Thursday, June 10, 2021

FAMILY MAN 2 - Rani

 

“மாவீரனுக்கு மரணமில்லை”

மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம்

போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது.

பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?

தீபன் யார்?

செல்வா யார்?

தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?

இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்

நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்

கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் வந்திருக்கிறது

FAMILY MAN2 .

*

இப்படியான ஒரு கதை இந்திய அரசு உளவுத்துறை,

 ஐஎஸஐ, தமிழ் ஈழப்போராளிகளின் இயக்கங்கள் 

குறிப்பாக புலிகள் இயக்கம், பெண் போராளிகள்,

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்று காட்சிப்படுத்தப் பட்டு 

வெளியிட்ட தன் மூலம் அமேசான் ப்ரைம் 

உலகளாவிய ஈழத் தமிழர்களின் கவனத்தை

ஈர்த்ததில் வெற்றி பெற்றிருக்கிறது.

அமேசானின் நோக்கம் சமகால ஈழப்போராட்ட்த்தைக் 

காட்டுவதோ அதன் நியாயப்பாடுகளை முன்வைப்பதோ அல்ல. அவர்களுடைய நோக்கம் மார்க்கெட்டிங்க்,

 விற்பனை. எதைக் காட்டினால் தன் அலைவரிசையை

உலக நாடுகளெங்கும் எடுத்துச் செல்ல முடியும் என்று நினைக்கின்றார்களோ

அதைக் காட்டி  நடக்கும் வியாபாரம்.

அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.!

*

இக்கதையோட்ட்த்தில் வரும் முக்கியமான ஒரு வசனம்

“ நான் அரசியல்வாதி அல்ல, போராளி”

ஈழப்போராட்டக் களம் தாண்டி விவாதிக்க வேண்டிய கருத்து இது.

*

ராணியாக நடிக்கும் சமந்தா..

சிறிய விமானத்தை windmill  என்று சொல்லி லாரியில் கட த்தும்போது

செக்போஸ்டில் பிடிக்கிறார்கள். அனுமதி இல்லாமல் 

எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரி சொல்கிறான். 

அவன் பார்வை ராணியை நோக்கி இருக்கிறது. 

லாரியை ஓரமாக நிறுத்தியாகிவிட்ட து.

அடுத்து…???

ராணி அவன் பார்வையைப் புரிந்து கொண்டு 

அவன் எப்படிப்பட்டவன் என்பதை அடையாளம் 

கண்டுகொள்கிறாள். அவனருகில் செல்கிறாள்.

எதோ பேசுவதாக லாங்க் ஷாட் காட்சி. 

வசனம் ஒலிப்பதில்லை.

அருகிலிருக்கும் ஒரு ஷெட்டுக்குள் நுழைகிறாள்.

அந்த அதிகாரியும் நுழைகிறான்.

சிறிது நேரம் கழித்து அவள் மட்டும் வெளிவரும் காட்சி.

ராணி தன் மேல்சட்டையை சரி செய்து கொண்டு

முகம் வியர்த்து கண்கள் சிவந்து வெளியில் வருவாள்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அவர்கள்

புறப்படுவார்கள்.

ஷெட்டுக்குள் என்ன நடந்த திருக்கும் என்பதைப்

 பார்ப்பவர் புரிந்து கொள்கிறார். 

ராணி பாலியல் வல்லாங்கை அனுபவித்தவள்.

இலங்கை இராணுவத்தின் கொடுமையிலிருந்து அவளை மீட்ட து

தமிழீழ இயக்கத்தின் தலைவர்.. 

கதையோட்ட த்தில் இக்காட்சி..என்ன சொல்லவருகிறது?

பெண் போராளியை இழிவுப்படுத்திவிட்ட தா?

உடல் .. பெண்ணுடல்..

ஆணின் அதிகாரத்தைக் காட்ட அவன் ஏறி அமரும்

பெண் உடல்..

உடலை ஆயுதமாக தற்கொலை ஆயுதமாக பயன்படுத்த

துணிந்திருக்கும் ராணி..

செத்துப்போனால் கருகி சாம்பாலாகும் உடல்

புதைத்துவிட்டால் மக்கி மண்ணோடு மண்ணாகும் உடல்..

இந்த உடலில் என்னடா இருக்கு..??!!

போடா .. நீயும் உன் புனிதங்களும்..

எந்த உடலை வைத்து பெண்ணைக் கீழ்மைப்படுத்த முடியுமோ

அதே பெண்ணுடல் போராயுதமாகவும் மாறும்..!

எந்த உரையாடலுமின்றி காட்சிகள் விரியும்போது

உரையாடல்கள் பல அவர்கள் காட்டாத காட்சிகளுடன்


 நமக்குள் விரிகின்றன.


 

 

 

Thursday, June 3, 2021

கனவு இல்லத்தின் கனவுகள்

 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)

அரசனைப் புகழ்ந்துப் பாடி பரிசில் பெற்ற
புலவர்களின் வரிசையில் புதிய ஜன நாயகத்தின்
எச்சங்கள் தொடர்கின்றன.
எழுத்தாளனை சமூகம் ஏன் மதிக்க வேண்டும் என்று
எதிர்ப்பார்க்கிறோம்? அவனும் அவன் எழுத்துகளும்
சமூகத்தின் மனசாட்சியை அசைத்துப் பார்க்கும்
வல்லமை கொண்டது என்று இன்றும் நம்புவதால் மட்டுமே!

ஆனால்
ஜன நாயகம் அதிகாரம் என்ற பெயரால்
அதை விலைப்பேசி விட முடியும்.
ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக தேவைப்படும்போது
எழுத முடியாத எழுத்து செத்தப் பிணம் தான்.

அதிகாரம் எப்போதும் தனக்கு எதிரான குரல்களை
கிள்ளி எறிவதில் பல்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கிறது.
எந்த ஒர் எழுத்தாளனும் பட்டினியால் செத்துப்போனான்
என்பது எவ்வளவு இழுக்கோ அதை விடக் கேவலமானது
அவனும் அவன் எழுத்துகளும் முடங்கிப்போகும்
அவலம்!
அரசு அதிகாரத்தின் தலையீடு இல்லாமல்
அடிவருடல் இல்லாமல் ஜால்ரா போடாமல்
விருதுகளும் கனவு இல்லங்களும் வசப்படுமா?
இம்மாதிரியான அறிவிப்புகள் வரும்போது
அத்திட்டத்தின் நல்லெண்ணம் நிறைவேற
வேண்டும் என்று விரும்பினாலும்...
அந்த விருப்பம் கனவாக மட்டுமே இருக்கிறது.
அரசு விருதுக்காக விண்ணப்பித்துவிட்டு
அரசு விருது பெற்று
அரசின் கனவு இல்லத்தில் வாழ்ந்து கொண்டு
அரசு அதிகாரத்தின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து
எழுத முடியுமா?
இட ஒதுக்கீடுஎன்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு சமூகம் கொடுக்க வேண்டிய உரிமை
என்பதைக் கூட மறுக்கும் நம் அறிவுசார் சமூகமிது.
தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள் தான் நானும்.
ஆனால் அதற்கு அர்த்தம் பெரியார் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்டவர் என்பதல்ல.
பெரியாரை விமர்சனப்படுத்தியதற்கு கருத்தியல்
ரீதியாக பதில் சொல்லாமல் அவரில்லை என்றால்
நீ என்னவாகி இருப்பாய்?
நன்றி கெட்டவன் நீ \
என்ற விமர்சனங்களை வைத்த /வைத்துக்கொண்டிருக்கின்ற
சமூகம் நம் சமூகம்.
திட்ட வரைவுகள் இன்னும் செழுமைப்படுத்தப்பட
வேண்டும். அது ஜால்ரா கம்பேனிக்கு குத்தகைக்கு
விட்டதாக இருக்கக் கூடாது என்பதில்
தமிழக அரசு கவனம் செலுத்துமா?
செலுத்த வேண்டும் என்பதே
என் கனவு.
Rajini Mahi, Ravichandran Kumaraswamy and 1 other
2 comments



















Like
Comment
Share

2 comments

Saturday, May 29, 2021

வைரமுத்து ONV விருது சர்ச்சைகள்

வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல.

(யாரும் அப்படி திசை திருப்பி விடாதீர்கள்)
அதை ஒட்டி எழுந்திருக்கும் உரையாடல் வெளியை
முன்வைக்கும் பதிவு..
ஆண் பெண் உறவு நிலையில் குடும்பம் என்ற
நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கவிதிகளை
யாருமே மீறியதில்லை என்று சொல்லமுடியுமா?
கலைஞன், கவிஞன் என்றால் அவர்களுக்கு
லைசன்ஸ் உண்டு.. என்று பொதுப்புத்தி ஏற்றுக்
கொண்டிருக்கும் ஆண்மைய கருத்துருவாக்கங்களால்
ஆனது நம் சமூகம. பொம்பள வேண்டாம்னா வேணும்னு அர்த்தம் என்று படுக்கையறை மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றமுடியாது!
எப்போதும் .. NO MEANS NO தான்.
வேண்டாம், முடியாது என்று
பெண் சொல்வதை ஆண் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
தன் செல்வாக்கு அதிகாரம் பணபலம் ஆள்பலம் என்று
எதைக் கொண்டும் அதை மீறுவது தலைகுனிவைத்தான்
ஏற்படுத்தும்.
தன் சுயலாபங்களுக்காக ஆணைப் பயன்படுத்திக்
கொள்ளும் பெண்களும் உண்டு,
இதுவும் இந்த நாணயத்தின் இன்னொரு பக்கம்.
தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டவுடன் கொதித்தெழும்
மேல்தட்டு வர்க்க பெண்கள், சாதியின் பெயரால்
பெண்ணுடல் அனுபவிக்கும் வன் கொடுமைக்கு எதிராக
என்றைக்காவது ஒருமித்த குரலில் பேசி இருக்கிறார்களா?
என்று கேட்டால்..
அதற்கு மவுனம் தான் என் பதில்.
ஆனால் அதைப் பேசவில்லை என்பதாலேயே அவர்கள்
இன்று பேசும் எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை
என்ற முடிவுக்கு வருவது.. அபத்தம்.
நம் சமூகம் சாதி சமூகம் தான்.
பெண்களும் அதில் விதிவிலக்கல்ல
என்ற புரிதலுடன் அதையும் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
“கண்ணதாசனுக்கு பல பெண்களுடன் தொடர்பிருக்கவில்லையா?”
“நீங்கள் போற்றும் அண்ணா நடிகை பானுமதி குறித்து
சொன்னது நினைவில்லையா?”
நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
ஆனால் கண்ணதாசனும் அண்ணாவும்
சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பமின்றி
நடந்து கொண்டார்களா… ?
என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
ONV அமைப்பு வைரமுத்துவுக்குக்கான விருது அறிவிப்ப
மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துவிட்ட
நிலையில் வைரமுத்து விருதை திருப்பி அளிப்பதாக
அறிவித்துள்ளார்..
“விருது பெறாமலேயே விருதை திருப்பி அளிப்பதாக
அறிவித்த வைரமுத்து…” என்று ஆனந்த விகடன்
எழுதுகிறது!
வைரமுத்து கவிதைகள் பிடிக்குமா?
வைரமுத்து மீதிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்..
இவை எல்லாவற்றையும் தாண்டி…
இந்த விருது தமிழை எழுதியதால்..
தமிழில் எழுதியதால்..
வந்த விருது என்ற வகையில்..
தமிழும் தான் தலைகுனிந்து விட்ட தாக
கண்ணீர்விடும் கவிதைகளுக்கு
துடைத்துக் கொள்ள கர்சீப் கொடுக்கலாம்.
அவ்வளவுதான்.

1 comment

Wednesday, May 26, 2021

மகாத்மா காந்தி.. India's first corporate Agent


 

இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஏஜெண்ட்

என்று மகாத்மா காந்தியைப் பற்றி அருந்ததிராய்

கிண்டலடிக்கிறார்.

காந்தியை மகாத்மாவாகக் கொண்டாடுபவர்களுக்கு
அருந்ததிராயின் வாசகம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
காந்தியை மனிதனாக மதிப்பவர்களுக்கு அவர்
பிர்லாவுடனும் வைத்திருந்த உறவு
இன்னும் சில புரிதல்களை ஏற்படுத்தும்.
காந்தி பேசிய கிராமப்புற பொருளாதரம் முதல்
அவருடைய சத்தியாகிரக போராட்டம் வரைக்கும்
பிர்லாவின் பணம் தேவைப்படுகிறது.
வெறும் கையால் முழம்போட முடியாது என்ற
யதார்த்தம் அறிந்தவர் தான் காந்தி.
பிர்லாவின் மாளிகையில் தங்கிக்கொண்டே பிர்லாவுடன்
கருத்து முரண்பாடுகளையும் தொடர்ந்து வைத்தவர்.
பிர்லாவின் எந்த ஓர் அரசியல் ஆலோசனைகளையும்
காந்தி தன் அரசியலில் ஏற்றுக்கொள்ளவில்லை.
காந்தியின் சுதேசி இயக்கம் இந்திய உற்பத்திகளுக்கு
ஆதரவாக இருக்கும் இந்திய தொழில் முனைவோரின்
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது
பிர்லாவின் எதிர்ப்பார்ப்பாக இருந்தாலும்
அவை முழுமையடையவில்லை.
பிர்லா டில்லியில் கட்டிய லஷ்மி நாராயண் கோவிலை
1938ல் காந்திதான் திறந்துவைத்தார்.
- (பிர்லா கட்டிய கோவில்கள் எல்லாம் கடவுளின் பெயரால்
அழைக்கப்படாமல் இன்றும் அவர்கள் கட்டுகிற
கோவில்கள் எல்லாம் பிர்லா கோவில்கள் தான்!)

இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள் ஒருபக்கம்
இருந்தாலும் பிர்லாவுக்கு அதில்தான் லாட்டரி அடித்தது
என்றுதான் சொல்லவேண்டும். பிர்லா, டாடா , பஜாஜ்
என்று அன்றைய கார்ப்பரேட்டுகள் அனைவரும்
காந்தியுடன் தொடர்புடையவர்கள்.
காந்தி இவர்களுடன் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே
இவர்களின் நிதி உதவியுடன் செயல்பட்டார் என்ற முரண் ..
அன்றைய பொதுவுடமைவாதிகளுக்குப் புரியாதப்
புதிராக இருந்தது.
Mukund Iron and steel works கம்பேனி நஷ்டத்தில் ஓடியது.
கம்பேனி உரிமையாளர் முகுந்த லாலாவுக்கு காந்தி
உதவ நினைத்தார். பஜாஜ் கம்பேனி முதலாளியின்
5வது மகனிடம் நஷ்டத்தில் ஓடும் கம்பேனியை வாங்கச்
சொன்னார். காந்தியின் சொல்லைத் தட்டமுடியாமல்
பஜாஜின் மகன் , முகுந்த் அயர்ன் ஸ்டீலை வாங்கினார்.
இப்படியாக காந்தி அன்றைய கார்ப்பரேட் உலகத்தின்
மெய்க்காப்பாளராக செயல்பட்டிருப்பது தெரிகிறது.
காந்தி பல்வேறு அறக்கட்டளைகளின் பணத்தை
பஜாஜ் வங்கியில் தான் ( நாக்பூர் வங்கி )போட்டுவைத்திருந்தார்.
பஜாஜ்க்கு நிதி நிலை மோசமானதும் சிலர் அந்த
வங்கியிலிருந்து பணத்தை எடுத்துவிடும்படி
காந்திக்கு ஆலோசனை சொல்லியும் காந்தி
அதற்கு செவிமடுக்கவில்லை.காரணம்,
பஜாஜ் மீது காந்தி வைத்திருந்த நம்பிக்கை தான்.
இன்று நாம் பேசும் corporate social responsiblities என்ற
கருத்துருவாக்கத்தை காந்தி அவர் காலத்தில்
வாழ்ந்த கார்ப்பரேட்டுகளுக்கு எழுதிய கடித த்திலிருந்து
பிழிந்து எடுத்துக்கொள்ளலாம்.
பிர்லா மாளிகையில் தங்கினார்.
பிர்லாவின் புல்வெளியில் மாலை தியானங்கள்
நடத்தினார். பிர்லா கொடுப்பதாக சொன்ன பணம்
தமாதமானால் ஏன் கொடுக்கவில்லை இன்னும் என்று
விசனப்பட்டுக்கொண்டார்.. பிர்லாவின் கார்ப்பரேட்
உலகத்தில் காந்தி இப்படித்தான் தாமரை இலைத் தண்ணீராக .. முரண்பட்டுக்கொண்டே...
விந்தைகள் நிறைந்தது காந்தியின் உலகம் மட்டுமல்ல
காந்தியின் முரண்பாடுகளை சகித்துக்கொண்டு வளர்ந்த
இந்திய முதலாளித்துவ உலகமும் தான்.

Monday, May 24, 2021

பரவசமும் பரிதவிப்பும்




புரட்சிக்கவியில் புரட்சிக்கவி சொன்ன சொக்கவெள்ளிப் பால்குடம் எப்படி இருக்கும்? காலை விடியலில் கடலில் மூழ்கி சிவப்பு மங்கி மஞ்சளாகி வெளிச்சமாகும் அக்கணம்.. காதலுக்குப் பூரண பொற்குடம் வைத்து இரவுக்கு நன்றி சொல்லும் பொழுதாக இருக்குமோ…?

பொற்குடமாம்.. அதிலும் பூரண பொற்குடமாம்.. அள்ள அள்ள குறையாத ஓளி மங்காதப் பொற்குடம். பொற்குடம் நிரம்பி பூமி எங்கும் மரங்களாக பூக்களாக பறவைகளாக அவனுக்குள் அவள் பொற்குடமாகும்போது காதல் மட்டுமல்ல வாழ்க்கையும் பூரணத்துவம் பெறுகின்றது. அதனால் தான் மனித இனம் தேச இன மொழி எல்லைகளைக் கடந்து எப்போதும் காதலைக் கொண்டாடுகிறது, . 

வாழ்தல் என்பது உண்டு உறங்கி காமப்பசி தீர்க்க தின்று முடிவதல்ல. காதலிருக்கும் வாழ்க்கை மட்டுமே பூரணத்துவம் பெறும். . அவள் பூரண பொற்குடமாய், அவன் வாழ்வில் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை..

 அவள் யார் என்பதைச் சொல்லவரும்போது அவன் சொற்களின் வனத்தில் மாட்டிக்கொண்ட திசையறியாத பயணியைப் போல அலைகிறான்.

சொற்களிலிருந்து தப்பிக்கவும் ஒருசொல் தான் தேவை உன் பெயரைப் போல (பக் 57) என்று அறிந்து கொள்ளும் போது அவள் பறவையாகிவிடுகிறாள். 

என்ன இது… அவன் உள்ளங்கை நீல வானமாகிவிடுகிறதே.. 

ஒரு பறவையைப் போல உனை விடுவித்தேன். என் அகங்கை முழுவதும் ஆகாய நீலம். (பக் 40) அவன் உள்ளங்கையே ஆகாயமாக்கியவள் எங்கு சென்றாள்..! 

“சிறகுகளால் திசைகளை உதறிவிட்டு நீலவெளியில் ஏன் கரையவேண்டும்?” (பக் 18) அசைவின்மையை முகர்ந்தபடி இருக்கிறது தும்பி. அவள் விரல்பிடித்து சாலையைக் கடக்கிறது நத்தை. அவனோ கவிஞன்…

“வானும் இல்லை 

பூமியும் இல்லை 

அந்தரத்தில் ஒன்றாகப் பயணிக்கின்றன 

பரவசமும் பரிதவிப்பும்.” (பக் 76)

 அவன் என்ன செய்வான்? மரத்தில் காற்றில் பனித்துளியில் சிறகுகளின் படபடப்பில் அவன் அவளுடனேயே பயணிக்கிறான். தூரிகை, எழுதுகோல், மயிலிறகு, மலர்ப்படுக்கை எதைக்கொண்டு அவளை அலங்கரிப்பது? “பொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது..” 


இரைை தேட சென்ற அவன் திரும்பவில்லை என்றால் அவள் இறந்துவிடுவாள்… அவனின்றி அவள் இல்லை. இருவாச்சி பறவைகளின் வாழ்க்கையை அறிந்தவள் அவள்… அதனால் தான் அவள்

 “ பறந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட வேண்டும்” என்று துடிக்கிறாள். .

 “இரத்தம் வழிய கைகளில் ஏந்துவதைத் தவிர கண்ணாடிக்கோப்பைகள் உடையும் போது அவனால் என்ன செய்ய முடியும்? 

அவன்் கவிஞன். சொற்களற்ற பாடலை அவனில் எழுதிக் கொண்டிருப்பவள் அவள் தான் .. அவன் கவிதை இன்னும் முடியவில்லை. “

வந்து சேராத ஒருசொல் காத்திருக்க வைத்திருக்கிறது எல்லாச் சொற்களையும். (பக் 64) … 

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அவன் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை மையமாக அவளே இருக்கிறாள்

“இரு கண்களாலும் 

காணண இயலாத 

நெற்றியின் மத்தியில்

 நின்றெரிகிறாள் “ 

எரியட்டும். ….

 கவிஞர்பழநிபாரதிக்கு வாழ்த்துகள் 

கவிதைை நூல்: பூரண பொற்குடம்

 கவிஞர் பழநிபாரதி.. 

கொன்றை வெளியீடு:

 விற்பனை உரிமை: தமிழ்வெளி 

கைபேசி: 9094005600