக்கில் நேரு அய்யா சொன்ன சில கருத்துகளை நினைத்துப்
பார்க்கும் விதத்தில் கருத்து விமர்சனப் பார்வையை முன்வைப்பதும்
மிகச்சிறப்பாக இப்படைப்பில் கையாளப்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழ்ச் சமூகத்தில் சாதியம் கெட்டிப்ப்ட்டிருந்தது என்பதையும் தவறாமல்
பதிவு செய்திருக்கிறது இந்நாவல்.
பள்ளியில் நாடகம் அரங்கேற்றிய நிகழ்வில் பண்டாரவனியன் திட்டமிட்டு
பழிவாங்கும் வகையில் வசனத்தை மாற்றிப்பேச அதற்கு அமுதனும் கெட்ட
வார்த்தைகள் பேச, இறுதியில் பள்ளி அதிபர் அமுதனை இழுத்துச் சென்று
உதைப்பதுடன் உதிர்க்கும் வார்த்தைகள் "
"எளிய பறை நாயே, நீ மேடையில் தூசனம் கதைக்கிறியோ..." உணர்த்துகிறது.

யாழ்ப்பாணத்தில் இங்கிலீஷ் கடைப்பெயர்கள் எல்லாம் தமிழுக்கு மாறிக்கொண்டிருந்தன
என்பதை கேலியும் கிண்டலுமாக பதிவு செய்ததுடன் சேர்த்தே பாக்டரியில் சம்பளத்திற்கு
வேலை செய்த ஏழு பேர் கருகிச் சாம்பாலனதையும் அவர்களுக்கு இயக்கம்
நாட்டுப்பற்றாளர் விருது கொடுத்தது என்றும் அதே தொனியில் எழுதியிருப்பது
இயக்கத்தார்கள் வாசித்தால் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.

க்தை நெடுக இயக்கம், இயக்கத்தின் நடவடிக்கைகள், அதனால் நேரடியாக
மறைமுகமாகவோ பாதிக்கப்படும் சமூகம், தப்பித்து உயிர்வாழ்தல் பொருட்டு
திசை தெரியாமல் பயணித்த மக்கள்... கதைப்போக்கில் இயக்கம் குறித்தும்
தமிழ்ச் சமூகம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும்
வைத்திருந்தாலும் அதனால் இயக்கத்தின் மீது வெறுப்போ ஆத்திரமோ
வாசகனுக்கு வரவில்லை. ஏனேனில் இயக்கத்தில்
* இயக்கத்தில் சாதியம் இருந்ததாக தெரியவில்லை.
*இயக்கம் பெண்களை , (சிங்களப் பெண்களையும் கூட)பாலியல் வல்லாங்குச்
செய்ததாக எவராலும் சொல்ல முடியவில்லை.
*இயக்கம் போரில் ஊனமுற்ற எவரையும் பாரமாக நினைக்கவில்லை.

எப்போதும் இயக்கம் குறித்தப் பெருமைகளாகப் பேசப்படும் இச்செய்திகளை
ஆறாவடுவும் உறுதி செய்திருக்கிறது.

-----

நூல்: எழுத்தாளர் சயந்தன் எழுதிய ஆறா வடு, (நாவல்)
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
பக்: 192
விலை: ரூ 120/

Friday, March 9, 2012

சர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்



மும்பையில் கடந்த 3 முதல் 9 வரை (3 - 9 பிப் 2012) ஆவணப்படங்கள், குறும்படங்கள்,

அனிமேஷன் படங்களுக்கான (12th MIFF) 12 வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது.

அரபிக்கடலோரம், ஜிலுஜிலுனு காற்று, நான்கு திரையரங்குகள் ஒரே காம்பவுண்டில்.

மராத்திய மாநில அரசும் இந்திய தகவல் ஒலிபரப்பு துறையுடன் இணைந்து நடத்தும்

நிகழ்வு... இதில் பார்த்த பல படங்களின் பெயர்களும் வாயில் நுழையாத டைரக்டர்களின்

பெயர்களும் மறந்துவிடலாம். அல்லது நீங்கள் அப்படி எல்லாம் மறந்துவிடக் கூடாது என்று

அவர்கள் பார்க்க வந்த அனைவருக்கும் வழங்கிய திரையிடப்பட்ட ப்டங்கள் குறித்த

333 பக்கங்கள் கொண்ட கையேடு பழைய பேப்பருடன் சேர்ந்து

பழையன கழிதலாகிவிடும். ஆனால் பார்த்த சில படங்களும் சில காட்சிகளும்

அந்தக் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கங்களும் எப்போதும் நமக்குள்

வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.




ராஜேஷ் எஸ் ஜாலாவின் "படிக்கட்டுகளில்" (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில்

மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது.

ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையைப் போல ! சுருங்கிய தோல்கள், திறந்திருக்கும்

முதுகுப்ப்பகுதி, படிக்கட்டுகளில் மெதுவாக ஏறும் அவள் கால்கள், காமிரா அவள்

கால்களைக் காட்டும்.. அவள் ஏறிப்போகும் சபதம் மட்டுமே .. ஏறிப்போன்வள் சன்னல்

வழியாக வீதியைப் பார்க்கும் காட்சி இன்னொரு கவிதையாக விரியும்.

சன்னலோரம், புனித கங்கைக்கரையின் இரவு நேரம், அவள் பார்க்கும் காட்சி..

இப்போதும் அவள் முதுகு மட்டுமே தெரியும்... அவள் பார்க்கிற காட்சியை

அப்படியே நமக்கும் காட்டுகின்ற விதத்தில் காமிரா நகரும். வீதியில் சன்னலுக்கு

கீழே ரிகார்ட் டான்ஸ் இளம் பெண்கள் ஆடிக்கொண்டிருப்பார்கள், சுற்றி மக்கள்

கூட்டம் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும். அதற்கு இன்னொரு பக்கத்தில்

மனிகர்னிகா என்ற எப்போதும் பிணங்கள் எரிந்துக் கொண்டிருக்கும் மயானம்,

காட்சி மேலிருந்து பார்க்கும் அவள் கோணத்தில் பார்வையாளருக்கும் தெரியும்..

இந்தி - போஜ்பூரியில் தயாரிக்கப்பட்ட 29 நிமிடங்கள் ஓடிய ஆவணப்படம்

வாழ்க்கை, மரணம், உடல், ஆன்மா (ஆவி), கங்கை, புனிதம், நம்பிக்கைகள்.

கேள்விக்குட்படுத்தி, மரணத்திற்காக காத்திருக்கும் வாழ்க்கையை

அற்புதமான ஒளிச்சேர்க்கையில் கவித்துவமாகப் பேசியது.







ஆப்கானிஸ்தான் குறும்படம் "உறைவிடம் " ( shelter) இது அவருடைய முதல் அனிமேஷன்

படம் . 6 நிமிடங்களில் அவர் காட்டிய காட்சியும் கருத்தும் பக்கம்

பக்கமாக எழுதக்கூடிய அளவுக்கு கருத்துகளை உள்ளடக்கியதாக இருந்தது.

வீடில்லாத ஓர் அனாதைச் சிறுவன், தெருவில் ஒரு மரச் சட்டத்திற்குள் தலையையும்

உடலில் பாதியையும் மறைத்துக் கொண்டு மரத்தடியில் உறங்கும் காட்சி. அந்த மரத்தில்

ஒரு ப்றவைதான் அவன் நேசிக்கும் நண்பனாக உறவாக இருக்கிறது. இரவில் தூரத்தில் தெரியும்

அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டென விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இருள் சூழ்ந்தக்

கருமையான இரவு.. தூரத்தில் பறக்கும் விமானங்களில் ஓசை.... குண்டுகள் வெடிக்கும் சத்தம்..

அவவளவுதான்...போரின் அழிவு... மழை பொழியும் காட்சி.. சிதைந்து கிடக்கும் அந்த

மண்ணில் நெளிந்து ஊர்ந்து செல்லும் ஓரு புழு, ஒரு வண்டு...போரின் பேரழிவுக்குப்

பிறகும் உயிர்ப்புடன் இயங்குதலின் அவசியத்தைக் காட்டுவதாகவும் எல்லாம் எப்போதும்

எதனாலும் அழிக்கப்படுவதில்லை என்ற தத்துவத்தையும் அவரவர் கண்ணோட்டத்தில்

இக்காட்சி உணர்த்தியது.




கிளைகளில்லாத மெட்டை

மரத்தில் காணவில்லை அவன் பறவையை. மெதுவாக அவனருகே மீண்டும் அந்தப் பறவையின்

கீச்கீச் ஒலி... அவன் இப்போது எழுந்து நடக்கிறான். ஒரு காலுடன் கம்பு ஊன்றிக்கொண்டு.

குண்டு தாக்குதலில் அவன் ஒருகாலை இழந்துவிட்டான் என்பது நமக்குப் புரிகிறது.

அவன் அந்த இடத்தை விட்டு மரக்கம்பை ஊன்றி நடந்துச் செல்கிறான், அவன் நேசித்த

அந்தப் பறவை அவன் அதற்காக உருவாக்கி கொடுத்திருக்கும் கூட்டிலிருந்து கத்திக்

கொண்டிருக்கிறது. பட்டுப்போன அந்த மொட்டை மரக்கிளையில் அவனுடைய இன்னொரு

காலணி - ஷூ இப்போது அந்தப் பறவைக்கான கூடாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அதிகச் செலவில்லாமல் பார்ப்பவர்களை மருட்டாத மிகவும் சாதாரணமான அனிமேஷன்

காட்சிகளுடன் பார்வையாளன் மனசை விட்டு நீங்காத ஒரு குறும்படத்தைக் கொடுக்க

முடியும் என்பதையும் நமக்கு உணர்த்தி இருக்கிறது இக்குறும்படம்.




தோழர் எஸ். சோமீதரன் நெறியாள்கையில் 'முல்லைத் தீவு சகா". ஏற்கனவே குறுந்தகடில்

பார்த்திருந்ததால் சோமிதரனுடன் படம் ஒலிபரப்புக்கு முன்பே அதுகுறித்த ஐயப்பாடுகளையும்

ஊகங்களையும் பேசிக்கொள்ள முடிந்தது. 2006ல் முல்லைத்தீவில் நடந்த கண்ணகி கூத்தைப்

பார்த்துக்கொண்டிருந்த போது இதுதான் இந்த மண்ணில் நடக்கும் இறுதிக் கண்ணகிக் கூத்து

என்ற எண்ணம் மேலோங்க அதை அப்படியே வீடியோ படமாக்கி இருக்கிறார் சோமி.

அதன் பின் போரின் இறுதி நாட்களில் அங்கிருந்த காலக்கட்டத்தில் சில் காட்சிகளை

எடுத்திருக்கிறார். மற்றும் சில காட்சிகள் ஊடகங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெற்று

அனைத்தையும் முல்லைத் தீவு சகா என்ற பெயரில் ஆவணப்படுத்தி இருக்கிறார்.

'இந்தப் ப்டத்தைப் பார்த்து நீங்கள் ரசிக்க முடியாது' என்ற ஒற்றை வரி அறிமுகத்துடன்

மேடையிலிருந்து இறங்கினார் சோமி. அரங்கு நிறைந்தக் கூட்டம். தாங்கள் வாழ்ந்த காலத்தில்

நடந்த ஓர் இனப்படுகொலையைக் கண்டு மவுனத்தில் உறைந்து போயிருந்தார்கள்

மும்பை சீமான்களும் சீமாட்டிகளும். கண்ணகி கூத்தும் அதில் தொடர்ந்து ஒலிக்கும்

ஒப்பாரி குரலும் முல்லைத் தீவின் கடைசி நாட்களுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை

கண்ணகிக் கூத்தின் கனமான பொருளறிந்தவர்களால் உள்வாங்கிக் கொண்ட அளவுக்கு

பிற மொழிக்காரர்களால் புரிந்துக் கொண்டிருக்க முடியுமா ? என்ற கேள்வி படம் முடிந்து

வெளியில் வரும் போது பூதகாரமாக துரத்தியது. இம்மாதிரி கனமான சமூகப் பிரச்சனைகளை

மொழி எல்லைகள்த் தாண்டி எடுத்துச் செல்லும்போது மொழியை மட்டும் கூரிய ஆயுதமாகக்

கொண்டு காட்சிப்படுத்தி இருப்பதைத் தவிர்த்து வேறு உத்திகளைக் கண்டடைய வேண்டும்.




மனித சமூகத்தை தேசம், மதம் , மொழி என்று பிரிக்கும் எல்லைக் கோடுகளைப் பற்றி

வடநாட்டில் நிறைய கலை இலக்கியப் பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. எல்லைக் கோடுகளால்

அவர்கள்தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்

.ப்ஞ்சாப் பகுதி இந்தியாவிலும் உண்டு, பாகிஸ்தானிலும் உண்டு. ஆனால் வங்கதேச எல்லைக் கோடுகள்

இந்திய மக்களுக்கு கொடுத்திருக்கும் ஊடகங்கள் அதிகம் காட்டாத நாமறியாத ஒரு பிரச்சனை,

எல்லைக் கோட்டருகில் வாழும் விவசாயிகளின் வாழ்விடங்கள் இந்தியாவில், அவர்கள்

வாழ்வாதரமான விளைநிலம் வங்கதேசத்தில்! தினமும் வயலுக்குப் போகும் போதும்

மாலையில் திரும்பும் போது எல்லைக்காவல் படையினர் நடத்தும் சோதனைகள்,

அடையாள அட்டையை ஒருநாள் மறந்து விட்டு வந்துவிட்டால் கூட அன்று வயலுக்குப்

போக முடியாது! அன்றாட வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் இப்பிரச்சனைகள்

நமக்கெல்லாம் புதியது.




திரைப்பட விழாவில் தன் குறும்படம் போட்டிக்கான தரவரிசையில் இடம் பெறவில்லை

என்பதால் தமிழ்நாட்டின் பெண் இயக்குநர் ஒருவர் தன் குறும்படத்தைத் திரும்ப

பெற்றுக்கொண்டதாக திரைப்படக் குழுவினர் பேசிக் கொண்டார்கள். இருக்கலாம்!.

தமிழ் நாட்டிலிருந்து அதிகமான குறும்படங்களோ ஆவணப்படங்களோ வரவில்லை

என்கிற ஆதங்கம் எனக்கும் இருக்கத்தான் செய்தது.
































Wednesday, March 7, 2012

மகளிர் தினமும் காமட்டிபுரமும்


இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில்
செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில்
செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள்
என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர்
ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார்.
அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம்
சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின்
புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள்,
அறிக்கைகள், தொண்டு நிறுவனங்கள் என்று வரிசையாக ஒரு பக்கம்
அணிவகுப்பு நடந்தவண்ணம் இருக்கின்றது.
எனினும் சுதந்திரம் பெற்று சட்டங்கள் மனித உரிமைகள் என்ற தளத்திற்கும்
அப்பால், கற்பு என்ற பெண் ஒழுக்கத்தை அதி தீவிரமாக கொண்டாடும்
இந்திய மண்ணில் இன்னும் இருக்கின்றன வேஷியா கிராமங்கள்.
தமிழில் அப்படியே சொல்வதனால் தேவடியா கிராமங்கள்.அப்படித்தான்
அவை அழைக்கப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 210 கி,மீ தொலைவில் இருக்கும்
வாடியா கிராமம் தான் வேஷியா கிராமம் என்றழைக்கப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்குப் பின் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதியில்(11/3/2012)
தான் முதல் முறையாக இங்கிருக்கும் பெண்கள் 15 பேருக்கு முறைப்படி
திருமண வைபவம் நடக்க இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் தயாராகி
அனுப்பப்பட்ட பின், இத்திருமண நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும்
தொண்டு நிறுவனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவமும்
நிகழ்ந்திருக்கிறது. செய்திகளுக்காக அலையும் இன்றைய ஊடகங்களுக்கு
இச்செய்தி பெருந்தீனியாக இருப்பதும் என்னவோ இந்த ஓரிடத்தில்
மட்டுமே இம்மாதிரி கிராமம் இருப்பது போலவுமான தோற்றம்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மனித இன வரலாற்றின் மிகப் பழமையான இத்தொழில் நடக்காத
மாநில்மே கிடையாது என்பது தான் உண்மை. பாரதமாதாவும் இதற்கு
விதிவிலக்கல்ல.
ஆடலும் பாடலுமாக வாழ்ந்த பெண்கள் பேரரசர்களின் ஆசைநாயகிகளாக
இருந்தார்கள் என்பதும் அவர்கள் அரசியலிலும் பொருளாதரத்திலும்
மிகவும் செல்வாக்குடையவர்களாக விளங்கினார்கள் என்பதும்
வரலாற்றில் மறுபக்கமாக இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஜஹாங்கீர், அவுரங்கசீப் முதல் தஞ்சையை ஆண்ட அரசர்களுடன்
மிகவும் அதிகாரம் செலுத்திய அக்காமார்கள் வரை … …
மும்பையை இன்றுவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தாதாக்களின
காதலிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் ஹூசைன் சைதியின்
மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற சமகால வரலாறுவரை
பாலியல் தொழிலும் பெண்களும் பற்றிய பல்வேறு செய்திகளையும்
அதற்கான காரண காரியங்களையும் அவரவர் பார்வையில்
பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கின்றோம்.
இச்சூழலில் தான் வாடியா கிராமம் குறித்த மேற்கண்ட செய்தி
பத்திரிகை உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்.
இப்பகுதியில் வாழும் 80 சரனியா ஆதிவாசி குடும்பங்களில்தான்
இத்தொழில் த்லைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து போரில் ஈடுபட்ட ரஜபுத்திரர்களின் பிறப்பு விகிதம்
போர் ம்ரணங்கள் காரணமாக மிகவும் குறைந்த நிலையில் குழந்தை
இல்லாத பெண்ணுடன் , அவள் விருப்பத்துடன் இன்னொரு ஆண்
உடலுறவு கொள்ளவும் குழந்தையைப் பெற்றெடுக்கவும் இச்சமூகம்
ஏற்படுத்திக்கொண்ட ஒரு சடங்காகவே ஆரம்ப காலத்தில் இம்முறை
இருந்தது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால்
அம்மாதிரி ஏற்பாடுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு கைவிடப்பட்ட
நிலையில் இப்பழக்கம் மட்டும் மாறாமல் அச்சமூகத்தில் இருந்ததாகவும்
பின்னர் அதுவே அவர்களுககான தொழிலாக மாறியதும்
அச்சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் இத்தொழில் செய்ய
நிர்பந்திக்கப்பட்டதும் நிக்ழ்ந்தது.
கொடா வழக்கம் , (goda system) என்றழைக்க்ப்படும் வழக்கத்தில்
நாக்ரா செருப்பை அப்பெண்ணின் படுக்கையறை வாசலில் வைத்திருந்தால்
அப்பெண் வேறொரு ஆடவனுடன் படுக்கையறையில் இருக்கிறாள் என்பதை
உணர்த்தும். அதிலும் குறிப்பாக அப்பெண்ணின் கணவனுக்கு இம்முறையால்
இது அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாக தெரிகிறது.
அரச ப்ரம்பரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், நிலக்கிழார்கள்
முதல் இன்றைய அரசியல் வாதிகள், தாதாக்கள் வரை இதில் அடக்கம்.
குஜராத் அரசாங்கம் 208 ஏக்கர் நிலத்தை இச்சமூகத்தின் ந்லத்திட்டத்திற்கு
கொடுத்து உதவியது. ஆனால் அத்திட்டமும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
இத்தொழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது.
ஒவ்வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை இப்பெண்களின்
படுக்கையறைக்கு வருகிறார்கள், மாதவருமானம் 2000 வரை
இதன் மூலம் இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.
பாரிய பெண்கள், நாட் பெண்கள், கொல்டா & டாம் பெண்கள், டெராடூனிலிருக்கும்
ஜானுசர், வடகாசியிலிருக்கும் ரபைய் பெண்கள் என்று பல்வேறு ஆதிவாசி
இனக்குழு பெண்கள் தங்கள் பெற்றொரால், கண்வனால், சகோதரனால்
இத்தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். 1000 ரூபாய் கடன் வாங்கி
இவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்பவன் இரண்டொரு ஆண்டுகளின்
வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் இப்பெண்களை
ஆடு மாடுகளைப் போல விற்றுவிடுகிறான். வாங்கியவன் பயன்படுத்திவிட்டு
அவனும் விற்றுவிடுகிறான், இப்படியாக இந்த விற்பனைச் சங்கிலி மாநில
எல்லைகளை மட்டுமல்ல, எல்லைக்கோடுகளைத் தாண்டி பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் என்று நீண்டு கொண்டே போகிறது
வாங்குபவன் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் விற்பனையையும்
எந்த ஒரு சட்டமும் தடை செய்துவிட முடியாது.! பெண் விற்பனைப் பொருளா?
கேட்காதீர்கள்… விற்கப்படுகிறாள் என்பது தான் உண்மை.
இந்தக் கசப்பான உண்மையை கற்பொழுக்கத்தை த்லையில் வைத்துக்
கொண்டாட கற்றுக் கொடுத்திருக்கும் இசசமூகம் அவ்வளவு எளிதில்
வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை.
அத்னால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான
ஆயுள்காப்பீடு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட
வேண்டும் என்ற குரல் எழுந்தப் போது அப்படிக் குரல் கொடுப்பவர்களை
எல்லாம் வேசியராக விமர்சிப்பதன் மூலம் தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டது நம் பண்பாடு..
இதோ அவள் பேசுகிறாள்:
.
உங்கள் கற்பை பிரசவித்தக்
கருவறையில் தான்
நானும் பிறந்தேன்.
உங்கள் கண்ணகி
என்னுடன் பிறந்தவள்
என்பதால்
எனக்கு எதுவும்
பெருமை வரப்போவதில்லை.
ஏகபத்தினி விரதனாக
உங்கள் ஸ்ரீராமனை
கட்டாயப்படுத்தியக்
காரணத்தாலேயே
சீதை நான்
பாஞ்சாலியாகப் பிறந்து
பரிதவித்தேன்
உங்கள் பாண்டவர்பூமியில்
கற்பு(உ)டன் பிறந்த
என்னை
இருட்டடிப்பு
செய்வதன் மூலமே
தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டன
உங்கள் காவியங்களும்
கதைகளும்.
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் ஆதிசிவன்.
இப்போது வந்துப் போனவன்
அவன் வாரிசுகளின்
வப்பாட்டி பேரன்
காமவேட்டையில்
கிழிந்து தொங்கும் யோனிகளுக்கு
எப்போதுமே வயதாவதில்லை!
என் பெயர் பத்ரகாளி
என்றாலும் பயப்படாதீர்கள்
என் பெயருக்கும்
உங்கள் தேவிக்கும்
சம்பந்தமே இல்லை.
பாரதநாடு பழம்பெரும்நாடு
அதையும்விட
பழமையானது
என் தொழில்
என் மூலதனம்
என் சந்தை
என் கதை.
நான் -
உங்கள்
பத்தினிக்கு முன்பிறந்த பரத்தை.
பெண்கள் தின வாழ்த்து சொல்லும்
பெண்டீரே..
எனக்காக நீங்கள் போராட வேண்டாம்
கற்புடைய உங்கள் கணவன்மார்
உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும்
அபாயத்திற்கு நீங்கள்
அச்சப்படுவது நியாயம்தான்.
காந்திய தேசத்தில்
ஆண்டுக்கு ஒருமுறையாவது
மதுவிலக்கு இருப்பது போல
இன்று மட்டுமாவது
எனக்கும்
விடுமுறை வேண்டும்
“மகளிர்தினம் கொண்டாட”
——————————

Monday, March 5, 2012

வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்

காங்கோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரியநாடு. இந்த நாட்டின் மண்வளம் கொள்ளை அடிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பெயரிடப்படாத யுத்தக் களத்தில் வல்லாங்கு (Rape) செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2 இலட்சம். 2009க்குப் பின் ஒவ்வொரு மாதமும் வறுமையிலும் பிணியிலும் 45000 பேர் இறந்து போகிறார்கள். இதுவரை 900,000 முதல் 5400,000 வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.


இந்த மக்கள் செய்த பாவம் என்ன? வளமிக்க நாட்டில் பிறந்ததைத் தவிர! பொன் கொழிக்கும் பூமி என்பார்கள் நம்நாட்டில். உண்மையில் காங்கோ பொன் கொழிக்கும் பூமிதான். பொன் மட்டுமல்ல, வைரமும் சேர்ந்து தான் அந்த மண்ணை அந்த மண்ணின் மக்களை மரணத்தின் பிடியில் தள்ளியது. இந்தப் பொன்னும் வைரமும் போதாது என்று அந்த மண்ணின் கனிமவளங்கள் அந்த தேசத்தை இன்று சபிக்கப்பட்ட நிலமாக , பாலியல் வன்கொடுமை பூமியாக பெண்கள் வாழ்வதற்கெ தகுதியற்ற ஒரு தேசமாக மாற்றிவிட்டது. எந்த ஒரு நாட்டிலும் அதன் வளங்கள் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம். அந்த நாட்டு மக்களின் வளமிக்க வாழ்வுக்கு உத்திரவாதம் என்பது தான் பொதுவான நம்பிக்கை. ஆனால் யதார்த்த நிலையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மண் வளங்களே அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கொள்ளை அடித்து அவர்களைக் கொத்தடிமை ஆக்கிவிட்ட சோகம் முதலாளித்துவ உலகத்தின் மறுபக்கம்.

The Greatest Silence: Rape in The Congo (Official Trailer)




காங்கோவின் உள்நாட்டு யுத்தம் ஆப்பிரிக்க கண்டத்தின் உலக யுத்தமாக பேசப்படுகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் மிகவும் அதிகமான மனிதர்களையும் அவர்கள் வாழ்வாதாரங்களையும் கொன்று கொள்ளையடித்த யுத்த பூமி காங்கோ. நிலையான அரசும் ஆட்சியும் இல்லாத நிலையும், பெருகிக் கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய போர்க்குழுக்களும் அவர்களுக்கு இடையிலான அதிகாரச் சண்டைகளும் அரசு இராணுவமே தன் குடிமக்களைச் சித்திரவதைச் செய்து சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்தி அடிமைகளாக்கும் கங்கானிகளாக செயல்படுவதும் இராணுவ அதிகாரிகள் நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளுக்கெல்லாம் தளபதிகளாக இருப்பதும் நம் எவருடைய கற்பனைக்கும் எட்டாத கறைபடிந்த நிகழ்கால வரலாற்றின் பக்கங்கள்.


தோண்டிய இடமெல்லாம் கனிம வளங்கள். தங்கமும் தாதுப்பொருட்களும். தோண்டிய பள்ளத்தில் கொட்டிக் கிடக்கும் மண் குவியல்களில் தங்கத்துண்டுகளைத் தேடி அலையும் குழ்ந்தைகளும் பெண்களும். கல்வி, மருத்துவமனை இதெல்லாம் அவர்களுக்கு கன்வுலகம்… அந்தச் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் தாதுக்கள் இன்றைய அறிவுலக கண்டுபிடிப்புகளின் இன்றியமையாத கச்சாப்பொருளாக இருப்பது தான் அந்தப் பூமியில் அமைதிப் புறாக்களை வேட்டையாடும் அம்புகளாக இருக்கின்றன. நம் கைபேசிகள், கணினி, காமிரா, குறுந்தகடு, இதர மின்னணு சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான தாதுப்பொருட்கள் மிக அதிகமாக இங்கிருந்து தான் களவாடப்பட்டு உலகச் சந்தைக்கு வருகின்றன அதுவும் அடிமாட்டு விலையில். உதாரணமாக மூன்று ‘டி’ தாதுக்களைச் சொல்லலாம். டிண், டாண்டலும், டங்க்ஸ்டன் (The three Ts, Tin, Tantalum, Tungsten) டிண் என்ற கனிமம் கைபேசிகளின் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படுகிறது. டாண்டலும் அதாவது ஓர் (ore) என்ற கனிமம் எலெக்ட்ரானிக் டிவைஸில் யன்படுகிறது.
டங்க்ஸ்டன் அதிர்வலைகளை (வைப்ரேஷன்) உருவாக்க பயன்படுகிறது.
இக்கனிமங்களை ஆஸ்திரேலியா , பிரேசில் நாடுகளிருந்து வாங்கிவதை விட காங்கோவிலிருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்டதைச் சந்தையில் வாங்குவது எளிதாக இருப்பதுடன் முதலாளித்துவ பெருமுதலைகளுக்கு கொள்ளை லாபத்தையும் கொடுக்கிறது., விளைவு..? அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு டாலரும் அந்த மண்ணின் ஒரு குழந்தையை அடிமையாக்குகிறது, ஒரு மணி நேரத்தில் 48 பெண்களை வல்லாங்கு (Rape) செய்கிறது. அந்ததேசத்தில் 70 மில்லியன் பெண்களைக் வல்லாங்கு செய்து இன்றைக்கு கொத்தடிமைகளாக்கி இருக்கிறது. 2006-2007ல் மட்டும் சற்றொப்ப 400,000 பெண்கள் வல்லாங்கு கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்


காங்கோவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் கனிமங்களை வாங்குவது அந்த தேசத்தின் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களுக்கே போய்ச் சேர்வதால் அந்தப் பணம் ஆயுதம் வாங்கவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவும் மேற்கத்திய நாடுகள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளாக இருக்கின்றன. இங்கிருக்கும் சுரங்கங்களில் 90% க்கும் மேலானவை அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட ஆயுதக் குழுக்களின்கைகளில் இருக்கின்றன. இக்குழுக்கள் சுரங்கப பணிகள், அதற்கான சர்வதேச விதிகள் மனிதஉரிமைகள் சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை. மிகவும் மேசமான சூழலில் இச்சுரங்கங்களில்அடிமைகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் இந்த நாட்டின் வளமிக்க அந்த மண்ணின் மைந்தர்களும் அவர்கள் பெண்ணிரும் குழந்தைகளும். காங்கோவின் கலாச்சாரமும் கணவன் மனைவி உறவும் கூட கற்பு என்று சொல்லப்படும் மூன்றெழுத்தில் தன் மூச்சிருப்பதாக நினப்பதால் அந்தக் கற்பின் மூச்சுக்காற்றே இந்தப் பெண்களை அடிமைகளாக்கி இச்சுரங்கத்தில் தள்ளிவிட்ட கொடுமைக்கு காரணமாகவும் இருக்கிறது. மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அது அச்சமூகத்தில் அந்த ஆண்மகனுக்கு பெருத்தஅவமானமாக இருப்பதால் அப்பெண்ணை அவள் கணவன் ஒருபோதும்சேர்த்துக் கொள்வதில்லை. கற்பழிக்கப்பட்ட மனைவி அனாதையாகிவிடுகிறாள் தனியாக அல்ல, அவள் அவனுக்குப் பெற்ற அவன் குழந்தைகளுடன் அவள் அனாதையாகி விடுகிறாள். அப்பெண்ணின் குழந்தைகள் காங்கோ சுரங்கங்களில் அடிமைகாளாக இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய குழந்தைகள் வீடியோ கேம்ஸ்களில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு ஆனந்தமாக தங்கள் இலக்கை அடையும் விளையாட்டுகளை விளையாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தப் பெண்களை இராணுவமும் இராணுவக்குழுக்களும் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களும் அடிமைப்படுத்த பயன்படுத்த வேண்டிய போராயுதம் உடல்சார்ந்த பெண் பாலியல் உறுப்பைச் சிதைப்பதாகமட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அது மிகவும் எளிதானதாக இருக்கிறது. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், உலக மனித வரலாற்றில் இதுவரை நடந்திராத, கண்டிராத கற்பனை செய்ய முடியாத கொடுமைமிக்கவை என்கிறது ஐ.நாவும் பொதுமக்கள் நலன் பற்றிய அமெரிக்க ஏடும். ஆயுதம் தாங்கியவர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பெண்ணைக் பாலியல் வல்லுறுவு செய்வதும் அவள் யோனியில் துப்பாக்கியால் சுடுவதும் இன்னும் இவ்விதமான எழுத முடியாத பல்வேறு சித்திரவதைகளும் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. காங்கோவின் சாலைகளில் “பெண்களைக் வல்லாங்கு செய்யாதீர்கள், பலர் சேர்ந்து ஒரு பெண்ணை வல்லாங்கு செய்யாதீர்கள்: ” என்று கேட்டுக்கொள்ளும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன என்றால் உலகத்தில் இப்படி ஒரு தேசத்தை எந்த ஒரு மனிதராலும் கற்பனைசெய்ய முடியாது தான். கண்வன் முன் மனைவி பலரால் வன்புணர்வு செய்யப்படுவதும் தந்தை மகளையும் சகோதரன் உடன் பிறந்த சகோதரியையும் வன்புணர்வு செய்ய கட்டாயப்படுத்தும் கொடுமைகளும் இரவு பகல் போல அன்றாட நிகழ்ச்சிகளாக அந்த மண்ணில் நடந்துக் கொண்டிருக்கின்றன.

அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக அவள் தன்சி மருத்துவமனையை வந்தடையும் போது அவளுக்கு முன் 80 பெண்கள் அவளைப் போலவே கிழிந்த யோனியுடன்…. காத்திருந்தார்கள் யோனிகளை தைத்து ஓரளவு சரிப்படுத்தும் அறுவைச் சிகிச்சைக்காக. அந்த யோனியைத் தைக்கும் அறுவை ஒரு வாரத்திற்கு 5 பெண்களுக்குத் தான் செய்யப்படும், அதற்கு மேல் செய்கின்ற வசதி அந்த மருத்துவமனையில் இல்லை. புக்காவுக்கு யோனி தைக்கப்பட்டதா? தெரியவில்லை. அவள் என்னவானாள்…? யாருக்கு கவலை அதைப் பற்றி!


பாஷி மருத்துவமனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அங்கே பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய நடக்கும் அறுவைச்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குழுச்சண்டையில் போரில் காயம்பட்ட வீரர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்மு அதிகம். சிதைந்த யோனியை தைக்கும் அறுவை/பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய ஒரு பெண் ஆறுமுறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் . (women go to 6 operations to repair the sexual injuries)



*CONGO – the resource curse
* UN Official called the country ‘ THE RAPE COUNTRY OF THE WORLD’
* UN has called the country ‘ THE CENTRE OF RAPE AS A WEAPON OF WAR’
* CONGO THE WORST PLACE ON EARTH TO BE A WOMAN.




மூன்று மாதத்திற்கு ஒரு புதிய கைபேசியை அறிமுகப்படுத்துகின்றன நம் கைபேசி கார்ப்பரேட்டுகள். கைபேசிகளிலும் மின்னணு சாதங்களிலும் பயன்படுத்தப்படும் பொருள்களை வாங்கும் சந்தையில் அப்பொருட்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் சப்ளை செயின் சாத்தியமில்லை என்கிறார்கள் கைபேசி கார்ப்பரேட் அதிகாரிகள்.
நாமோ பழைய கைபேசிகளுக்கு இப்படியும் விடை கொடுக்கலாம் என்ற விளம்பரங்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம். இன்று தங்க நகைக்கடை இல்லாத ஊரே இல்லை, தங்கம் அணியாத பெண் இருக்க முடியுமா? . தங்கமும் வைரமும் இல்லாத திருமணமா?

புதிய பொருளாதர சந்தையில் அமெரிக்காவின் பொருளாதர சரிவால் தங்கம் மட்டுமே சரியான முதலீடாகிவிட்ட நவீன பொருளாதர இந்தியக் கண்டுபிடிப்பு! இந்தியப் பொருளாதரத்தின் பெரும்பலமாக இருப்பதை எண்ணிப் பூரிப்படைந்து கொண்டிருக்கிறோம். வரும் நிதி ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகம் இருக்கும் என்கிறார்கள் எப்போதும் நம் பொருளாதர சந்தைப் புலிகள்!

இந்தச் சூழலில் காங்கோ என்ற தேசம் நாம் வாழும் பூமி உருண்டையில் தான் இருக்கிறது என்பதும் இந்தக் கதைகள் எல்லாம் உண்மைக்கதைகள், அதிலும் நாம் வாழும் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சமகால
வரலாற்று நிகழ்வுகள் என்பதும் எந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்?

இதோ என் கைபேசி அழைக்கிறது… காங்கோ பெண்களின் கதை கேட்டு.


.
(பின்குறிப்பு: documentary ‘blood in the mobile ‘ directed by Frank Piasecki Poulsen
this film shows the connection between our phones
and the civil war in Congo. blood in the mobile is a film about our responsibility for the conflict
in the Congo and about corporate social responsibility)





Thursday, February 23, 2012

ஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...!



அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மண் வளமில்லை,
வறண்ட பூமி.. அதுமட்டுமல்ல... இந்தக் காரணங்களாலேயே அந்த மாநில
அரசு டைரியோ குறிப்பேடோ ( diary or directory)வெளியிடுவதில்லை. அவ்வளவு
வறுமையாம். அதனால் எளிமையாம்! போனால் போகிறது என்று
அந்த மாநில முதல்வர் அவரைப் பார்க்க வருகிறவர்களுக்கு கூட
காந்தி டைரி தான் கொடுப்பார். அந்த காந்தி டைரியிலும் மாநில
அரசு குறித்தோ அதிகாரிகள் பற்றிய குறிப்ப்களோ அரசு துறைகளின்
தொலைபேசி எண்களோ இத்தியாதி எந்தவிதமான குறிப்புகளும்
கிடையாது.
அப்படிப்பட்ட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் தான் முதல்வர்
அசோக் ஹெக்லட் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு
ஏப்ரல் 1, 2009 முதல் ஜனவரி 16, 2012 வரை , சற்றொப்ப
மூன்று வருடங்களில் 4.86 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்.
அவருக்கு முன் ராஜஸ்தானின் முதல்வராக இருந்த சிந்தியா
அரண்மனை அரசி வசுந்தாராவை விட இது அதிகம். அரசி
2004 முதல் 2007 வரை செலவு செய்தது வெறும் 2.2 கோடிதான்.
கணக்குப் பார்த்தால் இன்றைய முதல்வர் ஒரு நாள் சாய் காஃபிக்கு
செலவு செய்யும் தொகை ரூ.48,000. சொச்சம்...!

நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று
யாருக்காவது தெரியுமா..? வேறொன்றுமில்லை, சாய் காஃபிக்கு
ராஜஸ்தானுக்குப் போகலாமா இல்லை நம்ம ஊருனு தமிழ்நாட்டுக்கே
வந்துட்டுப் போகலாமானு தெரியலே...கொஞ்சல் விசாரிச்சு சொல்லுங்க.

(செய்தி ஆதாரம்: இந்தியா டுடே பிப், 20, 2012)

Monday, February 20, 2012

பசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்



நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க
முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார்
என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர்
கதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே
அவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும்
மரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த
மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில்
வெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு கழிவறைக் காகிதம்
அதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது
என்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை.
அடுத்ததாக விருதுகள் பரிசுகள் குறித்து மிகத் தீவிரமாக தன் கருத்துகளை
முன்வைத்த ஒரு நேர்மையான எழுத்தாளராக படைப்புலகம் அவரைக்
கண்டது. அவருடைய அந்த அறச்சீற்றம் அவர் படைப்புகளையும் தாண்டிய
ஒரு வாசகர் வட்டத்தை அவருக்கு உருவாக்கியது என்பது மற்ற எவருக்கும்
வாய்க்காத ஒரு பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன்.

இன்று, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்கு
சென்ற ஆண்டில் 2010ல் சாகித்திய அகதெமி விருது கிடைத்தப் பின்
விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த
விருதுகளும் தங்களுக்கான தகுதிகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவே
நினைக்கிறேன். இந்த விருதுக்குப்பின் இதுவரை சாகித்திய அகதெமி
விருது பெற்ற எந்த ஒரு படைப்பாளருக்கும் கிடைத்திராத ஊடக
கவனிப்பும் கணினி இணைய வாசல்கள் எங்கும் நாஞ்சில் நாடனின்
தோரணங்கள் அலங்கரித்திருக்கும் காட்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும்
அந்த ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு நடுவில் சின்னதாக ஓர் இனம்புரியாத
அச்சம் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தருணம் இது.

இந்தச் சூழலில் தான் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை மறுவாசிப்பு
செய்தேன். விருது பெற்ற சூடிய பூ சூடற்க கதைகளையும் வாசிக்கும்
அனுபவம் கிடைத்தது. ஒருவகையில் என் முதல் கவிதை தொகுப்பு
'சூரிய பயணம் ' தொகுதிக்கு ஓர் அறிமுகமாக ஓர் அணிந்துரை தந்தக்
காரணத்தாலேயே ஆசான் என்று சொல்ல வரவில்லை! ஆனால் இன்றைக்கு
கும்பமுனி தான் எம் பாட்டன், எம் சொத்து, எம் சித்தன், எனக்குத் தெரியாத
என் வயக்காட்டையும் சூடடிப்பையும் என் மாட்டையும் என் மனுசர்களையும் அட
எனக்கு கெட்ட வார்த்தைகளையும் கூட போகிற போக்கில் வசவாகவும்
வர்ணனையாகவும் குசும்பாகவும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்
ஆசான். ஆமாம் ஆசாந்தான். கும்பமுனி என் கட்டைவிரலை காணிக்கையாகக்
கேட்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் மும்பை வாழ் தமிழர்களே!
உங்கள் முன்னிலையில் உங்கள் சாட்சியாக கும்பமுனி எனக்கு மட்டுமல்ல,
மும்பை தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு மிதவையில் ஒரு
பரிசில் ஓட்டி சதுரங்க குதிரையில் காய்நகர்த்தி ஆட்டம் சொல்லிக்கொடுத்து
தலைகீழ் விகிதங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கல்ல என்பதைப் புரிய வைத்த
ஓர் ஆசான்.
அடுத்து அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நான் அவருடைய
நல்ல வாசகர். இதில் 'நல்ல 'என்பது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும்
அடைமொழி. அவர் பார்த்த அனுபவித்த அதே மண்ணும் அதே மும்பை
மனிதர்களும் எனக்கும் பார்க்கவும் அனுபவிக்கவும் கிடைத்திருப்பது
எனக்கும் என் எழுத்துகளுக்கும் கிடைத்திருக்கும் பாக்கியமோ துரதிருஷ்டமோ
யானறியேன் பராபரமே. இன்றைக்கு கட்டுரைகள் பக்கம் அவர் உதிர்க்கும்
அனைத்து statements களுடன் ஒத்துப்போவது என்பது என் போன்றவர்களுக்கு
சாத்தியமில்லை என்பதும் முரண்தொடையாக இருப்பதை மறைப்பதற்கில்லை.

இவ்வளவு பீடிகையும் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. ஆய்வுரை என்று
சொன்னதாலேயே புரிந்த புரியாத சரியாக உச்சரிக்க கூட தெரியாத எந்த
இசங்களையும் மேற்கோள் காட்டி அந்தச் சட்டத்துக்குள் நாஞ்சில் நாடனின்
சிறுகதைகளை அளந்துப் பார்க்கும் அதிமேதாவி அறிவுஜீவித்தனம் எனக்கு
உடன்பாடல்ல. கொடுக்க கொடுக்க குறையாத அமுதசுரபியும் அந்த ஆபுத்திரன்
கதையும் பிற எந்த மொழியிலும் காணக்கிடைக்காத தமிழனின் அசல்
கதை. தமிழனின் மூலக்கதை. தமிழ் மரபின் கனவு, கற்பனை. தமிழ் பண்பாட்டின்
உச்சம், தமிழன் இந்த உலக மானுட குலத்திற்கே கொடுத்த ஓர் உன்னதமான
பண்பாடு. தமிழ் தொன்மங்களை நன்கு படித்தவர் , தெரிந்தவர், புலமை மிக்கவர் என்பதுடன்
அந்தச் சாலச்சிறந்த தொன்மத்திலிருந்து எடுத்துச் சொல்ல எத்தனையோ இருப்பதினால்
இன்றைய நவீன படைப்புலக விலாசத்தில் மேனாட்டு வாந்தி எடுப்புகளுக்கெல்லாம்
தனிக் கவனிப்பு இருப்பதைக் கண்டும் கேலியும் கிண்டலுமாக அதைக் கடந்து
தொடர்ந்து எழுத்துலகில் தன் பயணத்தைத் தொடர்வதை அவர்
சிறுகதைகளின் போக்கு நமக்கு உணர்த்துகிறது.


'கவிதை எழுதுவதில் உள்ள கவுரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைப்
புரிந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது ' என்று அடிக்கடி
முழுங்குகின்ற மார்க்சிய மேடைகள் , பேரணிகள், இன்குலாப் ஜிந்தாபாத்
கோஷங்கள் கற்பிக்காத அல்லது காட்டாத எம் நிலத்தையும் வாழ்க்கையையும்
இவர் சிறுகதைகள் காட்டி இருக்கின்றன என்பது உண்மை.

'வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய்
வீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய
விஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா? என்று ஒரு சிறுவன் தன்
அப்பாவிடம் கேட்கிறான். 'இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட
மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்?
நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா,
குருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும்.
அதை மறந்திரப்பிடாது' என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான்
எழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக
விரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால்
அந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.

வாய் கசந்தது என்ற சிறுகதையில் சூடடிக்கும் காட்சி விலாவரியாக அவர்
எழுதிச் சென்றிருக்கிறார். அரிசி மரத்தை ஊருக்குப் போனபோது தோட்டத்தில்
தேடிய மும்பை குழந்தைகள் பலருண்டு. இதைச் சொல்லும் போது வேதனை தான்
மிஞ்சுகிறது. இந்தக் கதையின் இந்த விவரங்கள் கூட நாளைய நம் தலைமுறைக்கு
ஓர் ஆவணமாகிவிடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இக்கதையை
நான் சொல்ல வருவதற்கு காரணம் இக்கதையின் உத்தியோ கருப்பொருளோ
ஏன் ஆவணமாக்கியிருக்கும் விவசாயக்காட்சியோ அல்ல. இக்கதையின் ஊடாக
அவர் வைக்கும் ஒரு நுண்ணிய அரசியல். இந்த அரசியலில் எவ்விதமான
ஆரவாரமும் இல்லை.

வயலில் விளைந்த நெல்லை கூலியாக அளந்து கொடுக்கும்போது அளக்கின்ற
மரக்கால் வேறாகிவிடுகின்ற காட்சி, இரவு ஒன்றரை மணிக்கு எழுந்து சூட்டடிக்கப்
போன ஐயப்பனுக்கு கிடைக்கின்ற கூலியின் மதிப்பு 2 ரூபாயும் இருபது பைசாவும்.
க்தைக்கு த்லைப்பு வாய் கசந்தது. இந்த மரக்கால் மாறுவதும் கூலியும்
காலம் காலமாக விவசாய பெரும்புள்ளிகள் நடத்தும் சுரண்டல் தான்.
ஆனால் ஐயப்பனின் தாத்தாவோ அப்பனோ புரிந்து கொள்ளாததை அல்லது
ஏற்றுக்கொண்டதை இவனால் மட்டும் அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள
முடிய்வில்லை? அவன் படிக்கிற பையனாக இருப்பதாலா?
உழைப்புக்கும் உழைப்புக்கான கூலிக்குமான
விகிதாச்சார கணக்கு வாய் கசக்க வைக்கிறது. ஐயப்பனுக்கு.
வாசிப்பவனுக்கும் வாய்க்கசக்கும் அனுப்வத்தை
கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்துவிட முடிகிறது நாஞ்சில் நாடனால்.

நாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்து கடுமையான இன்னொரு விமர்சனம் வைக்கப்படுவதை
நானறிவேன். அதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழ். அதாவது
வெள்ளாளர் எழுத்து என்று. மொக்கையான விமர்சனம்.
இவை குறித்து நாஞ்சில்நாடன் அவர்களே அதிகமாக பேசி இருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் அவருடைய 'சில வைராக்கியங்கள்'
சிறுகதை என் நினைவுக்கு வரும். குமரி மாவட்ட வேளாளர் மாநாடு நடக்கிறது.
மேடையில் வேளாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என்று பேசுகிறார் தலைவர்.பூதலிங்கம் பிள்ளை. மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற
.கதை மாந்தர்களான பரமசிவம் பிள்ளைக்கு அவர் பேச்சு ரசிக்கிறது. சங்கரலிங்கம் பிள்ளை
முகத்தில் சுரத்தில்லை.
அவன் ஏன் பேச மாட்டான்? அவனுக்கென்ன? நிமுந்தா வானம், கவுந்தா பூமி! பேசுதான்!
என்கிறார் சங்கரலிங்கம் பிள்ளை.
"ஏன் பேசுவதிலே என்ன தப்பு? உள்ளதத் தானே சொன்னாரு! இந்தக் காலத்தில் சாதீகீதி எல்லாம்
ஏது ஓய்? எல்லாம் ஒண்ணுதாலா? எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் சிவப்புதாலா?
புல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பிலே கெடத்தும் போது சாதி எங்கே ஓய் போச்சு?...
..................................காலத்துக்கு ஏத்தாப்பிலே மாறாண்டாமா நாமளும்?..."
என்று ப்ரமசிவம் பிள்ளை பொரிந்தார் என்று ஒரு காட்சி. அடுத்த காட்சி அவர்
வீட்டில் மகளுக்கு வரன் துப்பு கொண்டு வந்து காத்திருக்கிறார் அவர்
மைத்துனர். விசாரிக்கும் போது தெரியவருகிறது பையன் யாரென்பது.

யாருண்ணா கேக்க? அவன் மருமக்கவழிக்காரம்லா? ஒனக்கு புத்தி ஏண்டே
இப்படிப் போகணும்?'
என்ற பரமசிவத்திடம் 'அதெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா முடியுமா? இந்தக் காலத்தில?
என்கிறார் மைத்துனர்.
பரமசிவம் பிள்ளை இடைவெட்டினார். 'சரிதான், சோலியைப் பாத்துக்கிட்டு போடே!
மாப்பிள்ளை பாக்கான் மாப்பிள்ளை!"
என்று முடியும் கதையில் தான் சாதியம் இன்றுவரை நிலைத்திருப்பதற்கான
அடிப்படைக் காரணமான அகமண முறை அம்மனமாக்கப்பட்டிருக்கும!
இந்தியாவில் சுயசாதி அடையாளத்தை துறந்தவர் எவருமில்லை.
எழுத்தாளன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த சாதிக்குள்ளெ
பிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி
தன் படைப்புகளில் சாதிய முள் வேலிகளை உடைத்துக்கொண்டு
திமிறிக்கொண்டு காயங்களுடனும் ரத்தம் சொட்டவும் வெளிவர
தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறான்.


நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.
'சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில்
மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து
பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு,
பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும்
மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச்
சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் " என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார்.
அந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும்
கதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே
இருக்கிறார். 1975களில் எழுதிய விரதம் கதையில் சின்னத்தம்பியா பிள்ளைக்கு
திருமணமான தன் இரு மகள்களிடமும் விரதச்சாப்பாடு சாப்பிட வ்ந்திருப்பதை
பசித்திருக்கும் நிலையிலும் சொல்ல முடியாமல் சுய கவுரவம் தடுக்கிறது.
பசியோடு வெந்நீரை வாங்கி குடித்துவிட்டு சாப்பிட்டாகிவிட்டது என்பதை
காட்டிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இருள்கள் நிழல்களல்ல கதையில்
திருமண வீட்டில் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து காத்திருக்கும் பண்டாரம்,
பிசைந்த சோற்றைப் பிச்சை வாங்கித் தின்பதா? என்று காத்திருக்கும் காட்சி,
விலக்கும் விதியும் கதையில் எண்ணெய்த் தேய்த்து குளித்துவிட்டு வரும்
பரமக்க்ண்ணு கருவாட்டுக்குழம்பை நாய் நக்கியதைப் பார்த்து விடுகிறான்.
நாய் தின்ற மிச்சத்தைத் தின்பதா? எங்கெல்லாம் வாய் வைத்துவிட்டு வந்ததோ?
என்று நினைத்தாலும் பசியின்சுரண்டல் ஜெயிக்கிறது. இப்படியாக அவர் கதை நெடுக
அவரை பல்வேறு விதமாக துரத்தும் பசி தனிமனித உணர்வாக இருக்கும் வயிற்றுப் பசி
ஒரு சமுதாயப் பண்பாட்டின் எச்சமாக படைப்பின் உச்சத்தை எட்டிப்பிடித்திருப்பது
அவருடைய 'யாம் உண்பேம்' சிறுகதையில் தான். நாஞ்சில் நாடனின் பசி குறித்த
மேற்சொன்ன கதைகளில் எல்லாம் ஏற்படாத ஓர் உணர்வின் உச்சம் அவருடைய
'யாம் உண்பேம்' சிறுகதை மூலமாக நான் உணர்ந்தேன். சூடிய பூ சூடற்க
கதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அச்சிறுகதையை வாசித்தவுடன்
ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது எனக்கு.
இந்தக் கதையை வாசிக்கும் முன் இந்தக் கதைக்கான பின்புலத்தை மிகவும்
தெளிவாக அருந்ததிராயின் புரோக்கன் ரிபப்ளிக் கட்டுரைகளும் அதற்கு முன்பே
எழுத்தாளர் இந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் நாம்'
என்ற ஆதிவாசிகளின் கவிதைகளும் எனக்கு கொடுத்திருந்ததும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
நம் ஆரண்யகாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, காட்டையும்
கழநியையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு பிச்சை கேட்கவே
தெரியாது. அதை அவன் அறிந்திருக்கவே இல்லை. பெற்ற மகன் குடும்பத்துடன் செய்து
கொண்ட தற்கொலை அவனை அவன் இடத்திலிருந்து விரட்டுகிறது. பசியின் விரட்டல்
வேறு.
"எதிரே இருப்பவன் ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் வாய்க்கு கொண்டு போகும்
நேரம், பாபுராவின் உயர்த்திய கையை , முதிய தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப்
பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து
பார்த்தான்.

'அமி காணார்.... அமி காணார்..'

எனக்குத் தா என்றல்ல , நான் தின்பேன் என்றல்ல, நாம் உண்போம் என.
தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் யாம் உண்பேம் என.

கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் பதற்றம் பரவ,
அமி காணார்... அமி காணார்...

நண்பர்களே... இந்த இடத்தில் தான் நான் உடைந்து சுக்குநூறாகி ஓவென
கதறி அழுதேன்...

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே......
[புறநானூறு: 182]

என்று சொன்னானே 2500 ஆண்டுகளுக்கு முன் ஒருவன்

இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே
(புறம் 134)

என்று சொர்க்கம் நரகத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்தானே ஒரு இனக்குழு தலைவன்.

தனியொருவனுக்கு உணவில்லை எனில்
இச் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று ஆவேசப்பட்டானே நம் பாரதி...
இதை எல்லாம் தன் பண்பாடாக கொண்டு வாழ்ந்தவனால்தான்
அந்த 'அமி காணார் அமி காணார் ' என்ற குரலில் ஒலித்த
அவலத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குரலில் ஒலித்த
பசி தனி மனிதன் ஒருவனின் பசி மட்டுமல்ல, இது இந்த நாட்டின்
பண்பாட்டைச் சுரண்டுகின்ற பசி, இது ஒரு தனிமனித அவலம் அல்ல,
ஒரு சமூக அவலம். அவமானம், ஏன் ஆபத்தும் கூட!
இக்கதை நாஞ்சிலாரின் சொந்த அனுபவம் தான்
என்பதை அவருடைய நக்கீரன் நேர்காணல் வழி அறிந்து கொண்டேன்.
அமி காணார் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவரும் அழுதிருக்கிறார்.
வாசித்தவனையும் அழ வைத்திருக்கிறது அக்கதை. இந்தக் கதையின் நிஜம்
நம்மைச் சுடுகிறது. தன் அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்குவதில்
வெற்றி காண்பது தான் ஒரு சிறந்த படைப்பு . விமர்சன பிதாமகன்கள்
இதற்கு என்னவெல்லாமோ பெயர் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக
எழுதிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கட்டும்.
என்னளவில் இதுவே ஒரு படைப்பாளனின் வெற்றி என்று கருதுகிறேன்.
ஹேட்ஸ் ஆஃப் நாஞ்சில்!




நாஞ்சில் நாட்டு வாழ்க்கை பின்னணியில் எழுதப்பட்டவை, மும்பை நகர வாழ்க்கை
தந்த அனுபவங்களின் ஊடாக அறிந்ததும் அனுபவித்ததும் இந்த இரண்டு வாழ்க்கையையும்
இணைக்கும் அவருடைய பயணங்கள், பயணங்கள், அந்தப் பயணங்கள் கற்றுக்கொடுத்த
பரந்து பட்ட இன்னொரு உலகம், பசியின் துரத்தல் ஆகிய வட்டங்களைச் சுற்றி சுற்றியே
எழுதப்பட்டிருக்கிறது நாஞ்சிலாரின் சிறுகதைகள். சிறுகதையில் உத்தி, மொழி நடை,
வர்ணனை இவற்றில் கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் சொல்வதற்கில்லை.
ஆனால் 2000க்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் கதைகளின் மொழி உத்தி
ஆகியவற்றில் கும்பமுனி கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
கட்டுரைகள் அதிகம் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தினாலோ என்னவோ
இக்கதைகள் கட்டுரைப் பாங்கான ஒரு மொழிநடையைக் கொண்டிருப்பதும்
கும்பமுனியின் கேலியும் கிண்டலும் குசும்பும் தான் கட்டுரைகளை கதைகளாக்கி
இருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கின்றன என்றும் சொல்லலாம்.


நாஞ்சிலார் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் என்று அவர் நாவல்களை
முன்வைத்து நான் ஏற்கனவே பதிவு செய்திருப்பதிலிருந்து சிறுகதைகள்
எவ்விதத்திலும் மாறவில்லை. சொல்லப்போனால் சிறுகதைகள் பெரும்பாலும்
ஆண் கதை மாந்தர்களைச் சுற்றி சுற்றியே வருகின்றன. ஒன்றிரண்டு
சிறுகதை விதிவிலக்காக 'உபாதை ' சிறுகதையைச் சொல்லலாம்.
சில கதைகளில் 'சும்மா' வந்து தலையைக் காட்டிவிட்டு போகும்
பெண்கள்.. பல கதைகளின் அதுதானும் கிடையாது !

நாஞ்சிலாரின் படுவப்பத்து கதையை வாசிக்கும் போது புதுமைபித்தனின் புதிய கந்தபுராணம்
சிறுகதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழ் இலக்கிய விமர்சனங்களில் ஒப்பீட்டாய்வு என்ன காரணத்தினாலோ பெரும்பாலும்
ஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகளுடன் நாஞ்சிலாரின் சிறுகதைகளை
ஒப்பீட்டாய்வு முறையில் அணுகுவது விமர்சன உலகில் ஆரொக்கியமான ஒரு சூழலை
உருவாக்கும்..

தொன்மங்களை புராணங்களை அறிந்த படைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்
நாஞ்சிலார். தான் தமிழுக்கு எழுத வந்ததன் காரணகர்த்தாக்களில் ஒருவராக
அன்றைய பம்பாய் தமிழ்ச் சங்கம் நடத்திய இராமயண வகுப்பும் வகுப்பெடுத்த
ரா.பத்மநாபன் என்று ......... குறிப்பிடும் நாஞ்சிலார் இன்றுவரை புராணங்களின் தொன்மத்திலிருந்து
கதைகள் எழுதியதாகத் தெரியவில்லை! (அப்படி எதுவும் எழுதப்பட்டிருந்தால் அதை
நான் வாசிக்கும் அனுபவம் கிட்டவில்லை என்று ஈண்டு பொருள் கொள்க!)

ராமாயணம் படிச்சா ப்டிச்சிருக்குனு சொன்னா உடனே சீதையைப் பத்தி எழுதித்தான் ஆகணுமா,
எழுதாட்டி என்ன? எழுதுனதை விமர்சிக்கலாம், இதை ஏன் எழுதலை, நீ அதை ஏன் எழுதலைனு
விமர்சனங்கிற பேர்லே சொல்லிக்கிட்டே போகுது பாருங்க... இதுகளுக்கெல்லாம் நான் என்னத்தைச்
சொல்லட்டும் இன்னும் என் பாட்டன் கோவணத்தையே எழுதி முடிக்கலை, அதுக்கப்புறமில்ல
படிச்சதும் பிடிச்சதும்னு ..... கும்பமுனியின் அடுத்தக் கதையில் வரலாம்
சரி இருக்கட்டும்... இப்போதெல்லாம் நாஞ்சிலாரின் கட்டுப்பாட்டுக்குள்
கும்பமுனி இல்லை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையா நாஞ்சில் சார்?

நன்றி.

(12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு
அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில்
நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை .







.
.