Thursday, April 26, 2012

ஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும்





ஆவணப்படங்கள் வரிசையில் தனக்கென தனி இடத்தை ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படம் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ஆனந்த் பட்வர்த்தன். அவருடைய ஆவணப்படங்கள் அனைத்துமே சமூகப்பிரச்சனைகளை அதுவும் சமகால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது என்பது தனிச்சிறப்பு. (பார்க்க: அவருடைய ஆவணப்படங்களின் பட்டியலை)

தணிக்கைகள், மத நிறுவனங்கள், அரசு இந்த மூன்றும் பிரிக்க முடியாத கண்ணிகள். ஒழுக்கத்தின் பெயராலும் பண்பாடு கலாச்சாரத்தின் பெயராலும் மத நிறுவனங்கள் தூக்கிப் பிடிக்கும் பதாகைகளை எப்போதும் தணிக்கை வழி காப்பாற்றுவதில் அரசே கவனமாக இருக்கிறது. அரசியல், பாலுறவு, வன்முறை என்ற வட்டத்தில் தணிக்கை இருந்தாலும் பாலுறவு, வன்முறை ஆகியவற்றில் காட்டும் தளர்வை அரசியல் சார்ந்த பாலுறவு, வனுமுறைக் காட்சிகளை எப்போதும் தடை செய்வதில் தணிக்கைக்குழுக்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.

பாலுறவு வன்முறை சார்ந்த திரைப்படங்கள் தமிழிலும் எத்தனையோ வந்தாகிவிட்டது. ஆனால் அதே அந்த பாலுறவு/வன்முறை சமகால அரசியல் சார்ந்ததாக இருப்பதை தணிக்கையின் கரங்களால் ஆரம்பத்திலேயே அரசுகள் வெட்டி எறிவதில் கவனமாக இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தான் வாழும் காலத்தில் தன் கண்முன்னால நிகழும் பாசிசம், மதவெறுப்பு, இனவெறுப்பு, சாதியம், பெண் இழிவு என்று தொடரும் நிகழ்வுகளை வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து பார்த்துக் கொண்டிருக்காமல் அப்படியே ஆவணப்படுத்தும் போது ஆவணப்படுத்தும் அக்கலைஞன் சந்திக்கும் தடைகளும் போராட்டங்களும் பெருங்கதை. புனுவல், ஆந்த்ரே வாட்ஜா, கென் லோச், விண்டர்பாட்டம், லார்ஸ் வான் டிரையர் வரிசையில் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்களும் அடங்கும். தணிக்கை, அரசு அதிகாரம், கோர்ட் வாசல் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி - வழக்கம்போல - சில எடிட்டிங் நடந்து தற்போது நமக்குப் பார்க்க கிடைத்திருக்கிறது ஜெய்பீம் காம்ரேட்.

மூன்று மணிநேரம் + 20 நிமிடங்கள், 14 வருடங்கள் தயாரிப்பு என்று பார்வையாளர்கள் கண்முன்னே விரிகின்றது இந்த ஆவணப்படம். ஜூலை 11, 1997ல் மும்பை, காட்கோபர் பகுதியில் ரமாபாய் காலணி குடியிருப்பில், காவல்துறையின் கண்மூடித்தனமான மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டில் , பாபாசாகிப் அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவுப்படுத்திய நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்

வகையில் கூடிய மக்களில் 10 பேர் அந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி விடுகிறார்கள். மும்பையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்திலும் தலித்துகள் ஒன்றுகூடி அரசாங்கத்தின் அராஜகத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களும் மனித உரிமை ஆர்வலர்களின் உரத்தக் குரலும் பல்வேறு ஊடகத்தளங்களில் இன்று நமக்கு வாசிக்க கிடைக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தம் மக்களின் சோகம் நெஞ்சை அழுத்த அந்த மன அழுத்தம் காரணமாக அந்த நிகழ்வு நடந்து ஆறு நாட்களுக்குப் பின் தலித் களப்பணியாளரும் பாடகரும் இடதுசாரி கவிஞருமான விலாஸ் கோக்ரே தன்னை மாய்த்துக் கொள்கிறார். இந்தக் காட்சியுடன் தன் காமிராவை பேச வைக்கிறது இந்த ஆவணப்படம். இடதுசாரி மராட்டியக் கவிஞரான விலாஸ் ஆனந்த பட்வர்த்தனின் "பம்பாய் எங்கள் நகரம்" (Bombay our city) என்ற ஆவணப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர். தனக்குத் தெரிந்தவரான விலாஸின் தற்கொலையும் அதற்கான சமூகக் காரணிகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் 1974ல் சிவசேனாவுக்கு எதிராக நடந்தப் பேரணியில் கொலை செய்யப்பட்ட தலித் பைந்தரின் பகவத் ஜாதவ், அத்துடன் கயர்லாஞ்சியில் நடந்த சாதியக் கொடுமை, அதை நியாயப்படுத்திப் பேசும் ஆதிக்கச்சாதியின் குரலாக "அந்தப் பெண்கள் ஒரு மாதிரி.. அவர்களுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் நினைத்தார்கள்” என்று ஒலிக்கும் குரல்... 330 மில்லியன் இந்துக் கடவுள்களாலும் காப்பாற்ற முடியாத

தலித் இந்துக்களின் வாழ்க்கை அவலம், இவை அனைத்தையும் தன் உரத்தப் பாடல்களின் மூலம் ஒலித்த கபீர் கலா மஞ்சின் பாடகி சீத்தள் சாத்தேவின் ஜீவன் ததும்பும் குரல்... சுதந்திர இந்தியாவின் சமூக அவலத்தையும் சாதி முகத்தையும் தோலுரித்துக் காட்டியதில் பட்வர்த்தனின் முயற்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.

படம் முழுக்க ஒலித்த கபீர் கலா மஞ்சின் பாடல்களும் இறுதியில் கபீர் கலா மஞ்ச் அமைப்பு தடை செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தலைமறைவான நிலையில் அவர்களுக்கு தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் என்ற முத்திரை குத்தப்பட்ட தருணத்தில் இப்படம் இப்போது வெளிவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததாக ஆனந்த பட்வர்த்தன் கூறுவதும் நினைவு கூரத்தக்கது.

இப்படம் பார்த்தவுடன் சில கேள்விகள் எழுந்தன. என் சந்தேகங்களை உறுதிப்படுத்தியது மும்பையில் கலினா பகுதியில் பல்கலை கழக வளாகத்தில் அரசியல்/சமூகவியல் கல்வித் துறை  ஏற்பாடு செய்திருந்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்வும் அதன் பின் நடந்தக் கலந்துரையாடலும்.

தற்கொலை செய்துக் கொண்ட விலாஸ் ஓர் இடதுசாரிக் கவிஞன். பாடகன். இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞன். அவன் தற்கொலைக்குக்கு முன் இடதுசாரி அமைப்பிலிருந்து அதன் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக விலக்கி வைக்கப்படுகிறான் விலாஸ். தன் வாழ்நாளில் நம்பிக்கையுடன் சார்ந்திருந்த ஓர் அமைப்பிலிருந்து ஒரு களப்பணியாளன் விலக்கி வைக்கப்படும் போது அவன் எதிர்கொள்ளும் மன உளைச்சலும் ஏமாற்றமும் நம்பிக்கை இன்மையும் கொண்ட வறண்ட நேரத்தில் தான் அவன் சார்ந்த அவன் சமுதாய தலித் மக்களின் தலைவரான அம்பேத்கரின் சிலைக்கு நடந்த அவமதிப்பும் அதற்காக நடந்தப் பேரணியில் ரமாபாய் காலனி மக்கள், அவனுடன் வாழ்ந்தவர்கள் அநியாயமாய் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வும் நடக்கிறது. அவன் தற்கொலை செய்துக் கொண்ட போது அவன் தலையில் ஊதா நிற ரிப்பன் காட்சி அளிக்கிறது. படத்திலும் இக்காட்சியின் ஊடாக சிவப்பு ரிப்பன் /ஊதா நிற ரிப்பன் என்ற நிறங்கள் பேசப்படுகின்றன. விலாஸ் எதனால் இடதுசாரி அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டான் என்பதோ அது குறித்த விவாதங்களோ எவராலும் பேசப்படுவதில்லை.

இந்தப்படத்தை ஆவணப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பேசும்போது பட்வர்த்தன் மிகவும் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டார், அதாவது தான் பட்வர்த்தனாக - உயர்ந்த சாதிப் பட்டியலில் இருக்கும் சாதிக்குடும்பத்தில் பிறந்த பட்வர்த்தன் என்ற அடையாளம் காரணமாகவே இந்த ஆவணப்படம் எடுப்பது எனக்கு ஓரளவு சாத்தியமானது என்கிறார். அதாவது தலித்துகளுக்கு நடந்த வன்கொடுமைகளை ஆவணப்படுத்துவது பட்வர்த்தன்களுக்கு மட்டுமே சாத்தியமான செயல். ஒரு கோக்ரேவோ ஜாடவோ தலித் ஓருவரால் ஆவணப்படுத்துவது மிகவும் கடினமானது தான் என்பதை ஒத்துக் கொள்கிறார். இதுதான் இந்திய சமூகத்தில், சுதந்திர இந்தியாவில் யதார்த்தம் என்பதை தலித்துகளும் ஏற்றுக்கொள்ளவே வேண்டியதாக இருக்கிறது.

ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு காட்சிகள் பட்வர்த்தனின் அரசியல், மேல்சாதி மேட்டிமைத்தனத்தால் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

2010ல், தலித்துகள் கொலை செய்யப்பட்ட அதே காட்கோபர் ராமாபாய் காலனிக்கு 14 வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பட்வர்த்தன். பிஜேபி, சிவசோனா கூட்டணி அரசு ஆட்சியில் தான் ரமபாய் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஆனால் அதே கட்சிகளுக்கு 14 வருடங்கள் கழித்து தலித்திய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கை கோர்த்து அவர்களின் தேர்தல் வெற்றிக்காக பேசும் காட்சியும் சுவரொட்டிகளும் பதாகைகளும்! இந்தக் காட்சிகளின் மூலம் தலித் அரசியலையும் தலித் அரசியல் தலைவர்களும் அற ஒழுக்கத்திலிருந்து தவறியவர்களாகவும் தம் மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்களாகவும்... காட்டப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு மிகவும் எளிதாக சட்டென இந்த எண்ணங்கள் மேலோங்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால்... அரசியல் அரங்கில் நிகழும் இம்மாதிரியான சோரம் போன, வெட்கங்கெட்ட கூட்டணி அவலங்களுக்கு காரணமானவர்கள் யார்? தலித்திய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தலித்திய தலைவர்கள் மட்டும் தானா காரணம்?

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசியல் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கூட அரசியல் சாணக்கியமாகவே பேசும் அறிவுஜீவிகள் அதே சாணக்கியத்தனத்தை தலித்திய அரசியலில் மட்டும் ஏன் காணத் தவறிவிடுகிறார்கள்? தலித்துகளுக்கான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே மாதிரியானவை. அவைகளுக்குள் ரொம்ப பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை.

அதிக வாக்குரிமை பெற்றவரே வெற்றி பெற்றவராக தேர்ந்தெடுக்கப்படும் மெஜாரிட்டேரியன் எலக்டோரம் சிஸ்டத்தில் தலித்துகளுக்கான தேர்தல் வெற்றி என்பது மற்ற அரசியல் கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்தால் மட்டுமே சாத்தியம் என்பதே உண்மை. எந்த மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. தலித் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பி.ஜே.பி , சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்ததை நியாயப்படுத்துவது நம் நோக்கமல்ல. ஆனால் இந்த நியாயங்கள் தலித்திய அரசியலில் கடைப்பிடிக்க முடியாமல் இருப்பதற்கு தலித்திய அரசியல் தலைவர்கள் மட்டுமா காரணம்? பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூட திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைப்பதைப் பற்றி கேட்டபோது கொள்கை கூட்டணி, முற்போக்கு கூட்டணி என்றெல்லாம் பம்மாத்துப் பேசாமல் ‘யார் அதிகம் சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி’ என்று சொன்னதைக் கூட எவ்வளவு வெளிப்படையாக, உண்மையாக இருக்கிறார் என்றல்லவா பாட்டாளிகள் பரசவப்பட்டார்கள்! எனவே இந்திய அரசியலில் தலித் அரசியலுக்கு மட்டும் இந்த நியாய, அநியாய சட்டங்களும் அளவுகோள்களும் வைத்துக் கொள்வது எப்படி நியாயமாகும்?

திமுக குடும்பச் சண்டையில் தினகரன் பத்திரிகை ஊழியர்கள் அநியாயமாக உயிர்ப்பலி ஆனார்கள்! தினகரன் பத்திரிகையில் வேலைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நியாயமா? அடுக்குமா? என்று கேள்வி கேட்டார்களா? பட்வர்த்தனுக்கு இதெல்லாம் தெரியம்தான்! ஆனால் தலித்துகள் யாரும் இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க கூடாது. ஏனென்றால் பட்வர்த்தன்கள் தலித்துகளுக்காக இவ்வளவு போராடி கஷ்டப்பட்டு இதெல்லாம் ஆவணப்படுத்துவதுகிறார்கள் என்பதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். பட்டவர்த்தன்களை விட்டுவிட்டால் இதை எல்லாம் வெளி உலகத்திற்கு கொண்டு வர பாவம், தலித்துகளுக்கு வேறு யார் தான் இருக்கிறார்கள்?

ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்கள்:

Ø    1971 - புரட்சியின் அலைகள் - பீகார் இயக்கத்தைப் பற்றியது

Ø    1978 - அரசியல் சிறைக்கைதிகள்

Ø    1981 - எழுவதற்கான நேரம்

Ø    1985 - பம்பாய் எங்கள் நகரம்

Ø    1990 - நண்பர்களின் நினைவாக

Ø    1992 - ராமனின் பெயரால்

Ø    1995 - பிதா, மகன், தர்மயுத்தம்

Ø    1996 - நர்மதா டைரி

Ø    1996 - மில் தொழிலாளர்கள்

Ø    2002 - போரும் சமாதானமும்

Ø    2011 - ஜெய்பீம் காம்ரேட்


நன்றி: கீற்று டாட் காம்

1 comment:

  1. ஜெய்பீம் காம்ரேட்‏

    27-04-2012
    Reply ▼
    jaya prakash
    To puthiyamaadhavi sankaran
    ஜெய்பீம் காம்ரேட்

    ஜெய்பீம் காம்ரேட் எனும் ஆவணப்படம் எங்கள் பல்கலைக் கழகத்தில் பார்க்க நேர்ந்தது. நீங்கள் அதன் மீது எழுப்பியுள்ள கேள்வி எனக்கும் உடன்பாடு உண்டு. இது குறித்து பல்கலைக் கழகத்தின் வகுப்பறையில் நிகழ்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். திருமாவளவனையோ கிருஷ்ணசாமியையோ தி.மு.காவலும் அ.தி.மு.காவலும் விலைக்கு வாங்கிவிட முடியும்... தேர்தல் வந்தால் இவர்கள் அங்கேதானே ஓடிப்போய் நிற்கிறார்கள் என்பதுதான் அவரின் பேச்சு. நான் 1999 -ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலை குறித்துப் பேசினேன். அத்தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஒட்டு மொத்த தலித்துகளின் ஓட்டுக்களில் திருமாவளவனால் 90 % மேலே வாங்கிய போதும் அவரால் அத்தொகுதியில் வெற்றி கொள்ள முடியாத நிலை. எனவே சாதி இந்துக்களின் ஓட்டையும் வாங்கினால்தான் தலித்துகள் வெற்றி பெற முடியும். எப்படி தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் தலித்துகளின் ஒட்டு தேவைப்படுகிறதோ அது போல தலித்துகளுக்கும் சாதி இந்துக்களின் ஒட்டு தேவைப்படுகிறது. இது அரசியல் சார்ந்த கூட்டணி உறவுதான். யாரும் யாரையும் விலைக்கு வாங்கிவிட முடியாது என்று சொல்லி முடித்ததும் மயான அமைதி நிலவிய வகுப்பறை சில கணம் அப்படியே நகர்ந்தது. ஆனந்த் பட்டவர்த்தனின் ஆவணப்படத்தில் இடது சார்புத் தன்மை இருக்கிறது. அதை மாணவன் ஒருவன் கேட்ட போது தனக்கு எந்த சார்பும் இல்லை என்று கூற அவருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. பட பிடிப்பின் அவரது சிரமங்களுக்கு உழைப்பிற்கு நன்றி. அதே சமயத்தில் எல்லா தளங்களிலும் தலித்துகளுக்கு தலித் அரசியல் கட்சிகளுக்கு உள்ள சிக்கலை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என கருதுகிறேன். இந்திய தேசத்தில் எல்லாவற்றை அளவிட சாதி அளவுகோலாக இருக்கிறது என்பதை ஆனந்த் பட்வர்த்தனுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமிருக்காது என்று கருதுகிறேன்.

    --
    E. Jayaprakash
    jawaharlal nehru university
    new delhi.

    ReplyDelete