Monday, November 6, 2023

கி. ரா.வின் மொழி அரசியல்

 இவர்கள் எந்த மொழியில் கனவு காணுவார்கள்?!

(கி.ரா.வின் மொழி அரசியலை முன்வைத்து. )

காலனிய ஆட்சியில் மெட்ராஸ் மாநிலத்தில்
அதிகமான தெலுங்கு , கன்னட மொழியைத் தாய்மொழியாக
கொண்டவர்கள் இருந்தார்கள்.
அவர்களின் வீட்டுமொழி தெலுங்கு/ கன்னடமாகவும்
வெளியுலகத்தில் அவர்களின் மொழி
தமிழ் மொழியாகவும் இருக்கிறது.
மொழியை மட்டுமே கருவியாகக் கொண்டிருக்கும்
இலக்கியவெளியில் இவர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில்
பங்களிப்பு செய்தவர்கள் என்பதும்
மறுக்க முடியாத உண்மை.

இவர்களின் மொழி அரசியல்
அவ்வப்போது வெளிப்படும்.
மொழிவரலாறு குறித்தோ அல்லது
மொழிகள் திரிந்து கலந்து பிறிதொரு மொழியானது
குறித்தோ இவர்களிடம் வாதிட முடியாது. காரணம்
அதைப் பற்றிய எந்தவொரு புரிதலும் இவர்களிடம் இருக்காது.
கேட்டால் "மக்கள் மொழி" என்று சொல்லுவார்கள்.
மக்கள் மொழியின் ஜன நாயகப்படுத்தலை இவர்கள்
'சாம்பார்மொழி' என்று கொச்சைப்படுத்துவார்கள்.
அதை எல்லாம் தாண்டி இவர்கள்
தமிழ்ச் சமூக இலக்கிய உலகின் சட்டாம்பிள்ளையாக
கையில் பிரம்புடன் மொழி அரசியல் பேசும்போதுதான்
என் போன்றவர்களுக்கு இந்தக் கேள்வி எழுகிறது.
ஆம்..
இவர்கள் எந்த மொழியில் கனவு காண்பார்கள்?
இவர்களின் கனவுமொழி இவர்களின்
படைப்புலகில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.
அதாவது இவர்களின் எழுத்து மொழி
இவர்களின் அசல்மொழியல்ல.
அசல்மொழிதான் மக்கள் மொழி.
அசல்மொழிதான் மொழியின் ஜீவன்.
எது எங்கள் அசல்மொழி என்பதில்
எங்களுக்கு குழப்பமில்லை.

மொழி குறித்து புனிதம் தெய்வீகம் வழிபாட்டுணர்வு
இதெல்லாம் எனக்கு கிடையாது.
அவரவருக்கு அவரவர் மொழி உசத்தி. அம்புட்டுத்தான்.
ஆனா...
திரும்பி பார்க்கும்போது
இவர்கள் முன்வைத்திருக்கும் மொழி அரசியல்
இவர்களை என்னிலிருந்து பிரிக்கிறது.
என்னையும் என் மண்ணையும்
இவர்கள் எழுதி இருக்கலாம்.
ஆனால் அதை இவர்கள் ஒரு பார்வையாளனாக
ஒரு பயணியாக எழுதி இருக்கிறார்கள்.
கி.ரா.வின் மொழி அரசியல் - சிலம்பு நா. செல்வராசு
புத்தகம் வாசித்தப்பின் இப்படியான கேள்விகள்
எழுவதை தவிர்க்கமுடியவில்லை.!

No comments:

Post a Comment